• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 3

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna

பகுதி 3


அவனைக் கண்டு முதலில் அதிர்ச்சியுற்றவள், அவனது புன்னகையில் தன்னை சரி செய்துகொண்டு விக்கியை முறைத்து, "விக்கி என்ன இது புதுப்பழக்கம்? யார்னு தெரியாதவங்க கூட சேராதன்னு சொல்லியிருக்கேன்ல? முதல்ல கீழ இறங்கு." என்றாள் கோபமாக.


அவனோ இறங்காது புதியவனைத் திரும்பி பார்க்க, "சொல்லிட்டு இருக்கிறேன்ல விக்கி, வா நேரமாகுது போகலாம்." என்றாள்.


"ம்மா, இவரு யாரோ இல்லம்மா என்னோட ஃப்ரெண்டு, பேரு ஸ்ரீ." என்றவன் அந்த புதியவனிடம், "இல்லையா ஸ்ரீ? நீ என் ஃப்ரெண்ட் தான?" தன் மழலை மொழியில் அவனிடம் விழியை விரித்து கேட்டான்.


அவனும் மைதிலியைக் கடுப்பேற்றும் விதமாய், உதட்டு வளைவில் மர்மமாக புன்னகைத்து, விக்கியின் கேள்விக்கு ஆம் என்பதாக வேகமாக தலையசைத்தான். ஸ்ரீயின் பார்வையும் அவனது புன்னகையின் அர்த்தமும் புரிந்தவளாக தலையினை திருப்பிக்கொண்டவள், மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டி, தன் கோபத்தினை அடக்கி நின்றவள் தாடையை, பிஞ்சு கைக்கொண்டு தன் புறம் திருப்பி தன்னைப் பார்க்க வைத்தவன்,


"ஸ்ரீ, இது என்னோட செல்ல அம்மாம, ரொம்ப நல்லவங்க..." என்றவனை இடைமறித்த ஸ்ரீ,


"உங்க அம்மாவ எனக்கு ஏற்கனவே தெரியுமே விக்கி. என் தாரையை எனக்கு தெரியாம இருக்குமா?" என்று அவளை கூரிய பார்வை பார்த்தவன் பேச்சினை இடைவெட்டுவது போல்,


"அய்யோ ஸ்ரீ! உனக்கு ஒன்னுமே தெரியாது. அம்மா பேரு தாரை கிடையாது, மைதிலி." என திருத்திய சின்னவனைப் பார்த்து புன்னகைத்தவன்,


மைதிலியை வித்தியாசமாக பார்த்து, "ஓ... உங்க அம்மா பேரு மைதிலியா? அப்போ நான் சொன்ன ஆன்ட்டி, இவங்க இல்ல போல. ஆனா அவங்கள விட உங்கம்மா ரொம்ப அழகா, மெழுகு பொம்மை போல இருக்காங்க. பார்த்ததும் கடிச்சு திங்கணும் போல இருக்கு.


நான் சொன்னேன்ல தாரை ஆன்ட்டி. அவங்களுக்கு கண்ணு மட்டும்தான் அழகா இருக்கும். அவங்களும் கலரா, அழகாத்தான் இருந்தாங்க. என்ன, அவங்களுக்கு உடம்பு குச்சி குச்சியா இருக்கும். உன் அம்மா ரொம்ப அழகா இருக்காங்க. என்னால கண்ணே எடுக்க முடியலனா பாரேன் விக்கி. உன் அம்மா செம்ம கியூட்ல?" என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், சின்னவன் காணாத சமயம் கண்ணடித்தும் வைத்தான்.


அதைக் கண்டதும் மைதிலிக்கு ஆத்திரம் மேலிட, மகனை அவனிடமிருந்து பறித்தெடுத்தவள், "கண்டவங்ககிட்டலாம் அம்மாவை அறிமுகம் படுத்தி வைக்காத விக்கி. அப்புறம் அம்மாக்கு கோபம் வந்திடும்." என்று, பெஞ்சின் மேல் இருந்த கைப்பையினை கொழுவியவாறு வீடு நோக்கி விறுவிறு என்று நடந்தவளையே சிறிது நேரம் கண் இமைக்காது பார்த்து நின்றவன்,


தன் கண் பார்வையில் இருந்து அவள் மறைந்ததும், அதே மந்திரப் புன்னகை மாறாது, பேண்ட் பாக்கெட்டினுள் இரு கைகளையும் நுழைத்து குதூகலித்தவன், கண்ணில் பட்ட கல்லினை சிறுவனாட்டம் எட்டி தட்டிவிட்டு, "தாரை... தாரை...மேடம் ஓடுறாங்களாம் என் பார்வையில இருந்து... இனி எங்கேயுமே போக முடியாது உன்னால?


மூணு வருஷம் என்னை ஏமாத்தியிருக்கலாம், இனிமே உன்னோட ஒவ்வொரு அசைவும் என் கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கும். நீ ரொம்ப புத்திசாலிதான்டி. இல்லன்னா இந்த மாதிரியான இடத்தில வந்து ஒளிஞ்சிருப்பியா? ஆனா விதின்னு ஒன்னு இருக்கே!அன்னைக்கு மட்டும் ஸ்கூல் ஃபங்ஷனுக்கு நான் வரலனா உன்னை இன்னைக்கும் கண்டுபிடிச்சிருக்க முடிஞ்சிருக்காது.


அப்ப இருந்து இப்போ வரைக்கும் உன் கோபம் ஒன்னுதான்டி உனக்கு அழகு. உன்னோட இந்த கோபத்தினால தான உன் பின்னாடி சுத்தினேன். கோபம் வரப்போ அந்த முட்டைக்கண்ணை உருட்டுவ பாரு... அதுக்காகவே உன்னை கோபப்படுத்தி பார்க்கலாம்டி.ஆனா என்ன, கோபப்படுறப்போ பக்கத்தில தான் நிக்க முடியாது. ஸ்ரீ நீ ரொம்ப பாவம்டா! எப்பிடி இவளை வழிக்கு கொண்டுவர போறியோ?" தனக்காய் பரிதாபப்பட்டவன்,


'இதுக்கு மேல பொறுமை எல்லாம் சரியாகாது, களத்தில இறங்கிட வேண்டியது தான். எந்த ஆட்டமும் வேலைக்காகலன்னா அதுக்கும் ஒரு நாடகம் அரங்கேற்றிடுவோம். நாமதான் பெரிய நடிகனாச்சே! ஒரு கை பாத்துக்கலாம்.’ என்று தனக்குத்தானே தைரியம் கூறியவன், அவள் சென்று மறைந்த திசையை ஒரு தடவை பார்த்துவிட்டு, தன் காரை நோக்கி நடக்கலானான்.


மகனைத் தூக்கிக்கொண்டு வந்தவள், அந்த சிறிய கிராமத்தில் ஓரளவு குடியிருப்பு கூடிய பகுதியில் நின்று, தன்னை யாராவது கவனிக்கிறார்களா என கண்களால் அலசிவிட்டு, தன் வீட்டிற்கு பொருத்தப்பட்டிருந்த தகரப்படலைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.


அவள் குடியிருக்கும் பகுதி ஒன்றும் செல்வந்தர்கள் வாழும் பகுதி கிடையாது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினர் தான் அங்கு வசிப்பவர்கள். பத்தடிக்கு ஒரு வீடு. அதுவும் ஒரு படுக்கையறையுடன் கூடிய சிறிய வீடுகள். அடுக்கடுக்கான குடியிருப்பு என்பதால், தனியே வாழும் மைதிலிக்கு அது பாதுகாப்பாக அமைந்தது.


தன்னை தேடி யாரும் வரமாட்டார்கள் என்று தெரியும். இருந்தும் யாராவது வந்தால் இலகுவாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அந்த இடத்தினைத் தேர்ந்தெடுத்தாள். கைப்பையிலிருந்த சாவியினை எடுத்து கதவினைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவள்,


"அம்மா புடவையை மாத்திட்டு வர்றேன். குளிச்சிட்டு பாட்டி வீட்டுக்கு போகலாம்." என்றவள், வீட்டுடைக்கு தன்னை மாற்றிக்கொண்டு, "வா சின்னா குளிப்போம்" என்றாள்.


கையிலிருந்த விளையாட்டு பொருளை ஆராய்ந்தவாறே, "அம்மா இன்னும் கொஞ்ச நேரம்மா..."


"போதும்டா... வா, விடிஞ்சதில இருந்து விளையாடிட்டு தான இருக்க, குளிச்சிட்டு வந்து விளையாடிக்கோ." என்று அவனைத் தூக்கியவள் கிணற்றடியை நோக்கிச் சென்றாள்.


சின்னாவை தொட்டிக்குள் இறக்கி குளிப்பாட்டியவள், சோப்பினை தேய்க்கும் போது தான், அவனது கால் முட்டியில் வெள்ளையாக ஒரு களிம்பு பூசியிருப்பதைக் கண்டாள்.


அதை பார்த்ததும் பயந்து போய், "என்னடா இது? எதுக்கு இது பூசின, யாரு பூசி விட்டாங்க?"


அவளது அக்கறை பேச்சில் உதட்டைப் பிதுக்கி, "கிரவுண்ட்ல அண்ணாக்கள் பந்து விளையாடினாங்களா? நானும் ஸ்ரீயும் ஓரமா நின்று கண்ணாம்பூச்சி விளையாடினோம். ஸ்ரீ கண்ணை கட்டி என்னை கண்டுபிடிக்க சொல்லிட்டு நான் ஒளிய போனேனா... அவங்க பந்து என்னை தட்டி விட்டுடிச்சு, கீழே விழுந்து அடிபட்டுட்டு." என்றவனது முகம் சுருங்க,


"ஓ... சின்னா கீழே விழுந்திட்டானா? சரி விடுங்க, நாளைக்கு போய் அந்த பந்துக்கு அடிச்சிட்டு வந்திடலாம். ஆமா, இது என்ன பூசியிருக்கு? இதை யாரு பூசி விட்டாங்க?"


"ஸ்ரீ தான்ம்மா பூசி விட்டான். நான் கீழே விழுந்ததும் வலிச்சிச்சா, அழுதுட்டேன். அழக்கூடாது, வளர முன்னாடியே மாறிடும்னு சொல்லி ஸ்ரீ தான்மா பூசி விட்டான். நான் அழுததும். ஸ்ரீயும் அழுதான் தெரியுமா? ஸ்ரீ ரொம்ப நல்ல பையன்லம்மா..." என்றவனது கேள்வியில் முழித்தவள்,


"சரி சின்னா சீக்கிரம் குளி, பாட்டி வீட்டுக்கு போகணும்ல?" என்றாள் கதையை மாத்தி.


"ஆமா, பாட்டி வீட்டுக்கு போகணும்." என்று அவனும் கூற, அவனைக் குளிப்பாட்டி வேறு உடையினை அணிவித்து அலங்கரித்தவள்,


"மண்ல விளையாடக்கூடாது, அம்மாவும் முகத்தை அலசிட்டு இப்போ வந்திடுறேன்." என்றவாறு கிணற்றடிக்குச் சென்று, வாளிக்குள் தண்ணீரை நிரப்பியவள் பிம்பமானது நீரில் தெரிய,


தனது விம்பத்தையே உற்றுப் பார்த்தவள் நினைவோ, ஏனோ அவன் சொன்ன மெழுகு பொம்மை நினைவு வர, தன்னையும் அறியாமல் தன் கன்னங்களை ஆராய்ந்தாள்.


'அப்போ முன்னாடி இருந்ததைப் போல இல்லையா நான்? மெழுகு பொம்மை போலவா இருக்கேன்? சின்னா பிறந்ததும் தசை கொஞ்சம் வச்சிருக்கு தான். அதுக்காக ரொம்பல்லாம் குண்டு கிடையாது." என தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்,


‘என்ன சிந்தனை இது? அவன் யாரு என்னை வர்ணிக்க? அவன் பேச்சுக்கு நீ எப்பிடி மயங்கலாம்? கண்டவன் சொல்லை எல்லாம் பெருசா எடுத்துட்டு... அப்போ மட்டுமில்ல, எப்போவுமே உனக்கு அவன் வேண்டாதவன் தான். உன்னோட வாழ்க்கையை இந்த மாதிரி ஆனதுக்கு காரணமே அவன் தானே, இன்னுமா புத்தி வரல?இன்னைக்கு உனக்குன்னு யாருமில்லாம அனாதையா நிக்குறேன்னா காரணம் யாரு? வேண்டாம் மைதிலி, பழசு எதுவுமே உனக்கு வேண்டாம்.


உன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இப்போ சின்னாவ நல்லபடியா வளர்க்கணும், அதைத்தான் நீ யோசிக்கணும்.' என அவள் மனசாட்சி அவளை வேறு எதையும் சிந்திக்கவிடாது தடுக்க, அதுதான் அவளுக்கும் சரி எனப்பட்டது.


தண்ணீரில் தெரிந்த தன் பிம்பத்தைக் கலைத்தவள், வேகவேகமாக முகத்தினை அலசிவிட்டு வந்தாள்.


"வா சின்னா, பாட்டி உன்னை காணலணு தேடப் போறாங்க." என அவனைத் தூக்கிக்கொண்டு, வீட்டு வேலியின் ஓரமிருந்த சிறிய ஓட்டை வழியே அடுத்த வீட்டுக்குச் சென்றாள்.


"பாட்டி... பாட்டி!" என்று மைதிலி அழைப்பைக் கேட்டதும்,


"வா மைதிலி, நான் உள்ளே தான் இருக்கேன்." என்று ஒரு வயதான பெண்மணியின் குரல் அடுப்பறையில் இருந்து வந்தது.


"உள்ள தான் இருக்கிங்களா?" என்றவள்,


சின்னாவை கீழே இறக்கி விட்டு, "இரவுக்கு என்ன சமையல் பாட்டி?" என்றாள்.


"புதுசா என்ன செய்யப்போறேன்? வழக்கம் போல இந்த பல்லு போன கிழவிக்கு இடியாப்பம் தான்." என்று தரையில் பலகை போட்டு அமர்ந்து இடியாப்பத்தைப் பிழிய ஆரம்பித்தார்.


"இங்க தாங்க பாட்டி, நான் பிழிஞ்சு தர்றேன்." என்று தானும் ஒரு பலகையினை அவர் முன் போட்டு அமர்ந்து, அவரிடமிருந்து பிடுங்கி பிழிபவளை ரசித்தார்.


"முகம் கொஞ்சம் செந்தளிப்பா இருக்கு, என்ன விசேஷம் மைதிலி?" என்றார்.


இடியப்பத்தைத் தட்டில் பிழிந்தவாறே, "என்ன பாட்டி? ஏதோ பொடி வச்சு பேசுறது போல இருக்கே? சுத்தி வளைச்சு பேசாம நேர விஷயத்துக்கு வாங்க?" என்றாள் சிரித்தவாறு.


"அது, யாராச்சும் உன்னை பார்க்க வந்தாங்களாம்மா?" என்றார்.


"என்னை யாரு பாட்டி வந்து பாக்க போறாங்க?" என்று மறு கேள்வியாக,


"என்னது! அப்போ சின்னா அப்பா வரலையா?" என்றார் சின்னம்மாள் பாட்டி சந்தேகமாக.


அவரது கேள்வியில் வெடுக்கென நிமிர்ந்தவள், "சின்னா அப்பாவா? யாரை பாட்டி சின்னா அப்பானு சொல்லுறீங்க? நீங்க பேசுறது சுத்தமா எனக்கு புரியல. உங்களுக்கு யாரு சொன்னது, சின்னா அப்பா என்னை வந்து பார்த்தாருன்னு?"


"எனக்கு என்னம்மா தெரியும்? யாரோ ஒரு தம்பி காலையில கார்ல வந்தாரு. நீதான் ஸ்கூல் போயிட்டியே... சின்னா கூட இங்கதான் இருந்தான். அவனுக்கு கூட அவர ஏற்கனவே தெரியும் போலயே?" என்றவாறு, “சின்னா!” என அழைத்து,


"காலையில கார்ல நம்ம வீட்டுக்கு வந்த தம்பி பெயர் என்னப்பா?" என்றார். அவன் பெயர் நினைவு வராததனால் சின்னவனிடம்.


பாட்டி அப்படி கேட்டதில் புரியாது முழித்தவன், "ஸ்ரீயா பாட்டி?" என்றான்.


"அவரே தான், இந்தக் காலத்து பெயர் எல்லாம் என்ன பேரோ? ஒரு எழுத்தோட முடிஞ்சு போயிடுது? அந்த தம்பி தான்மா வந்தாரு. சின்னா கூட அவரை பார்த்ததும், நல்லா பேசினானே? எப்பிடி தெரியும்னு கேட்டதுக்கு, அவரு தன்னோட நண்பன்னு சொன்னான். நீ தன்னோட சம்சாரம்ன்னும் சின்னா அப்பா தான் தான்னும் சொன்னாரு." என்றார்.


அவர் பேச்சினைக் கேட்டதும் கோபத்தில் முகம் சிவந்தாலும், அவரிடம் அதை காட்ட விரும்பாதவள் இடியாப்பம் பிழிவது போல் தலையினைக் குனிந்து தன் வேலையில் கவனமானாள்.


அதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சின்னா, "பாட்டி!" என்று ஓடி வந்து அவர் மடியில் அமர்ந்து,


"அப்போ ஸ்ரீ தான் என்னோட அப்பாவா பாட்டி? அம்மா சொன்னாங்களே, எனக்கு அப்பான்னு யாருமில்ல, எல்லாமே அவங்க தான்னு..."


ஏற்கனவே வெதும்பிப் போய் இருந்தவள், அவனை சின்னா அப்பா என்று கூறியதைப் பொறுக்க முடியாதவளாக, "சின்னா இது என்ன பழக்கம்? பெரியவங்க பேசுறப்ப இப்பிடித்தான் பேசுவியா? உனக்கு அப்பா, அம்மா எல்லாமே நான் மட்டுந்தான். கண்டவன் எல்லாம் உனக்கு அப்பா கிடையாது. பெரியவங்க பேசிட்டிருக்கிறப்ப வாய் பாக்காம, வெளிய போ." என்று அவள் போட்ட சத்தத்தில், அழவே ஆரம்பித்து விட்டான் சின்னவன்.


"அய்யய்யோ... இல்லடா, நீ பாட்டிக்கிட்ட வாடா தங்கம்!" என அழைத்து இறுக அணைத்துக் கொண்ட பெரியவர்,


"நீ யார்கிட்ட பேசுற எங்கிறத தெரிஞ்சு தான் பேசுறியா மைதிலி? ரெண்டு வயசுப் பையன்கிட்ட போய் உன் கோபத்தை காட்டுற?" என்று இம்முறை பாட்டி கோபப்பட,


"யாருக்கு பாட்டி ரெண்டு வயசு? ரெண்டு வயது பையன் போலவா நடந்துக்கிறான்? உருவம் மட்டும் தான் ரெண்டு வயது பையனைப் போல, மத்தது எல்லாமே அளவுக்கு அதிகமா இருக்கு." என்றவள்,


"அவனை விடுங்க பாட்டி, வெளிய போய் விளையாடட்டும்." என்றவளை முறைத்தவர்,


"ராஜா, நீங்க போய் வெளிய விளையாடுங்க. பாட்டி, அம்மாவுக்கு அடி போட்டுட்டு சின்னாக்கூட வந்து விளையாடுறேன்."


"ஹ்ம்ம்..." என்று தலையசைத்தவனோ தாயிடம், "உன்கூட டூ." என்றுவிட்டு ஓடிவிட்டான். இதுதான் அவளது செல்ல மகன். அப்படித்தான் அவனை மைதிலி வளர்க்கிறாள்.


அவனது தந்தை எந்தளவு நம்பிக்கை துரோகியோ, அவனுக்கு எதிராகவே மகனை நல்ல விதமாக வளர்க்க வேண்டும் என்ற வெறி அவளுக்கு. அதற்காக ஒன்றும் சின்னாவிடம் கொடூரமாக அவள் நடந்ததில்லை. அன்பாகவே ஒவ்வொன்றும் சொல்லித் தவருவாள். சொல்லப்போனால் இன்றுதான் அவனிடம் உரக்கவே பேசுகிறாள்.


இது அந்த ஸ்ரீ, சின்னாவின் அப்பாதான் என்று இங்கு அவனை அறிமுகப்படுத்தியதால் வந்த கோபம். சின்னாவும் இந்த வயதினிலே தாயின் குணமறிந்து நடந்து கொள்வான். அவனது நடவடிக்கைகளும் பேச்சுக்களும், ரெண்டு வயதை இப்போது தான் கடந்தது என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். அந்தளவு விபரமானவன்.


அவனைப் பார்த்து சிரித்த பெரியவர், "பாரு, அவன் எடுத்துச் சொன்னா கேட்டுப்பான், எதுக்கு அவன் கூட கத்தின? பாவம், புள்ள முகம் வாடி சோர்ந்து போச்சு."


"வாடட்டும் பாட்டி, அப்போ தான் பெரியவங்க பேச்சில இனி தலையிட மாட்டான். இங்க பாருங்க பாட்டி, இங்க யாராச்சும் பொண்டாட்டி, புள்ளன்னு வந்தாங்கன்னா தயவு செய்து நம்பாதிங்க. இன்னைக்கு இவன் வருவான், நாளைக்கு இன்னொருத்தன் வருவான், வர்றவங்க எல்லாரும் என் புருஷனுங்களா?


என் வாழ்க்கையில அப்பிடின்னே யாருமே இல்ல பாட்டி. நீங்களும் அவங்கள உள்ள கூப்பிட்டு, கறி சோறு போட்டு விருந்து வைக்காதிங்க." என்றவள், "இடியாப்பம் பிழிஞ்சு முடிஞ்சிது. நானும் வீட்டில இரவு சமையல் செய்யணும். சின்னா என் மேல கோபத்தில இருப்பான். வீட்டில இன்னைக்கு சாப்பிட மாட்டான். இடியாப்பமும் சொதியும் பிசைஞ்சு ஊட்டி விடுங்க. இங்கவே தூங்கினான்னா, நானே வந்து தூக்கிட்டு போயிடுறேன்." என்றவாறு எழுந்தவள்,


"சின்னா!" என்று செடியின் இலைகளைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்த சின்னாவினை அழைத்தாள்.


குரல் கேட்டும் திரும்பி பார்க்காமல் நின்ற மகனின் கோபம், அவனது தந்தையை அவளுக்கு நினைவுபடுத்த, 'அப்பன் புத்தி எங்க போகும்?' என நினைத்தவளுக்கு அவன் செயல் புன்னகையினை வர வைக்காமலில்லை.


"பாட்டி நாங்க ரொம்ப கோபமா இருக்கோம். யார் கூடவும் பேசமாட்டோம்." என, மகன் தனக்கு சொல்ல வேண்டிய டயலாக்கை, பாட்டியிடம் சொல்வதைப் போல் சத்தமாக சொன்னவள்,


அவனை ஓரப் பார்வை பார்த்தவாறே, "நான் வர்றேன் பாட்டி, பேரனை பாத்துக்கோங்க." என்றாள்.


"சரிம்மா நீ போ, என் ராஜாவை பாட்டி பாத்துப்பேன்." என்று அவளை அனுப்பி வைத்தார்.




தொடரும்...