• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 25

தன் வீட்டின் ஹாலில் அமர்ந்து, செய்தித்தாள்களை நிதானமாக படித்துக்கொண்டிருந்தார் சிவானந்தன்.

சில வருடங்களாகச் சோர்ந்து போயிருந்த அவரது முகம், மகள் காட்டிய பரிவால் புத்துணர்வு கொண்டிருந்தது.

பசித்தவனுக்கு பழைய சோறும் தேவாமிர்தம் தானே. காலையில் மகள் கையால் உணவு பரிமாற, நெடு வருடங்கள் கழித்து உண்ட சுகம் அவரது மனதை மகிழ்ச்சியில் வைத்திருந்தது.

புகைப்படமாய் இருந்த தன் மனைவியைப் பார்த்து, “ என் மகள் என்னுடன் பேசி விட்டாள். என் அன்பின் பிழையை புரிந்து கொண்டாள்.

புதிதாய் பிறந்தது போல் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது” என்று அளவளாவினார்.

அந்த மகிழ்ச்சியின் தாக்கத்தில், நாளிதழின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தவரின் முன் நிழலாடியது.

நிமிர்ந்து பார்த்தவரின் முன் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தாள் மதுரவர்ஷினி.

மருத்துவமனை கிளம்பியவள் விரைவாக வீடு திரும்பியதைக் கண்டு திகைத்தவர், பின் உதட்டில் புன்னகை தவழ, “என்னடாம்மா?” என்றார்.

“ அப்பா உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்., ம்... சீக்கிரம் “ என்று அவசரப்படுத்தினாள்.

“ சரிடா... “ என்று கூறியவர் கண்களை சட்டென்று மூடிக்கொண்டார்.

சோபாவில் அமர்ந்திருந்த அவரின் மடியில் மெத்தென்ற ஒரு பூங்கொத்து விழுந்ததை உணர்ந்து, அதிர்ந்து கண் திறக்க முயன்றார்.

“ அப்பா.... நோ..நீங்கள் கண்களைத் திறக்கக்கூடாது” என்று அவசரமாகக் கத்தினாள் மதுரவர்ஷினி.

மகளின் விளையாட்டில் மனம் குதூகலித்தது சிவானந்தத்திற்கு.

“ சரிடா... நான் கண்ணைத் திறக்கவில்லை “ என்றார் உற்சாகமாக.

“ அப்பா உங்கள் மடியில் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்” என்றாள் சவாலாக.

தன் விரல்களால் மடியில் அமர்ந்திருந்த அந்தப் பூங்கொத்தை தடவி ஆராய்ந்து பார்த்தார்.


அவரின் தடவலில், கூச்சம் மிக அந்தப் பூங்கொத்து வளைந்து நெளிந்தது.
மதுரவர்ஷினி தன் உதட்டின் மீது விரலை வைத்து சிரிக்கக் கூடாது என்று சமிக்கை செய்ய, அந்தப் பூங்கொத்தும் அதே போல் தன் விரலை உதட்டில் வைத்து தலையை ஆட்டி ஆட்டி மதுரவர்ஷினி போல் செய்கை செய்து சரி என்றது.

பூங்கொத்தின் செய்கையில் பொங்கி எழுந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டாள் மதுரவர்ஷினி.

சிறு குழந்தை ஒன்று தன் மடியில் அமர்ந்திருக்க, யோசனையுடன் முகத்தை சுருக்கியவர், தன் வீட்டிற்கு மதுரவர்ஷினியுடன் அன்று வந்த குழந்தையின் நினைவில்,
“இந்தக் குழந்தை..... அன்று....” என்றார் கண்கள் மூடியவாறே.

“ ஆதி குட்டி. உன் தாத்தா உன்னை சரியாகக் கண்டுபிடித்து விட்டார் “ என்று கைதட்டி சிரித்த மதுரவர்ஷினியைப் பார்த்து ஆதித்ய வர்மனும் கைதட்டிச் சிரித்தான்.

தாத்தா என்ற விளிப்பில் தன் இதயம் அதிர சட்டென்று கண்திறந்து பார்த்தார் சிவானந்தன்.

தன் மடியில் உரிமையாக அமர்ந்திருந்த ஆதித்திய வர்மனை கூர்ந்து பார்த்தார். அவனின் முகமே கூறியது அவன் சித்தார்த் வர்மன், மதுரவர்ஷினியின் மகனென்று.

பாசப்போராட்டம் பயமாய் மாறி, பந்தாய் உருமாறி அவர் தொண்டைக் குழியை அடைக்க, இதயம் படபடவென அடித்து நெற்றியில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது.

பரிதாபமாக தன் மகளைப் பார்க்க, ஆதித்ய வர்மனுக்கும் தன் தந்தைக்கும் வித்தியாசம் இல்லாதது போலிருந்தது மதுரவர்ஷினிக்கு.


உணர்வுகளைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவள், ஆதித்ய வர்மனைப் பார்த்து,”ஆதித், இவர் யார்? “ என்றாள் தன் தந்தையைப் பார்த்தவாரே.

ஆதித்திய வர்மனோ, துள்ளிக்கொண்டு, “தாத்....தா.....“ என்றான் மழலை மொழியில்.

“ யாருடைய தாத்தா? “ என்றாள்.

“ ஆதி குட்டி தாத்..தா “ என்றான் பால் பற்களைக் காட்டி சிரித்தவாறு.

“ தாத்தா பெயர் என்ன? “ என்றாள்.

“சிவு தா... த்... தா... “ என்றான் அழுத்தம் திருத்தமாக.

மனம் எங்கும் மத்தாப்பூ பூக்க, தன்னை உரிமை பாராட்டும் தன் பேரன் மீது, ஆசையும், ஆர்வமும் பெருக, கண்கள் கலங்க ஆதித்திய வர்மனைப் பார்த்தார்.

தன் தாத்தா கண் கலங்குவதைக் கண்ட ஆதித், தன் பிஞ்சுக் கரங்களால் அவர் கண்களைத் துடைத்துக் கொண்டே, “போச்சூ ...” என்றான்.

அதற்கு மேல் தாங்கமுடியாதவர் தன் பேரனை வாரி எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

“ தங்கமே உன்னை நினைத்தா நான் பயந்தேன்... இந்த முட்டாள் தாத்தாவை மன்னிப்பாயா? “ என்றார் குரல் தழுதழுக்க.

முட்டாள் என்ற அவரது வார்த்தையை முட்டு என்று நினைத்துக் கொண்ட ஆதித்திய வர்மன், தன் குட்டி தலையால் தன் தாத்தாவின் தலையை முட்டினான் வேகமாக.

திடீரென ஏற்பட்ட தாக்குதலில் “ஸ்.. ஆ... “ என்றார்.

“தா.. த்... தா. “ என்ற ஆதித், தான் முட்டிய இடத்தில் முத்த மழை பொழிந்தான்.

சிறுவயதில் தன் மகள் அளித்த முத்தம் போல் தித்தித்தது சிவானந்தத்திற்கு.

கண்களை சுகமாய் மூடி ரசித்தார். தன் முட்டாள்தனத்தால் தான் இழந்த சொர்க்கத்தை எண்ணி வருந்தினார்.

தன் பேரனை மார்போடு சாய்த்துக் கொண்டு அவன் தலை மீது தன் தலையை வைத்துக் கொண்டு, நெஞ்சம் விம்மினார்.

தன் மகனையும் தந்தையையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், நீண்ட பெருமூச்சுடன் ஆனந்தப் புன்னகை பூத்தாள்.

தன் தந்தையை நெருங்கி அவர் தோளோடு தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.

தன் இரு கரங்களாலும் இருவரையும் அணைத்துக்கொண்ட சிவானந்தன், “ ரொம்ப தேங்க்ஸ்டா மது குட்டி “ என்றார் நிறைவாக.

மதுரவர்ஷினி, தன் தாத்தாவின் தோளில் சாய்ந்ததும், “ம்... மா... நீ..... போ... “ என்று அவளை விரட்டினான் ஆதித்.

புரியாது விழித்தவன், “ஏன்டா ஆதித்? “ என்றாள் கேள்வியாக.

“ இது... ஆதி குட்டி தாத்தா... “ என்று கூறிக்கொண்டே தன் பிஞ்சுக் கரங்களால் அவரை முழுவதுமாக அணைத்துக் கொள்ள முயன்றான்.

தன் பேரனும் தன்னைப் போல் இருப்பதைக் கண்டு, முதலில் திருதிருவென விழித்தவர், பின் தன் மீசையை முறுக்கிக்கொண்டு,
“ உருவம் உன் அப்பாவைப் போல் இருந்தாலும், குணத்தில் நீ தாத்தா தான்டா... “ என்றார் சத்தமாக சிரித்தபடி.

“ அப்பா.... “ என்று சிணுங்கிக் கொண்டு சலுகை கொண்டாடினாள் மதுரவர்ஷினி.

தன் தாத்தா மீசையை முறுக்குவதைக் கண்ட ஆதித்திய வர்மன், தன் கைகளை உதட்டின் அருகே கொண்டு சென்று மீசையை முறுக்குவது போல் செய்கை செய்தான்.

அவனது செல்லக் குறும்பில் இருவரும் ஆனந்தமாய் சிரித்தனர்.
மதிய உணவு வேளையில், மதுரவர்ஷினி தன் தந்தைக்கு பரிமாற, தன் கரங்களால் தன் தாத்தாவிற்கு உணவை ஊட்டினான் ஆதித்.

தன் வயதினை மறந்து சிவானந்தன் யானையாக மாறி தரையில் முட்டிபோட்டு தவழ, ஆதித்திய வர்மனோ அவர் முதுகின் மீது ஏறி இளவரசன் போல் பவனி வந்தான்.

ஒரே நாளில் தன்னுள் வந்த மாற்றத்தை எண்ணி ஆனந்தப்படுவதா? அல்லது இத்தனை நாள் வராததை எண்ணி துக்கப்படுவதா? என்று உருகினார் சிவானந்தன்.

ஆதித்திய வர்மனுக்கு தன் இனிய குரலில் பாட்டுப்பாடி, கதைகள் கூறி, அவனோடு விளையாடி, பாச மழையில் நனையச் செய்தாள்.

சித்தார்த் வரும் நேரத்தை கணக்கிட்டு, கௌசிக்கின் வீட்டில் ஆதித்ய வர்மனை விட்டு விட்டு வந்தாள் மதுரவர்ஷினி.

மருத்துவமனையில் இருந்து கிளம்பிய சித்தார்த், கௌசிக்கின் வீட்டிலிருந்து தன் மகனை அழைத்துக்கொண்டு தன் வீடு திரும்பினான்.

வரும் வழி எங்கும் அமைதியாகவே இருந்த தன் மகனைக் கண்டு சிந்தனை வயப்பட்டான்.

“ஆதி குட்டியை யாரும் திட்டிட்டாங்களா?” என்றான் காரை ஓட்டிக் கொண்டே மகனை பார்த்தவாறு.

இல்லை என்பது போல் அந்த சின்னச் சிட்டு தன் தலையை மறுத்து அசைத்தது.

“ பிறகு ஏன் குட்டிமா அப்பாவிடம் எதுவும் பேசாமல் சைலன்ட்டா வரீங்க? “ என்றான் வாஞ்சையாக.

“ அப்பா அம்மாகிட்ட போலாம் வா...” என்றான்.

“அம்மாவா?.... அம்மா ஊருக்கு போய் இருக்கா. அம்மா வந்தவுடன் அப்பா உன்னை கூட்டி செல்கிறேன் “ என்றான்.

“ அப்பா சும்மா சொல்ற.சாமி.... கண் குத்தும்..” என்றான் முறைப்பாக.

“ அட பயலே. இத்தனை நாள் அம்மாவை தேடாதவன் இன்று ஏன் அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கிறாய்?

கண்டிப்பாக நாளை அம்மாவைப் பார்க்கச் செல்லலாம் “ என்றான் வாக்குக் கொடுத்தபடி.

“நோ... இப்ப அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்... “ என்று கெஞ்ச ஆரம்பித்தான் தன் தந்தையிடம்.

“நோ பேபி... “ என்று தன்மையாகவே மறுத்தான் சித்தார்த்.

அம்மா மந்திரம் நன்றாக வேலை செய்ய, அம்மா வேண்டும் அம்மா வேண்டும் என்று காரிலேயே குதிக்க ஆரம்பித்தான் ஆதித்ய வர்மன்.

“ எனக்கும் உன் அம்மா வேண்டுமடா... அவளிடம் உண்மையை கூற தக்க நேரம் வராமல் நானே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

அனைவர் முன்னிலையிலும் என்னை பாடாய் படுத்தி எடுக்கிறாள் உன் அம்மா.

அவளின் உள்நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

அவளின் காதலைக் கண்டு கொண்டேன். என் காதலை புரிய வைக்கத்தான் நேரம் வரவில்லை.
இதில் நீ வேறு பாடாய் படுத்துகிறாய் கண்ணா” என்று தன் மனதோடு உரையாடினான் சித்தார்த்.

தாயாய் மதுரவர்ஷினி பொழிந்த அன்பில் நனைந்த ஆதித்ய வர்மனுக்கு தன் தாயின் நினைப்பாகவே இருந்தது.
தன் மனதின் ஏக்கங்களை சொல்லத் தெரியாமலும் புரிய வைக்க முடியாமலும் தவித்த அந்த சின்ன மொட்டு, அம்மா வேண்டும் என்ற நினைப்பில் அழுக ஆரம்பித்தது.

மகனின் அழுகையை காணச் சகியாமல், காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான்.

மகனைத் தூக்கிக் கொண்டு காரில் இருந்து இறங்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டு அவனை அமைதிப்படுத்த முயன்றான்.

ஆதித்தோ அவனின் சொல்லுக்கு கட்டுப்படாமல் முரண்டு பிடித்தான். மகனின் புது அவதாரத்தில் திகைத்து முழிக்க ஆரம்பித்தான் சித்தார்த்.

சாலையில் வருவோரும் போவோரும் வித்தியாசமாக இந்த காட்சிகளைப் பார்க்க, மகனை சமாதானப்படுத்தும் வழி தெரியாது நின்றான்.
சிறுபிள்ளைத்தனம் முரட்டுத்தனமாக மாற, அவனை அடிப்பதற்கு தன் கையை உயர்த்தினான்.

அந்த வலிய கரத்தை பூங்கரமொன்று தடுத்துப் பிடித்தது.

அவன் எண்ணத்தின் நாயகி மதுரவர்ஷினிதான் அவனைத் தடுத்து இருந்தாள் .

தன் மைவிழியால் சித்தார்த் வர்மனை முறைத்துப் பார்த்தாள்.
திகைத்து நின்றவனின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவன் கையிலிருந்த ஆதித்ய வர்மனை தன் கைக்குள் கொண்டு வந்தாள்.

தன் தாயைக் கண்டதும் அவனும் “ம்.. மா... “ என்று கூவி, தாவி ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

அழுகையினால் ஏங்கியவனை, தட்டிக் கொடுத்து சமாதானம் செய்து தன் தோள் மீது உறங்க வைத்தாள்.

“ என்ன சித்தார்த்? ஆதி குட்டியின் அம்மா வரவில்லையா? “ என்றாள் கிண்டலாக.

நேற்று முழுவதும் தன்னை மருத்துவமனையில் பாடாய்படுத்தியவளைப் பார்த்து,”ஆங்.... அவன் அம்மா அடுத்த பிரசவத்திற்கு அவளுடைய தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறாள்” என்று பதிலடி கொடுத்தான் படு நக்கலாக.

“ அப்போ உங்க வீட்டில யாரும் இல்லையா? சூப்பர். நான் வேண்டுமானால் உங்களுக்கு கம்பெனி கொடுக்கவா? “ என்றாள் ஆர்வம் போல்.

“ மது உன்னை ஏன் நீயே தரம் தாழ்த்திக் கொள்கிறாய்? என் மது இப்படி எல்லாம் பேச மாட்டாளே... “ என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

“ எனக்குக் கல்யாணமும் நடக்கவில்லை. நான் கன்னியும் இல்லை.
அப்போ நான் இப்படித்தானே பேசவேண்டும் சித்து டார்லிங்.. “ என்றாள் கேள்வியாக.

“ அது உன் பிழை மட்டும் அல்ல என்று நான் கூறி விட்டேனே...

மேலும் அது பிழையே அல்ல” என்றான் அவளை சமாதானப் படுத்தும் நோக்குடன்.

“ அப்போ என் மீது தவறு இல்லை என்றால்,
உங்கள் மனைவி இருக்க, என்னை நாடி வந்து, சீண்டி விட்ட உங்கள் செயலின் பெயர் என்ன?

இந்த மதுரவர்ஷினி உங்களுடன் படுக்கையை பகிர மட்டும்தான் என்று நினைத்து விட்டீர்களா?

காதலுக்காக என் உடலை கொடுத்ததால் என்னை உடலை விற்கும் வே... ”

“நிறுத்து. மதுரவர்ஷினி. உண்மை தெரியாமல் பேசுகிறாய் என்று பார்த்தால் வாய்க்கு வந்தபடி ஏதேதோ உளறிக் கொண்டே போகிறாய்.

சொல்லுடி.... உன் மனதில் என்ன காயம்? உன்னையே மேலும் மேலும் காயப்படுத்திக் கொள்கிறாய் வார்த்தைகளால்.எதற்காக இந்த வலி? உன்னுடைய சித்தார்த்திடம் கூறு மதுரவர்ஷினி” என்று கெஞ்சினான்.

“ காயமா?....? வலியா....? எனக்கா...?
நம்முடைய உறவுக்குப் பெயரென்ன சித்தூ? “ என்றாள் உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன்.

அவளது நேரடி கேள்வியில் பதில் கூற முடியாமல், அவளை சமாதானப் படுத்தும் முறை தெரியாமல் விழித்து நின்றவனின் கைகளில் ஆதித்ய வர்மனை கொடுத்து விட்டு நகர்ந்தாள்.

“ உன்னை படுத்த வேண்டிய பாடுகள் இன்னும் நிறையவே இருக்கின்றன சித்து டார்லிங்.

அதற்குள் என்னிடம் உன்னை உண்மையை கூற விட்டு விடுவேனா?
தாயிடமிருந்து பிள்ளையை பிரித்து சென்றாய் அல்லவா? அனுபவி ராஜா அனுபவி” என்று மனதிற்குள் அவனுக்கு வசை மழை பொழிந்தாள்.

அவனுடைய காரை பின்தொடர்ந்து வந்தவள், அவன் சாலையில் இறங்கியதும், கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள்.

இனி தன் மகனையும், சித்தார்த்தையும் பிரிந்து அதிக நாட்கள் இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டாள்.

கொடுக்க வேண்டிய தண்டனைகளை சீக்கிரம் கொடுத்துவிட்டு தன்னவனோடு சேரும் அந்த நாளுக்காக அவளும் ஏங்கித்தான் போனாள்.

விடியற்காலையில் சித்தார்த்தின் அலைபேசியில் வரிசையாக குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்க, அதன் சப்தத்தில் தூக்கம் தொலைத்து, அந்த செய்தியைப் பார்த்தவனின் முகம் பல பாவனைகளைக் காட்டி இறுதியாக அதிர்ச்சியை தத்தெடுத்தது.

மின்னல் வெட்டும்...











 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,988
கதை முடியும்போது 🤣🤣🤣
அடிக்க கட்டை தூக்கக்கூடாது தோழி 😍😍
Why கட்டை 🤔🤔🤔🤔🤔அப்படின்னா writer ஏதோ ஏடா கூடமா சொல்லப்போறாங்களோ 😀😀😀😀😀😀😀😀🏏🏑🏒
இந்த மூணுல ஒன்னு உங்கள் உங்கள் உங்கள் சாய்ஸ் சகி 😜😜😜😜😜😜😜😜
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
Why கட்டை 🤔🤔🤔🤔🤔அப்படின்னா writer ஏதோ ஏடா கூடமா சொல்லப்போறாங்களோ 😀😀😀😀😀😀😀😀🏏🏑🏒
இந்த மூணுல ஒன்னு உங்கள் உங்கள் உங்கள் சாய்ஸ் சகி 😜😜😜😜😜😜😜😜
சாய்ஸ் காட்டி சாய்த்துப் போட்டீர்களே நட்பே 🤣🤣🤣🤣
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
சீண்டல்கள் அதிகமாக உள்ளதே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பாவம் வர்மா 😔😔😔 மது கொஞ்சம் தயவு பாராட்டலாமே 🥺🥺🥺
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Sema super mass
 
Top