• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி (final)

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நாட்கள் மாதங்களாக கடந்திட்ட போதும் இருவரது சின்னச் சண்டைகளும், செல்லத் தீண்டல்களும் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது. பகலில் முட்டிக் கொள்வதும், இரவில் கட்டிக்கொள்வதுமாக மிக சிறப்பாகவே சென்றது அவர்களது திருமண பந்தம்.

விக்ரம் இன்றளவும் மற்றவர் கண்களுக்கு வீம்புக்கார விக்ரம் தான்... ஆனால் கொண்டவள் மட்டுமே அறிவாள் அவனது வீம்பின் வரம்பை. 😍

தேனிலவு, மறுவீடு, விருந்து என ஒரு மாதம் பறந்திருக்க உருப்படியாக அலுவலகம் செல்லவில்லை. அதற்கு ரத்தினம் அர்ச்சித்தாரோ இல்லேயோ உதி நன்றாகவே அர்ச்சித்தான். இரண்டாம் மாதமும் காலை தாமதமாக அலுவலகம் செல்வதும், மாலை விரைவாகவே இல்லம் திரும்புவதுமாக இருந்தான்.

அன்று காலையும் அப்படித் தான் தாமதமாகி இருக்க அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தான்... மலர் இன்னமும் எழுந்துகொள்ளவில்லை.

"வர வர ரெம்ப சோம்பேரி ஆகிட்டா... ஆபீஸ் கிளம்புறவனை அனுப்பி வெச்சுட்டு தூங்க வேண்டி தானே!!!" என்று தன்னிடமே தன்னவளை திட்டிக்கொண்டே தயாராகிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் குளித்து முடித்து வந்திருந்தவன், இடுப்பில் கட்டிய துண்டோடு, கண்ணாடி முன் நின்று அடங்காத தன் கேசத்தை அடக்கியபடி, "பனி... கிளம்பிட்டேன்... பைய்" என்றிட சட்டென எழுந்து அமர்ந்தாள் வதுகையவள்.

"என்னை எழுப்பி விட்டிருக்கலாம்ல மாமா" என்றபடி கடகடவென காக்கா குளியலை முடித்துக் கொண்டு அறக்கப்பறக்க கீழே விரைந்தாள்.

விக்ரம் தயாராகி கீழே வருவதற்குள் செண்பா க்காவின் மெனுவில் தயாராகி இருந்த ரவை இட்லியையும், வேர்கடலை சட்னியையும் எடுத்துக் கொண்டு அவன் முன்னே வந்து நின்றாள். இல்லை என்றால் உண்ணாமல் சென்று விடுவானே...

நான்கு வாய் வாங்கிவிட்டு "நீ சாப்பிடு" என்று அவள் புறம் கையைத் திருப்பிட, "நான் இன்னும் ப்ரஷ் பண்ணலே மாமா... நீங்க சாப்பிடுங்க..." என்றாள்.

"வர வர நீ ஒழுங்கா சாப்பிடுறேயா? இல்லேயானே? தெரியமாட்டேங்குது!... லன்ச் டைம்ல கால் பண்ணினாலும் தூக்கம் தான்... எப்போ பார் தூங்கி தூங்கி எழுந்துட்டு இருக்கே..."

"அதெல்லாம் ஒழுங்கா தான் சாப்பிடுறேன்... சம் டைம்ஸ் சாப்பிட பிடிக்காது... அப்போ தான் தூங்குவேன்..." என்று பேசிக் கொண்டே அவனுக்கு ஊட்டி முடித்திருந்தாள்.

குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டு கைகழுவச் சென்றவள், சட்டென தலை சுற்றி கையில் இருந்த தட்டை கீழே நழுவவிட, சத்தம் கேட்டு வந்தவன், அவளைத் தாங்கியபடி

"பனி.... ஏய்.... பனி..." என்று கன்னம் தட்டி எழுப்பிவிட்டு அவள் கண் திறந்தது "பிடிவாதக்காரி" என்று திட்டித் தான் தொடங்கினான்.

"ஒழுங்கா சாப்பிடுறது கிடையாது... நேரத்துக்கு தூங்குறது கிடையாது... கண்ட கண்ட நேரத்துல எழுந்து பால்கனி பனிக்காத்துல உக்கார வேண்டியது... இல்லே விடிவிடிய ஃபோனை பார்த்துட்டு விடிஞ்சதும் தூங்க வேண்டியது..." என்று தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தான்.

"மாமா" என்றபடி அவன் சட்டையைப் பிடித்து நெஞ்சில் சாய்ந்து கொண்டு, "டயர்டா இருக்கு.... திட்டித் திட்டி இன்னும் கொஞ்சம் டயர்ட் ஆக்காதிங்க"

"கும்பக்கரணி மாதிரி 9 மணி வரை தூங்கிட்டு உனக்கு டயர்டா இருக்கா! உன்னை திட்டினா நான் தான் டி டயர்ட் ஆகனும்... வா வந்து சாப்பிட உக்காரு..."

"டூ மினிட்ஸ் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன்" என்று அறை நோக்கிச் சென்றாள்.

இங்கே விக்ரமோ உதிக்கு அழைத்து தாமதமாகும் என்று கூறிட, அவன் ஒரு பக்கம் அவன் பங்கிற்கு விக்ரமின் காதை பன்ச்சர் ஆக்கினான். அதனையும் தன்னவளுக்காக வாங்கிக் கொண்டு, தன்னவளைத் தேடி அறைக்குச் சென்றான். அங்கே படுக்கையில் படுத்துக் கிடந்தவளைக் கண்டு என்னவோ ஏதோ என்று பதறியபடி,

"பனி என்னடா செய்யிது?"

"ப்ரெஷ் பண்ணினாலே வாமிட் வர்ற மாதிரி இருக்கு?" என்று உதடு பிதுக்கு குழந்தை போல் அழுதிட,

"சரி நான் இன்னைக்கு உன் கூடவே இருக்கேன்... ஓகேயா?"

"இல்லே எனக்கு ஏதோ செய்யிது..... நீங்க பக்கத்துல வந்தா உங்களுக்கும் ஒட்டிக்கும்... வராதிங்க..." என்று அவனைத் தள்ளிவிட்டாள்.

"ச்சீ லூசு.... நீயா ஏதாவது உளறாதே.... ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்.... வா"

"எனக்கு ஊசி வேண்டாம்..." என்று மீண்டும் மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

"உன்னை இப்படி கெஞ்சிட்டு இருந்தாலாம் வழிக்கு வரமாட்டே" என்றபடி வழக்கம் போல் தன் கைகளில் அவளை ஏந்தினான்.

"மாமா.... என்னை அங்கேயே இருந்துக்க சொல்லிட்டா என்ன பண்ணுவிங்க?" என்று அவன் கைகளில் இருந்தபடி அவளும் வழக்கம் போல் அவனைக் குடைந்து எடுத்தாள்.

பெருமூச்சு விட்டுவிட்டு, "நானும் பக்கத்து பெட்லேயே அட்மிட் ஆகிக்கிறேன் போதுமா!" என்று கடுப்படித்தான்.

பட்டென அவன் வாயில் அடித்து "பேச்சைப் பாரு..." என்று அதட்டிட, "ஏடி சண்டக்காரி, அப்படியே கீழ போட்டுடுவேன் பாத்துக்கோ.... கம்முனு வா" என்று சிடுசிடுக்க, அவன் பதியவளும் உதடு சுழித்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

காரில் அவளை அமர்த்திவிட்டு, வண்டியைச் செலுத்தினான். செல்லும் வழியிலேயே தன் அன்னைக்கு அழைத்து விவரம் கூறிட, அவரோ "பார்த்தி கைனக்காலிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போ" என்றிட, விக்ரமின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...

தன்னவளைப் பார்த்தபடியே "ம்மா ஆர் யூ ஷுயர்?"

"நாட் ஷுயர் பார்த்தி.... மே பீ... எதுக்கும் ஒரு செக்-அப் பண்ணிக்கோங்க... ஓகேவா?" என்றிட, "சரி" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஆடவனின் மனம் இரவுகளை கணக்கிடத் தொடங்கியது. தன்னை ஒருநாளும் ஒதுக்கி வைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றிட, தன்னவளின் புறம் திரும்பி,

"பனி... இந்த மன்த் உனக்கு பீரியட்ஸ் ஆன மாதிரி தெரியலேயே! லாஸ்ட் மன்த் டேட் நியாபகம் இருக்கா?"

"மறந்துட்டேன் மாமா... நியாபகம் இல்லே" என்றவள் சட்டென நிமிர்ந்து அமர்ந்து, "மாமா..." என்று கத்தி அழைத்து அவன் கன்னம் பற்றிட,

"அடியேய் ட்ரைவ் பண்ணும் போது என்ன பண்றே! ஒழுங்கா உக்கார்"

"லாஸ்ட் மன்த் மட்டும் இல்லே... அதுக்கு மொதோ மன்த்தும் பீரியட்ஸ் ஆகலே மாமா... சொல்லப் போன மேரேஜ்க்கு அப்பறம் இன்னும் குளிக்கவே இல்லே.... அப்போ ஹாப்பி நியூஸ் தானே! இருங்க நான் எல்லாருக்கும் கால் பண்ணி சொல்றேன்.... செம்பியன்கிட்ட 'நீ மாமா ஆகிட்டே டா'னு சொன்னா செம ஹாப்பி ஆகிடுவான்... மாமா எனக்கு ஃப்ஸ்ட் கேர்ள் பேபி தான் வேணும்... உங்களுக்கு?" என்று ஆர்வ மிகுதியில் பேசிக்கொண்டே சென்றாள்.

அருகில் இருந்தவனுக்கும் அவளது சந்தோஷம் தொற்றிக் கொள்ள சிரித்த முகமாக,

"பனி...டாக்டர் கிட்ட கன்ஃபார்ம் பண்ணட்டும்... அப்பறம் எல்லாருக்கும் சொல்லலாம்..." என்று பதிலளித்தான்.

"இப்போவே சொன்னா தானே ஊருல இருந்து ஆச்சியும் அப்பாவும் சீக்கிரம் வருவாங்க! சொல்லட்டுமா?" என்று அவன் அனுமதிக்காக காத்திருந்தாள்.

"பனி.... இனிமே உன்னை எல்லாரும் உள்ளங்கைல வெச்சு தாங்குவாங்க.... விழுந்து விழுந்து கவனிப்பாங்க.... நான் இனிமே உனக்குத் தேவையில்லே.... என்ன பனி?" என்று முயன்று வரவழைத்த சிரிப்போடு வினவினான்.

"என்னை சுத்தி எத்தன போர் இருந்தாலும் எனக்கு நீங்க தான் மொதோ வேணும்...."

"இப்போ இப்படித் தான் சொல்லுவே... அப்பறமா என்ன இருந்தாலும் மாமியார் இவ்ளோ செய்யிறாங்க பாருங்க... ஆச்சி முடியலேனாலும் எனக்காக படி ஏறி இறங்குறாங்க பாருங்க.... உதி ண்ணா வினோ ண்ணா பாருங்க எவ்ளோ அன்பா இருக்காங்கனு... இப்படியே மத்தவங்களைப் பத்தி பேசவே உனக்கு டைம் சரியா இருக்கும்..." விக்ரமின் குரலில் பொறாமை அப்பட்டமாகத் தெரிய, அதற்கு மேல் பெண்ணவளும் மறுத்தோ ஆமோதித்தோ எதுவும் கூறவில்லை. அதில் கோபம் கூட அவன் வதனம் தொட்டுச் சென்றது.

மருத்துவமனையில் அவள் கருத்தரித்திருப்பது ஊர்ஜிதமாகிவிட, மனம் நிறைந்த சந்தோஷத்தோடு எதிரில் இருந்த பேக்கரியில் இனிப்பு வாங்கி வந்து மருத்துவமனை ஊழியர்களுக்குக் கொடுத்தான். இல்லம் திரும்பும் போது,

"இப்போ கால் பண்ணு எல்லாருக்கும்" என்று முகம் கொள்ளாப் புன்னகையோடு மனைவியை ஏறிட்டான்.

அவளோ இடவலமாக தலையசைத்து, "மாமா.... யாருமே நம்மைத் தேடி வர முடியாத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போறிங்களா?" என்றாள்.

அவளது கேள்வியில் அதிர்ந்தவன், "ஏய் லூசு உனக்கு என்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிடுச்சா?" என்று திட்டிட,

"கொஞ்ச நாள் நீங்களும் நானும் மட்டும் தனியா இருக்கலாம்.... உங்க ஆசை தீர நீங்க மட்டுமே என்னை உங்க கண்ணுக்குள்ள வெச்சு பாத்துப்பிங்கலாம்.... உங்ககிட்ட திட்டு வாங்கிகிட்டே உங்க நெஞ்சுக்குள்ள நான் தொலைஞ்சு போவேனாம்... ம்ம்ம்?"

"ம்கூம்.... அதெல்லாம் அல்ரெடி அப்படித் தான் இருக்கோம்.... இப்போ உனக்கு குடும்பத்தோட கவனிப்பு தான் தேவை... அது தான் கெடைக்கனும்... வீட்டுக்கு போறோம், எல்லாரையும் வர சொல்றோம், கொண்டாடுறோம்.... புரியுதா?" என்று மகிழ்ச்சியைக் கூட விரைப்பாகக் கூறினான்.

"எப்படி மாமா இப்படி சடெனா உங்களை மாத்திக்கிறிங்க!!! இப்போததான் என்னை சுத்தி கூட்டமா இருக்கும்... உங்களை நான் கண்டுக்கவே மாட்டேன்னு சொல்லி கோபப்பட்டிங்க... அதுக்குள்ள எல்லாரும் வேணும்னு நெனைக்கிறிங்க?"

"அது அப்படித் தான்... சரி எல்லாருக்கும் சொல்லு....." என்று உத்தரவிட, மலர் அனைவருக்கும் நல்லசெய்தியைக் கூறினாள்.

விக்ரமும், பனியும் எதிர்பார்த்தது போலவே, விஷயம் அறிந்து அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே ரத்தினம், விசாலி, உதி, வினோ, வருண், செம்பியன் என அனைவரும் கூடியிருந்தனர். தாமோதரனும், அபிராமியும் கூட மகிழுந்தில் புறப்பட்டிருந்தனர்.

அடுத்து வந்த நாட்கள் மலரின் காட்டில் மழை தான். திரும்பும் இடமெல்லாம் கவனிப்பு தான். ஆனால் அவள் விழுந்து விழுந்து கவனித்தது விக்ரமைத் தான். அதே போல் தனக்கு இப்படி இருக்கிறது, அப்படி செய்கிறது என்று வீட்டில் அத்தனை பேர் இருந்த போதும் விக்ரமிற்கு தான் அழைப்பு விடுத்து அவனை இம்சித்துக் கொண்டும் இருந்தாள்.

"ஏன்டி இப்படி படுத்துறே?" என்று விக்ரமும் சிலநேரம் கடுப்புடன் வினவுவான்.... அதற்கும் "நான் உங்களை கவனிச்சிக்கிறேன்... நீங்க என்னை கவனிச்சுக்கோங்க" என்று அவன் கூறியதையே அவனுக்கே திரும்பக் கூறி திமிராகப் பார்த்து வைப்பாள்.

அவளது ஏழாம் மாதத்தில் "மாமா... நீங்க திரும்ப மாடலிங் பண்றிங்களா?" என்று ஆசையாக வினவினாள்.

"ஏன் டி உனக்கு இந்த கொலைவெறி?"

"நான் உங்களை எந்த ஆட்லேயும் பாத்தது இல்லே மாமா... எனக்காக ஒரே ஒரு ஆட்.... இன்டர்நேஷனல் லெவல்ல ஹிட் ஆகனும்.... பண்ணுங்க மாமா, ப்ளீஸ்?"

"இப்போ என்னைத் தான் காணோம்னு எல்லாவனும் கதவைத் திறந்து வெச்சு உக்காந்திருக்கானுங்க பார்... போடிங்ங..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... எனக்காக நீங்க இதை செஞ்சு தான் ஆகனும்...." என்று கட்டளையாகக் கூறிட, அதனைத் துளியும் மதித்தான் இல்லே அவளது வீம்புக்காரன்.

அதற்காக அவளும் விடுவதாக இல்லை. ஆனால் அவள் கேட்கும் போதெல்லாம் அவனது பதில் முடியாது என்பதாகத் தான் இருந்தது.

நாட்கள் கடந்திட வளைகாப்பு வைபம் வைத்து மலரை தாமோதரன் தன் இல்லம் அழைத்துச் செல்ல, "ஒன் வீக் ல நானும் வந்திடுவேன்" என்று கூறி தான் அவளை வழியனுப்பி வைத்தான்.

ஆனால் குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாள் முன்பு வரை கூட அவன் வந்தபாடில்லை. அவள் கேட்கும் போதெல்லாம் வேலை கொஞ்சம் அதிகம் என்று தான் பதில் கிடைக்கும் அவனிடம். குழந்தை பிறக்கவிருந்த தேதிக்கு முதல் நாள் இரவே வலி ஏற்பட, தாமோதரன் விக்ரமிற்கும் ரத்தினத்திற்கும் விவரம் தெரிவித்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

செம்பியன் குழந்தை பிறக்கும் தேதியைக் கணக்கிட்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்திருந்ததால் மலருடன் அவன் தான் துணைக்கு இருந்தான். ஆச்சி கொடுத்து கசாயத்தைக் குடித்துவிட்டு மருத்துவமனை வராண்டாவில் நடையிட்டுக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

சென்னையிலிருந்து மூவரும் வருவதற்குள் மலருக்கு குழந்தை பிறந்திருக்க, செம்பியன் தான் முதலில் குழந்தையை கையில் வாங்கியிருந்தான்.

விக்ரம் வரும் போது மலர் அறைக்கு மாற்றப்பட்டிருக்க, ஆச்சியின் கையில் இருந்த குழந்தையை ஒரு முழு நொடி கூட பார்த்திடவில்லை. சொல்லப் போனால் அங்கே நிற்கக் கூட இல்லை அவன். மலர் இருந்த அறைக்கு விரைந்தான். அசந்து உறங்கிக் கொண்டாருந்தவள், தன்னவனின் தலை கோதலில் கண் விழித்திட, எதிரில் இருந்தவன் விழி நீர் தேங்கியபடி,

"பிடிவாதக்காரி" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான். இருக்காதா பின்னே! நினைத்ததை தன் மூலமே சாதித்துவிட்டால் அல்லவே அவள். அந்த கோபம் தான் அவனுக்கு.

அவளும் கண்கள் கலங்கியபடி, இதழில் மட்டும் புன்னகை தவழ்ந்திட, சிக்ஸ் பேக் வைத்து கம்பீரமாக நின்றிருந்தவனைக் கண்டு, "மெலிஞ்சுட்டிங்க.... நான் ஊட்டி ஊட்டி வளர்த்த உடம்பை ஒரு மாசத்துல குறச்சிட்டு வந்து நிக்கிறிங்களே!!!" என்று வருந்தும் குரலில் கூறினாள்.

"திரும்ப ஏத்திக்கலாம்.... அது ஒன்னும் ப்ரச்சனை இல்லே... உனக்கு எப்படி இருக்கு? என்னை ரெம்ப மிஸ் பண்ணினேயா? கண்ணை சுத்தி பிளாக் மார்க்ஸ் வந்திடுச்சு பார்..." என்றிட

"எனக்கென்ன!!! நான் நல்லா தான் இருக்கேன்... இன்னும் பத்து பெத்துக்க சொன்னாக் கூட ரெடியா தான் இருக்கேன்..... உங்களை மிஸ் பண்ணினேன் தான்... ஆனா நீங்க வரலேங்கவுமே புரிஞ்சுகிட்டேன்..."

'என்ன புரிஞ்சுகிட்டே?' என்ற கேள்வியோடு நெற்றி சுருக்கி கண்களால் வினவிட, விடை கிடைப்பதற்கு முன்பே கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, அவளை விட்டு விலகி அமர்ந்தான் ஆம்படையான்.

ரத்தினம் தான் குழந்தையோடு உள்ளே வந்தார். "டேய் பார்த்தி! என்ன குழந்தைனு கூட பாக்காம உள்ளே வந்துட்டே?" என்ற கேட்டபடி குழந்தையை அவன் கையில் கொடுத்தார்.

"என் அணுவும் அவள் விருப்பத்தை தான் விரும்பும்... கண்டிப்பா கேர்ள் பேபி தான் இது. My Queen's little princess" என்று உறுதியாகக் கூறி குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு கன்னத்தோடு கன்னம் வைப்பது போல் தூக்கிப் பிடித்து தன்னவளிடம் காண்பித்தான். அவன் கூறியது உண்மையாகிப் போக, அதிசயித்து அவனைப் பார்த்தாள்.

அடுத்த நாளே குழந்தையோடு இல்லம் திரும்பிட அபிராமி ஆச்சி தான் இம்முறை ஆரத்தி எடுத்தார். தாய்மாமன் ராஜன், அவர் மனைவி குழந்தைகள் என இன்னும் கொஞ்சம் கூட்டம் கலைகட்டியது... அபிராமி ஆச்சியின் கண்டிப்பில் அறை கூட இரண்டாகிப் போக விக்ரமிற்கு தான் மலரிடம் பேசக் கூட முடியவில்லை.

இரவு உணவு முடித்து செம்பியனுடன் அவனது அறையில் உறங்கச் செல்ல, அவனவளிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. வழக்கம் போல் செம்பியனுடன் உறங்குவதை கேலி செய்து அனுப்பியிருந்தாள். பதிலுக்கு அவனும் காணொளி அனுப்பினான்.

அதனைக் கண்டவனுக்கு உடனடியாக தன்னவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றிட அதனை தட்டச்சு செய்து அனுப்பி வைத்தாள். பதிலுக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஆனால் நல்லிரவில் அறை கதவு தட்டப்பட மலருடன் படுத்திருந்த ஆச்சி எழாமல் இருக்கவே, அவள் எழுந்து சென்று திறந்தாள்.

"என்ன ம்மா?" என்று கனிவாக வினவிய விக்ரமைக் கண்டு,

"எனக்காகவா?" என்றாள் மெல்லிய குரலில்

பாந்தமாக பட்டும் படாமலும் அவளை அணைத்து "நீ கேட்டு நான் செய்யாம இருப்பேனா? ஆனா அதுக்காக நான் இழந்ததும் பெரிய பொக்கிஷம் தான்" என்றான்.

"சாரி..." என்றவளின் குரல் இப்போது நன்றாகவே உடைந்திருந்தது.

ஆம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன் மாடலிங் துறையில் கால் பதித்திருந்தான் விக்ரம். அதுவும் அவள் ஆசைப்பட்டது போல் ஆழப்பதித்த கால்தடம் போல் ஒரு பெரிய விளம்பரதார நிறுவனத்தின் விளம்பரம்... நிச்சயம் அவனுக்கு அதில் பேரும் புகழும் உறுதி.

ஆனால் அதற்காக அவன் இழந்தது, தன்னவளின் மற்றொரு ஆசையான குழந்தை பிறக்கும் போது அவன், அவள் அருகே இருக்க வேண்டும் என்பதையே! அதில் அவனுக்கு பெரும் வருத்தமே.... அவன் வருத்தம் கண்டு அவளும் வருந்திட, அதனை அவனது பாணியில் விரட்டினான் அந்த வீம்புக்காரன்...

முகத்தை சிடுசிடுவென்று வைத்துக் கொண்டு, "உடனே முகத்தை உம்முனு வெச்சுக்காதே... பாத்தாலே கோபம் கோபமா வருது... உன் பக்கத்துல இருந்து உன்னைப் பாத்துக்க முடியலேனு தான் என் கெரியரை விட்டேன்... இப்போ திரும்பவும் உன்னால அதே நிலைமைல வந்து நிக்கிறேன்... இன்னோரு முறை மாமா எனக்காக அதை செய்யிங்க, இதை செய்யிங்கனு வந்து நில்லு.... அப்போ இருக்கு உனக்கு" என்று பல்லைக் கடித்துக் கொண்டு மெல்லமாகக் கத்தினான்.

அவனது வார்த்தைகள் உண்மை என்ற போதும், கோபம் பொய் என்று அறிந்து கொண்டவள், "நான் அப்படித் தான் கேப்பேன்... நான் கேட்டா நீங்க செஞ்சு தான் ஆகனும்..." என்று குழைந்தபடி அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். வழக்கம் போல் அவளது அதீத உரிமை அவனுக்குமே ஒருவித இதமான உணர்வைப் பரவியது....

பதினாறாம் நாள் குழந்தைக்கு கயிறு கட்டி பெயர்சூட்டும் விழா நிகழ்த்தினர். பெயர்தேர்வு முழுக்க முழுக்க செம்பியனே தான். மதிமுகமாய் தன் கையில் வந்தவளுக்கு அம்மதியின் பெயர் தான் வைக்க வேண்டும் என்று நிலானிஹா என்று பெயர் வைத்தான்.

தாய், சேய் இருவரையும் ஐந்தாம் மாதம் தான் அனுப்பி வைப்பேன் என்று அபிராமி ஆச்சி உறுதியாகக் கூறிவிட, விக்ரம் தன்னவளை பிரிந்திருக்க முடியாமல், ஆட் ஷூட் முடிந்துவிட்டால் நேரே தாமோதரன் இல்லம் வந்துவிடுவான். ஸ்டூடியோ இப்போது உதியின் முழுநேரப் பொறுப்பாகியது.

ஆறாம் மாதம் தொடங்கியதும் பனியையும், நிலாவையும் தங்கள் இல்லம் அழைத்து வந்துவிட்டான் விக்ரம். நிலாவிற்கு இடம் மாறியதில் மாற்றி மாற்றி ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட அது மலரையும் அவ்வபோது வாட்டியது.

ஒருநாள் காலை பல்துலக்கிக் கொண்டிருந்தவள், உமட்டிக் கொண்டு வாமிட் எடுத்துவிட பதறியடித்து உள்ளே வந்த விக்ரம்,

"பனி.... என்னாச்சு டி?" என்றான்.

பெண்ணவளோ மீண்டும் உதடு பிதுக்கி அழுதிட, மீண்டும் ஒரு கைனக்காலஜிஸ்ட், மீண்டும் ஒரு நல்ல செய்தி, மீண்டும் ஒரு கொண்டாட்டம்... ஆனால் அதில் கோபமாக இருந்தது விக்ரமும் ஆச்சியும் தான். ஆச்சிக்கு பிள்ளை பெற்று உடல் தேறி வருவதற்குள் மீண்டும் முழுகாமல் வந்து நிற்கிறாளே என்ற வருத்தத்தோடு இணைந்த கோபம்.

விக்ரமிற்கு கவலையோடு இணைந்த கோபம். "நாள் கணக்கு வெச்சுக்க மாட்டேயா டி? சதிகாரி..." என்று அவன் வழக்கம் போல் தங்கள் அறையில் வைத்து மலரை காய்ச்சிக் கொண்டிருந்தான்.

திட்டுவாங்கிக் கொண்டிருந்தவளோ "வந்தா தானே கணக்கு வெச்சுக்கிறதுக்கு..." என்று முனுமுனுக்க நல்லவேலை அவன் காதில் விழவில்லை...

"உன்னை அழச்சிட்டு வந்து ஒன் மன்த் கூட ஆகலே... ஆனா திரும்பவும் உன்னையும், பாப்பாவையும் ஊருக்கு கூட்டிட்டுப் போறதுல தான் எல்லாரும் குறியா இருக்காங்க.... கேட்டா குழந்தையையும் பாத்து, உன்னையும் கவனிக்க முடியாதாம்!!! என்னை மொதோவே நீ வேண்டாம்னு சொல்லி தடுக்குறதுக்கு என்ன?" என்று மலரிடம் எறிந்து விழுந்தான்.

"சும்மா நான் மட்டும் தான் காரணம் மாதிரி பேசாதிங்க மாமா... எல்லாம் உங்காளாலத் தான்..." என்று குழைந்தபடி தப்பை அவன் பக்கம் திருப்பிவிட, விக்ரமிற்கு கோபம் தலைக்கு ஏற அவளைத் திட்ட வார்த்தைக் கிடைக்காமல் "உன்னை..." என்று அடிப்பது போல் அவளை நெருங்கி, அவளே எதிர்பாராத நேரம் கட்டியணைத்திருந்தான்.

அடிக்கமாட்டான் என்று தெரிந்திருந்தாலும் இந்த அணைப்பை பெண்ணவள் யோசித்து கூட பார்க்கவில்லை. "இப்படியே எவ்ரி மினிட்ஸ் உங்க எமோஷன்ஸை மாத்திக்கிட்டே இருங்க.... பிள்ளைங்களும் அப்பறம் அப்படித் தான் வளரப் போகுதுங்க பாருங்க...." என்று அவன் நெஞ்சில் புதைந்தபடி கூறினாள்.

"என்ன செய்து தொலைக்க? நீ என்ன செஞ்சாலும் உன் மேல லவ் தான் அதிகமாகுது.... சரி பாத்து பத்திரமா இரு... முன்ன மாதிரி நான் அடிக்கடி அங்கே வர முடியாது... பாப்பாவை பத்திரமா பாத்துக்கோ" என்று அவளுக்கு அறிவுரை வழங்கி ஊருக்கு அனுப்பி வைத்தான்.

இதற்கிடையே இங்கே செம்பியன், வருணிகாவிற்கு படிப்பு முடிந்து கேம்பஸிலும் செலெக்ட் ஆகி விட, விக்ரம் வருணிகாவின் அன்னை, தந்தையைப் பார்த்து பேசினான். ஆரம்பத்திலிருந்தே பிடி கொடுக்காமல் தான் பேசினார் வருணின் அன்னை. வினோவின் தாத்தா வந்து பேசிய பின்னும் கூட அவர் சம்மதிக்கவில்லை... பல போராட்டங்களுக்குப் பின் வருணிகாவின் விருப்பத்திற்காக மட்டுமே அவள் அன்னை திருமணத்திற்கு சம்மதித்தார். திருமணத்தேதி மலருக்கு குழந்தை பிறந்தபின் என்று முடிவாகியது.

இந்த முறை விக்ரம் பிரசவத்திற்கு ஒருவாரம் முன்னதாகவே வந்துவிட்டான். காரணம் அவனும், அவனது கெரியரில் முழுவளர்ச்சி அடைந்திருந்தான். அவன் என்றைக்கு தேதி தருகிறானோ அன்று தான் ஷூட்டிங்… எனவே இம்முறை முழுக்க முழுக்க தன் மகளுடனும், மனைவியுடனுமே தான் தன் நேரத்தை செலவிட்டான்.

இம்முறையும் பெண்குழந்தையே ஈன்றெடுத்தாள் விக்ரமின் வீரமங்கை. பெண்ணாகப் பிறந்தவள் பிஞ்சிலேயே அனலாய் தகித்தால் தான் அரக்கனாய் திகழ்பவர்களை சுட்டெரிக்கும் வல்லமை பெறுவாள் என்று எண்ணி பெயரிலேயே அந்த பலத்தைக் கொடுக்க நினைத்த விக்ரம், அனலிஹா என பெயர் சூட்டினான்.

என்ன தான் ஓடி ஓடி உழைக்கும் வாழ்க்கையாக விக்ரமின் வாழ்க்கை மாறிப்போன போதும் தன்னவளுடனும், குழந்தைகளுடனும் அவன் செலவளிக்கம் நேரத்தை குறைத்திடவில்லை. இதோ வந்துவிட்டது வினோத்-வருணிகாவின் திருமணம்...

"மாமா... நிலாக்கும், அனலிக்கும் இந்த ட்ரெஸ் போட்டுவிட்ருங்க... அப்பறம் மறக்காம அனலிக்கு டயப்பர் போட்டுட்டு ட்ரெஸ் போடுங்க... இல்லேனே நான் தான் ஒருத்தி மாத்தி ஒருத்தினு பாத்ரூமே கதினு கொடக்கனும்..." என்று விக்ரமிற்கு வேலை கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

அவசர அவசரமாக குளித்து முடித்து வெளியே வர விக்ரம் இன்னமும் அங்கேயே தான் நின்றிருந்தான்.

"என்ன மாமா... கிளம்ப வேண்டாமா சீக்கிரம் பிள்ளைங்களை..." என்று கூறியபடியே அறையை நோட்டமிட குழந்தைகள் அங்கே இல்லை...

"குட்டீஸ் எங்கே மாமா?"

"அவங்க சமத்தா ஆச்சிக்கிட்டேயும், அம்மாகிட்டேயும் ட்ரெஸ் போட்டுட்டு இருக்காங்க..."

"அப்போ நீங்க போயி ரெடி ஆகுங்க... போங்க"

"எனக்கு இன்னொரு குழந்தைக்கு ட்ரெஸ் பண்ற வேலை இருக்கே... அதை முடிச்சிட்டு நான் ரெடி ஆகுறேன்..." என்றபடி மலரை நெருங்கினான்.

அவள் மறுத்தாலும் விடுவான என்ன இந்த வீம்புக்காரன்!. அனைவரும் தயாராகி மண்டபம் வர உதி தான் தாம்தூம் என்று குதித்தான்...

"ஏன்டா லேட்... உனக்காக எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது?"

"என்னடா பண்றது குழந்தைகளை ரெடி பண்ண வேண்டாமா?" என்று மலரைப் பார்த்தபடி விக்ரம் கள்ளச் சிரிப்போடு கூறிட பெண்ணவளோ முகம் சிவந்து அவ்விடம்விட்டு நகர்ந்து வருணிகா அறை நோக்கி சென்றாள்.

"பின்னே வர்ஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணினா!!! அப்படித் தான் இருக்கும்... என்னை மாதிரி சிங்கில்லா இருந்தா எவ்ளோ ஜாலியா ஃப்ரீயா என்ஜாய் பண்ணலாம்..." என்று 90's kid ஆக மாறி கடுப்பேற்றுவதாக நினைத்து உரைத்தான். (இப்போ தான் டா தெரியுது... உனக்கு ஏன் இன்னும் பொண்ணு கிடைக்கலேனு!!!)

வழக்கம் போல் விக்ரம், "நீ கடைசி வரைக்கும் ஒன்டிக்கட்டை தான் டா!" என்று கூறிச் சென்றான்.

சுபநாள் சுப முகூர்த்தத்தில் வினோ வருணின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி மனையாளாக்கிக் கொண்டான். அவர்களது வாழ்வும் இனிதே தொடங்கி இல்லறம் நல்லறமாக வாழ்த்தி விடைபெறுவோம்.

சுபம்

கதைக்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏😊.
 
  • Like
Reactions: dsk
Top