• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 31

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna

பகுதி 31




அவன் சாதாரணமாக இருந்திருந்தால் ஒருவேளை கவனித்திருப்பானோ என்னவோ, மைதிலியின் உதாசீன பேச்சுக்களுக்கு உள்ளாகிய ஸ்ரீயினால், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கண்டுகொள்ள முடியவில்லை.

அவன் கவனித்தானோ இல்லையோ, ஆனால் மைதிலி அறையிலிருந்து வெளியே வந்தவனை தெய்வானையும் விஜயாவும் ஸ்ரீயினை கண்டுவிட்டார்கள்.

"இவன் எப்படி மைதிலி அறையில?" அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.

ஆம், வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது உண்மைதான். இன்று சிறுவர் ஆசிரமத்தில் ஒரு விழா நடக்கவிருப்பதால், அவனும் மாதம் ஒரு தொகையை ஆசிரமத்திற்கு வழங்குவதனால், அவனையும் அந்த விழாவினில் சிறப்பு விருந்தினராக கௌரவிக்க அழைத்திருந்தனர். முக்கியமான வேலைகள் இருந்தாலும் அதற்கு மறுப்பு கூற முடியவில்லை அவனால்.

மாலை மூன்று மணியளவில் தான் விழா ஆரம்பமாகின்றது. ஆனால் ஆசிரமம் சற்று தொலைவு என்பதனால், இப்போதே தயாராகினால் தான் நேரத்திற்கு போய் சேரமுடியும். வீட்டிற்கு வந்தவன் வெளியே யாரையும் காணவில்லை என்றதும், கிச்சனை எட்டிப்பார்த்தான். அங்கு விஜயாவும் தெய்வானையுமே எதுவோ தீவிரமாக பேசியவாறு சமையலில் கவனத்தோடு இருக்க, அவர்கள் பேச்சில் மைதிலியைப் பற்றிய பேச்சு அடிபடவே, அவர்கள் பேச்சில் கவனத்தைத் திருப்பினான்.

"என்னமோ தெரியல தெய்வானை, இவ போன் பேசினா துள்ளிட்டு திரியிறவ, இன்னைக்கு போன் பேசும் போதே குழம்ப ஆரம்பிச்சிட்டா. அவங்க அம்மா என்னதான் பேசினாங்கனு தெரியல. ஆனா இவ பேசும் போது கண்டபடி தடுமாற ஆரம்பிச்சிட்டா. அப்புறம் ஏதோ பேசி அவங்க அம்மாவை சமாளிச்சிட்டு போனை வச்சுட்டா. ஆனா அவ அவளாகவே இல்லை தெய்வானை. ஏதோ யோசனையோடே இருக்கா. எனக்கென்னமோ மறுபடியும் அவ வீட்டில ஏதாவது பிரச்சனையோனு தோனுது தெய்வானை. திரும்பவும் அந்த வட்டிக்காரனால பிரச்சனையா இருக்குமோ?" என தெய்வானையிடம் கேட்டார்.

அவளுக்கு என்ன தெரியும்? உதட்டைப் பிதுக்கி தலையசைத்தாள்.

"அது சரி, நீயும் என்னைப்போல தானே?!" என்று சலித்தவர்,

"அத்தை நின்றாளாவது இவ மாற்றத்தை கவனிச்சு என்னனு கேட்டிருப்பாங்க. அவங்கதான் மாமாவை கூட்டிட்டு நேத்தே அவங்க தங்கை வழி பேரனுக்கு கல்யாணப் பேச்சுனு போய்டாங்களே! இவளா சொன்னாத்தான் உண்டு." என்றார்.

இவற்றை மறைந்திருந்து கேட்டவனும் குழம்பித்தான் போனான். கனகரெட்ணத்தால் பிரச்சனை வந்திருக்காது என்பதை அவன் நன்கு அறிவான். அவனைத்தான் முடமாக்கி விட்டானே! அதை மீறி மைதிலி வீட்டில் சென்று தகராறு செய்யும் அளவிற்கு அவனுக்கு நிச்சயம் தைரியமும் இல்லை, அந்தளவுக்கு செல்வாக்கும் இல்லை.

'அப்போ மைதிலிக்கு என்ன பிரச்சனை? இவர்கள் கூறுவதைப் பார்த்தால் வேறு ஏதாவது புது பிரச்சனை ஆரம்பித்து விட்டதா?' என நினைத்தவனாய் தான் வந்த தடம் காட்டாமல், தனதறைக்கு திரும்பி நடந்தவனது கண்ணில் பட்டது திறந்திருந்த மைதிலியின் அறை.

அவனும் அவள் அறையைப் பார்க்க வேண்டும் என்று பார்க்கவில்லை. யோசனையுடன் எதேர்ச்சையாக திரும்பும் போது தான், அவளது அறையில் கதவு புறம் மைதிலி முதுகு காட்டி கட்டிலில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

அத்தோடு தாய் கூறியதும் நினைவு வர, தனிமையில் இருப்பவளிடமே என்ன, ஏது என்று விசாரிப்போம் என்று நினைத்துதான் அவளருகில் சென்றான்.

அவன் ஒன்றும் ரகசியமாக எல்லாம் செல்லவில்லை. தான் வருகிறேன் என்று அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, தன் கால் தடங்களை வழமைக்கு மாறாக இன்னும் அதிக சத்தமாகவே பதிவு செய்து உள்ளே வந்தான். மைதிலி இருந்த சிந்தனையில் அவள்தான் அதை கவனிக்கவில்லை போலும்.

பின்புறம் வந்தவன் அவள் கட்டிலில் அமர்ந்திருந்ததனால், அவளது கையிலிருந்த புகைப்படம் நின்று கொண்டிருந்த ஸ்ரீயிற்கு நன்றாகவே தெரிந்தது. புகைப்படத்தில் தெரிந்த ஆடவனைக் கண்டவனுக்கு,

'அழகா இருக்கானே? யாரிவன்?' என்ற கேள்வியோடு, அவனை எங்கோ பார்த்தது போலவும் தோன்றியது. ஆனால் எங்கு என்றுதான் சரியாக நினைவில் இல்லை. அவனும் சற்று அதிகப்படியாகவே சிந்தித்துப் பார்த்தான். குறிப்பிட்ட நட்பு வட்டாரங்களைத் தவிர, அதைத்தாண்டி அவனால் சிந்திக்க முடியவில்லை.

சரியாக புகைப்படத்தை அருகில் வைத்து பார்த்தால், ஒருவேளை தெரிய வாய்பிருக்கிறது என நினைத்தவன், அதை வாங்குவதற்காக அவளை அழைத்தான். அவளுக்கு அவன் அழைத்தது கேட்கவில்லை. சற்று வினாடிகளில் அவளது கண்ணீர் துளிகள் அந்த புகைப்படத்தில் விழுந்ததும், அதை அவள் மிருதுவாக வருடி எடுத்த விதமுமே சொன்னது, அந்த படத்தில் இருப்பவன் யார் என்பதை.

ஏனோ அவனையும் அறியாமல் அந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தவன் மேல் பொறாமை வந்துவிட, இவனுக்காக அவள் கண்ணீர் வடித்ததை அவன் மனம் ஏற்றுக்கொள்ளாது அவள் சிந்தனையைக் கலைக்கும் பொருட்டு, "ஓய்..." என்று பெரிதாக குரல் எழுப்பினான்.

பின் அந்த புகைப்படத்யைும் அருகில் பார்க்க வேண்டும் என தோன்றவே, அவள் ஏசிக்கொண்டிருப்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல், புகைப்படத்தைப் பறிப்பதற்கு முன்னேறினான்.

அவளோ அதை புரிந்துகொள்ளாது தேவையற்ற வார்த்தைகளால் ஏசும் போதுதான், அவனது சுயகௌரவம் அவனை பேச வைத்தது. சிறு வாய்தர்கம் மனதைப் பாதிக்கும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது.

பாவம் அவன் அறியவில்லை, இந்த மாதிரி தன்னை ஏசுவற்கு பல நாட்களாக அவள் ஒத்திகைப் பார்த்ததை. தெய்வானைக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுத்த விஜயா, வெளியே வந்து டைனிங் டேபிளை சுத்தம் பண்ண, தெய்வானை அப்போதைக்கு சமைத்த பதார்த்தங்களைக் கொண்டுவந்து அடுக்கும் போதுதான், மைதிலி அறையில் இருந்து ஸ்ரீ கண்கள் சிவக்க, கோபமாக எவரையும் கண்டுகொள்ளாமல் வெளிவருவதைக் கண்டாள்.

அறை வந்தவன் அறைக் கதவினை அடித்து சாத்தியே தன் கோபத்தை வெளிக் காட்டினான். கழுத்தை நெரிப்பது போல் இருந்த டையின் முடிச்சில் கை வைத்து இழுத்தவன் அவசரத்துக்கு, அது எங்கே வந்தது? டையோடு கழுத்தும் இழுபட, “இது ஒரு அவஸ்தை...” என பொருமியவாறு தலை வழியாகவே கழட்டி பெட்டில் வீசியவன்,

சட்டை பொத்தனையும் விடுவித்து கட்டிலில் அமர்ந்தவனுக்கோ, மனம் பூராகவும் இரணமாக வலித்தது. மைதிலி உதிர்த்த வார்த்தைகள் அத்தனையும் வார்த்தைகள் அல்ல, கூரிய அம்பின் முனைகள். வில்லிலிருந்து வேகமாக வந்த அம்பானது, அவன் மனதினை இரணமாக்கி உயிர் விடும் தருவாயில் கூட, அவள் வாய்வழி அவன் கேட்க விரும்பாத வார்த்தைகள். இதுவரை இப்படியான வார்த்தைகள் அவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளாதவன் அல்ல.

எத்தனையோ தடவைகள் அவன் பின்னால் பலர் பேசிக் கேட்டிருக்கின்றான். அவனது ஆஃபிஸ் ரிசப்ஷனில் வேலை செய்யும் காயத்திரியுமே உள்ளடக்கம். அவை எதுவுமே அவன் மனதினைக் காயப்படுத்தியதில்லை. அதற்கு அவனிடம் மூன்று வலுவான காரணங்கள் இருந்தது.

ஒன்று, தன் முன்னால் பேச தைரியமில்லாத கோழைகள் பேச்சினை அவன் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

இல்லாத எதையுமே அவர்கள் சித்தரிக்கவில்லையே! சும்மா நட்பாக ஒரு பெண், ஆணுடன் பேசிவிட்டாலே தவறாக உருவடிக்கும் உலகம். அதுவும் அவன் பல நிறுவனங்களுடன் போட்டியில் இருக்கும் தொழிலதிபர், அவன் உண்மையில் இப்படித்தான் என்று தெரிந்தால் அமைதியாகவா இருப்பார்கள்?

பேசுவபர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி பேசுபவர்கள் பேச்சினை பெரிதுபடுத்தினால், அடுத்த அடியினை அவனால் தைரியமாக எடுத்து வைக்க முடியாது. பெரிய இடத்தில் இருப்பவர்களுக்கு இது எல்லாம் சாதாரண விடயமே! தவறாக பேசுபவர்கள் பேச்சை பெரிதுபடுத்தும் அளவிற்கு அவர்கள் எந்த விதத்திலும் வேண்டப்பட்டவர்களில்லை என்று நினைப்பான். அதனால் அவர்கள் பேச்சினை அலட்சியப்படுத்தியே அத்தனையையும் கடந்து வந்திருக்கிறான். ஆனால் ஏனோ மைதிலி பேசியதை மட்டும் அவன் மனம் ஏற்க மறுத்தது.

‘எப்படி என்னை அவள் அப்படிக் கூறலாம்? இவள் விடயத்தில் நான் அப்படி என்ன தவறாக நடந்து கொண்டேன்? அவளைப் பார்க்கும் போது என் மனம் தடுமாறியதும் உண்மை தான். தனிமை கிடைக்கும் போது அந்த தடுமாற்றத்தினால் அவளுக்கு முத்தம் வைத்ததும் உண்மைதான். ஆனால் அவளை எப்போதாவது காமம் கலந்து பாத்திருப்பேனா?

முன்னர் இவள் என்னை அறியாது பொறுக்கி என்று ஏசியதும் இவளைப் பழி தீர்க்க, படுக்கையில் விழ வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் இவளைப் பார்த்த மறுநொடியே அந்த எண்ணம் அறவே இல்லாமல் போய், என் தவறைத் திருத்திக் கொண்டதை இவள் அறியவில்லையா? எப்போது பார்த்தாலும் என்னை தவறாக பேசுகிறவளிடம் எப்படி நான் என்னை நிரூபிப்பேன்? நான் தவறானவன் தான், ஆனால் உன் விஷயத்தில் என்னடி தவறு செய்தேன்? உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உன்னை பார்த்த நொடியில் இருந்து, என் தவறுகளை முற்றிலுமாக நிறுத்தி விட்டேனே!

திரும்ப திரும்ப என்னை நீ பொறுக்கி போல் பார்க்கும் அளவிற்கு என்னடி நமக்குள் பகை? இதுவரை நீ என்னை தவறாக பேசும் போது, உன்மேல் பயங்கரமாக கோபம் தான் வரும். ஆனால் இன்று...?' என கண் கலங்கியவன், கீழ் உதட்டை மேற்பற்களால் கடித்துக் கண்ணீரை இமையை விட்டு கீழிறங்க அனுமதியாமல், தன் ஆண்மையையும் விட்டுக்கொடுக்க முடியாமல் அதை உள்ளிழுத்துக் கொண்டவன், தன் இதயம் இருக்கும் நெஞ்சு பகுதியில் வலக்கையினால் குத்தியவாறு,

‘ரொம்பவே கஷ்டமா இருக்கு. உன் கையினால என் இதயத்தை, நான் வலிக்குது... விடு, விடு... என்று கத்தக்கத்த நசுக்கி பிழியிறது போல இருக்கு. முதல் தடவையா என்னை ஒரு கோழையா உணர்றேன். எதுக்குடி என்னை அப்பிடி பேசின?' என மீண்டும் மீண்டும் தன்னிடமே அந்த கேள்வியினைக் கேட்டுக் கேட்டே மனம் வெந்து போனவன், ஒரு கட்டத்தில் பெட்டிலிருந்து வேகமாக எழுந்து பாத்ரூம் சென்று வெளியே வந்தவன் தோற்றமே சொன்னது, குளித்துவிட்டு வந்திருக்கிறான் என்று.

உடையினை மாற்றி கண்ணாடி முன் நின்றவன் சிந்தை மீண்டும் அவளது பேச்சுக்கு தாவ, "வேண்டாம் ஸ்ரீ, அவளைப் பற்றி மட்டும் நினைக்காத. நீ எப்படி என்று யாருக்கும் நிருபிக்க வேண்டியதில்லை. இதுவரை மற்றவர்கள் இதே வார்த்தை கொண்டு பேசும் போது அமைதியாக இருப்பவன் தானே! இவளும் உனக்கு வேண்டப்பட்டவளில்லை. அவளது பேச்சையும் மனதிற்கு கொண்டு செல்லாமல் அப்படியே விட்டு விடு." என தனக்குத்தானே சொன்னவன், தயாராகி அறையினை விட்டு வெளியே வந்தான்.

வெளி ஹாலில் விஜயாவுடன் பேசிக்கொண்டிருந்த மைதிலியைத் திரும்பிக்கூட பாராது, தாயிடம் தான் போகும் இடத்தினைக் கூறிவிட்டு சென்றான்.

கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கடந்திருந்தது.

அன்று நடந்த சம்பவத்தின் பின், மைதிலியின் புறம் தவறுதலாகக்கூட அவள் நிற்கும் திசைகூட சென்றதில்லை. ஆனால் மதியம் சாப்பாட்டிற்கு வருபவன், எதுவும் பேசாமலே உண்டோமா, போனோமா என இருந்து கொள்வான்.

மாலை வழமை போல் எட்டுக்கே வீடு வருபவன், சாப்பாட்டிற்கு அதுவும் தெய்வானை அழைத்தால் மாத்திரம் எல்லோர் முன் ஆஜராகுவானே தவிர, மற்றய பொழுதுகளில் அறையிலேயே முடங்கி விடுவான். அவனுக்கு தன்னால் மைதிலி சுதந்திரம் கெட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். ஆனால் மைதிலிக்குத்தான் அவனது பாராமுகம் ஏதோ போல் இருந்தது.

தான் அன்று அவ்வாறு ஏசியதனால் தான் இவன் செயற்பாடுகள் மாறியிருக்கிறது என்றால், தன் வார்த்தைகள் அந்தளவிற்கு அவனை பாதித்திருக்கிறது என்று தானே அர்த்தம். தான் அப்படி அவன் மனம் நோகும்படி பேசியிருக்க கூடாது என்று, அவ்வப்போது நினைத்துக் கொள்பவளுக்கு,

‘இதற்கு தான ஆசைப்பட்டு ஏசின. பிறகு எதற்கிந்த முரண்பாடான சிந்தனை? இவன் உன்னை விட்டு விலகியிருக்க வேண்டும். இந்த மாதிரி இவனை திட்டினால் விலகுவான் என்று தெரிந்து தானே அப்படி திட்டினாய். நீ நினைத்தது தான் நடக்கின்றது. அவன் சரியாகத்தான் நடந்து கொள்கிறான். நீ உன் மனதினை கொஞ்சம் அலைபாய விடாமல் இரு! அவனே ஒதுங்கியிருப்பது உனக்குத்தான் நல்லது.’ என அவளுக்கு அவளே கூறிக்கொண்டவள் அதை நடைமுறைப்படுத்தலானாள்.

ஆனாலும் ஸ்ரீயைக் காணும் போது மாத்திரம் அந்த உறுதி தளர்ந்து, தவறிக்கூட தன்னை பார்த்திடமாட்டானா என அவனையே பார்ப்பவள் கண்களும் மனதும் ஏங்கத்தான் செய்தது. அன்று மதிய உணவிற்கு வந்த ஸ்ரீ ஹாலில் புதிதாக ஒரு ஆண் குரல் கேட்கவும்,

‘யார் குரலிது?’ என்று ஆர்வமாக வந்தவன், அங்கு இருந்து வீட்டவர்களுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தவரைக் கண்டான். அவரைக் கண்டதும் புருவங்கள் முடிச்சிட அவரையே பார்த்தவன் நினைவலைகளில் எதுவோ ஓட, அந்த இடத்திலே நின்று அது எது என்று சிந்திக்கத் தொடங்கினான்.

ஈஸ்வரியுடன் கதை பேசிக்கொண்டிருந்த அந்த புதியவரும், பேச்சின் ஊடே திரும்பும் போது வாசலில் நின்ற ஸ்ரீயைக் கண்டார்.

"வாங்க ஸ்ரீ மாப்பிள்ளை!" என அவனைக் கண்ட சந்தோஷத்தில் ஆரவாரமாக அழைத்தவர்,

"பார்றா நம்பர் ஒன் பிஸினஸ் மேனை... வாடா! வாடா!" என்று எழுந்து நின்று கையிரண்டையும் விரித்தார், அவனை கட்டிக்கொள்ளும் ஆர்வத்தில்.

அவனும் முதலில் ஏதோ யோசனையாக நின்றவன், அவரது ஆரவாரத்தில் யோசனையினைக் கைவிட்டு, அவர் விரித்த கைகளுக்குள் தஞ்சம் புகுந்தவன்,

"மாமா!" என தானும் சந்தோஷமாக அழைத்தவன்,

"எப்படி மாமா இருக்கிங்க? வீட்டில எல்லாரும் சுகம் தான?" என விசாரித்தவாறு அவரிடம் இருந்து விலகியவன்,

"உக்காருங்க மாமா, இருந்தே பேசலாம்." என்று எதிர் சோபாவில் அமர்ந்தான்.

"அப்புறம் மாமா, என்ன விஷேசம்? இவ்ளோ தூரம் எங்கள தேடி வந்திருக்கிங்க..." என விசாரிக்க,

"என்ன மாப்பிள்ளை செய்ய? உங்களுக்கு தான் எங்க வீடு எந்த பக்கம் இருக்குனே தெரியாது. தெரிஞ்சாலும் நீங்க வரமாட்டிங்க. நாங்களும் அதே போல இருக்க முடியுமா? எங்களுக்கு சொந்தம் முக்கியம் மாப்பிள்ளை." என்றார் கேலியாக.

"இல்லையே! காரணம் இல்லாமலா தோரணம் ஆடும்?" என புருவம் சுருக்கி நம்பாமல் மாமனாரை வினவியவன்,

பின், "உங்கமேல எங்களுக்கு மட்டும் அன்பில்லையா என்ன? என் வேலை அப்படி. நிச்சயமா ஒரு நாள் வரோம் மாமா." என்று உறுதி கூறிட,

"ஒரு நாள் இல்ல மாப்பிள்ளை, ஒரு வாரத்துக்கு முன்னாடி வரணும்." என்றவர்,

"வர இருபத்தி ஓராம் திகதி ரகுக்கு கல்யாணம் முடிவு பண்ணியாச்சு. நீங்க எல்லாருமே ஒரு வாரத்துக்கு முன்னாடி நிக்கணும்." என்றார் அழுத்தமாக.

"என்னோட வேலைப்பளுவினால கல்யாணத்தன்னைக்கு வரதே சந்தேகம் மாமா, சாரி மாமா." என்றவன்,

"அம்மாவ சொல்லவே வேண்டாம். அவங்க வந்தாங்கனா எல்லாருமே அம்மாவை இந்த நிலையில பார்த்து சங்கடப்படுவாங்க. அப்புறம் கல்யாண வீடே கண்ணீர்ல மூழ்கிடும். அந்த சீன் நிறைய தடவை பாத்தாச்சு. அதனால அம்மாவே எங்கேயும் வெளிக்கிடுறது கிடையாது. வேணும்னா கல்யாணத்தன்னைக்கு அனுப்பி வைக்கிறேன். பாட்டி, தாத்தா சும்மாதான் இருக்காங்க, அவங்கள இன்னைக்கு வேணும்னாலும் கூட்டிட்டு போங்க." என்றான் ராங்கசாமியைக் கடைகண்ணால் பார்த்தபடி.

"அந்த கதைக்கே இடமில்ல மாப்பிள்ளை! நீங்களும் வரீங்க, இல்லனா ரகுவும் மீனாவும் என் கழுத்தை பிடிப்பாங்க. எந்த வேலை இருந்தாலும் அதை கிடப்பில போட்டுட்டு குடும்பத்தோடு வரணும்." என்றார் கட்டளையாக.

"நீங்க ரொம்ப தொலைவில இருந்தா, நாங்க என்ன செய்ய முடியும்? பக்கத்தில எங்கேயாச்சும் இருந்தாலாவது, வேலையையும் பாத்து உங்க வீட்டுக்கும் வந்து போகலாம். சரி மாமா, உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம். அம்மா, தாத்தா, பாட்டியை கல்யாணத்தன்னைக்கு அனுப்பி விடுறேன்." என்றான்.

"அப்போ நீங்க மாப்பிள்ளை?”

"என்னால வர முடியாது மாமா."

"என்ன மாப்பிள்ளை, நாங்க என்ன பிறத்தியன்களா? உறவு மாப்பிள்ளை! நாளைக்கு எதாச்சும் ஒன்னுன்னா உங்க வேலை ஓடிவராது, நாங்க தான் வரணும். ரகு முன்னாடியே சொல்லிட்டான், மச்சான் வந்தா தான் பொண்ணு கழுத்தில தாலியே கட்டுவேன்னு. சின்ன வயசில ஒன்னா திரிஞ்சிட்டு, இப்போ நல்ல விஷயம் நடக்கும் போது, இப்படி சொன்னா எப்படி மாப்பிள்ளை?" என்க,

அவரது கெஞ்சலில் யோசித்தவன், "சரி மாமா, ரகுக்காக வரேன். ஆனா அன்னைக்கு ஒரு சின்ன வேலை இருக்கு மாமா. அதை முடிச்சே ஆகணும். ரகு தாலி கட்டும் முன்னம் நான் நிப்பேன்னு சொல்லுங்க மாமா." என்று ஸ்ரீ அவர் பேச்சுக்கு மதிப்பளித்து சம்மதம் கூறும் போது தான், ஈஸ்வரிக்கும் நினைவு வந்தது போல,

"எப்போ கல்யானம் நந்தன்?" என்றார்.

"இருபத்தி ஓராம் திகதி அத்த..."

"ஐய்யோ! என்ன நந்தன் இப்படி குண்டை தூக்கி போட்டுட்ட. அன்னைக்கு தானே எனக்கும் கோவில்ல அபிஷேகம் ஒழுங்கு செய்திருக்கேன். ஒரு வேண்தடுல் நந்தன். ரெண்டு வருஷமா நாள் கிடைக்காமல் அலைய விட்டு அன்னைக்குத்தான் நாளே கிடைச்சிருக்கு. அதுவும் பல சிரமத்துக்கு நடுவில தான் வாங்கியிருக்கோம். மன்னிக்கணும் நந்தன், நிச்சயமா நான் விஜயாவையும் ஸ்ரீயையும் அனுப்பி வச்சிடுறேன். மறுநாள் நாங்க ரெண்டு பேரும் வந்திடுறோம். வேண்டுதலை தள்ளி வைக்கிறது நல்லதில்லை நந்தன்." என்று ஈஸ்வரி கெஞ்சுவது போல் கேட்க,

"எதுக்கத்தை இந்த மாதிரி கேக்கிறிங்க? அதுதான் ஸ்ரீயையும் விஜயாவையும் அனுப்புறீங்களே! எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்ல. ஆனால் மறுநாள் கண்டிப்பா வந்திடணும்."

"கண்டிப்பா வந்திடுறோம் நந்தன்." என வாக்களித்தவர்கள். சாதாரணமாக பேச,

"அப்புறம் மாமா, என் மச்சினி மீனா என்ன செய்றா? எப்போ அவளுக்கு கல்யாணம்?" என்றான் ஸ்ரீ.

"இவனுக்கு முடிச்சு, ஒரு வருஷத்துக்கு அப்புறம் பொறுமையா பண்ணலாம் மாப்பிள்ளை." என்றவரிடம்,

"நீங்க சொல்லுறதை பார்த்தா மாப்பிள்ளை ரெடி போலவே?" என மாமனிடம் புருவம் சுருக்கி கேட்டான்.

"ஆமா, இப்போ உள்ள பசங்க எல்லாமே இந்த மாதிரி தானே! தாங்களாவே யாரு கூட தங்களோட எதிர்காலம் என்று முடிவு பண்ணிடுதுங்க. அதை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிட்டால் போச்சு, வீடு ரெண்டாகிடும். என்னோட ஆஃபிஸ்ல வேலை பாக்கிற பையனை அவ விரும்புறா மாப்பிள்ளை. ஒரே பொண்ணு, அவ ஆசையை எதுக்கு கெடுப்பானேன்னு சம்மதம் சொல்லியாச்சு. எல்லாரையும் கேட்குறீங்க, உங்களுக்கு எப்போ கல்யாணம்?" என திரும்ப ஸ்ரீயை அவர் கேட்க,

விஜயாவைப் பார்த்துவிட்டு மாமனைப் பார்த்தவன், "என்ன அவசரம் மாமா, செய்வோம்." என்ற ஒற்றை வரியோடு நிறுத்தி,

"சாப்பிட்டாச்சா மாமா?" என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு.

"எங்கே... வந்ததில இருந்து பேசிட்டிருக்கிறீங்களே தவிர, சாப்பாட்டை காட்ட மாட்டேன் என்கிறீங்களே! ரொம்ப தூரம் இருந்து வந்தது, பசிக்குது." என்க,

"இன்னும் இந்த குசும்பு மட்டும் விட்டு போகல மாமா." என்றவாறு அவரை சாப்பிட அழைத்துச் சென்றான்.



தொடரும்...