• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 37

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
கணவனின் தோளில் தூங்கி எழுந்த நொடி முதலே ப்ரியாவிற்கு ஒருவித சிலிர்ப்பாகத் தான் இருந்தது. அவனது கொஞ்சல் பேச்சும் நெற்றியில் பதித்த முத்தமும் அவளைக் கனவுலகிற்கு இட்டுச் சென்றது. அவள் குருட்டுத்தனமான காதல் என மொழிந்தபோது அவளுடைய உணர்ச்சியையும் சேர்த்தே உரைத்தாள். நாளுக்கு நாள் அவளிற்கும் அவனிடம் ஈர்ப்பு அதிகமாகிக் கொண்டே போவது உண்மை. அது ஏனென்று அவளே அறியாள். அவன் பத்மாவின் இதழ்களைப் பருகத் துடிக்க, அவளின் உள்ளமும் கட்டுப்பாடுகளை உடைத்து அவனைக் கட்டிக் கொள்ளுமாறு கெஞ்சியது.

இருந்தபோதும் அவனுடைய காதலின் ஆழத்தை அறியாமல் தன்னைக் கொடுக்க அவள் விரும்பவில்லை. அதனாலே தறிகெடும் தன் மனதிற்குக் கடிவாளமிடும் பொருட்டு அவனை விட்டு விலகினாள். அவனை அருகிலே வைத்துக் கொண்டு சஞ்சலப்பட்டுத் தவிக்க திராணி இல்லாமல் பணிக்குப் போகுமாறு பணித்தாள். இப்போது அவனும் அவளிடத்தில் முறுக்கியபடி பைக்கின் ஹேன்ட்பாரைத் திருகினான். அவன் சைட் மிரரைத் திருத்த, கண்ணாடியின் வழியே தெரிந்த தாமரை முகத்தில் பரிதவிப்பு நிரம்பியிருந்தது. தேடி வந்தவனை விலக்கித் தள்ளியது அவன் பிழையன்றே. அதனால், அவளின் ஏக்கத்தைத் தவிர்த்து வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.

இரவுநேரம் போல வீடு திரும்பியவன் அவளைக் கண்டுகொள்ளவும் இல்லை; உண்டாயா, போனாயா, வந்தாயா என்று கேட்டுக் கொள்ளவும் இல்லை. அவளுமே தலையைத் திருப்பிக் கொண்டு, பார்வையைத் தொலைக்காட்சியிலும் கவனத்தை அவனிடத்திலும் தொலைத்து உட்கார்ந்திருந்தாள். அப்போது அவனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதைப் பேசுவதற்காக அவன் வெளியே சென்ற நேரம், பக்கத்துவீட்டு ஆள் பால்கனியில் நின்றிருந்தார். அவ்விரு வீடுகளுக்கு இடையேயும் சில அடிகள் தாம் இடைவெளி.

"என்னப்பா, உங்க வீட்டுலப் பொம்பளப் புள்ள ஒன்னு தங்கியிருக்கு போல"

"ஆமா" இவன் புருவத்தைச் சுருக்கியபடியே சொன்னான்

"ஒரே ஜாலி தான் போ"

"என்ன ஜாலி?"

"இல்லப்பா, இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜமாய்டுச்சு. ஒரு பொண்ணக் கூட்டி வந்து வீட்டுல வச்சுட்டு..."

"என்ன பேசுறீங்க? அது என் பொண்டாட்டி"

"ஓஹோ... கங்ராட்ஸ்ப்பா" அவருக்குத் தொண்டை கவ்வியது

"நீங்க ஜெர்மனிக்கு ட்ரிப் போறேன்னு கிளம்பி, ஒரு மாசம் ஆகிப் போச்சு. எப்ப வந்தீங்க? என்னோட வொய்ஃப எப்போ பாத்தீங்க?"

"பாத்துத் தான் தெரியணுமாப்பா. கொடிலத் தான் துணி காயுதில்ல"

அவரது பார்வை போன திசையில் அவனும் நோக்க, பத்மாவின் டீசர்ட்டுகளும் பேன்ட்டும் கூடவே உள்ளாடைகளும் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. உடனே, எள்ளும் கொள்ளும் வெடிக்க அவரை முறைத்தவன் துணிகளை மொத்தமாக உருவிக் கொண்டு போய் உணவுமேசையில் வீசினான்.

"ஏன்டி, உனக்கு அறிவிருக்கா? உள்ளப் போட்றதலாம் இப்படி வெளியத் தொங்கவிட்ருக்க. கண்ட நாயெல்லாம் உத்துப் பாத்துட்டு உக்காந்துருக்கு"

"எந்த நாய் என்ன சொன்னுச்சுனு இப்படிக் கொலைக்குறீங்க?"

"அங்க ஒரு பெரிய மனுஷன் இதப் பாத்துட்டு, பொண்ணு வச்சிருக்கியான்னு கேக்குறான்"

"யாரு அப்டிக் கேட்டது; நானும் பாக்குறேன்" வேகமாக அவள் நடந்தாள்

"எங்கப் போற?" அவன் எரிச்சலுடன் பின்தொடர்ந்தான்

"யோவ், உன் வீட்டுல எவளும் இதலாம் போட்றது இல்லயா? எதெத பேசணும், கேக்கணும்னு வெவஸ்த கெடயாது. இம்புட்டு வயசாகுதே; எறும்பளவாச்சும் அறிவு வேணாம். மூளையக் கொண்டு போய் எங்கயாச்சும் அடகு வச்சுட்டியா? இன்னொரு தடவ இந்தப் பக்கம் கண்ணு திரும்புச்சு; ஹேர் கர்லர எடுத்துட்டு வந்து பொசுக்கிடுவேன்" பொரிந்து தள்ளினாள் அவள்

"என்னமா மரியாத இல்லாமப் பேசுற? எதோ பொட்டச்சியாச்சேனு பாக்குறேன்" அந்தாளிற்குத் தாடை இறுகியது

"அப்டித் தான்டா பேசுவேன். அப்டித் தான் பேசுவேன். என்ன பண்ணுவ?"

"இந்த ஏரியாவ விட்டே காலி பண்ண வச்சுருவேன்; பாக்குறியா?"

"உன்னால முடிஞ்சதப் புடுங்கு, போ"

"என்ன விக்ரம் இதெல்லாம்? பெரிய பஜாரியாப் பாத்துக் கல்யாணம் பண்ணிருக்க"

"நேரா இங்கப் பேசு, கெழடு. பஜாரி என்ன பண்ணும்னு தெரியுமா உனக்கு?" என்றவள் கையில் கிடைத்த செருப்பைத் தூக்கி எறிந்தாள்

சற்றே நகர்ந்து செருப்படியில் இருந்து தப்பிக் கொண்டது கிழம்

"ஏங்க இப்டி மானத்த வாங்குறீங்க? மத்தவங்க வீட்டு விஷயத்துலத் தலையிடாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா? உள்ள வாங்க" அவரது மனையாள் வந்து அவரை இழுத்துச் சென்றார்

"ஏம்மா, உன் புருஷன ஒழுங்கா வீட்டுல இருக்கச் சொல்லு. இன்னொரு தடவ வெளிய வாலாட்டுறதப் பாத்தேன்; பொளிச் பொளிச்சுனு அறைஞ்சுடுவேன்"

அதற்கு மேல் பேச விடாமல் விக்ரம் அவளைத் தடுத்தான் "அந்த ஆள் யாரு என்னனே தெரியாம ஏன் இப்டி எகிறிட்டுப் போற? ஊரே உன்னைத் தான் பாக்குது. அசிங்கப்படுத்தாத"

"இப்போ நான் என்ன பண்ணிட்டேன்? எந்தத் துணியா இருந்தாலும் வெயில்லக் காஞ்சா தான் பாக்டீரியா சாகும். அப்றம் உடுத்துனா ரேஷஸ் வராது; இட்சிங் இருக்காது. சொல்லுங்க, இது ஒரு குத்தமா? எந்தக் காலத்துல இருக்கீங்க, விக்ரம்? தப்பு பண்ணவனத் தட்டிக் கேக்காம எங்கிட்டக் கத்திட்டு இருக்கீங்க. உங்களப் போய்க் கல்யாணம் பண்ணேன் பாருங்க. அசிங்கமா இருக்குன்னா நமக்குள்ள எதுவுமே வேணாம். என்னை ஹாஸ்டலுக்கே அனுப்பிவிட்டுருங்க. எக்கேடோ கெட்டுத் தொலையுறேன்"

அவள் கோபத்துடன் முன்போலவே நாற்காலியில் போய் அமர, அலைபேசியுடன் முகப்பிலேயே நின்று கொண்டான் விக்ரம். யாரிடமோ பேசி முடித்தவன் ராம்குமாரின் அறைக்கதவைத் தட்டினான். அதுவரை நடந்த சண்டையைப் பற்றி ஏதுமறியாத இவனோ ஹெட்செட்டைக் கழற்றியவாறு எட்டிப் பார்த்தான்.

"மச்சான், ரூமுக்குப் பசங்க வராங்களாம்டா" அங்கு பத்மா என்ற ஒருத்தியே இல்லையென்பதைப் போல பேசினான் விக்ரம்

அவளைப் பார்த்துத் திருதிருவென விழித்த ராம் பதற்றமாய்க் கேட்டான் "எதுக்கு?"

"தெரியாத மாரியே கேக்குறப் பாத்தியா? இன்னைக்கு ஃப்ரைடேடா; ஃபன் டே, மச்சான்"

"அதுலாம் அப்போ"

"இப்ப மட்டும் என்ன? நம்ம ஓனர் எங்கயோ சௌதிலக் கிடக்காரு. இட்லிக்கடை அக்காவும் நம்மள எதும் கண்டுக்காது. இது நம்ம கோட்ட, மச்சி"

"டேய், இந்த வீட்டு ஓனர விடு. உன் ஓனரம்மாவப் பாரு" ராம் முணுமுணுத்தான்

"மச்சான், அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. நான் அவங்கள கன்ட்ரோல் பண்ணல. அவங்களும் என்னைய கன்ட்ரோல் பண்ண முடியாது; கூடவும் கூடாது. வேறெந்த ஹேப்பினஸும் கிடைக்கல. இந்த சின்ன சந்தோஷத்தயாச்சும் அனுபவிச்சுக்குறனே. கரெக்ட் தானுங்களே?" புருவம் உயர்த்தித் தெனாவட்டாய் விக்ரம் வினவினான்

"சரி தேன். என்னமோ பண்ணிட்டுப் போங்க. எனக்கென்ன?" தோள்களைக் குலுக்கிய ப்ரியா அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டாள்

அவர்கள் இருவருக்கும் இடையே என்ன ஓடுகிறது என்பது பிடிபடாமல் ராம் நின்றிருக்க, தடதடவென்ற காலடிச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. ராமுடன் வேலை செய்பவர்கள், விக்ரமுடன் பணிபுரிபவர்கள், அவர்களின் முன்னாள் கல்லூரித் தோழர்கள், இந்நாள் எதேச்சையான நட்புகள் எனப் பத்து, பன்னிரெண்டு நபர்கள் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். ஆளாளுக்கு மாற்றி மாற்றிக் கட்டிப் பிடித்தனர்; நலம் விசாரித்தனர். ஒருவன் ஃபிரிட்ஜில் இருந்து பனிக்கட்டிகளை எடுக்க, மற்றொருவன் கப்போர்டின் மேலிருந்த கண்ணாடிக் குவளைகளைப் பொத்தினாற்போல இறக்கினான். நான்கைந்து பேர் சேர்ந்து ஆம்லெட் போட, மீதி நபர்கள் நட்டநடு ஹாலில் பியர், ரம், விஸ்கி எனக் கடை விரித்தனர். அவர்கள் அனைவரையும் தள்ளிக் கொண்டு பால்கனிக்குச் சென்றான் ராம்குமார். இரண்டு சுற்றுகளின் முடிவில் கோழியின் காலைக் கடித்தபடியே அவர்களின் பிதற்றல் தொடங்கியது.

"விக்ரமு... மச்சி... எத்தன நாளாச்சுடா இப்டி நிம்மதியா குடிச்சி. கல்யாணம் ஆனதுலருந்து எங்கத் திருந்திட்டியோன்னு நெனச்சேன். இன்னைக்கு வான்னு சொன்னது நல்லதா போச்சி. இப்போ தான் மனசுக்குக் குளிர்ச்சியா, நிம்மதியா இருக்குது"

"ஆமா, மச்சான். இந்தப் பொண்டாட்டி, புள்ளைங்கள வச்சுட்டு ஒரே டார்ச்சர், டார்ச்சர், டார்ச்சரா இருக்குது. பேசாம சந்நியாசியாப் போய்டலாம்னு இருக்கேன்"

"அது புள்ளையப் பெக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும். இந்த நிலைமைல விட்டுட்டுப் போனா பாவமுடா; நரகத்துக்குத் தான் போவ"

"மேரேஜ் பண்ணவன்லாம் அல்ரெடி நரகத்துலத் தான் வாழ்ந்துட்டு இருக்கான். இப்போ நீ லவ் தானப் பண்ணிட்டுருக்க. அத்தான் மெதப்புலப் பேசுற"

"இந்நேரம் ஜெனி, ஜெனின்னு ஒருத்தன் பொலம்பிட்டு இருப்பானே; ஆளயே காணும்"

"வொய்ஃபுன்னு ஒருத்தி வந்தாச்சுல்ல. இனிமே ஜென்னியும் கெடயாது; ஒரு பன்னியும் கெடயாது. அந்தப் பேரயே எடுக்காதீங்கலே"

"நீ ஏன்டா குசுகுசுன்னு பேசுற? அவன் பொண்டாட்டி ஏதோ உள்ளாற இருக்குற மாரி, இந்தப் பம்மு பம்முற"

அதைக் காதால் கேட்டவுடனே ராமுக்குப் புரையேறிப் போனது

"டே, ஆர். கே. பாத்துடாயப்பா. இன்னும் கல்யாணங்கூட ஆகல. மொட்டப் பயலாவே போய்ரப் போற. அது சரி; நீ தான் உன் தேவதைய வலைவீசித் தேடிட்டு இருக்கியே. உனக்குக் கனவுல மட்டுந்தான் சாந்தி முகூர்த்தம், கல்யாணம் எல்லாம்"

"சார், கல்யாணந்தான் ஃபர்ஸ்ட்டு. சாந்தி முகூர்த்தம் நெக்ஸ்ட்டு"

"அது மாப்பிள்ளயோட பழக்க தோஷம், டோய். கல்யாணமாகி ஆறு மாசத்துலயே புள்ளை பெத்துட்டானல்ல. எல்லாத்தயும் தலைகீழாத் தான் பண்ணுவான்; ச்சீ, பேசுவான்"

"அப்படிக் கூட பண்ணலாமா, ண்ணா?"

"நீ எந்தப் புள்ள வாழ்க்கையக் கெடுக்கடா இவ்வளவு ஆர்வமாக் கேக்குற? இன்னும் மொளைக்கவே இல்ல. இந்த வருஷந்தான காலேஜ முடிச்சுட்டு ஃப்ரெஷ்ஷா வந்து இறங்கிருக்க. பொறுடா, அதது நடக்குறப்ப நடக்கும்"

அவர்கள் இஷ்டத்திற்கும் பேச, திறந்திருந்த சன்னலின் வழியே, அந்நாட்டின் குடி மகன்களைக் காணொளியாகப் பதிவு செய்து கொண்டிருந்தாள் பத்மா

"அல்லாரும் ஒரு நிமிஷம் கம்முனு இருங்க. வளையல் குலுங்குற சத்தம் மாதிரி கேக்கல"

"சாரே, அங்க எதோ நிழலாப் போவுது"

"டே, கொலுசுச் சத்தம் கூட கேக்குதுடா"

"அண்ணே, மல்லிப்பூ வாசமும் வருதுண்ணே. மோகினிப் பிசாசா இருக்குமோ? அதுக்கு வேற கன்னிப் பசங்களப் பாத்தா புடிக்காதாமே. அடிச்சுப் போட்ரும்ணு அம்மா சொன்னுச்சு, ணே"

"இந்தா, நீ ஏன்டா என் முதுகச் சொரண்டுற? உனக்குத் தான் கல்யாணம் ஆய்டுச்சே. பயந்து சாகாத" அந்த விரலுக்குச் சொந்தக்காரி நம் ப்ரியா தான்

"அய்யே, நான் எங்கச் சொரிஞ்சேன். ஆ, ஆ... கையு, கையு... வளவி... பேயு... கையு" அவளது கரத்தைப் பார்த்தவனுக்கு நாக்கு தந்தியடித்தது

"ஹஹஹஹஹா... ஹஹஹஹா... ஹஹஹஹா... ஹஹஹா" அவள் திரைமறைவில் நின்றபடி காட்டுத்தனமாய்ச் சிரித்தாள்

"ஆஹ்ஹ்ஹ்... இது நெட்டச் சாத்தான் டோய். ஓடுங்க, டோய். ஓடு..." இவ்வாறு அலாரம் அடித்தவனின் பின்னங்கழுத்தை அவள் தாவிப் பிடிக்க மற்றவர்கள் அரண்டனர்

போதையில் பெண்ணிற்கும் பேயிற்கும் வேறுபாடு தெரியாமல் படிகளில் உருண்டடித்து ஓடி அடிபட்டனர் "ஆத்தே... அம்மே... அம்மாங்கோ"

இனியும் இந்தப் பக்கம் வருவானுங்க!