• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 15

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க பத்மா மணமேடை ஏறினாள். ஐயர் முதலாக சுந்தரம் வரையில் மாப்பிள்ளை எங்கே என ஒரு நூறு தடவை கேட்டப் பிறகே விக்ரம் வந்து சேர்ந்தான். வரும் போதே வெள்ளைச் சட்டை அணிந்திருந்தவனுக்கு வேட்டி கட்டக் கூட அவகாசம் கிட்டவில்லை. அவசர அவசரமாக அவன் மேடை ஏற, பாத பூஜையில் தொடங்கி அக்னியைச் சுற்றி வந்து திருமணச் சடங்குகளை முடித்தனர். தாலி கட்டியப் பின்னரே அவனால் வேட்டி உடுத்த முடிந்தது. பின்பு உறவினர்கள், நண்பர்கள் சகிதமாக வந்து மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களில் முக்கியமானவர்களை பத்மா அவனிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவனுடைய உறவினர்கள் ஒரு சிலர் வந்திருக்க, பதிலுக்கு அவனும் யார் என்ன முறை என அவளுக்குத் தெரியப்படுத்தினான்.

“உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் இங்க வரலயா, விக்ரம்?”

“எல்லாரும் மலம்புழா வீட்டுல இருக்காங்க. ரிசெப்ஷனுக்கு வந்துடுவாங்க. மேரேஜுக்கு கொலீக்ஸ மட்டுந்தான் இன்வைட் பண்ணேன்”

“நீங்க சி. ஐ. டி. ல தான படிச்சீங்க. உங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் ஒருத்தரயும் காணும்”

“யார் கூடயும் அவ்ளோவா டச்ல இல்ல”

அந்தப் பதிலில் இருந்து ஜெனியை நினைவுப்படுத்தும் நபர்களை அவன் முற்றிலுமாகத் தவிர்ப்பதை அவள் புரிந்து கொண்டாள். கல்லூரித் தோழர்களைப் பற்றி இனிமேல் கேட்கக் கூடாது எனவும் முடிவெடுத்தாள். விருந்தினர்கள் ஓரளவு கலைந்ததும் இருவீட்டாரும் உணவுண்டுவிட்டு மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர். சுந்தரத்தின் குல தெய்வக் கோயிலில் வழிபாடு செய்து முடித்து மாலை நேரம் போல் வீடு திரும்பினர். மாப்பிள்ளையின் உறவினர்களுக்கு வீட்டினில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர்கள் ஓய்வெடுக்கத் தென்னந்தோப்பின் இடையே ஆங்காங்கே நாற்காலிகளும் கட்டில்களும் இடப்பட்டன. அங்கேயே வந்திருப்பவர்களுக்கு இரவு விருந்தும் தயாராயிற்று.

வீட்டிற்குள் மணமகனையும் மணமகளையும் ஒன்றாக அமர வைத்து ஒருவருக்கொருவர் பாலும் பழமும் தரச் செய்தனர். விக்ரமை ப்ரியாவின் அறைக்கு அனுப்பிவிட்டு, அவளைத் தனது அறையில் இருக்கச் செய்தார் மங்கை. காலையில் தொடங்கி அணிந்திருந்த அணிகலன்களைக் கலைந்துவிட்டு அவள் குளிக்கச் சென்றாள். தங்கை குளியலறை உள்ளே போனதும் அக்ஷதா வாட்டமாய் அன்னையிடம் முறையிட்டாள்.

“நாளுக்கு நாள் அவரு பண்ற அட்டூழியம் தாங்கல, ம்மா. கல்யாணத்துக்கு அவர இழுத்துட்டு வரதுக்குள்ளப் போதும் போதும்னு ஆய்டுச்சு. இங்க வந்தும் அவ்ளோ பிரச்சனை... சின்ன மருமகனுக்கு ரெண்டு பவுனு சேத்துப் போட்டீங்களாம். அது அவருக்குப் பொறுக்கல”

“அச்சு... உங்க கல்யாணம் அப்ப உனக்கு இருவத்தஞ்சு பவுன்; உன்ற வீட்டுக்காரருக்கு எட்டுப் பவுன். தல பொங்கல், தல தீபாவளின்னு விசேஷத்தப்போ அவருக்குப் போட்டது ஒரு அஞ்சு பவுனு. வளைகாப்புக்கு உனக்குத் தங்கத்துல வளையல். காதுகுத்து வச்சப்போ மாலினிக்குத் தோடு. இதெல்லாம் போக உன்ற புருஷன இந்தக் கல்யாணத்துக்கு வர வைக்க மூணரைப் பவுன்லத் தங்கக் காப்பு. சென்னைலருந்து வரப் போறப்பலாம் காரு டேங்க்கு நொப்பப் பெட்ரோல் போட்ருக்கு. அவரு கேக்குற நேரத்துக்கு வாட்ச்சு, வேட்டி, சட்டை, பேன்ட்டுனு எடுத்துத் தந்துருக்கோம். இத்தனை செஞ்சும் அவருக்குப் போதலயா? உன் பொண்ணு வயசுக்கு வந்தா அப்போ ஒரு கற கறந்துருவாரு. அதுவரைக்கும் பொறுக்கச் சொல்லுமா. எவ்ளோ தான் செய்யிறது?”

“நானா அவர இதலாம் கேக்கச் சொல்லுறேன். அவரு இப்டிப் பேராசை புடிச்சுத் திரியறதுக்கு நான் என்னத்தப் பண்ண? நீங்க எனக்குன்னு போட்ட நகையவே லாக்கர்லப் பூட்டி பூட்டி வச்சுக்குறாரு. அதத் தொட்றதுக்குக் கூட அவுருட்ட நான் பர்மிஷன் கேக்கணும். ஏன்னு கேட்டா, எனக்குப் பொறுப்பில்லயாம்; நகையத் தொலச்சிடுவேனாம்”

“ஒரு பொண்ணக் கட்டிக் கொடுத்துட்டு இன்னைய வரைக்கும் சீர் செஞ்சே மாளல. இந்த ரெண்டாவதுகாரிக்கு என்னலாம் அனுபவிக்கப் போறேன்னு அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்”

மங்கையின் புலம்பல் வரிகளைக் காதில் வாங்கிக் கொண்டே வெளியே வந்தாள் பத்மா

“கவலப்படாத. இதச் செய், அதச் செய்யுன்னு எந்தத் தொல்லையும் பண்ண மாட்டேன்”

“நீ கேக்கலனாலும் மாப்பிள்ள வீட்டுலச் சும்மா விடணுமே”

“அதுலாம் ஒரு பிரச்சனையும் வராது. இப்போ எதுக்காக ரெண்டு பேரும் மூஞ்சத் தூக்கிட்டு இருக்கீங்க?”

பத்மாவின் வினாவுக்கு மங்கை முதன்முறையாக விடை தர முன்வந்தார்

“எல்லாம் உன் மாமன் தான். கல்யாணத்தப்போ அவருக்குப் பண்ணத விட, உன் புருஷனுக்கு ஒரு எலுமிச்சை அளவு இன்னைக்கு ஏத்திச் செஞ்சோம். வண்டி எதுவும் வேணாம்னு சொன்னாரே கொஞ்சம் கூட இருக்கட்டும்னு நினைச்சுப் போட்டோம். அதப் பாத்துட்டே இருந்து அச்சுட்ட வம்புக்குப் போயிருக்காரு”

“அந்தாளுக்கு வேற வேல இல்ல. மாசா மாசம் ஒரு மூட்ட தேங்கா கொடுத்தனுப்பறப்ப மட்டும் குதியாட்டமா இருக்கும். இந்தத் தடவயும் சென்னை போறப்போ எதயாச்சும் கொடுத்து விடுங்க; அமைதியாய்டுவாரு. ஹேமாவப் படிக்க வைக்குறதத் தவிர, எல்லா செலவயும் நம்ம தலைலயே கட்டப் பாக்குறது. என்ன தான் குடித்தனம் பண்றாரோ...”

இவ்வாறு பத்மா முகஞ்சுளிக்க மங்கையும் அக்ஷதாவும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். அவர்களின் பார்வையில் ஒரு ரகசியம் பொதிந்திருந்தது போல காணப்பட்டது. அதன்பின் அக்ஷதா தங்கைக்கு மாற்றுச் சேலை கட்ட உதவினாள். அப்போது மங்கை மண்டபத்தில் நடந்ததை ஞாபகப்படுத்திக் கேட்டார்.

“மாப்பிள்ள ஃபோன் நம்பர் உனக்கு முன்னவே தெரியுமா, பத்மா. எப்போ பேசுனீங்க? எப்டி நம்பர் வந்துச்சு?”

“அம்மா, அதான் கல்யாணமே முடிஞ்சுருச்சுல்ல. இப்போ அது ரொம்ப அவசியம் பாரு. யாரச் சந்தேகப்படணுமோ அவங்களலாம் விட்ரு. இவள மட்டும் நோண்டி நோண்டிக் கேள்வி கேட்டுட்டுருக்க”

பத்மா வாயைத் திறப்பதற்குள் அக்ஷதாவே பதில் பேசிவிட்டாள். அவள் அவ்வாறு பேசியதில் மங்கைக்கு அதிர்ச்சியே உண்டாகிவிட்டது.

“என்னடி, நீ... திடீர்னு அவளுக்கு ஆதரவா பேசுற. என்னாச்சு உனக்கு?”

“எனக்கு ஒன்னும் ஆகல. மொத இங்கருந்து கிளம்பு. நாங்க தனியா பேசணும்”

“பேசிட்டு அவள அரை மணி நேரத்துக்குள்ள அனுப்பி வையு. மாப்பிள்ள காத்துட்டு இருப்பாரு” என்று கூறி மங்கை கிளம்பிவிட்டார்

“அங்கை, அம்மாவ எதித்துலாம் உனக்குப் பேசத் தெரியுமா? ஆச்சர்யமா இருக்குடி”

“உனக்காக நான் எப்பவுமே பேசுனது இல்லல்ல. அதனால உனக்குப் புதுசா தெரியுது”

“அப்பாவும் அம்மாவும் பேசுறதுக்குலாம் நீ என்ன செய்ய முடியும்? நான் உன்னைத் தப்பாவே நினைச்சது இல்ல. யூ ஆர் ஆல்வேஸ் மை ஸ்வீட் சிஸ்டர்”

“ப்ரியா, போற இடத்துலப் பாத்து இரு. பாதி நகைய அங்கக் கொடுத்தாலும் பாதிய நீயே பத்ரமா வச்சுக்க. யாரயும் முழுசா நம்பாத. இங்க யாரும் நல்லவங்க இல்ல”

“என் ஹஸ்பன்டயாச்சும் நம்பலாமா?”

“அவரு எதோ அப்டி இப்டின்னு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க. காச்மூச்சுனு கத்தாத. அப்டிப் பண்றதால ஒரு ப்ரயோஜனமும் இல்ல”

“அட்ஜஸ்ட் பண்ணணுமா... ட்ரை பண்றேன்”

“இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தம். எப்டி நடந்துக்கணும்னு தெரியும்ல?”

“பொறுமயா தெரிஞ்சுக்குற அன்னைக்குத் தெரிஞ்சுக்குறேன். என்ன அவசரம்?”

“நல்ல நேரமா பாத்துக் குறிச்சிருக்காங்க. இந்த டைம்ல வாழ்க்கைய ஆரம்பிச்சா தான் எல்லாம் நல்லபடியா நடக்கும்”

“எனக்கு இதுலலாம் நம்பிக்க இல்ல. விக்ரம்ட்ட நான் பேசிக்குறேன். என் மைன்ட் அதுக்குலாம் இன்னும் ரெடியாகவே இல்ல. புரிஞ்சுக்க”

“உன் வீட்டுக்காரர் ஒத்துக்குறாரோ இல்லயோ. மத்தவங்க இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்க”

“வேற யாருக்கும் தெரியாம நான் பாத்துக்குறேன், அங்கை”

“என்னத்தப் பாப்ப? பொழுது விடிஞ்சதும் அம்மாவும் ஆத்தாக் கிளவியும் வந்து சோதனை போடுவாங்க. மாட்டிப்ப”

“என்ன சோதன?” பத்மா புரியாமல் கேட்டாள்

“ரூமு களைஞ்சிருக்கா; துணிலக் கரை படிஞ்சுருக்கான்னு தான்”

“வாட் த ஃபக்...”

தமக்கை கூறியதைக் கேட்டு ப்ரியா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்

அப்போது அங்கே வந்த மங்கை “அதிகமா சொல்லி அவளைப் பயமுறுத்தாத, அச்சு. நீ போ. நான் பாத்துக்குறேன்” என்று சொல்லி மூத்தவளை அங்கிருந்து அனுப்பினார்

கனமில்லாத நகைகளாக எடுத்து பத்மாவுக்கு அணிவித்தவர், அவளது தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூட்டினார். அவளோ கண்ணாடியில் தன்னைப் பார்க்க மறந்து வேறொரு யோசனையில் ஈடுபட்டு இருந்தாள்.

“எழுடி. நல்ல நேரம் ஆரம்பிக்கப் போது”

“அம்மா, இதுக்குலாம் நல்ல நேரம் பாத்த நீங்க ஏன் ஜாதகப் பொருத்தம் பாக்காம விட்டீங்க?”

“ஜாதகத்துல மாப்பிள்ள நல்லவனா, கெட்டவனான்னா எழுதி வச்சுருக்கு. அது மேல இருந்த நம்பிக்க எப்பவோ போச்சு. நீ எந்திரி”

அவரது பற்று கண்டிப்பாக அக்ஷதாவின் திருமண வாழ்வால் தான் உடைந்து போனது என்பது தெளிவாகத் தெரிந்தது. மோகனைப் பற்றியத் தன் மனக்கசப்பை மங்கை மனந்திறந்து வெளிக்காட்டுவது அவளுக்கு அதிசயமாகப்பட்டது.

“பத்மா, ஆத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க”

அவளும் அதற்குக் கீழ்ப்படிய “ஒரு வருசத்துல ஆம்பள வாரிசா பெத்துக் கொடு, தாயி” என ஆசி வழங்கினார் மங்கையின் அன்னை

மூத்தவர்களில் உயிரோடிருப்பது இவர் மட்டுந்தான். சுந்தரத்தின் பெற்றோர்கள் இருவரும் பல காலம் முன்பே கண் மூடிவிட்டனர். கிழவிக்கு மங்கை ஒரே பெண். அடுத்தத் தலைமுறையிலும் இரண்டுமே பேத்திகள் என்பதால் அவருக்கு ஆண் பிள்ளையின் மீது ஓர் ஆசை இருக்கவே செய்தது.

‘கிளவிக்கு ஆம்பளப் புள்ளயே தான் வேணுமாம். பொம்பளப் புள்ளைகன்னா வாரிசா ஏத்துக்குட மாட்டாகப் போல’ என உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள் பத்மா

மற்றப் பெண்கள் அவளது கையில் பால் செம்பினைத் திணித்து மேலறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விக்ரம் இல்லாமல் போகவே இடையில் செருகி வைத்திருந்த அலைபேசியைக் கையில் எடுத்தாள் அவள். அதே நேரம் அவளின் தேடலுக்குக் காரணமானவன் மாடியில் நின்று தோப்புப் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இவ்ளோ நேரத்துக்குல்லாம் அத்தனை பேரும் கவுந்துட்டாங்க; செமக் குடி போல... நீ என்னடா அண்ணிய வச்சுட்டு ட்ரிங்க்ஸ் அடிக்குற? மாட்டிக் கீட்டித் தொலையாத”

அரைக் குடுவையைக் காலி செய்திருந்த பிரபாகரன் மறுப்பாய்த் தலையாட்டினான்

“அவ்ளோ ஈசியா சிக்க மாட்டேன். அவக் கண்ணுலப் பட்டா தான. தோப்புலப் போய்ப் படுத்துப்பேன்”

“அது மோகன் தான... ஏழு மணி கூட ஆகல. அதுக்குள்ள தூக்கமா?” என்று ஒரு கயிற்றுக் கட்டிலை இவன் சுட்டினான்

“அவனா... அஞ்சு மணிக்கே கறிச்சோறு தின்னுட்டு, ஆறு மணிக்குலாம் மட்டையாயிட்டான். தொண்ட வரைக்கும் குடிச்சா இப்டித் தான்”

“இவனலாம் வீட்ல யாரும் கேள்வி கேக்க மாட்டாங்களா?”

“கேக்குறதுக்கு யாரும் இருந்தா தான. உன் மாமனாரயும் சரக்கடிக்க இழுத்துட்டுப் போயிட்டாரு நம்ம அப்பா”

“நல்லச் சம்பந்திங்க...”

“நீயும் ஒரு கட்டிங் போட்றியா?”

“ஏன்டா, இந்த நேரத்துலயா? உனக்கும் போத ஏறிடுச்சுன்னு நினைக்குறேன். பேசாமப் போய்ப் படு”

“லைட்டா ஓவராய்டுச்சு. ஸாரி... சீக்ரம் கீழப் போ, தம்பி. தேடப் போறாங்க. குட் நைட், டா”

பிரபாகரன் அங்கிருந்து அகல விக்ரமின் கைபேசி சிணுங்கியது. இவன் எடுத்துப் பார்க்க அயல்நாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப்பில் செய்திகள் வரலாயின.

“ஹாய், விக்ரம்”

“ஆர் யூ தேர்?”

அது யாராக இருக்கும் எனச் சிந்தையில் ஆழும் போது அதே எண் குரலழைப்பில் தொடர்பு கொள்ள முயல்வதாகக் காட்டியது. விக்ரம் அதை ஏற்றுச் செவியில் வைக்க, எப்போதோ கேட்டுப் பழகிய குரல் காற்றின் ஊடே ஒலித்தது.

“ஹலோ... விக்ரம்... திஸ் இஸ் ஜெனிஃபர்... டூ யூ ரிமம்பர்?”

அந்தக் கணம் இவ்வுலகமே வெறும் மாயையாய்த் தோன்றியது அவனுக்கு

நினைவிருக்கா!