• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 36

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
விக்ரம் பத்மாவிற்காக அவளது வீட்டாரிடமே வரிந்து கட்டிக் கொண்டு பேசியதை அவள் அறிய வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அவளிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்பிக்கையை அவன் இப்போதே பெற்றிருப்பான். இங்கு அவளோ அவசியமின்றி கணினியின் நவீன குப்பைத் தொட்டியில் தலையிட்டுக் கொண்டாள். அதனுள் விக்ரம் நிரந்தரமாக அழிக்காமல் விட்ட கல்லூரிகாலப் புகைப்படங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தன. அனைத்திலும் அவனுடன் ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் இருந்தது ஜெனியே தான்.

அவளுடைய முகம் சிறு சிறு ஐகான்களில் மங்கலாகக் காணப்பட்டது. அவற்றில் ஒரு புகைப்படத்தைத் தொட்டு ப்ரியா ரீஸ்டோர் செய்திட்டாள். அது எந்த ஃபோல்டரில் மீட்சி அடைந்தது என உடனே கண்டறிய முடியவில்லை. அதைத் தேடுமளவு மும்முரமும் இல்லாமல் அவள் மடிக்கணினியை அணைத்தாள்; அப்போது கிரிஜா அழைக்க, குரலில் சுரத்தே இல்லாமல் பேசத் தொடங்கினாள்.

"சொல்லுங்கத்த"

"என்ன கண்ணு ஆஃபிஸ் போலயா? ஃபோன எடுக்க மாட்டனுல்ல நெனச்சேன்"

"இல்லத்த. கால்ல அடிபட்டுருக்கு. வேலைக்குப் போகல"

அதைக் கேட்டதும் பதைபதைத்துப் போனவர் பேருந்தேறி நேராக கோவையில் வந்திறங்கிவிட்டார். அவர் வந்த நேரம் விக்ரம் வீட்டினுள்ளே உறங்கிக் கொண்டிருந்தான். பத்மா உணவுமேசையில் தலைசாய்த்துப் படுத்திருந்தாள்; சத்தம் கேட்டுப் போய்க் கதவைத் திறந்தாள்.

வாசலில் மாமியாரைக் கண்டதும் பெரிதாய் முகம் மலர்ந்தவள் "வாங்க, வந்து உக்காருங்க. ஏன் அத்த உங்களுக்குச் சிரமம்? சின்ன அடி தான்" என்று கூறிட்டாள்

"அடி சின்னதோ, பெருசோ; வலி வலி தான. நீங்க ஒன்னா வீடு பாத்துத் தங்கிட்டோம்ன்னு சொன்னதும் எனக்குக் கையும் ஓடல; காலும் ஓடல. ரெண்டு மகராசங்களப் பெத்து வச்சுருக்கனே. ஒருத்தரும் வீடு குடிபோன விஷயத்தப் பத்திச் சொல்லவே இல்ல. எப்போ பால் காச்சுனீக?"

"புதுசா ஒன்னும் குடி வரல; உங்க பையன் ஏற்கனவே தங்கிருந்த வீடு தேன். ராம் அண்ணா இன்னுங்கூட அந்த ரூம்லயே தங்கிக்குறாரு"

"அதனால என்ன? அந்தப் புள்ள பாட்டு அது இருக்குது; யாருக்கும் த்ரோகம் நெனைக்காது. நீங்க ரெண்டு பேரும் சேந்து இருக்கீங்கள்ல; அது போதும்"

"வந்தவங்களுக்கு ஒரு வா தண்ணி கூட குடுக்காம
நிக்க வச்சுப் பேசிட்டுருக்கேன், பாருங்க. என் புத்திய..." பத்மா நெற்றியைத் தட்டிக் கொண்டு நகர

கிரிஜா அவளைப் பிடித்து அமர வைத்தார் "உக்காருடி, மருமகளே; கால் நோகப் போது. நான் இங்க இருக்குறவர உனக்கு ஃபுல் ரெஸ்ட்டு. ஜம்முனு இரு"

"அப்போ மாமாவோட நெலம?"

"அவருக்கென்ன? சுப்பு இருக்காள்ல. அவப் பாத்துப்பா. இல்லனா, கடைலத் தின்னட்டும்"

அவர் சொன்னது போலவே அடுத்த இரு தினங்களுக்கு அவ்வீட்டிற்கே முழு ஓய்வு தான். ராம் உட்பட யாரையுமே கிரிஜா வேலை செய்ய அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து இளையவனின் வீட்டில் வந்து தங்கியிருப்பதால் பிறந்த குதூகலம் அவருக்கு. ஆகவே, ஒரு விநாடி கூட நில்லாமல் பம்பரமாய்ச் சுழன்று கொண்டேயிருந்தார். பத்மாவும் அவரும் ஒன்றாகப் படுத்துக் கொள்ள, விக்ரம் நண்பனின் கட்டிலைப் பங்குபோட வேண்டியதாயிற்று. அத்தையின் அரவணைப்பு மகிழ்ச்சியைத் தந்தாலும், ஒருபுறம் அங்கையின் வாழ்வைப் பற்றிய கவலையும் பத்மாவைப் பீடித்தது. தமக்கையிடம் மனம் விட்டுப் பேச முடியாத சூழல் நிலவியதால் அவள் பொறுமை காத்தாள். எல்லா பணிவிடைகளையும் செய்து முடித்து, கிரிஜா ஊருக்குப் போகும் மாலைவேளையும் வந்தது.

"பத்மா கண்ணு, எம்புள்ளைக்கும் வயசாகுது; உனக்கும் வயசாகுது. குடும்பத்த வளக்கப் பாருங்க. மொதல்ல உடம்ப கவனமா வச்சுக்க. ரொம்ப அலட்டக் கூடாது. புரிஞ்சுதா?" போகிறப் போக்கில் அவர் தன் மனக்குறையை மருமகளின் உள்ளத்தில் செருகினார்

ஓரளவு கால் குணமாயிருக்க பத்மா படியேறி மேல்மாடிக்குச் சென்றாள்; அங்கு நின்று பாடல்களைக் கேட்டவாறு விக்ரமுடனான எதிர்கால வாழ்வைச் சிந்தித்த வண்ணம் இருந்தாள்; ராம்குமார் வேலை முடிந்து வீட்டிற்குள் செல்வதைக் கவனித்துவிட்டு, மெல்லப் படியிறங்கி வந்தாள். பொழுது சாய்ந்தும் விளக்குகள் போடப்படாமல் காரிருள் நிலவியது. பத்மா ஒவ்வொரு ஸ்விட்சாய் அழுத்த வெளிவிளக்கு மட்டுமே ஒளிர்ந்தது. அதனால், உள்ளறைகளில் மீண்டும் மீண்டும் ஸ்விட்சுகளைத் தட்டினாள். அக்கணம் அந்த இருட்டினில் இருந்து தட்புட்டென்ற சத்தம்; ஏதோ நிழலசைவு; ஒருவன் பாய்ந்து வரும் உணர்வு. இவையெல்லாம் சேர்ந்து அவளுக்குப் பயம் தொண்டையை அடைத்தது.

யோசியாமல் "ராம் அண்ணா..." என்று கத்திவிட்டாள்

அவள் அடுத்த வார்த்தை கூவுவதற்குள் அவ்வுருவம் ஓடி வந்து அவளது கழுத்தை நெருக்கி அழுத்தியது. அவளின் கூக்குரல் கேட்டு ராம் டார்ச் லைட்டுடன் அவ்விடத்தை நோக்கி விரைந்தான். வெளிச்சம்பட்டுத் தன் அடையாளம் அம்பலமாகி விடுமோ என்ற அச்சம் அந்தக் கள்ளனுக்கு எழுந்தது போலும். உடனடியாக, பத்மாவை உதறித் தள்ளிவிட்டு வாசலுக்குத் தாவினான். எதிரே வந்த ராம் அவனைத் தவ்விப் பிடிக்க, இருவருமாக வரவேற்பறையில் கிடந்து உருண்டனர். அவனுடைய குரல்வளையை இரு புஜங்களாலும் வளைத்து நொறுக்கினான் ராம். அப்போது கூட கள்வனிடம் இருந்து ஒரு முக்கல் முணகலும் வெளிப்படவில்லை.

இளைப்பு வாங்க மெதுவாக எழுந்த பத்மா "அய்யோ, திருடன், திருடன்... யாராவது வாங்க" என மறுபடியும் கத்திக் கூப்பாடிட்டாள்

அதில் மேலும் பதற்றமடைந்த கள்வன் ராமை விலக்கப் பெரும் பிரயத்தனம் செய்தான். அவனைத் தப்பவிடாமல் இருக்க, ராம் அவனது ஆடையைப் பலமாகப் பற்றியிழுத்தான். அடுத்த விநாடியே அக்கயவன் சட்டையைக் கிழித்துக் கொண்டு, பின்னங்கால் பிடறியிலடிக்க, இரண்டு கால் பாய்ச்சலில் மறைந்துவிட்டான். அவ்வாறு மின்னல் வேகத்தில் ஓடியவனை, சுற்றி இருந்தவர்களால் சரியாகப் பார்க்கக் கூட முடியாமல் போனது.

ராம் கீழே விழுந்த டார்ச்சை எடுத்துப் பிடிக்க, நடந்த தள்ளுமுள்ளில் பலவீனமடைந்து கால் நடுநடுங்க நின்றிருந்தாள் பத்மா. அவளைப் பக்குவமாகத் தாங்கிப் பிடித்து இவன் கட்டிலில் அமர்த்தினான்.

"பயப்படாத, தங்கம். அண்ணன் இருக்கேன்" அவளுக்கு ஆறுதலளித்த ராம், அங்கே கழன்று கிடந்த வயர்களைச் சரிசெய்து வெளிச்சம் பரவச் செய்தான்

எல்லாம் அந்தக் கள்வனின் வேலை தான். வீட்டினுள் இருந்த மின்சார வயர்களை எலிபோல் ஆங்காங்கே கத்தரித்து வைத்திருந்தான். முதலில் நுழைந்த ராம்குமார் சாதாரண பவர்கட் என மெத்தனமாக நினைத்துத் தனதறைக்குள் புகுந்தான்; பத்மாவின் கூச்சலில் தான் மற்ற வீடுகள் இயல்பாக ஒளிர்வதையே உற்றுநோக்கினான். பின்னர் இவன் எவ்வளவோ முயன்று போராடியும் திருடனைப் பிடித்தபாடு தானில்லை.

விளக்குகள் உயிர் பெற்ற பிறகும் இருளில் அகப்பட்டவளைப் போலவே இருந்தாள் பத்மா. அவ்வறையின் மேசையில் விக்ரமின் மடிக்கணினி திறந்து கிடந்தது. அவளே தான் கடைசியாக பாஸ்வேர்ட் அமைத்து, அதை டிராவில் வைத்துவிட்டுப் போனவள். இப்போது அது மேசையின் மேலிருக்க, அவளுக்கு வேறு மாதிரியான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு பொருளை அபகரிக்க வந்த திருடன், எதற்காக இங்கேயே உட்கார்ந்து அதில் உளவு பார்க்க நினைய வேண்டும்? தப்பிச் சென்றது உண்மையான திருடனா? உண்மையாகவே திருடனா? அவன் பொருளுக்காக வந்தானா? இல்லை...

ராமிற்கு அவளைத் தேற்றும் வழிவகை தெரியவில்லை. எனவே, விக்ரமைத் தொடர்புகொண்டு வீட்டிற்கு வரவழைத்தான். வேலையைத் தொங்கலில் விடுத்து வந்தவன் காவல் நிலையம் சென்று அத்திருடனைப் பற்றிப் புகாரளிக்க வேண்டுமென்று குதிக்க, பத்மா முற்றிலுமாக மறுத்துவிட்டாள். அவளது மூளை குழப்பநிலையை எட்டியிருக்க, உண்ணவோ உறங்கவோ தோன்றாமல் இறுக்கமாகக் காணப்பட்டாள். அவளுக்குத் தாயாய்த் தந்தையாய் இருந்து சோறூட்டிப் படுக்க வைத்தான் விக்ரம். அவன் போர்வையை இழுத்து மூடிவிட, அவளோ தூங்காமல் அலைபேசியைத் தட்டிக் கொண்டேயிருந்தாள். சன்னல், கதவுகள் அனைத்தையும் சாற்றித் தாழிட்டவன் அறையின் மின்விளக்கை அணைக்க அவள் மருண்டு பார்த்தாள்.

அவளின் அருகே வந்து போர்வையோடு அணைத்துக் கொண்டவன் "தூங்கு, அம்மு. கண்டதயும் யோசிக்காத" என்று சொல்லி விழிகளைச் சாற்றினான்

அவன் சற்று நேரத்தில் தூங்கிப் போக, நள்ளிரவைத் தாண்டியே அவளின் கண்ணிமைகள் மூடின. விடிந்த பின்னும் அவனது தோள்பட்டையோடு ஒட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள். முன்னரே எழுந்துவிட்ட விக்ரம் ஆடாமல் அசையாமல் படுத்தே கிடந்தான்; அவளுடைய முகத்தின் முன் முடிக்கற்றைகள் விழுந்து கிடக்க மெதுவாக ஒதுக்கிவிட்டான். அத்தீண்டலில் காலைநேர தாமரை இமைகளை மலர்த்தி விழித்தது.

"பயப்படாத, நான் தான்" அவன் கிசுகிசுக்க, அவனை மிக நெருக்கத்தில் கண்டவள் தயக்கத்துடன் குனிந்து கொண்டாள்

"ஆஃபிஸ் போலயா?" அவனது டீஷர்ட்டை ஒற்றை விரலால் சுரண்டியபடி கேட்டாள்

"ம்ம்ஹூம்ம்" அவன் அவளின் நெற்றியில் முத்தம் பதித்து மறுப்பாய்த் தலையசைத்தான்

"நீங்க நைட்டு வேலைக்குக் கிளம்புங்க. நான் எங்க ஊருக்கே போறேன்"

"நானில்லாம நீ பொள்ளாச்சி பக்கம் போகவே கூடாது. என்னோட ஷிஃப்ட்ட மாத்திக்குறேன். பகல்ல ரெண்டு பேரும் வேலைக்குப் போவோம்; நைட்டு ஒன்னா இருப்போம். நீ பயப்படத் தேவயிருக்காது"

"ஏன், நான் பொள்ளாச்சிக்குத் தனியாப் போறதுல உங்களுக்கென்ன?"

"புருஷன் இல்லாம வீட்டுக்குப் போனீனா, உங்கம்மா உள்ள விட மாட்டாங்க. வாசல்லயே நிறுத்திடுவாங்க"

"செஞ்சாலும் செய்வாங்க. அங்கை அவங்கள்ட்ட மாட்டிட்டு என்ன பாடுபடுறாளோ?"

"அக்ஷு தான் உங்க வீட்டோட செல்லப் புள்ளயாச்சே. ஒன்னும் சொல்ல மாட்டாங்க"

"எனக்கென்னமோ அப்டித் தோணல. இந்த சிட்சுவேசன்ல அவளயும் கண்டிப்பா டார்ச்சர் பண்ணுவாங்க. இதுவே நானா இருந்தா, மொத்தமா தலைமுழுகிருவாங்க. அதிருக்கட்டும்; நீங்க என்னமோ எங்க வீட்டாளுங்களப் பத்தித் தெரிஞ்ச மாரியே பேசுறீங்க? நான் தான் எங்க வீட்டுச் சின்ன புள்ள; செல்லக்குட்டி"

"ஆமாமா. நாலு பேரு சொல்லிக்கிட்டாங்க. நீ செல்லந்தான்; ஆனா, எனக்கு மட்டும். எங்க அம்மாக்கும் கூட, உன்னை ரொம்ப பிடிச்சுருக்காம்; உன்னைய நல்ல பொண்ணுனு..."

"இருங்க, இருங்க. நான் செல்லமா? அதும் உங்களுக்கு? இது எப்போத்திலருந்து? அப்டி நான் என்ன பண்ணிட்டனாம்?"

"ம்ச்ச் தெரியல"

விழிகளோடு விழிகள் நோக்கி அவள் சொன்னாள் "குருட்டுத்தனமான காதல்"

"காதலுக்குக் காரண காரியங்கள் வேணுங்களா, அம்முணி?"

"பின்ன?" அவள் இதழ் சுழித்துக் கேட்க, அதைக் கடித்திழுக்கும் ஆசை அவனுள் எழும்பியது

அவன் தன் கழுத்தை வளைத்து உதடுகளை அணுக, பட்டென்று விலகி எழுந்தாள் அவள் "நீங்க மொதல்ல வேலைக்குக் கிளம்புங்க. வீட்டுலச் சும்மா இருந்தா, இப்டித் தான் கண்டது கழுதயும் தோணும்"

"கல்நெஞ்சக்காரி" அவளுக்குக் கேட்கும்படியே கூறியவன் விரைவில் தயாராகி வந்தான்

"சோபியா வீட்டுலச் சொல்லிட்டுப் போறேன். நீ அங்கப் போனாலும் சரி; அந்தப் பாப்பா இங்க வந்தாலும் சரி. மொத்தத்துலத் தனியா இருக்காத. நேத்து மாரி கதவத் தொறந்து போட்டு எங்கயும் போய்டாத. மறக்காம, டோர லாக் பண்ணு" அறிவுரைகளை வாரி இறைத்தவன் வாகனத்தில் ஏறிக் கொள்ள, பத்மா ஏக்கமாகப் பார்த்திட்டாள்

இப்போ பாத்து என்ன பிரயோஜனம்?