• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 18

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
பத்மப்பிரியா அகன்ற சமையற்கட்டின் கற்பரப்பு மீது எகிறி அமர்ந்த வண்ணம் அன்னையிடம் வினவினாள்

“என்னம்மா சமையல்?”

“உன் குரங்கு சேட்ட இன்னும் கொறஞ்ச பாடில்ல. கீழ இறங்குடி. மாப்பிள்ள சொந்தத்துல யாரும் பாத்துடப் போறாங்க”

“கேட்ட கேள்விக்குப் பதில்?”

“சோறு, இட்லி, செட்டிநாடு கோழிக்குழம்பு, மட்டன் பிரியாணி, மீன் வறுவல், முட்ட, ரசம் எல்லாமே தான் இருக்கு”

“அடடா... யாருக்கு இத்தனயும் சமச்சீங்க?”

அந்தக் கேள்வியால் சமையல் அறையில் புதுக் கலவரமே உண்டாகக் காத்திருந்தது

“என்ர மருகனுக்குத் தான்டி. வேறாருக்கு?”

“அல்லாத்தயும் உன் மூத்த மருகனுக்கு ஏத்தாப்புல சமச்சு வச்சிருக்கியே. ஆத்தா, என்ர வூட்டுக்கார் வெஜ்ஜாக்கும். சுத்த சைவம்”

“என்னடி பெரிய குண்டா தூக்கிப் போடுற. உங்க அத்தை, மாமாலாம் சாப்புட்டாங்களே”

“அவங்க சாப்டுவாங்களா இருக்கும். இவரு முட்டையக் கூட தொட மாட்டாரு”

“இப்போ என்னத்தடி பண்ண?”

“அந்த ரசத்த எடுத்து ஊத்து. வேறென்ன செய்ய?”

“கடைசி நேரத்துல வந்து சொல்றியே. கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா? வீட்டுலச் சாப்புட்ற மொத விருந்துக்கே ரசஞ்சோறு போட்டா என்னடி நெனப்பாங்க...”

மங்கை கைகளைப் பிசைய அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் அக்ஷதா

“ம்மா, பதறாதீங்க. விக்ரம் மாலினிய அழைச்சுட்டுக் கடைக்குப் போயிருக்காவ. அவுக வரதுக்குள்ள நான் சப்பாத்தி போடுறேன். நீங்க குருமாவும் சட்னியும் தயார் பண்ணுங்க. இன்னொரு தட்டு இட்லி ஊத்துனா, பலகாரமும் வச்சுச் சாப்டக் குடுத்தர்லாம்”

“நான் வேணா ஹெல்ப்புக்கு ரெண்டு பேர வரச் சொல்லுறேன்” என்ற பத்மாவோ சமையல் பொறுப்பில் இருந்து நழுவ

“அதானப் பாத்தேன். வேல ஏதும் செஞ்சுடப் போறியோனு ஒரு கணம் பயந்துட்டேன்” என்றார் மங்கை

பதிலுக்கு அவள் சங்கடப்படுவதைப் போல இதழ் விரிக்க “ஊருக்குக் கிளம்புற முன்னாடி சேலயக் கட்டு, போ” என்று அவரே உத்தரவிட்டு அனுப்பினார்

உணவு முடித்து ப்ரியா வேண்டிய துணிமணிகளை அள்ளி வைத்துப் பெட்டியைக் கட்டினாள். சீர் சாமான்களில் அவசியமாகத் தேவைப்படும் கட்டில், பீரோ போன்றவை மட்டும் ஒரு வாடகை டெம்போவில் ஏற்றப்பட்டன. புகுந்த வீட்டிற்குப் புறப்படும் முன் சொந்த பந்தங்களிடம் விடைபெறும் வேலையில் அவள் ஈடுபட்டு இருந்தாள். அப்போது தமக்கையை மட்டும் காணாமல் வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாள். பேச்சுச் சத்தம் மேலிருந்து கேட்க மாடிப் படிகளில் ஏறினாள். அங்கு அவள் கண்ட காட்சி மனதில் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தியது. விக்ரம் வாங்கிக் கொடுத்த உருளைச் சீவல்களை ஹேமாலினி கொறித்துக் கொண்டிருக்க, அது பிடிக்காத மோகன் அதைப் பிடுங்கித் தூர எறிந்தான். அச்சிறு பிள்ளை தந்தையின் காரணமற்ற கோபத்தில் மிரண்டு போய் அக்ஷதாவின் பின்னால் மறைந்து நின்றாள்.

“ஏங்க, அவச் சின்னப் பொண்ணுங்க. ஏன் இப்டிலாம் நடந்துக்குறீங்க? உங்களுக்குப் புத்தி எதுவும் கெட்டுப் போச்சா”

“எல்லாம் நீ குடுக்குற இடம் தான்; கண்டவன்ட்டலாம் பொறுக்கித் தின்னுது உன் புள்ள. எதோ நேத்து வந்தவன ராசா மாதிரி தலைலத் தூக்கி வச்சுட்டு ஆடுறீங்க. உன் ஆத்தாளுக்குத் தான் தல கால் புரியல. உனக்கு என்னடி? என்னை விட அவன் உனக்கு ஒசத்தியா போய்ட்டானா? ஒன்னை என்னடி கேட்டேன். ஒரு டீ தான கேட்டேன். அவனுக்குப் போட்டத எடுத்துட்டு வந்து நீட்டுற. என்னைப் பாத்தா எச்சிலைலச் சோறு தின்றவன் மாரி தெரியுதா? அவன் முன்னாடி அப்டியே தலுக்குற; குலுக்குற. உனக்கு நான் ஒருத்தன் போதலயா? என்னடி முறைக்குற. பெரிய இவளா நீயு? அப்டியே அறைஞ்சேன்னு வையு”

அவனது மோசமான வார்த்தைகளும் வெடிக்கக் காத்திருக்கும் வன்முறையும் பத்மாவைப் பொறுமையிழக்கச் செய்தன

“மாமா...”

எதிர்பாராத விதமாக அவளின் குரல் கேட்டதில், அடிப்பதற்கு ஓங்கிய கையை அவன் அப்படியே இறக்கினான்

“என்ன பண்றீங்க, மாமா? அதுவும் ஹேமாவ வச்சுட்டே... ஏன் இப்டி எப்பவும் தப்பாவே பேசுறீங்க? எல்லாத்தயும் தப்பு தப்பா புரிஞ்சுக்குறீங்க? நாங்க உங்கள என்னைக்குமே மரியாத இல்லாம நடத்துனது கிடயாது. இந்த வீட்டுக்கு நீங்க மூத்த மருமகனா வந்தப்போ, உங்களத் தங்கத் தட்டுல வைக்காத கொறையா தாங்குனோம். உங்களுக்குச் செஞ்ச உபச்சாரத்த விடவா, இப்போ நாங்க அதிகமா பண்ணிட்டோம்? ஒருவேள, எங்க மேலத் தான் தப்புன்னு நீங்க நினைச்சா கூட நாங்க மன்னிப்பு கேட்டுக்குறோம். அக்கா பாவம்; நீங்களே கதின்னு கிடக்கா. அவ மனசக் கஷ்டப்படுத்தாதீங்க”

மனதில் அடக்கி வைத்திருந்த வன்மத்தை மோகன் வார்த்தைகளில் கக்க ஆரம்பித்தான்

“நீயெல்லாம் என் முன்னாடி நின்னு பேசாத, சரியா? வீட்டுலப் பெரியவங்க இருந்தா வரச் சொல்லு. புள்ளப் பூச்சிக்குலாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல”

“நீங்க எனக்கு எந்தப் பதிலும் சொல்ல வேணா. அக்காவயும் மாலுவயும் பத்ரமா பாத்துக்கங்க; சந்தோஷமா வச்சுக்கப் பாருங்க. அதுவே போதும். அவுக உங்கள நம்பித் தான இருக்காங்க”

“நீ தான ஒரு நாள் சொன்னவ; உன்னைப் பத்திப் பேச எனக்கு உரிம இல்லனு. இப்போ உனக்கு மட்டும் அந்த ரைட்ஸ யாரு தந்தா? உன் இடம் எதுன்னு தெரிஞ்சு நடந்துக்க. இது என் குடும்பம். அட்வைஸ் பண்ற வேலையலாம் நீ போற வீட்டோட வச்சுக்க... சொல்றீ உன் தங்கச்சிட்ட. சப்போர்ட்டுக்கு ஆள் கிடைச்சதும் தெனாவட்டா நிக்குற. உன் கொட்டத்தலாம் அடக்கத் தான நான் இருக்கேன்”

பத்மாவின் மீது முழுக் கோபத்தையும் காட்ட முடியாமல், அவன் அக்ஷதாவின் தலைமுடியைப் பற்றி இருந்தான்

“மாமா, கைய எடுங்க”

“ஆட்டமா போடுற? நான் சொல்றதக் கேட்டு நடக்கணும். உன் இஷ்ட மயித்துக்கு இருக்க நெனச்சா விளைவுகள் விபரீதமா இருக்கும்”

அவன் சிகையைப் பிடித்து இழுத்ததில் வலி தாளாமல் அக்ஷதா மௌனமாய்க் கண்ணீர் வடித்தாள்

“மாமா...” தமக்கையின் கவலையைப் பொறுக்க முடியாத ப்ரியா சுற்றமுற்றம் பாராமல் கத்தினாள்

இப்போது மோகனின் வார்த்தைகள் அவளின் முகத்துக்கு நேராகப் பயணித்தன “இந்தத் திமிரு மயிரலாம் என் கிட்டக் காட்டாத”

அவனது நெஞ்சில் கையை வைத்து ஒரே முட்டாக விலக்கித் தள்ளியவள் விரலை நீட்டி எச்சரித்தாள் “அக்காவ விடுங்கன்னு சொல்றேன்ல. அவ்ளோ தான் உங்க லிமிட்டு”

அந்நேரம் முட்டல் மோதல் ஒலி கேட்டு ஆத்தாக் கிளவி மேலே வந்திருந்தார்

“மூளை கீள இருக்கா உனக்கு? இல்ல, அம்மிக் கல்லுல வச்சு நசுக்கிப்புட்டியா? கழுத... யார மெரட்டிப் பாக்குற? ஒரு மட்டு மரியாத வேணாம்”

இவ்வாறு அவர் எகிறியது மோகனிடம் அன்று; நியாயத்தின் பக்கம் நின்ற ப்ரியாவிடம் தான்.

“ஏ, கிளவி. அவன் என்ன பண்ணான்னு உனக்குத் தெரியுமா? நீ மொதல்லருந்து பாத்தியா?”

பத்மாவும் மோகனும் கொஞ்சம் விட்டால் மோதிக் கொள்பவர்களைப் போல அவர்களது வாக்குவாதம் காராசாரமாக இருந்தது

“வார்த்த வார்த்த... அவன் இவன்ன பல்லலாம் தட்டி எடுத்துடுவேன்”

“ஓ... எங்க வீட்டுல நின்னுட்டு என்னையே அடிப்பியோ. கைய வையேன், பாப்போம். நீ மட்டும் வச்சிடு...”

“என்னைப் பத்தி உனக்குத் தெரியாது... உன்னைத் தொட வேணாமேன்னு பாக்குறேன்”

கண்களை மூடி மோகன் தன்னைக் கட்டுப்படுத்தி நிற்க, நிலைமை கை மீறுவதற்குள் மங்கை இடையே புகுந்திருந்தார்

“பத்மா, என்னடி இங்க ரகளை?”

“ம்மா, என்ன நடந்தது தெரி...”

“ச்சூ, எல்லாரும் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க. இந்தப் பஞ்சாயத்துலாம் உனக்குத் தேவயா?”

“அதில்ல, மா. அங்கை...”

தமக்கையை அந்தக் கொடுமையாளனிடம் விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை போலும்

“நீ போ, ப்ரியா. என்ன பிரச்சனைன்னாலும் எங்களுக்குள்ளப் பேசித் தீத்துப்போம்” கண்ணீர் மறைத்து அக்ஷதா தீர்க்கமாய்ச் சொல்ல

மோகன் வேறு எரிச்சல் மூட்டினான் “ஆமாமா. அவங்கவங்க வேலய மட்டும் பாருங்க. அத்தான் எல்லாருக்கும் நல்லது”

மற்ற நேரமாக இருந்தால் பத்மா கூச்சலிட்டு ஆர்ப்பாட்டமாவது செய்திருப்பாள். அவளின் வரவிற்காக ஒரு குடும்பமே நின்றிருக்க, உணர்வுகளைத் துடைத்தெறிந்து விட்டுப் போய் வாகனத்தில் ஏறினாள். பிறந்த வீட்டை முதல் முறையாகப் பிரிந்துச் செல்கிறோமே என அழக் கூட தோன்றவில்லை. சற்று முன் நடந்த சம்பவத்தால் விட்டேத்தியாக உட்கார்ந்திருந்தாள். மற்ற வாகனங்கள் முன்னே சென்றுவிட, விக்ரமும் அவளும் மட்டும் தனி மகிழுந்தில் ஊர்ந்து கொண்டிருந்தனர். புதுமண தம்பதியர் ஓரக் கண்ணால் பார்த்து, பேசிச் சிரித்து, ஒட்டாமல் உரசி மகிழ வேண்டிய இனிமையான தருணம். ஆனால், அதை ரசிக்கும் மனநிலை அவளிடம் சுத்தமாக இல்லை. கணவனது கைக்கெட்டும் தொலைவிற்குள் கூட வராமல் பின்னிருக்கையில் வெறித்தப் பார்வையுடன் அமர்ந்து வந்தாள். அவள் வாயே திறவாமல் போக விக்ரமிற்கு எதுவோ சரியாகப் படவில்லை.

“எதோ யோசனைல இருக்காப்புல தெரியுது”

“நேத்து ஏன் நேரத்துக்கு வரல?” சொற்கள் அம்பு மாதிரி பாய்ந்து வந்தன

“பசங்க பார்ட்டி கேட்டாங்க. முடிச்சுட்டுக் கிளம்ப லேட் ஆய்டுச்சு. மொத நாளே வெய்ட் பண்ண வச்சுட்டனோ. அதான் அப்சட்டா வரியா?”

“வெய்ட் பண்ணது பிரச்சனையே இல்ல... ஆளாளுக்கு மாப்பிள்ளயக் காணோம், காணோம்னு பதர்றாங்க. ஃபோன் வேற ரீச் ஆகல. எனக்கு என்ன பண்றதுனே புர்ல. இந்தக் கல்யாணம் நடக்குமா, நடக்காதான்னு யோசிச்சு மைன்ட் ப்ளாஸ்ட் ஆய்டுச்சு. இத்தன எமோஷன்ஸயும் வெளியக் காட்டிக்காம இருக்குறதுக்குள்ள... உஃப்... என் அம்மா நீங்க ஓடிப் போயிட்டீங்கன்னே முடிவு பண்ணிட்டாங்க”

“உண்மையச் சொல்லு; நீயும் அப்டித் தான நினைச்ச?”

“இல்ல. நான் பிலீவ் பண்ணேன் உங்கள”

“நிஜ்ஜமா?”

“யா, பாய்ன்ட் ஒன் பர்சன்ட்”

அதில் தோன்றிய சிறு புன்னகையோடு அவன் சொன்னான் “ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. இன்னும் கூட நம்பறதக் கொறச்சுக்க”

“இந்த கார் யாரோடது?”

“அப்பா யூஸ் பண்ணிட்டுருந்த ஓல்டு காரு. இப்போலருந்து நமக்குத் தான். வேணும்னா எப்போ வேணா எடுத்துப் போய்க்கலாம்”

“நான் முன்னாடி வரவா? பிரச்சனை இல்லயே. கார் ஓட்றதப் பக்கத்துல இருந்து பாக்கணும்னு ரொம்ப நாள் ஆச...”

“கம் ஆன். நான் ட்ரைவிங் கத்துத் தாரேன்”

“ரியலி? அதிகமா வேணாம். பேசிக்ஸ் மட்டும்”

அவள் ஆர்வத்துடன் அவனருகே முன்னிருக்கைக்கு வந்து சேர்ந்தாள்

“தென் லிஸன். ஹியர் ஆர் ஏ, பி, சி; ஆக்ஸிலேட்டர், பிரேக் அன்ட் க்ளச்...”

“ஒரு நிமிஷம். கியர் போடச் சொல்லித் தரேங்குற பேர்ல கையத் தொட்ற வேலைலாம் வேணாம். அல்ரெடி கடுப்புல இருக்கேன். அப்றம் திட்டிடுவேன். அதுக்குத் தான் முன்னவே சொல்றேன்”

“நோ டச் பாலிசி; டீல்” அவன் கரங்களைக் காற்றினில் உயர்த்தி ஒப்புதல் தெரிவித்தான்

விக்ரம் இந்தளவுக்குக் கட்டுக் கோப்பானவன் அல்லன். ஒருமுறை உரிமை தரப்பட்டுவிட்டால் அதில் பின்வாங்கல் என்பதே அவனிடம் கிடையாது. இதை நம் பத்மா அறிந்திருக்கவில்லை. அப்படித்தான் அன்று வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இறக்கைகள் முளைத்தவன் போல பறந்தான். கல்லூரியை வட்டமடித்துக் கொண்டு ஜெனியைத் தேடி விரைந்தான்.

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல!