• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - நிரஞ்சனா தேவி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மழை

அன்று அவள் தந்தை ராகவன் வேகமாக வீட்டிற்குள் வந்து, “வர்ஷா சீக்கிரமா கிளம்பி சி ஸ்கொயர் கஃபே போமா” என்றார். “எதுக்குங்க அவள அங்க போக சொல்றீங்க? என்ன விஷயம்?” என்றாள் மனைவி சுமித்ரா. “அன்னறைக்கு வர்ஷாக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குனு சொன்னேன்ல அவங்க வீட்ல எல்லாருக்கும் நம்ம வர்ஷுவ ரொம்ப பிடிச்சிருக்காம். வர்ஷு கிட்ட அந்த பையன் தனியா பேசணுமாம். அதுனால தான் இந்த சந்திப்பு. இந்த சம்மந்தம் நல்லபடியா முடிஞ்சா நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன். வர்ஷு, பையனோட போட்டோவும், பெயரும் உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன் பார்த்துக்கோ” என்றார். “அங்க வேண்டாம்பா வேறெங்காவது போய் பார்க்குறேன்” என்று கூறவும் அவள் தந்தை அவளை ஒரு பார்வை பார்த்தார். உடனே “சரிப்பா” என்று கிளம்பினாள். ஆட்டோவில் போகும்போதே அந்த இடத்திற்கு சம்பந்தமான கசப்பான நினைவுகளை உருபோட்டுக் கொண்டே சென்றாள்.

வர்ஷா மழையில் பாதி நனைந்தும் நனையாமலும் அந்த கஃபேகுள் நுழைந்தாள். “சை இந்த மழ வேற இப்போ தான் பெய்யணுமா?” என்று முணுமுணுக்கும் போதே “மழைனா உங்களுக்கு பிடிக்காதா?” என்று ஒரு குரல் கேட்டது. குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று தேடும்போது அங்கு அழகான தோற்றத்துடன் அமர்ந்திருந்தான் ஓர் வாலிபன். கேள்வியாக அவனை பார்த்தவளை “ஹாய், நான் தான் முகில்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அவனை அடையாளம் கண்டுகொண்டவளாக, “ஹாய்” என்று கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். “இன்னும் கேட்டதற்கு பதில் வரவில்லையே” என்றவனுக்கு “எனக்கு பிடிக்காது” என்று சுருக்கமாக பதிலளித்தாள். “வர்ஷானா மழைன்னு அர்த்தம். இப்படி ஒரு அழகான பெயர வச்சிக்கிட்டு மழைய பிடிக்காதுனு சொல்றீங்க?” என்று கேட்டான். “பிடிக்கலேனா விட்ருங்களேன்“ என்ற உடன் அந்த பேச்சை நிறுத்தி வேறுவிஷயங்களை பேசலானான்.

அனைத்திற்கும் அவள் சுருக்கமாகவே பதிலளித்துவிட்டு தன் கை கடிகாரத்தை பார்த்து “நேரமாகிவிட்டது செல்கிறேன்” என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

வீட்டிற்கு வந்தவள் விரைந்து தன் அறைக்குள் சென்றாள். பின்னோடு வந்த அவள் தங்கை கீர்த்தி அவளை பார்த்து, “என்ன நடந்தது?” என்று கேட்டாள். விவரிப்பதற்குள் அவள் அம்மா அங்கே இனிப்புடன் வந்து “என் தங்கம் உனக்கு இவ்வளவு பெரிய இடம் அமையும்னு நினச்சிகூட பாக்கல” என்றாள். “நான் பேசியதற்கு அவன் வேண்டாம் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஏன் அவன் ஒப்புக்கொண்டான்?’ என்று எண்ணினாள்.

அவர்களின் திருமணம் முடிந்த பிறகும் அவள் அவனை கணவனாக ஏற்கவில்லை. காலங்கள் செல்ல அவள் அவனையும் அவன் அன்பையும் புரிந்துகொண்டு அவன் மீது காதல் கொண்டாள். அவனுடன் தன் வாழ்வை துவங்குவதற்கு முன் எந்த ரகசியமும் இருக்ககூடாது என்று நினைத்து அவளுடைய திருமணத்திற்கு முன் உள்ள காதல் தோல்வியை சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.

அன்றும் நல்ல மழை. வர்ஷா, முகிலுக்கு தொலைபேசியில் அழைத்து, “முகில், நாம முதல்ல சந்திச்ச கஃபேக்கு வாங்களேன். உங்ககூட பேசணும்” என்றாள். அவர்கள் இருவரும் கஃபேயில் முதலில் சந்தித்த அதே இடத்தில் அமர்ந்து இருந்தார்கள். “முகில் உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும். எனக்கு...” என்று முடிக்கும் முன்பு “என்ன கல்யாணத்துக்கு முன்னாடி பிரேக் அப்பா?” என்று கேட்ட உடன் அவளுக்கு தூக்கிவாரிபோட்டது. “எப்படி உங்களுக்கு...” என்றவளின் கேள்விக்கு அவன், “நேத்து உன்னோட டைரில மழை பத்தின ஒரு கவிதைய பார்த்தேன். அது எனக்கு ஒரு பொண்ண ஞாபகம் படுத்துச்சு. அந்த கவிதைய அவ தன்னோட காதலனுக்காக சொல்லிக்கிட்டு இருந்தா. பாவம் அவளுக்கு அன்னைக்கு பிரேக் அப் ஆக போகுதுன்னு தெரியாது. அந்த கவிதைய கூட ரசிக்காம அந்த காதலன் அவள விட்டுட்டு போய்ட்டான். அப்ப நான் யோசிச்சேன் ‘அந்த பொண்ணோட அருமை மற்றும் மழையோட அழக ரசிக்க தெரியாதவன்’. என்று. அன்றைக்கு உன்ன நான் பாக்கல ஆனா நேத்து உன்னோட டைரிய பார்த்ததும் தான் தெரிஞ்சது அது நீதான்னு” என்று அவன் கூறும்போதே அவள் கண்களில் நீர் பெருகியது. அவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டே “ஆமா, அன்றைக்கு நீங்க எதுக்கு வந்தீங்க?” என்றவளுக்கு “எனக்கும் அங்க தான் பிரேக் அப் ஆச்சு. அன்று என்னோட காதல் தோல்வியின் முதலாம் ஆண்டு நிறைவு நாள். அன்றுவரை மழையை வெறுத்த நான் உன்னால் ரசிக்க துவங்கினேன்“ என்று அவள் கைகளில் முத்தமிட்டான். அன்று தான், கசப்பு, மழையில் அல்ல இறந்தகால நினைவில், என்பதை உணர்ந்து மழையை ரசிக்கத் துவங்கினாள் தன் கணவனுடன்.