பகுதி 17
ஓடிவந்து கட்டிலில் விழுந்து கதறத் தொடங்கினாள் மைதிலி. அழாமல் எப்படி இருக்க முடியும்? எப்படித்தான் நிதானமாக அடுத்த அடியினை எடுத்து வைத்தாலும், அது படு குழியாக மாறி உள்ளே இழுத்தால் என்னதான் செய்வாள்? மனம் பூராகவும் ரணமாக வலித்தது. ஸ்ரீ கெட்டவன் என்பதை முதல் பார்வையிலேயே கணித்து விட்டாள். ஆனால் இதுபோல் தரம் கெட்டவன் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டாள். அவள் முன்பே இருவரும் கொஞ்சுவதைக் கண்டவளால் அதை ஏற்க முடியவில்லை. அதற்கான காரணமும் அவளுக்கு தேவையில்லை.
குடும்பம் நடத்தும் வீட்டில் இப்படியா? இங்குள்ளவர்களுக்கு இது தெரியாதா? இல்லை, தெரிந்தும் அமைதி காக்கிறார்களா? பெரிய இடம் என்றால் இப்படித்தானோ? என நினைத்தவளுக்கு, தன்னை கை விலங்கில் சிறை வைத்து, அவளது நிராகரிப்பையும் மீறி, அவன் நடந்துகொண்ட விதம் உண்மையில் ஊறல் எடுக்கத்தான் செய்தது.
அவள் கடித்த கன்னத்தைத் தடவிப் பார்த்தாள். அவன் உமிழ்நீரின் ஈரம் இன்னமும் காயாமல் அவளது கையோடு ஒட்டி வந்தது. அருவெறுத்தவாறு பாவாடையில் அழுத்தி துடைத்தவள், அருகிலிருந்த டவலை எடுத்து கன்னத்தைப் பரபரவென தேய்த்தாள். நினைவுகள் மீண்டும் அவனது முரட்டுத்தனமான செயலிலேயே உழன்று, நின்றிருந்த கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்தது.
பெண்களை விட ஆண்களைப் பலமானவனாக படைத்ததே அவர்களைக் காப்பதற்கு என்று, எப்போது புரியும் இவனைப் போன்றவர்களுக்கு? அழுதழுது ஓய்ந்து போய் கட்டிலில் கவுந்தவள் கண்ணீர் ஓய்ந்த பாடில்லை. அதே நேரம் கதவு திறக்கும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள்.
தெய்வானை தான்!
தாயைக் கண்ட குழந்தை போல, ஓடிச்சென்று அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டவள் அழுகையானது பெரிதாக வெடித்தது. அவளது அழுகையின் காரணம் அறியாதவளுக்கு, என்ன சொல்லி ஆறுதல் படுத்துவதென்பது தெரியவில்லை. பாவம், அவளும் தான் என்ன செய்ய முடியும்? அவளாக சொல்லும் வரை காத்திருப்பதைத் தவிர. அவளது முதுகினை ஆதரவாய் வருடிக்கொடுத்தே தேற்ற முயன்றாள்.
அவள் வருடலில் தானாகவே தேறிவந்தவள், "அக்கா, நான் இன்னைக்கே வீட்டுக்கு போகணும்க்கா. என்னை எப்பிடியாச்சும் அனுப்பி வச்சிடுங்க. இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாதுக்கா." என பரபரவென பொழிந்தவள் கண்களில் மீண்டும் கண்ணீர்.
"சரிம்மா போகலாம், நானே உன்னை கூட்டிட்டு போய் விடுறேன். நீ முதல்ல அழுறத நிறுத்து. இப்பிடியே அழுதுட்டிருந்தா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது." என அந்த நேரம் அவளை சமாதானப்படுத்துவதற்காக கூறியவள் தோள்களில் இருந்து எழுந்தவள்,
"இல்ல, இதுக்கு மேல முடியாது. நிச்சயமா முடியாது. இதுக்கப்புறமும் இங்கேயே இருந்தேன்னா எனக்கு ஏதாவது ஆயிடும்." என பிதற்றியவாறு, தன் உடமைகளை எல்லாம் கொண்டு வந்த பையிற்குள் திணித்தவள் செயல்களைப் புரியாமல் பார்த்திருந்த தெய்வானை,
"எதுக்கு இப்போ இந்த மாதிரி நடந்துக்குற? அப்பிடி என்னதான் ஆச்சு?"
"எனக்கு எதுவுமே வேண்டாம்கா, நான் போறேன். இங்க இருக்கிறவங்க யாருமே நல்லவங்க கிடையாது. அதிலும் அந்த ஸ்ரீ ரொம்ப கெட்டவன்..." சொன்னதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றியவள் நிலையினை, தெய்வானையால் சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.
"மைதிலி, அக்கா சொல்லுறேன்ல்ல என்னவா இருந்தாலும் அக்காகிட்ட சொல்லு, நான் பாத்துக்கிறேன்." என்று நம்பிக்கை கொடுத்தவள் பேச்சு மைதிலி காதிலே விழவில்லை.
சொன்னதையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரியினைப் போல் பேசினால், தெய்வானையின் கேள்விகளும் ஆறுதல் வார்த்தைகளும் எப்படி அவள் காதில் விழும்? முழு உடமைகளையும் பையினுள் திணித்து தோளில் மாட்டியவள்,
"என்னை அழைச்சிட்டு போய் பஸ் ஸ்டாப்ல விட்டுடுங்கக்கா." என்றவளைப் பாவமாக பார்த்த தெய்வானை,
"எத்தனை வாட்டி தான்டி கேட்பேன், சொல்லி தொலை!" என்றாள்.
"வேண்டாம்க்கா, எதுவும் கேக்காதிங்க. என்னை முதல்ல அழைச்சிட்டு போங்க." மறுபடியும் ஆரம்பித்தவள் தோள்களை உலுக்கி, "மைதிலி." என்றாள்.
அவளது குலுக்கலில் சமநிலை எய்தாளோ என்னமோ, சற்றுநேரம் அசைவற்று நின்றவள், மீண்டும் தெய்வானையைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
"அழாம முதல்ல ரிலாஸ் ஆகு." என்று அவள் முதுகினை வருடியவாறு கட்டிலில் அமர்த்தியவள், "என்னை நீ நம்புற தானே?" என்றாள்.
ஆம் என்பதாக மேலும் கீழுமாக அவள் தலையசைக்க, "அப்போ சொல்லு, யாரு உன்னை என்ன பண்ணாங்க?”
"அங்க மாடியில..." என்றவளால் ஏனோ மேலே சொல்ல முடியவில்லை. அழுகையை முந்திக்கொள்ள, "சரி சரி, நீ இப்போ எதுவும் சொல்ல வேண்டாம், கொஞ்சம் படுத்துக்கிறியா?"
இல்லை என்று தலையசைத்தவள், "மாடி ரூம்ல ஸ்ரீ யாரோ ஒரு பொண்ணு..." என்று அதற்கு மேல் சொல்லாமல் இடையினில் நிறுத்தி,
"இங்கேயே இருக்கிறது எனக்கு சரியா வராதுக்கா. பணக்காரங்க சகவாசம் இப்பிடித்தான் இருக்கும்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. இதுதான் இவங்க கலாச்சாரம் என்று தெரிஞ்சிருந்தா, நான் வந்தே இருக்க மாட்டேன்." என்றவளைக் குழப்பத்துடனே பார்த்திருந்தவளுக்கு, 'இதற்கா இப்படி அழுதாள்?' என்றே தோன்றியது.
அவள் அழுகையினைக் கண்டதும், அவளிடம் அவன் தவறாக நடந்து விட்டான் என்றல்லவா பயந்தாள்.
"உண்மையை சொல்லு மைதிலி, வேற எதுவும் இல்லையே?" என்றாள் சந்தேகமாக.
தெய்வானையின் கேள்வியில் அதிர்ந்தவள், ஏனோ ஸ்ரீ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவளிடம் சொல்ல விரும்பவில்லை.
எங்கு, தான் அவன் தன்னிடம் நடந்து கொண்டதை அவளிடம் சொல்லப்போனால், ஸ்ரீயை தெய்வானை தவறாக நினைத்து விடக்கூடுமோ என்று நினைத்தவளாய்,
"இ... இல்லைக்கா... வேற எதுவுமில்லை." என்றாள் தடுமாற்றமாக.
"ஊப்..." என்ற பெருமூச்சினை வெளியேற்றிய தெவ்வானை, "நீ இந்த மாதிரி அழவும், நான் ரொம்ப பயந்துட்டேன். உனக்கு மட்டும் ஒரு உண்மை சொல்லுறேன் மைதிலி, இது யாருக்கும் தெரிய வேண்டாம். ஏன்னா எனக்கும் ரங்கசாமி ஐயாவுக்கும் தான் இந்த வீட்டில நடக்கிற சில உண்மைகள் தெரியும். சின்னம்மாவுக்கு இந்த மாதிரி ஆனதில இருந்து, வீட்டில எதுவுமே சரியா இல்ல." என்றவளை குழப்பமாகப் பார்த்தாள் மைதிலி.
அவள் பார்வையின் பொருள் புரிந்தவளாய், "உனக்கு முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும். ஸ்ரீக்கு ஏழு வயசிருக்கும். விஜயா அம்மாவும் ஸ்ரீயோட அப்பாவும் ஒரு ஃபங்க்ஷனுக்கு கார்ல போயிருக்காங்க. ஸ்ரீக்கு அவன் பெத்தவங்களை விட தாத்தா, பாட்டியை தான் ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு பார்த்து ரங்கசாமி ஐயாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. பெரியம்மாவும் ஐயாவைக் காரணம் காட்டி போகல.
ஸ்ரீயும் தாத்தா, பாட்டி வரலன்னா நானும் வரமாட்டேன்னு சொல்லி அடம் பிடிச்சதனால, வேற வழியில்லாம ஸ்ரீயையும் வீட்டிலேயே விட்டுட்டு கார்ல போயிருக்காங்க. எதிர்புறமா சைக்கிள்ல வந்த பெரியவருக்கு திடீர்ன்னு வலிப்பு வந்து நடுரோட்டுலயே விழுந்திட்டாரு.
ஸ்ரீ அப்பா இதை எதிர்பாக்காததனால, அந்த பெரியவரை மோதிடக் கூடாதுன்னு காரை அவசரமா திருப்பியிருக்காரு. பக்கத்தில இருந்த கட்டிடத்தோட மோதிடிச்சு. டிரைவர் சைட் ரொம்ப சேதமடைஞ்சதனால, ஸ்ரீ அப்பா அந்த இடத்திலேயே இறந்துட்டாரு. அம்மாவுக்கு தலையில சின்ன அடி. காலும் சீட்டுக்குள்ள மாட்டிக்கிடிச்சு, அதனாலதான் நடக்க முடியல.
மகனை இழந்த சோகம், நடக்க முடியாம கிடக்கிற மருமக, வயசான கணவர்னு பெரியம்மாவுக்கு எதை கவனிக்கிறதுனு தெரியாம ரொம்ப வருத்திச்சு. இதில ஸ்ரீ வேற எப்பவுமே அப்பாவை கேட்டு அடம்பிடிப்பான். கணவனை இழந்த விஜயா அம்மாவும் ரொம்ப நொந்திருந்ததனால, மகனை பத்தி கவலைப்படல. அவங்க இல்லன்னாலும் மாமன், மாமியாரு நல்லபடியாவே அவனை பார்த்துப்பாங்கன்னு நினைச்சிட்டாங்க போல.
வயசானவங்களால ஸ்ரீயை எப்படி கவனிக்க முடியும்? அவனும் அப்பாவ கேட்டே அடம்பிடிப்பானாம். வீட்டில இருந்தா தானே அடம் பண்ணுவான்னு, அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாட போனா மறந்திடுவான்னு நினைச்சு, ஐயா தான் அவனை ஸ்கூல் முடிஞ்சு வந்த கையோட, அவன் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுல கொண்டு போய் விட்டிடுவாரு.
ஸ்ரீ மறுபடியும் வீட்டுக்கு வர சாயந்தரம் ஆறு மணியாகும். இதுவே ஸ்ரீக்கு பழக்கமாகி, தொடர்ந்து தன் நட்பு வட்டாரத்தோட தன்னோட பாதி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சான். வளர்ந்த பிறகும் இதுவே தொடர்ந்திச்சு. அவனோட சேர்ந்து ஒரு சில கெட்ட பழக்கங்களும் வளந்துச்சு. இது ஐயாவுக்கு தெரியாது. ஒரு நாள் ஒன்பது மணியிருக்கும், குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்போ ஈஸ்வரி அம்மா தான் கண்டுபிடிச்சு கேட்டிருக்காங்க.
அன்னைக்கு வீட்டுல பெரிய சண்டை. ஆனா அவனோட பழக்கத்தை மட்டும் மாத்த முடியல. தினமும் குடிச்சிட்டு வருவானாம். காலேஜ் முடிஞ்சதும் அவன் அப்பா விட்டுப்போன அவரோட பிஸினஸை, தாத்தாகிட்டயிருந்து வாங்கி ஸ்ரீயே வெற்றிகரமா நடத்தி, பெரிய இடத்துக்கு வந்ததனால, இது பெரிய விஷயமா அவங்களுக்கு தெரியல.
இந்த காலத்தில யாருக்குத்தான் இந்த பழக்கமில்ல? இப்போ தான் நாகரிகமாச்சேனு அவரும் விட்டுட்டாரு. விட்டுட்டாங்கன்னு சொல்லுறதை விட, அவனை தட்டி கேக்க அவங்களால முடியல. அப்பிடி கேட்டாலும் சண்டை தான் வரும். அதனால விஜயா அம்மாதான் மனவருத்தப்படுவாங்க.
முதல் முறை நடந்த சண்டைக்கே, தன்னோட தலையீடு குழந்தைக்கு இல்லாததனால தான், ஸ்ரீ இந்த மாதிரி கெட்டுப்போனான்.இந்த ஊனத்தினால தான் எல்லாம். இதை எல்லாம் பார்க்கவா நான் இருக்கேன்? என்னை மட்டும் ஏன் உயிரோட வச்சிருக்கான் அந்த கடவுள்? என்று அழுதவரை தேற்றுவதுக்குள்ள ரொம்பவே நொந்துவிட்டனர் பெரியவர்கள்.
அதனால்தான் முடிஞ்சவரை, ஸ்ரீயை அமைதியா கண்டிப்பார். அதை அவன் கேட்கவில்லை என்றால், கொஞ்சம் உரக்கச் சொல்லுவார். அதுவே பெரியளவில் சண்டையாக மாறுகிறது போலிருந்தால் ஒதுங்கிக்கொள்வார்.
எல்லாமே விஜயா அம்மாவிற்கு தெரியக்கூடாது என்பதற்காகவே இதுவே அந்த வீட்டின் வாடிக்கையானது. ஸ்ரீக்கு இருபத்தி ஐந்து வயதில் தொழில், தொழில் என்று நேரம் தாழ்த்தியே வீடு வருவான். தம்பதிகள் இருவரும் நோயாளிகள் என்பதால், மாத்திரையை போட்டு விட்டு ஒன்பது மணியளவிலே தூங்க சென்று விடுவதால், எந்நேரம் அவன் வீடு வருவான் என்பது யாருக்கும் தெரியாது.
அன்று புரண்டு புரண்டு படுத்த ரங்கசாமி தூக்கம் வராமல் இருக்கவே, ஈஸ்வரி தூக்கத்தையும் கெடுக்காது, அறையை விட்டு வெளிவந்தவர், டீவியாவது பார்ப்போம் என்று என அமர்ந்த போதுதான் கதவு திறக்கும் ஓசை கேட்டுத் திரும்பி பார்த்தார்.
மிக நெருக்கமாக ஒரு பெண்ணை அணைத்தவாறு உள்ளே வந்தவனைக் கண்டவருக்கு அதிர்ச்சியாகியது. அதே அதிர்ச்சி தான் ஸ்ரீயிற்கும். அந்த நேரத்தில் ரங்கசாமியை அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை. அவனை எரிப்பது போல் பார்த்தவர்,
"என்னடா இது? எத்தனை நாள் இந்த பழக்கம்?" என்று சீறியவரின் பேச்சில் தெளிந்தவன்,
"எதுக்கு இப்போ கத்துறீங்க? நீங்க கத்துறதனால எனக்கு எதுவும் ஆகப்போறது கிடையாது. அம்மாக்கு தெரிஞ்சா அவங்களுக்குத்தான் ஏதாவது ஆகும்." என்றவன் பேச்சில் இருந்த உண்மை புரிந்தவர்,
"இதுவரைக்கும் சின்ன சின்ன தப்புத்தான் செய்த ஸ்ரீ. அதெல்லாம் ஏத்துக்கிட்டோம், ஆனா இது ரொம்ப தப்புடா. இதெல்லாம் வெளிய தெரிஞ்சா குடும்ப மானம் கப்பல் ஏறிடும். உன்னை சரியா வளக்கலையோனு எங்களை வயசான நேரத்தில யோசிக்க வச்சிடாத. ஏதோ நல்லபடியா பிஸினஸ் பாத்துக்கிறனு, உன் இஷ்டத்துக்கு விட்டது தப்புனு இப்போ புரிஞ்சுகிட்டேன். இப்பத்தான் புரியுது, ஏன் லேட்டா வரன்னு.
இது வீடு, முதல்ல இவளை அழைச்சிட்டு போயி வெளிய விட்டுட்டு வா. இல்லனா நீயும் வெளிய போ." என்றார் கோபமாய்.
உதட்டு வளைவில் அலட்சியமாய் நகைத்தவனோ, "வயசானா அறிவும் மழுங்கி போயிடுமா தாத்தா? இது ஒன்னும் உங்க வீடு இல்லை, என் அப்பாவோடது. ஏதோ பெரியவங்களுக்கு மரியாதை தரணும் எங்கிறததுக்காகத் தான், நீங்க தூங்கினதுக்கப்புறம் கூட்டிட்டு வரேன். அதை உங்க மேல பயத்தினால பண்றேன்னு நினைச்சா உங்க தப்பு. அந்த மரியாதையும் வேணாம்னா சொல்லுங்க, நாளையில இருந்து சீக்கரமாவே வந்திடுறேன்.
என்ன, பாட்டிக்குத் தெரிஞ்சாதான் முதல்ல வருத்தப்படுவாங்க. அப்புறம் தண்ணியடிச்சதுக்கு கண்டுக்காம விட்டது போல, இதையும் விட்டுடுவாங்க. அம்மாவ பத்தி சொல்லவே தேவையில்ல. அப்புறம் என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியும். இனி உங்க இஷ்டம்." என்றவன் ஒட்டிநின்ற பெண்ணிடம்,
"நீ வா டார்லிங்." என்று அவள் இடையோடு அணைத்து பிடித்தவாறு மாடி ஏறி சென்றான்.
ரங்கசாமியால் எதுவும் செய்ய முடியவில்லை. உண்மை தானே, இவனது செயலால் வருத்தப்படப்போவது இவனல்லவே! இவனை சார்ந்திருக்கும் இரு பெண்களும் தான். ஆனால் அப்படியே விடவும் இது சாதாரண பழக்கமல்ல. ஈஸ்வரிக்குத் தெரிந்தால் நொறுங்கி போய் விடுவாள்.
இதற்கெல்லாம் வழியென்றால், கால்கட்டு ஒன்றுதான் என நினைத்தவர், இது பற்றி மற்றவர்களிடம் கலந்து பேசி முடிவோடு இவனிடம் கேட்டால், "சுதந்திர பறவையை கூன்டில் சிக்காது." என்றவன், "இனிமேல் கல்யாணப் பேச்சோடு வரவே வேண்டாம்." என்று கண்டிப்போடு கூறிவிட்டான்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த கேவலத்தை மனைவியிடமும் மருமகளிடமும் இருந்து மறைப்பதற்கு படாதபாடு படுகிறார் ரங்கசாமி. அதனால் தான் இரவானால் ஒன்பது மணிக்கு மேல் யாரையும் விழித்திருக்க விடுவதில்லை ரங்கசாமி. எங்கு மருமகளுக்கு தெரிந்தால் உயிரை விட்டுவிடுவாளோ என்ற பயம். மனைவிக்கு தெரிந்தால் மனம் நொந்து, புதிதாக நோயினை இழுத்து வைத்து விடுவாளோ என்ற பயம். ஆனால் இவை அனைத்தையும் தெய்வானை அறிவாள்.
அவளும் பல தடவைகள் நேரில் பார்த்திருக்கிறாளே! தாத்தாவால் செய்ய முடியாததை ஒரு வேலைக்காரியால் எப்படி செய்ய முடியும்? ரங்கசாமி வேண்டுதலுக்கினங்க அவளும் மற்றவர்களிடத்திலிருந்து அதை மறைத்து விட்டாள். அனைத்தையும் மைதிலியிடம் ஒப்பித்தவள்,
"நான் மத்தவங்ககிட்டருந்து இதை எல்லாம் மறைக்கிறது தப்புதான். ஆனா இது பெரிய இடத்து விவகாரம். அதுவுமில்லாமல் இதனால பாதிக்கப்படப் போறது ஸ்ரீ கிடையாது. பெரியம்மாவும் சின்னம்மாவும் தான். அதனால தான் நான் மௌனமாவே இருக்கேன்.நீயும் அமைதியா இருந்திட்டு போ மைதிலி." என்றாள் கெஞ்சலாய்.
"என்னக்கா சொல்லுறீங்க? இவன் இருக்கிற வீட்டில நிம்மதியா ஒரு நிமிஷம் அயர்ந்து தூங்க முடியுமா? எப்போ என்னாகும், என்னையும் ஏதாவது செய்திடுவானோனு பயந்து என்னால இங்கெல்லாம் இருக்க முடியாதுக்கா. என்னை பஸ் ஸ்டாப்ல விட்டுடுங்க." என்று விழித்திரையினை மறைத்த கண்ணீரைத் துடைத்தவாறே கேட்ட மைதிலியின் கையினைப் பற்றிக்கொண்டவள்,
"நீ நினைக்கிற மாதிரில்லாம் ஸ்ரீ இல்லை மைதிலி. நான் இங்க ஏழு வருஷமா வேலை பாக்கிறேன். எனக்கும் அந்தளவுக்கு வயசு கிடையாது. உன்னிலும் பார்க்க பத்து, பன்னிரண்டு வயசு தான் அதிகம் இருக்கும். அவன் இதுவரை என்னை தப்பா பார்த்தது கூட கிடையாது.அவன் யாரையும் தன் இச்சையை தீர்த்துக்க கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ தன்னோட ஆசையை தீர்த்துக்கிட்டதில்லை. பணத் தேவைக்காகவும் தாங்களாக இஷ்டப்பட்டு வரும் பெண்களோட தான் தப்பா நடந்திகிட்டிருக்கான். குடும்ப பொண்ணுங்க நிழலைக்கூட தொட மாட்டான்." என்றவள்,
"நீ திடீர்னு வீட்டை விட்டு போனா என்ன ஏதுன்னு சந்தேகம் வர ஆரம்பிச்சிடும். அப்புறம் அதுக்கான காரணத்தை தேட ஆரம்பிச்சா, உண்மை என்னன்னு தெரிய வந்திச்சினா என்னென்னமோ விபரீதம் ஆகிடும். சில வேளை அம்மா உயிரை இழக்க நேரிடும் மைதிலி." என்றாள் கவலையாக.
ஏனோ தெய்வானை பேச்சினை மைதிலியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பப் பெண்கள் நிழலையும் தொடமாட்டானா? இப்போது என்ன, அவள் இணக்கத்தின் பெயரில் தான், அவள் திணறத் திணற இதுபோல நடந்து கொண்டானோ? தனக்குள் கேள்வி எழுப்பியவளால், ஏனோ அதை வாய்விட்டு கேட்க மனம் வரவில்லை.
எப்படி இந்த அசிங்கத்தை கேட்க முடியும்? இதை சொன்னால் தன்னையும் தெய்வானை தவறாக நினைக்கக்கூடும் என்று, அதற்கான காரணமும் தேடியவள் மனமானது, தன்னால் விஜயா உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று, இறுதியாக தெய்வானை கூறிய பேச்சில் வந்து நின்றது.
"ஆனால் அக்கா..." என எதுவோ கூற வந்தவளை இடை மறித்தவள்,
"உனக்கு இப்போ பிரச்சினை ஸ்ரீ தானே? நான் சொன்னதில உனக்கு நம்பிக்கை வரலன்னா, நீ அவன்கிட்ட இருந்து ஒதுங்கியே இரு. அவன் இந்த வீட்டில இருக்கிற நேரம் ரொம்பவே குறைவு. காலையில ஒரு தடவை தான் அவனை நீ பார்க்க வேண்டி வரும். அந்த நேரத்தையும் தவிர்த்துட்டன்னா எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டை விட்டு மட்டும் போயிடாத மைதிலி. அப்புறம் வீடு நரகமாகிடும். அம்மாவும் உன்மேல ரொம்ப பிரியமா இருக்காங்க. உனக்கும் அவங்க மேல உண்மையான அன்பும் அக்கறையும் இருந்திச்சினா உன் முடிவ மாத்திக்கோ." என்றாள் கெஞ்சலாய்.
ஏனோ தெய்வானை மேல் மரியாதையே உண்டானது. வேலைக்கு வந்தோமா, வேலையை முடித்தோமா என்று இல்லாது, வீட்டில் உள்ளவர்களின் நலனைப் பற்றி கவலை கொள்ளும் தெய்வானையை நினைக்க பெருமையாகத்தான் இருந்தது.
ஆனால் ஸ்ரீ, தெய்வானை கூறியது போல் அவனை கண்டுகொள்ளாது இருந்தால், தன்னை அவன் நெருங்க முடியாது என நினைத்தவள், சரி என்பது போல் தலையசைத்து,
"எனக்கு ஒரு உதவி வேணும்க்கா. இதெல்லாம் பார்த்தது ஒரு மாதிரியாக இருக்கு, தலை வேற ரொம்ப வலிக்குது. அதோட இந்த அழுது வடிஞ்ச முகத்தோட அம்மா முன்னாடி போய் நின்னா நிறைய கேள்வி கேட்பாங்க. இன்னைக்கு ஒரு நாளைக்கு அம்மாவை நீங்க பாத்துக்கிறீங்களா?" என்றாள்.
அவளது சம்மதமே போதுமென நினைத்தவள், "நீ இங்கேயே இருக்க சம்மதிச்சதே போதும் மைதிலி. நான் அம்மாவை பார்த்துக்கிறேன்." என்று எழுந்து சென்றவள், அவள் முகத்தில் இருந்த மாறுதல் உறுத்த, சட்டென நின்று திரும்பி மைதிலியைப் பார்த்தாள்.
"ஆமா மைதிலி, உன்னை முன்னாடியே கேக்கணும்னு நினைச்சேன். உதட்டுல அது என்ன காயம்? ரத்தம் வேற லைட்டா கசியிது...?" என்றாள்.
“உதட்டுல காயமா?” என அதே கேள்வியை தெய்வானையிடம் கேட்டவாறு,விரல் கொண்டு வருடியவள் ரத்தமானது கையோடு ஒட்டிவர, "எப்படி இது?" என்று எண்ணுகையில் தான் புரிந்தது.
"அது... ஸ்ரீ ரூம்ல நடந்ததை கண்டுட்டு, அவன் பார்க்கிறதுக்கு முன்னாடி வேகமா ஓடி வந்தேனா, கதவை கவனிக்காம மோதிட்டேன்." என்றாள் தடுமாற்றமாக.
அவள் பேச்சை நம்பாமலே, "உண்மைக்கும் கதவு மேல தானே மோதின? வேற எதுவுமில்லையே?"
"அப்... அப்பிடில்லாம் எதுவுமே இல்லக்கா. மாடி பழக்கமில்லையா? எங்க என்ன இருக்குன்னு தெரியல.” என்றாள் மீண்டும் அதே மழுப்பல்
"ரொம்ப தலை வலிக்குதுக்கா. நான் படுத்துக்க போறேன், போறப்ப கதவையும் சாத்திட்டு போங்க." என்றாள்.
"சரி நீ தூங்கு, கண்டதையும் போட்டு குழப்பிக்காத. அப்புறமா வரேன்." என்றவாறு வெளியேறினாள்.
தொடரும்…