• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 30

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
"அண்ணன் என்ன சொன்னாக?" சற்றுமுன் விக்ரம் செய்த ஆம்லெட்டைக் கொறித்தபடி பத்மப்பிரியா ஆர்வத்துடன் வினவினாள்

"ப்ளான் ஊத்திக்குச்சு"

"அதான் நான் அப்பவே சொன்னேன். புறப்படுங்க. நாம வீடு பாத்துட்டு வருவோம்"

"இன்னொரு நாள் போகலாம். இந்த நேரத்துல எங்கப் போய்த் தேடுறது?" விக்ரம் தயங்கினான்

"எனக்கு இப்பவே பாத்தாகணும்"

"நாள் ஃபுல்லா வேல செஞ்சது டயர்டா இருக்குடி. சாட்டர்டே, சன்டேலப் போவோம்"

"இன்னைக்குச் செவ்வாய்க்கிழமை. எப்போ சனி வாரது? நாமப் போறது?"

"மொதல்ல வா சாப்டலாம். எனக்குப் பசிக்குது"

"இப்போ வர முடியுமா? முடியாதா?"

"ஐ கான்ட்... சிட் அன்ட் ஈட்"

"உங்கச் சோறும் நீங்களும். எனக்குச் சாப்டுக்கத் தெரியும்" என்று கூறியவள் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட, அவனும் பின்தொடர்ந்து சென்றான்

"ஏய், ஒத்தையில எங்கப் போற? நான் டிராப் பண்றேன்"

"அவ்ளோ சொல்லியும் என் கஷ்டத்த நீங்க புரிஞ்சுக்கல இல்ல. உங்க உதவி ஒன்னும் எனக்கு வேண்டாம். வரத் தெரிஞ்ச எனக்குப் போகவுந்தெரியும். நல்லா கொட்டிக்கிட்டு, நீட்டி முழக்கி ரெஸ்ட் எடுங்க. பை"

"அடங்காமத் திரியாத. நில்லு. கொஞ்சமாச்சும் நான் சொல்றதக் கேக்குறியா? ஏ, பத்மா..."

இருவரும் எலியும் பூனையுமாகச் சத்தமிட, ராம்குமார் செய்வதறியாமல் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தான். பின்பொரு நாள், ப்ரியா பணியில் இருந்தபோது மங்கை அவளது அலுவலக எண்ணிற்கு அழைத்திருந்தார்; சுந்தரத்திற்கு உடல்நிலை சீராக இல்லை எனப் பதற்றத்தோடு பேசினார். சேதி கிடைத்ததும் இவள் விக்ரமிடம் தகவல் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பிப் போனாள். பொள்ளாச்சி வீட்டில் பேசத் தெம்பில்லாமல் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார் சுந்தரம். அவருக்கு அருகே மங்கை சோகமே உருவாகக் காணப்பட்டார்.

"என்ன நடந்துச்சு, மா?"

"திடீருன்னு மூச்சுவுட முடியாமத் திணர்றாரு, பிரியா. உடம்புக்கு என்னன்னு கேட்டா வாயே திறக்க மாட்டேங்குறாரு"

"அப்பா, அப்பா... ஏன் இந்தப் பக்கமா புடிச்சுட்டே இருக்கீக. வலிக்குதா? ப்பா... ஹாஸ்பிட்டல் போலாம். எந்திரிங்க"

காய்ச்சலுக்குக் கூட மருத்துவமனை பக்கம் போகாதவர் வரவே மாட்டேன் என்பது போல அழுத்தமாகத் தலையாட்டினார்

"அம்மா, இவரு ஒத்துவர மாட்டாரு. நீ ஒரு பக்கம் பிடி. நான் ஒரு பக்கம் புடிக்குறேன். வாசல் வரைக்கும் மொதக் கொண்டு போய்டுவோம்"

"சரிடி, ஆளத் தூக்கு"

அவர்கள் துணிக்கடை பொம்மையைத் தூக்கிச் செல்வது மாதிரி சாதாரணமாகப் பேச, சுந்தரம் இருவரையுமே நெருங்க விடவில்லை. மீறி வந்தால் ஒற்றைக் கையால் வேண்டாவெறுப்பாகத் தள்ளினார். அவரிடம் போராடித் தோற்ற ப்ரியா, அதற்கு மேல் மல்லுக்கட்ட முடியாமல் அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.

'இந்த அப்பா சொல்றப் பேச்சயே கேக்க மாட்டேங்குது. நாம மட்டும் அவரு சொன்ன சொல் தவறாம நடந்துக்கணும். அவரு ஆனா நம்மள மருந்துக்குக் கூட மதிக்குறது இல்ல. அவரோட நல்லதுக்குத் தான சொல்றோம். அதக் கூட புரிஞ்சுக்கத் தெரியல. என்னா பெரிய மனுஷனோ' தந்தையை நினைத்துக் கவலையுடன் நடந்து போய்க் கொண்டிருந்தாள்

எதிரே ஹார்ன் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கே விக்ரம் பைக்கில் வந்து நின்றான்

"மாமாக்கு இப்போ பரவால்லயா? என்னன்னு பாக்கத் தான் வந்தேன். நீ அதுக்குள்ளக் கிளம்பிட்ட?"

"எங்குட்டு? ஹாஸ்பிட்டல்ங்குற வார்த்தய எடுத்தாலே அப்பா மண்டைய மண்டைய ஆட்றாரு; எங்கயுமே வர்றதுக்கில்லன்னு நெஞ்சப் புடிச்சிட்டு உக்காந்துருக்காரு"

"செஸ்ட் பெய்ன் இருக்கா? எந்தப் பக்கம் வலிக்குதாம்?"

"லெஃப்ட்லக் கைய வச்சுருந்தாரு. மூச்சுத் திணறல் வேற"

"எதாவது சீரியஸ் பிராப்ளமா இருக்கப் போது, பிரியா. நீ பாட்டும் அசால்ட்டா விட்டுட்டுப் போற"

"அவரு அவ்ளோ அடமன்ட்டா இருக்காரு. நான் என்ன செய்யட்டும்?"

"நாம அத விட அதிகமாப் பிடிவாதம் பிடிக்கணும். நீ என்ன பண்ணு; பக்கத்துல ஆட்டோ எதும் இருந்தா கூட்டிட்டு வா. நான் போய் மாமாகிட்டப் பேசிப் பாக்குறேன்"

அவளை அனுப்பி வைத்த விக்ரம் வீட்டிற்குள் சென்றான்

"அத்த, கொஞ்சம் தள்ளுங்க. மாமா... மாமா..."

அவன் கன்னம் தட்டிப் பார்க்க, சுந்தரம் அதற்குள் அரை மயக்க நிலைக்குச் சென்றிருந்தார். உடனே அவரைக் கைகளில் ஏந்தியபடி அவன் வெளியே வந்தான். பத்மா அருகே இருந்த உறவினரிடம் காரைக் கடனாகக் கேட்டிருந்தாள். சுந்தரத்தை அவ்வாகனத்தின் பின்புறத்தில் சாய்த்துவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் போய் அமர்ந்தான் அவன். தாயும் மகளும் சுந்தரத்துடனே ஏறிக் கொண்டனர். அவரை மருத்துவமனைக்குச் சென்று சேர்த்ததில், இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் எனவும் கூறிவிட்டனர். சற்று தாமதித்து இருந்தாலும் அவர் பக்கவாதத்திற்கு ஆளாக நேர்ந்திருக்கும் என மருத்துவர் சொல்ல, அதைக் கேட்டுக் கலங்கிப் போனார் மங்கை.

"ரொம்ப நன்றிங்க, மாப்பிள்ள. நீங்க மட்டும் வரலன்னா..." என்று நாத்தழுதழுக்க அவர் குலுங்கி குலுங்கி அழுதார்

"அழாதீங்க, அத்த. தைரியமா இருங்க. சர்ஜரி நல்லபடியா நடக்க ஆகுற வேலையப் பாருங்க" இவ்வாறு அவரைத் தேற்றியவன் உடனிருந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தான்

மங்கை வெறும் மூவாயிரம் ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு பரிதவிக்க, அவனே மருத்துவச் செலவை ஏற்றான். இரண்டே நாட்களில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை அவன் செலுத்த நேர்ந்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து சுந்தரம் ஜெனரல் வார்டிற்கு மாற்றலானார். ஓய்வில் இருந்தவரை நலம் விசாரிக்க, இந்திரஜித்தும் பிரபாகரனும் வருகை தந்திருந்தனர்.

அந்நேரம் "அம்மா, இங்க வாயேன்" என இவரைத் தனியே அழைத்துச் சென்றாள் ப்ரியா

"சொல்லுமா"

"ஏன் அங்கை இன்னும் அப்பாவப் பாக்க வரல? ஒரு ஃபோன் கூட பண்ணல"

"அவளுக்குத் தகவல் தெரியாது. இனிமே தான் சொல்லணும்" இவளின் முகத்தை நேராய்ப் பார்ப்பதை மங்கை ஏனோ தவிர்த்தார்

"நீ தான் மாமாட்ட எல்லா விஷயத்தயும் மொத ஆளா சொல்லிடுவியே. இப்போ மட்டும் என்ன ஆச்சு?"

"கொஞ்சம் நிலைம சரி இல்ல"

"எங்கமா நீ சேத்து வச்சுருந்த பணம். எல்லாம் எங்கப் போச்சு? இப்டிக் காசுக்காக யாரயும் நீ எதிர்பாத்து, நான் பாத்தது இல்லயே"

"ஏன்டி, உன் புருஷன் காசு கொடுத்ததச் சொல்லிக் காட்டுறியா? நாங்க உனக்கு எவ்ளோ பண்ணிருக்கோம். கணக்குப் பாக்குறியாடி, பத்மா"

"ஏன் பொங்குற? ஏதேதோ பேசி மழுப்பாதம்மா. நான் எந்த அர்த்தத்துலக் கேக்குறேன்னு உனக்குத் தெரியாதா? புரிஞ்சும் புரியாத மாரி நடிக்காத"

"..."

"ம்மா... எதா இருந்தாலும் சொல்லு. என்னை ஒருவாட்டி நம்புமா"

"உன்ர மாமா..."

"என்ன பண்ணாரு? மென்னு முழுங்காம உண்மையப் பேசு"

"ஏமாந்துட்டோம், பத்மா..." மனமென்னும் எரிமலை வெடித்துக் கண்ணீர்க் குழம்பு பீறியது இவருக்கு

"அழாதயேன். சகிச்சுக்க முடியல"

"அந்தக் கடன்காரன நம்பிப் பொண்ணக் கொடுத்தது தப்பாய்டுச்சு, கண்ணு. செஞ்ச சீர், செனத்தி பத்தலன்னு உன் அக்காவக் குத்திக் கொடஞ்சிட்டே இருந்தான். நான் தான் அவசரப்பட்ராதமான்னு சமாதானம் சொல்லி, அவள அங்கயே இருக்க வச்சேன். இருக்குற வேலைய விட்டுப் போட்டு பிசினஸ் ஆரம்பிக்குறன்னு அப்பப்போ பணம் கேட்டான். நானும் பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு நினைச்சுக் கொடுத்துட்டே இருந்தேன். உன் சம்பளக் காச வாங்கி வாங்கிச் சங்கத்துக்குப் பணம் கட்டுனனே; இம்புட்டு வருஷமா அத்தன லட்சத்தயும் அவன் தான் தின்னான். மாலினி குட்டிக்கு ஸ்கூல் ஃபீஸு கட்டணும்னு அப்பாட்டயும் தனியா கறந்துட்டான். இவ்வளவயும் பண்ணிட்டு..." மறுபடியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் மூக்கைக் சிந்தினார்

"அழுவாம..."

"வர வர உன் அக்காவ அடிக்கடி கை நீட்டுறானாம். அவளால அந்த வேதனையப் பொறுத்துக்க முடியல. நம்ம வீட்டோட வந்துர்றேன்னு அச்சு சொல்ல, அதக் கேட்டப் பின்னாடி தான் அப்பாக்கு இப்டியாகிப் போச்சு"

"மாமா உன்ட்டருந்து பணம் வாங்குன விஷயம்லாம் இவருக்குத் தெரியுமா?"

"உன்ர அக்காகாரி மாப்பிள்ளயோட வாழப் புடிக்கலன்னு சொன்னதுக்கே பிபி எகிறிப் படுத்துக் கிடக்காரு. மத்த கதயலாம் கேட்டா மனுஷன் தாங்க மாட்டாருடி. வேற எதயும் அவருட்டச் சொல்லிட்டுருக்க முடியாது. நீயும் உள்ளுக்குள்ளயே வச்சுப் பூட்டிக்க"

"சரிம்மா. அக்கா எப்போ வரா?"

"வர்றதா? புருஷன் வேணாமுன்னு இங்க வந்துட்டா நம்ம சாதி, சனம் என்ன சொல்லும்? உன் அக்காளோட நடத்தை சரியில்லனு நாக்கு மேலப் பல்லப் போட்டுப் பேசிப்புடுவாங்க, அம்முணி"

"அதுக்கு... அவங்க தான் உனக்கு முக்கியமா? அக்காவப் பத்தி கவலப்பட மாட்டியா?"

"ஒன்னா, ரெண்டா? கணக்கே இல்லாம நகையும் பொருளும், கத்தை கத்தையா பணமும் அவனுக்குக் கொட்டிக் கொடுத்துருக்கேன். எல்லாம் எதுக்கு? அச்சுவ அவன் நல்லா பாத்துக்கணும்னு தான். இப்போ அவன் இல்லாத பொல்லாத வேல செஞ்சா, எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சுட்டு ஓடியாந்துட்ரதா? என்ர வீட்டுச் சீதனம் என்னாகுறது?"

"உன்ர வீட்டுப் பொண்ணு எப்டிப் போனாலும் பரவால்லயா? கிறுக்கு அம்மா, அங்கையோட நெலமைய யோசிச்சுப் பாரு"

"அடிச்சாலும் உதைச்சாலும் அந்தாள இழுத்துப் புடிக்கணும். இதுக்கே பயந்தா ஹேமாவ எப்டிக் கரை சேக்குறது? அவனும் அவ்ளோ சீக்ரம் அத்துட்டுப் போயிடலாம் முடியாது. நான் சும்மா விட மாட்டேன். அச்சுவ வச்சு அந்தாம்பள வாழ்ந்து தான் ஆவணும். இல்லனா, பஞ்சாயத்தக் கூட்டிடுவேன்"

மங்கை இந்தச் சமூகம் என்ன நினைக்கும் என்று சிந்தித்தாரே தவிர, அக்ஷதாவின் விருப்பு வெறுப்புகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்கவில்லை. இவர்களுடைய வறட்டுக் கௌரவத்திலிருந்து எப்படித் தமக்கையைக் காப்பாற்றப் போகிறோம் என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள் ப்ரியா. இவர்கள் இருவரும் உணர்ச்சிப் பெருக்கோடு பேசிக் கொண்டிருந்ததை விக்ரம் தொலைவில் நின்று கவனித்தான்.

உரையாடலுக்குப் பிறகு பத்மா தானாக முன்வந்து இன்னதென்று கூறுவாள் என அவன் எதிர்பார்த்தான். அவள் தொடர்ந்து அமைதி காக்கவே, தன்மீது அவளுக்கு உளமார்ந்த நம்பிக்கை இல்லை என்று தீர்மானித்துக் கொண்டான். சுந்தரம் உடல் நலமாகி வீடு திரும்பி விட, அதற்கு அடுத்த வாரம் இத்தம்பதியர் மலம்புழாவிற்குச் சென்றிருந்தனர். இருவரின் நெஞ்சங்களிலும் வெவ்வெறு சுமைகள்; தனிப்பட்டக் குழப்பங்கள். ஒருவருக்கு ஒருவர் விழிகளால் எதிர்கொண்டு இயல்பாகப் பேசிக் கொள்ள முடியாத அளவிற்குத் தடுமாற்றம்.

இந்திரஜித்தின் வீடு இரு அடுக்குகளைக் கொண்டது. தரைதளத்தில் விக்ரமின் அறை இருந்தது. பிரபாகரன் மேல் தளத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தான். மேலடுக்கில் தனியாகச் சமையலறை இருந்த போதிலும், சுப்ரதா தனித்து எதுவும் செய்வதில்லை; எந்நேரமும் கிரிஜாவை ஒட்டியே தான் இருப்பாள். அவர்களின் பாசப் பிணைப்பு கண்டு, சில சமயம் பத்மாவிற்கும் அவா பிறக்கும். தாய் வீடு தராத அரவணைப்பு தாரமாய்ப் போன இடத்தில் கிடைக்குமா என ஏங்கித் தவிக்கிறாள் தெரிவை.

ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக!