• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 14

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
“ஜெனி, ஒரு நிமிஷம். உன் கிட்டப் பேசணும்”

“வாட்?”

“நின்னா தான பேசுறதுக்கு...”

“என்னனு சொல்லு. ஐ டோன்ட் ஹேவ் டைம்”

“உன்னால ஒன் மினிட் நிக்க முடியாதா? நான் அந்தளவு முக்கியம் இல்லாமப் போய்ட்டனா?”

“என்ன, விக்ரம்... ஒன்ன மாரி எனக்கும் வேல வெட்டி இல்லன்னு நினச்சியா? ஐ ஹேவ் வொர்க் டு டூ. எனக்குன்னு ஆம்பிஷன்ஸ் இருக்கு. உன்னப் போல சும்மா சுத்தல”

“நான் சும்மா தான் சுத்துறேன். ஆனா, உனக்காக மட்டுமே இந்த காலேஜயே சுத்தி வரேன். அது உனக்குத் தெரியலயா?”

“ஏன் தெரியல? க்ளியரா தெரியுது. நாட் ஒன்லி மைசெல்ஃப்; ஜூனியர்ஸ், சீனியர்ஸ், ஸ்டாஃப் மெம்பர்ஸ்னு எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சு; நீ என் பின்னாலத் தான் சுத்துறன்னு. அதுல நீ ரொம்பவே ஹேப்பி போல... உன் கூட படிச்சவங்களாம் ஜாப்க்கு போய் இயர்ன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. வாட் ஆர் யூ டூயிங்? அரியர் க்ளியர் பண்ணத் துப்பில்லாம இங்கயே கிடக்க. உன்னோட சேந்தா என் ஃப்யூச்சரும்ல வேஸ்ட்டா போய்டும்”

“உன்னை விட்டு என்னாலப் போக முடியல, ஜெனி. உன்னப் பாக்காம, உன் கூட பேசாம என்னாலப் பிரிஞ்சு இருக்க முடியாது. அதுக்காக வேணும்னே தான் ஒரு பேப்பர் அரியர் வச்சேன்; நினைச்சதும் சட்டனா க்ளியர் பண்ண முடியல; கொஞ்சம் காம்ப்ளிகேட்டடா இருக்கு. அதுக்காக எப்பவுமே என்னால முடியாதுன்னு அர்த்தம் இல்ல. நான் பாஸ் ஆகுறதுக்கு உன் சப்போர்ட் இருந்தாலே போதும். இப்டி ஹார்ஷா பேசுறத நிறுத்து. யூ ஆர் ஹர்ட்டிங் மீ”

“உன்னோடய இன்கேப்பபிளிட்டிக்கு என்னை ரீசனா சொல்லாத. உன்னைத் திட்டாம... நீ இப்போ இருக்குற லட்சணத்துக்கு ஊட்டில ரூம் போட்டுக் கொஞ்சுவாங்களா? ஏதோ ஃபைனல் செமஸ்டர் முடிக்கப் போறியே; ரொம்ப நாள் பாக்க முடியாமப் போய்டுமேனு ஃபீல் பண்ணித் தான் உன்னோட அன்னைக்கு வந்தேன். இட் வாஸ் ஜஸ்ட் எ கைன்ட் ஆஃப் ஃபேர்வெல் திங். இப்பயும் அத்தான நீ எக்ஸ்பெக்ட் பண்ற?”

“தேவ இல்லாமப் பேசாத. முன்ன மாரி என் கூட ஃபோன்ல பேசுறது இல்லயே. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு நேர்ல வந்தேன். உன் பிரச்சனை என்னனு நல்லாவே புரிஞ்சுடுச்சு. நாம லவ் பண்றோங்குறது வெளியத் தெரிஞ்சதும் உனக்கு அசிங்கமா இருக்குல்ல”

“ஆமா... நீ உருப்படியா பாஸ் பண்ணி, கேம்பஸ்ல ப்ளேஸ் ஆயிருந்தா பெருமை பட்ருப்பேன்; நாலு பேர்ட்ட நானே சொல்லிருப்பேன். இந்த கன்டிஷன்ல என்னால வெளியச் சொல்ல முடியல. நீ இப்டித் தண்டமா இருக்குறது எனக்கு அசிங்கந்தான்”

“ஜெனி, போதும். இந்தளவு என்ன யாரும் கேவலப்படுத்துனது இல்ல. இப்ப என்னடி உனக்கு? நான் வேலைக்குப் போகணும் அவ்ளோ தான. எப்புடியாவது அரியர் க்ளியர் பண்ணி, சீக்ரமே வொர்க்கத் தேடிக்குறேன். அப்றம் பழயபடி என்ட்டப் பேசுவல்ல. வேற எந்த ப்ராப்ளமும் இல்லயே”

“ஃபர்ஸ்ட் நீ வேலைக்குப் போ. அப்றம் வந்து பேசு. சொன்னத மட்டும் செஞ்சுட்ட, உன் கூடவே எங்க வேணாலும் வரேன். உனக்கிது எனஃபா? பட்... அதுவர, என் மூஞ்சுல முழிக்காத. கால் பண்ணாத. பின்னாடியே சுத்தி சுத்தி வராத. மத்தவங்க முன்னாடி எம்பாரஸ் பண்ணாத. பை”

அன்றே அவளையும் அந்தக் காதலையும் விட்டுத் தொலைத்திருந்தால் பிற்பாடு உண்டான பலவிதச் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். விதியின் வலிமையால் காதலை நம்பிப் போனவன், அதே காதலால் ஏமாற்றப்பட்டான். காதலை மறக்க முடியாமல் வருடக் கணக்காகத் திண்டாடி இருக்கிறான். காதலியை மறந்து திருமண பந்தத்தில் நுழையப் போகிற இந்த நல்வேளையில் எங்குச் சென்றானோ தெரியவில்லை. அவனைக் காணாமல் அவனது தந்தையும் தமையனும் ஓரிடத்தில் நில்லாமல் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

“சிநேகிதங்க அத்தனைப் பேரும் எங்கப் போயிருப்பானுங்க, பிரபா? அவனுங்களுக்கு ஃபோன் போட்டுப் பாத்தியாப்பா?”

“ஃப்ரெண்ட்ஸலாம் நம்ம வீட்டுலயே விட்டுட்டு ராமும் விக்ரமும் மட்டும் கார்ல வந்ததா சொல்றாங்க, ப்பா. கேரளாலருந்து இயர்லி மார்னிங்கே கிளம்பிட்டாங்களாம்”

“அப்டினா, இந்நேரத்துக்கு இங்க ரீச் ஆய்ருக்கணும். இன்னும் வரக் காணுமே. நீ தம்பிக்கு ஃபோன் போட வேண்டியது தான”

“அவனுக்கு கால் பண்ணா திரும்ப திரும்ப ஸ்விட்ச் ஆஃப்னே வருது. அவன் ஃப்ரெண்டு நம்பருக்கு ரிங் மட்டும் போகுது; யாரும் அட்டென்ட் பண்ணல”

“இதுக்குத் தான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்; நம்ம கூடவே அவனயும் அழைச்சிட்டு வந்துரலாம்னு. பேச்சுலர் பார்ட்டி அது இதுன்னு சொல்லி, அப்பாவும் பசங்களும் சேந்து கொட்டம் அடிக்கணும்னு, ஒரே பிடிவாதம். இப்போ, எங்கக் கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க பாத்தீங்களா? நாலு பேருக்குத் தெரிஞ்சா சந்தி சிரிச்சிடும்” என்று கோபத்தில் பொங்கினார் கிரிஜா

சுப்ரதா மெல்லியக் குரலில் “அத்தை, நீங்களே மைக் போட்டு எல்லாருக்கும் சொல்லிடுவீங்கப் போலவே. எதா இருந்தாலும் சைலன்ட்டா பேசுங்க. கொழுந்தனார் எங்கயும் போய்ட மாட்டாரு; வந்துடுவாரு” எனச் சொல்லி அவரை முடிந்தமட்டும் அடக்கினாள்

இவர்கள் எவ்வளவோ அமைதியாக இருக்க முயன்றும் பத்தே நிமிடங்களில் இந்தப் பதைபதைப்பான தகவல் மணமகள் அறையை எட்டி விட்டது

“ஏன்டி, உனக்குத் தெரியுமா? கல்யாண மாப்பிள்ளை இன்னும் மண்டபத்துக்கே வரலயாமே”

விவரம் கேட்டவாறு வியர்க்க விறுவிறுக்க, பட்டுப்புடவை சரசரக்க உள்ளே வந்தாள் அக்ஷதா. அவள் வந்த நேரம் ஆடை அலங்காரத்தை முடித்து, பெண்கள் அனைவரும் அறையை விட்டு வெளியேறி இருந்தனர்.

கடைசி முறையாகத் தன்னைச் சரிபார்த்தபடி “என்ன உளர்ற? உன் புருஷன் மாரி உனக்கும் புத்தி கெட்டுப் போச்சா?” என பத்மப்பிரியா திருப்பிக் கேட்டாள்

“நிஜமா தான்டி சொல்றேன். நான் போய் விளையாடுவனா? அதும் இந்த மாரி முக்கியமான நேரத்துல”

“யார் சொன்னது உனக்கு?”

“நம்ம ஹேமா குட்டி தான்”

“ஹேமாலினி... இங்க வா, அம்மு”

ப்ரியா அன்பாக அழைக்கவும் அந்த மழலை அவளின் மடியில் போய்ப் பாங்காய் அமர்ந்து கொண்டு பேசலானாள்

“என்ன, சிச்சி?”

“நீங்க எங்கப் போனீங்க? என்ன பாத்தீங்க? என்னலாம் கேட்டுட்டு வந்தீங்க? அப்டியே சொல்லுங்க, பாப்போம்”

“நானு உங்கள... கல்யாணம் கட்டிக்கப் போத சிச்சப்பாவப் பாக்கப் போனேனா... அங்க சிச்சப்பாவே இல்ல. எங்க அவர்ருன்னு கேட்டேன்”

“யார்ட்டக் கேட்டீங்க?”

“அங்க ஒரு அண்ணா இருந்தான். அவன்... அவுங்க சொன்னாங்க... சிச்சப்பாவ ஆளே காணுமாம். எல்லாரும் தேடிட்டு இருக்காங்க. கிடைச்சா என்கிட்ட ஓடி வன்டு சொல்லுவாங்களே”

“அப்டியா? அந்த அண்ணன் பேரு என்ன, தங்கம்?”

“அண்ணா பேரு, பேரு... பிரச்சித்”

“பிரக்ஷித்தா? நீங்க இப்போ போங்க. சித்தப்பா வந்ததும் என்ட்ட வந்து சொல்லணும். சரியா?”

“ஓகே, சிச்சி”

“இப்போ என்ன பண்றது?” என்று அக்ஷதா பதட்டமாய் வினவினாள்

ப்ரியா அலைபேசியை எடுத்து விக்ரமிற்குத் தொடர்பு கொள்ள, மறுமுனை அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து ராகம் பாடியது. அடுத்த நிமிடமே ஹேமாலினியை இடையோடு இறுக்கிக் கொண்டு மங்கை படபடப்போடு வந்து நின்றார். காதால் கேட்டச் செய்தி அவரைக் கலங்கடித்து விட்டது என்பதை மார்பில் ஏறி இறங்கிய ஆரம் பறைசாற்றியது.

“மாப்பிள்ளயக் காணோமான்டி. ஒருவேள இந்தக் கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லாமக் கொள்ளாம எங்கயும் போய்ட்டாரா... சொந்த பந்தம்லாம் கூடி நிக்குதே. இப்ப இந்தக் கல்யாணத்த எப்டி நடத்த?”

“ம்மா, கூப்பாடு போட்றத நிறுத்துமா. இந்த ஹேமா குட்டி வேற வாய வச்சுட்டுச் சும்மா இல்லாம...”

“உனக்கு எங்கயாச்சும் மனசு பதைக்குதாடி? அய்யோ, உங்க அப்பாவ வேற காணலயே. அவரப் பாத்து உடனே இதச் சொல்லியாகணும்”

“நீ ஒரு அஞ்சு நிமிசம் பொறு. அப்பாட்டயும் சொல்ல வேணாம்; ஆட்டுக்குட்டிட்டயும் சொல்ல வேணாம்”

“எந்த நேரத்துலப் பொறந்தியோ? உனக்கு மட்டும் இப்டியெல்லாம் நடக்குதே...”

“இதென்ன கல்யாண வீடா? இழவு வீடா? ஏன் இப்டி ஒப்பாரி வைக்குற. மொத வாய மூடும்மா” என்ற ப்ரியா எரிச்சலோடு அலைபேசியை அழுத்தி மீண்டும் அவனுக்கு முயன்றாள்

நேற்றிரவு ஏற்றிய போதையில் தள்ளாட்டத்திற்கு உள்ளான விக்ரமின் முக்கிய நண்பர்கள் அனைவரும் ஊரிலேயே தங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். ராம்குமார், விக்ரம் இருவர் மட்டும் தெளிவாய் இருக்க மகிழுந்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். வாகனம் ஓட்டும் அவசரத்தில் ராமின் அலைபேசி எங்கு விழுந்ததோ தெரியவில்லை. அதைத் தேடுமளவு நேரமும் இல்லை. விக்ரமின் அலைபேசியோ பவர் இல்லாமல் அணைந்து இருந்தது. அதை முன்னரே கவனியாதவன் சார்ஜரும் எடுத்து வரவில்லை. தேவையான எதுவும் கையில் இல்லையே என்றெண்ணி நொந்து போனான் விக்ரம். இந்தக் கொடுமைகள் போதாவென முக்கால் வழியில் எரிவாயு முற்றிலும் தீர்ந்து வாகனம் ஒரேயடியாக நின்றுவிட்டது.

இக்கட்டான சூழல் நிலவியதால் இதைக் கூட கவனியாமல் இருந்துவிட்டான் வாகனத்தை இயக்கிய ராம். இருவருமாக அதைத் தள்ளிக் கொண்டே சென்று, சற்றே தொலைவில் அமைந்திருந்த ஒரு பங்க்கில் நிறுத்தினர். எரிவாயு நிரப்பும் போது கிடைத்த இரண்டு நிமிட இடைவெளியில் அங்கேயே சார்ஜ் ஏற்றினான் விக்ரம். அவன் அலைபேசியை உயிர்ப்பித்து சிக்னல் இணைப்புக் கிடைக்கவும் அடுத்தக் கணமே பத்மாவின் பெயர் திரையில் ஒளிர்ந்தது. அழைப்பொலி கேட்டதும் அவள் நிம்மதியடைய, பரிதவிப்போடு அழைப்பை ஏற்றான் அவன்.

“ஆன், ஹலோ... எங்க இருக்கீங்க? முகூர்த்தத்துக்கு லேட்டாகுதுல்ல”

“ஸாரி, ஸாரி... வந்துட்டே இருக்கேன்”

“இன்னும் எவ்ளோ நேரம்?”

“கிட்ட வந்தாச்சு. ஒரு டென், ட்வென்ட்டி மினிட்ஸ். எல்லாரயும் வெய்ட் பண்ணச் சொல்லு. நான் நேர்ல வந்து எக்ஸ்ப்ளெய்ன்...”

அவ்வளவே தான் அவன் பேசிய வார்த்தைகள். மறுபடியும் அலைபேசி அணைந்து போனது.

“அவரு எங்கயும் ஓடிலாம் போகல. வந்துட்டே இருக்காராம். ஸோ பொலம்பாமப் போய் ஆகுற காரியத்தப் பாருங்க. இதப் பத்தி யாரும் மூச்சே விடக் கூடாது. ஹேமா குட்டி, முக்கியமா நீ... போ, பிரக்ஷித் அண்ணாட்ட சித்தப்பா வராங்களாம்னு சொல்லிடு”

ஹேமாலினி வெளியே ஓடவும் அடுத்ததாக சுந்தரம் அங்கு வந்தார்

“உங்களுக்குலாம் காதுன்னு ஒன்னு இருக்கா, இல்லையா? ஐயர் எம்புட்டு நேரமா பொண்ணு எங்க, பொண்ணு எங்கன்னு கத்திட்டுக் கிடக்காரு. அப்டி என்ன பேச்சுவார்த்த வேண்டியிருக்கு? ஏ மங்க, மேடைக்குப் போ. இங்க என்னத்தக் கலட்டிட்டு இருக்கவ”

“இதோ போய்ட்டேங்க. போய்ட்டேன்” என்ற மங்கை அத்துடன் தப்பிச் சென்றுவிட்டார்

அடுத்தக் குறியாக சுந்தரம் “பத்மா...” என்றவாறு அவளிடம் மல்லுக்குப் போனார்

இடையில் நின்ற அக்ஷதாவோ உண்மையை விழுங்க முடியாமல் பேயைக் கண்டவள் போல் விழித்தாள்

ப்ரியா நேரத்தைக் கடத்தவென்று “அப்பா, டூ மினிட்ஸ் டைம் குடுங்கப்பா. பூ கலண்டுட்டு வராப்புல இருக்கு. அங்கை, அங்கை... முழிக்காம இதக் கொஞ்சம் சரி பண்ணி விடு. நாங்க வந்துட்றோம்பா. நீங்க முன்னாலப் போங்க” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள்

ஆரம்பமே அமர்க்களம்!