• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 25

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
மலம்புழாவில் இருந்து கோயம்புத்தூர் வந்த அடுத்த நாள் தொடங்கி, பத்மப்பிரியா வழக்கம் போல பணிக்குச் சென்றாள்‌. விக்ரமின் சொல்படி முன்போலவே விடுதியில் தங்கிக் கொண்டாள். திருமணத்திற்குப் பின் மங்கை அடிக்கடி அழைப்பதும் இவளின் வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பதுமாக இருந்தார். அவர் கேட்கும் போதெல்லாம் விக்ரம் இரவுநேர வேலைக்குச் செல்வதாகவும், தனியே தன்னை விடுத்துப் பணிக்குப் போக அவருக்கு விருப்பம் இல்லை எனவும் இவள் கூறி வைத்தாள். அதனாலேயே வாடகைக்கு வீடு பார்த்து இருவரும் ஒன்றாகத் தங்கவில்லை; விடுதி அறை தான் பாதுகாப்பானது எனத் தன் கணவன் கருதுவதாகச் சமாளித்தாள். இந்தப் பொய்கள் அனைத்தும் விக்ரமும் இவளும் சேர்ந்து புனைந்தவை தாம். இவற்றையே விக்ரம் அவனுடைய வீட்டாரிடமும் சொல்லி வைத்திருக்கிறான். இருவரில் ஒருவர் மாற்றிப் பேசினாலும் வசமாக மாட்டிக் கொள்வார்கள்; இவர்களது ஒரு வருட ஒப்பந்தம் வெளியே தெரிந்தால் நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பத்மா விக்ரமிற்கு அழைப்பாள்‌. இல்லையேல், அவன் இவளுக்கு ஒரு குறுஞ்செய்தியையாவது அனுப்பி வைப்பான்‌. அலைபேசியிலேயே பேசிக் கொண்டிருக்கிறோமே, அவனைப் பார்த்து எத்தனை நாட்களாகிப் போயின என இவளுக்குச் சிறு வருத்தம் தோன்றியது‌. ஆகவே தான், மங்கையின் வேண்டுதலை நிறைவேற்றும் சாக்கில் அவனையும் சந்திக்கலாம் என்றெண்ணிக் கோவிலுக்கு வரவழைத்தாள். அவன் ராமைத் துணைக்கு அழைத்து வந்ததைக் கூட ப்ரியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முதன் முறையாகத் தன் வளையத்தைவிட்டு வெளிவந்து மையலோடு கரம் பற்றுகையில், அவன் ஜெனி பெயரை எடுத்தது முற்றிலும் தவறாகிப் போனது.

அக்கணம் பத்மாவிற்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது என்னவோ உண்மை‌. அதை வெளிக்காட்டாமல் படக்கென்று கையை உதறிவிட்டுப் படியிறங்க ஆரம்பித்தாள். அடித்த வெயிலுக்குக் கல்தரை பாதங்களைச் சுட்டெரித்தும் இவளுக்கு உறைக்கவே இல்லை. விக்ரம் சொன்ன சொல் மட்டும் உள்ளத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. அவனைப் பொருட்படுத்தாமல் அங்கு நின்றிருந்த பேருந்தில் தன்னந்தனியாக ஏறி அமர்ந்து கொண்டாள். விக்ரமிற்கு இவள் விலகி ஓடுவதன் காரணம் என்னவென்று முழுமையாகப் புரியவில்லை; பின்னால் திரும்பி உடன் வந்தவனைத் தேட ராமும் அங்கில்லை. அவர்கள் ஒன்றாகக் கைக்கோர்த்து நின்ற போதே, தொல்லை தர வேண்டாம் என இவன் விலகிப் போய்விட்டான்.

பத்மாவைத் தேடிப் பிடித்துப் பேருந்தில் ஏறிய விக்ரம் அவளுக்கு அருகே அமரப் போனான். அவளோ கொஞ்சமும் நகராமல் சன்னலுக்கு அப்பால் பார்த்தபடி கண்டும் காணாமல் உட்கார்ந்து இருந்தாள். அவன் வேறு இருக்கைக்குத் தாவி விட, சற்று நேரத்தில் பேருந்து புறப்பட்டது. அடிவாரத்தில் சென்று இறங்கியவள் திரும்பிப் பாராமல் நடக்க, அவளைத் தடுத்து நிறுத்தியது ராமின் குரல். அவர்களுக்கு முன்பாகவே இவன் கீழே வந்து சேர்ந்திருந்தான்‌.

"பாப்பாம்மா, வாங்க வண்டிலப் போவோம். அட, வாம்மா. வந்து ஏறு"

இவனது வார்த்தைக்குக் கட்டுப்பட்டவள் மகிழுந்தின் பின்புற இருக்கையில் போய் அமர்ந்தாள். நண்பனிடத்தில் வண்டிச் சாவியைக் கொடுத்துவிட்டு விக்ரமும் பின்னால் ஏறிக் கொண்டான். ராம் வண்டியைச் செலுத்த அங்கே கனத்த அமைதி நிலவியது.

"ப்ரியா, காலைலச் சாப்டியா? எதாச்சும் ரெஸ்டாரன்ட்க்குப் போலாமா?"

"..."

"ப்ரியா..."

"..."

"உன்னைத் தான் கூப்புட்றேன். இங்கப் பாரு. இப்போ என்ன நடந்து போச்சு?"

கைப்பேசிக்குள் தலையை விட்டுக் கொண்டிருந்தவள் விக்ரமை ஏறெடுத்தும் பார்க்கவில்லை

அடுத்த சில விநாடிகளில் "ராம் அண்ணா, வண்டிய நிறுத்துங்க ப்ளீஸ். இங்கயே நிப்பாட்டுங்க" என வற்புறுத்தினாள்

மகிழுந்து சென்று நின்ற இடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்புறம்

"என் ஃப்ரென்டு மது அதோ அங்க நிக்குறா. பாத்து ரொம்ப நாளாச்சு. நாங்க ஒன்னு சேந்தா நெறயப் பேசுவோம். வெய்ட் பண்ண வேணாம். நீங்க கிளம்புங்க" என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவள் விக்ரமின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள்

அவனோ அவளிடம் இந்நிலையில் பேசிப் பயனில்லை என்பதால் தடுக்காமல் விட்டு விட்டான். அதுவரை அவர்களின் பிணக்கில் சிறிது கவனம் செலுத்தி வந்த ராம், சாலையின் அந்தப் பக்கம் ஏறிட்டுப் பார்த்தான். அங்கே கண்டவன் இதுகாறும் நடந்ததை வேரோடு மறந்து சிலையாய் சமைந்து போனான். மூன்று வருட காலமாகத் தினந்தினம் இவன் கனவிலும் நினைவிலும் வந்து இம்சை செய்யும்‌ ராட்சசி அவளே தான்; மதுரேகா; எதிர்ப்புறம் இருந்த வாயில் எண் ஏழுக்கு அருகில் மிதிவண்டி உடன் நின்றிருந்தாள். தன்னை நேரில் பார்க்க வருவதாக பத்மா செய்தி அனுப்பவும் விரைந்து வாயிலுக்கு வந்திருப்பாள் போல. வந்த வேகத்திற்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு பலமாக வாங்கி வியர்வை ஊற்றியது.

நெற்றியை வழித்தெடுத்துக் கொண்டே நிமிர்ந்தவளின் கண்களில் பட்டவன், அவளையே வெறித்துப் பார்த்திருந்த ராம்குமார்‌. உடனே நினைவலைகள் அவளைச் சுழற்றிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல, அந்நொடி பூமி நழுவுவதைப் போன்று உணர்ந்தாள். தலையை வேகமாக உலுக்கிக் கால்களைத் தரையில் ஊன்றி, அவள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்று கிரீன் ட்ரீ உணவகத்தின் முன்பு அவனைக் கண்ட நாள் முதல், அவளை உளைச்சலுக்கு உள்ளாக்குவது அவனது பார்வையே. அந்தக் கூரிய விழிகள் எதையோ மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த முயன்றன. அவ்விஷயம் உண்மையாய் இருக்கக் கூடாது என்று அவள் ஓராயிரம் கடவுள்களை வேண்டினாள். ரேகா திரும்பிய பிறகும் ராம் அவளிடம் இருந்து துளியும் பார்வையை நகர்த்தினான் இல்லை; அவன் நினைத்தாலும் இயலாது. அது அவனின் சக்திக்கு அப்பாற்பட்டது.

பத்மாவை அழைத்துக் கொண்டு அவள் உள்ளே போக "அதான் போய்ட்டாளே. கார எடு, மச்சான்" என விக்ரம் கூறினான். சூழ்நிலை கருதி அதற்கு உடன்பட்டான் ராம்குமார்.

இங்கே ரேகா "அவுகப் பேரென்ன?" என்று கேட்டாள் பரிதவிப்புடன்

அவளின் வித்தியாசமான சுபாவத்தை உள்வாங்கிக் கொள்ளாமல், பத்மா விக்ரமைப் பற்றிய சிந்தையிலேயே இருந்தாள்

"டீ..."

"ஆன்... அதான் சொன்னனே, டி. விக்ரம்"

"அது எனக்குத் தெரியாதா? கூட வந்துருந்தாகளே..."

"அந்த அண்ணாவா? ஆர். கே.; விக்ரமோட உயிருக்கு உயிரான தோழன்"

"நீ ஒழுங்காப் பேரச் சொல்லு"

"ராம்குமார். போதுமா? தெரிஞ்சுகிட்டியா? இப்போ திருப்தியா?"

ராம் என்ற பெயரில் ரேகாவிற்கு வேறொரு பந்தம் இருந்தது; கல்லறையிலும் மறக்க முடியாத உறவு அவர்களுடையது. அதனாலேயே அந்தப் பெயரைச் சொல்லத் தயங்கினாள் பத்மா. இப்போதோ அம்பினையொத்த விழியாளனின் அடையாளம் வெட்ட வெளிச்சமாகி விட ரேகாவின் உள்ளம் சுணங்கியது. ராம்குமாருக்கும் அவளிற்கும் இடையேயான கடந்த கால நிகழ்வைப் பற்றி ப்ரியா ஏதும் அறியாள்.

"ரே... கவலப்படாத. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. எதுவும் திருப்பி வராது"

"இல்ல; நான் அதப் பத்தி யோசிக்கல. எங்கப் போய்ட்டு வாரீங்க?"

"மருதமலை கோவில்"

"ஓ... வேண்டுதலா? நல்லபடியா நிறவேத்தியாச்சா?"

"நல்லா ஆச்சு, போ..."

"ஏன் மூஞ்சு மேட்டுப்பாளையம் வரைக்குப் போகுது?"

"நானே ஆச ஆசயா அவன் கையப் பிடிச்சா, அந்நேரத்துல வந்து எக்ஸ் லவ்வரப் பத்திப் பேசிட்டுருக்கான். டென்ஷன் ஆவுமா? ஆவாதா? நீயே சொல்லு"

"ஹிஹிஹீ... தெரிஞ்சு தான கட்டிக்கிட்ட. இதெல்லாம் ஜகஜம்"

"அவத் தான் வேற ஒருத்தனோட போய்ட்டாள்ல. இன்னும் என்ன ஜெனி, ஜெனின்னுட்டு..."

"இதுக்குத் தான் சொல்றேன்; உன்னோட கன்டிஷனலாம் தூக்கித் தூரப் போடு. ரெண்டு பேரும் ஒரே வீட்டுல ஸ்டே பண்ணீங்கன்னு வையு; புருஷன் பொண்டாட்டிக்கு அர்த்தமா அப்டி இப்டின்னு எதாச்சும் நடக்கும். ஃபர்ஸ்ட் டைம்னாலே சம்திங் ஸ்பெஷல்ல? நீ அவருக்கு அந்த சந்தோஷத்தக் கொடுத்தீன்னு வையேன்; டோட்டலா கவுந்துருவாப்புல‌. நீயும் முந்தானைல முடிஞ்சு பத்ரமா வச்சுக்கலாம். அப்றம் ஜெனியாவது எவளாவதுன்னு மறந்தே போய்டுவாரு‌. எப்டி என் ஐடியா?"

"..."

"ஏய்... என்ன அப்டியே ஃப்ரீஸ் ஆயிட்ட?"

"ஃபர்ஸ்ட் டைமு எதோ ஸ்பெஷல்னு சொன்னியே; அதான்..."

"அதுக்கென்ன?"

"ஒருவேள யாராச்சும் ஒருத்தருக்கு அது மொத தடவயா இல்லாமப் போனா?"

"என்னத்த உலர்ற, பைத்தியமே?"

"இல்ல, ரேகா. அது வந்து..."

"வந்து? முழுசா சொல்லித் தொல"

"அவருக்கு ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு"

"அடியே... என்னடி, ஏதோ வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் மாரி அசால்ட்டாச் சொல்லுற?"

"கத்தாத. காலேஜ் முடிச்சவாட்டி அவரோட எக்ஸு கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்பு; மூணு மாசம்"

"மூணு... மாசமா... இந்தக் கருமாந்திரம் புடிச்சக் காதல் கதையக் கேட்டப் பின்னாடியுமா அவர ஓகே பண்ண? நல்லா வருவ நீயெல்லாம். அய்யோ, இவள வச்சுட்டு நான் என்ன செய்யுவேன்? இவ்ளோ தத்தி முண்டமா இருக்காளே"

"விடு, மச்சி; பாத்துக்கலாம். வந்தா மல; போனா மசுரு"

"இருந்தாலும் உன் மன தைரியத்த நான் பாராட்டுறேன். சாப்புட்டியா, செல்லம்?"

"இன்னும் இல்லயே. என்ர வூட்டுக்கார் அப்பயே கேட்டாரு; நான் வேறக் கடுப்புல வேணாம்னு சொல்லிட்டேன்"

"அச்சோ, என்ற பட்டு பசி தாங்காதே. மெஸ்ஸுல உனக்கு நான் நெய்ச் சோறும் சிப்ஸும் வாங்கித் தருவேனாம்; நீ மொச்சுக்கு மொச்சுக்குன்னு சாப்டுவியாம். உன்ர புருஷரப் பத்திலாம் நினைக்கப்பிடாது. சாப்புடணும்..." தோழியின் தோளைப் பற்றி வம்படியாக இழுத்துச் சென்றாள் ரேகா

பத்மாவிடம் கலகலப்பாகப் பேசி அவளை இயல்பாக்கி அனுப்பி வைத்த மது, தன் விதியை நொந்தபடி விடுதி அறையில் வந்து விழுந்தாள். மல்லாந்து படுத்தால் கூட நெஞ்சின் பாரம் ஏறுவதாக எண்ணி, குப்புற விழுந்து தலையணையை அணைத்துக் கொண்டாள்‌. கணவன் இல்லாத துயரத்தைப் போக்குவது அந்தத் தலையணை தான். யாருமறியாத அவளின் சோகத்தையும் இமை கடந்து வழியும் கண்ணீரையும் சொல்ல ஒண்ணாத் தனிமையையும் வாழ்வைப் பற்றிய வெறுப்பையும் அது மட்டுமே அறியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் வாழ்வில் அழுகை என்பதே கிடையாது. அவளது ராமச்சந்திரனைக் கரம் பிடித்த நாளில் இருந்து அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்தாள். மற்றவர்களுக்கு அவன் சந்திரன்; அவளுக்கு மட்டும் ராம். அவ்வாறு அழைத்தால் தான் அவளுக்கு நிறைவாக இருக்கும். தந்தையில்லாக் குறையை நீக்கி அவளைப் பறவைக் குஞ்சு போல காத்தவன் சந்திரன்; ஒரு பதம் கூட அதிர்ந்து பேச மாட்டான்; யாரையும் ஏமாற்ற நினைய மாட்டான்; தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருந்தவன்.

இருவரும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமண பந்தத்தில் நுழைந்தவர்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களோ அவர்கள் காதலர்கள் தான் என நூறு சதவிகிதம் அடித்துப் பேசுவர். அந்தளவிற்கு அன்னியோன்யம், நேசம், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை மற்றும் பகிர்தல் எல்லாமே அவர்களுக்கு இடையே இருந்தன‌. மாமியாரான காமாட்சியைத் தனியே தவிக்க விடக் கூடாது என்பதற்காகவே, வீட்டோடு மாப்பிள்ளையாய்த் தங்கிய தாராள குணம் படைத்தவன் ராமச்சந்திரன். அது பொறுக்காமல் விதி விபத்து ரூபத்தில் வந்து அவனது வாழ்வில் விளையாடிவிட்டது. அதனால், உயிர் இருந்தும் சடலமாகி நிற்கிறாள் மதுரேகா.

நீ எங்கே, என் அன்பே!