• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 38

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
பகுதி 38



மகனை எந்த கோலத்தில் பார்க்க வேண்டுமென்று இத்தனை நாள் ஆசைப்பட்டாரோ, அந்த கோலத்தில் பார்த்தவர் விழிகள் இமைக்கவே இல்லை. இந்திராவுக்குமே மகளின் மணக்கோலம் கண்களில் நீரைக் கசிவித்தது.

இனி அவள் தன் வீட்டு இளவரசி இல்லையே! ஸ்ரீ வீட்டின் மகாராணியாற்றே!

என்னதான் புகுந்த வீட்டினர் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், ஒரு தாய்க்கு மகளின் பிரிவு கவலைத் தரக்கூடிய விஷயம் தானே! அதுவும் இல்லாமல் அவளுக்கு தாம் இனி இரண்டாம் பட்சம் என நினைக்கும் போது, மனதின் ஓரம் விவரிக்க முடியாத ஓர் உணர்வு. ஒவ்வொரு மகளைப் பெற்ற பெற்றோர்களும், தம் மகளின் மணநாள் அன்று அனுபவிக்கும் ஒரு இன்பமான அவஸ்தை.

ஈஸ்வரியும் ரங்கசாமியும் தான் தமது வயதைக்கூட பெரிதுபடுத்தாமல், வந்தவர்களை வரவேற்பதும் விடைகொடுத்து அனுப்புவதும் என்று, கல்யாண வேலைகள் அனைத்தையும் தலையில் போட்டுக்கொண்டு ஓடியாடி திருமண வேலைகளில் ஈடுபட்டனர்.

மாலை ரிசப்ஷன் என்பதனால் மணமக்களுக்கும் சிறிது ஓய்வு கொடுப்பதற்காக, சாப்பாட்டின் பின்னர் மண்டபத்தின் தனித்தனி அறைகளில் மணமக்களை ஓய்வெடுக்க அனுப்பினர்.

மைதிலிக்கோ ஓமப் புகையிலும் கூட்டத்தின் மூச்சு காற்றின் வெப்பத்திலும், உண்ட களைப்பில் அவளையும் அறியாமல் தூக்கம் கண்களை சொருக, நகைகளை மட்டும் கலைந்து கண்ணாடியின் முன் பரப்பிவிட்டு உறங்கி விட்டாள். அவள் தூங்கி அரைமணி நேரம் கூட ஆகவில்லை, ஒப்பனையாளர்கள் மீண்டும் அவளது அறைக் கதவினை தட்ட அவள் எழுந்து கொள்ளவில்லை.

தெய்வானையும் கூட வந்ததனால், கதவின் திருகைத் திருக, கதவு சிரமம் இன்றி தானாகவே திறந்து கொண்டது. அசந்து தூங்குபவள் அருகில் சென்ற தெய்வானை, "மைதிலி நேரமாகுது எந்திரி." என எழுப்ப,

தூக்கம் கலைந்தவள் கண்களைத் திறவாமலே, "இவ்ளோ சீக்கிரம் விடிஞ்சிடிச்சா?" என்று கொட்டாவியின் நடுவே நிதானமாக கண்களைக் கசக்கிக்கொண்டு கேட்கவும், அங்கு நின்ற ஒப்பனைப் பெண்கள் சத்தமாக சிரித்து விட்டனர்.

அவர்கள் சிரிப்பினில் தன் கைகளை கீழே போட்டுவிட்டு கண்களை அகலவிரித்து பார்த்தவள், அங்கு நின்ற பெண்களைக் கண்டு, தான் இருக்கும் இடத்தினை ஒரு வினாடிக்குள் சுற்றி பார்த்து தன்நிலை புரிந்தவளாக,

"சாரி! நான் தூக்கக்கலக்கத்தில..." என்று தடுமாற,

"சரி, சரி... எங்களை சமாளிச்சது போதும், இதெல்லாம் தாண்டி வந்தவங்க தானே நாங்க. எங்களுக்கு தெரியாததா என்ன? இன்னைக்கு முதலிரவு, அதனால மேடம் நைட்டுக்கு ஃபுல்லா முழிக்கணும் எங்கிறத்துக்காக தானே இப்பவே தூங்குறிங்க? ஆனா பகல்ல தூங்கி, நைட்டுக்கு முழிக்கலாம் என்கிற ஐடியா எல்லாம், யாருமே எங்களுக்கு சொல்லி தரலடி..." என்று தெய்வானை கேலி பேசினாள்.

சுற்றி நின்ற பெண்களும் தெய்வானை பேச்சினில் சிரித்துவிட, சங்கடமாக தலை கவிழ்ந்தாள்.

"சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா மைதிலி. ரிசப்ஷனை கூட மறந்திட்டு தூங்கிட்டிருக்க? நாலு மணிக்கு மேடையில இருக்கணும்." என்று தெய்வானை அவசரப்படுத்தினாள். நின்றால் கேலி என்ற பெயரில் தன்னை சங்கடப்படுத்துவார்கள் என நினைத்தவளும் ஓடிவிட்டாள்.

"யாரோட நினைவில மாத்து துணி எடுக்காம போன, வர்றப்போ எப்படி வருவ?" என மீண்டும் வம்பு பேசியவளின் பேச்சில், கதவைத் திறந்தவள் கையில் உடையினைத் திணித்தவள்,

"துணியை எடுக்காமல் போனது போல, புருஷன் நினைவில துணிய போடாம வந்திடாத, அப்புறம் நாங்க பாவம்." என்றவளது பேச்சைக் காதில் வாங்காது கதவை அறைந்து சாத்தினாள்.

'என்ன இது பேச்சு? இப்படித்தான் எல்லாப் பெண்களையும் கேலி செய்வாங்களா? எனக்கு மட்டும் ஏன் இது ரசிக்கல?' என்றவளுக்கு தெய்வானை கூறிய முதலிரவு நினைவில் வர,

"முதலிரவா? யாருக்கு? எனக்கும் ஸ்ரீயிற்குமா?" என்றவளுக்கு அலட்சிய புன்னகை ஒன்று இதழோரத்தில் வந்து ஒட்டிக்கொண்டது.

"எனக்கு முதலிரவு, ஆனா அவனுக்கு எத்தனையாவது இரவுன்னு அவனுக்கு மட்டும் தானே தெரியும்?" என அன்று காலை அவன் அறை கட்டிலில் கிடந்த பெண்ணும், அவளை கொஞ்சிய ஸ்ரீயும்தான் இப்போது அவளது கண்களில் தோன்றி மறைந்தனர்.

அந்த நினைவு மைதிலிக்கு எரிச்சலைத் தர, ஷவரை திறந்து விட்டாள். தலை முதல் பாதம் வரை வடிந்து ஓடிய நீரானது அவளது எரிச்சலை சற்று தணித்துதான் இருந்தது. குளித்து தெய்வானை கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு வந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தின் பின் மைதிலியின் ஒப்பனை முடிந்தது.

பீக்காக் புளூ லெஹங்கா. அதன் கீழ் பகுதியில் அடர் நிற மெஜந்தாவுடன் கூடிய கோல்ட் கலர் கரை. அங்காங்கே தங்கத்தை பொடியாக்கி தூவி விட்டதைப்போன்று, அந்த பீக்காக் புளூ லெஹங்கா முழுவதும் தங்கத்துகள்கள். மெஜந்தா கரையின் நிறத்திலேயே தாவணி, பிளவுஸ் கோல்ட் என்று அவள் உடையே, அவளை தேவதை போல் காட்டியது.

அவளுக்கு ஒப்பனைக்கு என்று வந்த பெண்களோ தங்களின் கைவண்ணம் அனைத்தையும் அவள் மேல் காட்டியிருந்தனர். ஒப்பனை இல்லாதவள் முகத்தினில், இன்னொருவரின் முகம் பார்க்க கூடியது போல்தான் பளபளப்பாள். இன்று சொல்லவா வேண்டும்?

தன் அலங்காரங்களைக் கண்ணாடியில் பார்த்தவாறு இருந்தவள், முகத்தினைத் தன்னை நோக்கி நிமிர்த்திய தெய்வானை, "இந்த மேக்கப்ல உன்னை எனக்கே கடிச்சு திங்கணும் போல இருக்கே? இன்னைக்கு ஸ்ரீ பையன் அவுட் தான் போலயே... காலையிலயே உன் அழகில மயக்கம் போடத குறையா, அத்தனை பேரு இருக்கோம் எங்கிறத கூட மறந்திட்டு வாய பிளந்து பார்த்தான்.

இப்போ இந்த மாதிரி உன்னை பாத்தான்னா, பையன் காலத்துக்கும் உன் காலடியில விழுந்து அடிமையா இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..." என அவளது அழகை மெச்சியவாறு, வழக்கம் போல் தெய்வானை கேலியில் இறங்கினாள்.

மைதிலிக்கோ இவளது பேச்சில் இம்முறை உண்மையிலேயே வெட்கம் வந்து குடியேறியது. முகமோ ஒப்பனையையும் மீறி அந்தி வானமாக செம்மையுற்றது. அதை தடுக்க முடியாமல் என்ன செய்வதென்று தடுமாறியவள், தெய்வானையின் கையைத் தட்டிவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.

உதடுகளோ அவளையும் மீறி வெட்கத்தில் சிறிது விரிந்தது. அதை மறைக்க இன்னும் தலையைத் தாழ்த்தியவள், தாடையில் மறுபடியும் கை கொடு்த்து நிமிர்த்திய தெய்வானை,

அவளது வெட்கச் சிவப்பில் இன்னும் அவள் அழகாகத் தெரிய, "யம்மாடி! இன்னைக்கு நெசமாவே பையன் கவுந்தான்." என்று கூறி சிரித்தவள்,

அருகிலிருந்த மையினைத் தொட்டு, அவளது கன்னத்தின் ஓரம் சிறு பொட்டாக வைத்துவிட்டு, "எவன் கண் படுதோ இல்லையோ, உன் புருஷ் கண்ணே உன்னை கொண்ணுடும். அதுக்காகத்தான் இது..." என்றவள்,

"சரி இரு, நான் வெளிய போய் என்ன நடக்குதுனு பாத்திட்டு வரேன்." என இரண்டடி எடுத்து வைக்கவில்லை, வேகமாக கதவினைத் தள்ளிக்கொண்டு வந்த இந்திரா, கண்ணாடி முன்பிருந்தவளை கண்டுவிட்டு ஒரு நொடி சிலையாகி விட்டார்.

"மைதிலி ரெடியாகிட்டாளா தெய்வானை? அங்க மாப்பிள்ளை மேடைக்கு வந்திட்டாரும்மா." என்க,

"ஆமாம்மா, அவ ரெடி, அதை பாக்கத்தான் தானே வந்திட்டிருக்கேன். நான் அழைச்சிட்டு வந்திடுறேன், நீங்க போங்க."

"சரிடா!" என்றவர் திரும்பாது தன்னிடம் வருவதைக் கண்ணாடியில் பார்த்து எழுந்து நின்றவளை நெருங்கி, அவள் கன்னங்களைத் தாங்கியவர்,

"என் பொண்ணு இவ்ளோ அழகா?" என்று அவள் நெற்றிமீது இதழ் பதித்தவர் கண்களோ கலங்கியிருந்தது. அதை மறைக்காமல் அனைவர் முன்பும் துடைத்தவர், "சரிம்மா, லேட் பண்ணாம வந்திடுங்க." என்றவாறு வெளியேறினார்.

இந்திரா வெளியேறிய மறுநிமிடமே, தெய்வானை அவளை அழைத்து வந்து ஸ்ரீயின் அருகே அமர வைத்தவள், மைதிலியின் காதருகில் குனிந்து, "நான் சொல்லல, மாப்பிள்ளைய பாரு! நாறின மீனை பூனை பாத்த கணக்கா, முனறச்சிட்டிருக்கான். தனிமையில மட்டும் இவன்கிட்ட மாட்டிக்காதடி!" என்றாள்.

தெய்வானையின் பேச்சிற்கு அவளால் அங்கு நின்று கொண்டு எதுவும் கூறமுடியாததனால் அவளை முறைக்க, "எதுக்கு என்னை முறைக்கிற? நானா உன்னை முழுங்கிறது போல பார்த்தேன்? அவன் தானே இத்தனை பேர் மத்தியில கூச்சமே இல்லாம முறைச்சிட்டிருக்கான். நீ அவன்கிட்ட காட்டு உன் கோபத்தை..." என்றவள், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

'மைதிலிக்கு உண்மையில் இவன் தன்னைத்தான் பார்க்கிறானா? இல்லை, வழக்கம் போல் தெய்வானை தன்னை சீண்டுகிறாளா?' என நினைத்தவள், மாலையினை சரி செய்வதைப் போல் தலையை சரித்துப் பார்த்தாள். உண்மையில் ஸ்ரீயினது பார்வை தெய்வானை கூறியது போல் தான் இருந்தது.

சட்டென தலையைத் திருப்பிக் கொண்டவள் இதயமோ வேகமாக இயங்கியது. அது துடிக்கும் ஓசை அவள் காதுகளுக்கே கேட்டது. இவனது அந்த பார்வையில் என்ன இருந்தது? ஏக்கமா? கர்வமா? இல்லை என்றால் இரக்கமா? இதில் எது என்றே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நவரசங்களையும் அந்த பார்வையில் அள்ளித் தெளித்திருந்தான். மாலை மாற்று நிகழ்வின் பின்னர், மோதிரம் மாற்றியவர்கள், இருவரும் சேர்ந்தே கேக்கையும் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடும்போது தான், மைதிலி அவனது முழுமையான தோற்றத்தையே கண்டாள்.

ஆம், அவனும் மைதிலியின் உடையின் நிறத்தினைப் போலவே கோட் ஷூட் அணிந்திருந்தான். ட்ரிம் செய்யப்பட்ட தாடி, காற்றாடு கொஞ்சி விளையாடும் சிகை, கொஞ்சமாக புன்னகையினை தத்தெடுத்திருந்த உதடுகள் என இவை எல்லாம், அவனது ஆறடித் தோற்றத்திற்கு எடுப்பாக இருந்தது.

காலையில் அவனை அவள் சரியாக பார்க்கவில்லை என்றாலும், ஏதோ அரைகுறையாக பார்த்ததில், அப்போது விட இப்போது கூடுதல் அழகாகத் தெரிந்தான். அவள் தன்னை இன்ச் இன்ச்சாக ரசிப்பதைக் கண்டவன்,

'ஓகேவா?' என்பதைப் போல் புருவம் உயர்த்திக் கேட்க, அவனது செய்கையில் தன் தவறை உணர்ந்து சட்டென திரும்பி கொண்டாள் மைதிலி.

அதைப் பார்த்து தனக்குள்ளாகவே புன்னகைத்துக் கொண்டவனை, மீண்டும் புகைப்பட கலைஞர்கள் தம் இஷ்டத்துக்கு ஆட்டிவைத்தனர். ஐந்து மணியளவில் அவர்கள் அருகில் வந்த மாணிக்கம் தம்பதிகளைக் கண்ட மைதிலி,

"அங்கிள்!" என அவர் கைகளைப் பற்றிக் கொண்டவள், "ஏன் அங்கிள் தேனு வரல? என்னை மறந்திட்டாளா?" என்று அவளை எதிர்பார்த்திருந்தவள், அவளைக் காணததனால் ஏமாற்றத்தோடு வினவ,

"அவ உன்னோட கல்யாணத்துக்கு வர முடியாதுனு சொல்லுவாளாடா? அவ வரேன்னு தான் அடம்பிடிச்சா. ஆனா அவளுக்கு காலேஜ் இப்போ தானடா தொடங்கியிருக்கு. அங்கேயே தங்கி படிக்கிறதனால அவளால வரமுடியல. நிச்சயம் இடையில ஒரு தடவை நான் கூட்டிட்டு வந்திடுறேன். சரியா?" என அவளை சாமாதானம் செய்தவர்,

"சரிடா, காலையிலேயே வந்திட்டேன். இப்போ கிளம்பினா தான் ஊருக்கு போய் சேர முடியும், நான் புறப்படுறேன்ம்மா. புகுந்த வீட்டுல பாத்து பத்திரமா நடந்துக்கோடா." என ஒரு தந்தை முறையில் அவளுக்கு அறிவுரை கூறிட, ஆமோதிப்பதாய் தலையசைத்தவள் கழுத்தினில், அவர் மனையாள் செயின் ஒன்றை மாட்டிவிட்டு அணைத்து விடுவித்தார்.

திடீரென என்னானதோ அவள் எதிர்பாராத நேரம், அவளது இடையினைப் பற்றி அணைத்தாற்போல் ஒட்டி நின்றவனின் செயலில் கூசிப்போனவள், என்ன என்பது போல் அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

அதற்கு அவன் அசர வேண்டுமே!

"கையை கொஞ்சம் எடுக்கிறீங்களா?" உதடுகள் அசையாமல் கோபமாக கூற,

"நான் எடுக்கிறது இருக்கட்டும், அங்க உன் அத்தை நம்மள தேடி வராங்க." என்று அவர்கள் வந்த திசையைக் கண்களால் காட்ட, அவன் காட்டிய திசையைப் பார்த்தாள்.

அத்தை மகனோ சங்கடமாக தயங்கியவாறு நிற்க, மீனாட்சி அவனது கைகளை வலுகட்டாயமாக இழுத்து வருவது அவள் கண்களுக்குள் தெளிவாகவே புலப்பட்டது.

'எதுக்கு இந்த சங்கடமாம்? வேற ஒரு பெண்ண கொஞ்சுறப்போ வராத சங்கடம், நான் இன்னொருத்தனோடு நிற்குறப்போ ஏன் வருது?' என நினைத்தவளுக்கு, அவன் கைப்பட்ட இடம் குறுகுறுக்க குனிந்து பார்த்தாள். அவனது விரல்கள் தான், அவள் இடையை வீணையாக்கி விளையாடிக்கொண்டிருந்தது.

அவனை கோபமாக நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், "என்ன இது?"

"எதை கேக்குற? இதுவா? இது கேக்கு, இதுகூட தெரியாமலா ஊட்டும் போது சாப்பிட்ட?" என்றான் எதுவும் ரெியாதவனாட்டம் கேக்கினை காட்டி.

"இந்த ட்ராமாவை நிறுத்திட்டு முதல்ல கைய எடுங்க. அவங்க வந்தா வந்திட்டு போகட்டும். சும்மா ஒட்டி உரசிட்டு..." என சினந்தவள் மேலிருந்து கையை எடுத்தவன்,

"மகாராணி உத்தரவை நான் மீறலப்பா?" என்றவன் தோள்களைக் குலுக்கியவாறு கையை எடுக்க, அதே நேரம் அருகில் வந்திருந்தனர் அவர்கள்.

"மருமகளே!" என பலநாள் அவளைக் காணாது ஏங்கியிருந்தவள் போல் கட்டிக்கொண்டதை மைதிலியும் எதிர்பார்க்கவில்லை. அவரது அத்தகைய செயலில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவளிடமிருந்து விலகிய மீனாட்சி, "நல்லா இருக்கியா மருமகளே?" என்றார்.

அவளுக்கோ இது தன் அத்தைதான் என்பதை நம்ப முடியவில்லை. அவளது கேள்விக்கு பதில் கூறாமல் அவரையே விழி விரித்துப் பார்த்திருக்க,

"உனக்கென்னடா! உன் அழகுக்கும் உன் நல்ல குணத்துக்கும் எல்லாமே நல்லதாத்தான் நடக்கும். நீ குடும்ப கஷ்டத்தில ஊரைவிட்டு பிழைப்புக்காக இங்க வந்தது. ஊர்ல என்ன மாதிரி எல்லாம் கதை கட்டிச்சு தெரியுமாம்மா? ஆனா நான் அதையெல்லாம் நம்பலையே?

எனக்கு தெரியாதா என் மருமக எப்பிடியானவள்னு? எங்கண்ணனும் இந்திராவும் வளத்த வளர்ப்பு எப்பவுமே தப்பாகாது. என் மருமக சொக்க தங்கம்." என வாயெல்லாம் பல்லாக சொன்னவர் மறந்திருக்கலாம், மைதிலி மறப்பாளா?

அவளுக்குத்தான் தெரியுமே!

பணம் என்றலே மீனாட்சியின் வாய் எந்தளவிற்கு விரியும் என்பதை.

அத்தையின் பேச்சினால் உண்டான விரக்தி சிரிப்பினை அறிமுக புன்னகையாக மாற்றி, இதழ் பிரிக்காமல் உதட்டினை இழுத்து புன்னகைத்தவள், "எங்கத்தை மச்சினிங்க? அவங்களையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?"

"வந்திருக்கலாம் தான்ம்மா... ஆனா வயலுக்கு போற உன் மாமாவுக்கு யாரு அவிச்சு போடுறது? அதான் விட்டுட்டு வந்தேன்." என்றவாறு பின்னால் திரும்பியவர்,

ரஞ்சித் தயங்கியவாறு நிற்பதைக் கண்டு, "என்னடா தயங்குற? நம்ம மைதிலி தான், வா!" என அவனது கையைப் பிடித்து இழுத்து மைதிலி முன் நிறுத்தினார்.

அவனோ மைதிலியை நிமிர்ந்து பார்க்க சங்கடப்பட்டவனாய், தலையினைத் தரையினில் புதையும் அளவிற்கு குனிந்து நின்றான்.

"நல்லாயிருக்கிங்களா அத்தான்?" என்ற மைதிலியின் குரலில், தன் தயக்கத்தைத் தூர போட்டவனாய்,

“ம்ம்...” என்றவன் மைதிலியின் கையைப் பற்றி,

"சாரி மைதிலி!" என்றான்.

மைதிலிக்கு அவன் மன்னிப்பின் அர்த்தம் புரியவில்லை. இமைகள் முடிச்சிட கேள்வியாக அவனை நோக்கினாள்.

"எல்லாத்துக்குமே சாரி மைதிலி." என்றவன் விழிகள் ஸ்ரீயிடம் தாவ, இதை எதையும் கண்டுகொள்ளாதவன் விழிகளோ, மைதிலியின் கையினைப் பற்றியிருந்தவன் கையினில் அழுத்தமாக படிந்ததைக் கண்ட ரஞ்சித், சட்டென அவள் கையை விடுவித்து மீண்டும் தலை குனிந்து கொண்டான்.

'எதற்கு இந்த தர்மசங்கடம்? எனக்கு எல்லாம் தெரியும் என்று இவனுக்கு தெரியுமா? ஆனா அன்னைக்கு இவனோட கண்ணில படவே இல்லையே! அப்புறம் எப்படி?' என்று குழம்பும் போது தான், அன்று தாயுடனான ஸ்ரீயின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றம் நினைவில் வந்தது.

அன்று அவளிருந்த மனநிலையில் இவற்றை எதுவுமே கவனிக்கவில்லை.

'அப்படி என்றால்? என் மனநிலையினைப் புரிந்துதான் விஜயா அம்மாவை அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தானா?' என அவனை திரும்பி பார்த்தாள். அவனுமே அவளைத்தான் பார்த்திருந்தான்.

"என்னை தெரியுமா தம்பி?" என்ற மீனாட்சியின் குரலில், இருவரின் பார்வையும் அவரிடம் தாவியது.

அவன் இல்லை என்பதாக தலையசைக்க, "நான் ஒருத்தி... லூசாட்டம் கேள்வி கேட்டிட்டு... சொல்லாமல் எப்படி தெரியும்?" என்று தன் தலையில் தட்டிக்கொண்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே, மைதிலியைப் பற்றிய முழு தகவல்களும் ஸ்ரீக்கு தெரியும் என்பதை.

"நான் இவளோட அத்தை தம்பி! என் கூடபிறந்த அண்ணன் மக மைதிலி." என்று பெருமையாக சொன்னவள்,

"க்ஹூம்..." என்று பெருமூச்சை விட்டவாறு, "எனக்கு தான் இவளை என் வீட்டு மருமகளா கூட்டிட்டு போக குடுத்து வைக்கல. எல்லாம் இவனால தான் தம்பி." என்றவரை ஸ்ரீ புரியாது பார்க்க,

"ஆமா தம்பி, சின்ன வயசில இருந்தே இவளை இவனுக்குத்தான் முடிவு பண்ணியிருந்தோம். வேலைக்கு போனதும் ஒரு பொண்ணு, அதுவும் தன் வேலை செய்யிற நிறுவனத்தோட முதலாளி மகள் தன்னை விரும்புறா. எனக்கும் அவமேல விருப்பம். நான் அவளை தான் கட்டிக்க போறேன்னான். சரி, என் பய ஆசைய ஏன் கெடுப்பான்னு விட்டுட்டேன்.

ஒரு மாதத்துக்கு முன்னாடி சொல்லுறான், அவ தன்னை ஏமாத்திட்டா, அவளுக்கு இவனை வெறுத்துப் போச்சு. அதனால வேணாம்னு விட்டுடாளாம். பணக்கார பொண்ணுங்க எல்லாம் இப்பிடித்தானாமே? ஒருத்தனை விரும்பிட்டு, இன்னொருத்தனை தானாமே கட்டிப்பாங்களாம்? இது என்ன கலாச்சாரமோ! எல்லாமே புதுசா இருக்கு.

நானும் நல்ல இடத்து சம்மந்தம் வரப்போகுதுனு ரொம்ப சந்தோஷபட்டேன். ஆனா என் பையனை கடைசில வேலையில இருந்தும் தூக்கிட்டாங்க. ம்... கடவுள் யாருக்கு யாருனு முடிவு பண்ணிருக்கானோ அது தானே நடக்கும்." என புலம்ப,

ஸ்ரீக்கோ மீனாவை தவறானவளாக மீனாட்சியிடம் சித்தரித்தது ஆத்திரத்தை உண்டாக்க அவனை முறைத்தான். இப்படி தன்னை மீனாட்சி மாட்டி விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை ரஞ்சித். அவனுக்குத்தான் தெரியாதே, இந்தளவிற்கு தான் தாயிடம் சொன்ன பொய் ஸ்ரீயின் காதில் போய் சேரும் என்று.

ஆம், மீனாட்சி சொன்னது அத்தனையும் உண்மையே!
 

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna

ஏன் என்றால், அவனது சுயரூபத்தை அன்றே தனது மாமன் குடும்பத்தினருக்கு படம் போட்டு காட்டிவிட்டான் ஸ்ரீ. விஜயாவையும் மைதிலியையும் செல்வத்துடன் அனுப்பி வைத்துவிட்டு, மாமனையும் மீனாவையும் ரஞ்சித்தையும் தனிமையில் அழைத்த ஸ்ரீ, ஒன்று விடாமல் ரஞ்சித்தின் பொய்யான காதல் திரையை அவன் காதலி முன் கிழித்தவன், சற்று முன்னர் அவன் நண்பன் வெங்கட்டுடன் உரையாடிய உரையாடலையும் கூறி,

"நான் சொல்றதில உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா, வெங்கட்டும் உங்கள் ஆஃபீஸில் தானே வேலை செய்கிறான். அவன்கிட்ட தாராளமா கேளுங்க." என்றவன்,

"மீனா நல்ல யோசிச்சு முடிவு பண்ணிக்கோ. இது வாழ்க்கை! சட்டை கிடையாது, பிடிக்கலைனதும் கழட்டி மாத்திக்க. சின்ன வயசில இருந்து இவனை நம்பியிருந்த அந்த பெண்ணுக்கே இந்த நிலைன்னா, நேற்று வந்தவ நீ! உன்னை விட வேறு ஒரு பணக்கார பொண்ணு இவனுக்கு கிடைச்சா, உன்னையும் வச்சுக்கிறேன் என்றுதான் சொல்லுவான். இதுதான் நீ ஆசைப்படுறியா? இதுக்குமேல உன் இஷ்டம்." என்றவன்,

தன் பேச்சினால் தலை கவிழ்ந்தவன் அருகில் சென்று, "நானும் உனக்கு புத்தி சொல்லுற அளவுக்கு நல்லவனில்ல. அதே சமயம் துரோகி கிடையாது. மைதிலிய அழ வச்சிட்டேல்ல...? இனி அவ அழ நான் விடமாட்டேன். அவளை நான் என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்." என்றவனது பேச்சில் சட்டென நிமிர்ந்து பார்த்தவனை,

"என்ன அப்பிடி பாக்குற? என்ன சொல்லுறேன்னு புரியலையா?" அலட்சியமாக கேட்டவன்,

"அவளை என் மனைவியாக்கிக்க போறேன்னு சொன்னேன். மறுபடியும் பழைய உறவை சொல்லிட்டு அவ பக்கம் வந்திடாத. அப்புறம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்." என எச்சரித்து விட்டே வெளியேறினான்.

ரஞ்சித்தின் ஏமாற்றத்தைத் தாங்க முடியாது தந்தையைக் கட்டிக் கொண்டு மீனா அழ,

"இது உன் வாழ்க்கை மீனாம்மா. என்ன முடிவெடுத்தாலும் அப்பா அதுக்கு கட்டுப்படுவேன். ஆனா அதுக்கு முன்னாடி அப்பா சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்." என்று அவளுக்கு சில விஷயங்கள் புரிய வைப்பதற்காய் வாய் திறக்க,

"வேண்டாம்ப்பா! நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாமே புரியும் ப்பா. நான் ஒன்னும் குழந்தை இல்லை. இவனை நம்பி இனியும் ஏமாற மாட்டேன். கஷ்டம் தான்ப்பா, என் காதலை மறக்குறது ரொம்பவே கஷ்டம் தான். ஆனா அந்த மைதிலியளவுக்கு ஒன்னும் எனக்கு கஷ்டமா இருக்காது. கிராமத்தில பிறந்து வளர்ந்த பொண்ணுங்க ஒருத்தனை நினைச்சிட்டா, காலத்துக்கும் அவங்க மனச மாத்துறது கஷ்டம் என்று கேள்வி பட்டிருக்கேன். அப்படி கிராமத்து பொண்ணாலையே இவனை மறக்க முடியும் என்கிறப்போ, என்னால முடியாதாப்பா?

இவனை முதல்ல இங்கிருந்து போக சொல்லுங்கப்பா! எனக்கு இவனை பார்க்கவே பிடிக்கல." என்று சற்றுமுன் அவனுடன் கொஞ்சியதை மறந்து அவன் மேல் எரிந்து விழ,

"சரிடா, நீ உள்ள போ. நான் இவன் கூட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. பேசிட்டு அனுப்பி வைக்கிறேன்." என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

"தம்பி இது சரிவராது. என் பொண்ணு எடுத்த முடிவுதான் என் முடிவும். உண்மை தெரியாமல் தப்பு பண்ணிட்டோம். என்ன, உறவுகளுக்கு இனி ஆயிரம் பதில் சொல்லணும். அதை நாங்க பாத்துக்கிறோம், நீ கிளம்புப்பா." என்று முடிந்தவரை கோபமில்லாமல் பொறுமையாக அவர் கூறினாலும், அளவுக்கதிகமான அழுத்தம் நிறையவே இருந்தது.

அவனும் எதுவும் பேசாது தலை கவிழ்ந்தவாறே செல்ல, "ஒரு நிமிஷம் ரஞ்சித்!" என சென்றவனைத் தடுத்தவர், அவன் முன் சென்று நின்றவாறு, "நாளையில இருந்து நீ வேற ஏதாவது வேலை தேடிக்க." என்று உன்னை வேலையை விட்டு நிறுத்தியாகி விட்டதென்பதை, நாசுக்காக கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் ஊர் வந்து சேர்ந்தவனோ, தனது இந்த ஏமாற்று வேலையால் தன் வேலை போன காரணத்தைக் கூறாமல், மீனாதான் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தன் வேலையை விட்டு நிறுத்த தந்தையிடம் கூறியதனால், அவரும் மகள் சொல்லை கேட்டு வேலையை விட்டு நிறுத்தியதாகவும் பொய் கூறி தாயை சமாளித்தான்.

அதைத்தான் மீனாட்சி இப்போது ஸ்ரீயிடம் ஒப்பிக்க, மீனாட்சியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த மைதிலி, "என்னது! மீனா இவனை ஏமாற்றினாளா?" என நம்பாத பார்வையோடு ரஞ்சித்தைப் பார்த்தாள்.

ஆனால் ரஞ்சித்தோ மைதிலியின் பார்வையைக் கண்டு கொள்ளாமல், ஸ்ரீயை மருண்ட பார்வை பார்ப்பதைக் கண்டவள்,

'எதுக்காக இவனை பார்த்து முழிக்கிறான்?' என்று ஸ்ரீயைப் பார்த்தவள், அவனது கண்கள் சிவந்திருப்பதைக் கண்டு, ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

"அத்தை நீங்க எப்போ கிளம்புறீங்க?" என அவன் கோபத்துக்கு இரையாகாது விரட்டிவிட கேட்டாள் மைதிலி.

"இப்போ கிளம்ப போறோம்டா, அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தோம்." என்றவர்,

ஸ்ரீயிடம், "என் பையனுக்கு ஏதாவது வேலையிருந்தா குடுங்க தம்பி. அவன் நல்லா வேலை செய்வான். அவன் வேலைக்கு போனால் தான் தம்பி என் பொண்ணுங்க ரெண்டையும் கரை சேர்க்க முடியும்." என கெஞ்சுவது போல் மீனாட்சி கேட்க,

நிலைமை புரியாத மீனாட்சியின் பேச்சில் எங்கு பிரச்சனையாகி விடுமோ என பயந்தவள், "அத்தை அவரு செய்வார் த்தை. நான் அதுக்கு பொறுப்பு. சீக்கிரம் கிளம்பினால் தான் ஊர் போய் சேர முடியும். மாணிக்கம் அங்கிளும் இப்போ தான் கிளம்பினாரு. அவர் காரிலேயே நீங்களும் போகணும்னா சீக்கிரம் போங்க." என்று அவசரப்படுத்த,

"அப்படியா? அப்போ நான் வரேன் மைதிலி. வரேன் மாப்பிள்ளை." என்று இந்திராவிடமும், "வரேன் இந்திரா." என்க, சந்தோஷமாகவே விடை கொடுத்தார் அவர் நாத்தனார்.

அவர்கள் மண்டப வாயில் போனதும் தான் மைதிலிக்கு மூச்சே வந்தது. ஏனென்றால் ஸ்ரீயின் ரஞ்சித் மீதான கோபப் பார்வையின் உக்கிரம் கூடிக்கொண்டே போனதே தவிர குறையவே இல்லை.

நின்றால் நிச்சயம் ஏதாவது வில்லங்கம் வந்திருக்கும். இதில் அத்தையின் சிபாரிசு வேறு என்று தனக்குள் நினைத்தவளாய் ஸ்ரீயைப் பார்க்க, அவனோ தூரத்தே வெறித்து வேறு ஒரு சிந்தனையில் நின்றவனை நடப்புக்கு கொண்டு வந்தவனே செல்வம் தான்.

ஆம், காலையில் இருந்து தன் ஒரே நண்பனின் கல்யாண வேலைகள் அத்தனையையும், அவன் ஒருவனாக தலையில் போட்டுக் கொண்டு செய்தவன், இப்போது தான் கொஞ்சம் ஓய்வாக நின்றான்.

"மச்சான் நீ என்கூட ஒரு போட்டோ கூட எடுக்கலையேடா?"

"போட்டோ தானே மச்சான்? வா எடுத்திடலாம்." என்றவன், மூவரும் நின்று ஒரு படத்தினை கிளிக்கி விட்டு,

"நண்பா உன்கூட கொஞ்சம் பேசணும்." என்றவாறு தனிமையில் அழைத்துச் சென்றவன், "மச்சான் நான் சொன்னதை செய்திட்டியாடா?” என்றான்.

"என்ன மச்சான் சொன்ன? எனக்கு நினைவில்லையே?" என்றவனது மண்டைமேல் செல்லமாக தட்டியவன்,

"மடையா!" என்றவாறு சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
"மறக்கிற விஷயமாடா எருமை? உன்னை நான் செய்தே ஆகணும்னு கண்டிஷன் போட்டேனே, அந்த மேட்டர் என்னாச்சு?" என்றான்.

"ஓ... அதை கேக்கிறியாடா? எனக்கு சுத்தமா அதில உடன்பாடே இல்ல மச்சான். பட் உன்கூட ஆட முடியாதுனு தான் கடைசியில மனமே இல்லாமல் நீ சொன்னதை ரொம்ப கஷ்டப்பட்டு செய்தேன்டா."



தொடரும்…