• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்கழிப் பூவே - 4

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
"இந்த முள் மரத்தில் இன்று காதல் பூ பூத்ததோ?",

- மார்கழிப் பூவே ஐந்தாம் அத்தியாத்தில் இருந்து.....














"அப்பா இன்னைக்கு
நான் வெஜ் செஞ்சி இருக்கார், எனக்கு தான் ஈரல் சொல்லிட்டேன்....",

சகுந்தலா தன் அக்காவை உலுக்கினாள்.

"ம்ம்...",

தன் அக்காவின் சிந்தனை நிறைந்த அந்த பதிலை கண்டுகொள்ளாத அந்த ஈரலைப் பற்றி லயித்துப் பேசிக் கொண்டு இருந்தாள் சகுந்தலா.

"நீ காலேஜ் போயிடுற முல்லை, நீ இல்லனு அப்பா எனக்கு என்னன தெரியுமா வாங்கி தராங்க!!! நான் இன்னைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டேனே...",

புத்தகத்தைப் படிப்பதாக காட்டுவது போல் விரித்து வைத்து விட்டு அந்த சன்னல் அருகே தூரத்தில் தெரிந்த அந்த நாகலிங்கபூ மரத்தின் மீதும் அங்கே இருந்த அந்த அறிவிப்பு பலகை மீதும் பார்வை பதித்து இருந்தாள் முல்லை.

"பேர பாரு...!! அகிலேஷாம், போடா, நீ எனக்கு என்னைக்கும் முள்ளு மரம் தான்...!! ஆனால் அந்த முள்ளு எதுக்கு என்னைக் கண்டால் இப்படி பூ பூக்குது....? சம்திங் ராங் முல்லை..",

அவள் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள்.

"உனக்கு ராயல் என்பீல்டு பைக் பிடிக்குமாம்ல? உனக்காக தான் வாங்கினேன்...",

அவன் மீண்டும் அவள் மனதில் தோன்றினான்.

"இதில் நான் உன்னை வைத்து இந்த ஊட்டிய சுத்தி சுத்தி வருவேன், பயமா இருக்கா...!!! என்னை இறுக்கமா கட்டிப் பிடித்துக்கோ...!!!",

என்றவன் தன் பின்னால் அமர்ந்து இருந்த முல்லையை நோக்கி திரும்பி பேசி, அவள் இதழ் நோக்கி நகர, அவன் ஓட்டிக் கொண்டு இருந்த பைக் தன் கட்டுப் பாட்டை இழந்தது. அந்த நேரத்தில் கச்சிதமாக எதோ ஒரு வாகனம் எதிரே வர, அவள்,

"ஆ..........!!!",

என்று அலறினாள்.

தன் தமக்கையின் அந்த திடீர் அலறல் சப்தம் கேட்டு சகுந்தலா பயந்து போய் நின்றாள்.

"அப்பா....!!! அப்பா....!!!! அக்காவுக்கு என்னமோ ஆயிட்டு...",

அலறியப்படி ஓடும் தன் தங்கையை கூப்பிட முயன்று தோற்ற முல்லை தன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

"ச்சே...!!! என்ன ஒரு கொடுமையான நினைப்பு! அந்த வில்லன் கூட நான் போய் பைக்கில், டேய் முள்ளு..., என்னை இன்னைக்கு கொலைக்காரி பட்டமும் கொஞ்ச நேரத்தில் பைத்தியம் பட்டமும் வாங்க வைத்து விட்டாயே...!, உனக்கு இருக்குடா, அய்யோ!! போய் தொலையாமல் மனசில் வந்து வந்து நிற்கிறானோ!!!!",

அவள் தன் மனதை குறைப் பட்டு அதற்கு காரணமான அவனையும் திட்டிக் கொண்ட இருந்தாள்.

"ஆமாம்ப்பா, அக்கா நார்மலாவே இல்லை, நான் எதுப் பேசினாலும் சண்டை போடாமல் எங்கயோ வெறிச்சுப் பார்த்துக் கொண்டே இருக்கு..., நான் அதோட பங்கு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டுட்டனு சொன்னப் பிறகும் கூட என்கிட்ட சண்டை போடலனா நீங்களேப் பாருங்க...!!!",

சகுந்தலா தன் தந்தையிடம் சொல்லிக் கொண்டே வருவது முல்லைக்கு காதில் விழவே,

"இவ எனக்கு தங்கச்சி இல்லை, இன்னொரு மாமியார்!!! எப்படி எல்லாம் என்னைப் போட்டுக் கொடுக்கிறாள் பாரு...!!! அடியே சகு, நீ தொலைந்தடி என் கிட்ட...",

மனதில் கறுவிக் கொண்டவள், தன் தந்தையின் அரவம் கேட்டு சட்டென்று புத்தகத்தில் பார்வைப் பதித்தாள்.

"என்னம்மா!!! என்ன ஆச்சு? சகு ஏதேதோ சொல்லுறா?",

என்றப்படி ராமன் வந்தார்.

"அது ஒண்ணும் இல்லப்பா, நாளைக்கு நிறைய டெஸ்ட் கொடுத்து இருக்காங்க, அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன்...",

"அப்பா...!! நாளைக்கு அவள் காலேஜில் ஸ்போர்ட்ஸ் டே, அவள் பிரண்டு மெசேஜ் இப்போ தான் நான் அவ போனில் பார்த்தேன்...!!! ஸ்போர்ட்ஸ் டேல கிளாசே கிடையாதுப்பா...பாருங்கப்பா உங்க கிட்டயே பொய் சொல்றா...",

"உன்னை எல்லாம் எதுக்குடி என் அம்மா பத்து மாதம் சுமந்து பெத்தாங்களோ!!",

என்று எண்ணிக் கொண்டு தான் மறந்துப் போயிருந்த ஸ்போர்ட்ஸ் டேவை தனக்கு முன்னால் சொல்லும் தன் தங்கையை பல்லைக் கடித்துக்கொண்டு "பாசப்" பார்வை பார்த்தாள் முல்லை.

"அம்மாடி, உடம்பு ஏதாவது சரி இல்லையாடா? கிளம்பு முதலில் டாக்டர் கிட்ட போகலாம்...!! இதுக்கு தான் நேரம் கெட்ட நேரத்தில் தோட்டத்துக்குலாம் போகதனு சொல்றேன், நீ பாட்டுக்கு மரத்தைப் பார்க்க போறன், மண்ணைப் பார்க்கப் போறேன்னு போயிடுற..இப்போ பாரு அது எதில் வந்து நிக்கிது...",

என்ற ராமன் குரல் ஏகத்துக்கும் கவலை.

"எதிலப்பா வந்து நிக்கிது?",

முல்லைக்கு நிஜமாகவே தான் தந்தை சொல்வது புரியவில்லை. ஆனால் சகுந்தலாவே கேலியாக சிரித்துக் கொண்டு இருந்ததில் அவளுக்கு தன் தந்தை சொன்னது புரிந்து விட்டது என்றுத் தோன்றியது.

"இப்படி நேரம் கெட்ட நேரத்தில் அங்கேலாம் போயி ஏதாவது காத்து, கருப்பு பிடித்து இருக்கோனு நான் யோசிக்கிறேன்...",

ராமன் தாடையை தடவி யோசிக்க ஆரம்பித்ததில் சகுந்தலா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"இவளே ஒரு பேய், பேய்க்கு பேயை தானே புடிக்கும்? அதுவும் பேயிக்கு முல்லைப் பூ வாசனைலாம் ரொம்ப பிடிக்கும் அப்பா...!, ஹா... ஹா...",

சகுந்தலா சொல்லி சிரித்ததில்,

"அதனால் தான் அந்த அழகான வில்லனுக்கு என்னைப் பிடித்து விட்டதோ....!!!",

அவள் சிந்தனையில் மீண்டும் அவன் வந்ததில், அவளுக்கு தன் நிலை குறித்து கலவரம் வந்ததில் அடிக்கடி அந்த வில்லனை தன்னையும் அறியாமல் தன் பேச்சில் நினைவுப் படுத்திக் கொண்டு இருக்கும் தன் தங்கையின் மீது அவளுக்கு கோபம் வந்தது.

"நான் பேய்னா நீதான்டி குட்டிப் பிசாசு...",

தன் தங்கையின் தலையில் குட்டினாள் முல்லை.

"அம்மாடி முல்லை...!! தூங்குறதுக்கு முன்னாடி கந்த சஷ்டி கவசம் படித்து விட்டு தூங்கும்மா....",

என்றப்படி ராமன் சென்று விட்டார், என்றும் இல்லாத திருநாளாய் தன் பெரிய மகள் தன் சின்ன மகள் எவ்வளவு சொல்லியும் கல் போல் அமர்ந்து இருக்கிறாள் என்றால் தன் பெரிய மகள் எதோ ஒன்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறாளோ என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் அங்கே அவர் வந்தார். ஆனால் அவர் எண்ணத்திற்கு நேர்மாறாக தன் பெரிய மகள் அடுத்த போர் முரசு தன் தங்கைக்கு கொட்டி விட்டதில் தான் நினைத்த மாதிரி எல்லாம் இல்லை, அவள் நல்ல மனநிலையில் தான் இருக்கிறாள் என்று அவருக்கு புரிந்துப் போனதில் அவர் தன் வழக்கமான இடமான சமையலறை நோக்கி நடந்தார்.

"அப்பா...!!! அக்கா கொட்டிட்டா, இதுக்கு தான் நான் அவளை ஹாஸ்டலில் சேர்க்க சொன்னேன்..."

என்ற சகுந்தலாவின் புலம்பல் வழக்கமான ஒன்று தான் என்பது போல் ராமன் தன் சமையலை கவனித்துக் கொண்டு இருந்தார்.

"ஓ... இப்படி என்னைச் சொல்லி சொல்லி நீ தான் பிளஸ் 1, பிளஸ் 2க்கு ஹாஸ்டலுக்கு ஓடப் போற...",

என்ற முல்லை தன் தங்கையின் தலையில் மீண்டும் ஒரு கொட்டு வைத்து விட்டு,

"நான் இல்லாதப்ப என் செல்லை எடுத்து என் பிரெண்ட்ஸ்க்கு என்னை மாதிரி மெசேஜ் பண்ணாதனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...அதுக்கு தான்டி இந்த கொட்டு...என் குட்டி பிசாசே...",

என்றப் படி அவள் நகர,

"அப்பா...........!!!!!!!!!!!!!!!!!!!"

அந்த ஓட்டு வீடு அதிர்ந்து உடைந்து கீழே விழும் அளவிற்கு சகுந்தலா கத்த, இம்முறை ராமனால் சமையலில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர் உடனே மகள்களின் மூன்றாம் உலகப் போர் நடக்கும் இடத்திற்கு வந்தார்.

"நீங்களே கேளுங்கப்பா, அதுக்கும் இதுக்கும் சரியா போயிட்டுல? அப்புறமும் என் தலையில் கொட்டிட்டா..."

தன் சின்ன மகள் சொல்லிய நியாயத்தை தலையில் கை வைத்து கேட்டுக் கொண்டு இருந்த ராமன் கண்கள் சந்தன மாலையில் புகைப் படத்தில் அடங்கி சிரித்துக் கொண்டு இருந்த தன் மனைவியைப் பார்த்தது.

"இப்படி என்னை மாட்டி விட்டு சென்று விட்டாயே ராஜி...",

அவர் மனம் மானசீகமாக தன் மனைவியிடம் பேசியது.

"அதுக்கு அப்புறம் இவ தான்ப்பா திரும்ப என்னை அடித்தாள்...",

தன் சிந்தனையை கலைக்கும் வண்ணம் வெண்கல குரலில் சொல்லிக் கொண்டு இருக்கும் தன் சின்ன மகளை அவசரப்பட்டு பெற்று விட்டோமோ என்று அவர் யோசித்துக் கொண்டு இருக்க,

"ஓ...அப்படியே மாத்தி பேசாத சகு!! வந்த உடனே அப்பா எனக்கு மட்டும் தான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாங்கனு என்னை வெறுப்பேற்றியது யாரு...நீ தானே?",

என்று கேட்கும் தன் பெரிய மகளைப் பார்த்த ராமனுக்கு தான் கல்யாணம் பண்ணியதே தவறோ என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"அப்பா....!!!",

பெண்கள் இருவரும் தங்கள் வழக்கை நிறுத்தி விட்டு தன் தந்தையின் முகம் பார்க்க, ராமன் சிந்தனையில் இருந்து கலைந்தவராய் தன் எதிரே முறைத்துக் கொண்டு இருக்கும் தன் மகளைப் பார்த்தார்.

"இன்னைக்கு பெரிய ஆர்டர்டா, அதனால் அப்பா நைட்டுக்கும் பிரியாணி பண்ணி இருக்கேன்...நீங்க சாப்..",

அவர் சொல்லி முடிப்பதற்குள் அவர் பெற்ற அந்த இரு வைரங்களையும் காணவில்லை. அதனை உணர்ந்த அவர் அவர்கள் சென்று விட்ட இடமான
அந்த சமையலறையை நோக்கி புன்னகையுடன் நகர்ந்தார்.







"நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா....
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்....
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா....

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை....."

இரவின் இன்னிசை என்றப் பெயரில் ராமுவின் ரேடியோ அழகாக இளைய ராஜாவின் பாடல் பாடியது. அது அந்த பங்களாவின் பால்கனியில் வாயில் சிகரெட்டுடன் நின்றுக் கொண்டு இருந்த அகிலேஷ்வரன் காதில் நன்றாக விழுந்ததில் அந்தப் பாடலின் வரிகளில் மெய் மறந்து இருந்தவன், இறுதி வரியில் தன்னையும் அறியாமல் அவன் இதழ் புன்னகைத்தது. அந்த ஊட்டியின் குளிர் நிறைந்த இரவில் மொட்டை மாடி பால்கனியில் உடலில் ஸ்வட்டர் இல்லாது வெறும் சட்டையுடன் உலாவ முடியும் என்றால் அது அவனால் மட்டுமே முடியும். காரணம் அவனின் இறுக்கமான வலி பழகிய மனதைப் போலவே அவனது உடலும் இருந்ததில் அவனை அந்த குளிர் பெரிதாகப் பாதிக்கவில்லை. அலைப்பாயும் மனதை அடக்கி விட்டால் தான் இங்கே உலகத்தில் பிரச்சனையே இல்லையே நமக்கு. பெரிய பெரிய துறவிகள் சொல்லுவது முதலில் அதைத் தானே!!! அப்படியேப்பட்ட மனதையும் அடக்கி தன் முள் போன்ற சுபாவம், இறுக்கம் போன்ற கட்டுகளுக்குள் வைத்து இருப்பவனால் தன் உடலை துளைத்து எடுக்க முயலும் அந்த ஊட்டியின் குளிரைத் தாங்க முடியாதா என்ன?

"முள்ளு மரம்....!!! சிரிப்பு மறந்த மூஞ்சி...!!",

முல்லை அவன் மனதில் தோன்றி பரிகாசம் செய்தாள் அவனை.

"ஹலோ என்ன சார் வேணும் உங்களுக்கு? எதுக்கு என்னையே நினைத்துக் கொண்டு இருக்கீங்க?",

அவள் மீண்டும் அவன் மனதில் கையில் கத்தியுடன் தோன்றி அவனை முறைத்தாள்.

"அய்யோ...!! கத்தி! எனக்கு பயமா இருக்கு...",

அவன் அதற்கு பயந்து நடுங்குவது போல் எண்ணிக் கொண்டு தனக்குள் சிரித்தான்.

"ஸ்....ஸ்...!! ஸ்ப்பா...!! என்ன குளிரு...!! ச்சே இவரு மனுஷனா இல்லை மரமா? இப்படி இந்த குளிரில் மொட்டை மாடியில் வந்து நிற்கிறாரே....!!!",

என்று எண்ணிக் கொண்டே தான் போட்டு இருக்கும் ஸ்வட்டரை மீறி துளைத்துக் கொண்டு இருக்கும் அந்த குளிரை சமாளிக்க தன் கைகளை தன் மார்புக்கு குறுக்கே கட்டியப்படி வந்து நின்றான் ராமு.

"அய்யா....!!!",

சிந்தனை கலைந்து திரும்பினான் அகிலேஷ்வரன்.

"உங்க ரூமில் எல்லாம் ரெடியா இருக்கு..",

பவ்யமாக வந்தது ராமுவின் குரல்.

"இல்லை வேண்டாம் ராமு, இன்னைக்கு எனக்கு குடிக்கத் தோணலை...",

என்றவன் பதிலில் வாயை பிளந்து விட்டான் ராமு. காரணம் மாலைகளில் எப்போதும் அருவிக்கரையில் அந்த முள்ளு மரத்தின் தாக சாந்தி நடக்கும். ஏதேனும் முக்கிய எதிர்பாராத வேலை வந்து விட்டால் அன்று மட்டும் மாலைக்கு பதில் இரவு உணவுக்கு பின் அவனது தாக சாந்தி நடக்கும், அது வழக்கம் என்பது ராமுக்கு தெரியும், அவன் அந்த பங்களாவில் வேலைக்கு வந்ததில் இருந்து அது மட்டும் மாறியதே இல்லை என்பது அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட அந்த விஷியத்தைப் போய் மாலையில் அகிலேஷ்வரன் வேண்டாம் என்று சொன்னதில் வழக்கம் போல் இரவு குடிப்பார் போல என்று எண்ணிக் கொண்டு ராமு எடுத்து வந்து வைத்தப் போது அதையும் வேண்டாம் என்று சொல்லும் அவனை ராமு ஆச்சிரியமாக தானேப் பார்க்க முடியும்?

"அய்யா...!!!",

அவன் குரல் ஆச்சரியத்துடன் ஒலித்தது.

"ராமு, நாளை ஆபிஸில் சொல்லி இந்த ஜீப்பை எடுத்துப் போகச் சொல்லி விடு, நான் இனிமே அந்த பைக்கில் தான் போகப் போறேன்..",

"சரிங்க அய்யா...",

என்று நகர்ந்த ராமுக்கு தன் அய்யாவிற்கு எதோ ஆகி விட்டது என்று தான் தோன்றியது. அவன் சென்றப்பின் மீண்டும் தனிமை க்குள் மூழ்கிய அகிலேஷ் வரனுக்கு இம்முறை வாயில் புகைத்துக் கொண்டு இருந்த சிகரெட் தீர்ந்து விட்டது. அதனால் தன் உலாவலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு வானை நோக்கினான்.

வானில் முழு நிலவு பவனி வந்து,

"நானே உச்சிக்கு போயிட்டேன், நீ இன்னுமா இங்கே உலாத்திட்டு இருக்கிற முள்ளு?",

என்று அவனைக் கேட்டதில் அவன் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை உயிர்ப்பித்து நேரம் பார்த்தான். அது இரவு பதினொரு மணி என்று அவனிடம் சொன்னது. ஏனோ இன்று அவனுக்கு உறக்கம் வரவில்லை, அதுவும் அவன் கண்கள் குறிப்பாக அந்த பங்களாவின் போட்டிகோவில் நிறுத்தப் பட்டிருந்த அந்த ராயல் என்பீல்டு மேல் பதிந்தது.

"முல்லை...!!",

மீண்டும் அவள் பெயரை அவன் மனம் உச்சரித்ததில் அவளைக் காண வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் எழுந்ததில் மீண்டும் அவன் கண்கள் அந்த பைக்கை நோக்கி பாய்ந்தது.
















"ஒருமுறை உங்கள் மனதில் காதல் விதை விழுந்து விட்டால் அது வளர்கிறதோ இல்லையோ ஆனால் அது முளைக்க முயற்சித்த தடயம் நிச்சயம் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும்....",

என்ற வரிகளுடன் அந்த கதை முடிக்கப் பட்டிருக்க, முல்லை அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

"ஆமாம், விதையாம் விதை, அதுலாம் மனசை பசுமையா ஈரமா வைத்து இருக்கிறவங்களுக்கு, முள்ளு மாதிரி மனதை வைத்து இருக்கிற மக்களுக்குலாம் இந்த ரைட்டர்ஜி என்னச் சொல்லுவாராம்?",

என்று எண்ணிக் கொண்டவள் தன் மனம் செல்லும் திசை உணர்ந்து திகைத்தாள்.

"இப்போ எதுக்கு நான் அவனை நினைக்கிறேன்!!!",

அவள் தன்னையே கேட்டுக் கொண்டு தன் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சகுந்தலாவின் போர்வையை நன்றாகப் போர்த்தி விட்டவள் தன் கையில் இருந்த புத்தகத்தை அலமாரியில் வைத்து விட்டு அந்த அறை வாயிலில் நின்று ஹாலை எட்டிப் பார்த்தாள். அந்த வீட்டில் மூன்று அறைகள் உண்டு. ஹாலில் இருக்கும் அந்த அறையில் தான் ராமன் எப்போதும் உறங்குவார். உள்ளே இருக்கும் ஒரு அறையில் முல்லையும் சகுந்தலாவும் உறங்குவார்கள். இன்னொரு அறை பின்பக்கம் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்.

"அப்பா... அதுக்குள்ள தூங்கிட்டார் போல...",

என்று எண்ணிக் கொண்டே நகர்ந்தாள்.

"இந்த சகு ஒழுங்காவே சன்னலை சாத்தல, இவகிட்ட சொன்னதுக்கு நானே வந்து பண்ணி இருந்திருக்கலாம்...",

என்று சொல்லிக் கொண்டே முல்லை நகர்ந்து அந்த சன்னலை மூடும் போது தான் அவனைப் பார்த்தாள். அவர்கள் வீட்டு வாசலில் தேயிலை செடிகளுக்கு நடுவே உள்ள பிரதானப் பாதையில் ஒளிர்ந்துக் கொண்டு இருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் அவனை எளிதாக அவளால் அடையாளம் காண முடிந்தது. அவள் முகம் மாறியது. அங்கே, கைக் கட்டிக் கொண்டு தனது ராயல் என்பீல்டு பைக் மீது சாய்ந்தப் படி அவளையே ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் அந்த முள்ளு மரமான அகிலேஷ்வரன்.

- வாசம் வீசும்

Screenshot_20230323_083609_Gallery.jpg
 
Top