பகுதி 36
ஒரு மணியைத் தாண்டி, இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வழமையாக ஒரு மணிக்கு சாப்பாட்டிற்கு வருபவன் ஏனோ இன்று வரவில்லை. எல்லோரும் உண்டு முடித்து, தத்தம் வேலையினைப் பார்க்க சென்றதும் வந்தவன், மைதிலி கிளாஸ்கு போயிட்டாளா?" என்றான் தெய்வானையிடம் எடுத்த எடுப்பில்.
வந்ததும் அவளைக் கேட்பது அவளுக்குள் பல கேள்வியினை விதைத்தாலும் பதிலை எதிர்பார்த்திருப்பவனிடம், "இப்போ கொஞ்சம் முன்னாடி தான் போனா." என்றாள்.
"ம்ம்... அம்மா தூங்கிட்டாங்களா? அவங்க கூட கொஞ்சம் பேசணுமே?"
"இப்போ தான் தம்பி படுக்க வச்சிட்டு வந்தேன், இப்போ போனா பேசலாம்." என்றவளிடம், "சரிக்கா." என்றவாறு தாயின் அறையில் நுழைந்தான்.
இங்கு விஜயாவும் நீட்டி நிமிர்ந்து விட்டத்தைப் பார்த்தவாறு தூங்காது யோசனையில் அமர்ந்திருக்க, "அம்மா!" என்று அவர் அருகில் வந்தவன், ஓரமாக இருந்த இருக்கையை இழுத்து அமர்ந்து, "தூங்காம யோசிச்சிட்டு இருக்கிங்க போல?" என்றான்.
"க்ஹூம்..." என்று பெரிய மூச்சொன்றை வெளியேற்றியவர்,
"என்ன செய்ய? கனவில மட்டும் தானே என்னோட ஆசையை நிறைவேற்ற முடியும். நிஜத்தில அதெல்லாமல் நடக்கிற காரியமா என்ன? இல்ல, நீதான் அதை நிறைவேத்திடுவியா?" என்றார் விரக்தியாய்.
"எது உங்க ஆசை? எதை நீங்க கேட்டு நான் மறுத்தேன்?" என்றான் அவனும் விடாது.
"இந்த வயசில எனக்கு என்ன ஆசை வரப்போகுது? காலகாலத்துக்கு உன்னை ஒருத்திக்கிட்ட பிடிச்சு குடுத்து, என் பேரப் பசங்கள பார்த்திடுவோம்னா, க்ஹூம்... அந்த பேச்சை எடுத்தாலே எல்லார் வாயையும் அடைச்சிடுறியே! காலத்துக்கும் இந்த மாதிரியே ஏங்கிட்டே போய் சேரவேண்டியது தான்." ஏக்கத்தோடு கூறி முடித்தார்.
"அது வந்து..." என சங்கடமாக இழுத்தவன், பின் ஒரு திடத்தினை தன்னுள் கொண்டு வந்தவனாய், "நானும் அதை பத்திதான் பேசணும்னு வந்தேன்." என்று பொடி வைத்து பேசியவன்,
முகத்தினில் எந்தவித உணர்வினையும் காட்டாமல், "எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்மா!" என்றதும் அதிர்ந்து தெளிந்த விஜயா முகத்தில், எல்லை இல்லா சந்தோஷம்.
"ஸ்ரீ, நீ உண்மையை தான் சொல்லுறீயா? என்கூட விளையாடலையே?" என்றார் மகன் மாற்றத்தை நம்பாமல்.
"இல்லம்மா, எனக்கு சம்மதம் தான். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன்." என்றவனது பதிலில்,
விஜயா முகத்தில் எரிந்த அத்தனை மின்குமிழும் ஒரு நொடியில் மங்கி களையிழந்தது, "என்ன ஸ்ரீ அது?" என்றவர் மனமோ,
எங்கு மகன் தன்னை மகிழ்விப்பதற்காக சம்மதம் சொல்லிவிட்டு, தனக்கு வரப்போகிறவள் அப்படி, இப்படி வேண்டும் என்று ஆயிரம் நிபந்தனை இட்டு, இப்படியானவள் இந்த உலகிலே இல்லை என தேட முடியாத அளவிற்கு பெண் கேட்பானோ?' என நினைத்து, அவன் பதிலுக்காய் காத்திருந்தார்.
"உங்க ஆசைப்படியே நான் கல்யாணம் செய்துக்கிறேன். அது மைதிலியா இருந்தா மட்டும் தான். அவளை எனக்கு கட்டி வைக்கிறீங்கனா சொல்லுங்க, நாளைக்கே தாலி கட்டிக்கிறேன்." என்று உறுதியுடன் கூறியவனுக்கு என்ன பதில் கூறுவதென தெரியவில்லை.
"என்னடா சொல்லுற? அவ சின்ன பொண்ணுடா. அதோடு அவ நல்ல பொண்ணு வேற, இதுக்கு அவ ஒத்துக்க மாட்டா. வேற நல்ல பொண்ணா, உனக்கு ஏத்த பொண்ணா அம்மா கட்டி வைக்கிறேன். இல்லன்னா யாரை உனக்கு பிடிக்குதோ சொல்லு, உடனே அவங்க வீட்டுல போய் பேசுறோம், இவ வேண்டாம்டா." என்றவரை முறைத்தவன்,
"அவ நல்ல பொண்ணுனா என்னம்மா அர்த்தம்? நான் கெட்டவன்னு சொல்ல வரீங்களா?" என்றான் கோபமாய்.
அவனது இந்த கேள்வியில், பொருள் பிழையினை அறிந்து கொண்ட விஜயா, "நான் அந்த அர்த்தத்தில சொல்லலைடா..." என தடுமாறியவர்,
"என் பையனை நான் தப்பா சொல்லுவேனா? நீ தப்பே செய்தாலும் பெத்தவளுக்கு அது சரியாத்தான் படும். நான் நீ சொன்ன அர்த்தத்தில சொல்லல. மைதிலி உனக்கு ஏத்தவ இல்ல. அவ வாழ்க்கையில ரொம்ப அடிபட்டுட்டா, அதில இருந்து அவ மீண்டு வர ரொம்ப நாள் ஆகும் ஸ்ரீ. அதுவுமில்லாமல் அவ சின்ன பொண்ணு. அவ குடும்பத்தைத் தாங்குற பொறுப்பு அவ கையில தான் இருக்கு. இப்போ போய் இதைபேசி நாமளும் அவளை நோகடிக்கணுமா? வேண்டாம்டா, அவள விட்டிடுவோம்." என ஒவ்வொன்றாக எடுத்து சொல்ல,
"அம்மா நீங்க என்ன அர்த்தத்தோட பேசுறீங்கனு எனக்கு புரியல. ஆனா நீங்க சொல்லுற பார்த்தா, அவளை ஏதோ பூதத்துக்கிட்ட பிடிச்சு குடுக்கிறது போல பேசுறீங்களோனு தோனுது. அதோடு அவ ஒன்னும் சின்ன பாப்பா கிடையாது. அவளுக்கு இருபது வயசாகிடுச்சு. பெண்களோட கல்யாண வயசே பதினெட்டு தான். அப்புறம் அவளை எனக்கு கட்டி வச்சா, அவ குடும்பம் என் குடும்பமில்லையா? நான் பாத்துக்க மாட்டேன்?" என தன் பக்க வாதத்தை முன் வைத்தவன்,
"அம்மா இப்பவும் சொல்லுறேன், எனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம். அது மைதிலியா இருக்கிற பட்சத்தில. உங்க பையனை கல்யாண கோலத்தில பாக்கணும்னு நினைச்சீங்கன்னா, மைதிலிகிட்டயோ இல்ல, அவங்க அம்மாகிட்டயோ பேசுங்க." என அறுதியாகக் கூறியவன்,
"எனக்கு என்னமோ மைதிலிக்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, அவங்க அம்மாக்கிட்ட பேசுறதுதான் சரினு படுது. இப்போ அந்த ரஞ்சித் ஏமாத்திட்டான்னு வேதனையில் சம்மதிக்க மாட்டா. அதுவே அவ வீட்டு பெரியவங்க எடுத்து சொன்னால் ஒத்துக்க வாய்ப்பிருக்கு. இதுக்கு மேல உங்க இஷ்டம்." என்றவன்,
"எனக்கு வேலை இருக்கும்மா. நல்ல முடிவா எல்லாருமா சேர்ந்து பேசி சொல்லுங்க." என எழுந்தவன், விஜயாவின் யோசனை படிந்த முகத்தினைப் பார்த்தவாறே வெளியேறினான்.
இருக்காதா பின்னே!
இதுவரை திருமணத்திற்கு சம்மதிக்காதவன், இன்று தானாகவே முன்வந்து சம்மதித்து விட்டு, இப்படி இரு நிபந்தனை முன் வைப்பான் என்று அவர் நினைக்கவில்லை. அதுவும் திருமணம் செய்வதென்றால் மைதிலியை மட்டும் தான் திருமணம் செய்வானாமே!
'அப்படி என்றால் இவனது பார்வை எப்போதும் மைதிலியை மேய்வதற்கான காரணம் இது தானா? மைதிலியை சந்தித்ததற்கு பின் இவனது மாற்றத்திற்கு காரணமும் அவள் தானா?' என சிந்தித்தவருக்குத் தெரியும், தனக்குத் தெரியக் கூடாது என்று பெரியவர்கள் மறைக்கும் பல விஷயங்கள்.
அது மாத்திரமல்ல, மைதிலி மீதான ஸ்ரீயின் பார்வை. அவனது முன்னைய நடவடிக்கைகள் அறிந்தும் அறியாதவளாக இருந்த விஜயாவிற்கு, ஸ்ரீயினது மாற்றத்திற்கான காரணம் இதுதான் என்பது புரியாமல் போனது தான் விந்தை. உண்மையில் விஜயா இந்த கோணத்தில் ஒரு நாளும் சிந்திக்கவில்லை. அதற்கு காரணம் ஸ்ரீ தான். திருமணத்தின் மீதான அவனது எதிர்ப்பும், பெண்களை அவன் பார்க்கும் விதமும் அப்படியானதே!
மற்றைய பெண்களிடம் அவன் எதிர்பார்ப்பதைப் போல் தான் இவளிடமும் அவன் எதிர்பார்க்கிறான். தன்னை நல்லவனாக காட்டி, தன் தேவையை அவளிடம் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறான் என்று நினைத்தவருக்கு தெரியும், மைதிலி நெருப்பு என்பதும் அதை மீறி நெருங்கினால், அந்த நெருப்பில் இவனே சாம்பலாகிவிடுவான் என்பதும்.
ஆனால் ஸ்ரீயின் இந்த மாற்றம், மைதிலியைத் தனது மனைவி ஆக்கிக்கொள்ள என்பதுதான் அவருக்கு ஆச்சரியமே! இதில் அவருக்கு விருப்பம் இல்லையென்றில்லை. அவள் தன் மகனுக்கு மனைவியாக வந்தால், நிச்சயம் அவனது தடம் மாறிய வாழ்க்கை சரியாகும் என்பதிலும் ஐயம் இல்லை. விஜயாவிற்கு மைதிலியை மருமகள் ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை, அவளைக் காணும் முன்பே வந்தது என்பதுதான் உண்மை.
ஆம், ரங்கசாமி நகுலேஸ்வரத்திற்கு போய் வந்ததும், 'இப்படி ஒரு பெண்ணை கண்டேன். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணை காண்பதே அரிது. அவளை கண்ட ஒரு நொடி தன் பேரனுக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.' என்றவர்,
"சின்ன பெண், எங்களோட சுயநலத்துக்காக அவள் வாழ்க்கை சீரழிக்க எனக்கு விரும்பமில்லை." என்று கூறிவிட்டு, பின் தன் மனைவியையும் மருமகளையும் நினைவில் வர சுதாரித்தவராய்,
"படிப்பு முடிக்காம எப்படி அவள் வாழ்க்கையை நம்ம முடிவு பண்ண முடியும்? கல்வி எவ்வளவு முக்கியமானது. அவசரப்பட்டு அவள் வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம்." என பேச்சை மாற்றிவிட்டு சென்றுவிட்டார்.
அதிலிருந்து மைதிலி தான் மருமகளாக வரவேண்டுமென ஆசை கொண்டவருக்கும் தெரியும், இது நடக்காத காரியம் என்று. பின் மைதிலியை முதலில் அறிமுகம் செய்த ஈஸ்வரியும், மைதிலிக்கு புரியாத விதமாக நகுலேஸ்வரம் கோவிலில் மாமா சொன்னாரே என்று ஜாடை காட்டியதும் தான்.
மைதிலியை ஏற இறங்க பார்த்தவருக்கு, தன் மகனுக்கு கொடுப்பனை இல்லையே என்று ஏங்கவும் செய்தார். இன்று மகனது இந்த பேச்சில் உள்ள உறுதியில், இவளைத் தவிர யாரும் தனக்கு மருமகளாக முடியாது என்பது சந்தோஷமாக இருந்தாலும், 'இது நடக்குமா?' என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது.
‘எப்படி மைதிலியிடம் சம்மதம் வாங்குவது? இதற்கு மைதிலி சம்மதிப்பாளா? அவளுக்கும் இவனை பற்றி உண்மைகள் தெரிந்திருக்குமோ?' என நினைக்கும் போது, அன்று மைதிலி தனதறையில் காரணமில்லாமல் அழுதுவிட்டு, பொய்யான காரணம் கூறி தன்னை சமாளித்தது நினைவில் வர, அதற்கு காரணம் ஸ்ரீயாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அப்போதே உறுதியாக நம்பினார். மைதிலி திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் என்பது நிச்சயமானது.
'அப்படி அவள் மாட்டாள் என்றால், தன் மகன் வாழ்க்கை வெறுமையாகவே போய்விடுமா?' என சுயநலமாக நினைத்தவர், மைதிலியின் மனதை உணராமல், தன் மகனிற்கு தாயாகவே சிந்திக்க ஆரம்பித்து, அதை செயற்படுத்தவும் தொடங்கினார்.
ஆம், அடுத்து அவர் எடுத்த முடிவானது, மைதிலியால் கூட மறுத்து மறுவார்த்தை சொல்ல முடியாதளவிற்கிருந்தது.
அன்று காலையில் மதிய சமையலுக்கு தயாரான மைதிலி, விஜயாவினை அழைக்க, விஜயாவோ என்றுமில்லாத பதட்டத்தோடு, "எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலடா. இன்னைக்கு மாத்திரம் தெய்வானையை கூப்பிடு, நாளைக்கு வரேன்." என பாவமாக சொல்ல,
உடம்பு முடியவில்லை என்றதும் அவரைத் தொட்டு ஆராய்ந்தவாறே, "உடம்புக்கு என்ன? ஏன் பதட்டமா இருக்கிங்க?"
"ஒன்னுமில்லடா! கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருந்தேன்னா சரியாகிடும். நீ தெய்வானையை அழைச்சிட்டு போ." என அவளை விரட்ட,
விஜயாவை முறத்த மைதிலி, "ஆ... பாவமேனனு அக்கறையா விசாரிச்சா ரொம்ப தான் விரட்டுறீங்க. நான் போவேன், இல்லனா பாய விரிச்சு மல்லாக்க படுப்பேன். உங்களுக்கென்ன வந்திச்சு?" வடிவேல் பாணியில் விஜயாவிடம் மல்லுக்கட்டவது போல் பேசியவள் செவிகளில் எட்டியது, "அக்கா...!" என ஆர்ப்பரித்து ஒலித்தது அவளது தங்கையின் குரல்.
முதலில் அதை நம்ப முடியவில்லை என்றாலும், ஏதோ உந்துதலில் வாசலை திரும்பி பார்த்தவளை நோக்கி ஆரவாரமாய் ஓடிவந்து தாவிக் கட்டிக்கொண்டவள்,
"அக்கா... அக்கா..." என பலமுறை ஆசையாக அழைத்து, அவளது கன்னத்தில் முத்தத்தினைப் பதித்தாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காதவளால் நடப்பவற்றை உணர்வதற்கே சிறு வினாடிகள் பிடித்துக்கொண்டது. தானும் தன் பங்கிற்கு கட்டிக்கொண்டவள், தங்கையின் அணைப்பு இறுகுவதை உணர்ந்து,
"ஜனா!" தங்கையை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவள், தங்கையின் கண்கள் கலங்கியிருக்கவும், "ஏய்! என்னடி இது? சின்ன பிள்ளை போல..." என கேலி செய்தாலும் அவளுக்குமே கண்கள் கலங்கத்தான் செய்தது.
"தனியேவா வந்த?" என பேச்சினை மாற்றியவள் கேள்வியில் வாசலைப் பார்த்தாள் ஜனா.
அவள் பார்வையின அர்த்தம் புரிந்தவளாய் அவளை பின்தொடர்ந்தவள், அங்கு இந்திராவைக் கண்டதும், "அம்மா!" என அதிசயித்தவள்,
"வாங்கம்மா!" என ஓடிச்சென்று அவரையும் ஒருமுறை அணைத்து விடுவித்தவள், "என்னம்மா, புதுசா பாசத்தை பொழியுறா? முன்னாடி எல்லாம் என்கூட மல்லுக்கு நிக்கிறவளாம்மா இவ? என்னமோ இன்னைக்கு புதுவிதமா என்னை கண்டு கட்டிப்பிடிக்கிறா, முத்தம் கொடுக்கிறா... அது போதாதுனு மடை உடைச்ச வெள்ளம் போல கண்ல கண்ணீர் வேற..." என கேலியாக கூறினாலும் அவள் குரலும் கரகரக்கத்தான் செய்தது. பெத்தவளுக்கு தெரியாதா பிள்ளையின் மனநிலை.
"என்னதான் இருந்தாலும் அக்காவாச்சே? பிரிவு வரப்ப தான் தெரியும், சகோதர பாசம்னா என்னன்னு. எப்பவும் உன்னை பத்திதான் பேச்சே... நீயும் தவிச்சிருப்பல்ல மைதிலி?" என அவர் பரிவோடு வினவ,
"ரொம்ப நாளைக்கு இந்த கஷ்டம் இல்லம்மா. சீக்கிரம் கடனை அடைச்சிட்டு, வீட்டுக்கு வந்திடுவேன். அப்புறம் நம்ம பிரிய வேண்டிய அவசியமே இருக்காது." என்க,
சிறு புன்னகை நடுவே அவள் தலையினை வருடியவர், "நீ நல்லா இருக்கியா மைதிலி?" என்றார்.
"நீயே பாத்து சொல்லும்மா, நான் எப்படி இருக்கேன்?" என்று விலகி நின்று தன்னை சுற்றிக்காட்டியவள் செயலில் புன்னகைத்தார். இந்தக் குறும்பினைக் கண்டு எத்தனை நாட்கள் ஆகின்றது.
"உனக்கென்ன, ரொம்ப நல்லாத்தான் இருக்க..." என்றார் தன் பங்கிற்கு குறும்பாக.
இவர்களது உரையாடல் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விஜயாவிற்கு, இருந்த பதட்டம் விலகி புது தைரியம் உண்டானது.
"வீட்டுக்கு வந்தவங்களை இப்பிடித்தான் நிக்க வச்சு பேசிட்டு இருப்பியா? அவங்கள உக்கார வச்சு பேசு." கண்டிப்பதைப் போல் கூறினார் விஜயா.
தன் தவறை உணர்ந்தவளாய், "இவங்கள கண்ட சந்தோஷத்தில மறந்திட்டேன்ம்மா. வாங்கம்மா, ஜனா நீயும் வாடி! இது நம்ம வீடு, வெக்கபடாத சரியா?" என்றவள்,
பேச்சில் தமக்கையை முறைத்தவள், "நான் ஒன்னும் வெக்கப்படல. நமக்குத் தான் அதுன்னா என்னனே தெரியாதே!" என்றாள் தமக்கை காலை வாருவதைப் போல்.
நீண்ட நாட்களின் பின்னர் குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணமதை மனதில் நிறைத்துக் கொண்டிருந்தார் இந்திரா.