• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 39

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
அந்த இதழ் ஒற்றல் போதவில்லை என்பதைப் போல விக்ரம் தன் கன்னத்தை மேலும் பத்மாவோடு அழுத்தினான். அவள் மெல்லியதாகக் கடித்து வைக்க அவனுள் தூங்கிக் கிடந்த ஏதோ ஒன்று விழித்துக் கொண்டது. அவன் இதழ்களைச் சுவைக்கும் நோக்கில் குனிய, அவள் சட்டென்று அவனது நெஞ்சில் சாய்ந்தாள். இப்போதைக்கு இதுவே போதும் என சாந்தியடைந்தவன் அவளின் நெருக்கத்தில் உறக்கத்தைத் தழுவினான்.

விடியலில் அவன் எழுந்தபோது அவள் அருகேயில்லை; அவனுக்கு நேரெதிரே தரைவிரிப்பு ஒன்றில் அமர்ந்து தியானத்தில் மூழ்கியிருந்தாள். அவளை அந்நேரம் முதன்முறையாகக் காணும் யாரும், அவளுக்கு உணர்வுகளும் உண்டா என்று வியக்கும் வகையில் ஆழ்கடலின் அமைதியுடன் ஒளிர்ந்தாள். விக்ரம் குறுக்க மறுக்க நடந்து பார்த்தும் அவளின் சித்தம் அசைந்து கொடுக்கவில்லை. பின்பு, அவன் சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தான்.

மோர் பாக்கெட்டை எடுத்து அவன் பிரிக்க, தலைவலியுடன் ராமும் அங்கு வந்து சேர்ந்தான். ஆளுக்கொரு குவளை மோரைக் குடித்துவிட்டு நேற்றைய குப்பைகளை அப்புறப்படுத்தத் தொடங்கினர். அவர்கள் முகப்பிற்கு வரவும், செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டுக் கிழவன் எழுந்து உள்ளே போய் மறைந்தார்.

"அவரு ஏன்டா நம்மளப் பாத்துட்டு ஓட்றாரு?" ராம் சந்தேகம் கேட்டான்

"உனக்குத் தெரியாதே; நேத்து நடந்த சம்பவம் அப்படி. பத்மா மெரட்டுன மெரட்டு தீயா வேலை செய்யுது"

"ஆன்? ராத்திரி குடிச்சுட்டுப் போனியே; பாப்பா கையால அடி எதும் விழல?"

"ம்ச்ச்"

"லக்கி தான் போ"

"ரொம்ப லக்கி" என்ற விக்ரம் நேற்றிரவு அவள் நடந்து கொண்ட விதத்தை எண்ணிச் சிரித்தான்

நண்பர்கள் இருவருமாக இணைந்து சமையல் வேலைகளை முடிக்க, பத்மா அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை; மிகவும் மும்முரமாகப் பணிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்; கடைசி நேரத்தில் வயிற்றைக் கலக்க, கழிப்பறையைச் சென்றடைந்தாள். நேரமாகிப் போனதால் அதனுடன் ஒட்டியிருந்த குளியலறைக்குள் புகுந்தான் விக்ரம். அவள் கடனை முடித்துக் கதவைத் திறக்க, அவன் துண்டைக் கட்டியவாறு பாதிக் குளியலில் இருந்தான்.

தலையைத் தாழ்த்திக் கொண்டே "கொஞ்சம் தள்ளிக்கங்க" என்று கூறியவள் குளிக்கும் பகுதியில் காலெடுத்து வைத்தாள்

சோப்புநுரை வழுக்கி அவள் விழப் போகவும் அவன் தாங்கிப் பிடிக்க, இருவருமாகக் கீழே விழுந்து வாரினார்

"ஒழுங்காப் பாத்துக் கால வையேன்டி. ஒரே கால எத்தன தடவ தான் உடைச்சுப்பியோ? வலிக்குதா?"

மேலெல்லாம் அவனது உடலின் ஈரம் ஒட்டி நனைந்திருக்க, கூச்சமும் தயக்கமுமாய் அவள் மறுப்புடன் தலையாட்டினாள்

"பொறு" என்றவன் அவளைப் பதமாகத் தூக்கி நிறுத்தினான்

அவனின் கையைப் பிடித்தபடி அங்கிருந்து வெளியேறியவள் "தேங்க்ஸ்" ஒன்றை உதிர்த்தாள்

அவள் விரைவாகச் சென்று ஆடைகளைக் களைய, விக்ரமும் பின்னோடு வந்து நின்றான்

"ஏங்க, டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிட்ருக்கேன்; தெரியலயா?"

"நானே அவசரத்துல இருக்கேன். உன்னை உத்துப் பாக்கலாம் டைமில்ல" வாய் சொன்னதே தவிர கண்கள் அவளைத் தானே மொய்த்தன

அதை உணர்ந்தவளோ உடைகளைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடினாள். சற்றுமுன் இருவரும் கிடந்த நிலையை எண்ணியவளுக்கு வெட்கப் புன்னகை பரவியது. அவள் உடை மாற்றிவிட்டுப் புறப்பட, அவளை இழுத்து நிறுத்திச் சோறூட்டினான் அவன். அத்தருணத்தில் தப்பித் தவறிக் கூட அவள் அவனை ஏறிடவில்லை. அந்தளவிற்கு ஊசி போன்ற பார்வை அவளது முகத்தில் நிலைத்திருந்தது.

"போதும். எவ்ளோ தான் சாப்புட்றது?" அவள் உதடுகளைத் துடைத்தவாறு கூற, இரு கவளங்களை விழுங்கியபடி அவன் உள்ளே சென்றான்

இது தான் வாய்ப்பென்று அவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடப் பார்க்க, அவனோ விடாமல் பைக்கில் பின்தொடர்ந்தான்

"ஹலோ, யார் நீங்க? எதுக்குக் கூட கூட வரீங்க?"

"மீ? என்னைத் தெரிலயா? உன்னோட விக்ரம், பேபி"

"அந்தப் பேர்ல எனக்கு யாரயும் தெரியாது. நீங்க வேற யாரோன்னு நெனச்சு என்னை ஃபாலோ பண்றீங்க. உங்க வழியப் பாத்துட்டுப் போங்க, மிஸ்டர்"

"நான் கரெக்ட்டான ஆளு பின்னாடித்தான் வரேன். நல்ல புள்ளையா என்னோட பைக்குல வா. இல்லைனா சீனாயிடும்"

அவன் சொன்னதைக் கேட்காமல் அக்கணம் வந்த பேருந்தில் அவள் ஏறினாள். அவனும் வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, அதே பேருந்தின் பின்படியில் தொற்றிக் கொண்டான். அவன் ஏறியதைக் கவனியாமல் பேருந்தினுடைய நடுப்பகுதியில் நின்றவள் எங்கோ பராக்கு பார்த்தாள். அவளிருந்த பகுதியில் கூட்ட நெரிசலால் ஒருவரையொருவர் இடித்துக் கொள்ள வேண்டியதாய்ப் போனது. அதிலும் ஒருவன், நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆள், வேண்டுமென்றே அவளைப் பின்புறமாக உரசி வைத்தான். அத்தவறான தொடுகையைச் சடுதியில் உணர்ந்தவள் திரும்பி நேருக்கு நேராக அவனைக் கூர்ந்து பார்த்தாள். உடனே, அவன் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல முகத்தைத் திருப்பினான். அவள் செருப்புக் காலால் ஓங்கி நச்சென்று மிதிக்க, திருடனுக்குத் தேள் கொட்டியது போல வலியைப் பொறுத்துக் கொண்டவன் முன்னால் நகர்ந்தான். அங்குப் போயும் வேறொரு கல்லூரி மாணவியிடம் அவன் அத்துமீற, அச்சிறுபெண் செய்வதறியாமல் திகைத்தாள்.

அதனைக் கண்ட பத்மா "டேய், நாதாரி. இப்போ தான மிதி வாங்குன? அரிப்பா இருக்குதுன்னா எவள்ட்டயாச்சும் காசு கொடுத்துப் போக வேண்டியது தான. கீழ இறங்குடா, பன்னாட. நீயா இறங்குறியா; நான் கழுத்தப் பிடிச்சு வெளியத் தள்ளட்டா? என்ன ஜென்மமோ? த்தூ" என்று கண்டமேனிக்கு வசைபாடினாள்

அவளிட்ட சத்தத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் கூட அவன்புறம் பார்க்க, போக்குவரத்து நெரிசலால் மெதுவாகச் சென்ற அப்பேருந்தைவிட்டு, அவமானத்தோடு அவன் இறங்கினான்

விழியோரம் கண்ணீர் கசிய "ரொம்ப நன்றி, அக்கா" என்று கூறிட்டாள் அம்மாணவி

"அடுத்த தடவ எவனாச்சும் இப்டிப் பண்ணா, தயங்கி நிக்காத. செருப்பக் கழட்டி அடி" பத்மா தீவிரமாய்க் கூறியவாறு சன்னலூடே நோக்க, அந்தக் கழிசடை அடிவாங்கிக் கொண்டிருந்தது

யாரிடமா? நம் விக்ரமிடம் தான். பின்னால் நின்று நடந்தவை அனைத்தையும் கவனித்தவனுக்குக் கோபம் எக்குத்தப்பாக எகிறியது. உள்ளே புகுந்து முன்னேற முடியாமல் தடுமாறியவன், அந்தக் கேடுகெட்டவன் இறங்கியதும் நரம்புகள் புடைக்க அடிக்கப் பாய்ந்துவிட்டான். இவன் சட்டையைப் பற்றி அறைந்த அறையில் அவனுக்கு உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது.

அக்காட்சியைக் கண்டு அதிர்ந்தவள் பேருந்திலிருந்து ஓடி வந்தாள் "விக்ரம்... விக்ரம், விடுங்க அவன"

அவளைப் போலவே இவனும் அவள் கூறியதைக் காதிலே ஏற்றிக் கொள்ளவில்லை. அடி வாங்கியவன் கையெடுத்துக் கும்பிட்டு உடம்பு துவண்டு தரையில் படுத்தேவிட்டான். அப்போதும் விடாமல் விக்ரம் மல்லுக்குப் போக, இவனைப் பின்னிருந்து அணைத்தவண்ணம் பத்மா தடுத்து நிறுத்தினாள். அவள் இறுக்கமாகப் பிடித்து முதுகோடு ஒன்றியிருக்க, இவனால் விலக்கித் தள்ள முடியவில்லை. மல்லாந்து கிடந்த ஆள் உயிருக்குப் பயந்து தப்பிவிட, அதன் பின்பே அவள் இவனை விடுவித்தாள்.

போக்குவரத்துக் காவலர் ஒருவர் அங்கே வந்து "என்ன இங்க கலாட்டா?" என வினவ

"வம்பு பண்ணவன் ஓடிட்டான், சார். இவரு மேல எந்தத் தப்பும் இல்ல" அவள் பதில் சொல்லி விக்ரமின் கைப்பற்றி அழைத்துச் சென்றாள்

"இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்; என் கூட வான்னு. சொல்ற பேச்சயே கேக்க மாட்டற, ப்ரியா. இதனாலயே எனக்கு டென்ஷன் ஆவுது"

"வரேன், காலைலயே கத்தாதீங்க"

இருவரும் நடந்து சென்று இருசக்கர வாகனம் இருக்குமிடத்தை அடைந்தனர்

அவள் பைக்கில் அமர்ந்தபடி தன் எண்ணங்களைப் பேசலானாள் "இப்போ உங்களுக்கு ஆச இருக்கு; என்னை பைக்குலக் கூட்டிப் போக நெனைக்குறீங்க. நீங்க இப்டிலாம் கேர் எடுத்துக்குறதால, என்னோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் அதிகமாகும். எப்பவுமே டிராப் பண்ணணும், பிக்அப் பண்ணணும்னு உங்களயே எதிர்பாத்துக் கிடப்பேன். நாள பின்ன எம்மேல உள்ளப் பாசம் கொறயும்; இப்போ மாரி நடந்துக்க மாட்டீங்க. அப்றம், ஹர்ட்டாகும். இதலாம் தேவயா?"

"என் மேல அவ்ளோ தான் நம்பிக்க வச்சுருக்கியாடி? நாம ரெண்டு பேரும் லைஃப் பார்ட்னர்ஸ்; அது மொதல்ல ஞாபகம் இருக்கட்டும். எதோ நட்டாத்துலக் கழட்டிவிட்டுப் போற மாதிரியே பேசாத. எனக்கு ஹர்ட்டிங்கா இருக்கு" அவன் இறுக்கமாகச் சொன்னபோதிலும் வருத்தம் இழையோடியது

அதற்கு மேல் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை

"ஈவ்னிங் வருவேன். வெய்ட் பண்ணு" என்று கூறி அலுவலகத்தின் முன் அவளை இறக்கிவிட்டுப் போனான் விக்ரம்

மதிய இடைவேளையின் போது உணவு முடித்து, பத்மா தன் அலைபேசியை ஒருமுறை பரிசோதிக்கப் போனாள். அதில் அங்கையிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் பற்றிய அறிவிப்பு காட்டியது. உடனடியாக இவள் தமக்கைக்கு அழைக்க, மறுபக்கத்தில் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளனுப்பிய செய்தியைத் திறக்கவும் 'யென்ன மன்னிச்சிரு, தங்கச்சி. நான் உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன்' என எழுதியிருந்தது. முதலில் பத்மா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறிது ஆழமாக யோசித்துப் பார்க்கையில் ஏதோ தவறாகப்பட்டது. அடுத்து இவள் மங்கைக்கு அழைப்பு விடுக்க, அவர் தூரத்துத் தோப்பில் வேலையாக இருப்பதும் சுந்தரம் ஊரிலேயே இல்லை என்பதும் தெரிய வந்தது.

இம்முறை தாமதிக்க விரும்பாமல் பத்மா தன் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்தாள்; அவசரமாகப் பேருந்தேறி பொள்ளாச்சியைச் சென்றடைந்தாள். அங்கே வீட்டின் முன்புறத்தில் காமாட்சி மட்டும் விறகு உடைத்துக் கொண்டிருந்தார்.

"காமாட்சியம்மா, அங்கையப் பாத்தீகளா?"

"என்ன பட்டு, வானத்துல இருந்து குதிச்ச கணக்கா வந்து நிக்குற? மாப்ள தம்பி எப்படி இருக்காவ?"

"அப்றம் சொல்றேன், மா. மொத அக்கா எங்க?"

"பாப்பாவக் கண்ணால பாக்கவே முடியறதில்ல, கண்ணு. மெட்ராஸ்லருந்து வந்தன்னைலருந்து ரூமுலயே அடைஞ்சு கிடக்கு. அம்மா மட்டும் உள்ளப் போறாக; வாராக"

"எந்த ரூமு?"

"மேல, இந்தப் பக்கட்டு"

"அது ஸ்டோரேஜ் ரூமுல்ல. அங்க ஏன் தங்க வச்சாங்க? எங்கம்மாக்கு அறிவே வேல செய்யாது"

இவள் விரைந்து சென்று அறைக்கதவைத் தட்டினாள் "அங்கை... அங்கை... அங்..."

உள்ளே நாற்காலி உருளுவது போல சத்தம் கேட்க, இவள் கலவரமடைந்தாள் "காமாட்சியம்மா, இப்பவே கதவ உடைச்சாகணும்"

"என்ன பண்றது, தங்கம்? நான் போய் நாலு ஆளுங்களக் கூட்டியாரவா?"

"வர்றப்ப பாத்தனே; சுத்தி முத்தி ஒருத்தரும் இல்லயே, ம்மா. நாம தான் எதாச்சும் செஞ்சாகணும். நீங்க பலமாக் கதவுல மோதிப் பாருங்க. நான் வேற வழி இருக்கான்னு பாக்குறேன்"

பத்மா பின்கட்டினை அடைந்து தேடியபோது, வேலையாள் விட்டுச் சென்ற ஒரு எலக்ட்ரிக் ரம்பம் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு மேலே போனவள் ப்ளக்கைச் செருகினாள்.

"அம்மா, நகருங்க" காமாட்சியைத் தள்ளி நிறுத்திவிட்டு இவள் ரம்பத்தைக் கதவு விளிம்பில் நுழைக்க, உள்தாழ்ப்பாள் துண்டாகிக் கதவு திறந்தது

உள்ளே உத்திரத்தில் கழுத்து வெட்டி வெட்டியிழுக்க அங்கயற்கண்ணி துடிதுடித்துக் கொண்டிருந்தாள்

வாழ்வே மாயம்!