• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 28

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
சற்றும் எதிர்பாராத விதமாகத் தாயை அங்கே கண்டதும் பத்மப்பிரியா ஒரு கணம் அரண்டு போனாள். ஆகிலும், அவசரப்பட்டு எதையும் உளறி வைக்கக் கூடாது என வாயை இறுக மூடிக் கொண்டாள். அக்னிப் பார்வையால் சுட்டெரித்த மங்கை, அவளைத் தரதரவென்று வீட்டிற்கு இழுத்துச் சென்று தள்ளினார்.

"அந்தத் தெருப்பக்கம் போவாத, போவாதன்னு எத்தன தாரம் சொல்றது? இந்த வழியே நடந்தா நேரா நேரத்துல வீடு வந்து சேரலாம். அப்டியே சுத்தி வளைச்சுட்டு, ரோட்ட அளந்துட்டே வர்றீயா நீயு... உன்னோட சேந்தவலாம் வூடு வந்து எம்புட்டு நேரமாச்சு? நாழியாச்சே இன்னும் ஆளக் காணோமேன்னு அடிவயித்துல நெருப்பக் கட்டிட்டு வாரேன். நீ என்னன்னா ஷால அவுத்துப் போட்டுத் துள்ளிட்டா திரியுற... நடுரோட்டுல நின்னுட்டு என்னடி இளிப்பு வேண்டிக் கிடக்கு? ஸ்கூலு விட்டா விரசா வூட்டுக்கு வரணும்னு படிச்சு படிச்சுச் சொல்லிருக்கனா, இல்லயா? எங்க ஆட்டமாடிட்டு வர? யாரு கூடடி ஊரச் சுத்திப் போட்டு வார?" இந்த ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு அடிகள் வீதமாகத் தென்னை மாறினால் மகளைச் சாற்றி எடுத்துவிட்டார்

உடம்பெல்லாம் வலி மற்றும் எரிச்சல் தாளாமல் "அச்சோ, அச்சச்சோ... அம்மம்மா... விட்டுருமா. தெரியாமப் பண்ணிட்டேன். அடியாத்தே..." என அலறித் தீர்த்தாள் ப்ரியா

'அந்தப் பக்கட்டுப் போனதுக்கே இந்த அடின்னா... ஃபசீரோட பைக்குலப் போனத மட்டும் மங்காத்தா பாத்துருந்தா என்னாயிருக்கும்? தேங்கால நார் எடுத்துக் கயிறு திரிக்குற மாரி என்ர ஆத்தா என்னையத் திரிச்சுருப்பா. ஜஸ்ட்டு மிஸ்ஸு' அன்று அவர் நடத்திய விளக்குமாறு பூஜையை நினைத்து இந்நொடி கூட பீதி கிளம்ப, தொண்டைக் குழியை எச்சிலால் நனைத்தாள்

அந்நேரம் விக்ரம் சட்டென வண்டியை நிறுத்த, கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவளோ கட்டுப்பாடு இல்லாமல் அவன் மீது சென்று மோதினாள். அவ்வாறு நடக்கையில் இருவரின் தலைகளும் டம்மென்று முட்டின. அவர்கள் வந்து நின்ற இடம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அதே மருதமலை முருகனின் திருவடிகளில் சரணடைய தாம் வருகை தந்திருந்தனர். எங்கே பிணக்கு ஆரம்பமானதோ அங்கேயே அதைத் தீர்க்க முடிவு செய்தான் விக்ரம்.

"ஆஹ்ஹ்... பாத்து ஓட்ட மாட்டீகளா?" நெற்றியைத் தேய்த்தவாறு அவள் கீழே இறங்கினாள்

"நீ பாத்து உக்கார்றது... நெனப்ப எங்கயோ வச்சுட்டு இருந்தா இப்டித்தான் ஆகும்"

"ஹ்ஹூம்ம்..." அவனிடம் முறுக்கிக் கொண்டவள் வேகவேகமாகப் படிகளேறி சன்னிதானத்தில் போய் நின்றாள்

'புடவையச் சுத்திட்டு எப்புடித் தான் இவ்ளோ சீக்கிரம் ஓடுறாளோ' என எண்ணியவன் இரண்டிரண்டு படிகளாக எட்டு வைத்துச் சென்றான்

"எனக்கும் சேத்தி நல்லா வேண்டிக்க" இறைவனின் முன் வணங்கிக் கண்மூடி நின்றவளின் காதில் கிசுகிசுத்தான்

அதில் கூச்சமுற்றுத் தோள்பட்டையில் கன்னம் தேய்த்தவள், வேண்டுதலை முடித்து விழிகளைத் திறக்க விக்ரம் எதிரே நின்றான்; சரக்கென்று அவள் அணிந்திருந்த தாலியை வெளியே இழுத்துக் குங்குமம் இட்டு, நெற்றி வகிட்டிலும் அழுத்தமாகத் தீட்டினான்.

"அழகு" என்று கன்னம் தட்டிக் கூறியவன் முன்னால் நடக்க, அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுடன் கோவில் தடுப்புச் சுவற்றுக்கு அருகே போனாள்; அந்த உயரமான தடுப்பில் திரும்பி உட்கார்ந்து, கால்களை அந்தரத்தில் தொங்கவிட்டவாறு சுற்றம் நோக்கினாள். அவளை நெருங்கி அமர்ந்தவன் அவளது கரந்தொட்டு வருடி, தனது இரு கைகளுக்குள் வைத்துப் பொத்திக் கொண்டான். பின்பு, நிதானமாக யோசித்துத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மணி போல கோர்த்துப் பேசலானான். அவன் வாய் திறக்கும் முன்பே அவளிடம் இருந்த கோபம் ஊதுவத்தி புகையாகக் கலைந்து காணாமல் போயிருந்தது.

"நீ எதுக்குக் கோவமா இருக்கன்னு தெரியும்"

"தெரிஞ்சா சரி"

"ஸாரி. அன்னைக்கு நான் மனசுலத் தோணுனதப் பட்டுனு பேசிட்டேன். இனி ஜெ... அவளோட பேரக் கூட எடுக்க மாட்டேன்"

"அவங்களப் பத்திப் பேச நினைச்சது பெரிய தப்பில்லத் தான். ஃபர்ஸ்ட் டைம் வெளிய வந்துருந்தோம். அது நமக்கான மொமன்ட்டா இருக்கணும்னு ஆசப்பட்டேன். அந்த நேரத்துல எக்ஸப் பத்திப் பேசவுந்தான்..."

"ம்ம்ம்"

"அதுக்குன்னு மனசுக்குள்ளயே எல்லாத்தயும் பூட்டிக்க வேணாம். இப்போ சொல்லுங்க, கேக்குறேன்"

"பெருசா ஒன்னுமில்ல. ஒருநாள் நானும் இன்னும் சில ஃப்ரென்ட்ஸும் இங்க வந்துருந்தோம். அவளும் அந்தக் கூட்டத்துல ஒருத்தி. அன்னைக்கு எதோ பண்டிகை போல. காவடி தூக்கி டேன்ஸ் ஆடிட்டு இருந்தாங்க. செம வொய்ப். நல்லா என்ஜாய் பண்ணோம்"

"அப்றம்..."

"இன்னொரு முக்கியமான விஷயம். நான் அன்னைக்கே சொல்லிருக்கணும். நீ இத எப்டி எடுத்துப்பன்னு தெரியல. நமக்கு மேரேஜான நைட்டு, அவ கால் பண்ணிருந்தா"

"இத்தன வருஷம் இல்லாம என்ன திடீர்ன்னு? என்ன சொன்னாங்க?"

"நான் அட்டென்ட் பண்ணல. ப்ளாக்லப் போட்டு வச்சுருக்கேன். எதுக்கும் உன்கிட்டச் சொல்லணும்னு தோணுச்சு"

"ஓகே. மறுபடி கால் வந்தா சொல்லுங்க"

"ஷ்யூர்"

சிறிது நேரம் இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்

"ஒரு பிக் எடுத்துக்கலாமா?" என அவனே கேட்க அவள் சம்மதம் தெரிவித்தாள்

தோளோடு பட்டும் படாமல் அரவணைத்தபடி அவன் ஐஃபோனை க்ளிக் செய்ய, பாந்தமாய்ப் புன்னகைத்தாள் அவள்

அவர்களின் காட்சிப்படம் ரம்மியமாய் விழுந்திருக்க பெண்ணவள் அகம் மகிழ்ந்தாள் "எனக்கும் ஷேர் பண்ணிடுங்க"

"ப்பா, இந்தச் சிரிப்பப் பாத்து எம்புட்டு நாளாச்சு. இவ்ளோ கோவப்பட்டா எப்படிச் சமாளிக்குறதாம்?"

"இன்னைக்கு ஏதோ ஈசியா சமாதானம் ஆய்ட்டேன். இனிமேல் இப்டி நேரங்காலம் தெரியாம எதாச்சும் பண்ணி வைங்க... அப்றம் என்னைப் பத்தித் தெரியும்"

"இதுக்கு மேலயும் மிஸ்டேக் நடந்தா, இங்கருந்து விழுந்து தான் காம்ப்ரமைஸ் பண்ணணும் போல"

"எங்க, குதிங்க பாப்போம்" அவள் விளையாட்டாய் அவனைப் பிடித்துத் தள்ள, கீழே தரை இருந்த தூரத்தைக் கண்டு அவன் திகைத்தான்

"எந்த அம்மே..."

"உயிர் மேல அம்புட்டுப் பயம்" கலகலத்தாள் அவள்

துடிக்கும் இதயத்தின் மீது கைவைத்துப் பிடித்தவன் அங்கிருந்து எழுந்தான் "உசுரு முக்கியம், பிகிலு... தென், வீட்டுக்குப் போவோமா?"

"நோ. நீங்க வெஜிடேரியன்னு சொன்னாலும் சொன்னேன். எங்கம்மா கவிச்சயே கண்ணுலக் காட்ட மாட்டேங்குது. என்னை ஹோட்டலுக்குக் கூட்டிப் போங்க"

"சிக்கன் பிரியாணி வேணுமா? மட்டன் பிரியாணியா, டார்லிங்?" எனக் கொஞ்சலாய்க் கேட்டு அவளது கரத்தை விடாமல் பிடித்துக் கொண்டான் விக்ரம்

அன்று எடுத்த சுயபடத்தை பத்மா முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து கணவனை டேக் செய்திருந்தாள். அதைக் கண்டுவிட்டு அவளின் தோழமைகள் விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்தனர். அவர்களில் சிலர் விக்ரமின் ப்ரொஃபைலிற்குச் சென்று நட்புக்கான வேண்டுகோளும் விடுத்தனர். அந்தப் பக்கத்தில் அவனது அலைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களும் பொதுப்படையாக இருந்தன. அதைக் கயிறு பிடித்துப் புதைந்து கிடந்த பழைய பூதம் ஒன்று கிளம்பியது.

மூன்று வாரங்களுக்குப் பிறகு...

ஒரு புது எண்ணிலிருந்து இவனுக்குக் காலையிலேயே அழைப்பு வந்தது "ஹலோ"

"நீங்க பத்மாவோட ஹஸ்பன்டா?"

"யெஸ். ஹூ இஸ் திஸ்?"

"நான்... நான்... உங்களத் தனியாப் பாத்துப் பேசணும். வர முடியுமா?"

"என்ன விஷயம்?"

"நான் அவளோட லவ்வர்"

"லவ்வரா? நான்சென்ஸ்" பணிக்குச் செல்லும் அவசரத்தில் இவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்

சில மணி நேரங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே எண் திரையில் ஒளிர்ந்தது

"விக்ரம்..."

"ஏங்க, நான் வொர்க்ல இருக்கேன். ப்ராங்க் கால் பண்ற நேரமா இது? உங்க விளையாட்டலாம் அப்பறம் வச்சுக்கக் கூடாதா?"

"ரொம்பவே சீரியஸா பேசிட்டு இருக்கேங்க நானு. நம்பிக்க இல்லன்னா ஒரு ஃபோட்டோ அனுப்புறேன்; பாருங்க"

அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு இவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது 'யாருடா இவன்? சரியான லூசா இருப்பானா? எங்கருந்து மொளச்சான்னு தெரியலயே'

"என்ன, சார்? இப்போவாச்சும் நான் சொல்றத நம்புறீங்களா?"

"இதுக்குலாம் என்கிட்ட டைம் இல்லங்க"

"விடுங்க. நான் பிரியாட்டயே டீல் பண்ணிக்குறேன்"

தேவையின்றி பிரச்சனையை ஏற்படுத்தும் அவனைத் தானே எதிர்கொள்ள முடிவு செய்தான் இவன் "ப்ச்ச்... எங்க வரணும்னு சொல்லுங்க"

விக்ரம் பீளமேட்டில் இருந்து காந்திபுரத்தில் உள்ள கஃபேவினைச் சென்றடைந்தான். அங்கே இவனது வரவிற்காகக் காத்திருந்தது வேறு யாருமில்லை; கிறுக்கு முற்றிப் போன அபிலாஷ் தான். அவனிற்கும் பத்மாவிற்கும் இடையே கல்லூரி முதலே காதல் எனக் கதை கதையாக அவிழ்த்துவிட்டான். அவன் அத்தாட்சியென நீட்டியது ஓர் அரதப் பழைய புகைப்படம். அன்று மரத்தடியில் பத்மா அவனை முத்தமிட்டதை அவளுக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்தான்; யாரோ மறைந்து நின்று அவனுக்கு உதவி செய்துள்ளார்கள் போலும். அந்தச் சாட்சியைக் கண்ட பின்னரும் விக்ரம் இயல்பாகவே அமர்ந்திருக்க, எதிரே இருந்தவன் ஏதேதோ பிதற்றித் தள்ளினான். போதாக் குறைக்கு அவன் தீட்டிய பத்மாவின் ஓவியத்தைக் காட்டி, அவனுடைய இல்லாத காதலின் பொல்லாத மகத்துவத்தை எடுத்துரைத்தான்.

"இதெல்லாம் இருக்கட்டும். ஆக்சுவலா என்ன வேணும் உங்களுக்கு?"

"எனக்கு என் பத்மா திரும்ப வேணும்"

"வாட்? ஆர் யூ மேட்? ஷி இஸ் மை வொய்ஃப். யூ கேன் நாட் டாக் டு மீ லைக் தட்" இவனது வார்த்தைகளின் கடுமை கூடியது

"இன்னும் நான் அவ மனசுல இருக்கேன். அதயும் ப்ரூவ் பண்ணிக் காட்டுறேன். இப்ப என்னைத் தேடி ஓடி வருவா பாருங்க. அப்றம் நீங்களே விட்டுக் கொடுத்துடுவீங்க"

"பத்மாவ ஏன்யா வரச் சொன்ன? அவங்கள டிஸ்டர்ப் பண்ணிடக் கூடாதுன்னு தான நானே நேர்ல வந்தேன்" அந்தப் பித்தனை எவ்வாறு கையாள்வதென்று இவனுக்குச் சுத்தமாகத் தெரியவில்லை

சொன்னபடி ப்ரியாவும் அந்த கஃபேவை நோக்கி வந்து கொண்டிருந்தாள்

அவளைத் தொலைவில் கண்டதுமே "நீங்க இங்கயே வெய்ட் பண்ணி, நடக்குறத வேடிக்க பாருங்க" என்று கூறி அபிலாஷ் வேறு மேசைக்கு நகர்ந்தான்

'நீ கூப்டாலும் நான் வரல. போடா அங்குட்டு. இவன் பேச்சக் கேட்டு வந்தது தப்பாப் போச்சே. சும்மாவே கோவப்படுவா. இப்போ நான் அவ மேல சந்தேகப்பட்டுத் தான் இங்க வந்தேன்னு வேற கேவலமா நினைச்சுட்டா; நாலு மாசம் ஆனாலும் பேச மாட்டாளே. போச்சு...' ஏன் இங்கு வந்தோம் எனத் தன்னையே நொந்து கொண்டான் விக்ரம்

கதவைத் திறந்து அவள் உள்ளே நுழையவும் இவன் பரபரப்பாக மெனு கார்டால் முகத்தை மறைத்தான். அவளோ நேராகச் சென்றது அபிலாஷ் இருந்த மேசைக்கு. அவளின் கண்களில் என்ன கண்டானோ தெரியவில்லை; சில நிமிடங்களுக்கு அபியிடம் இருந்து சுவாசக் காற்று கூட வெளிப்படவில்லை. அந்த அசாதாரண அமைதிக்கான காரணத்தினை அறிய விக்ரம் சற்றே மெனு கார்டைக் கீழிறக்கினான்.

என்ன தெரிகிறது அங்கே!