பகுதி 2
அந்த புதியவனைத் திட்டிக்கொண்டே நடந்தவள் முணுமுணுப்பில், "எதுக்கு இப்போ எண்ணெய்ல விழுந்த கடுகு போல பொரியிற? அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டான்?விழப்போன உன்னை தாங்கிப்பிடிச்சது குத்தமா? பாவம்டி அவன், இத்தோட நிறுத்து. உன் திட்டல்ல தும்மியே செத்திடப் போறான்." என்றாள்.
"என்ன புதுசா கண்டவனுக்கெல்லாம் வக்காலத்து வாங்ககுற? அவன் என்னை விழ விடாமல் புடிச்சது தப்பில்லடி, அவன் பேசின வார்த்தையிருக்கே அதுதான் தப்பு. முன்னபின்ன தெரியாத பொண்ணை பாத்தா, எப்பிடி அவகிட்ட நடந்துக்கணும் என்கிற அடிப்படை அறிவுகூடவா தெரியாது?
உன்னோட கண் அழகா இருக்கு, அதை பாத்திட்டே நாள் முழுக்க இருந்திடலாம், அட்ரஸ் குடுன்னு கேக்கிறான். கேட்ட வாயிலையே ரெண்டு போடாம விட்டுட்டு வந்தேன் பாரு, அதை நினைச்சு பெருமை படு. சுத்த பொறுக்கி நாயி! இது மட்டும் என் அத்தானுக்கு தெரியணும், இவனை வெட்டி போட்டுடுவாரு தெரியுமா?" என்றவளை முறைத்த தேனு,
"பெரிய இவரு உன் அத்தான்... ஏனோ தெரியல, நீ அத்தான் அத்தான்னு அந்தாள் புராணத்தை இழுக்கிறப்பல்லாம், செம்ம கடுப்பாகுது. அவனும் இங்க இருக்கும் போது, மாரியண்ணா கடை சுவத்துமேல ஏறியிருந்து, போய்வர பொண்ணுங்கள வம்பிழுத்தவன் தானே? அவன் ஏதோ யோக்கியன் போல பேசுற? உன்னை தாங்கி புடிச்சவன் கண்ணுக்கு நீ அழகா தெரிஞ்சிருப்ப, அதனால உன்கிட்ட வம்பு பண்றது போல பேசியிருப்பான். அதை பெரிசு படுத்தாத.
பசங்கன்னாலே அப்பிடித்தான். அழகான பெண்களை கண்டா பொய் சொல்ல மாட்டாங்க. மனசில என்ன தோனுதோ அதை சொல்லிடுவாங்க. உன்னை அவன் அழகுன்னு சொன்னதில நீ சந்தோஷம் தான் படணும். அதவிட்டுட்டு திட்டியே சாகடிச்சிடுவ போல..." என்றாள் அவனுக்கு பரிந்து.
"உன்னோட கிழிஞ்ச வாயை கொஞ்சம் மூடுறியா? அந்த பரதேசி நாய பத்தி உயர்வா சொல்லாத சனியனே! அவன் பார்வையும் பேச்சும்... அட்ரஸ் கொடுன்னு என்ன அர்த்தத்தில அவன் கேட்டான் தெரியுமாடி? அவனுக்கு வக்காலத்து வாங்காம உன் வாயை மூடிட்டு வா. இல்லனா அவனுக்கு கொடுக்காம விட்டது உனக்கு கிடைக்கும்." என்றாள் பொங்கலாய்.
"நல்லதுக்கு காலமில்லப்பா... உன் இடத்தில நான் இருந்திருக்க கூடாதா? என்னை அவன் தாங்கி பிடிச்சிருக்க கூடாதா? ஆண்களுக்கு உண்டான அத்தனை சிறப்பம்சமும் அவன்கிட்ட இருக்கே? என்ன ஒரு அழகு! எவளுக்கு குடுத்து வச்சிருக்கோ?” என தேனு புலம்ப,
"ஏய் ச்சீ... அலையிறத பாரு... உன்னை முதல்ல சாகடிக்கணும். அவன் பேச்சை எடுக்கிறத விட்டுட்டு மூடிட்டு வான்னு சொன்னேன். அவன் என்ன பெரிய ஆண் அழகனா? அவனை விட என்னோட அத்தான் அழகுடி!" என்றவளை வெட்டவா குத்தவா எனஅசிங்கமாக ஒரு பார்வை பார்த்தவள்,
"இன்னொருக்கா சொல்லு, உன் அத்தான் இவனை விட அழகுன்னு...?" என ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே இடைவெளி விட்டு அழுத்தமாக கேட்டவள்
"நெஞ்சில கொஞ்சமாச்சும் மனசாட்சி வேணும்டி. அது இருக்கா இல்ல மாடு திண்ணுடிச்சா? இப்படி சொல்லுறப்போ உனக்கே சிரிப்பு வரல? எனக்கு பயங்கரமா வருதுடி." உண்மை அதுவாக இருந்தாலும் கேலி போல் கூறியவள்,
"உன் அத்தான் கலர்தான் நான் இல்லன்னல. ஆனா உன் அத்தான் சரியான மைதா மாவு கலர் தான். ஆனா பார்க்க நல்லாவே இருக்க மாட்டான். வெறும் மைதா மாவை வச்சிட்டு இப்படி பீத்திக்கிற..." என்று சிரித்தவள் முதுகினில் அடியினை வைத்தாள் மைதிலி.
அவள் அடித்துவிட்ட இடத்தினைத் தேய்த்தவளோ, "பேசிட்டு இருக்கிறப்போ இந்த மாதிரி கை வைக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. அப்புறம் கல்ல எடுத்து மண்டையை உடைச்சிடுவேன், ஜாக்கிரத! உன் அத்தானுக்கு கலரை தவிர என்னடி இருக்கு? இவனை பாத்தியா நீ? கண்ணாலயே கவர்ந்து இழுக்கிறான். அவனோட நாசியைப் போல எங்க ஏரியாவில யாருக்காவது இருந்து பார்த்திருக்கியா? அதுவே தனி அழகு. ஹிந்தி பட ஹீரோ மாதிரி உதடு வேற சிவப்பா இருக்கே...
அவனை பத்தி எதை வர்ணிக்க? அவனை வர்ணிக்கணும்னா நான் கவிஞரா மாறணும் போலயே? ஆனா ஒன்னுடி, அவனோட நிமிர்வான தோற்றமே சொல்லுது, அவன் ராஜவம்சத்தவனா தான் இருப்பான்." என்று தன்னை மறந்து அந்த புதியவனை வர்ணித்தவளை,
இமைகளின் நடுவே முடிச்சிட பார்த்தவாறே நடந்தவள்,
"ஏய்! இதெல்லாம் எப்படி பாத்த? விட்டா அந்த பொறுக்கி பயல அணுவணுவா வர்ணிப்ப போலயே? அவனை வர்ணிக்கிறப்போ அவ்ளோ ரசனை வேற..."
"உன்னை தாங்கி பிடிக்கிறப்போ லைட்டா பார்த்தேன்." என்று சிரித்தவள்,
"இங்க பாருடி, அழகை யார் வேணும்னாலும் ரசிக்கலாம். இன்னையில இருந்து அவன் என்னோட ஆளு. இனிமே நான் மட்டுமே அவனை ரசிக்கணும். அப்புறம் என்னோட ஆள பொறுக்கின்னு சொல்லுற வேலை வச்சுக்காத." என்றால் மைதிலியை அலட்சியமாய் பார்த்து.
"ஓ... மேடத்தோட ஆளா அவரு? அப்போ இனிமே அந்த சார நான் தப்பா சொல்ல மாட்டேன். உன்னோட அவர சார்ன்னு கூப்பிடலாம்ல? இல்லன்னா எஜமான் அப்படின்னு கூப்பிடணுமா?" என்றவள் பேச்சில் பக்கென சிரித்தவள், வேறு பேச்சுக்கு தாவியவாறு நடந்து சென்றனர்.
எங்கிருந்தோ அணி திரண்ட மேகக் கூட்டமானது, நீல வானத்தினை ஆக்கிரமித்து, பூமியினை கருநிறம் சூழ வைத்தது. அதை கலைக்கும் நோக்காடு காற்றானது தன் முழு பலத்தையும் காட்டிட, தரையில் கிடந்த சருகுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.
"என்னடி திடீர்ன்னு இருட்டி, மழை வாரமாதிரி இருக்கு. பெரிய மழை தான் கொட்ட போகுது போல..." என்றாள் தேனு.
உடனே வானத்தினை நிமிர்ந்து பார்த்தவள், மெல்லிய புன்னகை ஒன்றினை சிந்தினாள் மைதிலி.
"ஆத்தா! உனக்கு மழைனா ரொம்ப பிடிக்கும்னு தெரியும். என்னோட வீடு வந்திடிச்சு நான் நனையாமல் போயிடுவேன். நாளைக்கு ரிசல்ட் வருது. அதை பாக்கிறதுக்காவது நீ உயிரோட இருக்கணும். மழைக்குள்ள சிக்காம வேளையோட ஓடிப்போ!" என்றாள்.
"சரி நான் நனையல. உன் வீடு வந்திடிச்சு, என்னோட கார்ல இருந்து சீக்கிரம் இறங்கிக்கோ." என்றவளைப் பார்த்து இதழ்களை சுழித்தவள்,
வீதியோடு இருந்த அந்த பெரிய கேட்டின் அருகில் நின்றவாறு, "உன் காரில் இருந்து நான் இறங்கிட்டேன். பெட்ரோல் தீர்ந்து போறதுக்குள்ள வீடு போய் சேரு, நாளைக்கு சந்திப்போம். பைடி!" என்று கையசைத்தபடி கேட்டினை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.
அந்த ஊரிலேயே வசதியான குடும்பத்து பெண்தான் தேனு. அவர்கள் பரம்பரை செல்வந்தர் என்பதனால், அவர்களுக்கு என்று ஒரு மரியாதை அந்த ஊர் மக்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். ஏதாவது உதவி தேவை என்றால் அந்த குடும்பத்தை தான் நாடுவார்கள் ஊர் மக்கள். மைதிலியுடைய அத்தானான ரஞ்சித்திற்கு கூட கண்டியில் வேலை வாங்கி கொடுத்ததே அவர்கள் தான்.
தேனு சென்றதும் தன் வீடு செல்வதற்காக மெயின் ரோட்டிலிருந்து கிளைப்பாதைக்கு மாறியவள், மழையினை எதிர்பார்த்து வானத்தினைப் பார்த்தவாறே சென்றாள்.
பலமாக வீசிய காற்றில் வீதியின் இரு புறங்களிலும் இருந்த கொன்றை மரங்களின் பூக்கள் சொரிந்து, அவள் பாதம் படும் இடங்களில் மஞ்சள் விரிப்பினை விரித்திருந்தது.
புன்னகை மாறாத இதழ்களோடு தன்மேல் விழும் பூக்களை நிமிர்ந்து பார்த்தவள், கைகள் இரண்டையும் அகல விரித்து அவற்றை வரவேற்று, சந்தோஷத்தில் தன்னைத் தானே சுற்றியவாறு வந்தவள் மேல் பூமாரியுடன் நீர் மாரியும் சேர்ந்தே பொழிந்தது.
"அய்! மழை!" என்று துள்ளிக் குதித்தாள் மைதிலி.
அந்த ஊர் இப்போது தான், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையானது. போரின் காரணமாக மக்களது காணிகளை இராணுவம் சுவீகரித்துக் கொண்டு, தங்கள் சிங்கள குடிப்பரம்பலை இங்கும் பரப்ப திட்டமிட்டிருக்க, மக்களின் பெரும் போரட்டங்களின் பிற்பாடுதான், காங்கேசந்துறையினை விட்டு இராணுவம் அகன்றது.
இரண்டு வருடங்களின் முன்னர் தான், அவரவர் சொந்த நிலங்களுக்கு மக்களை அரசாங்கம் அனுமதித்ததனால், பெரிய அளவில் மக்கள் தொகை அந்த கிராமத்தில் இல்லை. அப்படி அவர்களே இஷ்டப்பட்டு, யுத்தத்திற்கு முன்னர் விட்டுச்சென்ற வீடுகளில் குடியிருக்கலாம் என்று வந்தால், பாதி செல்களினாலும் பாதி திருடர்களினாலும், சில வீடுகள் இருந்த அடையாளமே தெரியாது போயிருந்தது.
அங்கு குடிநீருக்கு பஞ்சம் என்பதால், பெரிதளவில் மக்கள் தங்கள் சொந்த நிலங்களுக்கு குடியிருக்க வரவில்லை. அதனால் தான் யாருமற்ற தைரியத்தில் வீதியில் இந்த ஆட்டம் போடுகின்றாள் மைதிலி.
மழையினில் நனைந்த மயில் போல் துள்ளி குதித்தபடி வந்தவள், கைக்கெட்டும் தூரத்தில் கொன்றை மலர்கள் கூட்டம் தொங்க, அதை தொங்கி பிடித்தவள், ஒரு கட்டத்தில் மலர் கொத்து இடையில் அறுபடுவதை உணர்ந்து, "வேண்டாம், நீ மரத்தில இருக்குறப்போ தான் அழகு." என்று மழையில் நனைந்தவாறு, தன்னைத் தானே சுற்றும் போதுதான், தூரத்தில் கார் ஒன்று நகராமல் வீதியின் ஓரம் நிறுத்தியிருப்பது தெரிந்தது.
'நான் வரப்போ அந்த கார் அங்க இல்லையே? இப்போ தான் வந்திச்சா என்ன? ஆமா ஏன் அங்கேய நிக்குது? எனக்கு ஏன் இந்த ஆராய்ச்சி? நாம நம்ம வேலைய பார்ப்போம்.' என நினைத்தவாறு,
கார் பின்னால் நின்றதனால் குத்தாட்டத்தை நிறுத்திவிட்டு, நல்ல பிள்ளை போல் தன் குடியிருப்பு பகுதியான அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினாள். அந்த ஏரியா முழுவதும் மண்ணினால் சுவர் எழுப்பப்பட்டு, ஓலையினால் வேயப்பட்ட சிறு சிறு வீடுகள் அருகருகே வேலிகள் அற்று போய் இருந்தது. சிறியமழைக்கே நடந்து செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்க, அதை கால்களினால் தட்டி விட்டபடி சென்றவளின் எதிரே, மழையில் நனையாதவாறு உரப் பையினை தலையில் போட்டுக்கொண்டு வந்த முதியவர் ஒருவர்,
"என்ன மைதிலி! வீட்டில அவ்ளோ பெரிய விஷயம் நடந்திட்டிருக்கு. நீ என்னடான்னா மழையில நனைஞ்சு விளையாடிட்டு இருக்க? போம்மா, சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ தானே? போய் பார்க்க வேண்டிய காரியத்தை பாரு." என்றுவிட்டு கடந்து செல்ல,
'இந்த தாத்தா எதை சொல்லிட்டு போறாரு? ஏதோ காரியம் நடந்திட்டிருக்குன்னு சொன்னாரே! யாருக்கு என்னாச்சு? ஜனா வயசுக்கு வந்திட்டாளா?' என நினைத்தவள்,
‘ஐ ஜாலி! கொஞ்ச நாளைக்கு செம்ம சாப்பாடு நம்மளுக்கும் சேர்த்து வரும்.’ என துள்ளிக்கொண்டு வீடு நோக்கி ஓடியவளை, அவள் வீட்டு வாசலில் குமிந்திருந்த ஊர்மக்களின் கூட்டம் வரவேற்றது.
***
அரசமரத்தின் அடிப்பகுதியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவள் கண்கள் கண்ணீரை சொரிய, முன்னால் இருந்த அந்த குளத்தினில் பூத்து குலுங்கிய தாமரை மலர்களையும், இலைகளில் தத்தித்தத்தி தாவி விளையாடும் தவளைகளையும், மாலை வெயில் பட்டு தங்கநிறமாய் தெறிப்படையும் குளத்து நீரினையும், வைத்த கண் வாங்காமல பார்த்தவள் நினைவுகளோ, நான்கு வருடங்களின் முன்னர் நடந்த சம்பவங்களை அசை போட்டபடி இருந்தது.
"அம்மா!" என அழைத்த அவளது இரண்டே வயதாகிய மகனது குரல் கேட்டு திரும்பியவள், சற்று தூரத்தில் இருந்த மைதானத்தினுள் விளையாடிக் கொண்டிருந்த, அத்தனை சிறுவர்கள் மத்தியிலும்பார்வையால் தன் மகனை வலை வீசி தேடியவள் கண்களில், அவளது செல்ல மகன் அகப்படவில்லை.
"விக்கி எங்க மறைஞ்சிருக்க? அம்மாட்ட ஓடி வா!" என்று அழைத்தவள் குரலுக்கு எந்த பதிலுமே இல்லாமல் போனது.
"விக்கி செல்லம்! அம்மாகிட்டயே கண்ணாம்பூச்சி ஆடுறியா? நீ எங்க இருந்தாலும் அம்மா கண்டு பிடிச்சிடுவேனே!" என்று தன் மகனின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில், தானும் ஒரு குழந்தையாக மாறியவள்,
அவனைக் கண்டுபிடிக்கும் படலத்தில் இறங்கி பெஞ்சினை விட்டு எழுந்தவள், பின்புறமிருந்த அரசமரத்தின் பின்னால் சத்தம் வருவதை உணர்ந்து, அரவம் எழாமல் பதுங்கி பதுங்கியே அந்த அரசமரத்தினை சுற்றியவளால் அவனை கண்டேபிடிக்க முடியவில்லை. எப்படி அவன் கிடைப்பான்? இவள் சுற்றி வருவது தெரிந்து, அவனும்தான் அவள் பின்னால் சுற்றினானே?!
"விக்கி நீ இங்க தான் இருக்கன்னு அம்மாக்கு தெரியும், அம்மா முன்னாடி ஓடி வாடா தங்கம்." என்று அவனைக் காணாது கெஞ்சியவள் பேச்சுக்கு எந்த பதிலும் இல்லாது போகவே,
"விக்கிப்பா! நான் தோத்துட்டேன்டா செல்லம். வாங்க, வீட்டுக்கு போகலாம் நேரமாகுது." என தன் தோல்வியை ஒப்புக்கொண்டும் அவன் குரல் கொடுக்கவில்லை.
ஆனால் அவன் நடைக்கு ஏற்றாற் போல் அரசமரத்தின் கீழ், சொரிந்திருந்த சருகுகளிலிருந்து, நொறுங்கும் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது.
'என்கிட்டயே உன் விளையாட்டை காட்டுறியாடா செல்லம்?' என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் உதட்டினில், கள்ளமாய் ஒரு புன்னகையினை தவழவிட்டு,
"விக்கி, நீ அரசமரத்துக்கு பின்னாடி தான் இருக்கன்னு அம்மா கண்டுபிடிச்சிட்டேனே!" என்றவாறு, மீண்டும் அரசமரத்தினை சுற்றி வந்தாள்.
அவனும் தாய் காணாதவாறு மரத்தினை சுத்திக்கொண்டிருப்பது, மரத்தின் சருகுகள் மிதிபடும் சத்தத்தில் கண்டுகொண்டவள், திடீரென சுற்றுவதை விட்டு அதே இடத்தினில் நின்று கொண்டாள்.
மகன் எப்படியும் தன்னிடம் அகப்படாமல் மரத்தினை சுற்றத்தான் போகிறான். சுற்றுவதை நிறுத்தி அதே இடத்தில் நின்றால், தான் சுற்றுவதாக நினைத்து பின்னால் வருபவனை பிடித்து விடலாம் என்ற கள்ள எண்ணம். பின்புறம் திரும்பி நின்று மகனை எதிர்பார்த்து காத்திருந்தவள், அவனைக் கண்டதும் அதிர்ந்தே விட்டாள்.
எவனை இதுவரை பார்க்க கூடாது என நினைத்திருந்தாளோ அவனே தான். விக்கியைத் தூக்கிக்கொண்டு அவளுக்கு போக்கு காட்டியவன், அவள் திடீர் என நிற்பாள் என எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே அவன் முகத்தில் உண்டான அதிர்ச்சி, மறுநொடியே மறைந்து போனது. ஆனால் அவனை அங்கு எதிர்பாராதவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
தன்னைக் கண்டதும் திகைத்து நின்றவளைக் கண்டதும்,அவளையே வைத்த கண்கள் வாங்காமல் ரசித்து நின்றவன் உதடுகளோ மந்திர புன்னகை சிந்தியது.
***
தொடரும்…