• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 30

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna

பகுதி 30




காலையிலேயே தன் அறையில் முடங்கியவளுக்கு குற்ற உணவர்வாகவே இருந்தது. வழமை போல தன் குடும்பத்தினரோடு பேசுபவள், எப்போதும் போல் அவர்கள் நலனை விசாரித்துவிட்டு, ஒரு சில கதைகள் பேசிவிட்டே அழைப்பினைத் துண்டிப்பாள். இன்றும் வீட்டினரோடு காலையிலேயே பேச வேண்டும் எனத்தோன்ற,

விஜயாவின் சம்மதத்தோடு வீட்டு எண்ணிற்கு அழைத்தவள், அவர்களோடு கதை பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க போகும் சமயம், "மைதிலிம்மா!" என அழைத்த இந்திரா,

"அங்கே நீ நல்லாத்தானடா இருக்க? உனக்கு எந்த கஷ்டமும் இல்லையே!" என்றார் கவலையாய்.

"ஏன்ம்மா அப்படி கேக்கிற? நான்தான் உனக்கு எல்லாமே சொல்லியிருக்கேனே! ரொம்ப நல்லாவே இருக்கேன்ம்மா. என்னை நினைச்சு நீ கவலைப்படுறியா?" என்க,

"அப்பிடில்லாம் இல்லடா, ஆனா நீ முன்னையது போல இல்லையோனு தோனுது." எனறார் இந்திரா.

"ஏம்மா அப்படி சொல்லுற? அப்படி என்ன வித்தியாசத்த கண்ட?" என்றாள்.

"இல்லடா! முன்னை எப்போ நான் போன் பண்ணாலும் அத்தானை பற்றியே விசாரிப்ப. அவர்கிட்ட என்னைபத்தி சொன்னீங்களா என்று, ஆயிரம் தடவை கேட்டு தொல்லை பண்ணுவ. இப்போல்லாம் நீ ரஞ்சித் பத்தியே கேக்கிறதில்லையே, ஏம்மா?"

அப்போது தான் ரஞ்சித்தைப் பற்றி கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தாயிடம் அவள் கேளாதது நினைவில் வந்தது. அவ்வளவு ஏன்? அவனைப் பற்றி தாயிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு இருக்கவில்லை. ஸ்ரீ தன்னை நெருங்கும் சமயத்தில், தடுமாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாத்திரமே, அவனை வலுக்கட்டாயமாக தனக்குள் கொண்டு வருபவள், அதன்பின் அவன் நினைவையே மறந்து விடுவாள்.

அன்னையிடம் என்ன பதில் சொல்வதென தெரியாமல், "அது அம்மா..." என்று மைதிலி தடுமாற,

அவள் தடுமாற்றத்தைக் கண்டவர், "ஒன்னு கேக்கவாடா?" என இந்திரா சங்கடமாக மகளிடம் வினவ,

"என்னம்மா இப்படி கேக்கிற? நீ இந்த மாதிரி கேக்கிறது எனக்கு ஒரு மாதிரியா இருக்கும்மா. உனக்கு என்கிட்ட கேக்க இல்லாத உரிமையா? என்னனு கேளும்மா!"

"அத்தை வந்து அப்படி கத்திட்டு போனதினால, இத்தனை வருஷம் ஆசைப்பட்ட உன் அத்தானே வேண்டாம்னு மனச மாத்திக்கிட்டியாடா?" என இந்திரா மகளது மாற்றத்திற்கு காரணம் அதுவாக இருக்குமோ என நினைத்துக் கேட்டார்.

"அது... அப்... அப்படி எதுவுமே இல்லம்மா! நீ எதுக்கு கண்டதெல்லாம் போட்டு உன்னை குழப்பிக்கிற? உண்மைய சொல்லப்போனால், எனக்கு இப்போ எந்த எண்ணமுமே இல்ல. இப்போ எனக்கிருக்கிற நினைவெல்லாம் கனகரெட்ணம்கிட்ட இருந்து நம்ம குடும்பம் மீளணும், அவ்ளோ தான். மீதிய வந்து அப்போதிருக்கும் சூழ்நிலை எப்படியோ, அதுக்கேற்றது போல பாத்துக்கலாம்." என்றவள்,

பின் சங்கடமாகவே, "அத்தான் போன் பண்ணாராம்மா? அதுதான் நீ இப்போ அவரை பத்தி பேச்சு எடுத்தியா?" என்றாள் இம்முறை ஆர்வமாக.

"ஆமாடா, நேத்து போன் பண்ணாரு. எல்லாரும் எப்படி இருக்கீங்க? மைதிலி எப்படி இருக்கான்னு கேட்டாரு. நான் உண்மை எதுவோ அதை சொன்னேன்மா. அவரும் சாதாரணமா என் மைதிலி தப்பானவ இல்லனு எனக்கு தெரியும். இத அம்மாவே எனக்கு வேற மாதிரி சொன்னாங்க. அவ ஊரைவிட்டு யார் கூடவோ ஓடிட்டான்னு. இத்தனை வருஷம் என்னை நினைச்சிட்டு இருந்த என் மைதிலிய பத்தி எனக்கு தெரியாதா? யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டாரும்மா.

உன் போன் நம்பரும் கேட்டாரு, நேரம் கிடைக்குறப்போ கூப்பிடுவாராம். உன்னை தப்பா நினைப்பேன்னு கவலைப்படாமல் இருக்க சொன்னாருடா. அம்மா பேச்சை பெருசா எடுக்காதிங்கன்னு வச்சுட்டாரும்மா. இப்போ கொஞ்ச காலமாவே அவரை பற்றி கேக்கிறதில்லை. நானும் மாப்பிள்ளை இதுவரை போன் பண்ணாததனால, அவர் பேச்சை எடுத்து உன்னையும் கஷ்டப்படுத்த விரும்பாம அவரை பத்தி பேசுறது இல்ல. நீயா கேக்கும் போது சொல்லலாம்னு விட்டுட்டேன்.

ஆனா மாப்பிள்ளை நேத்து போன் பண்ண விஷயத்தை, அவரை பற்றி நீ கேட்டால் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா நீ அவரை பத்தி இன்னைக்கும் கேக்கல. குடும்ப சூழல்னால என் பொண்ணு தன்னோட ஆசையை தூக்கி எறிஞ்சிட்டு, தனியா இருந்து கஷ்டப்படுறீயோனு தெரிஞ்சுக்க தான்மா கேட்டேன். அப்படி எதுவும் இல்லையேடா? எங்களுக்காக நீ தியாகம் பண்றதா நினைச்சு, மாப்பிள்ளையை வெறுத்திடலையே?" என்றார் கவலையாக.

"அப்படி எதுவுமே இல்லம்மா. நீயும் குழம்பி என்னையும் குழப்பாத. சரிம்மா, கொஞ்ச வேலை இருக்கு அப்புறமா பேசுவோம்." என்றவள் அவசரமாக போனை வைத்துவிட்டு, விஜயாவின் வேலைகள் முடிந்தவள், மதிய சமையலைத் தனக்கு பதிலாக தெய்வானையை செய்ய சொன்னாள்.

தெய்வானை விஜயாவினைப் பார்க்க, விஜயாவிற்கும் மைதிலி தாயுடன் மைதிலி பேசியதன் பின்னர், குழம்பமாகவே சுற்றுவதைக் கண்டதனால் போகட்டும் என்பதாக சைகை செய்ய, தெய்வானையும் விட்டு விட்டாள்.

தான் நடந்து கொள்ளும் முறையில் அத்தனை மாற்றங்களா? எங்கோ இருக்கும் பெற்றவளே கேட்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறேன். எப்படி அத்தானை மறந்தேன்? ஒரு நாளாவது அவரை கேட்கவேண்டும் என்று தோன்றாததற்கு காரணம் என்ன? பாவம், என்னை எவ்வளவு உண்மையாக விரும்பியிருந்தால், அவனை பெற்றவளே என்னை தவறாக கூறியும், அவர் பேச்சை நம்பாது என்னை மட்டுமே நம்பியிருக்கிறார்.

உண்மையில் என் அத்தானுக்கு நான் தகுதியானவளா? அவர் அளவிற்கு என்னால் அவரை நேசிக்க முடியுமா? தாயை எதிர்த்து என்னை ஏற்றுக்கொள்கிறேன் என கூறும் அளவிற்கு, அவர் அன்பு என்மேல் இருக்கும் போது, என்னால் எப்படி அவர் இருந்த மனதில் இன்னொருவனை வைத்து சஞ்சலப்பட முடிந்தது?

நான் அவருக்கு தகுதியானவளும் இல்லை. உண்மையானவளும் இல்லை என தன்னைத் தானே திட்டிக்கொண்டவள், அவனிடம் இப்போதே மன்னிப்பு வேண்டவேண்டும் என தோன்ற, போன் செய்து தன் மன்னிப்பை கேட்போமா என நினைத்தவள்,

வேண்டாம், அவர் இந்த நேரம் என்ன வேலையில் இருப்பாரோ? அதுதான் நேரம் கிடைக்கும் போது அவராகவே கூப்பிடுகிறேன் என்றாரே. அப்போதே மன்னிப்பையும் கேட்டுக்கொள்ளலாம் என நினைத்தவளுக்கு, அவனை உடனே பார்த்தாக வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்தே வந்தது.

தன் உடைகள் அடுக்கி வைத்திருந்த அலமாரியினை திறந்தவள், அதிலிருந்த உடைகளை விலக்கி, அடியில் இருந்த புகைப்படங்களை எடுத்தாள். முதலில் இருந்த தந்தையின் படத்தினைக் கண்டு கண்களில் நீர் துளிர்க்க, தன் இதழை அதில் ஒற்றி மீட்டவள்,

"நீங்க மட்டும் உயிரோடு இருந்திருந்தா எனக்கு இந்த கஷ்டம் வந்திருக்காதுப்பா." என்று அதை இருந்த இடத்தினில் வைத்துவிட்டு, தன் குடும்ப படத்தையும் பார்த்தவள், அருகில் அவர்கள் இல்லாத ஏக்கத்தில் அந்த படத்தினை இறுக அணைத்தவள், அதையும் ஓரமாக வைத்தாள்.

இறுதியாக ரஞ்சித்தின் படத்தை எடுத்துக்கொண்டு தன் கட்டில் சென்று அமர்ந்தவள், அவன் படத்தையே கண்ணிமையாது பார்த்தாள். ஆறடி உயரத்தில் சிவப்புமல்லாது, வெள்ளையும் அல்லாத இடைப்பட்ட பிங்க் நிறத்தவன். புகைத்தலே அறிந்திடாத பெண்களைப் போன்று சற்று பருத்த சிவந்த உதடுகள். தென்றல் கூட வருடத்துடிக்கும் கார் வண்ண முடியழகன். நீல நிற உடையும் கீழே கறுப்பு நிற பேன்ட்டினை அணிந்திருந்தவன், ஒற்றை காலினை முன்னே வைத்து, பேன்ட் பாக்கெட்டினுள் விரல்களைத் திணித்திருந்தான்.

இந்த புகைப்படம் அவள் அத்தை வீட்டிற்கு போகும் போது, யாருக்கும் தெரியாமல் தாவணிக்குள் மறைத்து கடத்திட்டு வருவதற்குள் அவள் பட்ட பாடு, அவளுக்குத்தான் தெரியும். அன்றைய நினைவில் கண்கள் கண்ணீர் வடித்தது. அந்த புகைப்படத்தையே பார்த்திருந்தவள் கண்ணீரும் அந்த புகைப்படத்தைத் தழுவியிருக்க, அதை துடைத்தெடுத்தவள் தன் கண்களையும் துடைத்தெடுக்கும் போது,

"ஓய்!" என்று பின்னால் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினாள்.

ஸ்ரீதான் அது!

அவனைக் கண்டதும் பயந்தவளாய், எழுந்து இரண்டடி பின்னோக்கி நகர்ந்து நின்றவள், "நீ... நீ... எப்படி... இது என்னோட அறை." என முதலில் தடுமாறியவள் பின் தெளிந்தவளாய்,

"ஒருத்தங்க அறைக்குள்ள வரப்ப அனுமதி வாங்கிட்டு வரணும் என்கிறது கூடவா தெரியாது?" என முகத்தில் அடித்தது போல் கேட்டாள் மைதிலி.

அவனோ அவள் பேச்சைக் கருத்தில் வாங்குவதைப் போல் இல்லை. மாறாக அவளது கையிலிருந்த புகைப்படத்தையே ஆராய்ந்தது.

"ஆமா இது யாரு?" என்றவாறு அவள் கையிலிருந்த புகைப்படத்தை வாங்குவதற்காக, அவளருகில் சென்றவனது நோக்கம் புரிந்தவளாய் படத்தினை பின்னே இழுத்துக்கொண்டாள்.

"அது யாராக இருந்தா உனக்கென்ன? முதல்ல வெளிய போ." ஏற்கனவே இருந்த குழப்பத்தில் இவனது நடவடிக்கைகளும் சேர்ந்து அவளது கோபத்தை அதிகமாக்கியது.

"ஓ... இந்த போட்டோல இருக்கிறவன் தான் உன் அத்தானா? அதனால தான் அவன போட்டோவை பார்த்து, உன் மனசு உருகி கண்ணுல வழியுதோ? நான் வந்து அதை கெடுத்துட்டேன்னு வந்த டென்ஷன் போல? ஆமா, இந்த மாதிரி நீ உருகுற அளவுக்கு அவன்கிட்ட அப்படி என்ன இருக்குனு நான் பார்த்தே ஆகணும், குடு." என்று அவளது நிலைமை புரியாது முன்னேறியவனை,

எரிப்பது போல் பார்த்தவள், "அவரை பற்றி பேசவோ அவரை தொடவோ உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. அவர் குணத்தில ஒரு வீதம் கூட உன்னில் இல்ல. இங்க பாரு, உங்கூட வாதம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல. முதல்ல நீ வெளிய போ! இல்லனா நான் சத்தம் போட்டு, எல்லாரையும் கூப்பிட்டுடுவேன். அப்புறம் அசிங்கம் உனக்குத்தான்." என மீண்டும் கோபமாக சொன்னவள் பேச்சில் நக்கலாக நகைத்தவன்,

"இது நல்லாயிருக்கே! என்ன ரொம்ப சவுண்டு விடுற? இதுக்கெல்லாம் நான் பயந்திடுவேன்னு நினைச்சியா? அடிக்கடி ஒன்ன நீ மறக்கிறீயோனு தோனுது. நீ ஒன்னும் இந்த வீட்டு எஜமானி கிடையாது. என் வீடு! நான் எங்க வேணாலும் வருவேன், போவேன். என்னை வெளிய போன்னு சொல்லுற உரிமை உனக்கு மட்டுமில்லை, யாருக்குமே கிடையாது. முக்கியமா வேலைக்கு வந்த உனக்கு இல்லை." என்றவன்,

"அப்புறம் என்ன சொன்ன? உன் அத்தான் உலகத்திலயே இல்லாத உத்தமபுத்திரன்..." என இழுத்தவன் தோரணையின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. யாருமே இந்த உலகத்தில நல்லவனும் இல்ல, கெட்டவனும் இல்ல. அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா, அடுத்தவன் பொண்டாட்டிய கடத்திட்டு வந்தாலும், அவ சம்மதமில்லாம தொடக்கூடாதுன்னு நினைச்ச இராவணன் முழுமையா கெட்டவனும் இல்ல. தீக்குளிச்சு, தான் பரிசுத்தமானவனு சீதை நிருபிச்சதுக்கு அப்புறமும், யாரோ ரெண்டு பேர் தப்பா சொல்லிட்டாங்க என்டதுக்காக, சீதையை பிரிஞ்சு வாழ்ந்த இராமனும் நல்லவன் இல்ல.

அவனவனுக்கு அவனோட இடத்தில இருந்து பாக்குறப்போ அது சரினு தான் தோனும். என்ன, உன் அத்தானுக்கு சந்தர்ப்பம் அமையல. அதான் உனக்கு நல்லவனா தெரியுறான். எனக்கு எல்லாமே சாதகமா அமைஞ்சிச்சு. அதனால நான் கெட்டவனா தெரியுறேன். உன் அத்தானுக்கு வறுமை, குடும்ப சூழல் இப்படி எல்லாமே அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரல. அவனுக்கு என்னை மாதிரி வாய்ப்பு கிடைச்சுதுன்னா, நிச்சயம் அவனும் என்னை போல உலகத்தில உள்ள அனைத்து கெட்ட செயலையும் செய்வான்." என்று தன் செயலை நியாயப்படுத்தி பேசியவனை அருவருப்பாக பார்த்தாள்.

"ச்சீ... உன்கூட பழகின பாவத்துக்கு என் அத்தானையும் உன் லிஸ்ட்ல சேர்க்கிறியா? எல்லாரையும் உன்னை மாதிரி பொம்பள பின்னாடி ஈனு பல்ல இளிச்சிட்டு அலையிறவங்கனு நினைச்சுட்டல்ல. இல்லைனா உன்னைப் போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொண்ணுங்களோட, செக்ஸ் பைத்தியம் பிடிச்சு திரியிற பொம்பள பொறுக்கினு தான் நினைச்சியா?

மனுஷங்கனா எப்படி வாழணும் என்று ஒரு கட்டுப்பாடு வேணும். அதனால தான் மனுஷங்களுக்கு ஆறு அறிவு கடவுள் குடுத்திருக்காரு. இல்லனா எல்லாரையும் மிருகங்களாவே படைச்சிருப்பாரு. என் அத்தானை பற்றி உனக்கு என்னடா தெரியும்? அவர் பெயர் சொல்லவே உனக்கு தகுதி கிடையாது. அவர் காலை நீ கழுவினாக்கூட உன் அசிங்கங்கள் போகாது. அவரை பத்தி எங்கிட்டயே தப்பா பேசுறீயா? என்னைத் தவிர அவர் எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாரு, தெரியுமா? அது சரி, உனக்கெங்க இது தெரியப்போகுது?" என இளக்காரமாக இதழைச் சுளித்து சொன்னவள்,

"பெண்களை போதை பொருளா நினைச்சு, அவங்களுக்கு விருப்பமே இல்லனாலும் உன்னோட இச்சைக்காக, நிர்பந்தப்படுத்தி உன்னோட ஆசையை தீர்க்கிறவனுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. நீயெல்லாம் ஒரு மிருகம்." என்று, தன்னை அவன் கட்டாயப்படுத்தி மூன்று முறை தொட்டதை இப்போது குத்திக்காட்டியவள் ஸ்ரீ, ரஞ்சித்தை தன்னோடு ஒப்பிட்டு கேவலமாக பேசியதில் கொந்தளித்தே விட்டாள் மைதிலி.

அவளது பேச்சினில் கோபமே வந்தாலும் அதை வெளியே காண்பிக்காமல், "ம்... ஆமா... ஆமா! நான் கெட்டவன் தான், பொம்பள பொறுக்கிதான், நானே ஒத்துக்கிறேன். நீ சொன்னது பூராவுமே நூறு வீதம் உண்மை. அதை இல்லனு உன்கிட்ட நான் வாதாடவும் மாட்டேன். ஏன்னா உனக்கு எல்லாமே தெரியும் என்கிறது எனக்கும் நல்லாவே தெரியும். அதோட உன்கிட்ட மற்றவங்கள போல, வேஷம் போட்டு நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்ல.

அப்பிடி நடிக்கவேண்டிய அளவுக்கு நீ எனக்கு முக்கியமானவளும் கிடையாது. நீ என்னை கண்டபடி கேவலமா பேசினதுக்கு நான் அசிங்கபட்டிடுவேன்னோ, கோபப்படுவேன்னோ நினைச்சு நீ பேசியிருந்தா, அதுவும் உன் முட்டாள்தனம்னு தான் நான் சொல்லுவேன். ஏன்னா எத்தனையோ விஷயங்களை கடந்து போய் தான் என்னோட பல வெற்றிகளைக் கண்டிருக்கேன், அதில் உன் பேச்சும் ஒன்று. ஆனா இதுக்கெல்லாம் எப்பவோ ஒரு நாள் பதில் தராமலும் விட மாட்டேன். அதையும் மனசில வச்சுக்கோ." என்றவன்,

கதவை நோக்கி விறுவிறுவென சென்று திரும்பி வந்தவன், "கூடிய சீக்கிரம் உண்மை எதுவென்று புரிஞ்சுப்ப. இப்போ என்னை அசிங்கப்படுத்துறதா நினைச்சு பேசுற பாரு... அத நினைச்சு ஒருநாள் வருத்தப்படுவ. அப்போ நான் சொன்ன வார்த்தை வேத வார்த்தைனு தெரியும்." என்றவன் சிறு இடைவெளி தந்து,

"என்னை தப்பானவன்னு பேசுறியே! நீ எந்தளவுக்கு உன் அத்தானுக்கு உண்மையா இருக்கனு உன்னால இப்போ என் முன்னாடி சொல்ல முடியுமா?" என்றான் சாவால் விடும் பாணியில்.

இத்தனை நேரமும் நெஞ்சை நிமிர்த்தி அவன் வார்த்தைகளை எதிர்கொண்டவள், இறுதியாக அவன் கேட்ட வார்த்தையில் சற்று குறுகித்தான் போனாள். இருந்தும் அதை வெளியே காட்டாமல்,

‘உனக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை’ என்பதைப் போல கைகளை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அவனைப் பார்ப்பதை விடுத்து திரும்பி நின்று கொண்டாள். அவளது செயலில் இதழில் ஒரு கேலி நகை பூத்தவாறு,

"பார்க்கத்தானே போகிறேன், எத்தனை நாட்களுக்கு இந்த நாடகம்னு. ஆனால் ஒன்னு, இத்தனைக்கும் ஒரு நாள் நல்லா அனுபவிப்ப. அப்போ என்னை முகத்தைப் பார்க்க முடியாம கூனிப்போய் நின்னே ஆவ..." என்று மீண்டும் கூறிவிட்டு விறுவிறுவென நடந்தவன் கருத்தில் எதுவுமே பதியவில்லை.



தொடரும்...