• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 1

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
பெருமழை விட்டுத் தூறல்களால் வானம் சாமரம் வீசியபடி இருந்தது. ஒரு பழைய வீட்டின் முதல் மாடியில் இரு சகோதரர்கள் அதைப் பார்த்தவாறு மது அருந்திக் கொண்டிருந்தனர்.

“ஹாஃப் அன் ஹவர் முன்னாடி மழ வெளுத்து வாங்கிட்டு இருந்துச்சு. இப்போ பாத்தியா ஸ்கை எவ்ளோ தெளிவா இருக்குனு”

“ஆமாமா”

“அவ்ளோ பெரிய வானம் கூட சட்டுனு மாறிடுது. நீ ஏன்டா மாறவே மாட்டேங்குற?”

“நான் மாறலைனு சொல்றியா? எவ்ளோ தான் மாறணும்?”

“நீ ஒரு கல்யாணம் பண்ணனும். அப்போ தான் மாறிட்டனு ஒத்துப்பேன்”

“உன் சேட்டிஸ்ஃபேக்ஷனுக்கு நான் கல்யாணம் பண்ண முடியாது”

“எனக்காக வேணாம்; அம்மாவோட திருப்திக்காகப் பண்ணிக்க. பாவம்டா அவங்க. உனக்கு நல்லது நடக்கணும்னு கோவில் கோவிலா அலைஞ்சுட்டு இருக்காங்க”

“வேணும்னா, நீயே இன்னொரு கல்யாணம் பண்ணிக்க. அம்மாவோட ஆசைய நிறைவேத்த ஒரே வழி அதான்”

“டேய் தம்பி...” என்றவாறு பிரபாகரன் அவனிடம் சமாதானம் பேசப் போக

“வேணாம், ஆரம்பிக்காத. ஏறுன போதைலாம் இறங்கிடும் போலருக்கு” என்றவனோ தமையனின் கையை விலக்கிவிட்டு அறைக்குள் நுழைந்தான்

இது இன்று நேற்று வந்த பிரச்சனை இல்லை; எட்டு வருடங்களாக நடக்கும் ஓயாத வாதம். இதனை இன்றே தீர்த்துவிடும் வேகத்தில் பிரபாகரன் இருந்தான். கையில் இருந்த விஸ்கியை மொத்தமாக வாயில் கவிழ்த்துக் கொண்டு தன்னிடம் இருந்து நழுவிச் செல்பவனைப் பின்தொடர்ந்தான்.

“விக்ரம், எனஃப்டா... இன்னும் எத்தன நாளைக்கு? ஜஸ்ட், மூவ் ஆன்...”

“ஜஸ்ட் லைக் தட்? எப்பவாது லவ் பண்ணிருக்கியா, பிரபா? அண்ணி வர்றதுக்கு முன்ன..”

“ம்ம்ம், பண்ணிருக்கனே”

“எப்போ?”

“எய்ட்த் படிக்கும்போது”

“எது? ஒரே ஒரு நாள் நீயும் அந்தப் பொண்ணும் தெரியாத்தனமா மேல மேல மோதிக்கிட்டீங்க; அதுவா லவ்வு? உன் பப்பி லவ்வ பத்தி நான் கேக்கலப்பா. உன்னையே மறக்கடிக்குற லவ்... ரியல், மெட்சூர் லவ்... அப்டி ஒரு லவ் உனக்கிருந்து, அத நீ மறந்துருந்தீன்னா, இதெல்லாம் பேசலாம்”

“ஏ...”

“உனக்கு என் வலி புரியாதுடா. விட்டுடு”

“வேற யாரயாவது லவ் பண்ணித் தொலைக்கலாம்ல. ஆஃபிஸ்ல யாரும் கிடைக்கலயா உனக்கு?”

“இல்ல... எந்தப் பொண்ணயும் பாக்கக் கூடத் தோணல. லவ் ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல; நெனச்ச நேரத்துல வர்றதுக்கு. அன்டர்ஸ்டேன்ட் மீ”

“சரிடா... அதுக்காக? கடைசி வர இப்டியே இருக்கப் போறியா? யு வான்ட் எ பார்ட்னர். நானோ அம்மாவோ அப்பாவோ கூட, கடைசி வரைக்கும் உனக்குத் துணையா இருக்க முடியாது. வொஃய்ப் தான் எப்பவும் எல்லாத்துலயும் கூட வருவா. புரியுதா?”

“ம்ம் ம்ம்ம்”

“ம்ம்ன்னா?”

“என்ன இப்போ? மேரேஜ் பண்ணணுமா?”

“ஆமா”

“பண்ணிக்குறேன்”

“நிஜமாவா?” என்று கேட்டு ஆனந்தத்தில் அவனை அணைத்துக் கொண்டான் பிரபாகரன்

“பட், கன்டிஷன்ஸ் இருக்கு”

“சொல்லு. நானே உனக்கேத்தப் பொண்ணா தேடிக் கண்டுபிடிக்குறேன்”

“படிச்சுருக்கணும், இன்டிபென்டன்ட்டா இருக்கணும்”

“நைஸ்...”

“மேரேஜ் ஆகி அட்லீஸ்ட் ஒரு ஃபைவ் சிக்ஸ் மந்த்ஸ் வரைக்கும் நான் கூட வரணும், ஒன்னா இருக்கணும், ஊர் சுத்தணும், ஹனிமூன் போகணும், ப்ளா ப்ளான்னு எதையும் அவ எதிர்பாக்கக் கூடாது”

“ஏன்டா?”

“எல்லாம் அப்படித்தான். அன்ட்... எடுத்தவுடனே ஜெனிஃபரப் பத்திச் சொல்லிட்டுத் தான் அடுத்த பேச்சே”

“டேய்... இதெல்லாம் உனக்கே...”

“பொறு. என் பாஸ்ட் லைஃப ஜஸ்ட் லைக் தட் அக்செப்ட் பண்ற பொண்ணு வந்தா தான, நானும் ஜஸ்ட் அப்டியே... ஜெனிய மறந்துட்டுப் புது வாழ்க்கைய ஆரம்பிக்க முடியும்”

“எந்தப் பொண்ணுடா இதெல்லாம் அக்செப்ட் பண்ணுவா?”

“என்னால உண்மைய மறைச்சுப் பொய்யா வாழ முடியாது, ணா”

“ரொம்ப கஷ்டம்டா”

“அப்டி ஒரு பொண்ணு கிடைச்சா சொல்லு. உடனே மேரேஜ் தான். என்ன, ஓகே தான?”

“நல்லா செக்மேட் வச்சிட்ட. இதுக்கு நீ எப்பவும் போல கல்யாணம் வேணாம்னே சொல்லிருக்கலாம். விக்ரம்... கல்யாணப் பேச்சுப் பிடிக்கலங்கறதுக்காக நீ ஊருக்கே வர மாட்ற. அம்மா உன்னை நினைச்சு நிம்மதியா தூங்கக் கூட மாட்றாங்கடா”

“ஹே... நான் தான் சொல்றேன்ல... சிக்ஸ் இயர்ஸா சென்னைல தான இருந்தேன். எதுக்காக டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு இங்க வந்தேன்? திங்க் அபௌட் இட். மேரேஜ் பண்ணுற ஐடியா இருக்குத் தான். அதுக்காக, இன்னொரு பொண்ணு வாழ்க்கையக் கெடுக்க முடியாது. என்னோட பாஸ்ட் கூடத் தெரியலைனா, எப்டி நாங்க ஃப்யூச்சர லீட் பண்றது? உங்களுக்காக நான் இவ்ளோ தூரம் இறங்கி வந்துருக்கேன். இன்னும் என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

“சரி, விக்ரம். நீ சொன்னத மைன்ட்ல வச்சுக்குறேன்”

“அன்ட், அம்மா கிட்ட கல்யாணத்துக்குச் சம்மதம்னு மட்டும் சொல்லு. மத்தது எதுவும் தெரிய வேணாம்”

“நீயே அவங்கள்ட்டப் பேசுறது?”

“அவங்க தான கல்யாணம் பண்ற வரைக்கும் மூஞ்சுலயே முழிக்காதன்னு சொன்னாங்க. இருக்கட்டும்”

“இருந்தாலும் இவ்ளோ கோவம் ஆகாதுடா...”

“எல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று விக்ரம் கையை உயர்த்த

“மூடணும், அவ்ளோ தான. மூடிக்கிறேன்” என வாயைப் பொத்திக் கொண்டான் பிரபாகரன்

“நைட் இங்கயே தூங்கிக்க. போதை தெளிஞ்சதும் டிரைவ் பண்ணி வீட்டுக்குப் போ” என்றவன் அத்துடன் மதுவாடை தெரியக் கூடாது என்று பல் தேய்த்துவிட்டு வேலைக்குச் செல்லத் தயாரானான்

“அப்றம் நான் குடிச்சதப் பத்தி சுப்ரதா கிட்ட...”

“அண்ணிட்டச் சொல்லக் கூடாது. அத்தான... எப்பவும் பொய்யு, பித்தலாட்டம்” என்றபடி விக்ரம் தலைக் கவசத்தைத் தூக்கிக் கொண்டு சகோதரனிடம் போக

“உன் நேர்மை, நியாயம்லாம் ரியல் லைஃபுக்கு ஒத்து வராதுடா. போ... போ..” என்று அவனைத் தள்ளினான் பிரபாகரன்

வெளியில் புன்னகையைக் காட்டியபடி கீழே சென்ற விக்ரம் தலைக் கவசத்தை அணிந்து வண்டியை முறுக்கினான். தனிமை வந்ததும் பழைய நினைவுகள் அதிவேகமாய் வந்து அவனை ஒட்டிக் கொண்டன. செல்லரித்தத் தாளாகிப் போன அவனுடைய மனம் இப்போது முகத்திலும் பிரதிபலித்தது.

சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு முன்...

பசுமைமிகு கோவையில் அமைந்திருந்த சி. ஐ. டி. கல்லூரியின் வாயிலில் நுழைந்த விக்ரம் வந்ததும் வராததுமாய் மூத்த மாணவர்களால் ஓரங்கட்டப்பட்டான். அந்த மரத்தடியில் ஏற்கனவே சில புது மாணாக்கர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் பெட்டியில் அடைபட்ட பாம்பினைப் போல் சீனியர்களின் சொற்படி ஆடிக் கொண்டிருந்தனர்.

விக்ரமைப் பார்த்து “உன்னைப் பத்தி சொல்றா, தம்பி” என்று ஒருவன் அதட்டலாய் ஆரம்பிக்க

பதிலுக்கு இவன் “பேரு விக்ரம். ஊரு மலம்புழா, பாலக்காடு பக்கம். மை மதர் இஸ் ஃப்ரம் தேனி. ஸோ, தமிழ் நல்லாவே தெரியும்” என்று கூறினான்

“நல்லதா போச்சு. வா, இவங்களோட வந்து நில்லு” என்று அவன் காதைக் குடைந்தபடி திமிருடன் கூற

அவர்களைப் பார்வையால் அலசிய விக்ரம் “என்ன பாஸ், ரேகிங்கா? இன்னும் காலேஜ் ஃபீ கூட கட்டல. எடுத்துட்டு வந்த திங்க்ஸ ஹாஸ்டல்லயாச்சும் வைக்க விடுங்க. இதெல்லாம் ஹாஸ்டல்ல தானப் பண்ணுவீங்க. இப்படி பட்டப் பகல்ல, மொட்ட வெயில்ல...” என்று அளவளாவினான்

“தம்பி, நீ லேட் கம்மர் தான. மொத நாளே அட்மிஷன் போட்ருந்தா, ஹாஸ்டலோட முடிஞ்சுருக்கும். லேட்டா வந்தா இப்படித் தான். தப்பிச்சுரலாம்னு பாத்தியோ?” என்று மற்றவன் எகிற

இலகுவாய் “ச்ச்ச ச்ச்ச” என்றபடி சுமந்து வந்த பைகளைக் கீழே கிடத்தினான் இவன்

“ஃபர்ஸ்ட் நீ உத்தி போடு. ரெடியா, ஒன், டூ...” என ஒரு மூத்த மாணவி எண்ணிக்கையைத் தொடங்க இவனும் தனது உயரத்தில் பாதியளவு அமர்ந்தமர்ந்து எழுந்தான்

இதில் இடைப்புகுந்த வேறொருவன் “இது பத்தலயே. ஏம்மா, இங்க வா. ரெண்டு பேரும் ஒருத்தரோட காத இன்னொருத்தர் பிடிச்ச மேனிக்கு உத்திப் போடுங்க” என்று அங்கிருந்த புது மாணவியை அழைத்துக் கட்டளையிட்டான்

விக்ரம் சுற்றி முற்றிப் பார்க்க “ஸ்டாஃப் யாரும் இந்தப் பக்கமே வர மாட்டாங்க. நாங்கச் சொல்றத நீ செஞ்சு தான் ஆகணும். ம்ம்ம், ஆரம்பி” என யோசிக்க இடமில்லாமல் அழுத்தம் தந்திட்டான் அவன்

தயக்கத்துடன் விக்ரம் நின்றிருக்க எதிரே இருந்த பெண் புறா அவளாய் இவனது காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுமாறு உந்தினாள்

அச்செயல் இவனுக்குச் சங்கடத்தையும் பரவசத்தையும் ஒரு சேர ஏற்படுத்த அதற்குள் மற்றொருவன் “சரி, போதும்... அப்படியே இந்த கிரௌண்டப் பத்து சுத்து ஓடிட்டு வாங்க. ரெண்டு பேரும் ஆப்போசிட் ஆப்போசிட்ல ஓடணும். முக்கியமா, ரிவர்ஸ்ல ஓடணும். ஓகேவா? ஸ்டார்ட்...” என்று அடுத்ததாய் ஏவினான்

அதில் எதிராளியின் முகம் மேலும் வாடிப் போக, விக்ரம் ஆடாமல் அசையாமல் நின்றான்

“என்ன, பாத்துட்டே நிக்குறீங்க? காலேஜ்ல லேட்டா ஜாயின்ட் பண்ணதுக்கு இத்தான் பனிஷ்மன்ட். ஓடு, ஓடு...” என்று அவன் விரலை ஆட்டினான்

இப்போது விக்ரம் “ஆக்சுவலி...” என்று வாயைத் திறக்க

மூத்த மாணவி முந்திக் கொண்டு “என்ன, நீ கேரளாலருந்து வர; இவளும் கேரளா. ரெண்டு பேரயும் நாங்க, தமிழ் ஆளுங்க ரேக் பண்ணா ஏத்துக்குட மாட்டீங்களோ. ஓக்கேப்பா, உங்க கேரளா சீனியர்ஸயே வரச் சொல்றோம்” என்றவாறு பக்கத்து மரத்தடியில் இருந்தவர்களைக் கையசைத்து அழைத்தாள்

அவர்கள் அருகே வரவும் இவன் “அதில்ல... ஆக்சுவலா, நான் சி. எஸ். இ...” என்றிட

அங்கு வந்து நின்ற கேரளத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவன் “டேய், நானும் சி. எஸ். இ., செகன்ட் இயர்; உன் டிபார்ட்மென்ட் தான். நோ இஸ்யூஸ், ரைட்? பின்னே, இங்க தமிழ்நாடு, கேரளாலாம் அடுத்த டாபிக். பேசிக்கலி சீனியர்ஸ் ஃபர்ஸ்ட், அப்றந்தான் ஜீனியர்ஸ். கேட்டோ?” என்று கீச்சுக் குரலில் முறைத்தவாறு பேசினான்

“சில், சில்... நீங்களாம் செகன்ட் இயர் தான?”

“யா, அஃப்கோர்ஸ்... ஸோ வாட்?”

“நானும் செகன்ட் இயர் தான்”

“ஆன்?!!!”

“அல்ரெடி, டிப்ளமோ டூ இயர்ஸ் கம்ப்ளீடட்; கவர்மென்ட் பாலிடெக்னிக் காலேஜ், பாலக்காட். இங்க டைரெக்ட்டா செகன்ட் இயர் ஜாயின்ட் பண்ண வந்துருக்கேன். என்னை ரேக் பண்ண தேர்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ தான் நீங்க வரச் சொல்லணும். ஆல்ரைட்?” என்றான் அகன்ற புன்னகையுடன்

அதைக் கேட்டு அடித்து நொறுக்கப்பட்ட அப்பளத்தைப் போல அதிர்ச்சி அடைந்தவர்கள் “சாரி, சாரி... தெரியாம இவங்களோட உன்னைச் சேத்துட்டோம். ஃபிரெஷர்னு தப்பா நினைச்சுட்டோம். ரியலி சாரி” என்று தங்களது இயல்பைப் பக்குவமாக மாற்றிக் கொண்டனர்

“இட்’ஸ் ஓகே, யார்... ஃப்ரம் டுடே ஆன்வார்ட்ஸ் வி ஆர் ஃப்ரண்ட்ஸ். ஈவ்னிங் மீட் பண்ணலாம், கைய்ஸ். பை...” என்று கூறிய விக்ரம் தோளில் பையை மாட்டிக் கொண்டு கிளம்ப, எதிரில் இருந்த பைங்கிளியின் முகத்தில் அவனைப் பற்றிய வியப்பு நீங்கி அச்சம் மீண்டும் தொற்றிக் கொண்டது

அதை ஓரக்கண்ணில் கவனித்தவன் ஒரு விநாடி நின்று “இந்த ஜூனியர்ஸ் கூட்டத்துலயே இவ மட்டுந்தான் பொண்ணு. பாவம், விட்ருங்க” என அவளுக்காய்ப் பரிந்து பேசினான்

அவனது தோழமையானப் பேச்சினில் அவர்களும் இளகி அவளைப் போகட்டும் என விடுவித்து அனுப்பினர்

பிறகு, அவள் அவனது வழியிலேயே அடிக்கு அடி பின்தொடர்ந்து வர “வேற எதும் பிராப்ளமா?” என்று விக்ரம் வினவினான்

“நோ... நாட் அட் ஆல்... ஜஸ்ட் வான்டட் டு டாக் வித் யூ. ஐ ஆம் ஜெனிஃபர் லாரன்ஸ்; ஃப்ரம் த்ருவேன்ட்ரம்; ஃப்ரெஷ்ஷர், ஈ. சி. இ. டிபார்ட்மெண்ட்” என்றவள் பளிங்கு நிற வலக்கரத்தை நீட்டினாள்

அக்கையில் ஊஞ்சலாடிய வளையலின் நீண்டு தொங்கும் கற்கள் வரை கவனித்தவன் “அதொன்னும் கொழப்பமில்லா. யூ ஆர் வெல்கம்” என்று கூறி கைக்குலுக்க மறுதலித்தான்

அவனின் மறுப்பில் அதிசயித்தவளின் மையிட்ட விழிகள் இரண்டும் கவினுற விரிவடைந்தன. அவற்றில் வீழ்ந்து எழுந்த விக்ரம், ஒரே பார்வையில் அவளிடத்தில் ஈர்க்கப்பட்டவனாய், ஓர் அழகிய புன்னகையுடன் நடையைக் கட்டினான்.

முதல் காதல் என்றும் மாளாது!