• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 24

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
கூடவே பணிபுரியும் ராமிற்கு ஜெனிஃபரைப் பற்றித் தெரியாமல் இல்லை. அவள் சென்னை வந்த நாள் முதல் ஒரு நொடி கூட வருத்தத்தை உணரக் கிடையாது. கோயம்புத்தூரில் தனக்கொரு காதலன் இருக்கிறான் என்பதையே வெளிக்காட்டிக் கொள்ள மறுத்தாள்‌. புது இடம், புது ஆட்கள், புது வாழ்வு என வெயில் கண்ட பறவை போல் உல்லாசமாகச் சுற்றித் திரிந்தாள்‌.

விக்ரம் அந்த அலுவலகத்தில் பணிக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு ராமிற்கு அழைத்திருந்தான். நீண்ட நாட்கள் கழித்து அன்று தான் இருவரும் பேசிக் கொண்டனர். அலைபேசியின் ஊடே ராம் ஜெனியின் நடவடிக்கைகளை எடுத்துக் கூறியிருக்கலாம்‌. ஆனால், தன் நண்பன் சொல்லிக் கேட்பவன் அல்லன் என இவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. நேரில் வந்து அவனே பார்த்து அறிந்து கொள்ளட்டும் என்றெண்ணி எதையும் கூறாமல் மறைத்தான். அது மட்டுமின்றி இது போன்றதொரு உயர்மட்ட அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டால், தோழனின் வாழ்க்கைக்கு உபயோகரமாக இருக்கும் எனவும் ராம் நம்பினான்.

அடித்துப் பிடித்து எம். என். சி. வைத்தப் பரீட்சைகளில் தேர்ச்சியாகி, தனக்கான வேலையில் சென்று அமர்ந்துவிட்டான் விக்ரம். ராம்குமாரை நன்றியுடனும் நட்புடனும் ஆரத் தழுவியவன் அடுத்ததாக ஜெனியைக் காணாமல் அலைபாய்ந்தான். என்னைத் தேடி இவ்வளவு தொலைவு வந்து விட்டாயோ, கண்ணாளா என அன்பொழுகப் பேசி அவள் தன்னை அணைத்து முத்தங்கள் தருவாள் என்றல்லவா அவன் கனவு கண்டு வைத்திருந்தான்‌. அவளோ அவனைப் பார்த்ததும் முன்பின் தெரியாதவள் போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கைப்பேசியின் மூலமாகப் பேசினால் அவள் வழிக்கு வரவில்லை என்று தானே நேரில் வந்து நின்றான்‌. இப்போதோ நிலைமை அதை விடவும் மோசமாகிப் போனது. பல்வேறு முயற்சிகளின் பலனாக, ஒரு மாலை வேளையில் விக்ரமைச் சந்திக்க அவள் முன்வந்தாள். அதுவும் கள்ளக் காதலனைக் காண வருவது போல், அந்தச் சந்திப்பைப் பற்றி அலுவலகத்தில் யாரும் அறியா வண்ணம் ரகசியம் காத்தாள். இந்த அதிசய காதலர்கள் ஒரு பழச்சாறு விற்பனையகத்தில் அமர்ந்து பேசத் தொடங்கினர்.

"ஹலோ... நைஸ் டு மீட் யூ" மூன்றாம் நபரிடம் பேசுவது போலவே இருந்தது அவளின் உடல்மொழி

"மீ டூ. என்ன ஆர்டர் பண்ணட்டும், ஜெனி?"

"நானே ஆர்டர் பண்றேன்" என்றவள் வேண்டியதைச் சொல்லிப் பணமும் செலுத்திவிட்டு வந்தாள்

அவளிடம் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தவன் எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தடுமாறினான் "தென்..."

"உன் லைஃப் எப்டிப் போகுது?" அவனது மன வருத்தம் தெரிந்தும் யாரோ மாதிரி கேட்டாள்

"நீயில்லாம..."

அவனது கண்ணீர்க் கதையைக் காதில் வாங்க அவள் தயாராயில்லை. அவன் நினைத்ததைக் கூறவே விடாமல் இடைமறித்தவள் அவளைப் பற்றிய பேச்சினை வளர்த்தாள்.

"யூ நோவ், நெக்ஸ்ட் வீக் நான் ஆன்சைட் போறேன். கனடால, வேன்கூவர் சிட்டி. கூகுள்ல சர்ச் பண்ணிப் பாத்தேன்; அந்த வியூ இருக்கே... ப்பா, வேற லெவல். கிட்டத்தட்ட ஒரு ஐலேன்ட் மாரியே ஃபீல் தருது. டிக்கெட் கன்ஃபார்ம் ஆய்டுச்சு. ஃபர்ஸ்ட் டைம் அவ்ளோ தூரம் ஃப்ளைட்லப் போகப் போறேன். ஐ அம் ஸோ எக்ஸைடட்" இது அவனுக்கு மிகவும் புதிய செய்தியாய் இருந்தது

"எப்ப முடிவாச்சு? இதப் பத்தி ஒரு வார்த்த கூட இன்ஃபார்ம் பண்ணவே இல்ல"

"எல்லாம் என் ஹார்ட் வொர்க்குக்குக் கிடைச்ச ரிவார்ட். உன்னை அப்செட் பண்ண வேணாமேன்னு தான் சொல்லல"

"திடீர்ன்னு இந்தியாவ விட்டுப் போறேங்குற. முன்னாடியே இதப் பத்திப் பேசுறதுக்கு என்ன? நான் சென்னை வரலைன்னா, சொல்லாமக் கொள்ளாமப் போயிருப்பப் போலயே"

"உன்கிட்ட இத ஷேர் பண்ணாம வேற யார்ட்ட ஷேர் செய்வேன்... கண்டிப்பா சொல்லிருப்பேன். அங்கப் போய்ட்டு வீடியோ கால்ல சர்ப்ரைஸா காட்டிருப்பேன்"

அவள் வெளிநாடு செல்லப் போவதே அவனுக்குப் பேரதிர்ச்சி. வேன்கூவரில் இருந்து செய்யும் காணொளி அழைப்பு இதை விடவா அதிக ஆச்சரியத்தைத் தந்துவிட முடியும்? நிறைய பேசத் தோன்றினாலும் தொண்டைக் குழியைத் தாண்டி விக்ரமிற்கு வார்த்தை வரவில்லை. அவள் வாங்கித் தந்த பழரசம் உள்ளே இறங்கவும் இல்லை. உள்ளத்தில் பேரிடியைச் செலுத்தியவளோ உடனடியாக இடத்தைக் காலி செய்தாள்.

அதன் பிறகு அவளைக் காணும் பாக்கியமே அமையாமல் போய்விட்டது. விமான நிலையத்தில் நின்று கொண்டு புறப்படப் போவதாக ஒரே ஒரு செய்தி அனுப்பினாள். பின்பு, கனடாவில் இறங்கியதும் இரு விரல்களை 'வி' வடிவில் காட்டி அமைதியைக் குறிக்கும் வகையில் செல்ஃபி ஒன்றைத் தட்டிவிட்டாள். அதைப் பார்த்ததில் இருந்து அவனது மன நிம்மதி அடியோடு வீழ்ந்து போனது. பயன்படுத்திய பிறகு தூக்கி எரியப்படும் டிஷ்யூ தாளைப் போல உணர்ந்தான்.

அந்தளவிற்கு அடிபட்டும் மானங்கெட்ட இதயம் அவன் புத்தி சொல்வதைக் கேட்கவில்லை. ஜெனியை நலம் விசாரிக்கும் பொருட்டு அவ்வப்போது மெசெஜ் செய்வதைத் தொடர்ந்தான். பழக்கமில்லாத அந்நிய தேசத்தில் வசிக்க நேர்ந்ததால், தொடக்கத்தில் சற்றே அவள் மிரண்டாள். அந்நேரங்களில் எழும் பரிதவிப்பைப் போக்கிக் கொள்ள மட்டும் விக்ரமுடன் உரையாடுவாள். அந்த ஊர் பழக பழக இவனுடனான செய்திப் பரிமாற்றத்தை நிறுத்திக் கொண்டாள்.

கனடா சென்றதில் இருந்து எண்ணி இருபது நாட்களில் மேலதிகாரி ஒருவனை விரும்ப ஆரம்பித்திருந்தாள் ஜெனிஃபர். குணம் பிடித்தமா, அவனது பணம் பிடித்தமா என அவளது நெஞ்சத்தினைக் கிழித்துப் பார்த்தால் தான் தெரிய வரும். அவள் விரித்தக் காதல் வலையில் முப்பத்தாறு வயது தலைமை தொழில்நுட்ப அதிகாரி பென் மேத்யூஸ் விருப்பப்பட்டுச் சிக்கிக் கொண்டான். இரண்டு மாதங்களில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் விக்ரமுடனான அவளது உறவை அலைபேசி அழைப்பிலேயே முறித்துக் கொண்டாள்.

மூன்றாம் மாதம் திருமணம் ஆன பிற்பாடு தன் வரவேற்பிற்கான அழைப்பிதழை முன்னாள் காதலனுக்கு அனுப்பி வைத்தாள். கல்லூரியில் உடன் பயின்ற மாணவர்களுக்கு அது கூட கிடையாது. எங்கே தன் பழங்காதல் கதை கணவனுக்குத் தெரிந்து போகுமோ என்ற பயமே அதற்குக் காரணம். பத்திரிக்கையில் 'மிஸ்டர் அன்ட் மிஸஸ் பென் இன்வைட் யூ' என்று படித்தபோது விக்ரமிடம் ஓர் உணர்ச்சியும் தென்படவில்லை. அவள் முற்றாக அவனைத் தலை முழுகிய நாளன்றே பாதி செத்துவிட்டான். வரவேற்பு நிகழ்விற்கு நேரில் போய், அவளை வேற்றாளுடன் கண்டு, மீதி உயிரையும் போக்கிக் கொள்ள அவன் துணியவில்லை.

விக்ரமிற்கு நாள் ஆக ஆகத் தாடி வளர்ந்தது; குடிப் பழக்கம் பெருகியது; புகை வாடை எப்போதும் அவனைச் சூழ்ந்து வீசியபடி இருந்தது. கண்களைச் சுற்றிலும் கருவளையம் விழுந்து, முகம் ஒடுங்கிப் போய், வயிறு பெருத்துப் பார்க்கச் சகியவில்லை. அலுவலகத்திற்குப் போனாலும் வேலை செய்யவே வடிவமைக்கப்பட்ட எந்திர மனிதனைப் போல நடந்து கொண்டான். யாரையும் நிமிர்ந்து பார்த்துப் பேச அவன் விரும்பவில்லை. வசீகரமான அவனது சிரிப்பையே மறந்து போயிருந்தான்.

தனது நண்பன் இந்த அளவிற்கு உடைந்து போவான் என்று ராம்குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாள் விக்ரம் அலுவலகக் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழேயே வெறித்துப் பார்த்திருக்க, எங்கே அவன் தற்கொலை ஏதும் செய்து கொள்வானோ என நினைத்து ராம் பயந்தே போனான். அதற்கு மேலும் தாமதியாமல் அவனைத் தன் சொந்த முயற்சியில் உளவியல் மருத்துவரிடம் அழைத்துப் போனான். விக்ரம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாத அந்தகாரத்தில் மூழ்க ஆரம்பித்திருந்தான். அதனால் சிரமம் பாராமல் அவனது சிகிச்சைக்கான செலவையும் இவனே ஏற்றுக் கொண்டான்.

சிகிச்சை தொடங்கிய சில வாரங்களில் விக்ரம் அவனது காதல் தோல்வியை மனதார ஏற்றுத் தெளிய முயன்றான். ஜெனியின் மீது எந்தக் கோபாவேசத்தையும் திருப்பாமல், தன் மீதும் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் மருத்துவரின் உதவியோடு மனதை ஒருநிலைப் படுத்தினான். சிறிது சிறிதாகத் தன்னிலை உணர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிகள் எடுத்தான். நிறைய நபர்களுடன் பழகிப் புதிய புதிய நண்பர்களைச் சேமித்தான். தனிமை தன்னை நெருங்க விடாமல் காக்க அவர்களுடனே நேரத்தைக் கடத்தினான்.

கோயம்புத்தூருக்குச் சென்றால் அவளின் நினைவுகள் எழும்பித் தன்னைக் கொன்று விடுமோ என நீண்ட நாட்களாகத் தயங்கி சென்னையிலேயே காலத்தை ஓட்டினான். மனதின் ரணம் ஆறி வெறும் தழும்பாகிப் போக, புது வேலையோடு ராமை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பிவிட்டான். தனக்கான துணைவியையும் இங்கேயே தேடிக் கொண்டான். அவன் வாழ்வில் விளக்கேற்ற வந்தவள் வாழ்வு முழுமைக்கும் துணையாக வருவாளா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விக்ரம் - பத்மப்பிரியா இணை கோவை வந்து ஐந்து வாரங்கள் கழித்து...

"ஹலோ, விக்ரம்‌. வொர்க் முடிஞ்சு வந்தாச்சா? டீ, காஃபிலாம் சாப்டாச்சா?"

"இப்போ தான் வந்தேன். காஃபி போட்டுத் தர ஆள் யாரும் இல்லயே"

"கடையிலப் போய்க் குடிக்குறது தான"

"இருந்தாலும் வீட்டுலப் போட்ற மாரி வருமா? ஹ்ஹூம்..."

அவன் ஏக்கப் பெருமூச்சு விட பத்மாவிற்கு அவனது தாத்பரியம் புரியாமல் இல்லை. மாலை வீடு வந்ததும் காஃபி போட்டுத் தர கணவன் அவளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் என்பதே அதன் அர்த்தம்.

"இத்தன நாள் நீங்களா தான போட்டுக் குடிச்சீங்க. இப்போ மட்டும் என்னவாம்?"

"ஒன்னுமில்லயே. கல்யாணம் ஆன பின்னாடியும் சிங்கிளா சுத்துறக் கொடுப்பன யாருக்கு அமையும்? எனக்கு மட்டுந்தான் வாச்சுருக்கு... ஐ அம் வெரி லக்கி"

"தெரிஞ்சா சரி"

"இந்நேரம் உன் அக்கா மட்டும் இங்க இருந்தா சூப்பரா காஃபியப் போட்டு வந்து நீட்டிருப்பாங்க. ஆமா, அவங்க எப்டி இருக்காங்க? கல்யாணத்துக்கு அப்றம் பாக்கவே முடியல"

திருமணத்திற்கு அடுத்த நாள் மாடியில் நடந்த சண்டையைப் பற்றி அவள் இன்னுமே வாய் திறக்கவில்லை "அவங்களுக்கென்ன... எப்பவும் போல... இருப்பாங்க... விக்ரம், நாளைக்கு சன்டே தான?"

"ஆமா, சன்டே..."

"அம்மா ரொம்ப நாளா மருதமலைக்குப் போய்ட்டு வரச் சொல்லிட்டே இருக்காங்க. நல்லபடியா எனக்குக் கல்யாணம் முடிஞ்சா, என் கையாலக் காணிக்கை போட்றதா வேண்டுதல் வச்சாங்களாம். வாங்களேன், போய்ட்டு வந்துருவோம்"

"டீகே" அவனும் வரச் சம்மதித்தான்

அடுத்த நாள் விக்ரம் மகிழுந்தை எடுத்துக் கொண்டு கூடவே ராமையும் இழுத்துச் சென்றிருந்தான். தனியாகப் பேருந்தில் வந்த ப்ரியா, மருதமலை அடிவாரத்தில் அவர்களுடன் இணைந்து கொண்டாள். சூரியன் உச்சியை அடையுமுன் மூவருமாக மலையேறி ஆகிவிட்டது. எம்பெருமான் முருகனை வணங்கி உண்டியலில் நேர்த்திக் கடனும் செலுத்தியாயிற்று. மேலிருந்து பார்த்தபோது அந்நகரத்தின் கட்டிடங்கள் யாவும் தீப்பெட்டி அளவில் சுருங்கித் தெரிந்தன. விக்ரம் அவற்றைக் கண்டு ரசித்தவாறு இருக்க, அருகே சென்ற ப்ரியா ஆசையாய் அவன் கரத்தைப் பற்றினாள்‌.

"என்ன தீவிரமான யோசன?" ஏதோ கேட்க வேண்டுமென்று கேட்டு வைத்தாள்

"இல்ல, ஜெனி கூட ஒரு தடவ இங்க வந்துருந்தேன்..."

அவன் முழுதாகக் கூறி முடிப்பதற்குள்ளாகவே, பத்மாவிற்கு எங்கிருந்தோ புசுபுசுவெனக் கோபம் வந்து ஏறிவிட்டது

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!