• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - முகில் தினகரன்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
“மழை”
(சிறுகதை)

திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச்சென்று குடிசையில் ஒதுங்குவதையும் அங்கிருக்கும் கதாநாயகன் அவளின் மேனியழகில் சொக்கி, அவளை அணைப்பதையும், அவளும் மயங்கிச் சாய்வதையும், படத்தில் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு.

ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை, ஏதோவொரு ஏக்கம்தான் எட்டிப் பார்த்தது.

“ச்சை.. இந்த மழை சனியன் நேரங்கெட்ட நேரத்துல வந்து வாதிக்குது?” மழையைச் சபித்தாள்.

“சும்மா மழையைத் திட்டாதே…அது வந்ததினால்தான் நீ மாமா வீட்டுல வந்து மழைக்கு ஒதுங்கியிருக்கே.... அப்படி ஒதுங்கியதால்தான் உன் மிலிட்டரிக்கார மாமன் மகன் உன்னை உள்ளார கூப்பிட்டிருக்கான்!” உள்மனம் மழைக்கு வக்காலத்து வாங்கியது.

“சாவித்திரி…இப்படி ஈரச் சேலையோட நின்னுட்டிருந்தா ஜலதோஷம் வந்திடும்டி!” சிரித்தபடி சொன்ன மாமன் மகன் விஜயகுமாரை வெட்கத்துடன் பார்த்தாள்.

“வந்து.. அத்தையும் மாமாவும் இருப்பாங்க!ன்னு நெனச்சுத்தான் இங்க வந்து ஒதுங்கினேன்”

“ஏன்..நான் தனியா இருந்தா வரமாட்டியா?..பயமா?…நான் கடிச்சுத் தின்னுடுவேனா?”என்றான் பெரிதாய்ச் சிரித்தவாறே.

“பயமெல்லாம் இல்லை” என்றாள் கழுத்தை ஒடித்தபடி.

“சரி..சரி..அந்த ரூமுக்குள்ளார போய் ஈரத்தைத் துடைச்சிட்டு, அம்மாவோட சேலை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டாவது வா”

முதலில் மறுத்தவள் அவன் முறைக்க தயங்கியபடியே சென்றாள்.

சென்றவள், “படார்” என்றொலித்த இடியோசைக்கு பயந்து, அரைகுறை ஆடையுடன் ஓடிவந்து மாமன் மகனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

மனதில் பயத்தின் படபடப்பு அடங்க பத்து நிமிடத்திற்கும் மேலானது.

அது அடங்கியதும் இருவருக்குள்ளும் வேறொரு துடிப்பு தோன்றியது. அந்த ராணுவ வீரன் போரிட அவளே களமானாள்.

வெளியே மழை ஓய்ந்தது.

கண் கலங்கிய சாவித்திரியின் தோளைத் தொட்டு “கவலைப்படாதே சாவித்திரி…நான் போயிட்டு மூணே மாசத்துல லீவ் போட்டுட்டு வர்றேன்…வந்ததும்..உடனே கல்யாணம்தான்..சரியா?”

அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தவள், ‘சரி’ என்கிற பாணியில் தலையை ஆட்டி விட்டு வெளியேறினாள்.

மறுநாள் மாலையே புறப்பட்டு மூன்றாவது நாள் டூட்டியில் ஜாய்ன் ஆன விஜயகுமார் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் போர் புரிய அனுப்பப் பட்டான். போர்க்களம் வரை அவனை துரத்திச் சென்ற விதி நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் பட்டியலில் அவன் பெயரையும் இடம் பெறச் செய்து விட்டே ஓய்ந்தது.

செய்தி கேட்டதும் கதறினாள் சாவித்திரி. மகனை இழந்து தவிக்கும் அத்தையையும் மாமாவையும் பார்த்துப் பார்த்து துடித்தாள்.

அடுத்த சில நாட்களில் விதி சாவித்திரியின் வயிற்றிலும் விளையாடத் துவங்கியது. “ஆண்டவா… இது என்ன சோதனை?.. நான் என்ன செய்வேன்?.. யார்கிட்ட சொல்லி அழுவேன்?” தவித்தாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் மறைக்க முடியும்? தாய்க்கு சந்தேகம் வர, நேரடியாகவே கேட்டு விட்டாள். அழுதபடியே சொன்னாள் சாவித்திரி.

செய்வதறியாது சிலையாய்ச் சமைந்து நின்றாள் சரஸ்வதி. மனம் மட்டும் “அடிப்பாவி மகளே.. குடும்ப மானத்தைக் குலைச்சிட்டியேடி” என்று மௌனமாய்க் குமுறியது.

கணவர் வந்ததும் அவரைத் தனியே அழைத்துச் சென்று கண்ணீருடன் சொன்னாள்.

அதிர்ந்து போனார் சாமிநாதன், “நீ சொல்றது நெஜமா?” நம்ப முடியாமல் கேட்டார்.

மனைவி உறுதியாய்ச் சொன்னபின் தலையில் கைகளை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து மெல்லமாய்க் குலுங்கினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, விஜயகுமாரின் பூதஉடல் ராணுவ வேனில் வந்திறங்கியது.

அம்மாவும் அப்பாவும் அதைக் காண சென்றிருந்த நேரத்தில் தன் மாமன் மகனை சவமாய்க் காணச் சகியாத சாவித்திரி, யாருமில்லாத தனிமையை உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கில் தொங்க முயல, எதற்கோ திரும்பி வந்த சரஸ்வதி கூச்சலிட, கூட்டம் கூடியது. அவசர அவசரமாக கதவு உடைக்கப்பட்டு, சாவித்திரி காப்பாற்றப் பட்டாள்.

“அடிப் பாவிப் பெண்ணே..ஏண்டி இப்படியொரு காரியத்தச் செய்யப் பார்த்தே?” பதறினாள் தாய்.

விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சாமிநாதன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த மகளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு “அம்மா..சாவித்திரி…கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் வாங்கிட்டோமேன்னு நீ கவலைப் படாதேம்மா…உன்னோட வயத்துல வளர்றது ஒரு உதவாக்கரையோட கருவல்ல…இந்த ஊருக்கே பெருமை சேர்த்த…இந்த ஊரே நெனச்சுப் பெருமைப் படற ஒரு உண்மை வீரனோட கரு…தாய் நாட்டுக்காக உயிரை விட்ட ஒரு உத்தமனோட கரு… இதைச் சுமக்கறது உனக்குக் கறை இல்லைம்மா… பெருமை..பெருமை.!... யார் என்ன வேணாலும் சொல்லட்டும் அதைப் பத்திக் கவலையில்லை…அந்த வீரனோட வாரிசை நீ பெத்துக்குடும்மா…நானே வளர்க்கறேன்…வளர்த்து இந்த நாட்டுக்கு இன்னொரு ராணுவ வீரனைக் குடுக்கறேன்…”ஆவேசமாய்…அதே வேளை அர்த்தமுடன் பேசியவரைப் பார்த்து ஊரே வியந்தது.

கறையென்று அவள் நினைத்துக் கொண்டிருந்த கர்ப்பம் அது ஒரு வரம் என்று சாவித்திரிக்கு அப்போதுதான் புரிந்தது.

(முற்றும்)