பகுதி 7
காலை தந்தை இறந்ததற்கான காரணத்தை ஜனனி கூறியதும், 'தன்னால் தான் தந்தை இறந்து விட்டாரோ?' என நினைத்தவளால் அழுகையினை நிறுத்த முடியவில்லை.
"அக்கா, அப்பா தான் இப்போ நம்ம கூட இல்லையே, கடனை எப்பிடிக்கா எங்களால அடைக்க முடியும்? அப்பிடின்னா அவரு உன்னை தூக்கிட்டு போயிடுவாரா? நீ அந்த அங்கிளுக்கு பொண்டாட்டியாகிடுவியா? அவரு வந்து கூப்பிட்டா நீ போகாதக்கா. அப்பாதான் எங்கள விட்டுட்டு போயிட்டாரு, நீயும் போயிடாதக்கா." என்று ஜனனி அழ,
"என்ன ஜனனி பேசுற? அந்த கிழட்டு பயலுக்கு மைதிலி கேக்குதா? அவன் வந்து ஏதாவது தகராறு பண்ணட்டும், அப்புறம் என்ன நடக்குதுனு பாரு! நீ அழாதடா! அப்புறம் அக்கம் பக்கம்ன்னு நாங்க எதுக்கிருக்கோம்? அவனை ஒரு வழி பண்ணிடமாட்டோம்." என்று அயல் வீட்டு பெண் கூற, அதை ஆமோதிப்பதாய் மற்றைய பெண்ணும் வீட்டவரும் ஒத்து ஊதினர்.
"உங்களால அவனை எதுவும் செய்யமுடியாது. நீங்க எல்லாரும் இருக்குறப்போ தானே அந்த பேச்சு பேசினான். நீங்களும் அமைதியா நின்னு வேடிக்கை தானே பாத்தீங்க. அதுக்காக உங்கள தப்பு சொல்லல. எனக்கு நல்லா தெரியும், என் வீட்டில எப்பிடியோ அதே போலதான் அங்கேயும். எல்லாருமே ஏதோ ஒரு சூழ்நிலையினால அவன்கிட்ட கடன் பட்டிருக்கோம். எங்களுக்காக அவனை எதிர்த்து பேசினா, அவன் உங்களை வேற விதத்தில பழிவாங்க பாப்பான்.
எங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம். என் புருஷன் இதுவரைக்கும் என்கிட்ட ஒன்னுமே கேட்டதில்லை. முதல் முறையா தன்னோட பொண்ணை அவன்கிட்டயிருந்து காப்பாத்த சொல்லி கேட்டிருக்காரு. அதுதான் அவரோட கடைசி ஆசையும் கூட... எப்பிடியாவது என் பொண்ணை காப்பாத்தணும். அவர் எங்களுக்காக விட்டுட்டு போன நிலமிருக்கு. அதோட விளைச்சலை வச்சு அவனோட கடனை அடைச்சிடணும்." என்றார்.
"இந்த நிலையையிலயும் உங்க தன்னம்பிககைய பார்க்கிறப்போ சந்தோஷமாத்தான் இருக்குக்கா. ஆனா உங்களோட நிலம் ஒன்னும் ஏக்கர் கணக்கில இல்லையே? வெறும் மூணு பரப்பில தானேக்கா இருக்கு. அதில வர வருமானம் திரும்ப பயிர் வைக்கிறதுக்கும், அதுக்கு தேவையான மருந்து அடிக்கிறதுக்கும் தானேக்கா போதுமானதா இருக்கும். அப்புறம் கடன் எல்லாம் எப்பிடி அடைக்க முடியும்? ஆமா, நீங்க அவன்கிட்ட வாங்கின பணம் ரொம்ப அதிகமோ?" என்றாள் ஒருத்தி.
"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஐம்பது ஆயிரம் வாங்கினாரு. இப்போ வட்டியோட கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்னு சொன்னாரு. சரியா எனக்கு தெரியல. மூணு வேளை சாப்பிடலனாலும் ஒருவேளை கஞ்சி குடிச்சாது கடனை அடைச்சிடணும். இல்லனா என் பொண்ணை இவனுக்கு தாரை வார்க்க வேண்டியதா போயிடும்." என்று மீண்டும் கண்ணீர் சொரிந்தார் இந்திரா.
"அக்கா எதுக்கும் ஒரு தடவை உங்க நாத்தனார்கிட்ட கடன் கேட்டு பாருங்களன்." என்றாள்.
"அவங்ககிட்ட மட்டும் எப்பிடி அந்தளவுக்கு வசதியிருக்கு? அவங்களும் தன்கிட்ட கடன் வாங்கினதா அவன் சொன்னானே. அதவிட மகளை கட்டிக்கொடுக்கிற வீட்டில கையேந்தினா நாளைக்கு நம்ம பொண்ணை அது பாதிக்கும்." என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இந்திரா.
நாட்கள் அதன்பாட்டில் உருண்டோடியது.
கணவனை இழந்தது அக்குடும்பத்திற்கு பெரிய இழப்பாக இருந்தாலும், அதையே நினைத்து வருந்துவதால் ஆவது ஒன்றுமில்லை. அமைதியாக ஒடுங்கி இருந்தால் தன் பொண்ணையும் அவனால் இழக்க நேரிடும் என்று பயந்த இந்திரா, கணவன் விட்டுச்சென்ற விவசாயத்ததை கையில் எடுத்தார்.
தாயை விவசாயத்திற்கு அனுப்பிவிட்டு, சமையலுக்கு கஞ்சிதான் என்றாலும், அதை செய்து தாயிடம் கொண்டு சேர்ப்பது மைதிலியின்வேலைகளில் ஒன்றானது.
தந்தை இறந்து முன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், எப்போதும் போல் அந்த பத்து நிமிடங்கள் தந்தையின் நிழல் படத்திற்கு முன்பு சம்மணமிட்டு அமர்ந்து கரைந்தனர்.
"எழும்பு ஜனா! அக்கா, அம்மாக்கு கஞ்சி எடுத்துட்டு போகணும்.அம்மா தனியா தோட்டத்தில கஷ்டப்படுவாங்க. அவங்களுக்கு உதவி செய்திட்டு வர நாலுமணி கூட ஆகலாம். நீ உன் கொப்பி, புத்தகத்தை எடுத்துட்டு போய் பரிமளாக்கா வீட்டில வச்சு படி." என்றவாறு எழுந்தவள், அவசரமாக கஞ்சி காய்ச்சும் வேலையில் இறங்கிய நேரம், அவளது செல்போனும் சிணுங்கியது.-*+
"இது ஒன்னு நேரம் காலம் தெரியாம..." என்ற போது தான், அப்பா இறந்து மூன்று நாட்கள் ஆகியும், அவளது அத்தான் செய்தி அறிந்தும், தாய் மாமனை இறுதியாக காண வரவில்லை என்பது உறைத்தது.
‘ஏன் அத்தான் வரல? ஒருவேளை அப்பா இறந்த செய்தி அத்தானுக்கு தெரியாதோ? அதெப்படி தெரியாமல் போகும்? நிச்சயம் அத்தை சொல்லியிருப்பாங்க. அத்தானுக்கு வரமுடியாத சூழ்நிலையோ?’ என்று இம்முறையும் அவனுக்காகவே மனம் வாதாடியது.
"அக்கா அத்தான் தான்க்கா எடுக்குறாரு." என்ற ஜனாவின் பேச்சில், சந்தோஷத்தில் முகம் மலர, "வேகமா கொண்டு வா, கால் கட்டாகிடப்போகுது." என்று அவசரமாக போனினை காதில் வைத்து, "அத்தான்!" என்றதும் உடைந்து அழவே ஆரம்பித்து விட்டாள்.
"மைதிலிம்மா!" என்று பரிவோடு அழைத்த அவள் அத்தான் ரஞ்சித், "செல்லம்ல அழாதடா! மாமா இறந்த செய்தி எனக்கு இன்னைக்குத் தான்ம்மா தெரிஞ்சிச்சு. இன்னைக்கே வந்திடலாம்ன்னு தான் கிளம்பினேன், அதுக்குள்ள பாஸ் ஒரு முக்கியமான பைல் கொழும்புக்கு எடுத்திட்டு வரசொல்லிட்டாருடா.
அத்தானை மன்னிச்சிடு செல்லம். இன்னொரு நாளைக்கு என் மைதிலி தங்கத்தை வந்து நான் பாத்துக்கிறேனே..." என்று கனிவோடு சொன்னவன் பேச்சில், தன்னால் வரமுடியவில்லை என்ற கவலை தெரியத்தான் செய்தது.
"பரவாயில்லத்தான் நீங்க பொறுமையாவே வாங்க. நீங்க வந்தாலும் இனி அப்பா மட்டும் திரும்பி வந்திடவா போறாரு?" என்று விம்மி வந்த மைதிலியின் குரலில்,
"மைதிலிம்மா! அழுகிறியா? நீ அழுதா அத்தானுக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல உனக்கு? எனக்கு மட்டுமில்லடா, மாமாக்கும் நீ அழுதா பிடிக்காது. முதல்ல கண்ணை துடைச்சுக்கோ!" என்று உரிமையாகக் கண்டித்தான்.
"ஹீம்ம்..." என்பதாய் குரல் கொடுத்தவள், அவனது சொல்லிற்கு கட்டுப்பட்டவள் போல கண்களைத் துடைத்து விட்டு, "நான் அழல." என்றவளது குரல் இன்னும் கரகரத்ததை உணர்ந்தான்.
"மைதிலிம்மா! அத்தான் சொல்லுறத புரிஞ்சுக்கணும்டா! நீதான் இப்போ உன்னோட வீட்டுக்கு பெரிய பொண்ணு. நீதான் இந்த நேரத்தில பொறுப்பா நடந்துக்கணும். அத்தைக்கு மாமா இறந்தது ரொம்ப கஷ்டமா இருக்கும்டா. ஆறுதல் சொல்ல வேண்டிய நீயே அழுதிட்டிருக்கலாமா? அவங்களுக்கும் இதனால ஏதாவது ஆகிட்டா உங்களுக்கு யாரிருக்காங்க?" என்றான் நிலைமையினை புரிய வைப்பதாய்.
"சரி அத்தான்... நான் அழல, தைரியமா இருக்கிறேன்." என்றவள், "ஆமா, அப்பா இறந்தது அத்தை உங்களுக்கு சொல்லலையா?" என்றாள்.
"இல்லடா, எனக்கு யாருமே சொல்லல. காலையில பேசுறப்போ தான் உங்க வீட்டைப்பத்தி பேச்சும் வந்திச்சு. அப்போ தான் மாமா இறந்த செய்தியை சொன்னாங்க. அதுவும் வீணா தான் சொன்னா." என்றான்.
"எதுக்காக அத்தை உங்ககிட்ட சொல்லல?"
"அது... அது... அம்மாவுக்கும் வீட்டில ரொம்ப டென்ஷன்டா. அதனால அம்மா மறந்திருக்கலாம்." என்றான் தடுமாறியவாறு.
'அது எப்படி மறக்கும்? இறந்தது மூன்றாவது மனுஷன் இல்லையே! கூடப்பிறந்த அண்ணன் இறந்தது கூடவா மறக்கும்? இதே போல தான், இறுதி சடங்கு அன்றும் உடனேயே கிளம்பி விட்டார்.' என மனதில் நினைத்தவள்,
"சரி விடுங்கத்தான், வயசானாலே எல்லாம் மறந்து தான் போகும்." என்றவளின் பேச்சில் மௌனமானான்.
"அத்தை சரியாகிட்டாங்களா? அவங்ககிட்ட போனை குடு, பேசணும்." என்றான்.
"அம்மா இல்லை அத்தான்." என்றவள், தந்தையின் இறப்பிற்கான காரணத்தினைக் கூறி, அதனால் தான் தாய் வேலைக்கு போயிருப்பதாகவும், தானும் தாயிடம் போகவேண்டும் என்று கூற,
முதலில் அந்த கனகரெட்ணத்தின் மேல் கோபமாக கொந்தளித்தவன், "இவனோட கடனை எப்படியாவது அடைக்கணும் மைதிலி. ஆனா எனக்கும் ரெண்டு தங்கச்சிங்க பொறுப்பு இருக்கு, அவங்களுக்கும் வயசாகுதுல்ல? அவங்க கடமையை முடிச்சிட்டு இவனோட கடனை அடைக்கிறதுக்குள்ள உன்னை ஏதாவது பண்ணிடுவானோனு பயமா இருக்குடா. சரி விடு, ஏதாவது பண்ணலாம். அப்போ நான் வச்சிடவா? கொஞ்சம் வேலையா இருக்கேன்."
"சரியத்தான், நானும் கிளம்பணும் பை!" என்றவாறு போனை வைத்தாள்.
இருவரும் எப்போதாவது பேசிக்கொள்வார்கள். அதுவும் பொது விஷயங்கள் தானே தவிர, காதலர்கள் பேச்சு வார்த்தைபோல் ஒருபோதுமே இருக்காது. சின்ன வயதில் இருந்து, இவனுக்கு இவள் என்று சொல்லியே வளர்த்ததனால், இருவர் மனதிலும் அது பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. தற்சமயம் ரஞ்சித்தின் அன்னைக்கு, மைதிலியை ரஞ்சித்திற்கு மணம் முடித்து கொடுப்பதில் விருப்பமில்லை. அதனால் தான் இந்த விலகல்.
தன் மகனை ஒரு வசதியான பெண்ணிற்கு கட்டி வைத்தால், இனிவரும் காலமாவது கஷ்டம் அனுபவிக்காமல் சந்தோஷமாக இருக்கலாம் என்பது அவரது திட்டம். ரஞ்சித் குடும்ப பொறுப்புடையவன். எங்கு மைதிலி மேல் இருக்கும் காதலால், கடமையிலிருந்து விலகிடுவேனோ என்று, அளவோடே அவளுடன் பேசுவான்.
எப்போதும் அவன் பேச்சில் கண்ணியமே தெரியுமே தவிர, காதல் தெரியாது. இருந்தும் அவன்மேல் இருக்கும் மரியாதை என்றும் குறையாது அவளுக்கு. ரஞ்சித் பேசியதில் மனம் கொஞ்சம் இலேசானது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கடந்த நிலையில், மூன்று நாட்கள் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த இந்திரா, கையில் மண்வெட்டியுடன் தோட்டத்துக்கு கிளம்பினார்.
"உடம்பு முடியாததோட காணிக்கு போக வேண்டாம். இன்னைக்கு ஓய்வெடுத்துட்டு நாளைக்கு போம்மா." என்றாள் பெரியவள்.
"இந்த இருமலுக்கு இடங்கொடுத்தா, நாளைக்கு பெரிய நோய்க்கு இடங்கொடுக்க வேண்டி வரும்டா. இத பெருசா எடுத்தா நாளைக்கு நீல்லம்மா கஷ்டப்படுவ." என்ற நேரம் அடியாட்களுடன் நுழைந்தான் கனகரெட்ணம்.
"என்ன மாமியாரே நல்லா இருக்கிங்களா? தோட்டப்பக்கம் வெளிக்கிட்டாச்சு போல..." என்றவன்,
"ஸ்... மறந்துட்டேன்." தன் தவறுக்காக வருந்தியவன், "நீ எப்பிடி நல்லா இருக்க முடியும்? உன் புருஷன் தான் புட்டுக்கிட்டானே..." என்று இரக்கமே இல்லாமல் பேசினான்.
மைதிலியைக் கண்டுவிட்டு, "அடடே! என் பேபியும் இன்னைக்கு இங்க தான் நிக்கிறா போலயே! உன்னை பார்க்கத்தான் பேபி நானே வந்தேன். நல்லவேளை அன்னைக்கு மாதிரி நீ எங்கேயும் போகல." என்றவனை மிரண்ட பார்வை பார்த்தனர் இந்திராவும் அவள் மக்களும்.
அவளது மிரண்ட பார்வையிலும் அவள் மேல் வசீகரிக்கப்பட்டவன், "இங்க பாரு பேபி, எதுக்கு என்னை பார்த்ததும் பயப்படுற? காலம் பூராவும் என்கூட வாழப்போறவ பயப்படலாமா?எல்லாம் இந்த அத்தை தான் உங்கிட்ட என்னை பத்தி தப்புத்தப்பா சொல்லி வச்சிருப்பாங்க. ஏன்னா அவங்க தான் அன்னைக்கும் என்னை அசிங்கமா பேசினாங்க." என்றவாறு இந்திராவிடம் வந்தான்.
"என்ன அத்தை, மாமானார் நான் வந்துட்டு போன அன்னைக்கே பரலோகம் போயிட்டானாமே! அவன் போனதுக்கு நான் தான் காரணம்னு ஊர் பூரா சொல்லி வச்சிருக்கியாமே...?" என்று நல்லவன் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவன்,
"அவனுக்கு வயசு வந்திடிச்சு, போயிட்டான். நான் எந்த விதத்தில காரணமானேன்? ஏன்த்த, உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா? என் கடனை அடைச்சிடுவேன்னு, உன் புருஷன் தொழிலை நீ கையில எடுத்துட்டன்னு ஊர் முழுக்க பேசிக்கிறாங்க. முடிஞ்சிடுமா உன்னால? உன் புருஷனே கடனை அடைக்க முடியாமல் ரெண்டு வருஷமா திண்டாடினான். பொம்பள உன்னால அடைக்க முடியுமா என்ன?" என்று இகழ்வாய் கேலி பேசி சிரித்தவன் மேல் கொலைவெறியே வந்தது மைதிலிக்கு.
பெரியவங்க பேச்சிற்கு இடையில் புகுவது நாகரிகமல்ல என அமைதி காத்தாள் மைதிலி. அவன் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடிவிட,
இந்திராவோ இன்று என்ன பிரச்சனையைத் தூக்கிட்டு வந்திருக்கானோ என நினைத்தவாறு அவனையே பார்த்திருந்தார்.
"இங்க பாரு அத்தை, உன்னால உன் புருஷன் வாங்கின கடனை ஆறு மாதத்துக்குள்ள எல்லாம் அடைக்க முடியாது. தம்மா துண்டு நிலத்தில, நீ விவசாயம் செய்து மாதம் பத்தாயிரம் சேமிச்சு வைக்கிறதே கஷ்டம். நீ என்கிட்ட வாங்கின கடனை அடைப்பன்னு நானும் பைத்தியக்காரன் கணக்கா, ஆறு மாசம் வரைக்கும் காத்திட்டிருக்க முடியாது. அப்பிடி காத்திருந்தாலும் நீ கடனை அடைக்கப்போறதும் கிடையாது." என்றவன்,
"நீ என்கூட வா பேபி, உன்னை நான் தங்கத்தாலயே வச்சு தாங்குறேன்." என்று அவள் கையினைப் பற்றி அழைத்தான்.
"அவ கையை விடுடா..." என்று மகள் கையைப் பற்றியிருந்தவன் கையினை ஆவேசமாய் இழுத்தவரை தள்ளி விட்டவன்,
"சும்மா சும்மா வீம்பு பண்ணிட்டிருக்காத..." என்று எச்சரித்தான்.
தள்ளிவிட்ட இடத்திலேயே எதுவும் புரியாமல் முழித்தவருக்கு, தன்மகளை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாது போய்விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.
"தம்பி இது அநியாயம் தம்பி! எழவு நடந்து ஒரு மாதம் கூட முழுசா முடியல. அதுக்குள்ள ஆம்பள துணையில்லாத வீட்டில இந்த மாதிரி பண்றது கொஞ்சமும் நியாயமில்ல." என்றனர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர்.
"வாங்கய்யா! ஊரில ரெண்டு பேரு நியாயத்துக்கு குரல் குடுப்பீங்களே, எங்க காணலனு இப்பதான் நினைச்சேன். நல்லவேளைவந்துட்டீங்க..." என்று அவரை வம்பிழுப்பது போல் பேசியவன்,
"என்ன சொன்னீங்க? ஆம்பளை துணையில்லாத வீடுன்னு தானே!? அதையே தான் நானும் சொல்லுறேன், ஆம்பளைங்க இல்லாத வீடுதான் என் கடனை எப்பிடி அடைப்பாங்களாம்? இவளை தூக்கிட்டு போவேன்னு இன்னைக்கா புதுசா சொல்லுறேன், ஒரு மாதம் முன்னாடியே சொல்லிட்டனே!?
ஆனா இப்போ என்னாச்சு? கடன வாங்கியவன் சொர்க்கத்துக்கு போய் சேந்துட்டான். அவன் இருக்குறப்பவே பத்து பைசா தராத இந்த குடும்பம், மொத்த கடனை எப்பிடி அடைக்கும்? இப்போ நீதி, நியாயம் பேசுற நீ தருவன்னா சொல்லு, பிடிச்ச கையை இப்பவே விட்டுடுறேன். சொல்லு? எப்போ தருவ? எப்போ நான் வீட்ட வரட்டும்?" என்று அவரை வாயடைக்கும் பேச்சு பேசியவனுக்கு தெரியும், இப்படி பேசினால் நியாயம் பேச வந்த கூட்டம் ஒதுங்கி கொள்ளும் என்று.
அவனவன் வாழவே வழியில்லாத போது, பிறர் கடனை அடைக்க முடிந்திடுமா? அவனது கேள்வியில் தலையைத் தொங்க போட்டவர், மறுவார்த்தை பேசாமல் பின்புறமாக சென்று கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டார்.
"வேற யாராவது நியாயம் பேச வாரவங்க தாராளமா வரலாம். ஏன்னா எல்லாருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு." என்று ஏக வசனம் பேசியவன் முன், மறுவார்த்தை பேசாது நின்றுவிட்டனர் அனைவரும்.
"வா பேபி, நாம போகலாம்." என்று அவளை இழுத்தவன் இழுவைக்கு போகாமல், அவனது கைப்பிடியில் இருந்த கரத்தினையும் விடுவிக்காமல் அசையாது நின்றவளை மீண்டும் இழுத்தான்.
அவள் அசைய வேண்டுமே!
"ஏன் பேபி, வரமாட்டேன் என்கிற? நீயும் உன் அம்மா மாதிரி வீம்பு பண்ண போறீயா?" என்றான்.
அவளது கண்களோ தன் கையினைப் பற்றியிருந்த அவன் கரத்தினிலே பதிந்திருந்தது. முகம் கோபத்தில் சிவந்து, பற்களை மூடிய இதழ்களுக்குள்ளேக் கடித்து தன் கோபத்தினை அடக்குவது, அவளது கோணலாய் ஒரு பக்கம் போன உதடுகளின் இறுக்கமே சொல்ல, தன் கையினைப் பார்த்தவாறு அசையாமல் நின்றவளை தன்னைப் பார்க்க வைக்கும் பொருட்டு,
அவள் பார்வை போன கையினை அசைத்து, "வா பேபி!” என்றான் கனகரெட்ணம்.
அவனது உலுக்கலில் நிமிர்ந்து அவனைக் கோபமாக பார்த்தவள், "கையை எடு." என்றாள்.
"ஏன் பேபி? நீ என்கூட தான் வரணும்." என்றான் விடாது.
ரஞ்சித் தீண்ட வேண்டிய கையினை இவன் தீண்டியதும் இல்லாது, தாயை தள்ளி விட்டு பேபி என்று தன்னை செல்லமாக அழைத்தது அவளது எரிச்சலை இன்னும் அதிகரித்தது.
"கையை எடுன்னு சொன்னேன்." என்றாள் மீண்டும் பற்களைக் கடித்தவாறு.
இதற்கெல்லாம் அவன் பயந்திடுவானா?
"கையை எடுடா நாயே!" ஆத்திரத்தின் உச்சிக்கே போய் விட்டாள்.
"இங்க பாரு பேபி, கட்டிக்க போறவன வாடா போடா நாயேன்னா எனக்கு கோபம் வந்திடும். உன்னோட அப்பன் என்கிட்ட கடனை வாங்கிருக்கான் பேபி. அதை தரல, உன்னை எடுத்துக்கிறேன் அவ்ளோ தான்." என்று சாதாரணமாக சொன்னவன் பேச்சு இன்னும் கோபத்தினை உண்டாக்க,
மறு கையினால் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள், "என்னடா நினைச்சிட்டிருக்க? நான் என்ன, நீ கடனை குடுத்துட்டு ஏமாத்தி வாங்கிக்கிற வீடு, நிலம்னு நினைச்சியா? உயிருள்ளவ... ஏதோ பொருளை எடுத்துக்கிறேன்னு சொல்லுறது போல சொல்லுற. கடன் தான் வாங்கினோமே தவிர, அடிமை சாசனம் எழுதல.
இதபோல அன்னைக்கு பேசுறப்போ நின்னிருந்தேன்னா உன் வாயில இருக்கிற முப்பத்திரெண்டையும் பொறுக்கிட்டு போக வச்சிருப்பேன். அப்பா உயிரும் போயிருக்காது. பொம்பளங்க தானே, என்ன செய்தாலும் எதுவும் செய்ய மாட்டோம்னு நினைச்சிட்டு வந்தியா? நீ நினைக்கிற ஆளு நான் கிடையாது." என்று அவளது கோபத்தில் நெஞ்சமோ மேலும் கீழும் ஏறியிறங்கியது.
"என் அனுமதியில்லாம என் மேல கைய வச்ச, கொன்னுடுவேன். அதான் ஆறு மாசத்தில உன்னோட ஒன்றரை லட்சத்தையும் அடைச்சிடுவோம்னு சொன்னோம்ல? அப்புறம் என்ன இழவுக்கு இங்க வந்து கத்துற?"
அவள் அறைந்ததில் கன்னத்தில் கைவைத்து அதிர்ந்து நின்றவன், "இதோ பார்றா, ஒன்றரை லட்சமாம்?" என்று தன்னோடு வந்தவனுக்கு கூறிச் சிரித்தவன், "உன்னோட அப்பன் எனக்கு ஐஞ்சு லட்சம் தரணும்." என்றான்.
"என்னது! ஐஞ்சு லட்சமா?" என்றவள், “உன்கிட்ட அப்பா வாங்கின தொகை ஐம்பது ஆயிரம் தானே? எப்படியும் ரெண்டு வருட வட்டியோடு ஒன்றரைகுள்ளாதான் வரும். இது என்ன புது கணக்கு?" என்றாள் இமைகளை முடிச்சிட்டு.
"இங்க பாரு, அத பத்தி எனக்கு தெரியாது. உன்னோட அப்பா கடன் வாங்குறப்ப, என்னோட நிபந்தனைக்கு கட்டுப்பட்டுத்தான் கடனை வாங்கினான். கேள்வி கேக்கிறதா இருந்தா, உன் அப்பனை கூப்பிட்டு கேளு. உன் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை. இதுவரை நீங்க தரவேண்டிய தொகை வட்டியோட ஐஞ்சு லட்சம் வருது.
அதை விட இன்னும் ஆறு மாசம்னா, அதற்கும் வட்டி போடுவேன். இன்னும் ஆறு மாதத்தில் வருவேன். என் காசு என் கைக்கு வரவேண்டும். இல்லை பேசிட்டு இருக்க மாட்டேன்." என்றவன்,
"இன்னும் ஆறு மாசம் தான? இத்தனை பேரு முன்னாடி ஆம்பளனு கூட இல்லாம, என் மேல கையை வைச்சிட்டல்ல... ஆறு மாசம் போகட்டும்டி, அப்புறம் இதுக்கும் வட்டியும் முதலுமா சேத்து உன்னை நான் பழி தீக்கல, நான் கனகரெட்ணம் இல்லடி...” என்று மீசையை முறுக்கியவாறு வெளியேறினான்.
தொடரும்...