• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 21

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
பத்மப்பிரியா ஊதா வண்ண ஜாஜெட் புடவையில் மனதைக் கொள்ளையடிக்கும் ஒய்யாரத்துடன் அதே மரத்தடியில் நின்றிருந்தாள். அவளது கரிய கேசம் முதுகில் வழிந்த வேர்வையோடு ஒட்டி நீராடிக் கொண்டு இருந்தன. கீழ்ப்புறமாக மட்டும் சுருண்டிருந்த கூந்தல் முனைகள் பளிச்சென்று தெரியும் முதுகெலும்புப் பள்ளத்தில் விழுந்து இன்பநிலை பெற முயன்றன. அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடையின் வழியே கச்சிதமான இடை இலைமறையாய்த் தெரிந்தது. அதன் கவர்ச்சியில் கட்டியிழுக்கப்பட்டவனாய் அவள் முன் சென்று நின்றான் அபிலாஷ்.

"அபி... வந்துட்டியா? உன்ன எவ்ளோ தேடுனேன் தெரியுமா? திஸ் இஸ் அவர் ஃபைனல் டே... உங்களலாம் விட்டுப் பிரிஞ்சுப் போகணுங்கறத நெனச்சுப் பாத்தா கண்ணுலத் தண்ணி வந்துரும் போல; மனசே வலிக்குது" அவன் தோளின் மீது கரத்தை இட்டபடி அவள் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள்

"யூ லுக் பியூட்டிஃபுல். இந்த சேரி உனக்குப் பொருத்தமா இருக்கு. புதுசாப் பூத்தப் பூ மாரி... தாமரை இல்ல; பர்ப்பிள் லில்லி மாதிரி ஃப்ரெஷ்ஷா இருக்க"

"ஒரேயடியா புகழாத. வெக்கம் இன்கமிங்ல வருது... இதென்ன உன் கைல?"

"பிரிச்சுப் பாரு தெரியும்"

அவன் கொண்டு வந்திருந்த சார்ட் பேப்பரிலும் அவளே இருந்தாள். அணு அணுவாய்ச் செதுக்கிய தெய்வச் சிலைக்கு ஓவிய உருவம் கொடுத்தது போல பேரழகாகத் தெரிந்தாள். அதில் அவளது முகத்தை ரசித்ததை விட, அபியின் கலைத் திறமையை பத்மா மிகுதியாக நேசித்து வியந்தாள். அவனது கலை வெளிப்பாட்டினைக் கண்டு அவள் மிகுந்த பரவசமடைய, அபிலாஷின் இதயம் நெஞ்சுக் கூட்டைக் கிழித்து வெளியே வரத் துடித்தது. தவளை தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு அவன் உதாரணம் ‌ஆகப் போவதற்குத் தான் இத்தனைத் தவிப்பு போலும்.

"வாவ். ஐ கேன் நாட் பிலீவ் மை ஐஸ். வொன்டர்ஃபுல்... மார்வலஸ்... எப்போடா வரைஞ்ச? எந்த ஃபோட்டோவப் பாத்து இத காபி பண்ண? ஒரு ப்ளாக் அன்ட் வொயிட் கண்ணாடில என்னைப் பாக்குற மாரியே ஃபீல் ஆகுது"

"ரெஃபரன்ஸ் ஃபோட்டோ வச்சு வரையல. டெய்லி உன்னை நேர்லப் பாத்துட்டுப் போய்க் கொஞ்ச கொஞ்சமா ஸ்கெட்ச் பண்ணேன். கிட்டத்தட்ட மூணு மாசம் ஆய்டுச்சு கம்ப்ளீட்டா முடிக்க"

"இத விட ஒரு பெஸ்ட்டு கிஃப்ட் இந்த உலகத்துலயே இல்ல தெரியுமா? தேங்க் யூ ஸோ ஸோ மச். என் லைஃப்ல இத நான் மறக்கவே மாட்டேன். எனக்காக இந்தளவுக்கு யாரும் மெனக்கெட்டதே கிடயாது. அப்டியே புல்லரிக்குது. இதுக்குத் தான் அபி வேணுங்குறது"

"அது சரி... எனக்கு எங்க ஃபேர்வெல் கிஃப்ட்டு?"

"நானே கடைசி நாளுன்னு கவலைல இருந்தனா, இதப் பத்திலாம் திங்க் பண்ணல. கிஃப்ட் எதுவும் வாங்கிட்டும் வர்ல... நாளைல இருந்து நாம பாக்க முடியுமான்னு வேறத் தெரிலயே‌. வீட்டுலக் கேட்டா கண்டிப்பா வெளிய விட மாட்டாங்க. ம்ம்ம்... வேணா ஒன்னு பண்ணலாம்‌. எனக்காக இவ்ளோ பெரிய கிஃப்ட்டு தந்த உனக்கு, என்னால முடிஞ்ச ஒரு சின்னப் பரிசு. அங்கப் பாரு வெள்ளைக் காக்கா பறக்குது"

அவன் சிந்தனை செய்யாமல் வானைப் பார்த்திட, கன்னத்தில் கிடைத்ததே ஒரு அவசர முத்தம். அவனது ஓவியத்திற்கு அவளால் கொடுக்கப்பட்ட வெகுமதி அது. அதில் காதல் இல்லை; காமம் இல்லை; பால் பேதமில்லை; பாராட்டு மிகுதியில் தரப்பட்டது. ஆனால், அதைப் பெற்றவனோ நட்பினைக் கணக்கில் கொள்ளவில்லை. இது காதல், காதல், காதல் என்று அவனது முட்டாள் மனம் பைத்தியக்காரத் தனமாய்க் கூச்சலிட்டது. பெண்ணவள் தெளிந்த நீரோடை போல் இருக்க, இவன் தான் வெட்கமுற்றுத் தலைகவிழ்ந்தான். இவ்வளவு நேரம் விரல் மறைவில் ஒளித்துப் பிடித்திருந்த சிவப்பு மலரை அவள் முன் நீட்டினான்.

"ஹையா, ரோஸு..."

"இது... இதுவும் உனக்காகத் தான்"

"காலைல வர்ற அவசரத்துலப் பூ வைக்காம வந்துட்டேன். நல்லவேள..."

நண்பன் தானே என்ற உரிமையில் பூவை வாங்கி அவள் கூந்தலில் வைக்கப் போன நேரம், அந்த மூன்று வார்த்தைகளை அவன் உச்சரித்தான்

"ஐ லவ் யூ"

அவள் தலையில் சூடப் போன மலர் இப்போது அதன் உயர்வான தகுதியை இழந்துவிட்டது. அந்த மலரிதழ்களே முட்களாய் மாறி அவளது மாசற்ற கரத்தைக் குத்தின. நூறு முட்கள் ஒருசேர உள்ளத்தில் இறங்கிய வலியை முகத்திலும் பிரதிபலித்தாள். நண்பன் காதல்மொழி பேசியது அவளை நிலைகுலையச் செய்ய விரல்கள் தானாக நடுக்கமெடுத்தன. அவன் தந்த ரோஜா நழுவி பூமி மாதாவின் ஸ்பரிசத்தில் சரணடைந்தது.

"என்ன சொன்ன இப்போ? சரியா கேக்கல, அபி" செவிகளில் ஏதேனும் கோளாறா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றாள் பத்மா

"லவ் யூ, லோட்டஸ். ரொம்ப நாளா உன்கிட்டச் சொல்லணும்னு நினைச்சேன். இன்னைக்குத் தான் அதுக்கான தைரியமே வந்துச்சு. அதுவும் நீ கொடுத்த கிஸ்னால... லவ் யூ ஸோ மச். எனக்கானவ நீ தான்"

"இல்ல. விளையாடாத, அபி. நான் தப்பான அர்த்தத்துல அப்டிப் பண்ணல. உன் மேல இருந்த நம்பிக்கைல... அச்சோ, சொதப்பல், டோட்டல் சொதப்பல்... நான் உன்னை கிஸ் பண்ணது தப்புத் தான். ஒத்துக்குறேன். நீ என்னை வெறும் ஃப்ரென்டா பாக்குறன்னு நம்பி அதத் தந்தேன். ஆனா, நீ..."

"ஹே, ரிலாக்ஸ்‌... ஏன் டென்ஷன் ஆகுற? சட்டனா சொன்னதும் ஷாக் ஆயிட்டியா? ஒன்னும் அவசரம் இல்ல. நிதானமா உன் முடிவச் சொல்லு... நீ சொல்லலனாலும் ஒரு பார்வை பாரு. அதுலயே புரிஞ்சுப்பேன். நான் வெய்ட் பண்றேன். எவ்ளோ நேரம் ஆனாலும்..."

"நோ, அபி. நான் உன்னை அந்த மாரி பாக்கல. இதுவர எனக்கு உன் மேல எந்த ஃபீலிங்க்ஸும் வரல. யூ ஆர் மை பெஸ்ட் ஃப்ரென்ட். அன்டர்லைன் த வார்ட்; ஃப்ரென்ட்"

"அவசரப்பட்டு எதயும் டிசைட் பண்ணாத. நல்லா யோசி. யோசிச்சு முடிவு..."

"அபி... உனக்குப் புரியலயா? உன்ன எனக்குப் பிடிக்கும். இல்லன்னு சொல்லல. காதல்ங்குறது ஒரு மாயை. அந்த வலைல விழாம இருக்கத் தான் உன் ஹெல்ப்பக் கேட்டேன். இப்போ நீயே என்னை அந்தக் குழிலத் தள்ளப் பாக்குறியே. இது என்ன நியாயம்? உன்னை மட்டும் இல்ல; உன் ஆர்ட்ட டபுள் மடங்காப் புடிக்கும். அதுக்கான சன்மானம் அந்த முத்தம். உன்னோட கலைக்கு நான் கொடுத்த மரியாத... எல்லாம் என்னைச் சொல்லணும்; நீ மத்தப் பசங்கள மாரி இல்லனு நினைச்சேன்; நம்ம ஃப்ரென்ட்ஷிப்ப ஹன்ட்ரட் பர்சன்ட் மதிக்குறவனா உன்னைப் பாத்தேன். என் மிஸ்டேக் தான். நான் என் லிமிட்ல இருந்துருக்கணும்"

"நெஞ்சத் தொட்டுச் சொல்லு. இத்தன நாள் பழகுனதுல ஒரு செகன்ட் கூட என் மேல லவ் வரலாயா? என்னோட வாழ்க்கை ஃபுல்லா இருக்கணும்னு உனக்குத் தோணல"

"இல்ல, இல்ல... இந்தா உன் டிராயிங்; நீயே வச்சுக்க; கோவத்துலக் கிழிச்சு எறிஞ்சுடப் போறேன். ஃப்ரென்ட ஃப்ரென்டா மட்டும் பாக்கணும்னு இதப் பாத்து பாத்தாவது உனக்குப் புத்தி வரட்டும்"

"பத்மா..."

"ஒரு வார்த்த கூட இதுக்கு மேலப் பேசாத. உனக்கு அந்த அருகதயே இல்ல"

"நான் கொடுத்தப் பூவத் தூக்கி வீசிட்ட. டிராயிங்க திருப்பிக் கொடுத்துட்ட. அப்போ நீ எனக்குத் தந்தது?" என்று குதர்க்கமாகப் பேசியவன் அவளது கையை அழுந்தப் பற்றியிருந்தான்

"விடு... விடுன்னு சொன்னேன்" பலங்கொண்டு தனது கரத்தை விருட்டென்று உருவிக் கொண்டாள் பத்மா

"என்னடி சீன போட்ற? இதுக்கு முன்ன நான் உன் கையப் பிடிச்சது இல்லயா? இல்ல, நீ தான் என் தோளப் பிடிச்சுத் தொங்குனது இல்லயா?"

"உனக்கு இப்டி ஒரு முகம் இருக்கும்னு தெரிஞ்சுருந்தா எப்பவோ விலகிப் போய்ருப்பேன். நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத்திட்ட. கேனத்தனமா நானும் ஏமாந்து போய்ட்டேன். என் மூஞ்சுலயே முழிக்காத"

"நில்றீ... நீ தந்த முத்தத்த மட்டும் வச்சுட்டு, நான் என்ன பண்றது? அதயும் திருப்பி வாங்கிக்க"

தவறான நோக்கத்தில் அவன் மிக அருகினில் நெருங்க, அவள் சட்டென உயர்த்திப் பிடித்திருந்தாள் தனது காலணியை

"எதோ பழகுன தோஷத்துக்காகப் பாக்குறேன். இல்லனா, பிஞ்சுரும்... மத்தவங்க முன்னாடி வாலன்டியரா வந்து அசிங்கப்படாத. வெக்கம் மானம்னு எதாச்சும் இருந்தா காப்பாத்திட்டு ஓடிப் போய்டு" எனக் கூறிச் சென்றவளின் முகம் கோபத்தினால், கீழே கிடந்த மலரை விட, அதிகமாகச் சிவந்திருந்தது

"ப்ரியா, என்னை விட்டுப் போகாத... நான் செத்துருவேன்டி"

அவனைத் திரும்பிக் கூடப் பாராமல் பத்மா சொன்னாள் "அவ்ளோ கோழையா இருந்தா சாவுடா, மகனே. ரெண்டு வருஷ நட்பயே கொன்னுப் புதைச்சுட்ட. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?"

"இப்போ ஒன்னும் குறைஞ்சு போய்டல. ஐ ட்ரூலி லவ் யூ. என் நெஞ்சாங்கூட்டுல நீ தான் உச்சத்துல உக்காந்துருக்க. அந்த இடம் உனக்கு மட்டுந்தான் சொந்தம். எத்தன இயர்ஸ் வேணாலும் நான் வெய்ட் பண்றேன். கல்யாணம்னு ஆனா அது உன் கூட தான்" ஆழ்மனதில் இருந்து தோன்றியதை அவன் உரக்கக் கூறிட, அச்செய்தி அவனை விட்டுத் தூர தூர விலகிச் சென்றவளின் காதுகளில் தெளிவாகப் போய் சேர்ந்தது

அதற்கு அவள் உரைத்த பதில் இது தான் "கல்யாணமா? உன்னோடயா? அது நீ கட்டைலப் போனா கூட நடக்காது. குட் பை"

பத்மா அவ்வளவு எடுத்துச் சொல்லியும் அபிலாஷ் அடங்க மறுத்தான். அவளுக்கு ஓயாமல் அலைபேசியில் அழைத்துத் தொல்லை செய்தான். தொந்தரவு தாங்காமல் இவள் அவனது எண்ணை ப்ளாக் செய்திட, அடுத்த நாள் நேரிலேயே பார்க்கக் கிளம்பி விட்டான். வீடு வீடாக நோட்டீஸ் கொடுக்கும் சாக்கில் இவள் வீட்டுக் கதவையும் அவன் தட்டினான். அவனை வாசலில் கண்டவளுக்குப் பேயைப் பார்த்தது போல தூக்கி வாரிப் போட்டது‌. அவனைச் சமாதானம் சொல்லி மற்றவர் கண்ணில் படும்முன் அனுப்பி வைத்தாள்.‌ அன்றிலிருந்து அவனை ப்ளாக் செய்யவே தடுமாறினாள்‌. மற்றபடி அவனது அழைப்பையும் ஏற்க மறுத்தாள்‌. அவன் என்ன பேசினாலும் குறுஞ்செய்தி வாயிலாகவே மறுமொழி அனுப்புவாள். அதிலும் ஓரிரு சொற்களைத் தவிர்த்து எதுவும் இருக்காது. ஆம், இல்லை அதை விட்டால் நான் உன்னை வெறுக்கிறேன் என்பவைத் தாம் வழக்கமான பதில்கள். அதீதக் கோபம் வந்தால் மட்டும் நான்கு வார்த்தைகள் அதிகமாகப் பேசுவாள்.

இன்று அதிகாலை அரைகுறை தூக்கத்தில் நேரம் பார்க்க அலைபேசியை எடுத்தவள், திரையில் தெரிந்த அறிவிப்பைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டாள். மொத்தமாக நாற்பத்தி எட்டுத் தவறிய அழைப்புகள் மற்றும் பதினாறு வாட்ஸ்ஆப் செய்திகள்; அத்தனையும் அபிலாஷ் இடம் இருந்து வந்தவை தாம். அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளின் உறக்கம் கலைந்து வெகு தொலைவில் போய் விழுந்தது.

அந்த அரைக் கிறுக்கனை என்ன செய்ய!