• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 10

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
"இருங்க, நான் சொல்றேன். பையன் ஐ. டி. ல வேலை பாக்குறாப்புல. சேலரி இன்னைய தேதிக்கு ஐம்பதுலருந்து அறுவது வாங்குறாரு. சம்பளக் காசுல அவரு என்ன பண்றாருனு நாங்க கேட்டுக்கறதில்ல. அதே போல தான், பொண்ணு சம்பாதிக்கறதுலயும் தலயிட்டுக்க மாட்டோம். எங்களுக்கு நெலபுலன் கெடயாது. ரெண்டு பசங்களும் புள்ள குட்டியோட வாழுற அளவுக்குப் பெரிய வீடு இருக்கு. பக்கமாவே, இன்னொரு வீடு கட்டுற அளவு இடம் கிடக்கு. தேவப்பட்டா வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம். இப்போ வரைக்கும் கூட்டா தான் இருக்கோம். எங்களோட சேந்து இருக்குறதும் தனிக்குடித்தனம் போறதும் இவங்க இஷ்டம். நாங்க இதைத்தான் பண்ணணும்னு கட்டாயப்படுத்த மாட்டோம். ரெண்டு பேரோட சந்தோஷந்தான் எங்களுக்கு முக்கியம்" என்று கிரிஜா உடைத்துப் பேச, சமையல் அறையில் இருந்து காதாரக் கேட்டுக் கொண்டாள் பத்மப்பிரியா

அந்தக் கணமே எதிர்கால மாமியாரின் மீது அவளுக்கு ஒரு பிடித்தம் ஏற்பட்டுவிட்டது

"நாங்களும் அப்படித் தான் பாத்துக்கங்க. எங்க மூத்தப் பொண்ணுக்குக் கல்யாணம் முடிஞ்சு, நாலு வயசுலப் பேத்தி இருக்கா. இளையவ இருந்துட்டு மேலப் படிக்கணும்னா; அப்றம் வேலைக்குப் போறேன்னு சொன்னா; நாங்க தடுக்கல. அவ இஷ்டத்துக்கே விட்டுட்டோம்" என்று மங்கை தற்பெருமையோடு சொன்னார்

கிரிஜா "இதுல என்ன தப்பிருக்கு? வரவு செலவுக்குப் புருஷனயே நம்பிட்டு இருக்காம, பொண்ணுங்க இப்டித்தான் சுயமா இருக்கணும். வேலைக்குப் போறது நல்லது தான்" என்று நேர்மறையாகவே ஆமோதித்தார்

"பொண்ணப் பாக்கலாங்களா? இல்ல, நிச்சயம் பண்ணப்பறந்தான் காட்டுவீங்களா?" என சுப்ரதா ஆர்வமாகக் கேட்டிட, சுந்தரம் மனையாளிடம் கண்ணைக் காட்டினார்

உடனடியாக மங்கை "பத்மா... பத்மா..." என்று மேலறையை நோக்கி அழைத்தார்

அந்நேரத்தில் திடீரெனக் கால்கள் இரண்டும் விலங்கிடப்பட்டவளைப் போல அதே இடத்தில் உறைந்துவிட்டாள் ப்ரியா. அத்தனைப் பேரின் மத்தியில் செல்ல ஒருவித அச்சமும் கூச்சமுமாக உணர்ந்தாள். அவளை அழைக்க உறவினப் பெண்கள் இருவர் மேலே சென்றனர். மங்கை காபி மற்றும் பலகாரங்களை எடுப்பதற்காக சமையற்கட்டில் நுழைந்தார்.

மகள் இங்கே நிற்பதைக் கண்டுவிட்டு "எப்போடி கீழ இறங்கி வந்த? இவ்ளோ நேரமா இங்கத் தான் இருந்தியா? உன்னைக் கூப்ட்றாங்க பாரு. இந்தக் காப்பியப் புடி. போ" என்று கூறிட்டார்

ப்ரியா சங்கடத்துடன் நெளியத் தொடங்க, மங்கை உறவினப் பெண்களை அழைத்து அவர்களிடம் காபித் தட்டையும் பலகாரங்களையும் தந்து அனுப்பினார். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்ப்பதில் மிகுந்த நாட்டமாய் இருந்தனர். தவிர, அவள் வரும்வரை அங்குப் பரிமாறப்பட்ட இனிப்பு, கார வகைகளை அவர்கள் கண்கொண்டு பார்ப்பதாக இல்லை.

"இப்போ தான் மொத தடவ உன்னப் பொண்ணு பாக்க வராகளா. எதுக்குச் சிலை மாரி நின்னுட்டு இருக்குறவ? போடி, ஒன்னையப் பாக்கத் தான் ஒக்காந்துருக்காக"

"நான் வர்ல. நீயே போ" என்று கைவிரல்கள் பத்தையும் பிசைந்து கொண்டே அவள் சொல்ல

அதில் மனம் பதைத்த மங்கை "எப்பவும் போல உன் வேலையக் காட்டிட்டல்ல. ஏன்டி... இந்த மாப்பிள்ளயயும் உனக்குப் பிடிக்கலயா? இது தெரிஞ்சா உங்கப்பா மனசயே விட்ருவாரு. நீ தானடி வரச் சொன்னவ" என்று கிசுகிசுத்தார்

"இப்போ நான் பிடிக்கலன்னு என் வாயாலச் சொன்னனா" என்று வினவியவள் கூடுதலாக முறைத்து வைத்தாள்

புன்னகையுடன் "பின்ன, என்ன அம்முணி; வெக்கமா? அட, வாங்க. அம்மாவும் கூட வாரேன்" என்ற மங்கை அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றார்

கடைசியாக, பத்மா இந்தளவு வெட்கப்பட்டது பருவமடைந்த போதாகத் தான் இருக்கும். அந்தத் தயக்கம் இந்த வயதில் மீண்டும் ஏன் வருகிறது என்பதை அவளாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. பதற்ற உணர்வில் யாரையும் நேராகக் கூட பாராமல் தந்தையின் பின்னால் சென்று அமர்ந்து கொண்டாள். அவளைக் கண்டதும் மாப்பிள்ளை வீட்டினர் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள, குனிந்த தலையை நிமிர்த்த அவள் துணியவில்லை.

"என்னமா படிச்சிருக்க?" என்று இந்திரஜித் வினவ

"பி. எஸ்சி., எம். எஸ்சி. கெமிஸ்ட்ரி" என்று அவள் சன்னமான குரலில் பதிலளித்தாள்

அவள் சொன்னது எதிரில் இருந்தவர்களின் செவிகளைச் சென்றடையவில்லை

இதை விநாடியில் புரிந்து கொண்ட பத்மா, குரலை உயர்த்தி "கெமிஸ்ட்ரி படிச்சுட்டு, துடியலூர்ல லேப் டெக்னீஷியனா இருக்கேன்" என்று சொல்லிட்டாள்

"பொண்ணுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா?" என்று உறவினர் ஒருவர் கேட்டிட

"கொஞ்சந்தெரியும்" என்றாள் இவள்

"கொஞ்சம்னா, சுடுதண்ணி வைப்பீகளோ..." என்று மற்றொருவர் வினவ

கிரிஜா சாதுர்யமாக "பொறுமையா கத்துக்கட்டும், அண்ணே. என்ன அவசரம்? நீ கவலப்படாதமா. என் பையனே சமைச்சுடுவான். அவன்கிட்டருந்தே நீ கத்துக்கலாம்" என்று கூறி அப்படியே அமர்த்தினார்

அதைக் கேட்டு மெல்ல முகம் உயர்த்தியவள் கிரிஜாவையும் சுப்ரதாவையும் பார்த்துச் சிறிதாகப் புன்னகை பூத்தாள்

சுந்தரம் பக்கமிருந்த பெரியவர் "மத்தத நாமப் பேசிப்போம். மாப்பிள்ளயும் பொண்ணும் தனியா பேசிட்டு வரட்டும்" என எடுத்துரைத்தார்

"எதுக்கு, மாமா? நாமளே பேசி முடிவெடுத்துக்கலாம்" என்று சுந்தரம் கூற

"ஏனப்பா, உன் பொண்ணு இன்னும் பையன் முகத்த ஏறெடுத்தே பாக்கல. அப்டி ஒரு பத்து நிமிஷம் போய்ட்டு வரட்டுமே. அப்புறமா விருப்பத்தக் கேட்டுத் தட்ட மாத்திக்கலாம்" என அந்த மூத்தவர் முடிவாகச் சொன்னார்

விக்ரம் முன்வந்து "இல்ல, வே..." என்று மறுக்க முயன்றான்

உடனே, பிரபாகரன் "போய்ட்டு வாடா. கூச்சப்படாத" எனக் கூறி அவனைப் போகுமாறு மறைமுகமாக வலியுறுத்தினான்

தரை விரிப்பில் இருந்து விக்ரம் எழுந்து கொள்ள, மகளிடம் "போம்மா. பெரியவங்க சொல்றாங்கள்ல. நட" என்று சொன்னார் சுந்தரம்

அவர்களுக்கு இடையே வந்த மங்கை "இந்தத் தம்பியவும் கூட்டிட்டுப் போங்க" என்று சொல்லி பிரக்ஷித்தை உடன் அனுப்பினார்

அச்சிறுவனை அழைத்துக் கொண்டு பத்மா முன்னே செல்ல, விக்ரம் பின்தொடர்ந்தான்

"மாடிக்குப் போவோமா?" என்று அவள் கேட்க இவன் சம்மதித்தான்

அவ்வாறு போகும்போது மேலே ஏறுபவளை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தான். பட்டினால் ஆன பச்சை வண்ணக் குர்தாவை அவள் அணிந்திருந்தாள். உச்சியில் முடியிடப்பட்டு ரோஜா மலர்கள் வைக்கப்பட்டிருந்த கூந்தலில் இருந்து வாசம் வீசியது. கழுத்து, கரங்கள், காதுகளைத் தங்கம் அலங்கரித்திருந்தது. திரும்பியபோது செவியோரம் முடியை ஒதுக்கிய விரல்கள் மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தன. அடர்நிறம் அல்லாத சிவப்புச் சாயம் உதடுகளைத் தழுவியிருந்தது. உடலழகு தெரியா வகையில் ஆடையைத் தளர்வாக உடுத்தியிருந்தாள். முகம் பேருக்கு ஏற்றார் போல் தாமரையாய் மலர்ந்திருந்தது.

மாடியை அடைந்த பின் சற்றே குனிந்து "தம்பிக்குப் பேரென்ன?" என்று கேட்டாள் பத்மா

"கேக்குறாங்கள்ல, சொல்லு" என விக்ரம் கூறிட

எங்கேயோ பார்த்தபடி "பிரக்ஷித்" என்றான் அவன்

அவள் புன்னகையோடு "வாவ், உங்கள மாதிரியே பேரும் சூப்பரா இருக்கு" என்றிட, வெட்கப் புன்னகையுடன் பிரக்ஷித் மாடியின் மறுமுனைக்கு ஓடிவிட்டான்

அவனின் செய்கைக்கு "புது ஆளுங்களப் பாத்தா அவன் அப்டித்தான்" என விக்ரம் காரணம் சொன்னான்

பின்னர் அவள் அவனிடம் கேட்க நினைத்ததை மனம் விட்டுக் கேட்டாள்

"விருப்பப்பட்டுத் தான் வந்தீங்களா?"

"இல்லாமலா, இத்தனப் பேரக் கூட்டி வந்தேன்?"

"நிஜமாவே பிடிச்சுருக்கா?"

"சொல்லியே ஆகணுமா?"

"ம்ம்ம்"

"இப்பவே சொல்லணுமா?"

"தெரிஞ்சா சந்தோஷப்படுவேன்"

"ஓ. கே. எனக்கு..." என்று அவன் ஏதோ சொல்ல வரவும்

இவள் "கடவுளே..." என நெற்றியில் கை வைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது

"என்னாச்சு?" என்று வினவியவன் இவளது கண்கள் போன திசையில் பார்வையைத் திருப்பினான்

கீழே மோகன் வந்து கொண்டிருக்க, இவள் அவசரமாக "நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?" என்று வினவினாள்

"ம்ம்ம், சொல்லு"

"இப்போ வரப் போறவரு, என் அக்காவோட ஹஸ்பன்ட். பாக்குறதுக்கு டீசன்ட்டா தான் இருப்பாரு. ஆனா, ஆள் சரியில்லாதவரு. அவரு சொல்றது எதயும் நம்பிடாதீங்க. ஓப்பனா சொல்லணும்னா, அவரு பேசுறதக் காதுலயே வாங்கிக்காதீங்க. ப்ளீஸ்..."

இவளின் கோரிக்கையை விக்ரமால் சட்டெனப் புரிந்துகொள்ள முடியவில்லை

அவன் குழப்பத்தில் இருந்து மீள்வதற்குள்ளாக "ப்ரியாமா, இங்கத் தான் இருக்கியா?" என இவளைத் தேடிக் கொண்டு வந்துவிட்டான் மோகன்

விக்ரமை மேலிருந்து கீழாகப் பார்த்தவன் "நீங்க மாப்பிள்ளைங்களா? நான் இந்த வீட்டோட மூத்த மாப்புள. ரெண்டு பேரும் பேசி முடிச்சாச்சா? மேல வந்து எவ்வளோ நேரமாச்சு?" என்று கேள்விகளை வீசினான்

"வந்து ரெண்டு நிமிஷம் கூட ஆகல. அதுக்குள்ள நந்தி மாதிரி" என இவள் எரிச்சலுடன் முணுமுணுத்தாள்

"என்ன, ப்ரியாமா? காதுல விழல"

"நீங்க வந்தது அந்த ஈஸ்வரனே நேர்ல வந்த மாதிரி இருக்கு, மாமா. அதான் சொன்னேன். வேற ஒன்னுமில்ல"

"உனக்கு நான் ஒரு கெடுதலும் நடக்க விட மாட்டேன். மாமா எப்படிப்பட்ட மாப்பிள்ளயப் பாத்து வச்சுருக்காருன்னு தெரிஞ்சுக்கத் தான சென்னைலருந்து ஓடி வந்துருக்கேன்" எனக் கூறி வெளிவேடம் போட்டான் மோகன்

இவளோ 'முருகா, என் வாழ்க்கைல ஒரு நல்ல காரியமாவது நடக்காதா? என்னைக் காப்பாத்திக் கரை சேத்துடுடா, மயில்வாகனா...' என்று உள்ளுக்குள் வேண்டுதல் விடுத்தாள்

அந்நேரம் சுப்ரதாவும் கிரிஜாவும் படியேறி வருவதைக் கண்டவள் "அய்யோ, ஆன்ட்டி ஏன் இவ்ளோ மெனக்கெடுறீங்க? சொல்லிருந்தா நானே கீழ வந்துருப்பனே" என்று படபடத்தாள்

"பாத்து, நடக்கவே சிரமப்படுறாப்புல தெரியுதே" என்றபடி அவரின் தோளை ஆதரவாகப் பிடித்தாள்

"அது ஒன்னுமில்லமா. கால்ல சின்ன இடஞ்சல். உன்னோடத் தனியா பேசணும்னு வந்தேன்" என்றார் கிரிஜா

சுப்ரதா பையில் இருந்த மல்லிகைச் சரத்தை எடுக்க "ஏற்கனவே, வச்சிருக்கேன். இதுக்கு மேல என் முடி தாங்காது" என்று ப்ரியா சொல்லிட்டாள்

அவளோ "வேணாம்னு சொல்லக் கூடாது" என்று சொல்லித் தலையில் பூவை வைத்து நழுவாதவாறு செருகினாள்

கிரிஜா "என் பையனப் பிடிச்சுருக்காமா?" என்று தாடையைப் பிடித்து வாஞ்சையாகக் கேட்டார்

"ம்ம்ம், அவங்களோட விருப்பம் என்னனு தெர்ல" என்று இவள் தயக்கத்துடன் பேச

"சின்னவரப் பத்தி எனக்குத் தெரியும். அவரு ஒரு தடவ வாக்குக் குடுத்துட்டார்னா மாறவே மாட்டாரு. ரொம்ப வருஷமா கல்யாணமே வேணான்னு இருந்தவரு, உங்க ஃபோட்டோவப் பாத்ததும் மனசு மாறிட்டாருன்னு என் அத்தான் சொன்னாங்கா. நீங்க பிடிச்சிருக்குன்னு சொல்லியாச்சு. உங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கிட்டா போதும்" என்று சுப்ரதா கூறிட்டாள்

அங்கு வந்த பிரக்ஷித் "அம்மா, இவங்க யாரு?" என வினவிட்டான்

பதிலுக்கு "விக்ரம் அப்பாவக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க" என்றாள் சுப்ரதா

"ஓ... நான் எப்படிக் கூப்புட்றது?"

"ப்ரியா சித்தினு கூப்புடு" என்று பத்மா கூறிட

அவள் "ப்ரியா அம்மானு கூப்புடு, குட்டா" எனத் திருத்தினாள்

"ப்ரியாம்மா" என்று அவன் கன்னத்தில் குழிகள் விழும் சிரிப்போடு அழைக்க, பத்மாவின் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது

நெஞ்சில் சில் சில்!