• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 30

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
துருவேந்தனின் தமக்கை தான் சந்திரமதி.. கோவிலில் வீற்றிருக்கும் தந்த சிற்பமாய் அழகானவள்.. அந்த சமஸ்தானத்தின் இளவரசி.. வீட்டிற்கு செல்ல(வ) மகள். செல்வ சீமாட்டியாய் வலம் வந்தவளை ஒரு சம்பவம் அடியோடு புரட்டி போட்டது. அது மட்டுமல்லாமல் சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். தாய் தந்தை தமையன் என உற்ற சொந்தத்தில் அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு தன் தீவாய் அந்த அரண்மனையிலே வாழ்பவள்.

துருவேந்தனின் பாளையம் தலைவன் கோட்டை சமஸ்தானம். அவர்கள் மறவர் வம்சா வழியினர். துருவேந்தனை அடுத்து எட்டு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவள் தான் சந்திரமதி. அவர்களின் வம்சா வழியில் நீண்ட நாட்கள் பெண் வாரிசு இல்லாமையால் காலம் கடந்து பிறந்த சந்திரமதி தான் அனைவருக்கும் செல்லமானாள். அவள் கேட்டதை அடுத்த நொடியே நிறைவேற்றி வைத்தனர் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள்.


அவள் வரும் வரை தனிக்காட்டு ராஜாவாய் அனைவரையும் தன் அதிகாரத்திற்கு கீழே கொண்டு வந்த துருவேந்தனுக்கு சந்திரா வந்த பின்பு அனைத்தும் தலைகீழாய் நடந்தது.

இயல்பிலேயே சுயநலத்தின் மொத்த உருவமாய் வளர்ந்த துருவேந்தனுக்கு இந்த இடைவெளியில் ஒரு தமக்கை அதுவும் அவளுக்கு அடுத்து தான் என்ற நிலை பெண்ணவளின் மேல் கொலைவெறிக்கு காரணமாய் அமைந்தது.

யாருமில்லாமல் தனியே விளையாடி கொண்டிருக்கும் சந்திராவை கண்ணத்தில் சப்பென அறைந்து விட்டும் கிள்ளி விட்டும் சென்று விடுவான்.

அவள் கதறுவதை பார்த்து ரசித்து அதில் ஆனந்தம் கண்டான்.

வளர வளர பெண் என்று அவளை அடக்கி அவனுக்கு கீழே கொண்டு வந்தான்.. ஆனால் அவளை அதிகாரம் செய்யாமல் நைச்சியமாய் தாய் தந்தையிடம் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொண்டான்.

அவர்களும் அவனின் சூழ்ச்சி புரியாமல் தங்கையின் நன்மைக்காக செய்ததாக நினைத்தனர். இல்லை அப்படி நடித்து அவர்களை நம்ப வைத்து விட்டான் வஞ்சகன்.

அவளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டு அவளை தங்க கூட்டில் சிறைப் பறவையாய் அடைத்தான்.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஒரு பட்டியலே போட்டு அதன் படி அவளை நடத்தினான்.

வீட்டில் கேட்பவர்களுக்கு, "தந்தையே நான் பன்றது எல்லாம் அவளோட நன்மைக்கு தான்.. வீட்டு வேலைகள் அவள் செய்யச் சொல்வதற்கு காரணம் நாளை அவள் மணம் ஆகி போகும் இடத்தில் எதுவும் தெரியாமல் நம் வம்சத்தை அல்லவா கேலி பேசுவார்கள்..

இவள் படித்த வரைக்கும் போதும்.. மேலும் இவள் பாடசாலை சென்று படிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே.. என்றைக்கு இருந்தாலும் அடுத்த வீட்டிற்கு போகும் பெண்ணிற்கு நாம் கற்று கொடுப்பது புகுந்த வீட்டை எப்படி அனுசரித்து போவது என்பதை பற்றி தான்.. எத்தனை தான் வசதிகள் இருந்தாலும் இவளும் அனைத்தையும் கற்று பழக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இதை என் தமக்கைக்கு பழக்கினேன்.. இதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நான் இனி எதுவும் செய்யவில்லை..

நம் வம்சத்தின் பெருமையை காப்பாற்றும் கடமை எனக்குள்ளது.. இந்த சமஸ்தானத்தின் ஆண் மகன்.. தங்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை என்றால் நான் எதிலும் தலையிடவில்லை தந்தையே.." என்று தான் செய்யும் இழி செயலுக்கு நியாயமான காரணம் என சிலவற்றை கூறினான்.


பொதுவாகவே ஆணுக்கு பின் தான் பெண். அதுவும் பெண் என்பவள் அடுத்த வீட்டின் சொத்து. நாளை இந்த சமஸ்தானத்தை நன்முறையில் ஆட்சி செய்பவன் அவன் தானே. அவனுக்கு இல்லாத அக்கறையா என தங்களுக்குள் நினைத்து கொண்டு அவன் சொன்ன அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர்.

அதிலிருந்து சந்திராவை மேலும் பல இன்னல்களுக்கு ஆளாக்கினான்.

பெண் எப்பொழுதும் ஆணுக்கு அடிமையானவள் தான்.. ஒரு பெண் பிறந்ததிலிருந்து தந்தையை சார்ந்திருக்கிறாள்.. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தமையனை சார்ந்திருக்கிறாள்.. அவள் பருவப் பெண்ணானதும் முன் பின் அறிந்திடாத ஆடவனை திருமணம் செய்து அதன் பின்பு கணவனை சார்ந்து வாழ்கிறாள்.. கணவன் முடிந்ததும் மகனை சார்ந்த வாழ்க்கை இது தான் காலம் காலமாக பெண்களின் வாழ்க்கை சுழற்சி முறை.


ஒரு பெண் எப்பொழுதும் மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தே தனக்கென ஒரு வாழ்வு உள்ளது என்பதை மறந்தே போகின்றனர்.


இல்லை துருவேந்தனை போல் உள்ள ஆண்கள் மறக்கடிக்க படுகின்றனர்.

அப்படி தனித்து வாழும் பெண்களையும் ஆண் என்ற மமதை கொண்டு பெண்ணவளை அழித்து விடுகின்றனர்.

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்களின் சுயமரியாதை கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

இப்படி சிறுவயதிலிருந்தே செல்லமாய் வளர்க்கபட்ட சந்திரா ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தமையனின் கட்டுப்பாட்டின் கீழ் தான் அவளின் வாழ்வு என்றானது.. மகிழ்ச்சியின் ஊர்வலத்தில் பறந்து கொண்டிருந்த சிறுமலரை தன் காலால் போட்டு நசுக்கி அவளை அவளறியாமல் கொடுமை படுத்தினான்.

தன் தமையன் மேல் நிறைய பாசம் வைத்துள்ள சந்திராவிற்கு அவன் செய்கின்ற எதுவும் பெரிதாய் தெரியவில்லை.. தன் நலத்திற்காக தானே தன் தமையன் செய்கிறான் என்று பெண்ணவள் அவன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தாள்.

இப்படி கடினமான சூழ்நிலையில் இருந்த பெண்ணவளின் வாழ்வில் சோலையினை கொண்டு வந்தவன் தான் தர்மேந்திரன்.

அன்றைய வீட்டு வேலைகளை முடித்து விட்டு சற்று நிம்மதிக்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தாள் சந்திரா.

தன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை உணராமலே அந்த அம்மனிடம் மனம் சரியில்லை என்று சிறுபிள்ளையாய் புகாரளித்தாள். தன் கோபத்தை கூட யாரிடமும் காட்டாத பெண்ணவள் அந்த அம்மனின் அழகிய முகத்தை காண காண ஏனோ மனம் பூராவும் மகிழம்பூ மத்தாப்பூவாய் விரிந்தது பெண்ணவளுக்கு.

என்ன தான் தமையன் மேல் தீரா பாசம் வைத்திருந்தாலும் சாதாரண குடும்பத்தில் இருக்கும் பெண்ணின் வாழ்வில் பாதி கூட தன் வாழ்வு இல்லை என்று அவளுக்கு புரியாமலில்லை.

ஆனால் ஒரு சமஸ்தானத்தின் இளவரசியாய் பிறந்த தனக்கு ஒரு சாதாரண பெண்ணின் வாழ்வு கூட இல்லையே அம்மா என்ற எண்ணம் அவளின் நிம்மதியை தொலைத்தது.

மனதார அந்த அம்மனை வணங்கி விட்டு கோவில் குளக்கரையில் அமர்ந்திருந்தவள் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ கிளம்பலாம் என்று எழும் போது பாவாடை தடுக்கி தண்ணீரில் விழப் போனாள்.

அப்பொழுது இரு வலிய கரம் பெண்ணவளை தாங்கி பிடித்தவன் ஆடவன் ஒருவன்.. அந்த ஆடவனை கண்ட பெண் மனதில் இனம்புரியா மகிழ்ச்சியில் உள்ளம் உவகை பூத்தது.. இருவரின் விழிகளுக்குள் தங்களை அறியாமல் ஒருவரை ஒருவர் தங்களை தொலைத்து நின்றனர்.

சற்று நேரத்தில் அருகில் கேட்ட சத்தத்தில் தங்களின் சுய உணர்வு பெற்ற இருவரும் தங்களை அறியாமல் கட்டியணைத்த கைகளை எடுத்துக் கொண்டு விலகினர்.

பெண்ணவளின் முகமெங்கும் நாணச் சிவப்பு பூசி ஆடவனை நிமிர்ந்து பார்க்காமலும் சென்று விட்டாள் பெண்ணவள்.

அவள் சென்றதும் தான் அவனுக்கு விளங்கியது.. தானா இத்தனை நேரம் தான் ஒரு பெண்ணின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தது என்ற எண்ணத்துடன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டான் ஆடவன்.

ஆனால் இவர்கள் இருந்த நிலை பார்க்க கூடாத ஒருவனின் கண்களில் விழுந்து பெண்ணவளை அதள பாதாளத்தில் தள்ள காரணமாய் அமைந்தது.

ஒரு பெண்ணின் கண்ணீரை சுமக்கும் எந்த ஒரு ஆண் மகனின் வாழ்வும் தாமரையாய் மலர்வதில்லை.. அதுவும் தன் வீட்டில் பிறந்த பெண்ணின் கண்ணீருக்கு காரணமான தமையனின் வாழ்வும் சிதறடிக்கப்படுகிறது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி..