• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 32

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna

பகுதி 32




காலை எட்டு மணியளவிலேயே தயாராகி வாசலைப் பார்ப்பதும் கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தார் விஜயா.

"கொஞ்சமும் பொறுப்பு என்றதில்லாம இப்போ வந்திடுறேன்னு ஏழு மணிக்கு கிளம்பினான், இன்னும் வரல. இப்பவே பயணத்தை ஆரம்பிச்சா தானே, தாலி கட்டுற நேரத்துக்குள்ள போய் சேரலாம். கல்யாணம் என்ன, இரண்டு தெரு தள்ளியா இருக்கு? அந்த நேரத்துக்கு போக..." என புலம்பிக்கொண்டிருக்க,

அவர் முன் குளிர் ஜூஸ்ஸோடு நின்றவள், "இந்தாங்கம்மா, இதை குடிங்க, சூடு குறையும்." என்றவளை முறைத்தவர்,

"என்ன... என்னை கேலி பண்றியா? அதை தூக்கி போட்டுட்டு, அந்த போனை எடுத்திட்டு வா." என்றார் சினமாக.

"எதுக்கு இப்போ என்கிட்ட சத்தம் போடுறீங்க? நானா உங்கள ஏமாத்தினேன்? ஏதோ பாவம், வயசான நேரத்தில ரொம்ப டென்ஷன் படக்கூடாது, கூலா ஏதாவது குடிச்சா இந்த படபடப்பு குறையும்னு பார்த்தா ரொம்பத்தான் பண்றீங்க." என்று ஜூஸினை அவளே மூச்சு விடாது குடித்தாள்.

“உங்களுக்கு வேண்டாம்னா கொண்டு போய் ஊத்தணுமோ? இல்லன்னா நீங்க குடிச்சே ஆகணும்னு கெஞ்சுவேன்னு நினைச்சிங்களா? நெவர்! எனக்கும் வாய் இருக்கு. நாமளும் ஆப்பிள் ஜூஸ், அதுவும் குளிரா குடிப்போம்." என்றவள்,

தன் முன் படர விட்டிருந்த நீண்ட பின்னலிட்ட கூந்தலை ஸ்டைலாக பின்புறம் தூக்கி எறிந்தவள், கிளாஸினை வைப்பதற்கு உள்ளே சென்றாள்.

அவளது செய்கையில் இருந்த டென்ஷன் குறைந்திட, "அடியே வாயாடி இங்க வாடி! நீ ஜூஸை குடி, இல்ல ஹார்ப்பிக்க வேணும்னாலும் குடி. ஆனா எனக்கு அந்த போனை மட்டும் எடுத்து தா." என்றார்.

விஜயா கேட்ட போனை எடுத்து அவரிடம் நீட்டிவிட்டு திரும்புவதற்குள், சட்டென அவள் ஜடையை லாவகமாக பிடித்திழுத்தவர்,

"என்கிட்டயே உன் வால் தனத்தை காட்டுறியா?" என அதை வலிக்கும்படி இழுத்தார்.

"அய்யோ! அம்மா..." என இடை பின்னலில் தன் கையினை வைத்து வலிக்காது பிடித்துக் கொண்டவள்,

"நான் விளையாட்டுக்கு சொன்னத பூரா நம்பிட்டிங்க..." என்க,

"விளையாட்டுக்கு எனக்கு எடுத்திட்டு வந்த ஜூஸை நீ குடிப்பியா? குடிச்சாலும் பரவாயில்ல, ஆனா நீ சொன்ன டயலாக் தான்டி தாங்க முடியல." என்றவாறு இன்னும் ஜடையை பிடித்திழுத்தார்.

வலி தாங்காது விஜயாவின் இழுப்புக்கு அவளும் வர, அவள் கையைப் பற்றி இறுக கிள்ளிய விஜயா, "இனிமேல் என்கிட்ட வாயாடுறப்போ இது நினைவில நிக்கணும்." என்று அவளை விடுவித்தார்.

விஜயா கிள்ளிய இடத்தைத் தேய்த்தவாறு, "காலையிலேயே தயாராகிட்டிங்க தானே, அப்புறம் என்னத்துக்கு கல்யாணத்துக்கு கிளம்பாம இங்கேயே நிக்கிறீங்க? சீக்கிரம் உங்க பையன வரவச்சு கிளம்புங்க. இன்னைக்கு ஒரு நாளாவது நிம்மதியா யாரு தொல்லையும் இல்லாமல் வீட்டில தூங்குவோம்." என்று விஜயா தன்னை கிள்ளிய கடுப்பில் கூற,

"ஓ... மேடம் வீட்டுல எல்லாரையும் அனுப்பிட்டு நிம்மதியா இருக்க போறீங்களா? சரி... சரி, இருங்க... இருங்க..." என சிரித்தவர், ஸ்ரீ இலக்கத்திற்கு அழைத்து விட்டு காத்திருந்தார்.

ஆம், காலையில் அபிஷேகம் என்று ஈஸ்வரி தன் கணவனுடன், தெய்வானையையும் துணைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

உண்மையில் முதலில் தெய்வானையை ஈஸ்வரி அழைத்து போவதாக இருக்கவில்லை. மைதிலியைத் தான் அழைத்து போவதாக நினைத்தார். ஆனால் மைதிலிக்கு இதுவரை விஜயா அலங்காரம் பண்ணி பார்த்ததில்லை.

இன்று கல்யாண நிகழ்விற்கு போக விஜயா முடிவெடுத்ததனால், அவரை அழகாக காட்ட வேண்டும் என்றோ, இல்லை தான் அவரை அழகாக பார்த்துவிட வேண்டும் என நினைத்தாளோ என்னமோ, எழுந்ததில் இருந்து விஜயா அறையை விட்டு மைதிலி வெளிவரவே இல்லை.

விஜயாவை தயார் செய்கிறேன் என்ற பெயரில், நூறு முறை அவள் ஜடையில் சீப்பினை போட்டு, பலவித அலங்காரம் செய்து பார்த்தவள், இறுதியாக கல்யாண கொண்டையோடு தன் அலங்காரத்தை முடித்துக்கொண்டாள்.

இதற்கிடையில் ஏழு மணிக்கு கோவிலில் அபிஷேகத்திற்கு நிற்க வேண்டும் என்பதால், ஆயிரம் முறை ஈஸ்வரி மைதிலியை அழைக்க, அவள் வாயிலிருந்து வந்த பதில், ‘ஒரே நிமிஷம் பாட்டி!’ என்ற வாசகம் தான்.

இதற்குமேல் இவளை பார்த்துக்கொண்டிருந்தால் வேலைக்காகாது என நினைத்த ஈஸ்வரி, "நீ உன் அம்மாக்கு எப்பிடில்லாம் அலங்காரம் பண்ணணும்னு தோனுதோ பண்ணிக்கோ. உன்னை பார்த்திட்டு நின்னா நிச்சயம் அபிஷேகம் நடக்காது. நான் தெய்வானையை கூட்டிட்டு கிளம்புறேன்." என்றவர் சொன்னது போலவே செய்தும் விட்டார்.

விஜயாவோ அழைத்துவிட்டு காத்திருக்க, ஸ்ரீயோ போனை எடுக்கவில்லை. போன கோபம் மீண்டும் வந்து ஓட்டிக்கொள்ள,

அமைதியாக மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவரைப் பார்க்க, சிறு பிள்ளையின் அடம் போல் மைதிலிக்கு தோன்றியது. தனக்குள் அவரைப் பார்த்து சிரித்தவாறு எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள் மைதிலி.

ஐந்தே நிமிடத்தில் அவர் கையிலிருந்த போன் அலற, அதை எடுத்து காதில் வைத்தவர், "எங்கடா நிக்கிற? இதுதான் உனக்கு சீக்கிரமா? எவ்வளவு நேரம் தான் காத்திட்டிருக்கிறது? கல்யாணம் என்ன பக்கத்திலயா நடக்குது? சீக்கிரம் கிளம்பினா தானே டைமுக்கு போக முடியும்?" என ஸ்ரீயை பேச அனுமதிக்காது விஜயாவே பேசிக்கொண்டு போக,

"அம்மா சாரிம்மா!" என மறுதிசையிலிருந்து ஸ்ரீயின் குரல் கேட்க,

"எதுக்குடா சாரி?" என அவனது பேச்சின் திணுசிலே அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்தவர் கோபமானார்.

"அம்மா புரிஞ்சுக்கோங்க, எனக்கு கொஞ்சம் அர்ஜன்ட்மா. இடையில விட்டுட்டு வரமுடியாது. நான் டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புறேன், நீங்க யாரையாச்சும் கூட்டிட்டு முன்னாடி போங்க. என் வேலை முடிஞ்சதும் பின்னாடி நான் செல்வத்தையும் கூட்டிட்டு வந்திடுறேன்." என்றான்.

"என்ன ஸ்ரீ விளையாடுறியா? மாமா எவ்வளவு அன்பா நம்மளை மதிச்சு கூப்பிட்டாங்க. ஒரு நாளைக்கு கூடவா உன் வேலைய ஒதுக்க முடியாது?"

"அம்மா நான் வர மாட்டேன்னு சொல்லல. நீங்க போங்க, நான் வரேன்." என்றான் தன் பாணியில் குரலை உயர்த்தி.

"உன்ன நம்பினேன் பாரு, என்ன சொல்லணும். சரி, நீ சொல்லுறது போலவே நான் போறேன். ஆனா யாரை நான் அழைச்சிட்டு போறது? அத்தை கோவில் போயிட்டாங்க ஸ்ரீ, மறந்திட்டியா நீ?"

"பாட்டி இல்லன்னா என்ன? உங்க கூட தான் ஒருத்தி நிழல் போல ஒட்டிட்டு திரிவாளே, அவளை கூட்டிட்டு போங்க."

"அவ எப்படிடா அங்க...?" என மறுப்பாக விஜயா கூற வர,

"ஏன், அவளை கூட்டிட்டு போனா என்ன? உங்களுக்கு உதவிக்குத்தானே அவளை வேலைக்கே வச்சோம். இப்போவும் உங்க உதவிக்குத்தான் அழைச்சிட்டு போங்க. மேடம் மறுப்பு சொல்ல மாட்டாங்க." என்றவன்,

"எனக்கு பேச எல்லாம் நேரமில்லம்மா, நான் வைக்கிறேன்." என்றவன் வைத்தும் விட்டான்.

அவன் வைத்ததும் மைதிலியைப் பாவமாக பார்த்தவர், "அவனுக்கு முக்கியமான வேலையிருக்காம்டா. அவனால வரமுடியாதாம். உன்னை அழைச்சிட்டு போக சொல்லுறான்மா." என்றார் வருத்தமாக.

"நான் எப்படிம்மா... எனக்கு யாரையுமே தெரியாதே?" என தடுமாறினாள் மைதிலி.

"அம்மாடி எனக்கும் உன் நிலை புரியுது. ஆனா அம்மாக்கு வேற வழியே தெரியலடா. ரொம்ப நெருங்கிய சொந்தம். வீடு தேடி வந்து சொல்லியிருக்காங்க, போகலைனா தப்பா நினைப்பாங்க. அம்மாக்காக வாடா..." என கெஞ்ச, மைதிலியால் மறுக்க முடியவில்லை.

'ஆனால் திருமண வீடு என்றால் அதுவும் இவர்கள் சொந்தங்கள் என்றால், ரொம்ப வசதியானவர்களாக இருப்பார்கள். இவளிடம் நல்ல உடை கூட இல்லையே! எப்படி தயாராகி போவது? வரும்போது கோவில் திருவிழாவிற்காக எடுத்த நல்ல பாவடை தாவணி இரண்டு ஜோடி கொண்டு வந்தாள் தான். ஆனால் அது இவர்கள் வசதிக்கெல்லாம் சரி வராதே!

விஜயாவுடன் போகும் போது அந்த மாதிரி உடையணிந்தால் நிச்சயம் அது அவர்களுக்கு மரியாதையாக இருக்காது. அதைவிட காதில் போட்டிருக்கும் கம்மலைத் தவிர, நகை என்று அவளிடம் எதுவுமே இல்லை. அப்படியிருக்கும் போது எப்படி விஜயா கூப்பிட்டதும் போகமுடியும்?'

பதில் சொல்லமுடியாது மைதிலி முழித்திருக்க, உள்ளே வந்தான் ஸ்ரீ அனுப்பிய கார் டிரைவர்.

"அம்மா, சார் உங்களை அழைச்சிட்டு போக சொல்லி அனுப்பி வச்சாரும்மா." என்று கையில் இருந்த கவரை விஜயாவிடம் நீட்டியவன்,

"இதையும் தர சொன்னாரு. நான் வெளிய கார்ல வெயிட் பண்றேன். நீங்க தயாராகி வந்திடுங்க." என்றவாறு வெளியேறினான்.

தன் கையில் இருந்த கவரை பிரித்துப் பார்த்தவர், டிரைவரிடம் கொடுத்தனுப்பும் அளவிற்கு அப்படி என்ன அதுவென ஆராய்ந்தார்.

அது ஒரு துணிப்பொதி என அறிந்தவர், "என்ன துணி இது?" என அதை குலைத்துப்பார்க்கும் போதுதான் தெரிந்தது. முழுவதுமாக அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த புது மாடல் பாவடை தாவணி என்று.

பிங்க் நிறத்தில் கற்கள் பதிக்கப்பட்ட நீள பாவடை, அதற்கேற்றாற் போல் அழகாக வடிவமைத்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டும், வெள்ளை நிற தாவணியும் என பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. கூடவே வளையல்களும் மற்றைய பேன்சி ஆபரணங்களும் இருப்பதைக் கண்ட விஜயா,

"அம்மாடி! இது உனக்குத்தான்டா அனுப்பியிருக்கான். நான் கூட இதை யோசிக்காம தயாராகச் சொல்லியிருக்கேன். என் பையனை பாரு, கிடைச்ச கொஞ்ச நேரத்துக்குள்ள என்னமா யோசிச்சு வேலை பாத்திருக்கான்னு." என்றவர்,

"சரி, சரி... பேசிட்டு இருக்க நேரமில்லை. இதை போட்டுட்டு வா." என திணித்து அனுப்பினார்.

மறுத்து பேச முடியாதவளாய் அதை வாங்கிக்கொண்டு தன்னறை சென்றவள், வேகவேகமாக செயல்படத் தொடங்கினாள்.

அவளுக்கே பெரும் ஆச்சரியம். அவளுக்காக என்றே வடிவமைக்கப்பட்ட உடைபோல மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. பிங்க் கலர் அவள் அழகை இன்னும் அதிகப்படுத்தியும் காட்டியது. தாவணி சொல்லவே தேவையில்லை, தேவதைதான்.

ஆனால் இந்த பிளவுஸ் எப்படி எனக்கு கட்சிதமாக பொருத்தமாக இருக்கிறது. எந்த இடத்திலும் இறுக்கமும் இல்லை, தொய்வும் இல்லை. அவசரமாக தேர்வு செய்த உடை என்பதை அவளால் நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

நேரம் போன காரணத்தால் ஆராய்ச்சிகளை ஓரம் கட்டியவள், தலை வாரும் போது அவள் அறைக் கதவு தட்டப்பட்டது.

வீட்டில் நின்றது விஜயா மாத்திரம் என்பதால், கதவைத் திறந்தவளைப் பார்த்து அதிசயித்தவாறே கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே வந்தவரை,

"வாங்கம்மா!" என்றவாறு கதவினை இன்னும் அவருக்கு வசதியாக அகல திறந்து விட்டவள் ஒதுங்கி நின்று கொள்ள,

"மைதிலிம்மா நீயா இது? இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்க." என மேலிருந்து அவளை ஆராய்ந்தவர்,

"சரி, சீக்கிரமா தலையை வாரு போகணும்." என்று அவள் தலைவாரும் அழகினையே பார்த்திருந்தார்.

முகத்தினில் அலங்காரம் என்று சொல்லும் அளவிற்கு எதுவுமே இல்லை. கொஞ்சம் பவுடர் மாத்திரம் பூசியவள், வழமையாக வைக்கும் அளவான கறுப்பு நிற பொட்டினை, புருவம் எனும் இரு காவலர்கள் நடுவே பத்திரப்படுத்திக்கொண்டு, அந்த கவரில் இருந்த வளையல்களை அணிவதற்கு தயாராக,

"அம்மாடி! அது வேணாம்." என்று கையிலிருந்த பெட்டியை நீட்டி, "இதில இருக்கிற நகைகளை போட்டுக்கம்மா." என்றார்.

அதை திறந்து பார்த்த மைதிலி எல்லாமுமே தங்கமாக இருப்பதைக் கண்டுவிட்டு, "இது வேண்டாமே..." என ஒரு அடி தள்ளி நின்றாள்.

உண்மையில் மைதிலி இதை எதிர்பார்க்கவில்லை. விஜயா பெட்டியை நீட்டும் போது, அவள் நினைத்தது அதுவும் பேன்சி நகை என்றுதான்.

"என்னடி ஓடுற? நீ இதை போட்டுக்கிட்டுத்தான் என்கூட வரணும்." என்று கட்டாயப்படுத்த,

"சாரிம்மா! என்ன சொன்னாலும் எனக்கிது வேண்டாம். உங்க கூட வரும்போது நான் ரொம்ப மோசமாக இருக்க கூடாதுனு நினைச்சது உண்மை தான். பட் உங்கள போல இருக்கணும்னு நினைக்கல. இந்த மாதிரி நகை போடுறதும் எனக்கு பிடிக்காது. அதோடு இப்போ ட்ரென்ட் இது தான்ம்மா. ட்ரெஸ்கு ஏத்தது போல ஜுவல்ஸ் போட்டுக்கணும்." என்று நாசுக்காக அதை மறுத்தாள்.

ஸ்ரீ கொடுத்தனுப்பிய பேன்சி ஜுவல்ஸ்சில் அதிக பாரம் இல்லாமல் இருக்கவே அதை அணிந்து கொண்டாள். அவளது அலங்காரத்தையும் அழகினையும் கண்டு விஜயாவே சொக்கித்தான் போனார். கூடவே ஏக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. முழுவதுமாக அலங்காரம் செய்தவள் கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்து,

'இதே கோலத்தில் தன்னை ஸ்ரீ கண்டு ஒரே ஒரு மெச்சும் பார்வை பார்த்து விட மாட்டானா?' என நெஞ்சம் ஏங்கியது.

'அவனை தான் ஏசி உன் பக்கமே வராதவாறு செய்து விட்டாயே! சும்மாவே உன் திசை திரும்பாதவன், இன்றா பார்ப்பான்? இதில் மெச்சும் பார்வை வேறு?' என நினைத்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதை முகத்தினில் காட்டாது விஜயாவை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

கிட்டத்தட்ட மூன்று மணிநேர பயணம். அதுகூட விஜயாவின் அவசரத்தினால் தான் வேகமாக கார் சென்றது. நேராக கார் மண்டபத்தினை அடைய, டிரைவர் அவரது சேரை கொண்டுவந்து வைத்ததும், மைதிலி மெதுவாக அவரைப் பிடித்து சேரில் இருத்தியவள், மண்டப வாயிலை அடைந்தது தான் தாமதம், பெரும் கும்பல் ஒன்று வந்து விஜயாவை சூழ்ந்து கொண்டு, மாறிமாறி அவளை ஆரத்தழுவி நலம் விசாரித்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

விஜயாவுடன் வந்தவளுக்கும் அதே மரியாதை தான். அவள் அழகில் சொக்கிப்போய் யாரென விசாரிக்கவும் செய்தனர்.

"இவளும் என் பொண்ணு போல் தான்." என்ற பேச்சோடு வேறு எதையும் கூறாது, அருகில் இருந்த மைதிலியை அணைத்து விடுவித்தார்.

அவர்களது உரிமையான செயற்பாட்டினால் ஏதோ வகை உறவென்பதாய் நினைத்தவர்கள், பின் அவளைப் பற்றிய கேள்விகள் தொடுக்கவில்லை. நேரம் அதன்பாட்டில் நகர, விஜயா வந்து அரைமணி நேரத்தில் ஸ்ரீயும் செல்வத்தோடு வந்துவிட்டான்.

வந்தவன் தாயிடம் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் பின்னால் போடப்பட்டிருந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான். அவன் வந்ததை ஓமப்புகை நடுவில் இருந்த ரகுவும் கண்டு முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"என்ன மச்சான்? ரகு கண்டும் காணாதவன் போல முகத்தைத் திருப்பிட்டிருக்கான். என்னடா உங்களுக்குள்ள பிரச்சனை? இவனுக்காகவாடா நீ இவ்ளோ தூரம் வந்த?" என வினவ,

"டேய் அவனுக்கு கோபமே நான் கடைசி நேரம் வந்தது தான்டா! கல்யாணம் முடியட்டும், சமாளிச்சுப்போம்." என்றவன் கண்கள் எதிர்வரிசையில் அமர்ந்திருந்தவர்களிடம் சென்றது.

செல்வமோ பல மொக்கை கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தவன், ஸ்ரீயிடமிருந்து வந்த, "ம்..." என்ற பதிலைத் தவிர வேறு வார்த்தை வராததனால், அவனைத் திரும்பி பாரத்தான். அவன் கண்களோ சற்று முன்னால் எதிர்வரிசையில் அடுக்கியிருந்த இருக்கையின் புறம் போக,

‘யாம்மாடி! இது என்ன பார்வை? என்னத்த இந்த மாதிரி முழுங்கிறது போல பாக்கிறான்?’ என அவன் பார்வை சென்ற இடம் பார்த்தவனுக்கு அவன் தாய் விஜயா தான் தெரிந்தார்.

பக்கத்தில் இருந்த மைதிலியைத் தெரியவில்லை. அவளை, அவள் பின்இருக்கையில் பருத்த உடல் கொண்டு இருந்த பெண்மணி மறைத்திருந்தாள்.

'என்னடா இது? அம்மா மேல இவ்ளோ காதலா? சும்மா சொல்லக்கூடாது, அம்மா இன்னைக்கு அழகாத்தான் இருக்காங்க.’ என நினைத்தவன், மீண்டும் நண்பனைப் பார்த்தான்.

அவன் பார்வையில் சற்றும் மாற்றமில்லை.

"டேய்!" என உலுக்கியவன், "என்னடா? அவங்க உன்னோட அம்மாடா. யாராவது இதை பார்த்தா தப்பா நினைக்க போறாங்க." என்றான்.

இவன் சொன்னது புரியாமல், "என்ன?" என்றான்.

"என்ன என்ன? இவ்ளோ நேரம் நீ சைட் அடிச்சது உன் அம்மாவை. ஓ! அவங்க பின்பக்கத்தை பார்க்கிறப்போ அது யாருனு தெரியலையோ? இல்லையே, இங்க இருந்து பாக்குறப்போ எனக்கே அது உன்னோட அம்மானு தெரியுதே! உனக்கு உண்மையாவே தெரியலையா என்ன?" என நம்பாமல் செல்வம் கேட்டான்.

அவர் பக்கத்தில் இருந்த மைதிலியை அவனுக்கு தெரியவில்லை என்பது புரிந்தவன், தனக்குள் சிரித்து விட்டு தானும் அதை காட்டிக்கொள்ளாது, "அது அம்மான்னு எனக்கும் தெரியும்டா. அது... அது..." என்றவனுக்கு என்ன சொல்லி சமாளிப்பதென்பது தெரியவில்லை.

"அம்மாவை இந்த மாதிரி பாத்ததில்லையா? அதுதான் அப்படியே பாத்திட்டு இருந்தேன். மத்தபடி ஒன்னுமில்லை. என்னை நீ ஆராய்ச்சி பண்ணது போதும், கல்யாணத்துக்கு வந்தா அத பாரு. என்னை பாத்திட்டிருக்க..." என தான் ஏதோ கல்யாணத்தைப் பார்ப்பதைப் போல் கூறி நண்பனைத் திசை திருப்பிவிட்டு, மைதிலி அழகினை அவள் காணாதவாறு கண்களால் களவாடும் வேலையில் கவனமானான்.

குறித்த முகூர்த்தத்தில் ஐயர் தாலியினை எடுத்து கொடுக்க, மணமகள் கழுத்தில் ரகு தாலியினைக் கட்டியதும், பெரிய பாரம் குறைந்ததைப் போல் விழாவிற்கு வந்தவர்கள், அமைதி நிலை மாறி தமக்குள் சலசலக்க தொடங்கியிருந்தனர்.

படக்குழுவினரோ மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒவ்வொரு விதமாக நிற்கச்சொல்லி, அவர்கள் இருவரையும் வெட்கத்தில் சிவக்க வைக்க, அத்தனை நேரமும் மேடையில் ஒதுங்கி நின்று ஐயர் கூறும் சில சடங்குகளை செய்து கொண்டிருந்த நடுத்தர வயது பெண், தாலிகட்டி முடிந்ததும் மேடையை விட்டு இறங்கியவர் நேராக வந்தது விஜயாவை நாடிதான்.

அவர் அத்தனை சிரத்தையோடு சடங்குகளை செய்வதைப் பார்க்கும் போது, நிச்சயம் அது மாப்பிள்ளையின் அன்னையாகத்தான் இருக்க வேண்டும் என மைதிலி அவரையே பார்த்திருந்தாள்.

அவரும் தம்மையே பார்ப்பதை இடையிடையே கவனித்த மைதிலி, இப்போது மேடையில் இருந்து இறங்கி தம்மை நோக்கி வருவதைப் பார்த்தாள்.

"அக்கா!" என விஜயாவை அழைத்தவறு ஆரத்தழுவியவர்,

"சாரிக்கா! நீங்க வந்தது தெரிஞ்சும் இருந்த வேலையினால உங்களை வரவேற்க முடியல. எப்பிடியிருக்கிங்கக்கா? வீட்டுல எல்லாரும் சுகம் தானே? நீங்க மட்டும் தான் வந்திங்களா? ஸ்ரீ எங்க வரலையா?" என விசாரித்தவர் மைதிலியிடம்,

"அம்மாடி! அந்த இருக்கையில கொஞ்சம் நகர்ந்து இருக்கிறியாடா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திச்சிருக்கோம், கொஞ்சம் பேசணும்." என மிக அன்பாக மைதிலியிடம் கேட்க,

இருவரின் அன்பினைக் கண்டவள், சிறு புன்னகையினை சிந்தியவாறு எழுந்து மற்றைய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அதே நேரம் ஸ்ரீயும் அவர்களிடம் வந்தவன், "நானும் ஏற்கனவே வந்துட்டேன் ஆன்ட்டி. அம்மா கல்யாணத்தை மிக கவனமா பாத்திட்டிருந்தாங்க, பின்னாடியே இருந்திட்டோம். ஆபீஸ்ல கொஞ்ச வேலையினால வேளையோட வரமுடியல. ரகு ரொம்ப கோபமா இருக்கான் போல, நீங்க பேசிட்டிருங்க நான் ரகுவை பார்த்திட்டு வரேன்." என்று மைதிலி புறம் திரும்பாமலே மேடையை நோக்கி சென்றான்.

தன்னைக் கண்டுகொள்ளாது சென்ற ஸ்ரீயையே பார்த்திருந்தவள், தான் இருக்கும் இடம் உணர்ந்து தன் பார்வையை மாற்றிக்கொண்டு விஜயா பேச்சினைக் கவனிக்கலானாள். ஆனாலும் அவளால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒரே இடத்தினில் அமர முடியவில்லை. விஜயாவோ அந்த பெண்ணோடு பழைய கதையெல்லாம் பேசிக்கொண்டிருக்க, பேச்சுத் துணைக்கு எவரும் இல்லாது சலிப்புத் தட்டத் தொடங்கியது..

பார்வையை சுழற்றியவள் கண்களில் விழுந்தது குடிநீர் பகுதி. 'சரி ஒரே இடத்தில் இருப்பதற்கு தண்ணீரை குடிப்பது போலாவது சென்றுவிட்டு வருவோம்.' என நினைத்தவள்,

"அம்மா நீங்க பேசிட்டிருங்க, தாகமா இருக்கு தண்ணீர் குடிச்சிட்டு வந்திடுறேன்." என எழுந்தவள் அந்த கேன் அருகில் சென்று, டம்ளரை எடுக்க அதேநேம் இன்னொரு கையும் அந்த டம்ளரைப் பற்றியது.




தொடரும்...