• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 18

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna

பகுதி 18



"என்ன தெய்வானை விடிஞ்சு இவ்வளவு நேரமாச்சு, யாரையுமே காணல? இந்நேரத்துக்கு மைதிலி வீட்டையே ரெண்டாக்கியிருப்பாளே? என்னாச்சு அவளுக்கு? இன்னும் எழுந்துக்கலையா? ஏன் அவளுக்கு ஏதாச்சும் உடம்பு சரியில்லையா?" என்றார் அக்கறையாய் ஈஸ்வரி.

தெய்வானையோ சிறிதும் யோசிக்காமல், "ஆமாம்மா, அவளுக்கு ரொம்ப தலை வலிக்குதாம். பாவம், எந்நேரமும் துறுதுறுன்னு ஓடிட்டிருப்பா, இன்னைக்கு முடியாம படுத்துட்டா. சின்ன தலை வலியைக்கூட தாங்கிக்க மாட்டா போல. கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சரியானதும் வரேன் என்கிறா. சரியானதும் அவளாகவே வருவாள்." என்றவள்,

"அம்மா எழுந்திருப்பாங்க, நான் அவங்களை அழைச்சிட்டு வந்திடுறேன்." என்றவாறு விஜயா அறை நோக்கி நடந்தவள்,ரங்கசாமியிடம் தலையசைத்து விட்டுச் சென்றாள்.

ரங்கசாமிக்கு தான் அந்த அசைவின் காரணம் புரியாது முகம் வாடிப்போயிற்று. பல பிரச்சனைகள் தாண்டி வந்தவள் மைதிலி. தன் பேரனாலும் ஒரு பிரச்சனையில் சிக்கிவிடக்கூடது என்பதுதான் அவர் பயமே. அவன் இதுவரை எந்த பெண்ணையும் வற்புறுத்தியதில்லை. அதே சமயம் நம்பும் அளவிற்கு அவன் நல்லவனும் இல்லை என்பதே உண்மை.

‘அவகிட்ட தப்பா நடந்திருப்பானோ? ச்சே... ச்சே... அப்பிடி இருக்காது.’ என தன்னைத் தானே தேற்றிக்கொண்டார்.

"ஆமா என்ன நீ வர, மைதிலி எங்க காணோம்? இந்நேரம் அவ எழுந்திரிச்சிருப்பாளே?" என்றார் அவளையே எதிர்பார்த்து காத்திருந்த விஜயா.

"அவ ஏற்கனவே எந்திரிச்சிட்டா. உடம்புக்கு முடியல போல, ரொம்ப தலை வலிக்குது என்கிறா. முகம் வேற ரொம்ப சோர்வா இருந்திச்சு. நான்தான் நீ நல்லா ரெஸ்ட் எடு, நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன்." என்றாள்.

"ஏன் தெய்வானை திடீர்னு என்னாச்சு மைதிலிக்கு? நேத்தெல்லாம் நல்லாத்தானே இருந்தா? மாத்திரை ஏதாவது போட்டுக்கிட்டாளா?" என்றார் அக்கறையாக.

"இல்லம்மா, முதல்ல உங்கள கவனிச்சிட்டு, அப்புறமா அந்த மேடத்தை கவனிக்கிறேனே!" என்றவாறு, விஜயாவுக்கு வேண்டிய உதவிகள் செய்து தயார் படுத்தியவள்,

"இருங்க, காஃபி எடுத்துட்டு வந்துடுறேன்." என நகரப் போனவளை,

"தெய்வானை!" என அழைத்து நிறுத்தியவர்,

"வரும்போது ரெண்டு காஃபியாவே எடுத்துட்டு மைதிலி ரூமுக்கு வா. அவளுக்கு என்னன்னு பாக்கிறேன். அவளை பாக்காதது ஒரு மாதிரியா இருக்கு. வரும்போது மாத்திரையும் எடுத்துட்டு வந்திடு." என்றவாறு, தன் சேரை இயக்கியவர் மைதிலி ரூமிற்குள் நுழைந்தார்.

கதவினைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த விஜயாவைக் கண்டதும் அவசரமாக கண்களைத் துடைத்தவள், "வாங்கம்மா" என்று அவரை வரவேற்றாள்.

"என்னாச்சு மைதிலி? தலைவலின்னு தெய்வானை சொன்னா, இப்போ எப்படி இருக்கு?" என்றவாறு அவளை நெருங்கியவர், நெற்றியினைத் தொட்டுப் பார்த்தார்.

அழுததாலோ என்னமோ, உடல் சூடாகத்தான் இருந்தது. அவளை ஆராய்ந்தவர் அவள் முகம் வீங்கி சிவந்திருக்க, "ஏன்டா, இந்த மாதிரி இருக்கு முகம்? வலி தாங்கம அழுதியா என்ன? முகமெல்லாம் வீங்கியிருக்கு, டாக்டரை கூப்பிட்டு என்னன்னு பாத்திடலாமா?" என்றார்.

அவரது அக்கறையில் பூரித்துப் போனவளுக்கு, 'பூப்போல மனம் படைத்த அன்னைக்கா இப்படி ஒரு மகன்? இவனது சுயரூபம் தெரிந்தால் நிச்சயம் இந்த மென்மையான இதயம் உடைந்து போவது உறுதி. அவ்வளவு ஏன், உயிரைக்கூட மாய்த்துக்கொள்வார். ஆனால் இந்த ஸ்ரீக்கு எப்படித்தான் இவரை ஏமாற்ற முடிகிறதோ?’ என தனக்குள் நினைத்தவள்,

"அதெல்லாம் வேண்டாம்மா, சாதாரண தலைவலி தான். தூங்கி எழுந்தா சரியாகிடும்." என்றாள்.

"ம், அப்போ சரி. தெய்வானையை மாத்திரை எடுத்திட்டு வர சொல்லிருக்கேன். அதுக்கும் கேக்கலன்னா டாக்டரை கூப்பிட்டிடலாம்." என்றார்.

சரியென தலையசைத்தவள் எதை மறைப்பதற்காய் தலையினைக் கவிழ்ந்து கொண்டாளோ, இந்த மைதிலி அவருக்கு புதியவளாகவே தெரிந்தாள். அவரைப் பொறுத்தவரை மைதிலி என்றாலே அத்தனை சேட்டைக்கும் சொந்தக்காரி. இன்று அவர் பார்வையில் மொத்தமாகவே மாறியிருந்தாள். அவள் மாற்றத்தைப் புரிந்து கொள்ளாத அளவிற்கு விஜயா ஒன்றும் உலகம் தெரியாதவர் அல்லவே!

'நீயும் என்கிட்ட எதையோ மறைக்கிறல்ல?' என்றவர் மனமோ, அவளைப் பார்வையால் வருடியவாறு இருந்தது.

காஃபி தட்டோடு தெய்வானை வந்து விட, அவளிடமிருந்து தட்டினை வாங்கிக் கொண்டவர், "இன்னைக்கு முழு வேலையும் நீதான் பாக்கணும், இதை நான் பாத்துக்குறேன் நீ போ." என அவளை அனுப்பி வைத்தார்.

தட்டில் காஃபியோடு தலைவலி மாத்திரையும் இருக்க, அதை எடுத்துக் கொடுத்தார்.

“காஃபியை குடிச்சிட்டு மாத்திரைய போட்டுட்டு படு. எழுந்திருக்கிறப்போ எதுவும் இருக்காது." என்று தட்டிலிருந்த தண்ணீரையும் எடுத்து நீட்டினார்.

அதை அடித்தொண்டைக்குள் போட்டு அதை விழுங்கும் அழகையே பார்த்திருந்தவர், "சரி, நீ படுத்துக்கோ, தைலம் தேய்ச்சு விடுறேன்." என்றார்.

எந்த மறுப்பும் கூறாமல் தலையசைத்து படுக்க ஆயத்தமானவளுக்கு என்ன தோன்றிற்றோ, "உங்க மடியில படுத்துக்கவாம்மா?" என்றாள் குழந்தை போல் அப்பாவியாய்.

"இதெல்லாம் கேக்கணுமா? வா, வந்து படுத்துக்கோ." என்க,

"சேர்ல இருக்குறப்போ நான் எப்பிடி படுக்க? பெட்ல வந்து உக்காருங்க." உரிமையாக அழைத்தாள்.

"சரி, வந்து என்னை புடிச்சு விடு." என்றவரை, கைத்தாங்கலாக பிடித்து கட்டிலில் அமர்த்தியவள், விஜயா மடிமீது தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

தைலத்தை இதமாக தேய்த்து விட்டவாறே அவளை உறங்க வைக்க, முயற்சி செய்தவர் செயலில் கண்கள் சொக்க, "மைதிலி!" என்று உரக்க அழைத்தவாறு ஓடிவந்தாள் தெய்வானை.

"உனக்கு போன் வந்திருக்கு, என்னனு வந்து கேளு." என்றாள்.

"எனக்காக்கா போன்?" என தூக்கக் கலக்கத்தில் வினவியவளுக்கு மாணிக்கம் அழைக்கும் நேரம் என்பது நினைவில் வந்தது.

"என்னனு கேட்டுட்டு வந்திடுறேன்ம்மா." என்றவாறு ஹாலுக்கு ஓடினாள்.

"என்னை என் சேர்ல உக்கார வை தெய்வானை." என சேருக்கு மாறியவர், மைதிலி பின்னாடியே சென்றார்.

“ஹலோ!” என்ற மைதிலியின் குரல் கேட்டதும் மறுமுனையில்,

"அக்கா... அக்கா..." என்று பதட்டத்துடன் அழுகையும் கலந்து ஒலித்த குரல், தன் தங்கையது என்பதைக் கண்டுகொண்டவள்,

"ஜனா நீயாடி, என்னாச்சு? ஏன் அழற?" என்றாள் தங்கையின் கண்ணீரில் பதறியவளாய்.

"அக்கா அத்தைகா... அத்தை வந்தாங்கக்கா..." என வார்த்தைக்கு வார்த்தை மூச்சினை இழுத்து விடுவதிலேயே தெரிந்தது, நீண்ட நேரம் அழுதிருப்பது.

"ஜனா முதல்ல அழாதடி! நீ முதல்ல தண்ணியைக் குடிச்சிட்டு நிதானமாவே வந்து பேசு." என்க,

எதிர்புறம் அமைதி நிலவ, "ஜனா... ஜனா..." என அழைத்துப் பார்த்தாள்.

அவள் குரல் கேட்கவில்லை, தொலைவில் அன்னையின் குரல் கேட்டது.

"போன்ல யார் கூட பேசிட்டிருக்க? மைதிலி கூடத்தானே பேசுற? உனக்கு சொன்னது புரியாதா? அவளே எல்லாத்தையும் விட்டுட்டு தனியா போயி கவலையில இருக்கா. நீயும் இங்க நடக்கிறதை சொல்லி, அவளை இன்னும் கஷ்டப்படுத்த போறியா? போனை வை ஜனா." என இந்திரா, ஜனாவை திட்டுவது தெளிவாகக் கேட்டது.

"எப்பிடிம்மா சும்மா இருக்கிறது? அத்தை..." என்று ஜனா எதுவோ கூற வர,

"மைதிலி!" என்ற இந்திராவின் ஏக்கமான குரல் கேட்க,இத்தனை நேரம் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், எதுவும் அறியாதவள் போல், "ஆ... அம்மா சொல்லும்மா, ரொம்ப நேரமா கத்திக்கிட்டிருக்கேன், எங்க போனிங்க?" என்று சாதாரணமாக கேட்டாள்.

"அது... அது சிக்னல் பிரச்சனையா இருக்கும்டா மைதிலி. நீ நல்லா இருக்க தானே? போன இடத்தில எந்த பிரச்சனையும் இல்லையே? மாணிக்கம் அண்ணா உங்கிட்ட தினமும் பேசுறதா சொல்லுவாரும்மா. உனக்கு அங்க எந்த பிரச்சனையும் இல்ல, நீ நல்லா இருக்கன்னு சொன்னதனால தான், நாங்க இங்க நிம்மதியா இருக்கோம். உன்னை நல்லா பாத்துக்கிறாங்களாம்மா?" என்றார்.

"என்னை பத்தி கவலையே படாதம்மா. உன்னை போலவே பாசமா பாத்துக்க, இங்கயும் அம்மா இருக்காங்க. எல்லாருமே என்னை வீட்டில ஒருத்தியாத்தான் பாத்துக்கறாங்க." என்றவள்,

"அம்மா..." என ஏதோ கேட்க வந்தவள் பாதியிலேயே நிறுத்த,

"என்ன மைதிலி, சொல்லு."

"அது அம்மா... நான் இங்கே வந்ததுக்கப்புறம் யாராச்சும் ஏதாவது பேசினாங்களா?”

"ஆரம்பத்தில தப்பா பேசினாங்கம்மா. இப்போ அந்த மாதிரி எதுவுமில்லை." என்க,

"ஏன்ம்மா பொய் சொல்லுற? எதுவும் தெரியக்கூடாதுனு ஒளிக்கிறியா? இப்படியே எல்லாத்தையும் ஒளி, அங்க அவ அத்தான் தனக்கு கிடைப்பாருன்னு நினைச்சு கனவுலயே வாழட்டும். பாவம்மா அவ... நடந்ததை சொல்லும்மா, அப்போ தான் அவளுக்கும் அத்தையோட குணம் புரியும்." என்று ஜனா சத்தமிட்டாள்.

"பெரியவங்க பேசிட்டிருக்குறோம், இப்பிடித்தான் இடைஞ்சல் பண்ணுவியா? முதல்ல போ, நான் பேசிட்டு வரேன்." என்று அவளை மிரட்டினார்.

"எதுக்கெடுத்தாலும் இதை சொல்லு, என்கிட்ட மட்டும் உன் வீராப்பை காமி. வீட்டுக்கு வந்து கத்திட்டு போறவங்கள எதிர்த்து ஒரு வார்த்தை பேசிடாத." என்றவாறு வெளியே சென்றுவிட்டாள்.

"என்னம்மா ஆச்சு? எதுக்கு ஜனா கோபமா பேசிட்டு போறா? யாரு வந்து சத்தம் போட்டாங்க?" என்றாள் மைதிலி ஜனாவின் பேச்சினை வைத்து.

"அவ பேச்சையா காதில வாங்கின? அவளுக்கு பைத்தியம்." என்று சமாளிக்க பார்க்க.

"அத்தையாம்மா வந்தாங்க? என்கிட்ட எதையும் மறைக்காம சொல்லும்மா." என்றவள் பேச்சை இந்திராவும் எதிர்பார்க்கவில்லை.

"என்னம்மா, இன்னும் என்ன சொல்லி சமளிக்கலாம்னு யோசிக்கிறயா? அன்னைக்கு அத்தை வந்து அத்தானை எனக்கு கட்டிவைக்க மாட்டேன்னு கத்திட்டு போனப்ப, நான் தூங்காம தான் இருந்தேன். அதுதான் அன்னைக்கே பேசிட்டு போயிட்டாங்கள்ல? அப்புறம் என்னவாம்? எப்போ வந்தாங்க?" என மைதிலி வினவ,

"காலையில தான்ம்மா... வந்ததும் கத்தி ஊரை கூட்டிட்டாங்க..." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,

"அதை நான் சொல்லுறேன்க்கா!" என்று தாயிடமிருந்து போனை பறித்துக் கூற ஆரம்பித்தாள் ஜனா.

"நீ ஊரை விட்டு போன மறுநாள் உன்னை காணலன்னு ஊர் பூராவும் பரவிடிச்சுக்கா. நீ யாரையோ விரும்பி அவனை கூட்டிட்டு ஓடி போயிட்டியாம், இன்னொருத்தங்க கனகரெட்ணம் தொல்ல தாங்காம ஊரைவிட்டு ஓடிட்டியாம். இன்னொருத்தங்க அத்தானை தேடி போயிட்டன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசினாங்கக்கா.

யாரு என்ன பேசினாலும் பேசிட்டு போகட்டும்னு அமைதியா விட்டுட்டோம். அன்னைக்கு மதியம் தான் கனகரெட்ணத்துக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு. நாலு பேரோட வந்து அம்மாவை கண்டமேனிக்கு ஏசிட்டான். நீ மறைச்சு வச்சா என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா எண்டான். அதுக்கு அம்மா, எனக்கு தெரியாது, கண் காணாத இடத்துக்கு போறேன்னு நீ எழுதி வச்சிட்டு போன கடிதத்தைக் காட்டினாங்க.

யாருக்கு கதை விடுறா? உன் பொண்ணை பத்தியே தப்பா பேசிறியே, நீயெல்லாம் அவளை பெத்தவளா? அவளை உனக்கு தெரியுமோ இல்லையோ, ஆனா எனக்கு நல்லாவே தெரியும். அவ அந்த மாதிரி பொண்ணு கிடையாது. ராமசாமியும் மகளை அந்த மாதிரி வளர்க்கல. நீதான் அவளை எங்கேயோ மறைச்சு வச்சிட்டு என்னை ஏமாத்துற. உன் பித்தலாட்டத்தை ஊரு நம்பலாம், நான் நம்பமாட்டேன்." என்று கத்தியவன்,

"இத பாரு, உன்னால உன் கடனை திரும்ப அடைக்கல்லாம் முடியாது. மரியாதையா இப்பவே உன் பொண்ணை வரவச்சு நீயாவே எனக்க கட்டி வச்சேன்னா உனக்கு மரியாதை." என்றான்.

"இது என்ன பேச்சு? உண்மையிலும் அவ எங்கன்னு தெரியாது. காலையில இருந்து நானும் அவளைத்தான் தேடிட்டு இருக்கேன். நானே என் மகளை தொலைச்சிட்டிருக்கேன், அபாண்டமா என்மேல பழியை போடுறியே, இது நியாயமா?" என்றாள் இந்திரா அப்பாவியாய்.

"என்ன ஒரு நடிப்பு திறமை? இதை நான் நம்ணுமா? அவளை எனக்கு தெரியாம அனுப்பி வச்சிட்டா விட்டிடுவேனா? அவளை வரவச்சிடு, இல்லனா என் கடனை இப்பவே அடை." என்று கனகரெட்ணம் கடனை வைக்காமல் போகமாட்டேன் என அடம்பிடித்தான்.

மைதிலியை ஊரில் விட்டு விட்டு வந்த மாணிக்கம், ஊர் எல்லையில் வரும்போது, மைதிலி காணாமல் போனதை அறிந்த கனகரெட்ணம், மைதிலி வீட்டிற்கு சென்று தகராறு செய்யும் தகவல் கேள்விப்பட்டு உடனேயே வந்து விட்டார் மாணிக்கம்.

"என்ன இங்க பிரச்சனை?" என எதுவும் தெரியாதவர் போல கேட்டவாறு வந்தவர்,

"என்ன இந்திரா, நான் கேள்விப்பட்டது உண்மையா? உன் பொண்ணு காணாம போயிட்டாளாமே? ஏன்ம்மா வயசு பிள்ளைங்கள சரியா கவனிக்கிறது இல்லையா? சரி வாங்க, போலீஸ்க்கு தகவல் கொடுப்போம்." என்றார்.

"ஐய்யோ வேண்டாம்ணா! இன்னொரு வீட்டுக்கு வாக்கப்பட போறவ. இந்த மாதிரி கம்ப்ளைன் கொடுத்தா நாளைக்கு என்ன ஏதுன்னு துருவி அவ வாழ்க்கையை நாசமாக்கிடுவாங்க." என மறுத்தவரை,

"இந்தம்மா கம்ப்ளைன்ட் எல்லாம் குடுக்காது ஐயா." என்றான் கனகரெட்ணம் பணிவாய்.

மாணிக்கம் அந்த ஊரில் பெரிய தலையாயிற்றே... இவனைப் போல் ஊரை ஏமாற்றி ஒன்றும் சொத்து சேர்க்கவில்லை. பரம்பரை செல்வந்தன், அந்த மரியாதை தான் இது.

"அந்த பொண்ணு ஓடியெல்லாம் போகல. இந்தம்மா தான் எங்கேயாவது ஒளிச்சு வச்சிருப்பாங்க. அதான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா கண்டுபிடிச்சிடுவாங்கன்னு மழுப்புறா..." என்றான்.

"ஏன் கனகரெட்ணம், அவங்க தவிக்கிற தவிப்பையும் பதட்டத்தையும் பார்த்துமா இப்படி பேசுற?"

"இல்லய்யா..." என்று ஏதோ கூற வந்தவனைத் தடுப்பது போல,

"தெரியும் கனகா, உனக்கு இவங்க கடன் தரணும் தான். அதை மைதிலியே என் பொண்ணுகிட்ட சொல்லுறப்போ நானும் கேட்டிருக்கேன்.அதுதான் ஆறு மாசத்தில கடனை அடைச்சிடுறேன்னு சொல்லிட்டாங்களே! ஆறு மாதம் முடியிறதுக்கு முன்னாடி வந்து தகராறு பண்ணா என்ன அர்த்தம்?" என்றார் நீதி கேட்கும் தோரணையில்.

"ஆனா..." என்று கனகரெட்ணம் ஏதோ மழுப்ப முயல,

"உனக்கு தரவேண்டிய கடனை இவங்களால அடைக்க முடியலன்னா நான் பொறுப்பேற்கிறேன் கனகா, போதுமா?" என்றவர் பேச்சில் உள்ள உறுதியைக் கண்டவன்,

அதற்குமேல் பேசி ஊர் பெரியவரின் பகையை வளர்க்க வேண்டாம் என நினைத்தவனாய், இந்திராவை முறைத்தவாறு சென்று விட்டான்.

அவன் சென்றானே தவிர, அவனது அடியாட்கள் மைதிலி வீட்டையே சுற்றி வந்தனர். குண்டூசி விழுந்தால் கூட தகவல் கனகரெட்ணம் காதில் எட்டிக்கொண்டே இருந்தது.

ஆனால் மைதிலி வீட்டிற்கு தேனுவுடன் மாணிக்கமும் தினமும் வந்து போவார்கள். மைதிலி தோழி என்றதனால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

இருந்தும் கனகரெட்ணம் பார்வை தேனு மீதும் விழுந்தது. அவள் மைதிலியை எந்த முறையிலாவது தொடர்பு கொள்கிறாளா என்று, உண்ணிப்பாக கவனித்தான். நலம் விசாரிப்பவர்கள், அவர்கள் தேவையை நிறைவேற்றி விட்டு சென்று விடுவார்கள்.

இந்திராவும் வழமை போல் வீட்டில் அடைந்து கிடக்காமல், ஜனாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தோட்டத்திற்கு போயிடுவார்.

பள்ளி முடிந்ததும் தேனு வீட்டிலேயே ஜனா இருந்து கொள்வாள். மாணிக்கம், கனகரெட்ணம் இவர்களை உண்ணிப்பாக கவனிப்பதை அறிந்து, தான் கொஞ்ச நாளைக்கு அவர்களை எந்த வழியிலும் மைதிலியைத் தொடர்பு கொள்ள வேண்டாம், அப்படி ஏதாவது செய்தால் மைதிலி இருக்குமிடம் கண்டால் பிரச்சனை தான்.

நிலைமை சரியானதும் பேசிக் கொள்ளலாம் என்றவர், தொழில் புரியும் இடம் வந்துதான் மைதிலியை அழைத்து பேசுவார்.

கனகரெட்ணமும் முடிந்தளவு நேற்றுவரை அவளது குடும்பத்தைப் பின்தொடர்ந்தானே தவிர, அவனால் மைதிலி இருக்குமிடம் அறியமுடியவில்லை. நேற்று மாலை வரை அவன் ஆட்கள் அந்தக் குடும்பத்தை சுற்றி வந்து, ஏமாற்றமானவர்கள் கனகரெட்ணத்திடம் சொல்ல, மைதிலியைப் பற்றிய தகவல் அறிய முடியவில்லை என்ற கோபத்தில் இந்திராவிடம் வந்தான்.

"நீ எந்த தைரியத்தில இந்த மாதிரி எல்லாம் செய்றன்னு தெரியும். உன் பொண்ணை ஊரை விட்டு அனுப்பி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. உன் நாத்தனார், அவ பையனை இதுக்கப்புறமும் உன் பொண்ணுக்கு கட்டித்தருவானு நீ கனவில கூட நினைச்சுப் பாக்க முடியாத அளவுக்கு பண்ணுறேன். அவன் மட்டுமில்லை, எந்த பயல் உன் பொண்ணை கட்டிக்க வரான்னு பார்க்கிறேன். அப்படியே யாராவது வந்தான், அவன் நிலைமை என்னன்னு பாரு..." என்று கத்திவிட்டு தன் ஆட்களையும் அழைத்துச் சென்று விட்டான்.

காலை ஆறு மணிக்கே வந்து விட்டார் அத்தை மீனாட்சி."எங்கடி உன் ஆத்தா? காலையிலேயே ஊர் மேய போயிட்டாளா?" என வாசலை பெருக்கிக் கொண்டிருந்த ஜனாவிடம் எடுத்ததும் தரக்குறைவாக பேசியவர், சத்தம் கேட்டு வெளியே வந்த இந்திராவைக் கண்டதும்,

"வாம்மா... வா! நல்லா இருக்கியா தாயி? உனக்கென்ன, நீ நல்லத்தானே இருப்ப? புருஷன் போய் சேந்தா எல்லா பொஞ்சாதிங்களும் கவலையிலேயே உருகிடுவாங்க. ஆனா நீ புருஷன் போய் சோந்ததுக்கப்புறம் தான் ராணியாட்டம் இருக்கியே! நாளுக்கொருத்தன் வீட்டுக்கு வாரானாம், அதுவும் பெரிய இடத்து மகாராசாக்களையா வளைச்சுப் போட்டிருக்கியாமே!? உன் காட்டில மழைதான் போ!" என்று கூச்சமே இல்லாது மீனாட்சி பேச,

"அத்தை!" என்று கோபமாக சீறிய ஜனா, "வாயில வந்ததை கத்திட்டு நிக்காதிங்க. நாங்களும் மானம், மரியாதையோட வாழுறவங்க தான். எல்லா நேரமும் அமைதியா இருக்க மாட்டோம்." என்றாள் பதிலடியாய்.

"வாம்மா என் சின்ன மருமகளே! நீதான் இந்த குடும்பத்தில ஏதோ கொஞ்சமாச்சும் பொறுப்பா அடக்க ஒடுக்கமா இருக்கனு நினைச்சேன், ஆனா நீயும் வாயை காட்ட ஆரம்பிச்சிட்டியா? பெரியவங்ககிட்ட எப்படி பேசுறதுனு உன் ஆத்தாக்காரி சொல்லிக் குடுக்கலையா? அது எப்படி, சொல்லித் தருவா? அவளுக்குத்தான் வீட்டுக்கு வந்த பெரிய மனுஷங்க கைய பிடிச்சு, கால் அமுக்கி விடவே நேரம் போதாதே!" என விசமமாக பேச,

"எங்க குடும்பத்த பத்தி நீங்க சொல்லாதீங்க. நாங்க எப்படியானவங்கனு எங்களுக்கு தெரிஞ்சா போதும். முதல்ல நீங்க எதுக்கு வந்திங்கன்னு சொல்லிட்டு கிளம்புங்க." என்றவள்,

"காலையிலேயே வந்திட்டாங்க, கையில சிலம்ப ஏந்திட்டு கண்ணகியாட்டம் எப்படி கற்போட இருக்கிறதுன்னு, அடுத்தவனுக்கு பாடம் எடுக்க..." தெளிவாகத்தான் முணுமுணுத்தாள்.

ஜனாவின் பேச்சு பிடிக்காது மீனாட்சி முறைக்க, "பெரியவங்ககிட்ட மரியாதை இல்லாம தான் பேசுவியா? நீ உள்ள போ!" என்று மகளை விரட்டினார்.

"அவள எதுக்கு விரட்டுற? உன் வீட்டுப் பிள்ளைங்களுக்கு மரியாதை தான் தெரியாதே! ஒருத்தி எவனையோ இழுத்துட்டு ஓடி போய், தான் கெட்டது போதாதுன்னு என் கழுத்தையும் சேத்து அறுத்திட்டிருக்கா. இவ அத்தைன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறாள். நீ, நாளுக்கு ஒருத்தனோட கூத்தடிக்கிற. இப்படியான குடும்பத்தில மரியாதைய நான் எதிர்பார்க்கணுமா?" என்று மீண்டும் கேவலமாக பேச,

"போதும் அத்தை! இதோடு நிறுத்தினிங்கனா உங்களுக்கு நல்லது.நீங்க சொல்லுறீங்க என்கிறதுக்காக எதுவும் உண்மையும் ஆகாது. நீங்க பெரிய உத்தமி போலவும், நாங்கள்லாம் ஏதோ பாவம் பண்ணது போலவும் பேசிட்டிருக்கிறீங்க. எங்க கஷ்டத்தை பார்த்து யாராச்சும் ஆறுதல் கூறவோ, உதவி செய்யவோ வந்தா தப்பா பேசுவீங்களா?ஏன், நீங்க எங்க அப்பா கூட கூடப்பிறந்தவங்க தானே?

இப்போ மட்டும் பெரிய இவபோல பேசுறீங்க. அப்பா பாடி வெளிய போனதும் என்ன மண்ணாங்கட்டிக்கு ஓடிப் போனீங்களாம்? ஊர் கண் துடைப்புக்காகவா அப்பா இறந்தப்ப வந்தீங்க? அதுக்கு நீங்க வந்திருக்கவே தேவையில்ல. கூடவே இருந்திட்டா எல்லா பொறுப்பும் உங்க தலையில விழுந்திடும் என்ட பயத்தில ஓடின நீங்கள்லாம் பேசாதீங்க." என இத்தனை நாள் மனதில் புழுங்கியதை கேட்டே விட்டாள்.

"ஜனா!" என அதட்டினார் இந்திரா.

கத்திவிட்டு அவள் பாட்டிற்கு சென்றிருப்பாள். இவள் பேசப்பேசத்தான் மீனாட்சி தாண்டவமாடுகிறார் என நினைத்தவர், "வாய மூடிட்டு உள்ள போக சொன்னேன்." என அடித்தே விட்டார்.

அவள் உள்ளே போனதும், "மன்னிச்சிடு மீனாட்சி! அவ சின்ன பொண்ணு, ஏதோ தெரியாமல பேசிட்டா." என்று சமாதானம் கூற முயல,

"உன் நாடகத்தை நிறுத்துறியா? நான் வந்தா என்ன பேசணும்னு சொல்லி குடுத்துட்டு இப்போ நல்லவ வேஷம்? ரொம்ப அருமையா நடிக்கிற... இல்ல தெரியாமத்தான் கேக்கிறேன், உன் பொண்ணு தானாத்தான் ஓடிப்போனாளா? இல்லை, எவன்கூடவாச்சும் நீதான் அனுப்பி வச்சியா? இங்க பாரு, ஓடிப்போன உன் பொண்ணு என் பையனத்தான் தேடிப் போயிருக்கானு அந்த கனகரெட்ணம் என் வீட்டுக்கு வந்து தகராறு பண்றான்.

அந்த ஓடுகாளி நாயால நான்தான் அனுபவிக்கிறேன். அப்படி எவன் கூட ஓடித் தொலைஞ்சா அந்த கிரகம் புடிச்சவ. இனிமேலும் அத்தான், அத்தான்னு வரட்டும், இந்த மீனாட்சி யாருன்னு காமிக்கிறேன். எவன் கூடவோ ஓடிப்போவாளாம், அப்புறம் என் பிள்ளையை கட்டிக்க ஆசைப்படுவாளாம். என் அண்ணனுக்குன்னு வாச்சிருக்கு பொஞ்சாதி, புள்ளன்னு... கேடுகெட்ட நாய்ங்க..." என கத்தியவள், இந்திரா வீட்டு முற்றத்தில் காறி உமிழ்ந்து விட்டு சென்றுவிட்டாள்.

அனைத்தையும் தமக்கையிடம் கூறியவள், "இது தான்க்கா நடந்திச்சு. ஊர்ல யாரு என்ன பேசினாலும் பரவாயில்ல, நம்ம அத்தை கூட புரிஞ்சுக்கல என்கிறது தான் கஷ்டமா இருக்கு. இனியாவது புரிஞ்சு நடந்துக்கோ." என்றவள்,

"இந்தாம்மா பேசு..." என்று போனை தாயிடம் கொடுத்துவிட்டு, தன் வேலை முடிந்ததென்று நகர்ந்தாள்.



தொடரும்...