பகுதி 33
ஆண் ஒருவரின் கை பற்றியதும், சட்டென தன் கையை எடுத்தவள், தலையினைத் திருப்பி அது யாரெனப் பார்த்தாள். அதிசயப் பொருள் போல் அவளையே அவன் பார்க்க, 'எதுக்கு இப்போ முழுங்கிற மாதிரி பார்க்குறான்? இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பார்த்ததே இல்லையோ?' என நினைத்தவளுக்கு, இன்னமும் வந்த வேலையை முடிக்காது அவளையே பார்த்திருப்பது உறுத்த,
'யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?' என நினைத்தவளாய், அவனை நன்றாக ஆராய்ந்தாள். அவன் பார்க்கும் போது தப்பானவன் போல் தெரியவில்லை. ஆனால் அவன் பார்வையும் நல்லவிதமாக இல்லை. நல்லவன் என்றால் இப்படியா ஒரு பெண்ணை வெறிப்பான்?'
தம்மை யாராவது பார்க்கிறார்களா என சுற்றிலும் பார்வையை சுழட்டியவள், அப்படி யாரும் தம்மைப் பார்க்கவில்லை என்பதை அறிந்தவள், 'இப்படி ஒரு தண்ணி வேணுமா?' என நினைத்தவள் மறுநொடியே,
'இவனுக்கு பயந்து நான் ஏன் போகணும்? அப்படியே போனாலும் பின்னால துரத்திட்டு தானே வரப்போறாங்க. திரும்பி முறைச்சா தான் நம்ம பக்கம் தலை வைக்க மாட்டாங்க.' என நினைத்தவளாய்,
"சார்!" என்றாள் அழுத்தமான குரலில்.
எங்கே அது அவன் காதில் விழுந்தது. "சார்!" என்றாள் இம்முறை கோபக்குரலில்.
கனவில் இருந்து எழுந்தவனைப் போல் திடுக்கிட்டு நின்றான். எதிரில் நின்றவளின் கோபப் பார்வையில், சுற்றும் முற்றும் பார்வையை மேயவிட்டு அப்பாவி போல் மைதிலியைப் பார்த்தான்.
"கொஞ்சம் சீக்கிரமா தண்ணீரை குடிச்சிட்டு டம்ளரை தந்தா, நானும் என் வேலையை பார்ப்பேன். இல்ல, முழிச்சிட்டே கனவுதான் காணுவிங்கன்னா, தயவு செய்து அந்த டம்ளரை தந்துட்டு ஓரமாக போய் கனவு காணுங்க. மத்தவங்களுக்காவது தொந்தரவு இல்லாமல் இருக்கும்." என்றாள் நக்கலாக.
அவள் அப்படி கூறியதும் தான், அவளது ஆடம்பரமற்ற அழகில் தன்னை மறந்து, அவளையே பார்த்திருந்ததனால் தான் இப்படி கூறுகிறாள் என்பதை புரிந்தவனாய்,
"சாரி! சாரி... ஏதோ யோசனையில இருந்துட்டேன்." என்றவன்,
"இந்தாங்க, நீங்களே குடிச்சிட்டு தாங்க." என டம்ளரை அவளிடம் நீட்டினான். அவனது தடுமாற்றத்தையைப் பார்த்தவாறு டம்ளரை வாங்கி முழுவதும் நீர் நிறைத்தவள் அதை அவனிடம் நீட்டி, "இது இப்போ உங்களுக்குத்தான் தேவை. நீங்களே முதல்ல குடியுங்க. ரொம்ப பதட்டமா இருக்கிங்க." என சிரித்தவாறே கூறிட, மறுக்காமல் நடுங்கும் கைகளால் அதை வாங்கி வாயில் சரித்தான்.
"தாங்க்ஸ் ம்மா! உன்னை அந்த மாதிரி பாத்ததும் என்னை தப்பா நினைச்சிடாத. நானும் எவ்ளோ பொண்ணுங்கள பார்த்திருக்கேன், ஆனா உன்னை போல ஆடம்பரமில்லாத பொண்ண பார்த்ததே இல்ல. ரொம்ப சிம்பிளான அலங்காரம். இருந்தும் இத்தனை பேர்ல தெரியாத வசீகரம் உன்கிட்ட மட்டும் தான் தெரியுது. அந்த லக்ஷ்மியே நேரில வந்தது போல இருக்க. அதனால தான் உன்னை மெய் மறந்து பாத்தேனே தவிர, தப்பான எண்ணம் எல்லாம் இல்லம்மா. நான் தவறான எண்ணத்தோடு தான் பாத்தேன்னு நினைச்சன்னா மன்னிச்சிடு!" என்று அவள் முன் நின்றவன் குற்ற உணர்வோடு கூற,
"அய்யோ அப்பிடில்ல ண்ணா..." என சாரில் இருந்து அண்ணாவிற்கு தாவியவள்,
"நீங்க அந்த மாதிரி பாத்ததும் தான் கோபமா பேசினேன். இப்போ நீங்க பேசுறதிலயே தெரியுது, நீங்க தப்பானவர் இல்லன்னு. உண்மை தெரியாம நானும் வார்த்தையை விட்டுட்டேன், என்னையும் மன்னிச்சிடுங்க ண்ணா!" என்றாள்.
"என்னம்மா நீ? நான் தானே உன்னை பொது இடம்னு இல்லாம முறைச்சேன். உன்னோட இடத்தில் யாரு இருந்தாலும செருப்பாலயே அடிச்சிருப்பாங்க. நல்லவேளை நான் தப்பிச்சேன்." என்றான் சிரித்து.
அவனுடன் சேர்ந்து சிரித்தவள், அறிமுகத்திற்காய் கையினை நீட்டி, "நான் மைதிலி!" என்றாள்.
மைதிலி என்ற பெயரைக் கேட்டவனுக்கு, அந்த பெயரை எங்கோ கேட்டது போல் இருந்தாலும் அவளைக் காக்க வைக்காது, "செல்வம்! மெடிக்கல் ரெப்பா இருக்கேன்." என்றவனுக்கு அந்த நேரம் பார்த்து ஸ்ரீ நினைவில் வர,
"நான் வந்து ரொம்ப நேரமாச்சு, அப்புறமா உன்கிட்ட பேசுறேன்." என்றவன் வேகமாக மேடை நோக்கி ஓட,
போகும் அவனையே பார்த்தவள், "ம்... இவரும் நல்லவராத்தான் இருக்காரு." என்றவாறு தன் வந்த வேலையைப் பார்க்கலானாள்.
ஸ்ரீயைத் தேடி மேடை வந்த செல்வத்திற்கோ, மைதிலியின் இனிவான அன்பு கலந்த பேச்சும், அவளது ஆடம்பரமில்லாத அழகும், அழகிருந்தும் அகம்பாவமில்லாத குணமும் ரொம்பவே பிடித்துப் போனது. அவளை சந்தித்து பேசியதில் ஏதோ ஒரு நிறைவு.
இங்கு ரகுவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் முதுகினை சொரிந்தவன், "மச்சான் என்கூட வாயேன்." என்று நிலமை தெரியாது செல்வம் ஸ்ரீயை சுரண்ட,
"கொஞ்சம் பேசாம இரு மச்சான். இவன் இப்போ தான் சமாதானமாகுறான். நீ கெடுத்திடாத, அந்த பக்கம் போடா!" என்று அவனை விரட்ட,
"டேய்! இவனை அப்புறமா கூட சமாதானப்படுத்தலாம். என்கூட வா, உனக்கு ஒரு ஏஞ்சலை அறிமுகப்டுத்தணும்." என அவனை நச்சரிக்க,
ரகுவோ செல்வத்தை முறைத்தவன், "போடா போ... அதுதான் சார் கூப்பிடுறார்ல, அவரை போய் கவனி." என்றான் ரகு கோபமாய்.
"டேய் கொஞ்ச நேரம் வாய வச்சிட்டு சும்மா இருடா!" என்று செல்வத்தை அடக்கியவன்,
"மச்சான் அவன் ஒரு லூசுடா! அவன் பேச்சை நானே பெருசா எடுக்க மாட்டேன், நீ எதுக்குடா பெருசா எடுக்கிற?" என்றவனது பேச்சில் செல்வம், சந்தானத்தைப் போல் சிவாஜி ரேன்ஞ்சுக்கு வாயை சுளித்து, நெஞ்சில் கைகளால் குத்தி, ரொம்ப ஓவராக நடித்தவனை கண்டு சிரித்தனர் இருவரும்.
"புரிஞ்சுக்கடா, உனக்கு உன் அப்பா பிஸினஸ்ஸ பாத்துப்பாரு. ஆனா எனக்கு? நான் தானேடா எல்லாமே பாக்கணும்." என்று சமாதான உடன்படிக்கையில் இறங்க,
"நீ என்னவேணாலும் சொல்லு மச்சான், உன் கல்யாணத்துக்கு நீ செய்ததை போல தான்டா கடைசி நேரத்தில நானும் வருவேன்." என்றான்.
கல்யாணம் ஒன்னு நடந்தா தானே என நினைத்தவன், "ஓகே மச்சான், உன் டீலுக்கு நான் சம்மதிக்கிறேன். நீ வரல்லன்னா கூட நான் கேக்க மாட்டேன்டா." என்றவன் அறியவில்லை, இந்த திருமணத்தில் தான் தன் திருமணப் பேச்சும் உறுதி செய்யப் படப்போவதை.
"டேய்! இங்கேயும் வந்து டீல், பிஸினஸ் பேச்சு தானாடா? மாப்பிள்ளை அங்க பாருங்க, பொண்ணு ரொம்ப நேரமா உங்களையே முறைச்சு பாத்திட்டிருக்காங்க. போய் பொண்ணு பக்கத்தில உக்காருங்க மாப்பிள்ளை. தாலிய கட்டிட்டு இவன்கூட ரொமான்ஸ் பண்ணிட்டுருந்தா பொண்ணு முறைக்கத்தானே செய்யும். போய் அவங்கள சமாதானம் பண்ணுங்க. இல்லைனா நைட்டுக்கு எதுவும் இல்லனு சொல்லிடப் போறாங்க. அப்புறம் ஊரை கூட்டி கல்யாணம் பண்ணதும் வேஸ்ட் ஆகிடும்.
பாயாசத்தை பக்கத்திலயே வச்சிட்டு ருசிக்கவும் முடியாம, குடிக்கவும் முடியாம புலம்பிட்டு தலையணையை கட்டிப்பிடிச்சிட்டு தூங்க வேண்டியதாகிடும். போங்க மாப்பிள்ளை! போய் அவங்க பக்கம் உக்காருங்க." என நக்கல் செய்து அவனை விரட்டினான்.
"இவன் உன் நண்பன் என்கிறதனால, சும்மா விடுறேன். சரியான வயித்தெரிச்சல் புடிச்சவன்டா! என்ன மாதிரியான சாபம் விடுறான் பாரு? இந்த நாளுக்காக எப்படிலாம் நாம ஏங்கி தவிச்சிருப்போம். கெட்டெண்ணம் புடிச்சவன். இந்த மாதிரி வயித்தெரிச்சல் புடிச்சவனுக்கு கல்யாணமே நடக்காதுடா! நடந்தாலும் ஃபர்ஸ்ட் நைட்ல இவன் பொண்டாட்டி ஓடி போயிடுவா! முதல்ல இந்த பக்கி பயல அந்த பக்கமா கூட்டிட்டு போயிடு. அப்புறம் இந்த நாரபய சொன்னது பலிச்சிடப்போகுது." என்றவன், ஸ்ரீயை போக சொல்லிவிட்டு பெண்ணருகில் அமர்ந்து செல்வத்தை முறைத்தான்.
ரகுவின் பேச்சில் காண்டாகிய ஸ்ரீ செல்வத்தை இழுத்துக்கொண்டு ஓரமாக வந்தவன், "ஏன்டா! வந்த இடத்தில வாய சும்மா வச்சிட்டு இருந்தா என்ன? அவன்கிட்ட வாய விட்டு நல்லா வாங்கி கட்டினியா?" என்றான் செல்வத்தைக் கண்டிக்கும் விதமாய்.
"நீயெல்லாம் நண்பனாடா? என்னை ஒருத்தன் அசிங்கப் படுத்தியிருக்கான். அவனை கண்டிக்காம, என்னை சொல்லிட்டிருக்க? நண்பன்னா என்னன்னு தெரியுமாடா? நண்பன் தப்பே செய்திருந்தாலும், இன்னொருத்தன்கிட்ட அவனை விட்டுக்குடுக்க கூடாதுடா. ஆனா நீ, ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு கூட்டிவந்து திட்டு வாங்கித் தர. போடா நீயும் உன் நட்பும்..." என்று அவன் கையினை உதறி, எதிர்புறம் நடந்தவன் கையை ஓடிப்போய் பற்றியவன்,
"சரி விடுடா! இதெல்லாம் புதுசா என்ன? ஆமா, ரகு கூட பேச விடாம ஏதோ கூப்பிட்டல்ல?" என்றான் பேச்சை மாற்றுவதாய்.
"ஆமால, பாரு அந்த ரகுவினால முக்கியமானவங்கள அறிமுகப்படுத்த மறந்தே போனேன்." என்று நின்ற இடத்திலிருந்து குடிநீர் பகுதிக்கு பார்வையைத் திருப்பினான்.
"அப்படி யாரு அந்த முக்கியமான நபர்? இங்க யாரை தெரியும் உனக்கு?" என்றான் நம்பாது.
"இங்க யாரை தெரிஞ்சிடப் போகுது? இப்போ கொஞ்சம் முன்னாடி தான் பாத்தேன். என்ன ஒரு அழகு! அம்மன் சிலை தான்டா. நல்லா வேற பேசுறா தெரியுமா?" என்றான்.
"என்னடா மச்சான்! ஒரு பொண்ண இந்தளவுக்கு ரசிச்சிருக்க? என்ன லவ்வா?"
"ச்சீ... உன் புத்தி! கண்டதும் காதல் கணை தொடுக்க நான் என்ன உன்னாட்டம் மன்மதனா? அப்படி எதுவுமில்லை." என்றான்.
'பார்த்தேன் என்றதற்கே லவ் என்றால், பேசினேன் என்று சொன்னால் உறுதியே செய்துவிடுவான்.
அந்த பெண்ணை தவறாகவா நினைக்க தோன்றும்? கையெடுத்து கும்பிடத்தான் தோன்றும். இவனுக்கு அதெல்லாம் புரியாது. பார்த்தால் சில வேளை அவனும் உணரலாம்.' என நினைத்தவன்,
"தண்ணீர் குடிக்க போனேன்டா. யார் கூடவோ பேசிட்டிருந்தா. பேசும் போது எவ்ளோ இனிமையா பேசினா தெரியுமா? நீ அவளை பார்த்தே ஆகணும். பெண்கள்ல இப்படியும் இருக்காங்கனு நீயும் புரிஞ்சுக்கணும்." என்றவன் அந்த இடம் பூராகவும் தேடினான்.
அதே நேரம் மைதிலியும் தண்ணீரைக் குடித்துவிட்டு, மண்டபத்தின் பிரமாண்டத்தை ஒவ்வொன்றாக ரசித்தவாறு வந்தவள், வரிசையாக இருந்த பல கதவுகளுக்கு மறைப்பாக இருந்த கரும்பச்சை நிற திரைச்சீலையின் மென்மையை வருடிப்பார்க்க செல்வமும் அவளைக் கண்டு விட்டான்.
"மச்சான் அதோ பார்றா... நான் சொன்னது அவளைத்தான்..." அவள் நின்ற திசையில் கை நீட்டினான்.
செல்வம் காட்டும் முன்னரே ஸ்ரீ அவளைக் கண்டு விட்டான்.
வந்ததில் இருந்து பின்னாலிருந்து பாத்தவனால் முழுமையாக அவள் அழகை ரசிக்க முடியவில்லை. இப்போதுதான் தனது தேர்வான பிங்க் நிற பாவாடை தாவணியில் தன்னவள் தேவதை போல் இருப்பதைக் கண்டான். கண்கள் ஏனோ அவளிடமிருந்து விடுதலையாக மறுத்தது. தன் தேர்வு எப்போதுமே சோடை போகாது என நினைத்தவனாய், கண்களால் அவளைத் தனக்குள்ளேயே புதைத்துவிடும் எண்ணம் போலும். நண்பனின் பார்வையில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவன், தான் அவளைக் காட்டியதால் தான் அந்த மாதிரி பார்க்கிறான் என நினைத்தவன்,
"ஸ்ரீ!" என்று அழைத்தான்.
குண்டு விழுந்தாலும் தற்போது அவன் காதுகளில் அது விழாது.
"டேய்! என்னடா இந்த மாதிரி பாக்கிற?" என்றான் அவனை உலுக்கி.
"இதே போல தான்டா நானும் அவளைப் பாத்ததும் சிலையாகி நின்னேன். உண்மையில அவ முகத்தில ஒரு மென்மை தெரியுதுல்ல?" என ஆர்வமாக கேட்க,
செல்வம் உலுக்கியதில் சுயத்திற்கு வந்தவன் அவன் பேச்சைக் கேட்டு, தன் இதழை ஓரங்கட்டி கேலி நகை பூத்து,
"அழகுதான்டா! ஆனா அத்தனையும் திமிர்." என விரக்தி போல் கூற,
அவனது பேச்சு புரியாது, "எப்படி அவ திமிர் புடிச்சவ என்கிற? அவளை பார்க்க அந்த மாதிரி தெரியலையே? அவ எளிமையான தோற்றமே நல்ல பொண்ணுனு சொல்லுதே..." என்றான் அவனது பேச்சின் மாற்றத்தில்.
"அவ நல்ல பொண்ணா? பேசிப் பார்த்தியா நீ? பொண்ணே கிடைக்காம, அவ பின்னாடி எல்லாரும் அலையுறது போல பேசுவா." என்றவனை இப்போதும் செல்வம் புரியாது பார்க்க,
அவனது பார்வையின் பொருள் விளங்கியவன், "ஆமாடா!" என்றவன், தன்னை முதல் தடவை பார்த்த போது செய்த உதவிக்கு நன்றி கூட கூறாமல், பார்த்ததும் பொறுக்கி என்றதில் இருந்து இறுதியாக அவள் தன்னை கேவலமாக பேசியவரை ஒன்று விடாமல் கூறியவன்,
"எப்படிடா முதல் பார்வையிலேயே என்னை தப்பானவன்னு முடிவு பண்ணலாம்? அது தப்பில்லையா? அப்புறம் நடந்ததை வச்சு என்னை ஒரு கேவலமான மனுஷனா தான்டா பார்க்கிறா. அப்போ அவளுக்கு, தான் அழகி என்ற திமிர் தானடா?" என்று குரலில் வீராப்பாக பேசினாலும், கண்கள் அவளை மேய்ந்தவாறு இருந்தது.
"எப்படி மச்சான்! முதல் பார்வையிலேயே சரியா சொன்னா நீ பொறுக்கினு?" என்று செல்வம் மனதில் தோன்றியதைப் பட்டென கேட்டே விட்டான்.
அவளைப் பார்ப்பதை விடுத்து செல்வத்தைப் பார்த்து முறைத்தான் ஸ்ரீ. அவனது கோபத்தைப் புரிந்தவனாய்,
"அது நான் என்ன சொல்ல வந்தேன்னா... எப்படி அவ முதல் பார்வையிலயே உன்னை பற்றி சரியா தெரியாம, பொறுக்கினு சொல்லலாம்? இதையே தெரிஞ்சு சொல்லிருந்தா நானாவது ஏத்துக்கிட்டிருப்பேன்." என்றவனை மீண்டும் அவன் முறைக்க,
"எனக்கு அவளோட திமிரு பிடிக்கல மச்சான்.”
“நீ அவளை சும்மாவா விட்ட?" என பேச்சை மாற்றினான்.
இல்லை என தலையாட்டியவனின் பதிலில் ஒரு நொடி அதிர்ந்தவன், அதை ஸ்ரீயிடம் காட்டிக்கொள்ளாது,
"அவளை என்னடா பண்ண?" என ஆர்வமாக கேட்பது போல் வினவினாலும், பாவம் நல்ல பெண்ணுக்கு இவனால் தீங்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாது என மனசு பதை பதைத்தது.
மீண்டும் இல்லை என்ற ஸ்ரீயின் தலை அசைவைப் புரிந்துகொள்ள முடியாதவனாய், "என்னடா மண்டையையே ஆட்டிட்டிருக்க, ஒழுங்கா பதில் சொல்லு. அப்போ நீ அவளை எதுவுமே பண்ணலையா?"
"இல்லடா, முன்னாடி பழி வாங்கணும்னு நினைச்சேன். பட் நாளாக நாளாக அது தப்புனு தோன, அந்த எண்ணத்தையே விட்டுட்டேன் மச்சான்." என்றவன் பார்வையோ மைதிலி சென்ற திசையிலேயே போனது.
அவனது பார்வையும் பேச்சும் அவனை வேறு ஸ்ரீயாக செல்வத்துக்கு தெரிய, அவனை வினோதமாக பார்த்தவன் எதுவோ தோன்றியவனாய், "அப்போ இவ தானாடா அந்த கனகரெட்ணத்துகிட்ட மாட்டிகிட்டு, நீ காப்பாத்தின மைதிலி?" என தன் சந்தேகத்தை வினவியவனுக்கு, தன்னை அறிமுகம் செய்யும் போது மைதிலி தன் பெயரை மைதிலி என்றது நினைவில் வந்தது.
இப்போது தனக்கு உறுதியானாலும் ஸ்ரீயை கேட்டுவிட்டு அவன் பதிலுக்காக காத்திருந்தான்.
அவனும் நண்பனின் காத்திருப்பு புரிந்து ஆம் என தலையசைக்க, ‘அதான பார்த்தேன், மச்சான் பார்வையே சரியில்லையேனு... இவளுக்காக நீ அன்னைக்கு அந்த மாதிரி கொந்தளிச்சதில தப்பே இல்லடா. எவ்வளவு நல்ல பொண்ணு! இருந்தாலும் உன்னை அசிங்க அசிங்கமா திட்டினவளையே இந்த மாதிரி ரசிக்க தோனுதுனா, இது லவ்வில்லாமல் வேற என்ன? ஆனா உன் மனசுதான் அதை புரிஞ்சுக்காமல் அடம் பிடிக்குது, தெளிய வச்சிடுவோம்.’ என தனக்குள் முடிவெடுத்தவன்,
"அப்போ இவளை நீ பழி தீர்க்கல, அது ஏன்னு உனக்கு ஏதாவது தோனியிருக்கா?"
"என்ன தோனணும்?" என்றான் வெடுக்கென்று.
"அத நான்தான் உன்னை கேட்கணும். ஏன்னா உன்னோட எதிரிங்களை நீ சும்மா விட்டதில்லையே! மறுபடியும் அதே தவறை அவங்க செய்ய பயப்படும் அளவுக்கு எதாவது செய்வ. ஆனா அந்த மைதிலி விஷயத்தில பலமுறை, அவ உன்னை தவறா பேசியும் அமைதியா இருக்கன்னா என்ன காரணம்? அதுவும் கடைசியா அவ அசிங்கமா பேசினதை என்னாலயே தாங்க முடியல. நீயா அமைதியா இருந்த?" என ஸ்ரீ மனதை அவனுக்கு உணர்த்தும் நோக்குடன் செல்வம் கேட்க,
அவனது பேச்சில் கொஞ்சமாக இமைகள் முடிச்சிட யோசிப்பது போல் பாவனை செய்தவன், "ஆமாடா, நீ சொல்லுறப்ப தான் என் தவறு புரியுது. என்னோட குணம் இதில்ல. இவ விஷயத்தில கொஞ்சம் புத்தி பேதலிச்சு இருந்திருக்கிறேன். நான் அவளை சும்மா விட்டிருக்க கூடாதுடா. வாழ்க்கையில மறக்காத அளவுக்கு எதாவது செய்திருந்தேன்னா, மறுபடியும் என்னை கேவலமா பேசியிருக்க மாட்டாள்ல. ஒருமுறை இல்லடா, பலமுறை அவகிட்ட அசிங்கப்பட்டுட்டேன். அதுக்கு அவ பதில் சொல்லியே ஆகணும். நான் கொடுக்கிற பதிலடியைக் காலத்துக்கும் மறக்கவே கூடாது. அதை நான் பக்கத்தில இருந்து பாக்கணும்." என்றான் ஸ்ரீ வஞ்சத்தோடு.
"க்ஹூம்... கிழிஞ்சுது! பிள்ளையார் பிடிச்சா பூதம்ல கிளம்பிடுச்சு. தன் காதலை உணருவான்னு மூச்சு விடாமல் பேசி, பக்கிப்பய பழி உணர்வைத் தூண்டி விட்டுட்டனோ? இந்த ஜென்மத்தில உனக்கு நல்லதே நடக்காதுடா!’ என்று சாபமிட்டான் மனதில்.
"ஒரு ஐடியா சொல்லு மச்சி! என்ன பண்ணா இதெல்லாம் நடக்கும்?" என்றான்.
"ஐடியா? அவளுக்கெதிரா நானு?" சலித்தவன், "ஒரே ஒரு ஐடியா இருக்கு, செய்றியா?" என்றான் விரக்தியின் உச்சமாய்.
"பேசாமல் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிடு. அவளுக்கு உன்னை சுத்தமா பிடிக்காது. பிடிக்காதவங்க கூட இருக்கிறதை விட, பெரிய தண்டனை என்ன இருக்க போகுது? அப்புறம் எப்போ தோனுதோ டிவோர்ஸ் குடுத்துடு. காலத்துக்கும் உன்னை மறக்கவும் மாட்டா! நீயும் அவ கஷ்டத்தை பக்கத்திலேயே இருந்து பார்த்தது போல இருக்கும். இது எப்படி இருக்கு?" என்றவன் எண்ணம் என்னவோ, ஸ்ரீயை வெறுப்பேற்றுவது தான்.
அவனுக்கு தான் தெரியுமே, கல்யாணப் பேச்சினை எடுத்தாலே நழுவி செல்வான் என்று. பழி வாங்கும் செயலுக்காக, அதுவும் வேண்டாத ஒருத்தியை பழி வாங்குவதற்காகவா பிடித்தமில்லாத காரியத்திற்கு இணங்கப் போகிறான்? அது அவனுக்கு தரும் தண்டனை ஆகாதா?
செல்வத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்தவன், "இதுவும் நல்ல ஐடியாவாத் தான் இருக்கு. அப்படின்னா நாளைக்கே டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணு." என்று சொல்ல திகைத்தே போனான் செல்வம்.
"என்னடா சொல்ற? டிவோர்ஸா? யாருக்குடா?" அதிர்ந்து கேட்க,
"எனக்கும் மைதிலிக்கும்." என்றான் கூலாக.
"டேய்! நடக்காத கல்யாணத்துக்கு எவன்டா டிவோர்ஸ் தருவான்?" என்றான் ஆத்திரமாக.
"நடக்காத கல்யாணமில்லை மச்சி, நடக்க போற கல்யாணம். நான் முடிவு பண்ணிட்டேன், நீ டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணு."
"டேய் பைத்தியம் புடிச்சவனே! நடந்த கல்யாணத்துக்கே டிவோர்ஸ் வாங்கிறது குதிரை கொம்புடா. இதில நடக்காத கல்யாணத்துக்கு டிவோர்ஸா?" என கத்தியவனை ஸ்ரீ முறைக்க,
அவனது முறைப்பில் கொஞ்சம் சுருதியை இறக்கியவன், "மச்சி, சட்டத்தில நடக்க போற கல்யாணத்துக்கு எல்லாம் டிவோர்ஸ் அப்ளை பண்ண முடியாதுடா. கல்யாணமாகி கடைசி ஒரு வருஷமாவது ஆகணும்." என எடுத்துக் கூற,
"அத பத்தி எனக்கு தெரியாது. ஐடியா குடுத்தவன் நீ தான? என்ன செய்வியோ, ஏது செய்வியோ... கல்யாணமாகி ஆறே மாதத்தில எனக்கு டிவோர்ஸ் வேணும். என் கூட இருந்த காலம் மட்டும் அவளுக்கு தண்டனையா இருக்க கூடாது, அவ என்னை விட்டு விலகினாலும் இந்த சமுதாயம் அவளை கேவலமா பார்க்கிற பார்வையில, ஏன்டா இவனை பகைச்சோம்னு யோசிக்கணும்." என ஸ்ரீ மனதிலிருந்த காதலைக் கோபம் மறைத்திருக்க, அவளை வஞ்சம் தீர்ப்பதற்கான முதல் அடியினை எடுத்து வைக்க தயாராகினான்.
"என்னடா நீ? அப்படி எதுவும் செய்திடாதடா. நான் உன் பதில்ல காண்டாகி உனக்கு பிடிக்காத கல்யாணத்தை நீ செய்ய மாட்டனு நினைச்சு சொன்னதுடா. அதையே உண்மைனு நினைச்சு, ஒரு பொண்ணு வாழ்க்கையோட விளையாடுறது தப்பு."
"ஊஷ்..." என்றான் திடீரென செல்வத்தின் பேச்சை இடை நிறுத்துவதாய்.
"கொஞ்சம் அமைதியா இரு!" என்று சம்மந்தமே அற்று செல்வத்தின் வாயினை அடைத்தவன் பார்வையோ, சற்று தள்ளி நின்று பேசிய ஆண்களில் நிலைத்தது.
"என்னடா?" என்றான் செல்வம்.
"கொஞ்சம் பொறு சொல்றேன்." என்றவன் பார்வை இம்முறை மைதிலியையும் கவனித்தது.
அவளும் அந்த இரு ஆண்களில் ஒருவனையே ஆராய்ந்தாள். அங்கு நின்றவனோ பட்டு வேட்டி சட்டையுடன், வந்தவர்களைப் பார்த்து புன்னகைப்பதும், பின் தன்னை தேடி வந்தவர்களிடம் ஒரு, இரு வார்த்தைகள் பேசுவதும், விடை கொடுப்பதும் தன்னோடு உரையாடியபடி நின்றவனுடன் இடையிடையே பேசுவதுமாக நின்றவனைக் கண்ட மைதிலி,
அவனை அந்த இடத்தில் எதிர்பாராததனால் சந்தோஷ மிகுதியில், ‘அத்தான்!’ என்று அழைக்க வந்தவள் மண்டபம் முழுவதும் ஆட்கள் நிறைந்திருப்பதை உணர்ந்து, ‘இது ரஞ்சித் அத்தான் தானே? அவரு எப்படி இங்க? இது அவரில்லையோ?’ என தனக்குள் கேட்டவள்,
அவன் சற்று தொலைவில் நின்றதனால் இம்முறை அவனை அழையாமல், அவனிடம் பேசிவிடும் நோக்கில் அவன் நின்ற இடம் நகர்ந்தாள்.
அதே நேரம் அவனும் அந்த ஆணுடன் பேசிவிட்டு, மண்டபத்தின் சுவரோரம் ஒட்டியிருந்த கதவினுள் நுழைய, மைதிலியும் அந்த கதவு வழி நுழைந்தாள்.
ஆம், அது சாப்பாட்டு பகுதி. தாலி கட்டி முடிந்த கையோடு பந்தி பரிமாற தொடங்கியாயிற்று. அதை மைதிலியும் நன்கு அறிவாள். மண்டபத்தினுள் ஆட்கள் நடமாட்டம் குறைந்ததனால் தானே மண்டபத்தை சுற்றிப் பார்க்கவே ஆரம்பித்தாள். பந்தியில் உண்பவர்களை மிக சிரத்தையோடு பரிமாறுபவர்கள் கவனிக்க,
ரஞ்சித்தும் பந்தியில் உண்பவர்களிடம் இடையில் வந்து, "என்ன போடட்டும்? பருப்பு வைக்கவா? பொரியல் வைக்கவா?" என கேட்டதோடு நில்லாமல், "தம்பி இந்த இலைக்கு பொரியல் போடு!" என்று பரிமாறியவனுக்கு உத்தரவிட்டான்.
பக்கத்தில் இருந்தவரோ, "மாப்பிள்ளை பாயாசம் கொண்டு வாங்க." என கேட்டவரிடம் புன்னகையினைப் பரிசாக தந்துவிட்டு, "இதோ எடு்த்திட்டு வரேன் ய்யா!" என்றவாறு சமையல் பகுதிக்குள் நுழைந்தான்.
அவன் பின்னாலேயே ஓடினான், மண்டபத்தில் அவனுடன் நின்று பேசிக்கொண்டிருந்த மற்றையவன். ரஞ்சித்தை மற்றவர்கள் அறியாது ஓரமா தள்ளிக் கொண்டு போனவன்,
"என்னடா நடக்குதிங்க? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலடா. தெரியாமல் தான் கேக்குறேன், நீ செய்யிறது உனக்கே சரினு படுதா? ஏதோ உன் வீட்டு விஷேசம் போல தலைமை தாங்கி முன்னாடி நின்னு பாத்துக்குற. ஊர்ல ஒருத்தி அத்தான் அத்தான்னு உன்னை நினைச்சு உருகுறாளே, அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சியா? கிராமத்து பொண்ணுடா! இந்த விஷயம் தெரிஞ்சா தற்கொலை ஏதாவது பண்ணிக்க போறா." என்றான் அவன்.
"ஏய்! கொஞ்சம் சும்மா இருக்கியா?" என்றான் அவன் கோபமாக.
தொடரும்…