• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 34

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
காதோடு சொல்
காதோடு சொல்
யாரென்று சொல்
யாரென்று சொல்

பேரழகனா சொல்
கொடுமுகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்

ஓடாதே சொல்
அடி ஓர் வார்த்தை சொல்

இங்ஙனம் காதருகினில் பத்மாவின் அலைபேசி அலற, விக்ரமிற்குக் கிடைக்கவிருந்த முத்தம் தவறிக் கண்காணாக் கானகத்தில் விழுந்துவிட்டது. அழைத்தது அங்கை என்று தெரிய வர, அவன் காரை எடுத்துக் கொண்டு காந்திபுரம் புறப்பட்டான். அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விடுத்தவன் நண்பனிடம் தனித்துச் சென்று பேசினான்.

"பத்மாவோட அக்கா லைஃபு ஒரு பெரிய இஷ்யூல சிக்கிடுச்சு. அதான், வேற வழியில்லாம இங்க வந்துட்டாங்க. இந்த நைட்டு மட்டும் பத்தரமா பாத்துக்க, ஆர். கே. நாளைக்கே அவங்கள பொள்ளாச்சிக்குக் கூப்பிட்டுப் போய்டுவேன். கேர்ஃபுல்லா இருடா" என அழுத்தமாகக் கூறியவன் அலுவலகத்திற்குத் தயாராகிப் போனான்

அங்கை ஹேமாலினியைத் தன்னுடன் அழைத்து வந்திருக்கவில்லை. அவள் எவ்வளவோ போராடியும், மோகன் மகளைத் தன் முள் வளையத்திற்குள் பிடித்து வைத்துக் கொண்டான். முதலில் நாம் வெளியேறிப் பின்னர் மகளையும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் இவள் தனியே வந்துவிட்டாள்; இங்கே பாதுகாப்பாக வந்தடைந்த போதிலும் ஹேமாவை நினைத்துக் கலங்கித் துடித்தாள். பத்மா இவளுக்கு நீண்ட நெடுநேரமாக ஆறுதல் கூறித் தைரியம் அளித்தாள்; பின்பு, பொறுமையாக இவளது மன வருத்தங்களை ஒவ்வொன்றாய் அலசினாள்.

அதன் முடிவில் தமக்கையின் இதயம் இந்தளவு நொறுங்கிப் போனது ஏனென உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்தது. அது... மோகனுக்கும் ஹஃபீஸா என்ற பெண்ணிற்குமான திருமணத்தைத் தாண்டிய நெருங்கிய உறவு. தன் கணவன் அப்படியும் செய்யக் கூடியவனா எனும் சந்தேகம் தொடக்கம் முதலே அங்கைக்கு இருந்து வந்தது. அதற்கான காரணிகளைப் பார்த்தோமானால், வரதட்சணையாகத் தந்த நகைகள் மற்றும் லட்சக் கணக்கான பணம் சிறிது சிறிதாக மாயமாகியபடி இருந்தன. இறுதி ஓராண்டாக வழக்குறைஞர் ஒருவரிடம் மோகன் அடிக்கடியும் மணிக்கணக்காகவும் உரையாடியவாறு இருந்தான். அங்கை நன்முறையில் அவனிடமே தனது குழப்பங்களைக் கேட்டுத் தீர்த்துக் கொள்ள முயன்றாள். ஆனால், அவனுடைய விநோதமான நடவடிக்கைகளுக்குக் காரணம் வினவ வாயைத் திறந்தாலே உதையும் குத்தும் விழுந்தன. மேலும், அவளது திடத்தை முற்றிலுமாகக் குலைக்க அவள் மீதே கலங்கம் சுமத்திக் காயப்படுத்தினான் மோகன். அங்கை உடலளவிலும் மனதளவிலும் பலவித ரணங்களை அனுபவித்துத் துவண்டு போனாள். பிறகு, ஓர் இரவில் போதை தலைக்கேறி அவனே ஹஃபீஸாவைப் பற்றி உளறி வைத்தான்.

அவ்விருவரும் ஆண்டாண்டு காலமாக ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள். இளமைத் துள்ளலில் அவளோடு பலமுறை கூடிக் களித்திருக்கிறான் மோகன். அவளை மணக்க விரும்புவது உண்மையானால், அவன் மதம்மாறியே தீர வேண்டும் என ஹஃபீஸாவின் குடும்பத்தினர் விதித்தனர். அதற்குக் கட்டுப்பட முடியாமல் மோகன் ஒரேயடியாய்ப் பின்வாங்கிவிட்டான். அவன் அக்ஷதாவை திருமணம் முடிக்க, ஹஃபீஸாவும் வேறொருவனை மணந்து கொண்டாள். அவளுக்குப் பிள்ளை பிறந்து சில மாதங்களுக்குப் பின் மீண்டும் அதே அலுவலகத்தில் சேர்ந்து பணியைத் தொடர்ந்தாள். அவளின் கணவன் திருமணமாகி இரு வருடங்களுக்குள்ளாகவே முத்தலாக் சொல்லிப் பிரிந்து போய்விட்டான். குழந்தையுடன் அபலையாக நின்றவளைக் கண்டதும் முன்னர் காதல் வயப்பட்டிருந்த மோகனின் உள்ளம் மறுபடியும் கனிந்தது. அவளும் அவனுடைய அபாயகர அன்பினைத் தேடி நாடி வந்தாள்; அவனுக்கு அனைத்து வகைகளிலும் ஒத்திசைந்து அடங்கிப் போனாள்.

அந்த மாயவலையில் சிக்குண்டவன் தாரத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து ஹஃபீஸாவிடம் வீழ்ந்தான்; அவளிடம் இருந்து விடுபட மனமின்றி காலடியிலே மண்டியிட்டுக் கிடந்தான். மாமனார் உழைப்பூற்றி வாங்கிக் கொடுத்த ஆபரணங்களை அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தான்; ரகசியமாக மாமியாரின் சேமிப்பைச் சுரண்டி அவள் வசிப்பதற்குக் கோட்டை கட்டினான். அவன் மது குடித்தாலே அங்கை மூக்கைப் பொத்திக் கொண்டு கதவடைத்துக் கொள்வாள். அவனுடைய முன்னாள் காதலி/ இந்நாள் ஆசைநாயகியோ அந்நேரங்களில் அவனை ஆரத்தழுவி இன்பமூட்டுவாள்; அவனுக்குக் கறி வறுத்துக் கொடுத்துத் தாலாட்டிச் சீராட்டித் தூங்க வைப்பாள். இது போன்ற அற்ப ஆசைகள் தாம் மோகனை அவளுடன் கட்டிப் போட்டன.

அவனின் விருப்பு வெறுப்புகளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த ஹஃபீஸா மறைமுகமாக அவனை ஆட்டுவித்தாள். அதனால், அக்ஷதாவின் மேலிருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் கரைந்து அவன் தன் காதலியுடன் முழு மனதாகக் கூடினான்; மனைவியிடத்தில் கூடுதல்நேர வேலை என நாடகமாடிவிட்டு, ஹஃபீஸாவுடன் விலையுயர்ந்த குளியல் தொட்டியில் ஆனந்தமடைந்தான்; அவளுடைய சிறுவயது மகனிற்கும் அளவின்றி அள்ளிக் கொடுத்தான்; இதுவே ஹேமா ஓர் ஐம்பது ரூபாய்க்கு மிட்டாய் கேட்டால், தாத்தா பாட்டியிடம் கேளு என்று விரட்டியடித்தான். இந்த உலகமகா உத்தமனைப் பெற்ற இரு தெய்வங்களுமே அவனை உப்புக்கல்லளவு கூட கண்டு கொள்வதில்லை.

அதையும் மீறி மனசாட்சிக்கு உட்பட்டு, மகனை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அவர்களுக்கும் மானாவாரியாக அடிகள் விழுந்தன. இப்படி அல்லல் படவா, திருமணமாகி ஆறாண்டுகள் கழித்துத் தவமிருந்து வரம் வாங்கி, அவனைப் பெற்றெடுத்தோம் என நினைத்து அவர்களுமே நொந்து போயினர்; அதனாலேயே அவனைப் பிரிந்து தனியாக வாடகை வீடு பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர். அந்த மனித மிருகத்திடம் தப்ப வழியில்லாமல் சிக்கிய ஒரே பலிமான் அங்கை மட்டுமே. தன் மேல் துளியும் நேசமில்லாதவனோடு வாழ்ந்து என்ன பயன் என்று இத்தகைய முடிவை எடுத்திருக்கிறாள். அவள் சேர்ந்து வாழ முயற்சிகள் எடுத்தாலும், மோகன் அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப் போவது உறுதி. அதற்காகத் தானே ஒரு வருடமாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான்.

மறுநாள் விடிகாலை வேளை அடுக்களையில் சத்தம் கேட்டு ராம் எழுந்து வந்து பார்த்தான் "நீங்களா? நான் கூட பத்மா தான் சமைக்குறாளோன்னு நினைச்சுட்டேன்"

"என் தங்கை குப்புறப்படுத்து நல்லா உறங்குறா. எனக்குத் தான் தூக்கம் வரல. கூடையிலக் கத்திரிக்கா நாலு இருந்துச்சு. எண்ணெய்க் கத்திரிக்காய் சமைச்சா சாப்பிடுவீகளா?"

"ஓ, தாராளமா. ஒரு பொண்ணு கையாலச் சாப்பிட்டு ரொம்ப காலமாச்சு"

"ஊருக்குப் போய்ட்டு வரலாம்ல; அம்மா சமைச்சுத் தரு... அம்மா... உங்களுக்கு அம்மா இல்... அச்சோ, மன்னிச்சுடுங்க. தெரியாமப் பேசிட்டேன். நான் ஒரு மண்டு" அவனது முகபாவத்தை வைத்து அங்கை தானாகப் புரிந்து கொண்டாள்

"பரவால்ல, க்கா. அதனால என்ன? சமைக்குறதுக்குக் கடை மிளகாத்தூள் தான் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"

"தம்பி, டீ எடுத்துக்க" அவள் கொடுத்த தேநீருடன் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்

நன்றாக விடிந்ததும் "எங்கே என் காஃபி? எங்கே என் காஃபி?" என்று கத்திக் கொண்டே அறைக்குள் வந்தான் விக்ரம்

அப்போது தான் தூக்கத்தைத் துரத்தியபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் பத்மா "காஃபி வேணுமா? இந்தா தாரேன், வாங்க"

காஃபி தேடி வந்தவனைக் கழுத்தோடு வளைத்துப் பிடித்து இதழ்ச் சுளைகளால் கன்னத்தில் இதமேற்றினாள்

"ஹே..." ஆச்சரியத்தில் கண்களை விரித்தவன் அவளை இடையோடு தூக்கி அறையின் மூலையில் நிறுத்தினான்

"விக்ரம்" என்ன செய்யப் போகிறானோ என்ற பதற்றம் அவளுக்கு

அவளின் ஆப்பிள் கன்னத்தில் மீசை முடி குத்துமளவு ஒரு முத்தம்; நீண்டு வளைந்த காதுமடலில் சிறு கடி.

"விக்ர..." வலி கூட சுகித்திட அவளிடம் ஒருவித படபடப்பு

வாழைத்தண்டு கழுத்தில் முகட்டுவாய் கொண்டு வழுக்கியவன் முதுகு வரை தன் கூர்நாசியால் உரசி வைக்க, இரு கைகளை நீட்டி அவனைத் தடுத்து நிறுத்தினாள் ப்ரியா

"ம்ம்ம்... அக்கா வந்துடப் போறா. தள்ளுங்க"

உள்ளுக்குள் தாபத்துடன் விலகி நின்றவன் அவளைக் குண்டுகட்டாகத் தூக்கிப் போய்க் குளியலறை வாசலில் இறக்கினான். அவளோ இதயத் துடிப்பு எகிறிய போதும், நாணத்தை வெளிக்காட்டாமல் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டாள்.

அடுத்ததாக விக்ரம் சமையலறையை அடைந்திருந்தான் "குட் மார்னிங், அக்ஷதா"

"சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?"

"முதல்ல காஃபி. அதக் குடிக்கத் தான் ஓடோடி வந்தேன்"

ஒரு வாய் உறிந்து ருசித்தவன் மெய் சிலிர்த்துப் போனான் என்று சொன்னால் அது மிகையில்லை "உங்க கைல எதோ மேஜிக் இருக்குங்க. சீக்கிரம் கண்டுபிடிக்குறேன்"

அக்ஷதாவிடம் சிறு கூச்சத்துடன் கூடிய சிரிப்பு. பின்னர் அவளும் விக்ரமும் பொள்ளாச்சி வரை செல்வதற்காகப் புறப்பட்டனர்.

ப்ரியா அவனிடம் மெல்ல கூறினாள் "ஏங்க, நானும் ஊருக்கு வாரனே"

"இந்த நிலைமைல எப்படி வருவ? ஸ்ட்ரெயின் பண்ணிக்காத; ரெஸ்ட் எடு. அதான், என்ன நடந்துச்சுன்னு விளக்கமாச் சொல்லிட்டீங்கள்ல. நான் பாத்துக்குறேன்"

"அக்காவோட போய் நின்னீங்கன்னா, உங்கள எதாச்சும் குத்தம் சொல்லுவாங்க. என்னைக் கொற சொன்னா கூட பரவால்ல; எனக்கா திட்டு வாங்கி வாங்கிப் பழகிடுச்சு. எங்காத்தா வேற எப்போ என்ன பேசும்னே தெரியாது; எதோ நம்ம தான் நடுவுலப் பூந்து கெடுத்த மாரியே கத கட்டும்"

"நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்" தீர்க்கமாய் வந்து விழுந்தன அவனது சொற்கள்

"..."

"மறக்காமச் சாப்புடு. அக்ஷதா போலாமா?" என்று வினவியவாறு அவன் அறையிலிருந்து வெளியேறினான்

பத்மாவும் எழுந்து வெளியே நடக்க, முன்பை விட அதிகமாகக் கால் வலியெடுத்தது

"அங்கை, அடி சரியானதும் வந்து பாக்குறேன். யார் சொல்றதுயும் காதுல வாங்கிக்காத. நீ பாட்டும் இரு. அந்த மனுஷன் என்ன தான் பண்றாருனு பாத்துடுவோம்"

"அம்மா என்ன சொல்லுவாங்களோன்னு பயமா இருக்குடி"

"பயம் வந்தாலும் வெளிக்காட்டாதடி; ஏச்சுப்புடுவாங்க. ஹேமாவ நெனச்சு வருத்தப்படாத. அந்தாளு உன்னைய அத்துவிட்டு, பச்சப்புள்ளைய மட்டும் வச்சுக்கிட முடியுமா என்ன? எதாச்சும் பண்ணிப் புள்ளைய வாங்கிர்லாம். இப்போதைக்கு நீ இங்கயே சம்மணம் போட்ற வழியப் பாரு"

"ம்ம்ம்"

"ஏய், இத்தன வருஷமா மனசுலயே எல்லாத்தயும் போட்டு வெம்புனதுலாம் போதும். யாராச்சும் எதாச்சும் கேட்டா, உனக்கு என்ன பிரச்சனைன்னு தெளிவாப் பேசு. மொசக்குட்டி மாரி பம்மாத. உனக்காக இல்லைனாலும் ஹேமாக்காக"

"வரேன்" எவ்வளவு எடுத்துச் சொல்லியும் தெளிவுறாமல் அங்கை வாட்டத்துடனே கிளம்பினாள்

விக்ரம் பொள்ளாச்சி வீட்டின் முன்பு சென்று காரை நிறுத்தினான். அவனைப் பார்த்ததும் மங்கைக்கு முகங்கொள்ளாப் புன்னகை மலர்ந்தது. அதுவும் சுந்தரத்தைக் காத்ததால் வந்த நன்றியுணர்வினால். அவனோ உணர்ச்சிகளைத் துடைத்தெறிந்தவனாய் மறுபக்க கதவைத் திறந்தான். சங்கடத்துடன் அக்ஷதா வெளிப்பட, அவளைக் கண்ட தாயுள்ளம் வேதனையின் உச்சத்திற்குச் சென்றது.

"அடி, நான் பெத்த மவளே... தனிமரமா வந்து நிக்கியேடி. உன் வாழ்க்கை இப்படியா பொசுக்குன்னு ஆகணும். உன்னைத் தேராட்டம் கட்டிக் கொடுத்தா இப்போ தெருவுல நிறுத்திட்டானே, பாவி; அவன் நல்லாருப்பானா..." காதும் காதும் வைத்த மாதிரி மகளை அரவணைத்து வீட்டிற்குள் பேச வேண்டிய விஷயத்தை, ஊரே பாரு நாடே கேளு என்று ஒப்பாரி வைத்து அக்கம் பக்கத்துச் சனங்களுக்கு ஒலிபெருக்கிவிட்டார் மங்கை

இந்தம்மா என்ன பண்ணக் காத்திருக்கோ!