• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 8

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
பகுதி 8



அவன் சென்ற கையோடு செய்வதறியாது திண்ணையில் தொப்பென அமர்ந்தவள் அருகில் ஓடிவந்து அமர்ந்த இந்திரா, "அம்மாடி, நீ எதுக்கும் யோசிக்காதம்மா. எப்பிடியாவது அம்மா அவன் கடனை அடைச்சிடுறேன்.”


"எப்பிடிம்மா, அந்தளவுக்கு கடனை நம்மளால அடைக்க முடியும்? ரெண்டு லட்சத்துக்கே திண்டாடினோம். ஐஞ்சு லட்சம் என்கிறானேம்மா? என்னம்மா செய்யப்போறோம்? இந்த மாதிரி மனசாட்சியே இல்லாமலும் மனுஷங்க இருப்பாங்களாம்மா? முடியாதும்மா... எப்பிடியும் நம்மளால அவன் கடனை அடைக்க முடியாது." என்று வேதனை நிறைந்த குரலில் கூறியவள்,


"நான் அவனையே கட்டிக்கிறேன். எப்பிடியும் ஆறு மாசத்துக்கப்புறம் அவன் வந்து, இதே மாதிரி தகராறு பண்ணி, என்னை வலுக்கட்டாயமா இழுத்துட்டு போகத் தானம்மா போறான். அதை பார்த்து ஊரு சிரிக்கிறதுக்கு முன்னாடி, நாமளே சமாளிச்சு போயிடுவோம்மா." என்றவளை,


"மைதிலி!" என்று அதட்டியவர் பின் என்ன நினைத்தாரோ, "என்னடா பேசுற? முடிஞ்சவரை முயற்சி பண்ணி பாப்போம்டா. நம்மளால முடியல்ல என்கிறப்போ, எதையாவது தின்னு மூனு பேருமே செத்திடலாம்மா. உன்னை மட்டும் அவனுக்கு தாரை வார்த்துட்டு நாங்க சந்தோஷமா இருந்திருவோமா?" என்று அவளை அணைத்து விசும்பினார்.


"அம்மா ரொம்ப தலை வலிக்குது." என்று எழுந்தவள் பாயினை போட்டு படுத்துக்கொண்டு, கண்களை மூடியவளுக்கு தூக்கம் வரவேண்டுமே?!


துக்கம் தொண்டையை அடைத்தாலும், நிம்மதியாக அழவும் முடியவில்லை. தான் அழுதால் பெற்றவளுடன் மற்றையவளும் அழுவாள் என்றுதான், தலைவலி என்று பொய் கூறி படுத்துக்கொண்டாள். அடுத்து என்ன செய்வதென்று மைதிலிக்கு தெரியவில்லை.


தன் கல்விக்கு எந்த வேலையும் நிச்சயம் கிடைக்காது.கனகரெட்ணம் சொல்வதைப்போல், தோட்டத்தில் விளையும் விளைச்சலில் பத்தாயிரம் கூட தேறாது. இதில் ஆறு மாதத்தில் ஐந்து லட்சம் எப்படி? யாராவது ஓர் ஆண் துணையிருந்தாலாவது கூலி வேலை சென்று சம்பாதிச்சு கடனை அடைக்கலாம். எல்லாமே தான் உயிரோடு இருப்பதனால் தான் இந்த துன்பம் என நினைத்தவள், ஆறு மாதங்களின் பின் வந்து தன்னை தூக்கிச் செல்வேன் என்ற கனகரெட்ணம் நிழலாய் மனக்கண் முன் வந்து போனான்.


அத்தான் இல்லாத வாழ்க்கை ஒன்றிருந்தால், நிச்சயம் தான் உயிர் துறப்பேன் என்று தனக்குள் முடிவெடுத்தவளாய், அத்தனை நேரம் படுக்கையில் உழன்று கொண்டிருந்தவள், அப்போதுதான் கண் அயர்ந்து கொண்டு போனாள்.


"இந்திரா!" என்ற பெரும் குரலாய் ஒலித்த பெண்ணின் குரலில், அவசரமாக வெளியே ஓடி வந்து எட்டிப்பார்த்தார் இந்திரா.


அங்கு மைதிலியின் அத்தை மீனாட்சி நிற்பதைக் கண்டவர், "வா மீனாட்சி!" என்றுஅழைத்தார்.


"நான் ஒன்னும் உன் வீட்டு விருந்துக்கு வரல..." என்று மீண்டும் வந்ததும் வராததுமாய் கத்தியவள் குரலில் தூக்கம் கலைந்தாள் மைதிலி.


வாசலில் கேட்ட குரலில் யார் என்பதை அறிந்தவள், எழுந்து கதவோடுடு ஒட்டி நின்று கொண்டாள்.


"என்னடி நினைச்சிட்டிருக்கிங்க ஆத்தாளும் மகளுங்களுமா, இளிச்சவாயன் நாங்கள்ன்னா?"


"என்னாச்சி மீனாட்சி எதுக்கு கத்துற? முதல்ல உள்ள வந்து பேசு, வெளியில வேணாம்." என்றார் தன்மையாய்.


"ஓ...! கௌரவம் பாக்கிறீங்களோ? காலையில ஊர் பூரா உங்களை தான பேசிச்சு. இன்னும் என்ன கௌரவம் வேண்டிக்கிடக்கு? இங்க பாரு, நான் ஒன்னும் உன்னை சொந்தம் கொண்டாட வரல. ஊர் முழுக்க கடனை வாங்கிட்டு என் பையன் தலையில கட்டிவிடவா பாக்கிற?"


"என்ன மீனாட்சி? நீ உள்ள தான் வரவேணாம், கொஞ்சம் மெதுவா தான் பேசேன். பாவம் பொண்ணு, தலைவலின்னு இப்போ தான் படுத்துக்கிட்டா. சத்தம் போட்டு அவளை எழுப்பிடாத." என்று இந்திரா கெஞ்ச,


"ஆமாடி! அவ பெரியா எஜமானி. அவ தூக்கம் கலைஞ்சுடக்கூடாது. எல்லாமே அந்த கிரகம் புடிச்ச சனியனால தானே வந்திச்சு. ஏன், உன் பொண்ணு என்ன பட்டத்து இளவரசியோ? நான் தெரியாமத்தான் கேட்கிறேன், அந்த கனகரெட்ணத்துக்கு என்ன கொறைச்சல்? உன் வசதிக்கு காலம் பூரா உன் பொண்ணுங்கள வீட்டிலயே வச்சிருக்க போறியா என்ன? யாரு வந்து கேக்கிறாங்களோ அவனுக்கு கட்டிக்குடுக்கிறத விட்டுட்டு, எதுக்கு எங்க உயிரையும் வாங்கிற?" என மூச்சிரைக்க பேசினார்.


"ஏன் மீனாட்சி, நீயே இந்த மாதிரி பேசுற? அந்த கனகரெட்ணம் தான் அந்த மாதிரி பேசுறான்னா நீயுமா? உன் மனசாட்சிய தொட்டு சொல்லு, அவனுக்கு எந்த குறையுமே இல்லையா? அவன் வயசென்ன? இவ வயசென்ன? சரி வயசு தான் போகட்டும், என்ன தொழில் பண்றான் அவன்? ஊரை ஏமாத்தி பிழைக்கிறது கொலைக்கு சமம். அத அவன் சாதாரணமா செய்யிறான். அவனுக்கு பரிந்து பேசிட்டு வாரீயே மீனாட்சி!" என்றார் இயலாமையின் உச்சமாய்.


அவளுக்கு கணவன் கூடப் பிறந்தவளே தமக்கு சாதகமாய் இல்லை என்ற ஆதங்கம்.


"ஓ! பெரிய கொறை... கொறை கண்டுபிடிக்கிற அளவுக்கு நீங்க வளந்துட்டிங்களோ? இங்க பாரு, உன் பொண்ணுக்கு யாரும் மாப்பிள்ளை தரமாட்டாங்க. அப்பிடியே தரதுக்கும் உன் குடும்பம் ஒன்னும் செல்வ செழிப்பில மிதக்கல. ஏதோ இரக்கப்பட்டு ஒருத்தன் வாழ்க்கை தாறேன்கிறான், வந்த வரைக்கும் லாபம்ன்னு கட்டிக்குடு. காலம் பூரா கண் கலங்காம காப்பாத்துவான்." என்றார் இரக்கமே இன்றி.


"மீனாட்சி!" என அவளை அடக்கிய இந்திரா,


"என் பொண்ணை யாருக்கு கட்டிக்கொடுக்கணும்னு எனக்கு தெரியும். நீ உன் வேலைய பார்த்திட்டு போ." என்றார் ஆத்திரமாக.


"எனக்கென்னடியம்மா வந்திச்சு? நல்லது சொன்னா யாருக்குத்தான் பிடிக்கும்? நீ எக்கேடாவது கெட்டுப்போ. ஆனா என்னை நிம்மதியா இருக்கவிடு. உன்னால என் வீட்டுக்கும் வந்து அந்த கனகரெட்ணம் நான் வாங்கின கடனையும் வைனு நிக்கிறான். நான் தெளிவா அவனுக்கு சொல்லிட்டேன், எனக்கும் உன் குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்லனு.


அண்ணனே இல்லயாம், உன் உறவு மட்டும் என்னத்துக்கு எனக்கு? என் பையனுக்கு நல்ல பொண்ணாப் பாத்து நான் கட்டி வைக்கிறேன். அந்த சிறுக்கியையும் எவனாவது ஒரு இளிச்சவாயனை பாத்து தள்ளி விடு. என் பையன மயக்க நினைக்காத. அவன் நான் சொல்லுற பொண்ணு கழுத்தில தான் தாலி கட்டுவான். ஆத்தாளும் மகளும் என் பையன வளைச்சு போடலாம்னு கனவு காணாதிங்க." என்று கத்திவிட்டு சென்று விட்டார்.


மீனாட்சியின் வார்த்தையில் உடைந்து போனார் இந்திரா. ரஞ்சித்தையே தன் கணவனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகளுடைய எதிர்காலம், இனி என்ன என்ற கேள்வி அவர் முன் நிற்க, என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கியவர்,


திடீரென மகள் நினைவு வர, இத்தனையும் மகள் கேட்டிருப்பாளோ? பாவம், ஏற்கனவே நொந்து போய் இப்போது தான் உறங்குகிறாள். மீனாட்சியின் பேச்சையும் கேட்டிருந்தால் நொறுங்கியே போய் விடுவாள் என்று பதறியவராய், உள்ளே ஓடி வந்து மகளைப் பார்த்தார்.


எதையும் அறியாது நல்ல உறக்கத்தில் இருப்பது திருப்தி தர,


"என் பொண்ணுக்கு மட்டும், ஏன்ப்பா இத்தனை சோதனையும் தர நகுலேஸ்வரா?" என புலம்பியவாறே வேலையினைக் கவனிக்க சென்றார்.


தூங்குவது போல் நடித்தவளால், அதற்கு மேலும் நடிக்க முடியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து கிணற்றடிக்கு சென்றவள் முகத்தினை அலசிவிட்டு, "அம்மா வீட்டில இருக்க ஒரு மாதிரி இருக்கு. தேனு வீடுவரை போயிட்டு வரேன்." என்றவள் தாயின் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தாள்.


வீட்டில் இருந்தால் மகள் கண்டதையும் யோசித்துக் கலங்குவாள், வெளியே போனால் கொஞ்சம் தெளிவாவாள் என நினைத்து அவரும் விட்டுவிட்டார்.


கால் போன போக்கில் நடந்தவள் நினைவுகளோ அத்தையின் பேச்சினிலே உழன்றது.


சிறுவயதில் இருந்து ரஞ்சித் மனைவி நீதான் என்று ஆசையைக் காட்டிவிட்டு, இப்போது அவனை உனக்கு கட்டி வைக்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்? அவளா ரஞ்சித்தைத் தனக்கு கட்டி வை என்று கேட்டது?


அவர் தானே மருமகளே மருமகளே என்று எதற்கெடுத்தாலும் மைதிலியை ஆசையாக அழைப்பார். இன்று எவனோ ஒருவனை கட்டிக்கொள் என்றால், சட்டையை மாற்றுவது போல் மனதையும் மாற்றிவிட முடியுமா என்ன?


கடந்த நான்கு வருடங்களாக என்ன நடந்ததோ!


மைதிலியை பேச்சினாலேயே காயப்படுத்துவாள்.


அவளது அப்படியான பேச்சின் பின்னர் இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று மைதிலி கொஞ்சமும் நினைக்கவில்லை. சொத்துக்கும் பணத்துக்கும் இருக்கும் மரியாதை சொந்தத்திற்கில்லை என நொந்தவள், 'அத்தை தான் என்னை வேண்டாம் என்றாரே தவிர, நிச்சயம் அத்தான் என்னை வேண்டாம் என்க மாட்டார். அவர் என்மேல் உயிரையே வச்சிருக்காரு. அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை என்கிறதும் அவருக்குத் தெரியும்.' என்று தன் அத்தை மகன் மேல் நம்பிக்கை கொண்டவள், தன்னிச்சையாய் இயங்கிய கால்களின் போக்கிலேயே நடக்கலானாள்.


தன் வீட்டு கேட்டில் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தவள், தூரத்தே தளர்ந்த நடையோடு வரும் மைதிலியைக் கண்டதும், "அக்கா மைதிலி வரா, நான் மீதிய அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கிறேன்." என்றவாறு அவளை அவசரமாக அனுப்பி வைத்தவள், மைதிலியையே பார்த்திருந்தாள்.


ஆம், மைதிலி தந்தை இறந்த செய்தியறிந்து இறப்பு வீட்டுக்கு சென்ற தேனு, ரமசாமி இறந்ததற்கான காரணம் அறிந்து, இன்றுவரை அவள் வீட்டில் நடக்கும் விஷயங்களை, இந்த பெண்மணியின் மூலம் தான் தெரிந்து கொள்வாள். இன்று காலையில் நடந்த விஷயங்களை அவள் கூறிக்கொண்டிருக்க, வாழ்வை வெறுத்தவள் போல் வருபவளைக் கண்டாள்.


தன்னைக் கண்டதும் மைதிலி நிற்பாள் என நினைத்திருக்க, அவளோ இந்த உலகத்தில் இல்லாது, அவளைக் கடந்து செல்வதை உணர்ந்து, அவள் தோள்களைப் பற்றி தன்புறம் திருப்பினாள்.


இத்தனை நேரம் கீ கொடுத்த பொம்மை போல் நடந்து கொண்டிருந்தவள், தேனுவைக் கண்டதும் பசுவினைக் கண்ட கன்றுக் குட்டியாய், "தேனு...!" என்று கதறியவாறு அவளைத் தழுவிக்கொண்டாள்.


அவள் நிலை புரிந்தவளோ. "அழாதடி!" என்று தேற்றியும் அவள் கண்ணீர் தான் ஓயவில்லை.


வீதியில் செல்வோர் ஒரு மாதிரியாகப் பார்க்க, தேனுக்குத்தான் சங்கடமாக போய்விட்டது.


"மைதிலி அழாதடி! இது என்ன சின்ன குழந்தை மாதிரி? என்னாச்சுனு இந்த மாதிரி அழற?" என்றவாறு தன் தோளில் இருந்த மைதிலியைப் பிரித்து நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டவள்,


"வா! வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்." என்று வீட்டினுள் அழைத்துச் சென்று, அங்கிருந்த சோபாவில் அமர்த்தி என்னவென்று விசாரித்தாள்.


காலையில் இருந்து இப்போது வரை நடந்தவற்றைக் கூறியவள், "இதுக்கு மேல என்ன செய்யிறதுனு தெரியலடி." என மீண்டும் கண்ணைக் கசக்கியவளைப் பார்க்க பாவமாகிப்போனது.


"இங்க பாருடி, உனக்கு உன் அத்தான் மேல நம்பிக்கை இருக்குல்ல, அப்புறம் என்ன?" என சமாதானம் சொல்ல,


"அதெல்லாம் இருக்கு, ஆனா இந்த கனகரெட்ணம்?" என்று அழுதவளை என்ன சொல்லி தேற்றுவாள்.


அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்து அன்றைய பத்திரிகையை புரட்டியவாறு இருந்த தந்தையிடம் திரும்பியவள், "அப்பா! மைதிலிக்கு ஏதாவது உதவி செய்யலாம்ப்பா." என்றாள் கெஞ்சலாய்.


"நாம என்னடா செய்ய முடியும்?" என்று பத்திரிகையினை மடித்து டீப்பாயின் மேல் வைத்தவரும், இருவரின் பேச்சினையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தார்.


"நீ சொல்லுறது போல பண உதவி செய்யலாம் தான்டா. ஆனா அவனுக்கு பணம் பிரச்சினையில்ல. அவனுக்கு தேவை மைதிலி! அவன் எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்றான். பணமில்லனு சொன்னா வேற ஒரு வழியில மைதிலிய தொல்லை பண்ணுவான். அதுவும் ஆண் துணையில்லாத வீடு என்கிறது அவனுக்கு இன்னும் வசதியா போச்சு." என்றவர்,


"நான் ஒரு ஐடியா சொல்லவா? கொஞ்ச காலத்துக்கு யாருக்கும் தெரியாம, குடும்பத்தோட வேற ஊருக்கு போயிடுங்க. அது முடியலன்னா நீயாவது போயிடு." என்றார்.


"வெளியூர்ல யாரை அங்கிள் தெரியும் எங்களுக்கு?" என்றாள் சோகமாக.


சிறிது அமைதி காத்தவருக்கு என்ன தோன்றிற்றோ, "எனக்கொருத்தங்கள தெரியும்மா, நீ அவங்க வீட்டுக்கு போய் இருந்துக்கிறியா? நடக்க முடியாத அம்மா ஒருதங்கள பராமரிக்கணும். மாதம் முப்பதாயிரம் சம்பளம். அங்க போயிட்டா உனக்கும் பாதுகாப்பா இருக்கும், அவங்களையும் பார்த்துக்கிட்டதா போயிடும்." என்றார்.


மைதிலி சொல்வது அறியாது சிந்திக்க, "இத விட்டா உன்னை காப்பாத்திக்க வேற வழியில்லம்மா. நீ பயப்படுற அளவுக்கு அவங்க பொல்லாதவங்க எல்லாம் இல்ல. நாலே நாலு பேரு தான். ஒரு வயதான தம்பதியும், நீ பராமரிக்க போற அந்த அம்மாவும் அவரு பையனும் தான். அந்த தம்பியுமே வீட்டில நிக்க மாட்டாரு, பெரிய தொழிலதிபர். இரவு தான் வீட்டுக்கு வருவாரு. ரொம்ப நல்ல குணம் படைச்ச மனுஷங்க, பயப்படவே தேவையில்லை.


உனக்கு சரினா சொல்லு, நான் இப்பவே கேட்டு சொல்லுறேன். ஏன்னா ஒரு மாதத்துக்கு முன்னாடி நல்ல பொண்ணா இருந்தா சொல்லச் சொன்னாங்க. இதுவரை அப்பிடி யாரையும் தெரியாதனால, அமைதியா இருந்திட்டேன். இப்போ அந்த வேலைக்கும் ஆள் கிடைச்சிருக்கலாம், கேட்டாதான் தெரியும்." என்றார்.


வேறு வழியில்லாததனால் சரி என்றுவிட்டாள்.


"பேசிட்டு வந்திடுறேன்." என்றவாறு தன் அறை சென்றவர், பத்து நிமிடங்களில் திரும்பி வந்தார்.


"உன் நல்ல காலத்துக்கு யாரும் அந்த வேலைக்கு போகலையாம்மா. இன்னைக்கு நைட்டுக்கே யாருக்கும் தெரியாமல் ரெடியாகு. வீட்டிலயும் சொல்லிடு, நீ எங்க போறன்னு யாருக்கும் தெரியக்கூடாது. அப்புறம் கனகரெட்ணத்துக்கு தெரிஞ்சா, அங்கேயும் போய் டார்ச்சர் பண்ணுவான். அப்புறம் வீட்டில இதுக்கு ஒத்துப்பாங்களா? ஏன் கேக்கிறேன்னா ஒரு வயசுப் பொண்ணை இன்னொரு வீட்டில போய் தங்குறதுக்கு பெரியவங்க விரும்ப மாட்டாங்கடா." என்றவரிடம்,


"நான் பேசுறேன்ப்பா, மைதிலி அம்மாக்கு நான் புரிய வைக்கிறேன்." என்றவள் தன் தோழிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தோம் என்ற திருப்தியில், மைதிலியை அழைத்துக்கொண்டு அவள் வீடு சென்றாள்.



தொடரும்…