• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 26

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
அது கோவிட்-19 காலம். திருப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தே பணிபுரியலானான் ராம்குமார். அந்தச் சூழ்நிலையில் கூட விக்ரம் கேரளாவிற்குச் செல்லவில்லை; சென்னையில் அமைந்த வாடகைக் குடியிருப்பிலேயே தங்கிக் கொண்டான். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த ஒரு நாளில் ஏதோ அலுவலாக ராம் கோவைக்கு வந்திருந்தான். அப்போது முதியவர் ஒருவர் போகிற வழியில் தன்னை இறக்கி விடுமாறு உதவி கேட்டு அவனுடன் வண்டியில் ஏறிக் கொண்டார். அந்தப் பெரியவர் பேசியவாறு வர, அவருக்குப் பதிலளிக்கும் பொருட்டு அவன் அவ்வப்போது சற்று திரும்புவதும் பதிலுரைப்பதுமாக இருந்தான். அந்நேரம் பார்த்து கட்டுப்பாட்டை இழந்த சரக்குந்து ஒன்று எதிரே வர, முதலில் ராம் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. அது மிக அருகே வந்து அவனது மோட்டார் சைக்கிளுக்கு முன், சரக்கென்று குறுக்கே வெட்டி நின்றது. அவசரத்திற்குத் தடையைச் செலுத்த முடியாதவன் சாலையின் எதிர்ப்புறம் அதிவிரைவாக வண்டியை முறுக்கினான். முறுக்கிய வேகத்தில் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி, இரண்டு வண்டிகளும் தாறுமாறாகச் சரிந்து விழுந்தன. அந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவன் ரேகாவின் அன்பு கணவன், ராமச்சந்திரன்.

அச்சம்பவத்தால் சந்திரன் வண்டியோடு சாலையைக் கடந்து மண்தரையில் போய் விழுந்தான். அங்கிருந்த கல்லில் அவனது தலை நங்கென்று அடிபட்டது. இங்குச் சரக்குந்தின் பின்னால் வந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் எதிர்பாராமல் நடந்தேறிய விபத்தைக் கண்டு பதற்றமடைந்தனர். அவர்களின் மூளை விரைவாகச் செயல்படாமல் போகவே, வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து குறுக்காக நின்ற சரக்குந்தின் மீது சரமாரியாகச் சென்று குத்தின. அதில் சரக்குந்து அதிகளவு ஆட்டம் காண, அதன் மேலிருந்த உர மூட்டைகள் இந்தப் பக்கமாய் சாய்ந்தன. அதன் அருகிலேயே தரையில் கிடந்த முதியவரின் மீதும் ராமின் மீதும் பொத்துப் பொத்தென அம்மூட்டைகள் கவிழத் தொடங்கின. அடுத்தடுத்த ஓட்டுநர்கள் சற்றே நிதானித்து ஆங்காங்கே தத்தமது வாகனங்களை நிறுத்திவிட்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வேகமாக வந்து உர மூட்டைகளை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். நெஞ்சின் மீது விழுந்த மூட்டையின் கனம் தாங்காமல் வயதானவர் அப்போதே உயிரை விட்டு விட்டார். ராம்குமாரோ அவர்களுக்கு முதுகு காட்டிப் பேச்சு மூச்சில்லாமல் படுத்துக் கிடந்தான். ஒருவர் ராமச்சந்திரனைத் தூக்கி நிறுத்த, அவன் ஓரளவு சமாளித்து எழுந்து நின்றான்; மண்டை உடைந்து ரத்தம் மட்டும் நிற்காமல் ஒழுகிக் கொண்டிருந்தது.

அந்த இக்கட்டிலும் கீழே கிடந்தவர்களின் நிலைமை அவனை வருத்தமடையச் செய்தது. தன்னிலை மறந்து ஓடி வந்தவன், இருவருக்கும் இதயத் துடிப்பு இருக்கிறதா என மார்பில் காதை வைத்துக் கேட்டான். பெரியவரின் கதி அவ்வளவு தான். அவர் வானுலகம் சென்று விட்டதை அவரது உடலின் குளிர்ச்சி சொல்லாமல் சொல்லியது. ஆனால், ராம்குமாரின் உடம்பு கதகதப்பாக இருந்தது; இதயத் துடிப்பு தெளிவாகக் கேட்டது. சந்திரன் அவனுக்கு மூச்சு வர வைப்பதற்காக, நெஞ்சு கூட்டில் உள்ளங்கைகளை வைத்து அழுத்தி அழுத்திப் பார்த்தான். அவன் தந்த சிகிச்சைக்கு உடனடி பலன் கிட்டவில்லை என்ற போதிலும் ஓயாமல் முயற்சி செய்தபடி இருந்தான். அடுத்ததாக, இரு அவசர ஊர்திகள் அங்கு வந்து நின்றன.

ஒன்றில் தாத்தாவின் உயிரற்ற உடல்; மற்றொன்றில் ராம்குமாரும் ராமச்சந்திரனும்‌. இப்போது மருத்துவ உதவியாளரால் சிபிஆர் செய்யப்பட, சில நிமிடங்களிலேயே ராமிற்கு உயிர் மூச்சு திரும்பிவிட்டது; கண்கள் மட்டும் திறவாமல் மூடியே கிடந்தன‌. அவன் பிழைத்துக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் சந்திரன். இவனல்லவா போகிற உயிரை முதலுதவி செய்து இழுத்துப் பிடித்தான். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மிகவும் புண்ணியகரமான செயல்‌. அந்த நற்செயலைச் செய்த சந்திரன் இதழ் முறுவலோடு மயக்க நிலைக்குப் போய்விட்டான்.

அரசு மருத்துவமனை வாயிலில், சரக்குந்து ஓட்டுநர் நடந்த விபத்தைப் பற்றிக் காவல் அதிகாரிகளிடம் விளக்கிக் கொண்டிருந்தான். அதற்கடுத்து, இறந்து போன முதியவரின் மகள்களும் பேரப் பிள்ளைகளும் அவரது பிணத்தைக் கட்டிக் கொண்டு கதறிக் கூப்பாடு இட்டனர். இவர்களைப் பார்த்தவாறு கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனையின் உள்ளே ஓடினாள் மதுரேகா.

"ராம்... என்னோட ராம்... எங்க இருக்காரு? என்ன... ஆச்சு? அவருக்கு ஒன்னும் இல்‌... இல்லயே?" அழுகையில் வார்த்தை ஒழுங்காக வெளிப்படவில்லை அவளுக்கு

"ஆக்சிடென்ட் கேஸா? ஐசியூல போய்ப் பாரு" உணர்ச்சியற்ற முகத்துடன் அந்தச் செவிலியர் கூறிச் சென்றார்

அவள் அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைய ஒருவன் மட்டும் படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றிலும் பற்பல மருத்துவ உபகரணங்கள். உடலைப் போர்வை மூடியிருக்க, முகமே தெரியாத அளவிற்குத் தலையைச் சுற்றிலும் கட்டுக்களாக இருந்தன.

"ராம்..." உயிரின் ஆழத்தில் இருந்து கத்தியவள் அவன் கரத்தை இறுகப் பற்றி மேலே விழுந்தாள்

"ராம். எழுந்திருங்க. ஒருக்கா என்னப் பாருங்க, ராம். என்னை விட்டுப் போய்டாதீங்க. நீங்க இல்லாம..." என‌ அரற்றிக் கொண்டிருந்தவள் மேலும் நெருங்கிப் பார்க்க, அவள் தேடி வந்தவன் அங்கே இல்லை

அங்குப் படுக்கையில் இருந்ததோ ராம்குமார். அவள் அங்கு வரும்வரை உணர்வின்றி இருந்தவன், இப்போது விழிகளைத் திறந்து அவளைப் பளிச்சென்று பார்த்தான். அவனது மூளை உறக்க நிலையை எட்டிக் கொண்டிருந்த நேரத்தில், இதயத்தைப் புயற்காற்று போல் உலுக்கி அவனை எழுப்பியது ராம் என்ற அவளின் உச்சரிப்பே. அவளிடம் பேச உதடுகள் துடிதுடிக்க, கரம் பற்றிய விரல்கள் நடுநடுங்க அவன் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தான். அத்தருணம் ராம்குமாரின் தந்தை குணசேகரன் அறைக்குள் வந்து சேர்ந்தார்.

"யாரும்மா நீ?" என்று அவர் கேட்கவும் சுயத்தை உணர்ந்தவள் தனது ராமச்சந்திரனைத் தேடி ஓடிப் போனாள்

நினைவு திரும்பிய தன் மகனைக் கண்டு கொண்டவர் "எம்மா, தனலட்சுமி உன் புள்ளையக் காப்பாத்திக் குடுத்தட்டம்மா. நீ தெய்வம்மா தெய்வம்‌. எப்பவும் எங்க கூடவே இரு, தாயீ" என்று பயபக்தியோடு உரைத்து அவன் நெற்றியில் கோவில் குங்குமத்தை இட்டார்

ராம்குமாரின் அன்னை பெயர் தனம். இவனுக்குப் பிறப்பளிக்கும் போதே அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். மனைவியைச் சுமந்த நெஞ்சத்தில் வேறு யாருக்கும் இடமளிக்க விரும்பாத குணசேகரன் ஒற்றையில் இவனை வளர்த்து ஆளாக்கினார். கண்ணுக்குக் கண்ணான புதல்வனைக் காப்பாற்றித் தந்தது இறையருளாகிய தனது மனைவி என்பது அவரது நம்பிக்கை. உண்மையில் இவனை மீட்டது மதுரேகாவின் காதல் ததும்பல் அல்லவா? அந்தப் பரிசுத்தமான பிரியம் இவனுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம்‌. அதில் இருந்த எல்லையற்ற கனிவும் கருணையுமே இவனை உயிர்த்தெழச் செய்தன. அக்கணம் அவளல்லவோ இவனிற்குத் தாய்க்குத் தாயாய் இருந்து காத்தாள். யார் அந்த இறைவி? எங்கே சென்றாள் அவள் என்று காண ராமும் ஆசை கொண்டான்‌. இவனின் அடிபட்ட உடல் தான் அந்த ‌எண்ணத்திற்குச் சிறிதும் ஒத்துழையவில்லை.

ரேகாவிற்கோ கணவனைக் காணாது பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது. ராமச்சந்திரன் எனும் அவனது நாமத்தை உச்சரித்துக் கொண்டே கதிகலங்கித் திரிந்தாள். தேடலின் முடிவில் அவளுடைய சந்திரன் ஒளி குன்றி அமாவாசை ஆகி பிணவறையில் கண்டெடுக்கப் பட்டான்‌; மருத்துவமனையை அடையும் முன்பே மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் அகால மரணத்திற்கு உள்ளாகி இருந்தான். ஓருயிர் ஈருடலாகத் தன்னுள் பின்னிப் பிணைந்தவனை அந்நிலையில் கண்டவள் முற்றும் பித்தாகிப் போனாள். அவளின் கண்ணீரைக் கண்டு முன்பின் அறியாதவர்கள் கூட உள்ளம் உருகிப் போயினர். அத்தகைய ஓர் அவல ஓலம் அங்கு அரங்கேறியது.

அவனைச் சிதையில் பொசுக்கிவிட்டு வந்த ஏழெட்டு வாரங்களில், மதுரேகா நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. முகம் தெரியாத அந்தக் கருவே உலகம் என அவள் வாழ்ந்திருக்க, அந்த இன்பமும் நிலைக்கவில்லை. கணவன் இறந்த துக்கத்திலேயே உழன்று கொண்டிருந்தவள் ஒழுங்கான தூக்கம், உணவு மற்றும் ஓய்வு இல்லாமல் இருந்துவிட்ட படியால் கருச்சிதைவாகிப் போனது. அதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவள் சாகும் முன்பே நரக வேதனையை அனுபவித்தாள். இப்படி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் மூளை குழம்பிவிடும் எனப் பயந்து போன காமாட்சி, மகளைத் தேற்றி வெளியுலகிற்கு அனுப்பி வைக்க முயன்றார்.

அவளும் அன்னையின் மன அமைதிக்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைந்தாள். இப்போது உழவியல் துறையில் முனைவர் பட்டம் பெறப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இருந்த ஒரே மகனும் காலமாகி விட்டதால், சந்திரனுடைய தாய் தந்தையர் வீடு வாசலை விற்றுக் கொண்டு வேறு ஊருக்கு மாற்றலாகினர். அவ்வாறு போகும் முன்னர் நல்லுள்ளத்துடன் சந்திரனின் காப்பீட்டுப் பணத்தை ரேகாவிடம் ஒப்படைத்தனர். அந்தப் பணம் தான் அவள் கல்வி கற்பதற்கு உதவிகரமாக இருந்து வருகிறது. இவ்வாறு இறந்த பின்னும் மனைவியைக் கைவிடாமல் இருப்பவனை எங்ஙனம் மறப்பது?

பத்மப்பிரியா - விக்ரம் பஞ்சாயத்திற்கு வந்தோமானால், அவர்கள் இன்றளவும் சமாதானம் ஆன பாடில்லை‌. அலைபேசி மூலமாக இருவரும் பேசிக் கொண்ட போதிலும் முன் போல் பேச்சில் சுவாரஸ்யம் இல்லை. கோவிலில் நடந்தச் சம்பவத்தை மனதில் வைத்து ஏனோ தானோவென்று பேசினாள் பத்மா; நடந்ததைப் பற்றி அவனே விளக்க முன்வந்தாலும் காது கொடுத்து கேட்க மறுத்தாள்.‌ இவ்வாறு நாட்கள் ஓட, இரு மாதங்கள் கழித்து, தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கிற்காக சுந்தரமும் மங்கையும் பொள்ளாச்சிக்கு அழைப்பு விடுத்தனர்.

அந்நிகழ்வுக்கு இந்திரஜித்தும் கிரிஜாவும் ஜீப் எடுத்துக் கொண்டு கோவைக்கு வந்து சேர்ந்தனர். பயணத்தின் போதாவது அவளைச் சமாதனப்படுத்தலாம் என்ற திட்டத்தோடு, விக்ரம் இருசக்கர வாகனத்தில் அவளது விடுதியைச் சென்றடைந்தான். அவளோ வெயிலைக் காரணம் காட்டி ஜீப்பில் ஏறிப் போகலானாள். முன்னால் போகிறவளைப் பார்த்தவாறே அவன் ஜீப்பினைப் பின்தொடர, அவள் தான் அவனைத் திரும்பிக் கண்டாள் இல்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும் மகளைத் தலையில் குட்டி, சேலை மாற்ற இழுத்துச் சென்றார் மங்கை. அவளின் கழுத்தில் அணிவிக்க அவன் கையால் தங்கத்தில் தாலி வாங்கி வந்திருந்தான். அதைப் பூஜையறையில் வைத்து வணங்கி, கிரிஜாவும் மங்கையும் கோர்த்து அணிவிக்கத் தொடங்கினர். விக்ரம் தூரத்தில் அமர்ந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கலானான். தாலியையும் அதை வாங்கியவனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு அன்று பார்த்த 'ஜெ' டாலர் நினைவிற்கு வர மீண்டும் கோபம் பொங்கியது. கோபத்தினால் மூக்கின் மேல் வியர்வை மொட்டுகள் மலர்ந்த போதும், மயில்நிறப் பட்டுப்புடவையில் அன்னமென உட்கார்ந்து இருந்தவளைக் கண் கொட்டாமல் ரசித்தான் விக்ரம். வரவேற்பு நிகழ்ச்சியில் அதிஅழகான ஒப்பனையோடு இருந்த நாளில் கூட, அவளை இந்தளவு ரசனையாய் அவன் நோக்கவில்லை. இன்று ஏனோ சினத்தில் சிவந்து போய் அமர்ந்திருந்தவளைக் காணுகையில் ஆசையூற்று பெருகியது. உள்ளுக்குள்ளே அவள் தன்னுடைய மனைவி என்பதை நினைத்துச் சிலிர்த்துக் கொண்டான்.

என்னவளே, அடி‌ ‌என்னவளே!