• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 19

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna

பகுதி 19



அத்தையின் வார்த்தைகளில் இருந்த குரோதத்தினை மைதிலியால் உணர முடிந்தது. வெறும் தகவலில் தெரிந்து கொண்டவளுக்கே, அந்த வார்த்தைகள் ரணத்தினை தரும்போது அதை எதிரில் நின்று மௌனமாகக் கேட்டிருந்த, இந்திராவின் மனம் எப்படி தவித்திருக்கும்?

தமக்கையோடு மட்டும் சண்டைக்குப் போகும் அவளது தங்கை கூட, அத்தை என்று பாராமல் எதிர்த்து பேசியிருக்கின்றாள் என்றால், அவளுக்குக்கூட புரிவது போல் தரக்குறைவான வார்த்தைகள் பாவித்திருக்கிறார் அவளது வருங்கால மாமியார். அதை நினைத்து உடைந்து போனவள் விழியினை மறைத்தது, மளமளவென திரண்டு வந்த கண்ணீர்.

அவள் அத்தை இப்படித்தான் என்பது கடந்த நான்கு வருடங்களாக மைதிலி அறிந்ததே! ஆனால் இப்படி தகாத முறையில் பேசுவார் என்று மைதிலி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அவள் கூறிய அந்த பெரிய இடத்து மகாராசன் என்பது வேறு யாருமில்லை, மாணிக்கமே தான். 'தம் நிலை கண்டு இறங்கி, முன் வந்து உதவி செய்த அந்த நல்ல உள்ளத்திற்கு கடைசியில் கிடைத்த பரிசு இதுதானா? இதை அவர் அறிந்தால், எதற்காக இவர்களுக்கு உதவி செய்தோம் என வேதனை கொள்வாரே?' என தன் தோழியின் தந்தையை நினைக்கும் போது, மனம் கனம் தாங்காமல் தவித்தது.

அவரிடம் உதவி என்று போயிருந்திருக்கக் கூடாதோ என்றே எண்ணத் தோன்றியது. தங்கை கையிலிருந்து போன் அன்னையின் கையில் மாறியதை உணராது, மௌனமாக எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். அவளது உறை நிலையினையும் கலங்கிய கண்களையும் கண்டு எதுவோ புரிந்தவராய்,

தன் சேரை இயக்கி அவளருகில் சென்றவர், அவளது கைகளைப் பற்றி நிகழ்வுக்கு கொண்டு வந்து, போன் என சைகையில் சுட்டிக்காட்டியதும் தான், கையிலிருந்த போனினை உணர்ந்தவளாய்,மீண்டும் ரீசீவரை காதில் வைத்தாள்.

"மைதிலிம்மா இருக்கியாடா? ஹலோ..." என்றவருக்கு மைதிலியின் அமைதியில், அழைப்புதான் துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று நினைத்து விட்டார்.

"ஆ... அ... ம்மா... சொல்லும்மா, புரியுது." என்றவள் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த இந்திரா,

"அம்மாடி! அழுறியா?" என்றார் வேதனை நிறைந்த குரலில்.

"இல்லம்மா, அதெல்லாம் ஒன்னுமில்ல." என்று அவர் கேட்ட விதத்திலேயே அவரது மனம் புரிந்தவளாய்,

"போன் கொஞ்சநேரம் வொர்க் ஆகலம்மா. அதனால தான் உனக்கு அந்த மாதிரி இருந்திருக்கும், நீங்க நல்லா இருக்கிங்க தானே?" என்றாள்.

"ஆமாடா, நாங்க நல்லா இருக்கோம். நீ கண்டதையும் யோசிச்சு குழப்பிக்காத." என்றார் கவலையாக.

"நான் ஏன்ம்மா குழப்பிக்கணும்? அத்தை நடந்துக்கிறது ஒன்னும் புதுசில்லையே! என்ன, கொஞ்சம் வார்த்தையை அதிகமா விட்டுட்டாங்க. அத்தை என்ன சொன்னாலும் அத்தான் என்னை விட்டுட மாட்டாரும்மா. நான் கவலைப்படுவேன்னு நினைச்சு நீ கவலைப்பட்டுட்டு இருக்காத. சொந்தம்னு இருக்கிறது நீ ஒருத்தி தான். அங்க என்ன நடந்தாலும், நான் கவலைப்படுவேன்னு நினைச்சிட்டு எதையும் மறைக்காத. நான் அப்பப்போ போன் போட்டு ஜனாக்கிட்ட கேட்டுப்பேன். அப்புறம் அம்மா..." என உள்ளே போன குரலில் அழைத்தவள்,

"நான் இங்கே வந்ததுக்கப்புறம் அத்தான் போன் பண்ணாரா?" என்றாள்.

சிறு மௌனத்தின் பின், "இல்லம்மா, மாப்பிள்ளை எப்பயாச்சும் கால் பண்ணுவாரு. பாவம், அவருக்கும் வேலை அதிகமா இருக்கும். அவர் கூப்பிட்டா கண்டிப்பா நீ வேலையில சேர்ந்த விஷயத்தை சொல்லிடுறேன்." என பேச்சை மாற்றினார். அவர் பதில் அவளுக்கு ஏமாற்றமாகிப் போனது.

தந்தை இறந்து மூன்று நாட்களின் பின் விசாரித்தவன் தான், அதன்பின் தொடர்பில்லை என்றால் ஏமாற்றமாக தானே இருக்கும்.

"சரிம்மா, அத்தான் எப்ப வேனாலும் எடுக்கட்டும், அப்போ சொல்லிக்கலாம். நேரத்துக்கு சாப்பிடு, ஜனாவையும் பத்திரமா பாத்துக்கோ, நான் அப்புறமா பேசுறேன்." என போனை வைத்தாள்.

அதுவரை தாய்க்காக அடக்கி வைத்திருந்த கண்ணீர், மீண்டும் கண்களை மறைக்கத் தொடங்கியது. அதற்கு மேல் அங்கு நிற்பது தவறென தோன்ற, தன் அறை போகத் திரும்பும் போதுதான் தன்னையே ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறு, ஹாலில் அமர்ந்திருந்த மொத்த குடும்பத்தையும் கண்டாள்.

மூக்கை உறுஞ்சி கண்ணீரை உள்ளிழுத்தவள், பொய்யான புன்னகையினை உதட்டில் பூசிக்கொண்டாள். தற்போது அவளுக்குத் தனிமை தேவை தான். ஆனால் அவளையே கேள்வியாய் பார்த்திருந்தவர்களை அலட்சியம் செய்ய விரும்பாதவளாய், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் தானும் சென்று அமர்ந்து கொண்டவள்,

"என்ன, எல்லாரும் என்னையே பார்த்திட்டிருக்கீங்க? யாருக்குமே வேலை இல்லையா?" என்று வழமையான குறும்பினை வலுக்கட்டாயமாக வரவழைக்க நினைத்து, தோற்றுப் போனவளாய் தலையினைக் குனிந்து கொண்டாள்.

அவள் முதுகினை ஆதரவாக வருடிக்கொடுத்த ஈஸ்வரி, "என்னம்மா ஆச்சு? பேசினது அம்மா கூடன்னு புரியுது, ஆனா ஏன் அழுத? வீட்ல ஏதாவது பிரச்சனையா? இப்போ என்ன சொல்லுறாங்க?"

மாணிக்கம் மூலம் அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருந்ததால், எல்லாவற்றையும் முதலில் இருந்து கூறாது அத்தை மகனுக்கும் தனக்கும் சிறுவயதிலிருந்து இருக்கும் ஆசையினைக் கூறியவள், இப்போது மீனாட்சி வீட்டில் வந்து சத்தமிட்டதையும் கூறியவள், வெடித்து அழவே ஆரம்பித்து விட்டாள்.

என்ன சொல்லி தேற்றுவது என்பது தெரியாது, தோளில் அவளை சாய்த்துக்கொண்ட ஈஸ்வரி, "நீ அழாதம்மா, உன்னைப்போல ஒரு பொண்ணு கிடைக்க அவங்க குடுத்து வச்சிருக்கணும். எல்லாமே இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். நல்லவங்களுக்கு எல்லாமே நல்லதுதான்டா நடக்கும். சந்தோஷத்தை தரதுக்கு முன்னாடி அந்த ஆண்டவன் ரொம்ப சோதிப்பான்.

ஏன் தெரியுமா? அவன் கொடுக்கப்போற சந்தோஷத்தை உன்னால தாங்கிக்க முடியுமா? அதுக்கு நாம தகுதியானவங்க தானா என்கிறத, சோதிச்சுத்தான் முடிவு பண்ணுவானாம். கஷ்டத்துக்கு பின்னாடி வர சந்தோஷமிருக்கே, அதுக்கு விலைமதிப்பே இல்லை. அப்படி கஷ்டத்துக்கு பின்னாடி கிடைக்கிற சந்தோஷம் தான், திருப்தியையும் நிறைவையும் தரும்.

அந்த சந்தோஷம் தான் நிலைச்சிருக்கும். எப்பவுமே சந்தோஷத்தை மட்டுமே பார்த்தோம்னா, வாழ்க்கையில ஒரு பிடிப்பினையே இருக்காது. என்னடா இது வாழ்கை என்கிற மாதிரி ஆகிடும். நீ வேணும்னா பாரு, இப்போ உன்னை துரத்தி துரத்தி அழ வைக்கிற இந்த கஷ்டம் எல்லாமே, ஒரு நாள் உனக்கு சாதகமா மாறி நீ வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுற வரைக்கும், உன்னை சந்தோஷப்படுத்துதா இல்லையான்னு பாரு..." என்றவரை வலி நிறைந்த பார்வை பார்த்தவள்,

"நான் நல்லவளா, கெட்டவளா எங்கிறது எனக்கு தெரியாது பாட்டி. ஓலை குடிசை, ஒருவேளை சாப்பாடு, அப்பா நிழல்ல இருக்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருந்தோம். ஆனா கடந்த ரெண்டு மாதமா சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்க மட்டும் தான் முடியுது. சில சமயம் அதுகூட முடியாம என்னையும் மீறி அழுதிடுறேன். அப்பா என்கிறவர் ஒரு வீட்டோட அஸ்திவாரம். அவர் இருக்குறப்போ தெரியல. அவரு போனதுக்கப்புறம் தான், எங்களுக்காக எந்தளவு கஷ்டப்பட்டிருக்காரு, என்னெல்லாம் தாங்கிருக்காரு என்கிறதே புரியுது." என்று வருந்தியவளை,

"விடுடா, காலையிலேயே பொண்ணுங்க இந்த மாதிரி அழுதிட்டு இருக்க கூடாதும்மா." என்று ஈஸ்வரி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டார்.

அதே நேரம் தன் அழுத்தமான பாதத் தடங்களுடன் மாடியில் இருந்து இறங்கியவன் ஷூ சத்தம் கேட்டு, மாடியை நிமிர்ந்து நோக்கினார்கள். மைதிலியின் விழிகளுமே சத்தம் வந்த திசையில் எதார்த்தமாக சென்றது.

ஸ்ரீயே தான்!

அவனைக் கண்டவள், தனது அழுது வடிந்த முகத்தை அவன் பார்க்க விரும்பாதவளாய், அவன் காண்பதற்கு முன்னர் வேகமாக திரும்பி கண்ணீரைத் துடைத்துவிட்டு, முன்னையது போல் இருந்து கொண்டாள்.

மைதிலியையே பார்த்தவாறு இறங்கி வந்தவன் முகத்திலோ, எப்போதும் இருந்திடா கடுமையான இறுக்கம்.

"பசிக்குது பாட்டி, சாப்பாட்ட எடுத்து வையுங்க. சாப்பிட்டு இன்னைக்கு நேரத்தோடு கிளம்பணும்." என்றவன் குரலுமே இறுக்கமாகத்தான் வந்தது.

அவனைக் கண்டதும் வீட்டு பிரச்சனை மறந்து போக, காலையில் அவன் நடந்து கொண்ட முறை நினைவில் வந்தது. அதனோடு தெய்வானை கூறியதுமே...

அவள் சொன்னதைப் போல அவன் இருக்குமிடத்தைத் தவிர்ப்பது தான் நல்லதென நினைத்தவள், "எனக்கு கொஞ்சம் தனிமை தேவை. நான் ரூமுக்கு போகிறேன்." என்று எழுந்து கொண்டவள் கையினைப் பற்றிய விஜயா,

"நீயும் சாப்பிட்டு போ." என்றார்.

"இல்லம்மா, எனக்கு பசியில்ல. பசிச்சா நானே வந்து சாப்பிட்டுக்கிறேன்." என்றவள் பேச்சினை மறுத்தவர்,

"பசிக்குதோ இல்லையோ, நீ சாப்பிட்டுத்தான் ஆகணும். தலை வலினு சொல்லி வெறும் வயித்தில மாத்திர சாப்பிட்டிருக்க. அது உடம்புக்கு நல்லதில்லை. தெய்வானை, நீ சாப்பாட்டை எடுத்து வை, நாங்க வர்றோம்." என்று கண்டிப்போடு கூறியதும், மைதிலியால் அவர் பேச்சை மறுக்க முடியவில்லை.

அமைதியாக விஜயாவின் சொல்லிற்கு கட்டுப்பட்டு, அவர் பின் சென்று சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டாள்.

எல்லோரும் அமர்ந்ததும் தெய்வானை உணவினைப் பரிமாற, வழமைபோல் இட்லியையே வாங்கிக் கொண்டாள் மைதிலி.

இட்லியைப் பிய்த்து வாயில் வைத்தவள், "ஸ்..." என்று முணங்கியவாறு அந்த துண்டினைத் தட்டில் போட்டாள்.

ஆம், உதட்டிலிருந்த காயத்தில் இட்லிக்கு தொட்டுக்கொண்ட, சாம்பாரின் காரத்தில் எரிச்சல் உண்டாக கண்கள் கலங்கியது. ஏற்கனவே அவளைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளில் அழத்தான் தோன்றியதே தவிர, சாப்பிடுவதற்கு கொஞ்சமும் விருப்பமில்லை.

விஜயாவின் கண்டிப்பான பேச்சிற்காகத்தான், பெயருக்கு இரண்டு வாய் உண்டுவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றிடலாம் என சாப்பிட அமர்ந்தாள். ஆனால், உதட்டில் பட்ட காயம்கூட அவளுக்கு எதிராக சதி செய்ய, சாப்பாட்டினை தட்டில் போட்டவள்,

ஸ்ரீ முன்பு கோழைத்தனமாக அழக்கூடாது என்று எப்படித்தான் வைராக்கியமாக இருந்தாலும், ஏற்கனவே நொந்திருந்த அவள் மனம் சாப்பிடக்கூட தன்னால் முடியவில்லையே என நினைத்து, அவளையும் மீறி வந்த அழுகையினைத் தடுக்க முடியவில்லை. முகத்தினை மூடி அனைவர் முன்பும் குலுங்க ஆரம்பித்தாள்.

சாப்பாட்டினை உண்டவாறு அவளையே பார்த்திருந்தவன், அவள் சாப்பாட்டினை வாயில் வைத்த மறுநொடியே கண்கள் கலங்கி, அழ ஆரம்பித்தவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆயிற்றோ, சாப்பாட்டு தட்டினை ஆத்திரமாக தள்ளிவிட்டு எழுந்தவன், கைகளைக் கூட கழுவாமல் வெளியேறி விட்டான்.

தெய்வானையைத் தவிர, இங்கு என்ன நடக்கிறது என்பது புரியாது மற்றவர்கள் விழித்து நின்றது ஒரு நிமிடம் தான்.

ஏற்கனவே வெளியேறி விட்டிருந்தவனை என்னவென்று கேட்க முடியாது. ஆனால் இவளது அழுகையின் காரணம் கேட்கலாமே!

"என்னாச்சு மைதிலிம்மா? வீட்டுப் பிரச்சனையை நினைச்சு அழறயா?" என்றார்.

தெய்வானை தான் முன்வந்து மைதிலி உதட்டுக்காயம் பற்றி கூறினாள். அதுவும் ஸ்ரீ அறையில் என்பதை மாற்றி, பாத்ரூமில் தவறி விழுந்து உதட்டினில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டாள். என்று.

"சின்னப்பொண்ணு போல இதுக்கெல்லாம் அழலாமா?" என்றவர்,

"ஏன் தெய்வானை, உனக்குத்தான் முன்னாடியே இது தெரியுமே, அப்புறம் ஏன் எனக்கு சொல்லல?"

"சரி எழுந்திரி மைதிலி, நாம போகலாம்." என்ற ஈஸ்வரி, தண்ணீர் கிளாஸினை எடுத்துக் கொடுத்து, "இதை குடிச்சிட்டு வா." என்றார்.

அழுகையினை நிறுத்திவிட்டு, அவர் கொடுத்த தண்ணீர் முழுவதையும் பருகியவளிடம், "நீ போய் ஓய்வெடுத்துக்கோ. காரமில்லாத சாப்பாடா செய்து எடுத்திட்டு வரச்சொல்லுறேன்." என்று அவளை அனுப்பி வைத்தவர்கள், தாமும் அதற்குமேல் சாப்பிட பிடிக்காமல், பாதி வயிற்றோடு எழுந்து கொண்டனர்.


தொடரும்…