• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 21


சித்தார்த் வர்மன் ஆதித்தை பார்த்து “ஆதித் இன்னொருமுறை ரோலர் கோஸ்டர் போலாமா? “ என்றான் மதுரவர்ஷினியின் முகத்தினை கூர்ந்து பார்த்தவாறு.

அதிர்ந்து நோக்கியவளைப் பார்த்து “மது வேண்டுமானால் இன்று நீயே ஆதித்ய வர்மனை பார்த்துக்கொள்” என்றான்.

“கண்கள் மின்ன இது நிஜமா? உன்னை நான் நம்பலாமா?” என்பது போல் பார்த்தாள்.

“நிஜம்தான் மது.ஆதித்ய வர்மனுடன் இன்று முழுவதும் நீ இருக்கலாம். ஒரு சின்ன நிபந்தனையுடன்...” என்றான் தன் நாவால் கன்னக்கதுப்பை நிரடியபடி.

ஆதித்ய வர்மனை மலர்க்கொத்து போல் தன் கைகளில் சுமந்திருக்க, அவனோடு கழிக்கும் இந்த இனிய நிமிடங்களை இழக்க விரும்பாதவள், “ என்ன நிபந்தனை? “ என்றாள் தன் முகத்தை சுளித்தவாறு.

“ நிபந்தனை என்னவென்றால் மது, இலவச இணைப்பாக அவனுடைய தந்தையும் அவனுடனே இருப்பார் “ என்றவனின் உதட்டோரம் சிறு புன்னகையில் துடித்தது.

“ஆஹான்..... ஆசை தோசை.... அப்பளம் வடை... “ என்றாள் சட்டென்று மூண்ட சினத்தோடு.

அன்னை உணவுப் பதார்த்தங்களை அடுக்கடுக்காக அடுக்கிய உடன் ஆதித்ய வர்மனோ, “ஆதிக்கு பசிக்கு..... “ என்று சிணுங்க ஆரம்பித்தான்.

“ சரி உனக்கு இஷ்டம் இல்லை என்றால் ஆதித்ய வர்மனை என்னிடம் கொடுத்துவிடு. ஆதி வா... நாம் போகலாம்” என்றான் முகத்தினை பாவம் போல் வைத்துக் கொண்டு.

ஆதித்தோ தன் தந்தையை விட ஒரு படி முன்னேறி மதுவை இறுகக் கட்டிக் கொண்டு அவளை விடமாட்டேன் என்பதுபோல் கால்களை உதைக்க ஆரம்பித்தான்.
“ஆதி... வர மாட்டேன்.... “ என்று கூறிக்கொண்டே கண்களை கசக்க ஆரம்பித்தான் ஆதித்ய வர்மன்.

கடத்தல்காரியையே அன்பால் கொள்ளையிட்டான் ஆதித்ய வர்மன்.

மது சுற்றுமுற்றும் தன் பார்வையை சுழல விட்டாள். “ இத்தனை திரளான ஜனக்கூட்டம் மத்தியில் சித்தார்த் வர்மன் தன்னை என்ன செய்துவிட முடியும்?
ஆதித்காக சித்தார்த் வர்மன் என்ற தொல்லையை சகித்துக் கொள்ள முடிவு செய்தாள்.

ஆனால் அந்த தொல்லையோ, மதுவை அன்பால் சல்லடையாய் துளைக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது.

மதுரவர்ஷினி ஆதித்ய வர்மனைப் பார்த்து, “ஆதி குட்டி, நாம் இப்பொழுது சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, தண்ணீரில் ஜாலியாக விளையாடலாம்” என்ற மகிழ்வான குரலில் குழந்தையை சந்தோசப்படுத்தி விட்டு சித்தார்த்தை கண்டுகொள்ளாமல் முன்னேறிச் சென்றாள் உணவகத்திற்குள்.

மதுரவர்ஷினியைப் பின்பற்றி தானும் உணவகத்திற்குள் நுழைந்தான்.

குழந்தை இலகுவாக சாப்பிடும் உணவு பதார்த்தங்களை ஆர்டர் செய்துவிட்டு, ஆதித்ய வர்மனை மேசையின் மீது அமர வைத்து, மேஜையின் மீது தன் கைகளை ஊன்றி அதில் தன் கன்னங்களைச் சாய்த்து குழந்தையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் மதுரவர்ஷினி.

எதிர்ப்புற இருக்கையில் அமர்ந்த சித்தார்த் வர்மன் தன் தாரத்தை, தாயாய் கண்ட அழகில் மெய்சிலிர்த்தான்.
மனம் நிறைந்த மகிழ்ச்சியில், தன் வயிற்றை நிரப்ப மறந்தான். தனக்கென எந்த உணவையும் ஆர்டர் செய்யாமல் அவர்கள் உலகில் தானும் கலக்கும் நாளுக்காக ஏங்கி அமர்ந்திருந்தான்.

ஆதித்ய வர்மனுக்கு ஊட்டிவிட்ட மதுர வர்ஷினி தானும் உணவை எடுத்துக் கொள்ளவில்லை.

சாப்பிடாமல் இருந்த தன் தாயையும் தந்தையையும் கண்ட ஆதித்ய வர்மன், தனக்கு உணவு ஊட்டுவது போல் தன் தந்தைக்கும் உணவை ஊட்ட வேண்டும் என்று அடம் பிடித்தான் மதுரவர்ஷினியிடம்.

“நோ..... “ என்று ஒற்றைச் சொல்லாக மறுத்துவிட்டாள் மதுரவர்ஷினி.

தன் இரண்டு பிஞ்சுக் கரங்களால் அவனுடைய வாயை அழுத்தமாக மூடிக்கொண்டான். அடுத்த வாய் உணவை வாங்க மறுத்து விட்டான்.

ஆதித்ய வர்மனின் பிடிவாதத்தில் அயர்ந்தே விட்டாள் மதுரவர்ஷினி.

குழந்தையை உணவு உண்ண வைக்க காக்கைக்கும், குருவிக்கும் சோறு இடும் தாய்போல், சித்தார்த் வர்மனுக்கும் உணவைத் தர முன்வந்தாள்.

ஸ்பூனால் உணவை எடுத்து, வேண்டா வெறுப்பாக முகத்தைத் திருப்பிக்கொண்டு சித்தார்த் வர்மனின் பக்கம் நீட்டினாள்.

ஆதித்ய வர்மன் மதுரவர்ஷினியின் கையைப் பிடித்துக் கொண்டு தன் தந்தையின் வாயில் உணவை ஊட்டினான்.

வரமாய் தன் வாழ்வில் வந்தவர்களின் கரம் தந்த அன்பில் கண்ணீர் துளிர்த்தது சித்தார்த் வர்மனுக்கு.

“ம்... மா.... அப்பா.... ஸ்..... ஆ.... தண்ணி..... “ என்று தன் தந்தை காரத்திற்காக கண் கலங்குவதாக நினைத்து தன் அன்னையை துணைக்கு அழைத்தான்.

சித்தார்த் வர்மனின் கண்ணீர் துளியைக் கண்டதும் மதுவின் மனம் பதற ஆரம்பித்தது. அவன் கண்ணீரைத் துடைக்க எழுந்த தன் கைகளை இறுக்கி மூடிக் கொண்டாள்.

உதடு மடித்து பற்களைக் கடித்தபடி தண்ணீரை அவன் புறம் நகர்த்தி வைத்தாள்.

அவள் உள்ளம் அவனை வெறுத்தாலும், அவளின் உயிரில் தான் நிறைந்து இருப்பதை உணர்ந்தான்.
தன் மதுவின் காதல் வெளிப்படும் தருணத்திற்காக கடவுளிடம் கருணை மனு கொடுக்க ஆரம்பித்தான் சித்தார்த்.

உண்ட உணவு வயிற்றை நிறைத்ததோ? இல்லையோ? அனைவரின் மனதையும் நிறைவாய் நிறைத்தது.

மூவரும் ஒரே மாதிரியான உடையில், சித்திரமாய் வருவது அனைவரையும் கவர்ந்தது.

ரெயின்போ டான்ஸ் என்னும் மழைநீரில் ஆட்டம் என்ற பகுதிக்குள் நுழைந்து செயற்கையாக பொழிந்த மழையில், அதிரடியாய் ஒலிக்கும் இசை பாடலுடன் கலந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பகுதியில், அன்னையும் மகனும் குத்தாட்டம் இட்டனர்.

ஆண்கள் பிரிவில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இதனை ரசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

திடீரென்று அருகே, மிகவும் மோசமான வர்ணனை வார்த்தைகளால் ஒரு பெண்ணை அங்கம் அங்கமாக வர்ணிப்பதை கேட்டு, தலையைத் திருப்பிப் பார்த்தான்.

அங்கிருந்த ஒரு நண்பர் கூட்டம் மதுரவர்ஷினியைக் காட்டி தரக்குறைவான வார்த்தைகளால் கேலியும் கிண்டலும் அடித்தனர்.

அவர்களை சித்தார்த் நெருங்குவதற்குள், கூட்டத்தில் கலைந்திருந்தனர்.
சிவந்த கண்களும் முறுக்கேறிய நரம்புகளுமாய் ருத்ரனாய் மாறியிருந்தான் சித்தார்த்.

மதுவையும் ஆதித்தையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் குளத்திற்கு பாதுகாப்பாய் அழைத்துச்சென்றான்.
அவனுடைய கண்கள் கூர்மையாய் சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்து கொண்டே இருந்தன.

தன் மகனோடு நீச்சல் குளத்திற்குள் இறங்கிய மதுரவர்ஷினி சில்லிட்ட நீரால் சிலிர்த்துப் போனாள்.

ஆதித்ய வர்மனோ முத்துப் பற்கள் மின்ன புன்னகையில் ஜொலித்தான்.

அந்தக் குட்டி நீச்சல் குளத்திற்குள் அமைந்த சறுக்கினில் மேலிருந்து கீழாக சறுக்கிய மகனை, தன் கையினில் தாங்கி மிதந்தாள் மதுரவர்ஷினி.

செயற்கையாய் எழுந்த அலையில் மூழ்கி மூழ்கி எழுந்தனர்.

இவர்கள் இருவரின் ஜலக்ரீடையை ரசித்தபடி ஒதுங்கி நின்றான் சித்தார்த்.

அப்போது அங்கு வந்த அதே நண்பர் பட்டாளத்தில் ஒருவன் மதுரவர்ஷினியை தன் அலைபேசியில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.

சீற்றம் கொண்ட சித்தார்த், அவனை கன்னம் கன்னமாக அறைந்து , அவனுடைய அலைபேசியை அடித்து உடைத்து தூர எறிந்தான்.

இவர்களது கைகலப்பில் சிறிய கூட்டம் கூடியது. அடி வாங்கியவனுடைய நண்பர்கள் சேர்ந்து கொண்டு சித்தார்த்தை தாக்க முற்பட்டபோது, அனைவரையும் வெளுத்து வாங்கி விட்டான்.

ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த மதுரவர்ஷினி முதலில் அசால்டாக பார்வையிட்டாள். கூட்டமாகச் சேர்ந்து சித்தார்த்தை தாக்க முற்பட்டதும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து ஆதித்தை தூக்கிக்கொண்டு, சித்தார்த்தை நோக்கி வந்தாள்.

அதற்குள் பாதுகாப்புக் குழுவினர் வந்து அனைவரையும் ஒதுக்கிவிட்டனர். அடிபட்டவனோ மதுரவர்ஷினியை மேலிருந்து கீழாக மோசமான பார்வையால் பார்க்க, அவனின் பார்வையில் அருவருப்பு மிக சித்தார்த் வர்மனின் பின்னே தன்னிச்சையாக தன்னை மறைத்துக் கொண்டாள்.

அவளது மனம் அவளையே அறியாமல் சித்தார்த்தை ஒரு பாதுகாப்பு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது.

கூட்டம் கலையும் போது வன்மத்துடன் மதுரவர்ஷினியையே பார்த்துக்கொண்டு வெளியேறினான் அவன்.

“ மிஸ்டர் சித்தார்த் உங்களால் தான் இவ்வளவு பிரச்சனை. நீங்கள் அவனை அடித்ததால்தான் அவன் என்னை முறைக்கிறான். உங்களால் என் கடந்த காலம் மட்டும் அல்லாமல் நிகழ்காலமும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது” என்று சீறினாள் மதுரவர்ஷினி.

அவளிடம் உண்மையை கூறாமல் கை முஷ்டியை இறுக்கியபடி தன் கோபத்தை அடக்கிக் கொண்டான் சித்தார்த்.

அந்த நாளின் இனிமை முற்றிலுமாக மடிந்து விட, கீழே குனிந்து ஆதித்ய வர்மனனின் கன்னங்களில் முத்தங்களை வாரி இறைத்தவள் கண்ணீர் மல்க அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள்.

ஆதித்திய வர்மனோ மதுரவர்ஷினியிடம் ஓடிச்சென்று அவள் கால்களை கட்டிக்கொண்டு, அவனை தூக்குமாறு கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“ சித்தார்த் செய்த பிழைக்கு குழந்தை என்ன பாவம் செய்தது?” மனதின் கேள்வியோடு மறுக ஆரம்பித்தாள் மதுரவர்ஷினி.

பாசத்தின் உலையில் இறுதியாக உருக ஆரம்பித்தாள். கைகளும் அவளை அறியாமல் ஆதித்திய வர்மனை தூக்கிக் கொண்டது.

நனைந்த உடைகளை மாற்றுவதற்காக உடைமாற்றும் அறைக்குள் சென்று, உடை மாற்றி விட்டு வெளியே வந்தனர்.
மனம் கனத்து கிடந்தவள், ஆதித்ய வர்மனை ஊஞ்சலில் அமர வைத்து மெதுவாக ஆட்டி விட்டாள்.
கைகள் அதன் போக்கிற்கு ஊஞ்சலை ஆட்டி விட, அவளின் எண்ணங்களோ சிந்தனைகளின் சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது.

அவளின் உள்ளே உறங்கும் காதலை விழித்தெழச் செய்யும் வழி தெரியாது, கல் மேடையில் இறுகி அமர்ந்தபடி இருந்தான் சித்தார்த் வர்மன்.

சிந்தனை வயப்பட்டு இருந்தவனை, சித்தார்த்திடம் அடி வாங்கியவன் தன் நண்பர் கூட்டத்தோடு திடீரென்று அந்தப் பூங்காவில் உள்நுழைந்து, சித்தார்த் எதிர்பாராத சமயத்தில், அவனை இருபுறமும் அவன் நகர முடியாதபடி பிடித்துக் கொண்டு, விறுவிறுவென நடந்தனர்.

“ அப்பா.... அப்பா....” என்ற ஆதித்ய வர்மனின் குரலில் திடுக்கிட்ட மதுரவர்ஷினி, சுற்றுமுற்றும் சித்தார்த்தை தேடினாள்.

அடி வாங்கியவனின் நண்பர் கூட்டம் சித்தார்த்தை இழுத்துக்கொண்டு ஜெயின்ட் வீலில் ஏறுவது தெரிந்தது.

மது சுதாரிக்கும் முன் அந்த ஜெயிண்ட் வீல் ராட்டினமும் சுழல ஆரம்பித்தது. அது மெதுவாக உச்சியை அடைந்த நேரம், அந்த நண்பர் படை சித்தார்த் வர்மனை மேலிருந்து கீழாக தள்ளிவிட முயற்சி செய்தது.

உயிர் உறைய, மனதின் அடியில் புதைந்து இருந்த காதல் வேரிலிருந்து உயிர் பூக்கள் சடசடவென பூக்க, அந்த இடத்தில் தானும் சித்தார்த் வர்மனும் மட்டும் இருப்பது போல் உணர்ந்த மதுரவர்ஷினி, “சித்தூ..... “ என்று ஓங்கி கத்த ஆரம்பித்தாள்.

அவளது அழைப்பு காதில் விழுந்தவுடன், சித்தார்த் வர்மனின் காதல் வானில் ஆயிரம் மின்னல்கள் ஒரு சேர வெட்டியது.

காதல் மின்சாரத்தால் தாக்கப்பட்டவன், நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு கீழே விழாமல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

கலவரம் உணர்ந்து ராட்டினம் கீழே தரையைத் தொடும் நேரம், வேகம் குறைத்து நிறுத்தப்பட கீழிறங்கிய சித்தார்த் வர்மன் தாவி தேடி ஓடி வந்து மதுரவர்ஷினியை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

தன் அழுகையை பெரும் கேவலாய் வெளிப்படுத்தியவள், இனியும் தன்னை மறைக்க முடியாது என்று எண்ணி, ஆதித்திய வர்மனனை அவனது கைகளில் ஒப்படைத்து விட்டு, திரும்பிப் பாராமல் விறுவிறுவென வெளியே ஓடினாள்.

சிசிடிவி கேமராவில் பதிந்த ஆதாரத்தோடு, கலவரம் செய்தவர்களை பாதுகாப்புக் குழுவினர் பிடித்துக்கொண்டு, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தன் காதலை மதுரவர்ஷினி மீண்டும் உணரவைத்த நொடியில், ஓடும் அவளை பின் தராமல், இனி உண்மையைக் கூறி அவளை சமாதானப்படுத்தும் முடிவிற்கு வந்தான்.

ஆதித்ய வர்மனை அவர்களுடைய மகன் என்று கூறும்போது அவளிடையே ஏற்படும் அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும், கோபத்தையும் எதிர்கொள்ளத் தயாரானான்.

தன் வாழ்க்கைப் போராட்டம் ஒரு முடிவிற்கு வந்து விட்டதை எண்ணி, அவள் தன்னை மறந்து “சித்தூ... “ என்று அழைத்த நொடியை எண்ணி உள்ளம் பூரித்தான்.
உள்ளத்தின் உற்சாகம் உடல் எங்கும் பரவ, தன் மகனை காற்றில் தூக்கிப்போட்டு பிடித்தபடி, மகிழ்ந்தபடி தன் வீடு திரும்பினான்.

தன் வீட்டிற்குள் நுழைந்த மதுரவர்ஷினி, தன் மேலெழுந்த கோபத்தில், அடுத்தவள் கணவன் மீது தனக்கு எழுந்த காதலில், தன்னை வெறுத்தபடி எதிர்ப்பட்ட பொருட்களை எல்லாம் தூக்கி வீசி எறிந்தாள்.

பொருட்கள் உடையும் சத்தத்தில் வெளியே வந்தார் சிவானந்தன். “மது இதெல்லாம் என்ன? “ என்றார் பதட்டத்துடன்.
மதுரவர்ஷினியின் இப்படி ஒரு ஆங்காரமான முகத்தை பார்த்திடாத அவள் தந்தை, தன் மகள் தன்னை ஒதுக்கினாலும், மதிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை என்று அவளிடையே தன் கேள்வியை எழுப்பினார்.

தன் சீற்றமான கண்களையே அவருக்கு பதிலாக கொடுத்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

தனிமையில் இருக்க இருக்க தனக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் இருப்பதை உணர்ந்த அவள் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கிளம்பினாள்.

அவளது உள்ளம் அவளை எகத்தாளமாக, ஏளனமாக கேலி செய்து சிரித்தது. “அடுத்தவள் கணவனை விரும்பும் உன்னுடைய பெயர் என்ன?.... ஹா... ஹா...” என்று கிண்டல் செய்தது.

தன் பணி நேரத்தை முடித்துவிட்டு வெளியே வந்த கார்முகில், மதுரவர்ஷினியின் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டு, “ மது.... என்ன இல்லை இல்லை என்று கூறிக்கொண்டே செல்கிறாய்? ஆர் யூ ஓகே?“ என்றபடி மதுவை மேலிருந்து கீழாக ஆராய்ச்சி செய்தாள்.

வெகுவாக முயன்று வரவழைத்த புன்னகையுடன், “நத்திங்.... “ என்று கூறிக்கொண்டே விறுவிறுவென உள்ளே நுழைந்தாள் .

தன் இருக்கையில் அமர்ந்தவள், தன் கைப்பையில் எப்பொழுதும் வைத்திருக்கும் தன் தாயின் உருவப்படத்தை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டாள்.

“ அம்மா.... நீங்கள் பெற்ற மகள் ஒரு மோசமான பெண்ணா? அடுத்தவள் கணவனுக்கு ஆசைப்படும் அசிங்கமான பிறவியா? சித்தார்த்தின் மேல் எனக்கு ஏற்படும் உணர்ச்சியின் பெயர் காதலா? கருமமா?

பெண்ணாய் பிறந்த என் உணர்வுகளை புரிந்து கொள்ள, நீங்கள் இல்லாமல் என்னை தனியே தவிக்க விட்டுச் சென்று விட்டீர்களே!

தாயாய் தந்தை வளர்த்தும் என்ன புண்ணியம்? என் மனம் யாருக்கும் புரியவில்லையே?

என் காதல்தான் மரித்தது என்றால், நான் ஈன்ற குழந்தையும் என்னை விட்டு போய்விட்டதே..

சித்தார்த்தின் குழந்தை மீது எனக்கு ஏன் இவ்வளவு பாசம் ஏற்பட வேண்டும்?

இத்தனை வருடம் சித்தார்த் வர்மனை வெறுத்த என் உள்ளம், அவனைக் கண்டதும் நேசம் கொள்ளுதே.... என்னைக் கொல்லுதே...

நான் காதல் புரிந்தது மட்டுமே பிழை என்றால், எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

அனைவரின் குற்றச்சாட்டிற்கும் பதில் சொல்லலாம். என் மனம் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையே...

ஐயோ அம்மா.... என் நெஞ்சம் பதறுகிறதே... இனியும் இந்த இழிநிலையை என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது.

என்னை உங்களோடு அழைத்துக் கொள்ளுங்கள் அம்மா. பழி சுமப்பதற்கு பதிலாக உயிரைத் துறந்து விடலாம்” என்று ஊமையாய் அழுதது அவள் உள்ளம்.

புகைப்படத்தில் இருந்த அவளது தாயோ அவளைப் பார்த்து, இனி உன் கஷ்டங்கள் முடிவுக்கு வந்தது என்பதுபோல் புன்னகை புரிந்தார்.

அப்பொழுது மதுரவர்ஷினியின் அறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது.
உள்ளே நுழைந்த செவிலியர், “ மேடம்... ஒரு அவசர கேஸ்... ஆக்சிடென்ட்... முக்கியமான அறுவை சிகிச்சையில் பல டாக்டர்கள் இணைந்து இருப்பதால், உங்களால் பார்க்க முடியுமா? என்று டீன் கேட்கச் சொன்னார் “ என்றார்.

உயிரைக் காப்பாற்றும் வேகத்தோடு, செவிலியர் பின்னே சென்றாள்.
அங்கோ ஆதித்திய வர்மனின் கேர் டேக்கர், “டாக்டர் டாக்டர் என் கணவரை காப்பாற்றுங்கள் ப்ளீஸ்... “ என்று கதறி அழுதாள்.

கணவன் என்றதும் சித்தார்த்க்கு என்னமோ ஏதோ, என்று நினைத்தவள், ஸ்ட்ரெச்சரின் அருகே விரைந்து வந்து, முகத்தினை பார்க்க அது வேறு ஒரு ஆணின் முகமாக இருந்தது.

யோசனையுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து, “இவரா உங்கள் கணவர்? “ என்றாள் சந்தேகமாக.
தன் கணவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, டாக்டர் கேட்கும் இந்த கேள்விக்கு கோபமாக பதிலளிக்க ஆரம்பித்தாள் அந்த கேர் டேக்கர்.

“ஆமாம்.... “ என்று பேச ஆரம்பித்தவள், அங்கே டாக்டராக இருந்த மதுரவர்ஷினியைப் பார்த்தாள்.

‘ மேடம் என்னை நினைவிருக்கிறதா? நான்தான் ஆதித்திய வர்மனின் கேர் டேக்கர். மேடம் ப்ளீஸ் மேடம் என் கணவரை காப்பாற்றிக் கொடுங்கள்” என்று மதுரவர்ஷினியின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க விண்ணப்பம் வைத்தாள்.

அவளின் தோளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்தியவளின் முகத்தில் யோசனைகள் படர்ந்தது.

மின்னல் வெட்டும்....
 
Last edited:

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
ஒரு வழியாக பல்ப் எரிந்திருக்குமே.
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
அவர் ஊட்டி விடும்போது அழுதார் ல... கஷ்டமா போச்சு... 🥺🥺

அழாதீங்க மது... அவர் உங்க சித்தூ தான்... ❤

உண்மை தெரிய ஆரம்பிக்குது.... ❤

நைஸ் எபி dr... 💞
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
தன் காதல் வெளிப்பட்ட நேரம், அவள் அறியா உண்மைகளும் வெளிப்படும் காலமும் சேர்ந்தே வந்து விட்டதே 😃😃😃
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Interesting
 
Top