• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 22

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
பத்மாவுடைய அலைபேசி அத்தனை அழைப்புகளையும் மௌனமாய்த் தாங்கிக் கொண்டதால் அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது‌. அர்த்த ராத்திரியில் கண்டபடி அழைப்புகள் வந்தால் எந்தக் கணவனாக இருந்தாலும் சீறுவான் தான். நம் நல்ல நேரம் அலைபேசி ஒலி எழுப்பவில்லை என நினைத்தாள். ஆனால், அதை சைலன்ட்டில் இட்டதே விக்ரம் என்பதை அவள் அறியவில்லை. அபிலாஷை நினைத்து எரிச்சல் மண்ட அவனது எண்ணைத் தடைப் பட்டியலுக்குள் நகர்த்தினாள். கைப்பேசியைத் தூக்கி வீசிவிட்டு நிம்மதியாகக் குளியலறைக்குள் புகுந்தாள். அவன் என்ன தன்னைத் தேடிக் கொண்டு கேரளா வரையுமா வரப் போகிறான் என்றவொரு தைரியமே அவளின் மன அமைதிக்குக் காரணம்.

கூந்தல் முதல் பாதம் வரை தேய்த்து தேய்த்துக் குளித்தப் போதிலும் உடல் வலி மட்டும் போன பாடில்லை. சோம்பலுடனே வெளியே வந்தவளை அந்த மாடுலார் கிச்சன் வா வாவென அழைத்தது. உள்ளே நுழைந்ததும் பசி கிளறி எழுவதைத் தடுக்க முடியவில்லை. பாலை அப்போது தான் அடுப்பில் வைத்திருந்த கிரிஜா, அவளையே தோசை சுடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். ஒரு கரண்டி மாவை எடுத்துக் கல்லில் வார்த்தவளுக்கு அடிவயிறு பிசைய ஆரம்பித்தது.

‘அட, கடவுளே. நானே இன்னைக்குத் தான் சமையக் கட்டுலக் காலெடுத்து வச்சுருக்கேன். அதுக்குள்ள என்ன இது? இந்த உடம்புக்குத் திடுதிப்புனு என்ன கேடு வந்துச்சோ... அய்யோ... அப்பா... வலிக்குதே’

வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் நெளிந்த தருணத்தில் பால் பொங்கி வழிந்தது. நெருப்பும் பாலும் கட்டிக் கொள்ள புஸ்ஸென்ற சத்தம் கேட்கவே பட்டென்று அடுப்பை அணைத்தாள். அதற்கு மேல் நிற்க முடியாமல் தரையில் காலைக் கட்டி அமர்ந்து கொண்டாள்‌. அவள் வார்த்த தோசையோ திருப்பிப் போட ஆள் இல்லாமல் கருகத் தொடங்க, அந்நேரம் கிரிஜா திரும்பி வந்திருந்தார்.

“அடி அம்மாடி. தோசக் கல்ல ஏன் தீச்சு வைச்சுருக்க. ஒரு தோசய ஊத்தச் சொன்னதுக்கா...” என்று அவர் படபடக்க

“ஸாரி, அத்த. மன்னிச்சுருங்க” என்றவளோ அறைக்கு ஓடி வந்து விட்டாள்

இந்த அரக்கத் தனமான வயிற்று வலிக்குப் பின்னால் இருப்பது மாதவிடாய் என்பதை விரைவிலேயே அவள் உணர்ந்தாள். அத்துடன் நாப்கினை உபயோகித்துவிட்டுக் கட்டிலில் வந்து படுத்தவள் புழுவைப் போல சுருண்டு கொண்டாள். பற்களைத் துலக்கியவாறு அங்கு வந்த விக்ரம் அவளைப் பார்த்துவிட்டு முதலில் தூங்குகிறாள் என்றே எண்ணினான். மெல்லிய முணகல் சத்தத்தையும் முகத்தை மறைத்திருந்த கூந்தலைத் தாண்டி வெளியே தெரிந்த சிறு கண்ணீர்த் துளியையும் கண்டுகொண்டவன் உடனே வாயைக் கொப்பளித்துத் துப்பினான்.

“அம்மா... யம்மா... மம்மி... அம்மா...” உச்சஸ்தாபியில் அவன் குரல் கேட்க, பத்மா அரண்டு போய் எழுந்து அமர்ந்தாள்

“ப்பா... ஏன் இப்டிக் கத்துறீங்க?”

“நீ ஏன்‌ மூலைலப் படுத்து அழுதுட்டு இருக்க? வீட்டு நியாபகமா?”

தன்னை அறியாமல் வலியில் அரற்றிக் கொண்டிருந்ததை அப்போது தான் உணர்ந்தவள் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினாள் “அதில்ல... அது வந்து... வந்து...”

“காலைலயே ஏன் சத்தம் போடுற, விக்ரம்?” தோசைக் கரண்டியைக் கையில் பிடித்தவாறு கிரிஜா வினவினார்

“இங்க வாயேன். கல்யாணம் பண்ணு, பண்ணுனு மனுஷனக் கொலையாக் கொன்னு எடுத்தல்ல. வீட்டுக்கு வந்த மருமகள அழ வைக்கிறியே; என்ன மாமியார் நீ?”

“ஏன்டிம்மா, ஒரே ஒரு தோசைக்கா இவ்வளவு அலப்பற. அத்தை எதாவது தப்பா பேசிருந்தா மறந்துட்றீ. தோச ஊத்த வராதுன்னா, தெரியலன்னு சொல்லி இருக்கலாமே. உன் புருஷன்கிட்ட இப்டியா கம்ப்ளெய்ன்ட் பண்ணுறது?” என்று அவர் வெளிப்படையாகவே கேட்டிட

தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவள் பதிலளித்தாள் “அய்யோ, அத்த. நான் உங்களப் பத்தி எதுவும் சொல்லல. என் பிரச்சனையே வேற”

“அழற அளவுக்கு என்ன ப்ராப்ளம்?” விக்ரம் விடாக் கொம்பனாய்க் கேட்டான்

“நான் அத்தைகிட்டவே சொல்லிக்குறேன். நீங்க போங்க”

“அடிப்பாவி. உனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசுனா...”

அப்பொழுது அவர்களுக்கு இடையே வந்து நுழைந்தாள் அந்த வீட்டு மூத்த மருமகள் சுப்ரதா “என்ன, என்ன, என்ன இங்கச் சலம்பல்? கொழுந்தனாரே, பொண்டாட்டிக்கு ரொம்பத்தேன் சப்போர்ட்டு. நீங்க சப்போட்டாலாம் அப்புறம் வித்துக்கலாம். கொஞ்சம் தள்ளுங்க. யாருக்கு என்ன சங்கடம்னு நான் விசாரிக்கிறேன்”

“இவங்க பெரிய சிபி-சிஐடி. அப்டியே இன்வெஸ்டிகேஷன் பண்ணி அறுத்துத் தள்ளிட்டாலும்...”

“கொழுந்து... உங்கள விட நாலு வயசு மூத்தவளாக்கும். மரியாத முக்கியம்”

“ஓகே, சுப்பு... அண்ணியாரே... உங்கத் தலைமைலயே விசாரணைய நடத்துங்க. ஜருகண்டி”

அறைக்குள் சென்ற சுப்ரதா பத்மாவின் அருகே அமர்ந்தாள் “இப்போ சொல்லு, தங்கச்சிமா. உனக்கு என்ன வருத்தம்?”

‘ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு இப்டி ரௌண்டு கட்டி அடிக்குறாய்ங்களே. என்னை விட்ருங்கடா. நான் படுத்துத் தூங்கணும். அவ்வ்வ்...’ மூளைக்குள் புலம்பினாலே தவிர வாய் வார்த்தையாய் ஒன்றும் வரக் காணோம்

“ஏன் திருவிழாலக் காணாமப் போன மாதிரி இந்த முழி முழிக்கிற? வாய்ல என்ன, லட்டு உருண்ட எதும் வச்சுருக்கியா?” என அவன் அடாவடி செய்ய

“கொஞ்சம் வெளியப் போறீங்களா; ப்ளீஜ்...” என்றாள் சுப்ரதா

அவன் அப்பால் போனதும் “பீரியட்ஸா?” என்று இவள் கேட்க

“ஆமா” வேகமாகத் தலையாட்டினாள் ப்ரியா

“அட, கிறுக்கி. இதலாம் எங்க வீட்டுல சகஜ... ஸாரி, ஸாரி. நம்ம வீட்டுல பீரியட்ஸ் பத்தி ஃப்ரீயா, சகஜமா பேசலாம். இதுல மறைக்குறதுக்கு என்ன இருக்கு?”

அதற்கும் அவளிடம் இருந்து மௌனமே மறுமொழியாய்க் கிடைத்தது

‘அப்பா முன்னாடி இந்தப் பேச்ச எடுத்தாலே மங்கை சாமியாடிடும். அத்தான் விக்ரம் இருக்கவும் வார்த்தயே வரல. தயக்கமா இருந்துச்சு’ அவளது உள்ளம் சத்தமின்றி உண்மையை உரைத்தது

“ரூம்லயே படுத்து ரெஸ்ட் எடு. நான் போய் டீயும் சாப்பாடும் இங்கயே எடுத்தாரேன். வயிறு வலிக்குதா, கண்ணு? கசாயம் குடிச்சா சரியாய்டும்” என்று வாய் மலர்ந்த கிரிஜா வெளியே வர, அவர்கள் பேசுவதைக் காதாரக் கேட்டுக் கொண்டிருந்தான் அவரது அருமைப் புத்திரன்

தனது மனைவி எதற்காக அழுதிருப்பாள் என்று தெரிந்து கொள்வதில் அப்படி ஒரு ஈடுபாடு அவனுக்கு

“இதுக்கா இந்தக் குதி குதிச்ச?”

“ஷாரிம்மா. ஒரு ஆவேசத்துல...”

“ம்ம்ம்... புரிஞ்சு போச்சு. உனக்குப் புதுசாக் கல்யாணம் ஆகிருக்கு; ஒத்துக்குறேன். அதுக்குன்னு இப்டியா? நீ உணர்ச்சி வசத்த அடக்கு; சென்டிமென்ட்டக் கட்டுப்படுத்து. அப்ப தான் உனக்கு நல்லது” என வடிவேலு பாணியில் அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றார்

உள்ளே கிரிஜா ஓரகத்தியின் கரம் பற்றி ஆதுரமாகப் பேசினாள் “என்னை உன் அக்கா மாரி நினைச்சுக்க. மனசுல எதையும் வச்சுக்காம ஓப்பனா பேசிடணும், சரியா? இப்போ படுத்துக்க. என்கிட்ட ஹாட் வாட்டர் பேக் இருக்கு. அடி வயித்துல வச்சுட்டுப் படுத்தா, சுகமா தூக்கம் வரும்; வலி தெரியாது. நான் போய் எடுத்துட்டு வந்துட்றேன்”

மலம்புழாவில் இரு நாட்களைக் கடத்திவிட்டு, விக்ரம் கோவைக்குப் புறப்படத் தயாரானான். போகும் போது மனையாளையும் தன்னோடு அழைத்துச் சென்றான். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கியதும் அவளை விடுதிக்கு அனுப்பி வைக்கப் பார்த்தான். அவளோ அவன் இருக்கும் இடத்தைக் காண வேண்டும் எனக் கூடவே போனாள். அவர்கள் சென்று நின்ற இடம் கணபதியில் இருந்த ஒரு அடுக்கு மாடி வீட்டின் முன்புறம். கீழடுக்கில் ஒரு குடும்பம் வசிக்க, அதன் முன்னால் ஒரே கூட்டமாக இருந்தது. அங்கு இட்லி மாவு விற்பனைக்குக் கிடைக்கும் என்ற பலகை தொங்கவே, கூட்டத்திற்கான காரணம் பத்மாவுக்கு விளங்கிவிட்டது. இவர்கள் படியேறி மேலடுக்கிற்குச் செல்ல கும்மிருட்டாகக் கிடந்தது.

விக்ரம் விளக்குகளை ஒளிர விட்டு “உக்காரு” என்றான்

வெளிச்சத்தில் வீட்டின் அமைப்பு தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பத்மா விருந்தாளியாக வந்த வீடல்லவா? நாமும் அதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அந்த வீட்டினுடைய இரு பக்கங்களிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு அறைகள். அதில் ஒருபுறம் சமையலறையும் விக்ரமின் அறையும் இருந்தன. நடுவில் இருந்த பரந்து விரிந்த வரவேற்பறையில் ஒரு உணவு மேசை மற்றும் ஆறு நாற்காலிகள் கிடந்தன. அதற்கு நேரெதிரே சுவற்றில் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி; அளவு ஐம்பது இஞ்சுகள் வரை இருக்கலாம் என அவளது மூளை அளவுகோல் இல்லாமலே சொன்னது. அவள் சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, இடப்பக்க அறைக் கதவு திறந்து மூடப்பட்டது போல ஒரு சத்தம்.

ஈர முகத்தைத் துண்டால் துடைத்தவாறு விக்ரம் அங்கு வர “இங்க நம்மளத் தவிர வேற யாராச்சும் இருக்காங்களா?” என்று அவள் சந்தேகம் கேட்டாள்

“ஆமா... ஒரு ரத்தக் காட்டேரி... அதோ அந்த ரூம்ல இருக்கு”

“ஹஹா... பயந்துட்டேன். நான் போய் ரிஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்”

பத்மா அவனது அறைக்குள் சென்றுவிட, டீசர்ட்டை உடுத்திக் கொண்டே ராம் இடப்புற அறையில் இருந்து வெளியே வந்தான்

“ஏன்டா‌, உன் வொய்ஃப கூட்டிட்டு வரேன்னு முன்னவே சொல்ல மாட்டியா?”

“சட்டனா வந்துட்டா, டா. நான் என்ன பண்ண? ஆமா... நீ ஏன் பதர்ற? பூமக்ஸ் உள்ளாடைகளோட சுத்திட்டு இருந்தியா?”

“ம்ம்ம். மண்ணாங்கட்டி...” ராம் நண்பனின் காதைக் கடிக்க

அவனைக் கண்டு புன்னகையுடன் வெளிப்பட்டாள் பத்மா “ஹாய்... உங்கப் பேரு ர... ரா‌...”

“சூப்பர் சிங்கருக்கு ஆள் எதும் எடுக்குறாங்களா? ராகம் பாடிட்டு இருக்க” தாலி கட்டியவன் அவளின் காலை வாரினான்

“ராம்குமார். வெல்கம் டு அவர் ஹௌஸ்” அவனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்

“யா, யா, ஆர். கே. தான? சி. ஐ. டி. ல இவரோட ஒன்னா படிச்சவங்க. காலேஜ்மேட்னு சொன்னாங்க. ஆனா, ரூம்மேட்டா இருப்பீங்கன்னு எதிர்பாக்கல. அன்னைக்கு கிரீன் ட்ரீ ரெஸ்டாரன்ட் வாசல்ல கூட...”

“யெஸ், கூர்கா வேலை பாத்துட்டு இருந்தான். அவனே தான் இவன்” மீண்டும் நையாண்டி வார்த்தைகள் விக்ரமிடம் இருந்து

“என்னங்க... ஏன் இப்புடி?”

“ஹே, என்னப்பா? அவன் எதும் தப்பா எடுத்துக்க மாட்டான்‌. சுட்டுப் போட்டா கூட அவனுக்குக் கோவம் வராது‌. அவன் ஒரு செல்லக் குட்டி”

அதை ஆமோதிப்பவன் போல சிரித்த ராம்குமார் “டின்னர் இருந்து சாப்டுட்டுத் தான் போகணும். இப்போதைக்கு சேமியா பண்றேன்‌‌. அட்ஜஸ்ட் கரோ” என்றபடி சமையலறைக்குப் போனான்

“தேங்க் யூ, அண்ணா” என்று கூறி பத்மா தலையாட்ட

“என்ன உடனே சாப்புட ஒத்துக்கிட்ட; ரெண்டு மூணு தடவ வேணாம்னு சொல்லிட்டு, அப்புறமா சரின்னு சொல்லுறப் பழக்கம்லாம் இல்லயா?” இடக்கு மடக்காய் வினவினான் விக்ரம்

சேட்டைக்கார பையன்!