• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்கழிப் பூவே... - 3

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
"உன்னையே நினைத்து நான் நீர் வார்க்கும் என் முள் மரத்தில் முல்லைப் பூ மலருமா?"

- மார்கழிப் பூவே மூன்றாம் அத்தியாத்தில் இருந்து.....





"அப்பா.....!!!!!! அப்பா....!!!! அந்த பிசாசு தண்ணீர் ஊற்றி
இருப்பது கூடத் தெரியாம தூங்கிட்ட்டே இருக்கா...!!! நீங்களே வந்துப் பாருங்க....!!",

கொலுசு ஒலிக்க குதித்து ஓடும் தன் தங்கையின் அலறல் குரல் கண் விழித்த முல்லை அப்போது தான் தன் உடை ஈரமாகி, தன்னைச் சுற்றி ஒரு ஆறு ஓடிக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.

"சகு...!!! அக்காவை அப்படி சொல்லக் கூடாதுனு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...",

என்றப்படி அவளது தந்தை ராமன் தன் தங்கையை கேட்டுக் கொண்டே வருவது தன் அறையில் தண்ணீருக்கு நடுவே அமர்ந்து இருந்த முல்லைக்கு தெளிவாக கேட்டது.

"என்னம்மா...!! எழுந்துட்டியா? சீக்கிரம் போய் குளிச்சு ரெடியாட்டு டிபன் சாப்பிட வா..! எனக்கு கடையில் முக்கியமான ஆர்டர் இருக்கு...",

என்றப் படி அவள் முன் வந்து நின்றார் ராமன்.

"இதோ போறேன்ப்பா....!! பட் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு, அதை முடித்து விட்டு வரேன்..",

என்றப் படி எழுந்த தன் தமக்கையின் தலையைக் கண்டதும் அதுவரை தன் தந்தையின் பின்னால் நின்றுக் கொண்டு இருந்த சகுந்தலா,

"அய்யோ....யாராவது இந்த ராட்சசி கிட்ட இருந்து என்னைக் காப்பாற்றுங்க...",

என்று அலறியப் படி வெளியே ஓடினாள்.

"ஹே... குட்டிப் பிசாசே!!! நீ இன்னைக்கு கைமா தான்டி, இன்னைக்கு நான் காலேஜ் போகலனாலும் பரவாயில்லை, உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்..!!!",

முல்லை தன் தந்தையின் கையில் இருந்த இஞ்சி நறுக்கிக் கொண்டு கத்தியை
எடுத்து இல்லை இல்லை பறித்துக் கொண்டு தன் தங்கையை துரத்தினாள்.

"இதோப் பாரு, நேத்து நீ என் மேல் தண்ணீர் ஊற்றியதுக்கும் நான் இன்னைக்கு காலையில்
தண்ணீர் ஊற்றியதுக்கும் சரியாப் போயிட்டு...அப்புறம் எதுக்கு துரத்துற?",

மூச்சிரைக்க ஓடிக் கொண்டே கேட்டாள் சகுந்தலா.

"ஓ...அப்போ நேத்து சாயந்தரம் என்னை வம்பிழுத்தது எந்த கணக்கு? நைட் நான் தூங்கும் போது பேனை ஆஃப் பண்ணிட்டு போனதுலாம் என்ன கணக்கு...?, உனக்கு இருக்குடி....",

"அய்யோ...!!! என்னைக் காப்பாத்துங்க...தனம் அக்கா என்னைக் காப்பாத்துங்க..ராணி அக்கா என்னை அந்த ராட்சட்சி கிட்ட இருந்து காப்பாத்துங்க....!!!",

சகுந்தலா அலறிக் கொண்டே அந்த தேயிலை தோட்டத்திற்கு நடுவே தேயிலை பறித்துக் கொண்டு இருந்த அந்த பெண்கள் ஒவ்வொருவரின் பின்னால் மாறி மாறி ஒளிந்து தன் அக்கா வருகிறாளா என்று எட்டிப் பார்த்தாள்.

"ராணி அக்கா....!! இந்த கதையை நீங்களே கேளுங்க, இந்த ஊட்டிக் குளிருக்கு ஒண்ணுக்கு ரெண்டு ஸ்வட்டரா போட்டுக்கிட்டு இதுப் போதாதுனு ரூம் ஹீட்டரை ஆன் பண்ணிட்டு ஆனந்த மயமாக தூங்கிக் கொண்டிருந்தா அதில் ஜில்லுப்பு தண்ணியை மேலே ஊத்திட்டா அக்கா...நீங்க கொஞ்சம் தள்ளுங்களேன்..!!",

"உனக்கு ஜில்லுப்பு தண்ணி தான் பிரச்சினைனா நாளைக்கு வெந்நீரை ஊற்றிட்டு போறேன்.., இதுக்கா உன் கூடப் பிறந்த உடன் பிறப்பை கொல்ல வந்த?, அய்யகோ...!!! இந்த ராட்சசியிடம் இருந்து இந்த அப்பாவிய காப்பாற்ற யாருமே இந்த பூவுலகில் இல்லையா? இல்லையா..? இல்லையா..?"

இல்லையா எனும் வார்த்தையை
சகுந்தலா மேலே கீழே பார்த்துக் கொண்டு சினிமாப் பாணியில் சொல்லி விட்டு,

"ராணியக்கா, இவளோ பேசிறால, ஐந்து பக்கெட் தண்ணீர் ஊத்தியும் எழுந்து இருக்காமல் நீர் யானை மாதிரி தண்ணீரலையே கிடந்துட்டு அப்பா டிபன் ரெடினு சொன்ன உடன் உடனே எழுந்துட்டா...",

என்று சொல்லி விட்டு சிரிக்க,

"ஏண்டி சொல்ல மாட்ட? கொலுசு அதிர டங்கு டங்குனு நடந்து உன் ஸ்பீக்கர் தொண்டய வைத்துக் கிட்டு பேசுறங்குற பேரில் என்னை கத்தி கத்தி எழுப்பி விட்டுட்டு இப்போ என்னையா சொல்லுற? உன்னை...!!",

என்றப்படி முல்லை ஓடினாள். பெண்கள் இருவரின் சண்டையை வேடிக்கைப் பார்த்து விட்டு இது வழக்கமான ஒன்று என்பது போல் தேயிலைகளை பறித்து விட்டு தங்கள் நடையை கட்டினர்.

"என்ன நீர் யானை மாதிரி தண்ணில கிடந்த தால் ஓடி வர முடியலையா?",

ஓடி விட்டு தூரத்தில் நின்று சகுந்தலா கேட்டு விட்டுப் பழிப்பு காட்ட,

"என்னது நீர் யானையா????, உன்னை....!!",

ஆவேசத்துடன் முல்லை தன் கையில் இருந்த கத்தியை வீச, அது அந்த சாலையில் ஓடி வந்துக் கொண்டு இருந்த ஒரு ஆடவனை நோக்கி சென்று விட்டது. அந்த ஆடவன் யார் என்று கண்டு உணர்ந்த முல்லை அப்படியே உறைந்துப் போய் நின்று விட்டாள்.

அதைப் பார்த்த சகுந்தலா,

"அய்யோ...அப்பா!! அப்பா!!! அக்கா கத்தியால் யாரையோ குத்திட்டா...",

என்று கூக்குரல் இட்டப்படி ஓடினாள்.

"அடியே சகு....!!!",

தன் தங்கையை அழைக்கப் போனவள் தன்னை நோக்கி வரும் அவனைப் பார்த்து பேச்சு மறந்தாள். அவளின் அந்த வில்லன் தான் வந்துக் கொண்டு இருந்தான். ஜாகிங் வந்து இருப்பான் போலும், ஜெனி நேற்று சொன்னது போல் ஹான்சமாக தான் இருந்து தொலைத்தான் அந்த வில்லன்.

"என்னோட டிரைனிங்ல எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்த விஷயம் இது தான்...",

என்றவன் அவள் வீசி எறிந்த அந்த கத்தியை லாவகமாக தன் கையில் பிடித்து இருப்பதை சுட்டிக் காட்டினான்.

"எவ்ளோ தைரியம் இருந்தால் என்னை மர்டர் பண்ணப் பார்ப்ப?, இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?",

அவன் அவளை கண்களால் ஊடுருவினான்.

அவனின் அந்தப் பார்வை வாயாடி முல்லையையேப் பேசா மடந்தை ஆக்கி வைத்து விட, அவன் அதிசியமாக தன் புன்னகையை அதிகமாக்கினான்.

"முல்லை....!!!!!!", எவ்வளவு அழகானப் பெயர்!!!!"

அவன் ரசித்து உச்சரித்தான். அவனின் மனம் அவள் அருகாமையை விரும்பியதில் அவளை எப்படியாவது வாய் வளர்த்து தன் அருகே நிற்க வைத்துக் கொள்ள விழைந்தது.

"சார், நான் போக வேண்டும்.
கத்தியை முதலில் கொடுங்க..., நாமக்கல் சந்தையில் எங்க நைனா வாங்கிட்டு வந்தது..",

முள் மரம் போன்ற சிரிப்பு மறந்த முகத்தில் அவளைக் கண்டால் மட்டும் பரவும் அந்த மென்மையான உணர்வுகளிலும் அவளை அவனையும் மீறி ரசிக்க முயலும் அவனது கண்களிலும் அவள் மனம் கலவரமடைந்து இருந்தது.

"உன்னால் அவ்ளோ சீக்கிரம் போக முடியுமா?",

அவன் மிதப்பாக வினவினான்.

"நான் உங்களை எப்படி சாருனு மரியாதையாக கூப்பிடுறேன்? அது எப்படி என்னை மட்டும் நீங்க வா போனு கூப்பிடலாம்?",

"என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடும் உரிமையை இந்த உலகத்தில் நான் உனக்கு மட்டும் தான் கொடுத்து இருக்கிறேன், அதுப் போல் உன்னை வா, போ என்று அழைக்கும் உரிமையை இந்த உலகத்தில் நான் உன்னிடம் இருந்து மட்டும் தான் எடுத்துக் கொள்வேன்...",

"உங்களை எப்படி வேண்டுமானாலும் நான் கூப்படுடலாமா? அப்போ உங்களை தாத்தானு கூப்பிடவா?",

"வழியிறியாடா முள்ளு..?",

என்று மனதில் கருவிக் கொண்டே அவள் விஷமப் புன்னகையுடன் கேட்டாள்.

"அப்கோர்ஸ்!!! தாராளமாக கூப்பிட்டுக் கொள், ஆனால் அந்த நேரத்தில் நீ பாட்டியா இருக்கணும்...",

என்றவன் பேச்சில் அவள் கோபம் கொண்டாள்.

"ஹலோ...!! திஸ் இஸ் யுவர் லிமிட், மரியாதையா என் கத்தியை கொடுங்க...என் அப்பா நாம..",

"நாமக்கலில் இருந்து வாங்கியது...அதானே? இங்கே பாரும்மா, ஜாகிங் வந்த ஒருவரை நீ கத்தியை வீசிக் கொல்லப் பார்த்து இருக்க..., மர்டர் அட்டம்ட்னு உள்ளேத் தூக்கி வைக்கச் சொல்லவா?",

அவன் அவளை மிரட்டினான்.

"அடடா...!! அப்படியே இந்த கத்தியால் நீங்க செத்தாப் போயிட்டீங்க? நல்லா குத்துக் கல்லு மாதிரி தானே நின்னாகுது?, அநியாயமா பேசாதீங்க சார்..",

"ஓ... யாரு, நான் அநியாயமா பேசிறேனா, ஜாகிங் வந்தவனை கத்தியால் குத்திக் கொல்லப் பார்த்து விட்டு பேச்சா பேசுற?",

அவன் அந்த கத்தியை வருடினான்.

"அப்படியே வில்லன் கெட்அப்புக்கு ஏற்ற பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு...",

மனதில் நினைத்துக் கொண்டாள் அவள்.

"சார்...விட்டா நான் கத்தியால் குத்தி நீங்க செத்துட்டன்னு சொல்லிடுவீங்க போல...",

"ஓ தாராளமா சொல்லலாமே? உன் தங்கச்சியை கூட சாட்சிக்கு கூப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்..., அவள் வரமாட்டாள்னா நீ நினைக்கிற?",

அவன் கேலியாக வினவியதில் அவளுக்கும் அவளின் "அன்புத்" தங்கைக்கும் நடுவே நிலவும் பாசப் பிணைப்பை எங்கிருந்தோ வந்த அந்த புதியவன் அவன் நன்றாக தெரிந்து வைத்து இருப்பதை உணர்ந்த முல்லை தன் தங்கையை மனதில் திட்டி தீர்த்தாள்.

"ஹலோ, ஆயிரம் தான் நானும் என் தங்கையும் அடித்துக் கொண்டாலும் அவள் தன் சொந்த அக்காவைப் போய் கொலைக்காரி என்று சொல்லி விடுவாளா என்ன?",

என்று முல்லை சொல்லிக் கொண்டே இருக்கும் போதே,

"நிஜமாப்பா....!! நான் நல்லாப் பார்த்தேன், அக்கா யாரோ ஒருத்தரை கத்தியால் குத்திட்டா, இரத்தம் கொட்டுது...",

சகுந்தலாவிற்கு வெண்கல குரல், எத்தனை தொலைவில் இருந்தாலும் கேட்கும், முல்லைக்கோ மென்மையான குரல். தன் தங்கை தன் தந்தையிடம் தூரத்தில் சொல்லிக் கொண்டு இருந்ததைக் கேட்டு முல்லை அவனின் முகத்தை போச்சுடா என்ற ரீதியில் பார்த்து வைக்க, அவன் இப்போ என்ன செய்வாய் என்பது போல் பார்த்தான்.

"எனக்கு எதிரி என் வீட்டுக்குள்ளே இருக்கு...., இந்த சகு குரங்குக்கு வீட்டுக்குப் போய் இருக்கு...",

அவள் மனதில் கறுவிக் கொண்டாள்.

"உனக்கும் உன் தங்கச்சிக்கு ரெண்டாயிரமே இருந்தாலும் அவள் சாட்சிக்கு வருவா போல, சரி, இது தானே உன் அட்ரஸ், இதை நான் அப்படியே போலீஸ்க்கு பார்வர்ட் பண்ணிறன், ஒரு ஐஎஃப்எஸ் (IFS) ஆபிசரை கொல்ல கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக உங்க வீட்டுக்கு போலீஸ் இன்னும் பத்து நிமிடத்தில் என் கொயரி வரும்...",

என்றவன் தன் செல்போனை எடுத்து எதையோ டை ப் செய்ய ஆரம்பித்தான்.

"சார்...ஒன் மினிட்...!!!",

"நீ என்ன சொன்னாலும் நான் உன்னை விடமாட்டேன்...",

அவன் அவளைப் பார்த்து சொன்னதில் தான் எத்தனை உள்ளர்த்தம், அழுத்தம்...!!!

"இது எங்க பர்மன்ட் அட்ரஸ் கிடையாது சார்..., ஊட்டி மெயினில் தான் எங்க வீடு இருக்கு...",

"ஓ....!! அப்போ அந்த அட்ரஸ் சொல்லு...!!",

"நம்பர். 6,
விவேகானந்தர் தெரு
ஊட்டி குறுக்குச் சந்து,
ஊட்டி மெயின் ரோடு,
ஊட்டி",

அவள் சொல்லி விட்டு அவனைப் பார்க்க, அவன் உடனே இந்த அட்ரசை எங்கயோ கேட்டு இருக்கோமே...என்று யோசிக்க அவனின் அந்த யோசனை நிலையினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவள் அவன் கையில் இருந்த கத்தியைப் பறித்து விட்டு நடையை வேக வேகமாக கட்டினாள். அதை எதிர்பாராதவன் முகத்தில் வியப்பு கலந்த சிரிப்பு வந்தது.

"வடிவேல் துபாய் காமெடி ரொம்ப புடிக்குமோ?",

அவன் உரக்க கேட்டான்.

"உங்களுக்கு என் பெயர் ரொம்ப புடிக்குமோ???? எவ்ளோ நேரம் தான் அதையே டைப் பண்ணிட்டு இருப்பீங்க?",

அவள் கேட்டு விட்டு தேயிலை சரிவில் இறங்கி அவன் கண் பார்வையில் இருந்து மறைந்தாள். தன் கையில் இருந்த போனை எடுத்துப் பார்த்தவன் முகம் புன்னகைக்குப் போனது. அங்கே அவள் அட்ரசை டைப் செய்வது போல் அவளின் பெயரை அவன் ஆங்கிலத்தில் டைப் செய்து கொண்டு தான் இருந்திருந்தான். அதையும் அவள் கவனித்து விட்டு சென்று விட்டாளே!அவள் இறுதியாக சொல்லி விட்டுச் சென்ற அந்த அட்ரசில் அவனுக்கு சிரிப்பு வந்தது. தனியே சிரித்துக் கொள்ளும் தன் மனநிலை எண்ணி அவனுக்கு வியப்பு வந்தது.








"தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை....
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை.......
அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்......

அந்த ரேடியோவில் எஃப் எம்மில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலை கேட்டு சிரித்துக் கொண்டே வெளியே வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கும் ஊட்டிக் குளிர் தெரியாத அளவுக்கு உள்ளே சகல வசதிகளுடன் இருந்த அந்த பங்களாவில் ஜாகிங் முடிந்து அவன் நுழைந்தப் போது அவன் முன் சுடச் சுட டீ கப் நீட்டப் பட்டது.

"தாங்க்ஸ் ராமு....",

என்று தன்னைப் பார்த்து புன்னகைக்கும் தன் முதலாளியின் முகத்தை ஆவென்று வாயை பிளந்துப் பார்த்தான் ராமு. அவனுக்கு இந்த காட்சி, ஏன் தன் முதலாளியின் இந்த தோற்றமே புதிது. காரணம் அவன் சிரிப்பை மறந்தவன், சிரிப்பு என்றால் என்ன என்று கேட்பவன், எரிச்சல், கோபம் தவிர எதையும் அறியாத இந்த புது முதலாளி முதல் முதலில் சிரிக்கிறான் என்றால் அது வியப்பு தானே...!!

"உன்னோட இந்த ஏலக்காய் டீயின் டேஸ்ட்டுக்கு தான் அரசுப் பங்களாவில் உன்னை நிரந்தர வேலைக்காரனாக வைத்து விட்டார்கள் போல...",

அவன் டீயை ரசித்தப்படி சொன்னான்.

"அடடா...!! என்ன என்னைக்கும் இல்லாம அய்யா இப்படி எல்லாம் பேசுறார்...இது ஒருவேளை அவர் கோபத்தைக் காட்ட புது விதமா செய்யப் போகிறாரோ...!!!",

என்று எண்ணிய ராமுக்கு அப்போது தான் அந்த ரேடியோவின் பாட்டுச் சப்தம் காதில் ஒலித்தது.

"போச்சு...நேத்து தான் வாங்கினேன்...!!! இத்தோட இது அய்யா உடைக்கப் போகும் மூணாவது ரேடியோ...",

ராமு எண்ணி நொந்துக் கொண்டே இருக்கும் போதே, அந்த முதலாளியாக்கப் பட்டவன் அந்த ரேடியோவை நோக்கி நடந்தான். அடுத்து அங்கே நடக்கப் போகும் நிகழ்வான ரேடியோ உடைப் படும் சம்பவத்திற்கு தயாராக ராமு கண்ணை மூடிக் கொண்டு இருக்க, ஆனால் அப்படி ஏதும் நடக்காமல் அந்த பாடலின் ஒலி இன்னும் சப்தத்துடன் ஒலித்ததில் தன் கண்களை திறந்து பிரமிப்புடன் பார்த்தான் ராமு. அங்கே அவனின் அந்த முதலாளி தான் நின்றுக் கொண்டு இருந்தான்.

"ராமு, இனிமே பாட்டை சத்தமா வச்சிக் கேள்...",

என்றப்படி மாடி ஏறி விட, அதைப் பார்த்த ராமுவுக்கு தலை சுற்றியது.

"இங்கே அமைதி மட்டும் தான் இருக்கணும், அதை விட்டுட்டு இப்படி பாட்டுக் கேட்ட...உன்னைத் தொலைத்து விடுவேன்...",

நேற்று முன்தினம் கண்களில் சிவப்புடன் தன்னை நோக்கி எச்சரித்து விட்டு தன் ரேடியோவை போட்டு உடைத்த தன் முதலாளியின் கோப முகம் ராமுவுக்கு நினைவுக்கு வந்தது.
பாட்டுப் பைத்தியமான ராமுவுக்கு ரேடியோ கேட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டும், அதில் அவனுக்கு ஒரு நிம்மதி, மன அமைதி, நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த தன் முள்ளு முதலாளி கூப்பிட, கூப்பிட, நிலா காயுது பாடலில் ஜானகி அம்மையார் கொடுத்துக் கொண்டு இருந்த அந்த ஹம்மிங்கில் லயித்து இருந்த ராமுவுக்கு நிச்சயம் காதில் விழுந்து இருந்து இருக்காது தான், ஆனாலும் சிரிப்பு என்றால் என்ன விலை என்று முகத்தில் முள்ளைக் கட்டிக் கொண்டு அலையும் முள்ளு மரம் போன்ற தன் முதலாளி இருக்கும் இடத்தில் அதுவும் குடிப் போதையில் இருக்கும் நேரத்தில் நிலா காயுது போன்ற பாடல்கள் ராமு கேட்கலாமா? பாவம் அது தெரியாத ராமுவின் ரேடியோ,

"தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே
தாகம் தணிஞ்சதா...?",

என்று மலேசியா வாசுதேவன் கேட்டுக் கொண்டே இருக்கும் போதே ராமுவின் முதலாளியான தி கிரேட் முள் மரத்தால் நொறுக்கப் பட்டது.

"இனி ஒரு தரம் இங்கே அமைதியை குலைக்கும் விதமா பாட்டு கேட்ட... உன் குடலை உறுவிடுவேன், போ...போய் சைடிஷ் எடுத்திட்டு அருவிக்கரைக்கு வா...",

என்று கர்ஜிக்கும் குரலில் சொல்லி விட்டு அகன்ற தன் முதலாளி சொல்லும் அந்த அருவிக் கரை அந்த பங்களாவில் பின்னால் இருக்கிறது. அந்த அருவிக் கரை தான் அவன் முதலாளிக்கு ஜாகிங் முடித்து விட்டு உடற் பயிற்சி செய்யும் உடற் பயிற்சிக்கூடம், ஏதேனும் அவனது பணியில் சிக்கல் வந்தால் அதைப் பற்றி அவன் சரி செய்ய யோசிக்க அவன் உலாவும் இடம், மாலை அவன் பணி முடிந்து வந்தால் அவன் மனக் கவலை தணிக்கும்,அவன் தாக சாந்தி செய்யும் மினி பாரும் அஃதே...

அப்படிப் பட்ட அந்த அருவிக் கரை முன்னால் நின்றுக் கொண்டு இருந்தான் அந்த முள்ளு மரம். ஹோ வென்று பேரிரைச்சலுடன் கொட்டிக் கொண்டு இருந்த அருவியைப் பார்த்தவன் மனதில் அவள் வந்து நின்றாள்.

"இல்லை அகிலேஷ், இது செட் ஆகாது..., பிளீஸ் நீ கிளம்பு..., இங்கே இருந்து மட்டும் இல்லை, என் வாழ்க்கையில் இருந்தும்...",

அன்றும் இதேப் போல் தான் அவர்களின் இறுதி சந்திப்பில் அவர்கள் அருகே அருவி பெரும் சப்தத்துடன் கொட்டிக் கொண்டு இருந்தது.

"நித்தும்மா...!! நீ இல்லாம என்னால் வாழ முடியாது...!! நீ தான் என்...",

அவன் அவள் காலில் விழாதக் குறையாக கெஞ்சினான்.

"ச்சீ....!!!! உன்னைப் பற்றி மிஸ்டர். பிரான்சிஸ் எல்லாமே சொல்லி ட்டார், என் டாட்,மாம் இது சரி வராதுனு சொல்லிட்டாங்க..தயவு செய்து கிளம்பு..., இல்லனா அசிங்கமாயிடும் சொல்லிட்டேன்...",

அவள் அப்படி சொன்னதும் தான் தாமதம், அவன் முகம் மாறியது.









"அய்யோ....!!!! ஏய்!! நீதான்டி என் எல்லாமேனு நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கேன்...நீயும் என்னை விட்டுட்டுப் போயிடாதே, நான் சபிக்கப்பட்டவன்டி, நீயும் இல்லனா சவமா போயிடுவேன்டி...",

"அந்த சாபம் என்னையும் பிடித்துக் கொள்ளக் கூடாதுனு தான் நான் போறேன்..., இதுக்கு மேல் என்னை டி சொல்லி கூப்பிட்டீனா செருப்பு பிஞ்சிடும்..., குட் பாய்...!!!",

அவன் உயிர் உருக, அந்த கொட்டிக் கொண்டு இருந்த அந்த அருவியைப் போல் தன் மனதில் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை அவளிடம் கொட்ட, அவளோ அதை திரும்பிக் கூடப் பாராது அவனை அவன் சொன்னது போல் ஒரு உயிரற்ற சவத்தை கடந்து செல்வது போல் தாண்டி சென்றாள். அந்த நினைவுகளின் கனத்தில் கண்ணை மூடியவன் மனம் அப்படியே கொதிப்பு நிலையில் இருக்க, அப்படியே அந்த கொட்டிக் கொண்டு இருந்த அருவியில் பாய்ந்தான் அவன்.















"அந்த சகு குரங்கால் இவளோவும் வருதுடி...!! அப்புறம் அப்பா ஒரு வழியா சமாதானம் ஆகி தான் என்னை விட்டாங்க....",

தன் தோழிகள் புடை சூழ குளிர் நிறைந்த ஊட்டியின் மலைப் பாதையில் கல்லூரி முடிந்து நடந்து வந்துக் கொண்டு இருந்த முல்லை சொல்லிக் கொண்டு வந்தாள்.

"சோ...எப்படியோ அந்த வில்லன் கிட்ட தப்பிச்சிட்ட?",

ஒருத்திக் கேட்டாள்.

"தற்காலிகமாக தான் தப்பிச்சி இருக்கா கீதா, எனக்கு என்னமோ அந்த வில்லன் பேசியதைலாம் பார்த்தா இவள் வாழ்க்கை முழுக்க அந்த வில்லன் விளையாட்டு இருக்கிற மாதிரி தெரியுதே...?",

இன்னொருத்தி கேட்டாள்.

"நீ சொன்னது தான் நிஷா உண்மை, அந்த முள்ளு இந்த முல்லைக்கு வேலிப் போடப் பாக்குது...",

ஜெனி சொல்லி விட்டு முல்லையின் முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

"அது என்னடி மீனிங் வேலி போடப் பாக்குது?",

ஒருத்தி கேட்டாள்.

"அட மக்கே, நம்ம முல்லைக்கு அந்த முள்ளு பிராக்கெட் போடப் பாக்குதுங்கறதை தான் ஜெனி அப்படி சொன்னாடி...",

கொல் என்ற சிரிப்பு எழுந்து அடங்கியது அந்த பெண்கள் குழுவில்.

"முல்லை, அது பேர் அகிலேஷ்வரனாம், கவர்மென்ட் சார்பா இங்கே கட்டப் போகிற ஹோட்டலுக்கு பாரஸ்ட் ஏரியாவை எல்லாம் சரிபார்க்க சென்னையில் இருந்து வந்து இருக்கும் டீமின் லீடர் இது தானாம், ரொம்ப நேர்மையானது ஆபிசராம், கோபமே வராதாம்...",

வனத்துறை அதிகாரியின் மகளான சாந்தினி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

"என்ன...!!! என்ன கோபமே வராதா..!!!",

ஓட்டுப் மொத்தப் பெண்கள் குரல்
கோரசாக கேட்டது.

"ஆமாம், கோபம் எப்பவாது போனால் தானே வருவதற்கு? அதான் நம்ம முல்லை பெயர் வைத்தது போல் முகத்தில் எப்போதும் முள்ளைக் கட்டிக் கொண்டு இருக்குமே!! அப்புறம் அதுக்கு தனியா வேற கோபம் வரணுமாக்கும்...?",

"ஓ...நீ அப்படி சொல்றியா?",

"அவன் கவர்மென்ட்டில் அவனுக்கு கொடுத்த பங்களாவில் தங்கலையாம்டி, இங்கே அவன் தங்குவதற்காக வே ஒரு பங்களா விலைக்கு வாங்கி இருக்கானாம்...",

"ஓ...!! அப்படி எத்தனைப் பேராம் அவன் குடும்பத்தில்?",

இந்த கேள்வியை ஓரக் கண்ணால் முல்லையைப் பார்த்துக் கொண்டே சாந்தினியை கேட்ட்டாள் ஜெனி.

"அய்யா, சிங்கிள் தான்டி, கல்யாணம் ஆகலை, அவனின் குடும்ப விஷயத்தைப் பற்றிக் கேட்டால் என் அப்பா என்னை அது எதுக்கு உனக்கு அப்படிங்கிற மாதிரி கேட்பார், அது எனக்கு தேவையா? நம்ம முல்லைக்கு தேவையான விஷயம் கிடைத்து விட்டுல? அப்புறம் என்ன?",

"உங்களுக்கு நான் என்னப் பாவம் பண்ணின? எதுக்குடி அம்புட்டுப் பேரும் ஒரு சாமியார் கிட்ட கோர்த்து விடப் பார்க்கிறீங்க? எனக்காக இல்லனாலும் சகுக்காகவாது நல்ல மாமாவைப் பிடிங்கடி, அதை விட்டுட்டு ஒரு முள்ளு மரத்தை, சிரிக்காத ஒரு வேற்று கிரக வாசியை என் வாழ்க்கையில் விட்டு இந்த முல்லை சிரிப்பை மறக்க வைக்காதீங்கடி, ஹான்ஸ்மா இருந்தால் சைட் அடிப்போம், சந்தோஷமாக இருப்போம்...",

முல்லை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளைக் கவனித்துக் கொண்டு இருந்த தோழிகள் பார்வை ஒரேப் பக்கத்தில் பாய்ந்தது.

"எதை இப்படி பார்த்து தொலைக்கிறாளுவ?",

அவள் எரிச்சலுடன் எண்ணிக் கொண்டு திரும்பினாள். அங்கே அந்த வில்லன் பைக்கில் வந்துக் கொண்டு இருந்தான். பளபளவென்று இருந்த புதிய பைக் அது.

"ராயல் என்பீல்டு....!!!",

அவள் மனதில் நினைத்ததை அவள் அருகே இருந்த ஹாசினி வாய் விட்டுச் சொன்னதில்,

"இவளுங்களை வைத்துக் கொண்டு ஒன்னுத்தையும் மனதில் நினைக்கக் கூட முடியாது...",

சலிப்புடன் எண்ணிக் கொண்ட முல்லை, அவளையேப் பார்த்தப்படி அவன் தன் வண்டியை மிகவும் பொறுமையாக செலுத்தினான் அவன்.

"இவன் ஓட்டும் இந்த வண்டிக்கு கட்ட வண்டினு வைத்து இருக்கலாம்...",

அவள் நினைத்து முடிப்பதற்குள்,
ஜெனி சொன்னாள்.

"அய்யய்யே...!! என்னடி முல்லை, உன் ஆளு, ராயல் என்பீல்டையே கட்ட வண்டி மாதிரி ஓட்டுறான்?",

"அவன் என் ஆளா..? கொன்னுடுவேன்..",

முல்லை மிரட்டலை கண்டுக் கொள்ளாது தன் தோழிகளுக்கு டாடா சொல்லி விட்டு ஜெனி போய் விட, ஒருக் கட்டத்தில் அனைவரும் தம் வீட்டிற்கு சென்று விட, தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் இருக்கும் தன் வீட்டை நோக்கி முல்லை மட்டும் தனியாகச் சென்றுக் கொண்டு இருந்தாள். அப்போதும் விடாது அவள் பின்னால் அவன் வருவது அவனின் பைக் ஹாரன் சப்தத்தில் இருந்தே அவளுக்கு தெரிந்ததில் அவள் கோபம் வந்தது. அவள் வீடு நெருங்கியப் போது தன் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அவள் அருகே வந்துப் போது அவள் எரிச்சலுடன் கேட்டாள்.

"என்ன தான் சார் வேணும் உங்களுக்கு? எதுக்கு இது மாதிரி ஹாரன் அடித்துக் கொண்டே இருக்கீங்க?",

"உன்னிடம் ஒண்ணு சொல்ல வந்தேன்....",

"என்ன?",

"தாங்க்ஸ்....",

என்று சொல்லி விட்டு அவன் நகர முற்பட, அவள் புரியாது விழித்தாள்.

"ஹலோ!!! ஒரு நிமிஷம், எதுக்கு?",

"உன்னைப் போலவே என் காலையை அழகாக்கியதற்கு...",

அவன் சொல்லி விட்டு தன் பைக்கின் வேகத்தை கூட்டி விட்டுப் பறக்கும் முன் கேட்டான்.

"உனக்கு ராயல் என்பீல்டு பைக் ரொம்ப பிடிக்குமாமே? அதான் நேற்று ஈவினிங் வாங்கினேன், எப்படி இருக்கு? இதை உன்னை நினைத்து தான் வாங்கினேன்..உன்னிடம் காட்ட தான் இங்கே வந்தேன்.., போயிட்டு வரவா?",

என்றவன் பைக்கில் பறந்து விட, அவள் அப்படியே சிலை போல் நின்றாள்.

- வாசம் வீசும்