பகுதி 20
யார் மேலோ உள்ள கோபத்தை, கார் மீது காட்டி காரை சீறவிட்டான். அந்த ஏழு மாடிக்கட்டிடத்தின் கீழ் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் காரை விட்டுவிட்டு, உள்ளே நுழைந்தவனது வேகத்திலும் சத்தம் மாறாத அவனது காலடித் தடத்திலும், அது யாரென அறிந்த ரிசப்ஷன் பெண், காதிலிருந்த ரிசீவரை அவசரமாக போனில் கவிழ்த்து விட்டு எழுந்து,
"குட் மார்னிங்க் சார்!" என பதட்டமாக கூறியவள், அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்கவில்லை.
அவளது குரலைத் தொடர்ந்து மற்றைய ஸ்டாப்பும் மார்னிங்க் கூற, அவன் காதினில் தான் அத்தனை பேரது வணக்கமும் விழுந்ததோ என்னமோ! கண்களில் அனலைத் தெறிக்கவிட்டு, புயல் வேகத்தில் சென்று மறைந்தான்.
அது ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம்!
ஆடைகளை, வடிவமைப்பு கலைஞர்களினால் வடிவமைத்து, அங்கேயே உற்பத்தியும் செய்யப்படும் பொருட்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் அந்த நிறுவனத்தினது வேலையே! எப்போதுமே ஸ்ரீ பத்து மணியளவில் தான் நிறுவனத்திற்கே வருவான். வந்ததும் தன் வேலையிலேயே கவனமாக இருந்து கொள்வான். வேலையில் சிறு பிழை என்றாலும், அன்றைய நாளில் நரகத்தைக் காட்டும் அளவிற்கு தவறு செய்பவரை படுத்தி எடுத்து விடுவான்.
அவனது கோபத்திற்கு பயந்தே செய்யும் வேலையில், முடிந்தளவிற்கு நேர்த்தியாக செய்து விடுவார்கள் அவனது தொழிலாளிகள். எப்படி வேலையில் கெடுபிடியோ அதே போல், அவர்களுக்கு வழங்கும் மாதாந்திர ஊதியமும் நிறைவாகவே இருக்கும்.
அதனாலேயே அவன் ஏச்சிற்கு பயந்து வேலையை விட்டு நின்று விடமாட்டார்கள். அப்படி நினைத்தாலும் முடியாது. வேலையில் சேரும் போதே, அக்ரிமெண்ட்டில் கையெழுத்து வாங்கியதன் பின்னர் தான் வேலையிலும் இணைத்துக்கொள்வான்.
ஆஃபீஸில் ஏதாவது பிரச்சனை என்றால் மாத்திரமே இன்று போல் வேளையோடு வருவான்.
"குட் மார்னிங்க் சொன்னா திரும்ப சொல்லுற பழக்கம் என்கிறதே கிடையாது. இதுக்கு எதுக்கு மெனக்கெட்டு நாம குட் மார்னிங்க் சொல்லணும்? எப்போ பாரு மூஞ்சிய உர்ருனு வச்சிகிட்டு... இங்க வேலை பாக்கிறதே சிங்கராஜா வனத்துக்குள்ள, தலையை நீட்டிப்பாக்குறது போல. எந்த நேரம், யாரு இவன் திட்டலுக்கு இரையாவாங்களோனு பயந்தே சாகவேண்டி இருக்கு. இன்னைக்கு யாரு சிடுமூஞ்சிக்கிட்ட மாட்டப்போறானோ?" என முணுமுணுத்தவாறு தன் வேலையை ஆரம்பிக்க முனைந்தாள்.
"என்ன மேடம் தனிமையில புலம்புறீங்க?" ஸ்ரீ வந்ததை அறியாது சாதாரணமாக கேட்டவாறு, அப்போது தான் என்ரியானாள் இன்னொருவள்.
"நான் புலம்புறது இருக்கட்டும், மேடம் வந்த டைம் என்னனு தெரியுமா? சார் கூட வந்திட்டாரு, சீக்கிரமா ஃபிங்கர வச்சிட்டு வேலைய பாரு. சார் இருக்கிற கோபத்தில, அவரு முகத்தை தொட்டே கற்பூரம் ஏத்தலாம் போல. யாருக்கு இன்னைக்கு கண்ணீர் அஞ்சலியோ..." என்று எச்சரித்து தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அவள் கூறிய விதத்தில் பயந்த மற்றவளோ, ஃபிங்கரை வைத்து விட்டு தன் இடத்தில் சென்றமர்ந்தவள், வெகு சிரத்தையோடு வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
மற்றைய நாட்களில் என்றால் எல்லா ஸ்டாப்பும் சேர்ந்து இந்த நேரத்தில், ஒரு அரட்டையைப் போட்டுவிட்டுத்தான் வேலையையே கவனிக்கச் செல்வார்கள். அதில் ஒரு திருப்தி இருக்கும். இன்றுதான் அதற்கு முழுக்கு போடுவதற்கென்றே வேளையோடு வெறிகொண்டு வந்து விட்டானே!
அந்த ஆஃபீஸ் மயான அமைதியானது. ஸ்ரீ தன் அறைக்குள் நுழைந்தான் என்றால், வந்ததுமே வேலையில் மூழ்கிவிடுவான். இன்று அவனால் அது முடியவில்லை. மாறாக கால் கடுக்கும் அளவிற்கு அந்த அறையினையே, சலிக்காது பலமுறை அளந்து விட்டான்.இருந்தும் மனமோ அமைதியினை இழந்தது.
கோபமா? ஆத்திரமா? இயலாமையா? எதுவென்றே சொல்ல முடியாததோர் உணர்வு. இப்படி இரு உணர்வினை ஒரே சமயத்தில் அனுபவிப்பது அவனுக்கு இதுவே முதல்முறை. எதற்கு இப்படி நடந்து கொள்கிறான் எனக்கேட்டால் அவனுக்கே தெரியவில்லை.
ஆனாலும் தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என கேட்டவன் மனக்கண்ணில் தோன்றியது அவள் கண்ணீரே! ஆம், ஸ்ரீயின் இந்த கோபத்திற்கும் தவிப்பிற்கும் கரணம் அவளது கண்ணீர் தான்.
அவன் அவள் மேல் கடும் கோபத்தில் இருந்ததும், அவளைப் பழி தீர்க்க நினைத்ததும் உண்மை தான். அவன் கோபமும் அப்படிப்பட்டது தான். ஸ்ரீயும் தனக்கான எதிரியை அந்தளவு எளிதில் தீர்மானிக்க மாட்டான். தன் எதிரி கூட தனக்கு நிகரானவனாக தன் ஒவ்வொரு அடிகளையும் தாங்கி மீண்டும் அவனை எதிர்க்க முன்வர வேண்டும்.
அவனையும் நேருக்கு நேர் நின்று எதிர்த்து, தன்னையும் தோற்கடித்திட வேண்டும். அப்படிப்பட்ட எதிரிகளைத்தான் அவனும் சந்திக்க முன்வருவான். அவன் தொழிலில் கண்ணுக்கு தெரியாத எதிரிகளாக பலர் இருந்தாலும், ஒரு சிலரை மட்டுமே தன் நிரந்தர எதிரியாக நியமித்திருந்தான். தன்னை எதிர்ப்பவர்கள் எதிரியல்ல, தான் எவனை தன் எதிரியாக ஏற்கிறேனோ, அவன்தான் தன் எதிரி என்றும் எதிரியில் கூட தன் தேர்வு தான் இறுதியானதும் என்று இருப்பவன்.
மைதிலியும் கிட்டத்தட்ட அப்பிடித்தான். தன்னை பொறுக்கி என்காதே என்று நேரடியாக அவளை எச்சரித்தும், ஏன் அவளை தகாத முறையில் நடத்துவேன் என்று கூறியும், அதற்கும் அஞ்சாமல் மீண்டும் அவன் முன்பே அதே வார்த்தையை சொல்லவும் ஒரு தைரியம் வேண்டுமே! அது மைதிலியிடம் நிறையவே இருந்தது.
ஸ்ரீ ஒரு முடிவினை எடுத்து விட்டான் என்றால், அந்த முடிவில் மாற்றம் என்பதைப் பற்றி ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கமாட்டான். அதுவே அவனது அறுதியும் இறுதியுமான முடிவு.ஆனால் மைதிலி விஷயத்தில் அப்படி அவனால் இருக்க முடியவில்லை.
ஸ்விம்மிங் ஃபூல் அருகில் வைத்து மைதிலி தன்னை அறைந்து, இரண்டாவது முறையாக தன்னை பொறுக்கி என்றதும், அவள் மேல் கண்மண் தெரியாத கோபத்தில் இருந்தவன், அவளை சிதைத்து விடவேண்டும் என்று இரவு முழுவதும் போதையில் புலம்பியவனுக்கு, மறுநாள் விடியலின் போது கோபமும் குறைந்திருந்தது.குளித்துவிட்டு வரும்போது தோட்டத்தில் கேட்ட சிரிப்பொலியில் யாரென பார்த்தவன்,
தாயுடன் மைதிலியைக் கண்டதும் இரவு நடந்த நிகழ்வு வரிசையாக நினைவிற்கு வர, அவன் மனதை போல் முகமும் இறுகியது. தோட்டத்தை விட்டு உள்ளே செல்லும் இருவரது பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டிருந்தவன் அவர்கள் உள்ளே சென்றதும், கட்டிலில் சென்று அமர்ந்து தன் மனதினை ஒருநிலைப்படுத்தினான்.
பல ஆண்டுகள கழித்து மனம் விட்டு பேசி, சிரிக்கும் தன் தாயை நினைத்துப் பார்த்தவன், இனிமேல் விஜயா பழையபடி மற்றவர்கள் போல் மாறிவிடுவாள் என நினைத்தவன், தாயின் இந்த மாற்றத்திற்கு காரணமானவள் மைதிலி எனும் போதுதான் அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
'தன் எதிரி தன் உறவினர்களுடன் நெருங்கி பழகுவதா? கூடாதே...' என நினைத்தவன், 'அதெப்படி! தகுதியே அற்றவள் எனக்கு எதிரியாக முடியும்? அதுவும் ஒரு சாதாரண பெண் எனக்கு எதிரியா? படித்து முடித்ததும் திருமணம் என்கின்ற பந்தத்தில் இணைந்து, தன்னை தானே சிறைசெய்ய நினைக்கும் மற்றைய பெண்களைப்போல், ஒரு சாதாரண பெண் எனக்கு எதிரி?’ என உதட்டைக் கோணலாக்கி நகைத்தவன்,
'போயும் போயும் இவளை என் எதிரியா நினைத்து, இரவு முழுவதும் புலம்பி தவித்திருக்கின்றேன். இது என் எதிரிகளையே அசிங்கப்படுத்துவது போலாகாது? தன்னுடைய பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்த்து போராடத் துணிவற்று ஓடிவந்து, இங்கு ஒளிந்து கொண்டவள் எல்லாம் எதிரி? ச்சைய்...!' என்றிருந்தது ஸ்ரீயிற்கு.
‘இருந்தும் பொறுக்கி என்றது தவறு தானே? அதுவும் ஒரு முறையல்ல, இரண்டு முறை. அவளுக்கு அவனைப்பற்றி என்ன தெரியும்? பார்த்ததும் பொறுக்கி என்றால் என்ன அர்த்தம்?’
அவனைப் பொறுத்தவரை பொறுக்கி என்பது, ஒரு பெண்ணுடைய சம்மதமில்லாமல், கட்டாயப்படுத்தி தொடுவதும் பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு அழைப்பதும், அவள் மேல் ஆசை கொள்வதும் தான் பொறுக்கித் தனமாம்.
அவன் ஒன்றும் யாரையும் தன்னோடு வா என்று வற்புறுத்தவில்லை. தானாக ஒப்புக்கொண்டு வரும் பெண்களையும் தமது தேவைகளைத் தீர்க்க, தன்னை நாடும் பெண்களையும் தானே அவன் கட்டிலுக்கு அழைத்திருக்கிறான்.
அதனால், தான் நடந்து கொள்வது பொறுக்கித்தனமில்லை என்று தனக்காக புதிதாக ஓர் அகராதியை வடிவமைத்திருந்தான்.
பாவம் அவனுக்கு புரியவில்லை, தன்னுடைய அகராதியில் கூட மைதிலி விஷயத்தில் தான் பொறுக்கித்தனத்துடன் தான் நடந்திருக்கிறோம் என்று.
அவளைப் பார்க்கும் நேரம் எல்லாம் அவள் சம்மதமில்லாமல் அட்டை போல் ஒட்டிக்கொள்கிறானே! இருந்தும் தன் தாயினைப் பழையவாறு மீட்டதற்காக அவளை மன்னித்து விடலாம் என, தான் எடுத்த முடிவினில் ஒருபோதும் மாற்றம் கொண்டு வராதவன், இரண்டாம் முறையாக அவளைப் பழி தீர்க்கும் எண்ணத்தை மாற்றி, மைதிலிக்காக தன் சுயத்திலிருந்து மாறினான்.
இதை ஸ்ரீ கூட உணரவில்லை. ஒரு வேளை உணர்ந்திருந்தால், தன் மனம் என்னவென்று புரிந்திருக்குமோ என்னவோ?
அவளே பல பிரச்சனைகளைக் கடந்து, போக்கிடமில்லாமல் பாதுகாப்பு நாடி, ஒளிந்து கொள்ள வந்திருக்கும் ஒரு சூழ்நிலை கைதி. இவளை வஞ்சம் தீர்ப்பது செத்த பாம்பினை அடிப்பது போன்றது என்று அதற்கும் ஒரு பதிலைத் தேடிக்கண்டு பிடித்தான்.
ஏனோ அவளை முதன் முதலில் பார்த்த நாளில் இருந்து, அவளை நினைத்தே தூக்கமில்லாமல் தவித்தது, அவளை மறுபடியும் ஒருமுறை கண்டு விடமாட்டோமா என்று அவளைத்தேடி காங்கேசன் துறை வரை, இல்லாத காரணம் கூறி நண்பனை அழைத்துச் சென்றது, அவளைக் காணாது ஏமாற்றம் கொண்டு திரும்பியது. அவ்வளவு ஏன்? நேற்று காலையில் அவளைக் கண்டுவிட்டு சொல்ல முடியாத அளவிற்கு மனமோ ஆனந்தம் கொண்டது.
ஆஃபீஸ் வந்தும் அவள் நினைவிலேயே உழன்று, வேலையைக்கூட மறந்து, அவளைக் காண்பதற்காக தயாராகும் போது, அவனது மேனேஜர் வந்து மீட்டிங்கினை நினைவுபடுத்தியது, பின் இரவில் நடந்த சம்பவங்கள் என்று எல்லாமே நினைத்துப் பார்த்தவனுக்கு, ஏனோ இனம் புரியாத ஏமாற்றமாகவே இருந்தது. அதை ஏனென்று ஆராய்ந்து பார்க்கத்தான் ஸ்ரீயிற்கு நாட்டமில்லை.ஆனால் ஒன்று மட்டும் அவனால் உணரமுடிந்தது.
மைதிலியைக் காண கண்கள் ஏங்குகிறது. அவளை நினைத்தே இதயம் துடிக்கிறது. அவள் அருகிலேயே தன் ஆண்மை தடுமாறுகிறது. ஆனால் அதன் காரணம் என்னவென்று உணரவோ, ஆராயவோ ஸ்ரீயிற்கு சற்றும் விருப்பம் இல்லை. இவற்றையெல்லாம் தன்னிடமிருந்து விலக்க வேண்டும். அதற்கு அவளைப் புறக்கணிக்க வேண்டும். அப்படியாயின் அவளிடம் நெருங்குவதைத் தடுத்தால் தான், தன்னால் பழைய ஸ்ரீயாக மாறமுடியும் என்று நினைத்தான்.
அலுவலகம் தயாராகிக் கொண்டிருக்கும் போது விநாயகர் அகவையை, தன் தேனிலும் இனிமையான குரலினால் அந்த வீட்டையே தன்வசப்படுத்திக் கொண்டிருந்த குரலானது,மைதிலியுடையது தான் என்பதில் ஐயமில்லை. இருந்தும் சற்றுமுன், 'அவளை விட்டு ஒதுங்கியிருந்தால் தன் மனதை அவள் நினைவிலிருந்தும், அவள் வசமிருந்தும் மீட்டிடலாம்.' என எடுத்த முடிவினை மறந்து, அவளைக் காணவெளிவந்தவன் மாடியிலிருந்தவாறே கீழே நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வந்த ஒரே நாளில் வீட்டில் இருப்பவர்களைத் தன்வசப்படுத்தியதும் இல்லாது, அவர்களிடம் உரிமையாக பழகுவது அவனது பொறாமையையும் தூண்டியது. அவன்கூட அவர்களிடம் இந்தளவிற்கு நெருக்கம் காட்டியதில்லை. இப்போது மட்டுமல்ல, சிறுவயதில் இருந்தே அவனது நண்பர்கள் பட்டாளம் என இருந்ததனால், அந்த இன்பத்தை அவன் அனுபவித்ததில்லை.அனுபவித்ததில்லை என்று சொல்வதும் தவறு. அதை அவன் விரும்பியதில்லை. வீட்டவர் தானே என்று நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில், பாதி கூட சொந்தங்களுக்கு கொடுக்கவில்லை.
சிறுவயதில் இருந்து இப்போது வரை தூங்குவதற்கான இடம் மட்டுமே வீடு என்றாகிப் போனது. யாரிடமும் மனம் திறந்து பேசமாட்டான். இன்று ஏனோ மைதிலியைப் பார்த்ததும், அந்த குடும்பத்து வாரிசான தனக்கில்லாத உரிமையினை, அவள் திருடிவிட்டாள் என்ற பொறாமையில், கைகளைக் கட்டிக்கொண்டு, மாடியிலே நின்று வேடிக்கைப் பார்த்திருந்தவனைத் தான், தெய்வானையின் கைகளில் அகப்படக்கூடாது என்று ஓடியவள் கண்டாள்.
அவன் கண்களில் தெரிந்த அலட்சியத்தை அறிந்தவள், அங்கு நில்லாது அறைக்குள் முடங்கிக்கொள்ள, மைதிலியைப் போல் தானும் குடும்பத்தோடு ஒண்ட வேண்டும், எல்லோர் அன்பும் தனக்கு் வேண்டுமென நினைத்தவன், ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாமா எனக் கேட்டான்.
அங்கும் மைதிலியை அழைத்து வருகிறேன் என பாட்டி கூறியதும், சட்டென நிமிர்ந்து பாட்டியைப் பார்த்ததற்கு காரணமே, தனக்கு சமமான இடத்தினை அவள் பிடித்து விட்டாளா என்ற கேள்வியில் தான். அந்த குடும்பமே அவளை விழுந்து விழுந்து கவனித்ததில், தன்னை விட அந்த குடும்பத்தில் ஒருபடி மேலே மைதிலி சென்றுவிட்டாள் என்பது புரிந்தது.
ஏனோ அது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களுக்கு தான் இரண்டாம் பட்சம் என்பது மனதிற்கு வேதனையாகவும் இருந்தது. அதன்பின் தானும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட நினைத்தான். ஆனால் அவனது வேலையினால் முடியாமல் போனது.காலையில் கூடி உணவை மட்டுமாவது உண்ண நேரம் கிடைத்ததே என மனதைத் தேற்றிக்கொண்டான். மைதிலி மட்டும் அவனிடமிருந்து நழுவிக்கொண்டு போவதை அவனால் உணரமுடிந்தது.
ஒரே வீட்டில் இருந்து கொண்டே கண்ணாம்பூச்சி ஆடினாள். ஆனால் அவள் நினைவினால் இன்னுமின்னும் ஸ்ரீ தவிக்கத் தொடங்கினான். அவளை அந்த வீட்டில் பார்க்கும் முன்னராவது கொஞ்சமாகத் தவித்தவன், எப்போது அவளது ஸ்பரிஷம் உணர்ந்தானோ, மீண்டும் மீண்டும் அதே நினைவில் உருகத் தொடங்கினான்.
'குடும்பத்தவரை வசப்படுத்தியதைப் போல, தன் மனதையும் அவள் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கிறாளே...' என அதற்கும் அவள் மீது கோபித்துக் கொண்டான். இந்த பத்து நாட்களும் அவனால் சாதாரண ஸ்ரீயாக இருக்க முடியவில்லை. அதுதான் மைதிலியே அவனை ஆட்கொண்டு விட்டாளே! அதனால் தான் அவள் நினைவில் இருந்து வெளிவருவதற்காக, நேற்று தன்னால் முடியும் வரை தண்ணியடித்தவன் பாரில் இருந்து வெளியேறும் போது, ஸ்ரீயைக் கண்ட ஒரு பெண் அவனுடன் வந்து ஒட்டிக்கொண்டாள்.
ஸ்ரீயை அவள் நன்கு அறிவாள். ஒரு இருமுறை அவனுடன் வீடு வரை சென்றுமிருக்கிறாள். ஸ்ரீயும் கடும் போதையில் இருந்ததனால், ஆடிக்கொண்டே வந்தவன், போதையில் தடுமாறி கீழே விழாமல் இருப்பதற்காக அவளைப் பற்றிக்கொண்டான். அவளுக்கு இது புதிதில்லை என்பதனால், இயல்பாக அவனை நெருங்க முடிந்தது. அவள் என்னமோ தவறான எண்ணத்தில் தான் நெருங்கினாள். ஆனால் ஸ்ரீயினால் தான் முடியவில்லை. அவன் மனம் முழுவதிலும் தான் மைதிலி நிறைந்திருந்தாளே!
அவளைப் பார்த்த நாளிலிருந்து வேறு பெண்ணைத் தொடாதவன், இன்று மட்டும் தொட்டு விடுவானா என்ன? எவ்வளவு போதையில் இருந்தாலும் அவளை, தவறான பார்வை கூட பார்க்காமல் விலக்கியே நின்றவனை, அவள்தான் தன் உடைகளைக் கலைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசிவிட்டு, அவனைத் தன் மீது விழும்படி இழுத்து அணைத்தாள்.
அவள் செயலில் அருவெருத்தவனோ அவள் மீதே வாந்தி எடுத்தான். இரவு முழுவதும் வாந்தியாக எடுத்து, அவளை ஒரு வழி ஆக்கிவிட்டான். அவன் வாந்தியினால் ஸ்ரீயும் தூங்கவில்லை, அவளையும் தூங்கவிடவில்லை. ஏன்டா இவனோடு வந்தேன் என்று நினைக்கும் அளவிற்கு ஸ்ரீ அவளை வருத்தி எடுத்து விட்டான். இறுதியில் முழு மதுவும் வெளியேறி இருவரும் தூங்க, காலை மூன்று மணியினைத் தாண்டியிருந்தது.
அப்போது கூட அந்த பெண்ணை பெட்டில் தூங்கவிட்டு, அவன் சோபாவில் படுத்துக்கொண்டான். காலையில் வேளையோடே எழுந்தவன், அந்த பெண் படுத்திருப்பதைக் கண்டதும் நேற்றைய நிகழ்வுகள் நினைவில் வர, அவளை மற்றவர்கள் காணும் முன் அனுப்பிவிட வேண்டும் என நினைத்து அவளை எழுப்ப,
அவளோ இருந்த அசதியில், "இன்னும் கொஞ்ச நேரம் பையா..." என்று கூறவும்,
"நான் குளிக்க போறேன், குளிச்சிட்டு வருவதற்குள் பின்பக்க படிகளினால் இறங்கி, யார் கண்களிலும் படாமல் சென்று விடு." என்று அவள் வெளியேறுவதற்கு வசதியாக கதவினைத் திறந்து வைத்துவிட்டு குளிப்பதற்கு சென்றான். அந்த நேரம்தான் மைதிலியும் உள்ளே வந்தாள்.
பாத்ரூமில் இருந்து வந்தவன், காலையிலேயே மைதிலியைத் தன் அறையில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவளைத் தன் அறையில் கண்டதும், ஏற்கனவே அவளை நெருங்கக்கூடாது என எடுத்த முடிவினை மறந்து, அவளிடம் சிறிது விளையாடுவதற்கு நினைத்தான்.
அதனால் தான் அவளை வெறுப்பேற்றும் எண்ணம் கொண்டு, வேண்டுமென்றே அவளை சீண்டுவதற்கு, அந்த பெண்ணை கொஞ்சுவதைப் போலும் நடித்தான். அது கூடஇன்னொரு பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்தால், அவளது நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிவதற்காக தான். அதில் மைதிலியின் கண்கள் கலங்கியதையும் ஸ்ரீ கவனிக்கத் தவறவில்லை.
அந்த பெண் அவனை முத்தமிட்டதும், அந்த அசிங்கத்தைப் பார்க்க விரும்பாதவளாக அந்த அறையினை விட்டுப் போக நினைப்பதை உணர்ந்துதான், அவளைத் தடுக்கும் பொருட்டு அவள் கையைப் பற்றினான்.
"என்ன பேபி அவசரம்?" என்றதும் அந்த பேபி என்ற பெயரில், அவள் உடல் ஒரு நொடி கோபத்தில் சிலிர்த்ததை, அவன் கைகளுக்குள் இருந்த அவள் கைகளினால் உணர்ந்து கொண்டான். இன்னும் அவளை வெறுப்பேற்றும் எண்ணம் வர, அன்று ஸ்விம்மிங் ஃபூல் அருகில் பேசியது நினைவில் வர, அதையே இப்போது வைத்து சீண்டுவோம் என நினைத்தவனாய் அந்த பெண்ணைக் காட்டி,
"எப்போது நீ இதே மாதிரி..." எனக் கேட்டதும், சினங்கொண்டு பொங்கி அவனை அறைந்து விட்டாள்.
ஸ்ரீயிற்கும் தெரியும், இந்த மாதிரி பேசினால் மைதிலி கோபம் கொள்வாள் என்பது. ஆனால் இந்த மாதிரி அறைவாள் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் அவள் ஒரு நெருப்பு என்பதை இரண்டு முறை நிரூபித்திருக்கிறாள். இது மூன்றாவது முறை. அதனால் தான் அவளது ஏச்சுக்களை, சிறுபிள்ளை தன்னை எச்சரிப்பதைப் போல் நினைத்து அவற்றை ரசித்திருந்தான்.
ஆனால் அவள் அறைந்ததும் இல்லாது, கடுமையாக பேசி மீண்டும் வந்து தன்னை பொறுக்கி என்றதுமில்லாமல், கேடு கெட்ட பொறுக்கி என்றதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனோ அவள் அதை கூறுவதை அவன் விரும்பவில்லை. அதனால் தானே தன் இயல்பையே தொலைத்து இருக்கிறான். மீண்டும் அதே பெயர் அவளிடமிருந்து வரவும் கோபம் கொண்டவன், அவளை சாதாரணமாக எச்சரிப்பதற்காகத்தான், அவள் கை விரல்களினை வலிக்கும்படி பற்றி திருகி பின்புறமாக வளைத்து கை விலங்கிட்டான்.
அவள் தொலைவில் நின்றாலே தன்னை தொலைப்பவன், அவள் ஸ்பரிசத்தில் தன்னையே மறந்து போய், தன்னோடு ஒட்டிக்கொண்ட அவளது திமிறலின் பொருள் புரிந்து, சற்று முன்னர் அவள் கூறிய கம்பளிப்பூச்சி நினைவில் வர, அதுவும் இப்போது கோபமாக மாறியது.அதனால் தான் முரட்டுத்தனமாக அவள் இதழ்களைத் தன் இதழ்களால் சிறை வைத்தான்.
பின் தன்னிலை மறந்து, அவள் இதழ்களை கண்மூடி சுவைக்கும் போதுதான், அவள் கண்ணீர் அவன் உதடுகளில் பட்டு உப்பை உணர்ந்து கண்விழித்துப் பார்த்தான். அவளது கலங்கிய விழிகளைக் கண்டு தன் தவறை உணர்ந்தவனாக, அவளைத் திரும்பியும் பாராமல் பாத்ரூம் சென்று மறைந்தான். ஏனோ அவள் கண்ணீர் அவன் இதயத்தைக் கூறு போட்டது.
தன் செயலை நினைத்து தன் மீதே ஆத்திரம் உண்டானது.கைகளைத் தாறுமாறாக பாத்ரூம் சுவற்றினில் குத்தியே காயப்படுத்தினான்.
தொடரும்…