• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 61

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
பகலவனின் பளிரென்ற புன்னகையில் பூமியின் மக்கள் யாவரும் விழித்தெழுந்தனர்.. அதுவும் மேலூர் மக்கள் யாவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.

ஏன் இங்கே ஆதவனின் வீட்டில் எழுந்ததிலிருந்து மனதிற்குள் ஒரு பெரும் போராட்டத்தோடு அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

ஒரு கட்டத்தில் எதுவும் புரியாமல் அப்படியே படுக்கையில் அமர்ந்திருந்தவளை கதவின் ஒலி நினைவுக்கு கொண்டு வந்தது.

கதவை திறந்தவளுக்கு மற்றொரு அதிர்ச்சியாய் அங்கே வந்தனா நின்றிருந்தாள்.. கூடவே வள்ளியும்.

வந்தனாவுடன் வந்த வள்ளி அவளை பார்த்து, "அய்யோ அம்மா இன்னும் நீங்க கிளம்பாமையே இருக்கீங்களே.. அய்யா உங்களை சீக்கிரம் கிளம்பி வர சொன்னாங்க மா.. " என்று அவளிடம் கூறியவள் வந்தனாவிடம் திரும்பி

"வந்தனாம்மா சின்னம்மாவை வெரசா கிளப்பி கூட்டிட்டு வாங்க.. நான் போய் மத்த வேலையை பாக்குறேன்.." என்று அவளிடம் கூறிவிட்டு வள்ளி சென்று விட அதிர்ச்சியாய் நின்றிருந்த வெண்மதியிடம் வந்த வந்தனா அவளின் தோளின் மேல் கை வைத்து ஆட்டினாள்.

உடல் குலுக்கலில் நினைவுக்கு வந்த வெண்மதி, "வந்தனா.." என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

இத்தனை மணி நேரமாக யாரிடம் எதை சொல்வது யாரிடம் ஆறுதல் தேடுவது என்று குழப்பத்தில் இருந்தவளுக்கு இப்பொழுது வந்தனாவின் வருகை பெரும் ஆறுதலாயிருந்தது.

தன்னை அணைத்திருந்த வெண்மதியை தானும் சேர்ந்து அணைத்தவள் அவளின் முதுகை தடவி கொடுத்தாள்.

தன்னிடமிருந்து அவளை பிரித்தவள், "அக்கா இங்கே பாருங்க நீங்க சீக்கிரம் கிளம்பனும்னு ஆதவன் சார் சொல்லி அனுப்பினாரு.. வாங்க நான் உங்களை ரெடி பன்றேன்.." என்று அவளை குளிக்க அனுப்பி வைத்தாள்.

அவளை அங்கே வரவழைத்ததும் ஆதவன்.. யாரிடமும் அதிகம் பழகாமல் இருப்பவள் சமீபமாக வந்தனாவிடம் தான் அதிக ஒட்டுதல் கொண்டிருக்கிறாள்.. அவள் உடன் இருந்தால் இவள் கொஞ்சம் நிம்மதியாய் உணர்வாள் என்று உணர்ந்தவன் வளவனை விட்டு வந்தனாவை அழைத்து வர செய்தான்.

இங்கே ஆதவனும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் கிளம்பியிருந்தான்.. அவனுடனே வளவனும்.

இருவரும் கிளம்பி கீழே ஹாலுக்கு வரவும் அங்கே கனகமும் அவளின் கணவனும் கிளம்பியிருந்தனர்.

அவர்களை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் வெண்மதிக்காக காத்து நின்றான்.

நேரமாகியும் பெண்ணவள் வராததால் "வள்ளி.." என்று அழைத்தான்.

" அய்யா.." என்று வந்து நின்றாள்.

"போய் சின்னம்மா கிளம்பியிருந்தா வர சொல்லு.. நேரமாகுது.." அவளை அனுப்பினான்.

அவளும் வெண்மதியின் அறைக்கு வெளியே நின்று கதவை தட்டினாள்.. சிறிது நேரத்தில் வெண்மதி அவளை உள்ளே அழைக்க அங்கே வந்தவள் வெண்மதியை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் வார்த்தை வராமல் நின்று விட்டாள்.

சிறிது நேரத்தில் வந்தனா வெண்மதி வள்ளியுடன் அங்கே வந்தார்கள்.

மாடியில் கொலுசு சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தவன் தன் இமையை சிமிட்டவும் மறந்து அப்படியே அவளை பார்த்த படி நின்று விட்டான்.

ஆம் அவன் எடுத்து கொடுத்த கரும்பச்சை வர்ண பட்டுப் புடவையிலும் அவனின் குடும்ப நகைகளாய் கொடுத்திருந்த வைர நகை அலங்காரத்திலும் மங்கையிவள் இந்திரலோகத்து தேவதையாய் பளிச்சென இருந்தாள்.

ஆதவனால் பார்வையை அகற்ற முடியவில்லை.. ஆனாலும் அவள் முகத்தில் ஏதோ ஒன்று குறைவதாய் தெரிந்தது.. அது என்னவென பார்த்தவனுக்கு நன்றாகவே தெரிந்தது என்ன என்று.. வந்தனாவிடம் தன் இமையை திருப்பியவன் பார்வையில் விசாரித்தான்.

அவளும் தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினாள்.

தன்னையே உற்றுப் பார்த்தவனின் பார்வை பெண்ணவளை என்னவோ செய்ய தலைகுனிந்தபடி நின்று விட்டாள் பெண்ணவள்.

ஏன் வள்ளியே அவளை இந்த அலங்காரத்தில் எப்பொழுதும் கண்டதுமில்லை.. இதை கண்ட கனகத்திற்கு பொறாமையில் வயிறு காந்தியது.

சற்று நேரத்தில் வளவன் தன் தமையனிடம் திரும்பி, "அண்ணா கிளம்பலாம் நேரம் ஆச்சி.. எல்லாரும் வந்துருப்பாங்க.." என்று நடப்புலகிற்கு கொண்டு வந்தான்.


தலையசைத்தவன் வெண்மதி வந்தனாவை அழைத்து கொண்டு வரும்படி கூறிவிட்டு அவன் முன்னே நடக்க அவர்கள் பின்னே நடந்தனர்.

அதற்கு பின்னே வெறுப்புடன் கனகம் தம்பதியினர் பின் தொடந்தனர்.

ஊரின் எல்லையில் ஆற்றங்கரையில் உள்ள எல்லையம்மன் கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.. இவர்களுடன் தாண்டவராயன் குடும்பமும் மருததுரையும் அவனுடன் மற்றொருவனும் நின்றிருந்தனர்.

அந்த கூட்டத்தில் ஒருவனாக கரனும் நின்றிருந்தான்... அதிலே ஆராவும் ஒரு ஓரத்தில் நின்றிருந்தாள்.. கூடவே ஆணவனின் தாத்தா சித்தப்பா குருஜீ என அனைவரும் இருந்தனர்.. ஆனால் தங்களின் உண்மை அடையாளத்தை மறைத்தபடி.

ஆதவன் தன் குடும்பத்துடன் வரவும் அவனின் பின்னே வந்த வெண்மதியை கண்ட துருவனுக்கு கோபம் துளிர்விட்டது.. ஆனால் தன் கோபத்தை அடக்க வேண்டும்.. காட்டும் நேரம் இன்னும் வரவில்லை என்று அவர்களையே பார்த்தவனின் கண்களில் இருந்த வம்சத்தை நான்கு விழிகள் கண்டு கொண்டது.

வெண்மதியை அங்கே அப்படி கண்ட ஊர் மக்கள் வாய் பிளந்து நின்றனர்.. இது என்ன பெண்ணா இல்லை பொன்னில் வார்த்த சிலையா என்று எல்லோரின் மனதிலும் கேள்வி எழுந்தது.

யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் ஆதவனின் பாதம் பற்றி பின் தொடர்ந்தாள் பெண் மகள்.

அங்கே பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அடுத்ததாக பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண் அந்த பூஜையை துவக்க ஆற்றில் இருந்து நீரை எடுத்து வர வேண்டும்.

பின்பு அங்கே உள்ளே எல்லயம்மனுக்கு அந்த பெண்ணே அபிஷேக பூஜை செய்து ஊரில் திருவிழாவிற்கு பூ கட்டி உத்தரவு கேட்க வேண்டும்.

சிவப்பு பூ வந்தால் திருவிழாவை நடத்தலாம்.. வெள்ளை பூ வந்தால் திருவிழா ஏற்பாட்டை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

அதில் முக்கியமான ஒன்று அந்த பெரிய வீட்டின் பெண் நித்திய சுமங்கலியாக இருக்க வேண்டும்.

ஆனால் வெண்மதியோ கணவனை இழந்த ஒரு விதவை பெண்.. எப்படி இந்த பூஜையை செய்வாள்.. அந்த எல்லையம்மன் எப்படி திருவிழாவிற்கு உத்தரவு கொடுப்பாள்.. என எல்லோரின் கேள்வியும் ஒன்றை போல் இது தான் மனதை குடைந்த கேள்வி.

தாண்டவராயனும் மருததுரையும் கனகமும் இதை வைத்து தான் இந்த பூஜையை நிறுத்த வந்துள்ளனர்.. ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.. தெய்வத்தின் நியதியை யாராலும் அவ்வளவு சுலபமாய் மாற்ற முடியாது என்று.

தாண்டவராயனோ ஊர் தலைவரை பார்த்து, "ஏலேய் சந்திரா பெரிய வீட்டு பெண்டுக தான் செய்யனும் அதுக்கு ஒரு விதவை பொண்ணு எப்படிய்யா இந்த பூஜையை செய்ய முடியும்.. அவனுக்கு தான் அறிவு இல்லைன்னா உங்களுக்கெல்லாம் சுத்தமா மண்டையில எதுவுமே இல்லையா என்ன.." என்று கத்த அதற்கு ஆதரவாக மருததுரை தன் ஆட்களை நிறுத்தி வைத்திருக்க அவருக்கும் தாண்டவராயன் சொன்னது தான் சரி என்றனர்.

ஊரில் ஆளாளுக்கு ஒன்று பேச தலைகுனிந்திருந்த வெண்மதி கலங்கிய கண்களை யாருக்கும் காட்டாமல் முகத்தையும் நிமிர்த்தாமல் அப்படியே அமைதியாய் தலை குனிந்திருந்தாள்.

இதை பார்த்த துருவனுக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது.. அதுவும் வெண்மதியை அவர்கள் பேசிய பேச்சுக்கள் அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு கேட்டது.. அதை என்னவென உணரும் முன்பே அங்கே நடந்ததை கண்டு அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்று விட்டனர்.

ஏன் நடந்ததை பார்த்த வெண்மதி மயக்க நிலைக்கே சென்றுவிட்டாள்.

அப்படி என்ன நடந்திருக்கும் யோசிங்க பட்டூஸ்.. அடுத்த பாகத்தோட நாளைக்கு வர்றேன்..


போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.