• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 34

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
திருமணநாள் அன்று முழுவதும் அனைவருக்குமே ஏதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருந்தது. அதனால் அன்றைய நாள் அப்படியே கடந்துவிட, மறுநாள் அதிகாலையில் இருந்தே இல்லம் பறபறக்கத் தொடங்கியது.

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட
வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும்
நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்


என்று ஒலிபெருக்கி இசைத்திட, வாசலில் வாழைமரமும், பந்தலும், அலங்கார விளக்குகளும் என தாமோதரனின் இல்லமும் அவரது பண்ணைவீடும் கல்யாணக்கலை கட்டிக்கொண்டிருந்தது.

இரண்டு தெரு தள்ளியிருந்த மண்டபத்திலும் தங்க நிற சீரியல் பல்புகள் அடுக்கடுக்காய் தோரணமாய்த் தொங்க, வரவேற்பு முன்னறையில் தாமோதரன், விசாலி, ரத்தினம் மற்றும் சில நெருங்கிய உறவுகள் வந்தோர்களை பன்னீர் தெளித்து வரவேற்க, உள்ளே உதியும் வினோவும் மாப்பிள்ளைத் தோழர்களாக விக்ரமை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏன்டா விபா தாலி உன் கைக்கு வந்துட்டா போதும் மலருக்கு எத்தனை தடவைனாலும் தாலி கட்டிகிட்டே இருப்பேயா!!!" என்றான் வினோ.

கல்யாணக் கொண்டாட்டமோ என்னவோ மலரைப் பற்றி பேச்சு எடுத்தாலே எப்போதும் அமைதி காக்கும் விக்ரம் இன்று பதிலுக்கு பதில் பேசினான்.

"என் பொண்டாட்டி நான் கட்டுறேன்... நீ சொல்ற மாதிரி இன்னும் எத்தனை டைம் கட்ட சொன்னாலும் கட்டுவேன். அது மட்டுமா!!! இன்னு மணிவிழா(சஷ்டியப்த பூர்த்தி) இருக்கு... சதாபிஷேகம் இருக்கு... எல்லாத்துலேயும் நீங்க தான் மணமகன் தோழர்கள் டா"

"ஆமாடா... நீ உன் பேரன் பேத்தாயோட அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் எல்லாம் பன்னுவே.... நாங்க கடைசிவரை கட்ட பிரம்மச்சாரியா மாப்பிள்ளைத் தோழனா மட்டும் இருப்போமா?" என்று உதி வம்பு வளர்க்க,

"இதுல என்ன சந்தேகம் மச்சா.... சத்தியமா உனக்கு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லே..." என்று விக்ரம் கூற வினோவும் இணைந்து சிரித்தான்.

"அது ஏன்டா என்னை பாத்து மட்டும் சொல்றே... இதோ இவனும் தான் இருக்கான்ல அவனையும் சேத்து சொல்லேன்..." என்று உதி கடுப்படிக்க,

"சில மூஞ்சில தான் அந்த கலை தெரியும் டா உதி...." என்று வினோவும் இணைந்து கொண்டான்.

அதில் கடுப்படைந்த உதி, "உனக்கெல்லாம் பொண்ணே கிடைக்காது டா... இது என் சாபம் மட்டும் இல்லே.... ஒரு பொண்ணோட சாபமும் கூடத் தான்..." என்றான்.

"அவனுக்கெல்லாம் ரூட் க்ளியர் டா.... பையன் சரினு சொன்னா போதும்... அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணம்... அப்படியே இவன் சரினு சொல்லலேனாக் கூட பொண்ணு இவனை தூக்கிட்டுப் போயா தாலி கட்டிக்க ரெடியா இருக்கு..." என்று சைட் கேப்பில் வினோவையும் வம்பு வளர்க்க,

வினோ முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்காமல், "யாருடா அது எனக்கே தெரியாம அப்படி ஒரு பொண்ணு?" என்றான்.

"யாரோ!!!" என்று இருவரும் கோரஸ் பாடினர். "உனக்குத் தெரிஞ்சா நீதான் சொல்லேன்.." என்றான் உதி.

"உங்கள பத்தி தெரியாதா!!! இந்த போட்டு வாங்குற வெங்காயம்லா என்கிட்ட வேண்டாம்... நீ எவ்ளோ உரிச்சாலும் ஒன்னும் கிடைக்காது..." என்று வினோவும் பதில் கூற என மூவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வம்பு வளர்த்துக் கொண்டிருந்தனர்.

செம்பியன் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். கைபேசியில், "ண்ணா... இன்னு நாலு தண்ணி கேன் போட்டுவிடுங்க... அப்பறம் 200ml பாட்டில் கூடுதலா ரெண்டு பெட்டி போட்டுவிடுங்க..." என்று கூறிவிட்டு, எதிரில் நின்றிருந்தவரிடம்,

"ண்ணா கறி இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடும்... நீங்க வேலைய ஸ்டார்ட் பண்ணுங்க..." என்று அவரையும் அனுப்பி வைத்துவிட்டு தமக்கையைப் பார்க்கச் சென்றான்.

மணமகள் அறையில் மலர் கல்யாணக் கோலத்தில் அமர்ந்திருக்க, அருகில் வருணிகா வாயடித்துக் கொண்டிருந்தாள்.

"ஏய் உன் ஓட்டை வாயை கொஞ்சம் நிறுத்தி வை... பேசிப் பேசியே அக்காவை டயர்ட் ஆக்கிடாதே!!!" என்றபடியே மலரின் அருகே அமர்ந்தான்.

மலர் இன்னமும் அவனிடம் பேசவில்லை. கோபம் என்பதைவிட, வருத்தம் அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், எங்கே வாய்திறந்து பேசினால் அவனை திட்டிவிடுவோமோ என்ற பயம் வேறு.

"அண்ணி நான் உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?"

"இல்லே..."

"அண்ணியே இல்லேனு சொல்லிட்டாங்க... என்னை திட்டாம போட அந்த பக்கம்" என்றிட, செம்பியன் வருணிகாவை முறைத்துவிட்டு தன் தமக்கையின் கடைக்கண் பார்வைக்காக காத்திருந்தான். மலரும் அது தெரிந்து தம்பியின்புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.

அதனைக் கண்டு வருணிகா, "இப்போ எதுக்கு இப்படி காவல் காத்துட்டு நிக்கிறே... நான் ஒன்னு நீ பெட் கட்டி தண்ணி அடிச்சதையும், ஃப்ரைடே க்ளாஸை கட் அடிச்சிட்டு, சேட்டர்டே, சன்டேவோட சேத்து மூனு நாள் பாண்டிச்சேரில டேரா போட்டதையும்லா சொல்லமாட்டேன்... போதுமா?" என்று வீராப்பாய்க் கூறினாள்.

சட்டென மலரின் பார்வை தம்பியிடம் திரும்ப, இருக்கையில் அமர்ந்திருந்தவன் எழுந்து நான்கடி பின்னால் நகர்ந்து நெஞ்சில் கை வைத்தபடி நின்றிருந்தான். நெஞ்சு தடதடக்க, கைகால்கள் தானாய் நடனமிட தன் தமக்கையை நிமிர்ந்து பார்த்தான்.

மலரோ பார்வையாலேயே அவனை பஸ்பம் ஆக்கிக் கொண்டருந்தாள். தொண்டைக்குழியில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் தோன்றிட, கடினப்பட்டு எச்சில் கூட்டி விழுங்கிப் பார்த்தான்... ம்கூம் இன்னும் அதே உணர்வு தான்... பயப்பந்து என்பது அது தான் போல, வெளியேயும் வராமல், உள்ளேயும் செல்லாமல் நெஞ்சு அடைப்பது போல் ஒரு உணர்வு.

மனதிற்குள்ளோ, 'அடிப்பாவி... பச்சைபுள்ள மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு இப்படி போட்டுக் கொடுத்துட்டேயே சண்டாளி... என் அக்கா என்னை திரும்பிக்கூட பாக்கலேனு வருத்தப்பட்டேன் தான்.... அதுக்காக கண்ணாலேயே எறிக்கிற அளவுக்கு பாக்க வெச்சுட்டேயே டி... நீயெல்லாம் இடுப்பு எலும்பு ஒடிய வேலை வாங்குற நாத்தனார் இருக்குற வீட்டுக்கு தான் டி மருமகளா போவே!' என்று வருணை சபித்தபடி நின்றிருந்தான்.

செம்பியனின் செயலைக் கண்டு இதழ் மடக்கி சிரித்துவிட்டு, நண்பனை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல், "சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் அண்ணி... ச்சாம் ட்ரிங்க் பண்ணலாம் மாட்டான்" என்றாள் முன்னதினும் வெகு இயல்பாக...

அதற்குள் வெளியே மாப்பிள்ளை கோவிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மண்டபம் வந்துகொண்டிருப்பதாகக் கூறி, மாப்பிள்ளை அழைப்பிற்கு செம்பியனை அழைத்தனர்.

"சாரி க்கா..." என்று மட்டும் கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான் செம்பியன்.

"அண்ணி... நீங்க ச்சாம் மேல கோபமா இருக்கிங்களா?" என்று உண்மையாகவே அதற்கு காரணம் தான் தான் என்பது அறியாமல் வினவினாள்.

மலரின் முகம் புன்னகையில் மலர, வருணிகாவிற்கு சற்று ஆச்சரியமே! மலர் வருணுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இடையிடையே சிரித்தாள் தான். ஆனால் அந்த செயற்கை புன்னகைக்கும் இந்த அழகிய புன்சிரிப்பிற்கும் மலையளவு வித்தியாசம் கண்டு தான் வியந்தாள் நங்கையவள்.

"இவ்ளோ நேரம் இருந்தது........ ஆனா இப்போ இல்லே... என் தம்பி இன்னும் என் தம்பியா தான் இருக்கான்...." என்று கூறினாள்.

வருணிகாவிற்கு ஒன்றும் புரிந்திடவில்லை. ஆனாலும் தலையை எல்லா பக்கமும் உருட்டி வைத்தாள்.

மாப்பிள்ளை அழைப்பிற்கு தாமோதரன் விக்ரமை மாலையணிவித்து வரவேற்றார். செம்பியன் தங்கத்தில் கழுத்துச் சங்கிலியும், கைச் சங்கிலியும் அணிவித்து, "மச்சான்..." என்ற அழைப்போடு சிரித்த முகமாக அணைத்துக் கொண்டான்.

"செம்பியா... நீயும் ஹாப்பி தானே!"

"ரெம்ப ஹாப்பி மச்சான்..." என்று மீண்டும் அணைத்துக் கொள்ள,

"நல்லவேளை பையனாப் பொறந்தான்... இல்லேனா இத்தன தடவ கட்டிப்பிடிக்கிறதுக்கு பதிலா எனக்கும் தாலி கட்டுனு சொல்லிருப்பான்... ஏன்டா செம்பியா?" என்றான் உதி...

"கூறுகெட்ட தனமா பேசாதே உதி ண்ணா..."

"அடேய்... வரவர ரெம்ப மரியாதை இல்லாம பேசுறே நீ... இரு இரு பாப்பாகிட்ட கம்ப்ளைண்ட் பண்றேன்..."

"சொல்லுங்க... எனக்கு சப்போர்ட்டுக்கு நான் என் மச்சானை கூட்டிட்டு வருவேன்..."

"என்கிட்டேயோ, என் பொண்டாட்டிகிட்டேயோ பேசனும்னு நினைக்கிறவங்க ஒரு மாசம் கழிச்சு கால் பண்ணி அப்பாய்ண்மெண்ட் வாங்கிக்கோங்க... முடிஞ்சா ஆஃப்டர் த்ரீ மன்த்ஸ் உங்ககிட்ட பேசலாமா! வேண்டாமானு யோசிக்கிறோம்..." என்று இருவரையும் நட்டாத்தில் விட்டுச் சென்றான் விக்ரம்.

ஆரத்தி முடிந்ததும், செம்பியன் விக்ரமின் கைபிடித்து அழைத்துச் சென்றான். அதற்குள் மலருக்கு விசாலி சேலை எடுத்துச் செல்ல, நாத்தனார் முறையை வருணிகா தான் செய்தாள். அங்கு மட்டும் அல்ல அதன்பின் வந்த அனைத்து சம்பிராதாயங்களிலும் செம்பியன் மச்சினன் முறைக்கும், வருணிகா நாத்தனார் முறைக்கும் முன் வந்து நின்றனர்.

கல்யாணப் பெண்ணிற்கே உரிய தங்கச் சரிகை இலைந்தோடிய, அரக்கு நிற சேலையில் பதுமையாய் வந்தவளை கண்களைக் கூட இமைக்காமல் பாத்திருந்தான் விக்ரம். அருகில் வந்து அமர்ந்தவளின் காதில், "மோகினி" என்றான்.

அதில் கோபம் எழுந்திட, "நான் அப்பறம் மேக்அப் ரிமூவ் பண்ணிடுவேன்..." என்று மிரட்டினாள்.

அவளைப் பார்த்து கேலியாக புன்னகைத்து "அப்பவும் நீ மோகினி தான் டி... என்னை மயக்க வந்த மோகினி"

மலரின் முகம் வாடியது... "மாமா அப்படி சொல்லாதிங்க மாமா... நான் அப்பறம் அழுதிடுவேன்..."

"அடிப்பாவி... எல்லா பொண்ணுங்களும் புருஷன் தன்மேல மயங்கிக் கெடக்கமாட்டானானு ஏங்குறாங்க... நான் உன் மேல மயக்கிக் கிடக்குறேன்னு சொன்னா... அழுதுடுவேங்கற... சண்டக்காரி..." என்று காதல் கண் கொண்டு அவளை நோக்கினான்.

இவ்வளவு நேரம் தன் தவம் கலைக்க வந்த மோகினி என்று திட்டுகிறான் என்றே நினைத்திருந்தாள். ஆனால் அதன் பின்னால் இருந்த உண்மைப் பொருளை அவன் விளக்கிடவே, வெட்கம் கொண்டு செவ்வானம் போல் சிவந்தாள்...

பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட திருமாங்கல்யம் விக்ரமின் கைகளில் கொடுக்கப்பட்டது. மலர் ஏற்கனவே விக்ரம் அணிவித்திருந்த சங்கிலி எதையும் அவிழ்க்க மறுத்துவிடவை, மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்து வைத்திருந்தனர்.

பெண்ணவளின் சிவந்த முகத்தை ரசித்தபடி முதல் இரண்டு முடிச்சை விக்ரம் அணிவிக்க, வருணிகா முன்றாம் முடிச்சிட்டாள். பெண்ணவளை தோளோடு அணைத்தபடி உச்சி வகிட்டில் செந்தூரமிட்டான். மணமகனின் பட்டு வேஷ்டியோடு, மலரின் சேலை முடிச்சிடப்பட செம்பியன் விக்ரமின் கையைப் பிடித்து அக்னி வலம் வர அழைத்துச் சென்றான். அதே போல் வருணிகா மலரின் கையைப் பிடித்திருந்தாள்.

அதன்பின் வந்த பால்பழ சம்பிரதாயங்கள் என அனைத்து சடங்குகளும் வருணிகாவின் கேலியில் சந்தோஷமாகவே நடந்தேறியது.

ரத்தினம், விசாலி முதலில் மணமக்களை ஆசிர்வதிக்க, அதன்பின் தாமோதரனும் கண்கள் கலங்கியபடி மகளை அணைத்து "உன் மனசுபோல, மாப்ளை மனசை புரிஞ்சிக்கிட்டு சந்தோஷமா இருடா" ஆசிர்வதித்தார்.

செம்பியன் தன் மச்சானையும், அக்காவையும் சேர்த்து அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். ஆச்சி இருவரையும் நெட்டி முறித்து கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திச் சென்றார்.

இனிதே முடிந்திருந்தது அனைவரும் எதிர்பாத்த பனிமலர்-விக்ரம் பார்த்திபன் திருமணம்.

-தொடரும்.
 
Top