• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 33

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
அடுத்தநாள் காலையில் பத்மப்பிரியா தயாராகி அறையிலிருந்து வெளிப்பட்டாள். விக்ரம் தோளில் அடுக்களை துண்டுடன் உணவு மேசைக்கருகே நின்றிருந்தான்.

"அக்ஷதா கால் எதும் பண்ணலயா?"

"ம்ஹூம்ம்"

"நீயே கூப்புட்டுப் பாக்குறது?"

"இல்லங்க. நான் ஃபோன் போட்டு, மோகன் எடுத்துட்டாருனா சிக்கலாப் போய்டும். இந்நேரம் அவளே கூப்டுருக்கணும். எதுக்கும் வெய்ட் பண்ணிப் பாப்போம். ரெண்டு நாள் சென்டும் அவ வரலைன்னா, நாமளே நேர்லப் போய்ட வேண்டியது தான்"

"ம்ம்ம்"

"அப்ப நான் ஆஃபிஸ் கிளம்புறேன்"

"ஹே, பிரேக்ஃபாஸ்ட்ட மறந்துட்டுப் போற" எனக் கூறியவன் இட்லி இருந்த தட்டை அவள்முன் தள்ளினான்

"ச்ச்ச, ஏதோ நெனப்புலப் போறேன் பாருங்க" அவள் நாற்காலியில் அமர்ந்து வேகவேகமாய் உண்டாள்

"உன்னைய ட்ராப் பண்ணவா, மா?" மென்மையாக வினவியவன் அவள்புறம் பால் குவளையை நகர்த்தி வைத்தான்

"வேணாம். தூங்கி ரெஸ்ட் எடுங்க" பாலைப் பருகிப் புறப்பட்டவள் மறுபடியும் யூடர்ன் எடுத்து வந்தாள்

"அப்றம்... சட்னி, சாம்பார் ரெண்டுமே சூப்பர். பை" கையசைக்கும் முன்னரே அவனது கன்னத்தை இதழ்களால் ஈரம் செய்துவிட்டுப் போயிருந்தாள்

இதென்ன இட்லிக்காகத் தனிப்பாராட்டு என்றெண்ணி வியந்தவன் கன்னம் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவள் தந்த ஆச்சரிய முத்தம் மனதில் துள்ளலை ஏற்படுத்தியிருந்தது. அன்று மாலை அவன் படிக்கட்டில் அமர்ந்து காலணியின் கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தான். முடியிட்டு முடித்து அவன் எழ எதிரே பத்மா; ஒருவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினாள்.

வாகனத்தை ஓட்டி வந்தவன் அவளிடம் அதீத கரிசனம் காட்டினான் "பாத்துக் கவனமா இறங்கிக்கங்க, அம்முணி"

அவனது தோளை இறுகப் பிடித்தவாறு பாதங்களைக் கீழே ஊன்றியவள், அப்போது தான் கணவன் நிற்பதையே கவனித்தாள் "விக்ரம், இவன் வேணுகோபால். என் கூட வேலை பாக்குறுவரு"

"பாஸு..." அவன் சிரிப்புடன் கையை நீட்ட வர

"ஹலோ" எனும் ஒற்றை வார்த்தையோடு பைக்கில் ஏறிக் காற்றோடு கலந்துவிட்டான் விக்ரம்

"ஏதோ அவசர வேலை போல. அதான்..." அவள் தன்னவனின் சார்பாக அசடு வழிந்தாள்

"தெரியுது. ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்போ நீ எப்டி ஸ்டெப்ஸ் ஏறுவ? நான் வந்து வீட்டுக்குள்ள விடட்டுமா?"

"மேனேஜ் பண்ணிக்குறேன், வேணு. நீ போ"

"பொறுமயா மூணு, நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ஆஃபிஸ் வந்தா போதும். புரியுதா? டேக் கேர், பத்து" அக்கறையோடு சொன்னவன் மெல்லிய புன்னகையை வீசி விடைபெற்றான்

அவன் சென்று மறைந்ததும் பத்மா தட்டுத் தடுமாறி அப்படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டாள். காரணம், அவளது காலில் ஏற்பட்டிருந்த வீக்கம்; அதனால் உண்டான வலி. விக்ரம் அதைக் கவனத்தில் கொள்ளாமலே போயிருக்கிறான். இந்தக் காயத்தின் பொருட்டே வேணுகோபால் இவ்வளவு தூரம் வருகை தந்தான். அவனுக்கு எப்போதுமே பத்மாவின் மீது அன்பு அதிகம். அவளே அவனுடைய ஆதிகாதல். எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளியில் பயின்றுவிட்டு, ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தான் வேணு. அங்குக் கிடைத்த நெருங்கிய நட்புகளில் ஒருத்தி ப்ரியா.

நாட்போக்கில் அவனுடைய உள்ளத்தில் நட்பு காதலாய் அவதாரம் எடுத்தது. காதல் என்றால் ஒரு செடி - ஒரு பூ, நீயின்றி நானில்லை அந்த ரகம் அன்று. நீ உடனிருந்தால் என் நாட்கள் இனிக்கும் எனும்படியான இளவயது நாய்க்குட்டி வகை காதல். தன் பின்னாலேயே அவன் சுற்றி சுற்றி வருவது சில நேரங்களில் அவளுக்குச் சிரிப்பை வரவழைக்கும்; சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும். அவன் செய்யும் குறும்புகள் நிச்சயமாகப் பலரையும் கலகலக்க வைக்கும்.

அவளுள் உறங்கிக் கிடந்த பெண்மையை அவளுக்கே அடையாளம் காட்டியதும் தானும் ஓர் அழகி எனக் கர்வம் கொள்ளச் செய்ததும் கோபாலே. பருவமடைந்து ஈரைந்து தினங்கள் அவள் வராமல் போக, அவன் விடைதேடித் திரிந்தான். அவள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய நாளில் 'என்ன, பத்து? பெரிய மனுஷியாய்ட்டியாம். என்ட்டக் கூட சொல்லவே இல்ல பாத்தியா? ஊரயே கூப்டு என்ர அத்தயும் மாமனாரும் விருந்து வச்சாங்களாம். இந்த மாமனுக்கு எப்போ கறிக்கஞ்சி ஊத்தப் போறவ?' என்று காதால் கேட்டதைக் கள்ளங்கபடம் இன்றி வினவி வைத்தான். அவளோ அந்தப் பொருளற்ற கேள்வியால் செந்தாமரையாய்ச் சிவந்து போனாள்.

அந்த வயதிற்கே உரிய சின்ன சின்ன திருட்டுத்தனங்களை அவனுக்காகச் செய்திருக்கிறாள். அப்பாவுடைய நோக்கியா செட்டில் இருந்து அவனிற்கு அழைப்பதில் தொடங்கி, சிறப்பு வகுப்புகள் முடித்து ஒன்றாக நடந்து வருவது வரை கேலியும் கிண்டலுமாய் வருடங்கள் கழிந்தன. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்து அவள் தையல் வகுப்பிற்குச் செல்லத் தொடங்க, அவன் விளையாட்டுத்தனமாய்ப் பின்தொடர்ந்த வண்ணம் இருந்தான். ஒரு நாள் பத்மாவின் பெரியப்பா மகன் அவனைக் கண்காணித்து வழிமறித்துவிட்டார். அந்த அண்ணன் என்ன மிரட்டினாரோ அவள் அறியாள். அன்றோடு வேணுகோபால் தலைதெறிக்க ஓடியவன் தான்; பட்டயப் படிப்பினைக் கூட வெளியூர் விடுதியில் தங்கிப் படிக்கப் போவதாகக் கேள்வியுற்றாள் பத்மா. தன் அண்ணனுக்குப் பயந்து அவன் ஊரைவிட்டே ஓடியதை நினைத்தால் இப்போதும் நகைச்சுவையாக இருந்தது.

அந்தச் சிந்தனையில் இவள் மூழ்கியிருக்க, கீழ்வீட்டுப் பெண் இவளை அணுகி வந்தாள். குச்சி போன்ற இடையில் அப்பெண்ணின் குழந்தை தொற்றிக் கொண்டிருந்தது.

"இங்கயே உக்காந்துட்டீங்க? வேலைக்குப் போற டயர்டா?"

"ம்ம்... உங்க பையனா? எத்தன மாசம் ஆகுது?"

"ஒம்பது நடக்குது. வின்சென்ட்"

"உங்க பேரு?"

"சோஃபியா. நீங்க மேலத் தங்கிருக்கீயளோ?"

"உம்ம்ம். விக்ரம் இருக்காவல்ல; அவரோட வொய்ஃபு"

"அண்ணாக்குக் கல்யாணம் ஆய்ட்டா? சொல்லவே இல்ல. கூட இன்னொரு அண்ணா இருப்பாகளே..."

"ராம்குமாரா? என்னோட அண்ணன் தேன்"

தமையன் என்ற ஒற்றை வார்த்தையில் சோஃபியாவின் சந்தேகங்கள் தவிடுபொடியாகி விட்டன

"அவுக உங்களுக்குச் சொந்த அண்ணனுங்களா?"

இவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் ராம் வந்து கொண்டிருந்தான்

"ஆமா, ஆமா. தோ அண்ணாவே வந்துட்டாரே"

"உங்க ஃப்ரென்டுக்கே தங்கச்சியக் கொடுத்து மச்சான் ஆக்கிட்டீயளா? பெரிய ஆளு தான் போங்க" சோஃபியா முகட்டுவாயில் கை வைத்துச் சொல்ல

அவனும் உடன் சேர்ந்து கதையளந்தான் "ஆமாமா. எதுக்கு வெளியத் தேடிச் சிரமப்படணும்னு... பக்கத்துலயே பாத்துக் கட்டி வச்சுட்டேன். காலுல என்ன கட்டு?"

"அடிபட்டுருச்சு" பத்மா கூற

"நடக்க முடியுதா? எழுந்துக்க" என்றவன் கரம் பற்றித் தூக்கினான்

அவளைத் தாங்கிப் பிடித்தவாறு அவன் படியேற, அந்தப் பாசமலர்களைப் பார்த்திருந்துவிட்டு சோஃபியா புறப்பட்டாள்

"எங்க அவன்?" கேள்வியோடு கதவின் அருகே அவளை விடுவித்தான் ராம்

"தெரியல, ணா. எங்கயோ போனாரு" என்றவள் மெதுவாகக் கட்டிலில் சென்று அமர்ந்தாள்

அவன் தேநீர் தயார் செய்து வந்து கொடுக்க, அவள் அதைக் கையில் வைத்துக் கொண்டு மனதிற்குள் கணவனை வசைபாடினாள்

'இந்த அண்ணன் யாரோ, எவரோ? ஃப்ரென்டோட மனைவிங்குறதுக்கான்டி இவ்ளோ செய்யுறாக. நமக்குப் புருஷன்னு ஒன்னு வாச்சுருக்கே; கால்ல அடிபட்டுருக்குறதக் கூட பாக்காம, எங்கத் தான் ஓடுனாரோ? ஒருவேள கால்கட்டப் பாத்தும் கண்டுக்காமப் போய்ட்டாரா?'

யோசனையில் அவள் மூளை சுருங்கிய நேரம் வாயுபகவானோடு போனவன் திரும்பி வந்தான்

"யாரது?" தோட்டாவைப் போல சீறி வந்தது அவ்வினாச் சொல்

"அதான் சொன்னனே; கொலீக்..."

"தூக்கம் கெட்டாலும் பரவால்ல; உன்னை பிக்அப் பண்ணணும்னு மெனக்கெட்டுக் கிளம்புனா... அதுக்குள்ள எதுக்கு வந்த? உன்னாலப் பொறுமையா இருக்க முடியாதா?"

"..."

"காலுக்கு என்ன ஆச்சு?"

"இப்போ வந்து கேளுங்க. முன்னப் பாத்தப்பவே தெரியலயாக்கும்"

"சத்தியமா கவனிக்கலடி"

"வொர்க் பண்ணிட்டுருந்த போது, மெஷின் பார்ட் ஒன்னு கால்ல விழுந்துருச்சு. ஆட்டோலப் போய்க்கலாம்னு தான் நெனச்சனே. வேணு தனியாப் போக விடல; ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய்ட்டு, இங்க வந்து விட்டுப் போறான். இதுக்கே நான் உங்களுக்கு மெசெஜ் பண்ணேன்; ரிப்ளையே இல்ல"

"என்ன மெசெஜு? ஹாய்னு அனுப்பிருக்க. கால் பண்ணா கொறஞ்சு போய்டுவியா?"

"நைட் ஷிஃப்ட்டு வேறப் போவணும். நீங்க தூங்கிட்டு இருப்பீங்கன்னு தான்..."

"வலிக்குதா?"

"இல்ல, சொகமா இருக்கு"

"ஃப்ராக்சர் எதும் இல்லயே? கால அசைக்க முடியுதா? ஒத்தாசைக்கு அத்தைய வரச் சொல்லேன்"

"அய்யோ... ராம் அண்ணா இங்கத் தங்கிருக்கிறது தெரிஞ்சா கண்டதயும் பேசிச் சாவடிக்கும். இப்போதைக்குச் சொல்ல வேணாம். தனியா சமாளிக்க முடியலைனா, நானே பொள்ளாச்சி போய்க்குறேன்"

"ஹ்ஹம். இனிமே என்ன பிரச்சனைனாலும் டைரக்டா கால் பண்ணணும். நீ பாட்டுக்கு யார் கூடயோ பைக்குல ஏறிட்டு வரக் கூடாது"

"யாரோலாம் இல்ல. அவன் என் சைல்ட்ஹூட் ஃப்ரென்ட்; ரொம்ப நம்பிக்கையான பையன்"

"ஓஹோ..."

"தெரியுமா? டென்த்ல அவன் எனக்கு ப்ரப்போஸ் செஞ்சான். ஐ ரிஜெக்டட் ஹிம். லைஃப்லயே ஃபர்ஸ்ட் டைம் என்னை லவ் பண்றதா சொன்னவன் வேணு தான்; நான் எங்க போனாலும் கூடவே வருவான்; செமயா காமெடி பண்ணுவான். சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்கும். பக்கி, டெய்லி என்ட்ட ரெண்டு ரூவா ஆட்டையப் போட்டுப் போய் சாக்கி சாக்கி வாங்கித் தின்னும்; எனக்கு ஒன்னு; அவனுக்கு ஒன்னு. அதுலாம் மறக்க முடியாத நினைவுகள்"

"ஊம்ஹூம்ம். உன் பாய்ஃப்ரென்டப் பத்தி என்கிட்டயே வந்து சொல்லுற?"

"உங்கள்ட்டச் சொல்லாம, எதுத்த வீட்டுக்காரன்ட்டயா போய்ச் சொல்ல முடியும்? அன்ட் அவன் ஒன்னும் என் பாய்ஃப்ரென்ட் கெடயாது. எனக்கப்றம் அவன் அஞ்சாறு பேர லவ் பண்றேன்னு சுத்தி வந்துட்டான். யார் கூடயும் செட்டாவல. அதனால, சிங்கிளா திரியுறான்"

"பாவம். நீ தான் பாத்து செட் பண்ணி விட்றது"

"எனக்கு இத்தான் வேலை பாருங்க"

"அப்போ அது உன் வேலை இல்லையா? சரி, சரி... ஃபேஸ்வாஷ் பண்ணாம இருக்க. பாத்ரூம் வரைக்கும் தூக்கிட்டுப் போகவா?"

"அதெல்லாம் தேவயில்ல. டிரெஸ் மாத்தணும்"

"ஓ, தாராளமா மாத்தலாமே?"

"மாத்தலாம்... பீரோலருந்து டிரெஸ்ஸ எடுத்துத் தந்துட்டு, நீங்க சாத்திட்டுக் கிளம்புங்க; கதவச் சொன்னேன்"

"இந்த வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. காலைல முத்தா கொடுத்துட்டுப் போனதுலாம் வெறும் இட்லிக்காகத் தானா? எல்லாம் டிராமா"

"எச்சுஸு மீ. உம்மா வேணுமா? அதுக்கு ஏன் கிடந்து தவிக்குறீங்க? கம் ஹியர்"

அவள் சுட்டு விரலை நீட்டி அழைக்க, பாலாடைக்கட்டியைக் கண்டதும் ஆவலுறும் ஜெர்ரியைப் போல ஓடி வந்தான் விக்ரம்

"கண்ண மூடுங்க"

"நல்லா நச்சுன்னு கொடு. வாரம் ஆனாலும் மறக்கவே கூடாது"

பத்மா காஃபி நிறத்தில் ஊறியிருந்த உதடுகளைக் குவித்தாள் "உஉஉஉ..."

இதுல சவுன்ட் எஃபெக்ட் வேறயா!