• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 2

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
“பத்து...”

“ம்ம்ம்ம்”

“ஏ, பத்து”

“என்ன?”

“பத்துமா...”

“என்னடா, வேணு? சொல்லு”

“பத்துமா” என வேணுகோபால் அழைத்தபடியே இருக்க

“சனியனே, என்ன தான் வேணும்? பத்துனு கூப்டாதனு எத்தன மொற சொல்லிருக்கேன். அறிவே இல்ல...” என்று புகைந்தாள் பத்மப்பிரியா

அவன் வெட்கமே இல்லாமல் “ஸாரி... மன்னிச்சுக்க...” என்று இழுத்தான்

“இவளோ நேரமா எதுக்குக் கூப்பிட்ட? அதச் சொல்லு, தண்டம்”

“உன்ன ஹெட்டு கூப்பிட்றாரு. அதான் சொல்ல வந்தேன்”

“அட, மாடே. இத யேன் இம்புட்டு ஸ்லோவா சொல்லுற?” என்று பரபரத்தவளோ ஒரு நொடி நில்லாமல் ஓடினாள்

அவளின் துறைத் தலைவரைப் பார்த்துப் பேசிவிட்டு மதிய உணவுண்ணச் சென்றாள். வழக்கம் போல், வேணுவின் அருகே அவளுக்காக இடம்விடப் பட்டிருந்தது. அலுவலகத்தில் பரிமாறப்பட்ட உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டு அந்த இடைவெளியை நிரப்பினாள் பத்மப்பிரியா. மற்றவர்கள் உணவுண்டு முடித்து எழுந்து சென்றுவிட, இவள் சாப்பிட்டு முடிக்கும்வரை வேணு காத்திருந்தான்.

“ஏன், பத்து?”

“ப்ரியானு கூப்டேன்டா. எப்போ பாரு பத்து, பத்துன்னுட்டு... நல்லாவா இருக்கு?”

“எனக்கு நல்லா தான் இருக்கு. நைன்த் படிக்கும் போதுல இருந்தே உன்னை அப்படித்தான் கூப்புட்றேன்; இனிமேவா மாத்திக்க முடியும்? அத விடு... ரொம்ப நாளாவே உன்னை ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்; எப்போ கல்யாணம் பண்ணப் போற? தப்பா எடுத்துக்காத; என் கூட சண்டைக்கு வராத... பையனா பொறந்த என்னையே வீட்டுல நோண்டி நொங்கெடுக்குறாங்க. உன் அக்காவுக்கு மேரேஜ் ஆகி அவங்கப் பொண்ணே ஸ்கூல் போறா. உங்க வீட்டுல எப்புடி நீ சமாளிக்குற? இல்ல, தெரிஞ்சுக்கலாமேனு தான் கேட்டேன்...”

“அதுவா... அவங்களும் ரொம்ப நாளா வரன் பாத்துட்டு இருக்காங்க. நான் தான் யாரயும் பிடிக்கலனு சொல்லிட்டு இருக்கேன்”

“ஏன்டா?”

“பாக்குற எல்லா வரனையும் எங்க வீட்டுலப் பிடிச்சுருக்கு, நல்ல இடமுன்னே சொல்றாங்கடா. அவங்களுக்கு எங்கயாச்சும் என்னைப் பிடிச்சுக் கொடுத்தா போதும்னு தோணும் போல. நாப்பது நாப்பத்தஞ்சு வயசு ஆளலாம் என் தலைலக் கட்டப் பாக்குறாங்க. வர்றவன் யாரு எப்புடினு ஒழுங்கா விசாரிக்க மாட்டறாங்க. அதான், எவனா இருந்தாலும் நான் வேணாம்னு சொல்லிட்றது. இவங்கள நம்பி எங்க இறங்குறது?”

“எதோ கேணிக்குள்ளற இறங்குற மாதிரி பேசுற”

“கல்யாணமும் கிணத்துல இறங்குறதும் கிட்டத்தட்ட சேம் தான. என்னைப் பெத்ததுங்க கண்ணக் கட்டித் தள்ள நினைக்குதுக. என்ன, நான் கொஞ்சம் கண்ணைத் திறந்துட்டுக் குதிக்கலாம்னு பாக்குறேன்”

“அதெப்புடி?”

“எனக்கு அல்ரெடி மேட்ரிமோனில ப்ரொஃபைல் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. என் அப்பாவோட டைரில இருந்து அதோட லாக்இன் ஐடி, பாஸ்வேர்ட முன்னவே ஆட்டையப் போட்டுட்டேன். நேத்து அத வச்சு அகௌன்ட் உள்ளப் போயி பாஸ்வேர்ட மாத்துனேன். அதுல இருந்த அப்பாவோட ஃபோன் நம்பரத் தூக்கிட்டு என்னோடத இன்செர்ட் பண்ணிருக்கேன். இப்போ, ஃபுல் புரொஃபைலும் என் கன்ட்ரோலுக்கு வந்துருச்சு. இனிமே யாரக் கல்யாணம் பண்ணுறது, யார ரிஜக்ட் பண்ணுறதுனு நானே டிசைட் பண்ணிக்கலாம்”

“ஏ, ஃபிராடு. நாளப் பின்ன உங்க அப்பா லாக்இன் பண்ண ட்ரை பண்ணி ஓப்பன் ஆகலனா கண்டுபிடிச்சுர மாட்டாரா?”

“அவரு எப்பவும் சாட்டர்டேல தான் செக் பண்ணுவாரு. ஸோ, நான் அதுக்குள்ள எல்லாத்தயும் பழயபடி மாத்திடுவேன். இந்த வீக் முடியறதுக்குள்ள எனக்கு நல்லவனா ஒருத்தன் வந்து வாய்க்கணும்னு வேண்டிக்கோ”

“வேண்டிக்குறேன், வேண்டிக்குறேன்... இப்போ போய் வேலையப் பாப்போமா?”

புன்னகையுடன் “ஓகி டோகி” என்றவள் கேன்டீனில் இருந்து எழுந்து அலுவலத்திற்குள் சென்றாள்

அதன் பின்னர் என்ன தான் பணியில் கவனம் செலுத்த முயன்றாலும் முன்னொரு தினம் நடந்ததே பத்மாவின் நினைவில் வந்து நின்றது. வேணுகோபால் உடன் நடந்த உரையாடல் இதற்கு காரணமாய் அமைந்து போனது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு...

ப்ரியாவின் தமக்கை அக்ஷதா என்றழைக்கப்படுகிற அங்கயற்கண்ணிக்கு மணமாகி இரு வருடங்கள் ஓடியிருந்தன. அந்நேரம் அகஷதா முழுமாத கர்ப்பிணியாக, சென்னையில் வசித்த கணவனைப் பிரிந்து, பொள்ளாச்சியில் உள்ள தனது பிறந்தகத்தில் தங்கி இருந்தாள். அப்போது முதன் முதலாக பத்மாவிற்கு ஒரு வரன் அமைந்திருந்தது. மாப்பிள்ளை அதே ஊர்; படிப்புக் குறைவு; ஆனால், பல ஏக்கர் தென்னந்தோப்பிற்கு சொந்தக்காரன். அது மட்டுமின்றி பத்மாவின் தந்தை சுந்தரத்தின் நெருக்கமான தோழரின் மகனும் ஆவான். அவனை வீட்டில் இருந்த அனைவருக்கும் பிடித்திருந்தது. ப்ரியா மட்டும் மாப்பிள்ளைக்குப் படிப்பில்லை என்று குறை கூறினாள். அவளது கருத்தைக் குடும்பத்தினர் யாரும் ஏற்கத் தயாராக இல்லை. மேற்படி அவர்கள் நிச்சயத்திற்கும் நாள் குறித்து முடித்தனர்.

இது நடப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் பத்மப்பிரியா பணியில் சேர்ந்து இருந்தாள். தொடக்கத்திலேயே விடுமுறை எடுக்க விரும்பாமல் நிச்சயத்தன்றும் பணிக்குச் செல்ல நினைத்தாள். அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை தான்; இருப்பினும் பெற்றோர் பேச்சை மீறி நடக்க உத்தேசிக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் பெற்றோர் பார்த்துச் சொல்பவனைத் தான் மணந்தாக வேண்டிய கட்டாயம். ஆதலால், மதியத்திற்கு மேல் அனுமதி கேட்டுக் கொண்டு திரும்பிவிடலாம் என்பதாகத் திட்டமிட்டிருந்தாள்.

காலையில் அவள் தயாராகியபோது வீட்டில் தாய் தந்தை இருவருமே இல்லை; நிச்சயதார்த்த அலுவலாக வெளியே சென்றிருந்தனர். அக்ஷதா மட்டும் மாடியில் நின்று அத்தானிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து “அங்கை, அங்கை... நான் வேலைக்குப் போய்ட்டு வந்துட்றேன். சீக்கிரமா வந்துடுவேன். வீட்டுலச் சொல்லிடு” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் ப்ரியா

அக்ஷதா பதிலுக்குத் தலையைத் தலையை ஆட்டினாளே தவிர, தங்கை சொன்னது முழுதாய் அவளது செவிகளில் ஏறவில்லை. கணவனிடம் பேசுவதில் கவனம் மொத்தமும் இருந்ததால் ப்ரியாவை சரிவரக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். இதை அறியாத பத்மா ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்து துடியலூரில் உள்ள தனது அலுவலகத்தைச் சென்றடைந்தாள். மதிய உணவை உண்டுவிட்டு வேலை செய்து கொண்டிருந்தவள் அனுமதி கேட்பதற்காக மேலாளரிடம் சென்றாள். அவரோ தலைமை அலுவலகத்தில் இருந்து முதலாளி வரவிருப்பதாகவும் அவருடனான சந்திப்பை முடித்தப் பிறகே செல்ல முடியும் என உறுதியாகக் கூறிவிட்டார்.

அங்கு வந்து சேர்ந்த முதலாளி பணியாளர்களை அமர்த்தி ஐம்பது நிமிடங்களாகியும் பேசிக் கொண்டே இருந்தார். அது போக, பத்மப்பிரியா புதுச்சேர்க்கை என்பதால் கூடுதலாக நாற்பது நிமிடங்கள் பேசித் தள்ளினார். நேரம் போக போக ப்ரியாவிற்கு பயமும் கவலையும் சேர்ந்து கொண்டன. முதலாளி பேசி முடித்ததும் கைப்பையை எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்தாள். அவளது அலுவலகத்தின் உட்புறம் எவரும் சொந்த அலைபேசியை எடுத்து வரக் கூடாது என்பது விதி. ஆதலால், வெளியே வந்து வரவேற்பறையில் கொடுத்து வைத்திருந்த கைப்பேசியைத் திருப்பி வாங்கினாள்.

அத்தருணம் “ஸாரி, சிஸ்டர்... ஃபோன சைலன்ட்ல போட மறந்துட்டீங்க போல; கால் வந்துட்டே இருந்துச்சு; பேட்டர்ன் இல்லாம சைலன்ட்டும் பண்ண முடியல; மீட்டிங்க்கு இடயில உள்ள வந்து தரவும் முடியல. வேற வழி தெரியாம ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்” என்று வரவேற்பாளினி கூறினாள்

ஏற்கனவே அவசரத்தில் இருந்தவளோ “பரவால்ல, பரவால்ல” என்று சொல்லி அங்கிருந்து விடைபெற்றாள்

அலைபேசியை ஆன் செய்து பார்த்தபோது ஏகப்பட்டத் தவறிய அழைப்புகள் வந்திருப்பதாகத் திரையில் காட்டியது. அவற்றில் பெரும்பான்மை சுந்தரத்திடம் இருந்து வந்தவை. உடனே இவள் திருப்பி அழைக்க முயல, வேலிடிட்டி காலையுடன் முடிவடைந்துவிட்டத் தகவல் தெரிய வந்தது. யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அவளுக்கு அதுவரை சொந்தமாக ரீசார்ஜ் செய்தும் பழக்கமில்லை. இந்த இக்கட்டான சூழலில் என்ன செய்யலாம் என மூளையைக் குடைந்தபடியே பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.

தமக்கையிடம் கூறிவிட்டே வந்திருந்தாலும் தாமதம் ஆகிப் போனதே எனும் பதற்றம் நீடித்தது. பேருந்தினில் அருகே அமர்ந்திருந்த பெண்மணியிடம் அலைபேசியைக் கடனாக வாங்கி வீட்டிற்கு அழைத்தும் பார்த்தாள்; அது புது எண் என்பதாலோ என்னவோ அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒரு வழியாக பொள்ளாச்சி வந்து இறங்கியவள் விடுவிடுவென வீட்டிற்கு நடந்தாள். அப்போது குறுக்கே சென்று குதித்தாள் பக்கத்து வீட்டுத் தோழி மதுரேகா.

“பிரியா, தண்டம். எங்கடி போன?”

“ஏன், பாத்தா தெரிலயா? வேலைக்குப் போய்ட்டு வாரேன்”

“இன்னைக்கு இது ரொம்ப முக்கியம் பாரு... நேரத்துக்கு வந்து தொலைக்க வேண்டியது தான. மாப்பிள்ள வீட்டாளுங்க வந்து சுமார் ரெண்டு மண்ணேரமா வாசல்லயே காத்துக் கிடந்தாக. நீ வரலைனதும் உங்க அப்பாக்கு முகம் கருகருனு ஆய்டுச்சு. அவரே வந்தவங்களுக்குக் கும்பிடுப் போட்டு அனுப்பி வச்சுட்டாரு. ஏன்டி, போறவ யார்ட்டயாச்சும் சொல்லிட்டுப் போறதில்லயா? முட்டாச் சிறுக்கி” என்று அவள் பொங்க, அதைக் கேட்டு பத்மாவிற்குத் தலையே சுற்றியது

“சரி, சரி, சீக்ரம் வீட்டுக்குப் போ; சூதானமா பேசிப் புரிய வையு” என்று அவளை மேலும் கலவரப்படுத்தி அனுப்பினாள் மது

உள்ளத்தில் எழுந்த பீதியுடனே இவள் வீட்டில் நுழைய முயல “நில்லுடி. அறிவு கெட்ட முண்டமே, எங்கப் போய்த் தொலைஞ்ச? எவனத் தேடிடி போன? ஓடிப் போய்டலாம்னு திட்டமோ... அப்படியே போய்த் தொலையறது தான? எதுக்குத் திரும்பி வந்த?” என்று ஆர்ப்பரிக்கும் வெள்ளம் போல கத்தலானார் தாயார் மங்கை

“அம்...” என்று இவள் வாயைத் திறப்பதற்குள் சுந்தரம் ஏச்சைத் தொடங்கினார்

“மாப்பிள்ளைக்குப் படிப்பு பத்தலனு இவச் சொன்னபோதே நாம உஷாராயிருக்கணும். இவள நம்பி ஊர்க்காரங்க முன்னாடி அசிங்கப்பட்டது தான் மிச்சம். ச்ச்சை, வாழ்க்கைல எதுக்காகவும் நான் இப்படிக் கூனிக் குறுகி நின்னதே இல்ல. எதுக்குத் தான் இவளப் பெத்தனோ? ஒத்தப் புள்ளயோட நிறுத்திருக்கக் கூடாது... எல்லாம் என் புத்தியச் சொல்லணும்”

இந்தச் சுடுசொற்களில் துடிதுடித்துப் போய்க் கண்களில் கண்ணீர் சொட்ட “ஏன் இப்புடிக் கண்டமேனிக்குப் பேசுறீக? நான் யாரயும் பாக்கப் போகல... ஆஃபிஸுக்குத் தான் போனேன். நேரத்துல வந்துரலாம்னு எவ்வளவோ டிரை பண்ணேன்; ஆஃபிஸ்ல விடல. இதுக்கே அக்காட்டச் சொல்லிட்டுத் தான் போனேன்; நீங்களே கேட்டுப் பாருங்க” என்று தேம்பினாள்

அங்கை இருந்து கொண்டு “எனக்கு வேற புத்தி மந்தமாய்டுச்சு, பிள்ள. நீ சொல்லிட்டுப் போனது லேட்டா தான் ஞாபகம் வந்துச்சா... நானும் சொன்னேன், அவத் திரும்பி வந்துடுவான்னு; இவங்க ஏத்துக்குடவே இல்ல. அதான், தாமதமாகுதுன்னு தெரியுமில்ல. ஒரு ஃபோனாச்சும் பண்ணிருக்கக் கூடாது?” என்றாள் பெற்றோருக்கும் வலிக்காத மாதிரி, தங்கைக்கும் ஆதரவாய்

“அப்பவே சொன்னனே, ஆஃபிஸ்ல ஃபோன் அலோவ்டு இல்லனு. திரும்பி வந்து பாத்தப்போ ஃபோன்ல பேலன்ஸ் இல்ல. இதுக்கே வேற ஒருத்தங்க நம்பர்லருந்து உங்களுக்குக் கூப்டேன், பா. நீங்க அட்டென்ட் பண்ணல. என் ஆஃபிஸ் விசிட்டிங் கார்டு வீட்டுல இருக்குமே; அதுல இருக்குற நம்பருக்காவது கூப்டு விசாரிக்கலாம்ல. அதக் கூட பண்ணாம என்னென்னமோ குத்தம் சொல்லுறீங்களே...” என்றவளின் கன்னங்களில் தாரைதாரையாய்க் கண்ணீர் வடிந்தது

“நீ சம்பாதிச்சுத் தரப் போற காசுல தான் நாங்க பொங்க வைக்கப் போறோமோ? சாப்பாட்டுக்கு வழியில்லாமலாக் கிடக்கு. நீ வேலைக்குப் போலனு யார் இங்க அழுதா? கல்யாணங்குறது எவ்ளோ முக்கியமான விஷயம்; உனக்கா தெரிய வேணாம்... நிச்சயத்த வச்சுட்டு எவளாச்சும் வீட்டவிட்டு வெளியப் போவாளா? வேலைக்குப் போனாளாம் வேலைக்கு... பெரிய கலெக்டரு வேல பாரு. பொட்டச்சிக்கு வெளிவேல ரொம்ப முக்கியமோ? கல்யாணம் பண்ணிட்டுப் புருஷனப் பாத்துட்டுருந்தா போதாதா? உங்க அக்காவோட புத்திலப் பாதியக் கூட அந்த ஆண்டவன் உனக்குப் படைக்காம விட்டுட்டானே. பேசாம அவளோட மூத்திரத்த வாங்கி...” என வார்த்தைகளால் மங்கை குத்திக் கிழிக்க

அதற்கு மேல் பொறுக்காமல் “அம்மா, ப்ளீஸ்...” என்று ஆக்ரோஷம் வந்தவளாகச் சீறினாள் பத்மப்பிரியா

ஒரு தென்றல் புயலானதே!