பகுதி 21
அவளது கண்ணீருக்கு நான் காரணமாகி விட்டேனோ என கவலை கொண்டவன், தனது வரம்பு மீறிய செயலால் என்ன முடிவை எடுத்திருப்பாள் என்பதைப் புரிந்தும் கொண்டான். அவளை இனி காண முடியாது என்பதே வேதனையை இன்னும் அதிகப்படுத்தியது. அவள் தன்னை வீட்டவர்களிடம் மாட்டிவிடப் போகிறாள் என்றெல்லாம் கவலை கிடையாது. தன்னை விட்டு வெகு தூரமாக சென்று விடப் போகிறாள் என்பது மட்டுமே அவனை இம்சித்தது.
இப்படியே நின்று சிந்தித்துக் கொண்டிருந்தால், மைதிலி சென்று விடுவாள். கீழே சென்று அவளைத் தடுக்கலாம் என நினைத்தவனாய் பாத்ரூமை விட்டு வெளியே வந்தவன், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பின்புற வாசல் வழியே அனுப்பிவைத்து விட்டு, தயாராகி வெளியே வரும் போதுதான், மைதிலி போனில் உரையாடுவதைக் கேட்டான்.
போனில் உரையாடுபவளையே பார்த்தவன் எதிர்புறம் யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை என்றாலும், அவளது கலங்கிய விழிகளில் அது யாராக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டான். மீண்டும் கலங்கிய தன் தாரையைப் பார்க்க மனம் வலித்தது.
அவள் பேசி முடிக்கும் வரை பொறுமை காத்தவன், பாட்டியின் கேள்விகளில் அவளது கலக்கத்திற்கு யார் காரணம் என கூறும் போது, அவளது அத்தை மீனாட்சி மீதும் அந்த கனகரெட்ணத்தின் மீதும், கொலைவெறியே உண்டானது. யாரோ ஒருத்திக்காக ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பதை சிந்திக்கவில்லை. தாரையின் கண்ணீருக்கு காரணமானவர்கள் உடனேயே தண்டிக்கப்பட வேண்டும், அவ்வளவே!
அவள் கலங்குவதை அதற்கு மேல் சகித்துக்கொள்ள முடியாதவன், அவள் முன்பு தான் சென்று நின்றால், தன் முன் கலங்குவதை இழிவான செயல் என நினைத்து கண்ணீரை அடக்கிக் கொள்வாள் என்று அவள் மனதினை நன்கு அறிந்தவனாய், தான் வைத்த ஒவ்வொரு அடிகளும் அனைவர் காதில் விழும் அவிற்கு, அழுத்தமாக படிகளில் பதித்து இறங்கி வந்தவன், அவள் தன்னைக் கண்டதும் அவன் எதிர்பார்தது போல் மறுபுறம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டதைக் கண்டான்.
ஒருபுறம் அவளைப் புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபுறம் இனம்புரியாத வேதனை ஆட்கொண்டது.
இருக்காதா பின்னே? தன்னை அவள் எதிரியாக பார்ப்பதை அவன் மனம் விரும்பவில்லையே? தான் கேட்டதுக்கினங்க சாப்பாடு வேண்டாம் என அடம்பிடித்தவளை கட்டாயப்படுத்தி சாப்பிட அமர்த்திட, தன்னவளைப் பார்த்தவாறே உணவினை உண்டவன், அவள் இட்லியைப் பிய்த்து வாயில் வைத்ததும், “ஸ்...” என்ற சத்தத்துடன் இட்லியைக் கீழே போடும்போது தான் புரிந்து கொண்டான், தன் வேலையால் அவள் சாப்பிடக்கூட முடியாமல் தவிக்கிறாள் என்று.
அவன் மேலே அவனுக்கிருக்கும் கோபத்தினை சாப்பாட்டில் காட்டிவிட்டு எழுந்து சென்று விட்டான். ஆஃபீஸ் வந்தவன் மனமோ கடலலையாய் சினந்தது. இன்று ஒரே நாளில் மூன்று முறை அவள் கண்ணீரைக் கண்டுவிட்டான். இரண்டு முறை அந்த கண்ணீருக்கு தான் காரணமாகி விட்டேன் என்பதே அவன் கோபத்திற்கு காரணம்.
'தன்னை கடந்து அவள் வாழ்வில் பிரச்சனையாக இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கு, முதல் விடையாக அமைந்தது கனகரெட்ணம் தான். அந்த கனகரெட்ணத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என முடிவெடுத்தவனாய், அடுத்த அடியினை எப்படி நகர்த்தவேண்டும் என சிந்தித்துக்கொண்டிருந்தான்.
தன் தாரை கண்ணீருக்கு காரணமானவனுக்கு முடிவு கட்டவேண்டும் என நினைத்தவன் அறியவில்லை, அவள் கனகரெட்ணத்தைக்கூட சமாளித்து விடுவாள், தன்னை தான் அவளால் சமாளிக்க முடியாது என்பதை.
வெகு சிரத்தையோடு தன் வேலையில் ரிசப்ஷனில் நின்றவள் கவனமாக இருக்க, "க்ஹூம்..." என செருமியவன் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.
ஆறடிக்கும் குறையாத உயரம், மாநிறம், அளந்து வெட்டியெடுக்கப்பட்ட சிகை, கூரிய விழிகள், அளவான மீசையைத் தவிர மொத்தமாக சவரம் செய்யப்பட்ட தாடை, அவன் உயரத்திற்கு ஏற்ற உடலமைப்பு. வெள்ளை நிற சர்ட், கறுப்பு நிற பேன்ட், கழுத்தினில் கருநீல நிற டை, காலில் உயர் ரக ஷூ, கையில் ஒரு அகலமான கருநிறப் பை என நின்றவனைக் கண்டவள்,
'இவனா?' என சலித்துக்கொண்டாலும் தன் வேலை, கண்டவனை எல்லாம் பார்த்து பல்லைக் காட்ட வேண்டும் என்பதனால் கடமைக்கென அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், "சொல்லுங்க சார்." என்றுவிட்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
"நல்லா இருக்கியா காயத்திரி?" என்றான் அவனும் அலட்டிக்கொள்ளாது.
அவன் கேள்வி நன்றாகப் புரிந்தாலும் புரியாதவளைப் போல, "என்ன சார்? புரியல..." என சீரியசாக பேசியவள் பேச்சில் இருந்த கண்டிப்பினை உணர்ந்தவன்,
"ஒ... ஒன்னுமில்லயே நா... நான் ஸ்ரீய பாக்கணும். அவன் இருக்கான் தானே?" என்றான் தடுமாறியவாறே.
"சார் இப்போ அரைமணி நேரம் முன்னாடி தான் வந்தாரு. நீங்க வந்திருக்கிறதா தெரியப்படுத்தவா சார்?" என அவள் தன் பணியினை சிறப்பாக செய்ய,
"இல்லை வேண்டாம், நானே போய் பாத்துக்கிறேன். தேங்க்யூ!" என்றவன்,
"நீ சாப்பிட்டியா காயூ? முன்ன பார்த்தை விட ரொம்ப இளைச்சிட்ட போல இருக்கே?" என அக்கறையோடு அவன் கேட்க,
இம்முறை அவனை முறைத்தவள், "எஸ்கியூஸ்மீ சார், வந்த வேலை எதுவோ அதை கவனிக்கிறீங்களா? உங்களப் போல நான் ஒன்னும் வெட்டியா இல்ல." என்று சூடாக பொங்கினாள்.
"தட்ஸ் குட்! பெண்ணுங்கன்னா இப்பிடித்தான் நெருப்பா இருக்கணும்." என்று கூறி, புன்னகைத்தவாறே நகர்ந்தவனைப் பார்த்தவாறே வந்த சாருமதி,
"என்ன காயூ சார் காலங்காத்தால வந்திருக்காரு, இன்னைக்கான பலியாடு இவர் தானோ? இந்தாள் வருவார்னு தான் மௌன அஞ்சலி செலுத்தினியா என்ன?" என்றாள்.
"பேசாமல் போறியா? நீ வேற எரிச்சலை கிளப்பாத... என்னாச்சுனு தெரியல, நல்லாயிருந்த மனுஷன் திடீர்னு பைத்தியம் பிடிச்சது போல சம்மந்தம் சம்மந்தமில்லாமல் பேசுறதும், சிரிக்கிறதும் எதுவுமே சரியில்லடி. முன்னாடி எல்லாம் ஏன் அவன் சாரோட நட்பு வச்சுக்கிட்டான்னு ஃபீல் பண்ணுவேன். இப்போ இவன் கூட சார் ஏன் நட்பு வைச்சார்ன்னு தோனுது. எப்போ பாரு, சம்மந்தமே இல்லாம பேசிட்டு..." சலித்துக்கொண்டாள்.
"எனக்கு தெரியுமே, சாருக்கு உன்மேல ஒரு இது. அதனால தான் உன்கூட சம்மந்தம் பண்ணிக்கலாம்னு, சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுறாரு போல..." என்று கண்ணடித்து சொன்னவள் பேச்சில் கடுப்பானவள்,
"வாய மூடிட்டு போய் வேலைய பாரு! இல்லனா சார்கிட்ட வேலைய பாக்காம, யாரு யார்கூட சம்மந்தம் வச்சுக்கிறாங்கனு பாத்திட்ட திரியுறன்னு, நானே உன்னை போட்டுக் குடுத்துடுவேன். அர்த்தம் கண்டுபிடிக்கிறாளாம்...?" என கடுகடுத்தவள், தன் வேலையில் கவனமானாள்.
பல யோசனைகளின் மத்தியில் அமர்ந்திருந்தவனது கதவு பலமுறை தட்டப்பட, யோசனையை விட்டு நடப்புக்கு வந்தவன், "எஸ் கம் இன்!" என்றுவிட்டு வாயிலையே பார்த்திருந்தான்.
அங்கு வந்தவனைக் கண்டதும் தன் குழப்பத்திற்கெல்லாம் தீர்வு கிடைத்ததாக நினைத்தவன் வாய் நிறைய பல்லாக, "வாடா மச்சான்!" என்று எழுந்து வரவேற்றான்.
இதனை சற்றும் எதிர்பாராத செல்வம், அவனது புன்னகையிலும் இதுவரை இல்லாத நண்பனின் வரவேற்பிலும், மயக்கம் கொள்ளாத குறைதான். ஆம், வந்தவன் வேறு யாருமில்லை, அவனது உயிர் நண்பன் செல்வமே தான். படிக்கும் வயதில் அவனுக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், செல்வம் அவனுக்கு தனித்துவமானவன். செல்வம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரீயும் செல்வமும் உயர்தர வகுப்பை ஒன்றாக ஆரம்பித்து, கல்லூரியில் இருந்து இன்றுவரை நல்ல நண்பர்கள். ஸ்ரீயினது தகாத நண்பர்களின் எதிரியும் கூட செல்வம்தான்.
படிக்கும் காலம் வரை தன் நண்பர்களோடு திரிந்த ஸ்ரீ, தொழிலை தானே நடத்த தொடங்கியதன் பின்னர், இப்போது செல்வம் மாத்திரமே நட்பென்று நெருங்கிய தொடர்பில் இருக்கின்றான். இந்த குடி, கூத்து என்று கெட்ட பக்கங்களை அறவே வெறுப்பவனும் கூட. அதற்கு காரணம், அவன் குடும்ப சூழல் ஒருபுறம், மற்றையது அவனை பாசமாக வளர்த்த அவனது தந்தையற்ற அன்னையின் கஷ்டம்.
ஸ்ரீயிடம் அவனது தீய பழக்கங்கள் தவறென்று பலமுறை எடுத்து கூறியும், ஸ்ரீதான் அவன் பேச்சை எள்ளளவிற்கும் காதில் வாங்குவதில்லை. பலமுறை எச்சரித்து பார்த்தவன், தன்னால் முடியாது என்ற கட்டத்தில் அமைதியாகிவிட்டான். எத்தனையோ தடவை ஸ்ரீயை தேடி செல்வம் வந்திருக்கிறான் தான். ஆனால் இதுவரை வாய் நிறைய புன்னகையோடு எழுந்து நின்றெல்லாம் அவனை வரவேற்றது கிடையாது.
அதை தன் நண்பன் குணம் அறிந்து செல்வமும் எதிர்பார்த்தது இல்லை. எதிர்பார்க்கும் அளவிற்கு அவர்கள் நட்பும் தாழ்ந்தது கிடையாது. ஏன், ஸ்ரீ அதிகமாக சிரித்தறியாதவன். இன்று அவனது புன்னகையினை பார்க்கும் போது, 'இவன் இத்தனை அழகா? இந்த சிரிப்பினை இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்தான்? இது உண்மையில் தன் நண்பன் ஸ்ரீ தானா? இல்ல, தான் காண்பது கனவா?' என சந்தேகப்பட்டவனாய் அவனிடம் வந்தான்.
ஸ்ரீ கையினை ஆழமாக கிள்ளிப்பார்த்தான். அவன் கையினைத் தட்டி விட்டவன், "என்ன, வரவேற்பு பலமா இருக்கே? இது நான் தானானு சந்தேகத்தில கிள்ளுனீங்க, அப்பிடித் தானே?" என்றான் நக்கலாக.
அவன் கேள்வியில், "ஈ... கண்டுபிடிச்சிட்டியா?" என இளித்தவனைக் கண்டு,
"அட ச்சை! உன் ஆராய்ச்சிய நிறுத்திட்டு வந்து உக்காரு நாயே!" என்றவன் சொல்லுக்கு கட்டுண்டு, எதிர்புற இருக்கையில் அமர்ந்தான்.
"என்ன ரொம்ப நாளா ஆளையே காணலயே? ரொம்ப பிஸியோ? இப்போ என்ன விஷயமா என்னை பாக்க வந்த?" என்றான்.
"பிஸில்லாம் இல்லடா, உனக்குத்தான் தெரியுமே... என் வேலை எப்பிடின்னு. அப்புறம் இது என்ன கேள்வி?" என்று சோகமானான்.
"இப்போ புலம்பு... இதுக்கு தான் சொன்னேன், என்கிட்ட வான்னு. கேட்டாத்தானே? கௌரவம் பார்த்தா இப்பிடித்தான்." என்றான் ஸ்ரீ.
"சேந்திடலாம் தான்டா, ஆனா என்ன... நண்பன் தானே இவனுக்கு என்ன சேலரினு நீ நினைச்சிட்டா என் நிலைமை? ரொம்ப கஷ்டப்பட்ட ஃபேமிலிடா என்னாடது. அப்புறம் சாப்பாட்டுக்கு திருவோடு எல்லாம் என்னால ஏந்த முடியாதுப்பா." என்று கேலியாக கூறியவன் நன்பனின் முறைப்பைக் கண்டு,
"அதெல்லாம் சரிவராதுடா மச்சான். நட்பு வேற, தொழில் வேற. எனக்கு என்ன வேலை செய்ய வருமோ, அதைத்தான் செய்ய முடியும். நண்பன் என்கிறத்துக்காக தெரியாத வேலையை செய்வேன்னு பொய் சொல்லி, உன்னை ஏமாத்த எனக்கு இஷ்டமில்லை. நான் வேலையே பார்க்கலன்னாலும் பணம் குடுப்ப தான். அந்த சலுகை எனக்கு வேண்டாம்டா. அப்படி உழைக்காமல் வாங்கிற பணமும் தங்காது." என்று தத்துவம் பேசியவனை இகழ்வாய் ஒரு பார்வை பார்த்தவன்,
"உன்கிட்ட பிடிக்காதது இதுதான்டா, எதுக்கெடுத்தாலும் தத்துவம், இல்லனா அட்வைஸ். முடியலடா! ஏதோ வயசான கிழவன்கிட்ட பேசுறது போலவே ஃபீல் ஆகுது. சரி, உன்னை மாத்த முடியாது. இப்போ என்ன விஷயமா வந்திருக்க, அதை சொல்லு." என்றான்.
அவனது பேச்சில் நகைத்தவன், "நான் ஏன்டா மாறணும்? மாற வேண்டியது நானில்ல. அதை கூடிய சீக்கிரம் நீயும் உணர வேண்டிய காலம் வரும்." என்றவன்,
"நான் யாழ்ப்பாணம் போறேன் மச்சான். நீயும் என்கூட வரியான்னு கேக்கத்தான் வந்தேன்." என்றான்.
செல்வம் யாழ்ப்பாணம் என்ற பெயரைக் கேட்டதும் திடீரென அமைதியானான் ஸ்ரீ.
"என்னடா, கேட்டதுக்கு பதில் சொல்லாம சைலன்ட் ஆகிட்ட? ஏதாவது பிரச்சனையா என்ன?"
‘இல்லை’ என்பதாக தலையசைத்தவனைப் பார்க்கும் செல்வத்திற்கு, ஸ்ரீயின் இன்றைய நடவடிக்கைகள் எல்லாமே புதிதாக இருந்தது. தன்னிடம் எதையோ மறைக்கிறான் என புரிந்து கொண்டவன்,
"என்னடா மச்சான், யார் மேலயாவது லவ்ல விழுந்திட்டியா? டோட்டலாவே மாறிப்போய்ட?" என்று சும்மா அவனை வம்பிழுப்பதற்காக கேட்க,
அவனோ சர்வ சாதாரணமாகவே, "இல்லடா நான் வரல. நீ போயிட்டு வா." என்று முகத்தினில் எந்தவித உணர்வினையும் பிரதிபலிக்காமல் சொல்வதைக் கேட்ட செல்வத்திற்கு, உண்மையில் தன் எதிரில் இருப்பது ஸ்ரீ தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றது.
உண்மையில் ஸ்ரீ இதுவல்ல. ஸ்ரீ என்றாலே கர்வம், கோபம், நிமிர்வு, முக்கியமாக தான் என்ன நினைக்கிறானோ அதை தைரியமாக வெளிப்படுத்தி விடுவான். அது தட்டிக் கேட்பதென்றாலும் சரி, கோபம் என்றாலும் சரி. எதையும் மனதில் வைத்து புழுங்க மாட்டான். அதனாலேயே ஸ்ரீயின் முன் யாரும் எதுவும் பேசமாட்டார்கள்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமன்றால், ஓர் ஆணுக்கு தன் சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ள என்ன தேவையோ, அந்த அடையாளம் தான் ஸ்ரீ. இப்படி அமைதியின் செரூபம் அவன் இயல்பு அல்ல. அதுவும் திருமணம், காதல் என்ற பேச்சு அவன் முன் யார் எடுத்தாலும், அவர்களைத் தன் பாணியில் நன்கு கேட்டுவிடுவான்.
அதுவும் செல்வம் இவ்வாறு கேட்டால் மற்றவர்களிடம் வாய் தான் பேசும். செல்வத்திடம் வாயுடன் சேர்ந்து கையும் பேசும். இன்று தான் லவ்வா என்று கேட்டும் அமைதியாக இருக்கிறான் என்றால், அவனுக்கு ஸ்ரீயா இது என்ற சந்தேகம் எழுவதில் தவறில்லையே!?
செல்வம் குழப்பத்தோடே ஸ்ரீயைப் பார்த்திருக்க, "நீ எப்போ யாழ்ப்பாணம் போற?" என்றவனது கேள்வியில் நிஜத்திற்கு வந்தவன்,
"இன்னைக்குத் தான்டா, நைட்டுக்கு கிளம்புறேன்." என்றான்.
"என்ன திடீர்னு யாழ்ப்பாணத்திற்கு?" என்று கேட்டாலும், அவனுக்குமே செல்வத்தை தன் தேவை கருதி அங்கு அனுப்புவது தான் அவன் திட்டம்.
ஆம், ஸ்ரீயிற்கு இப்போது எந்த ஒரு இக்கட்டான சூழல் வந்தாலும், இங்கிருந்து எங்கும் கிளம்புவதாக இல்லை. யாராவது ஒருவரை தன் சார்பாக அனுப்பித்தான் விட்டிருப்பான். அதற்கான காரணமும் அவனுக்கு தெரியாது. என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான், பலியாடு தானாக வந்து மாட்டிக்கொண்டது.
அவனாகவே யாழ்ப்பாணம் போகப்பேகிறேன் என்றதும், தனக்கான வேலை கூட அங்கே தானே நிறைய இருக்கிறது. அந்த வேலையினை ரகசியமாக செய்து முடிக்க நம்பிக்கையான ஆளும் அவனே என நினைத்தவன், அவன் போகும் காரணத்தையும் கேட்டான்.
"நீ வேற... யாழ்ப்பாணத்துக்கு ஊர் சுத்தி பாக்கவா போறேன்? காரும் பெட்ரோலும் யாரு கொடுப்பாங்க? ஏதோ கம்பெனி கொடுக்கிற சலுகையினால நம்ம வண்டி ஓடுது." என்றவன்,
"இப்போ புதுசா ஒரு மருந்து தயாரிச்சிருக்கு நம்ம கம்பெனி. அதை மார்க்கெட்டிங் பண்ணணும். அது சம்மந்தமா எல்லா டாக்டர்ஸ் பார்த்து மருந்த பத்தி எக்ஸ்பிளைன் பண்ணி, சிபாரிசு செய்ய சொல்லி ரெகமண்ட் பண்ணணும்டா. கிட்டத்தட்ட இதுவும் பிச்சை எடுக்கிறது போல தான்." என்று சலித்துக் கொண்டான்.
ஆம், செல்வம் ஒரு பிரபல மருத்துவக் கம்பெனியில் மெடிக்கல் ரெப்பாக பணிபுரிகிறான். அவனுக்கென்று சில மாத்திரைகளை அந்த நிறுவனம் வழங்கி, ஒரு வருடத்துள் குறிப்பிட்டளவு மாத்திரைகளை அவன் பார்மசிகளுக்கும், தனியார் வைத்தியசாலைக்கும் வழங்கினாலோ இல்லை, அதற்கு மேல் தன் சேல்ஸை நடத்தினாலோ தான், அவனது பதவி உயர்வுடன் ஊதியமும் அதிகளவில் கிடைக்கும்.
இன்று தங்கள் கம்பெனி புதிதாக அறிமுகம் செய்திருக்கும் சுகர் டேப்லெட்டை பற்றி, அது சம்மந்தமான வைத்தியருடன், அந்த மாத்திரையின் நன்மையையும், பக்க விளைவுகளை எடுத்துக்கூறி தனது டேப்லெட்டை மக்கள் மத்தியில், மார்க்கெட்டிங் செய்வதற்கு ஆதரவு வேண்டி செல்வான்.
நாடு முழுவதும் அவனே சென்று தன் வேலையைப் பார்க்க வேண்டும். இன்று அவன் முறை யாழ்ப்பாணம். செல்வம் லீவில் சென்ற மாதம் வீட்டிற்கு வந்து நிற்கும்போது, அவனை ஓய்வெடுக்க விடாமல் வலுகட்டாயமாக தனக்கொரு வேலை யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அழைத்துச் சென்றவன், காங்கேசந்துறையையே சுத்திச் சுத்தி மூன்று நாட்கள் காட்டிவிட்டு,
"பின் வா, வந்த வேலை சரிவராது போல..." என ஊர் திரும்பும் போது, “யாழ்ப்பாணத்தில் வேலை ஏதாவது வந்தால் கூறு, நானும் வருகிறேன்.” என்றதனால் தான் செல்வம் இப்போது இங்கு வந்தான்.
தொடரும்...