• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 4

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
அன்று பார்த்து வேலை முடிய இரவு நேரமாகிப் போனது. விடுதிக்குச் சென்று சேர்ந்த பின்னர் கைபேசியுடன் அமர்ந்தாள் பத்மா. விக்ரமின் ப்ரொஃபைலைச் சற்று நேரம் ஆராய்ந்தவள், அவன் பெயரை முகப்புத்தகத்தில் தட்டினாள். விக்ரம் என்ற பெயரில் பல நபர்கள் இருந்ததால், அவனுடைய தந்தை பெயரான இந்திரஜித் என்பதைச் சேர்த்துத் தேடிப் பார்த்தாள். இறுதியாக, இந்திரஜித் விக்ரம் என்ற முகப்புத்தக அடையாளம் அவள் கண்ணில் சிக்கியது. அவனது பக்கத்தில் பழையப் புகைப்படங்களும் அவனின் நண்பர்கள் டேக் செய்த பதிவுகளுமே இருந்தன. இதுவே, அவன் சமூக வலைதளங்களில் அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்படவில்லை என்பதைக் காட்டியது. மேட்ரிமோனியில் இருந்த விவரங்கள் முகப்புத்தகத்தில் இருந்த தகவல்களுடன் ஒத்துப்போயின. ஆகவே, இது உண்மையான அடையாளம் தான் என்ற முடிவுக்கு வந்தவள் காலையில் அழைப்பு விடுத்த எண்ணைத் தேடி எடுத்தாள்.

அது பிரபாகரனின் எண் என்பது தெரியாமலேயே “ஸாரி. இன்னைக்கு வொர்க் முடிய லேட் ஆய்டுச்சு” எனக் குறுஞ்செய்தி அனுப்பினாள்

ஐந்து நிமிடங்கள் கழித்து “இட்’ஸ் ஃபைன்” என்று பதில் வந்தது

“ரியலி ஸாரி. இப்போ சொல்லுங்க, விக்ரம்”

“நோ, நோ. நான் விக்ரம் இல்ல. அவனோட எல்டர் பிரதர், பிரபாகரன்”

“ஓ...”

“முன்னவே சொல்லி இருக்கணும். மறந்துட்டேன். ஸாரி”

“நோ ப்ராப்ளம்”

“உங்க ப்ரொஃபைல் என் தம்பிக்கு மேட்ச் ஆகுற மாதிரி தோணுது”

“அப்போ, மறுபடி என் ப்ரொஃபைல்ல போய் சேட் பண்ணுங்க. எங்கப்பா பேசுவாரு. மீதிய அவர்ட்டப் பேசிக்கங்க”

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்கள்ட்ட சில விஷயம் பேசணும். ஃபர்தரா டிசைட் பண்ணுறதுக்கு முன்னாடி என் தம்பியப் பத்தித் தெரிஞ்சுக்கங்க. அப்றமும் உங்களுக்குப் பிடிச்சுருந்துச்சுன்னா, உடனே வீட்டுலச் சொல்லி முடிவு பண்ணிக்கலாம்”

“அவரப் பத்தி எனக்கு என்ன தெரியணும்?”

“நான் சுத்தி வளைக்க விரும்பல. மீட் பண்ண முடியுமா? ஜஸ்ட், ஒரு டென் மினிட்ஸ்...”

“என்ன ஜோக்கா?”

“நோ, மேம். நீங்க யார வேணாலும் உங்களோட கூட்டிட்டு வந்துக்கலாம்; உங்க ஃப்ரெண்டு, பிரதர், ஆர் கசின்; எனிபடி. மீட்டிங் ஸ்பாட்ட கூட நீங்களே சூஸ் பண்ணுங்க. பட், வி வான்ட் டு கிளாரிஃபை சம்திங்”

“நேர்ல வரதப் பத்தி யோசிக்கணும்”

“டேக் யுவர் டைம். குட் நைட்” என்று இறுதித் தகவலை அனுப்பினான் பிரபா

அவன் பத்மாவிற்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. வேறு எந்தப் பெண்ணையும் தேடும் மும்முரமும் இல்லை. விக்ரமின் காதல் கதை தெரிந்தால் பத்மா கண்டிப்பாக அவர்கள் பக்கமே திரும்பிப் பார்க்கப் போவதில்லை என அறிந்தும், பிரபாகரனுக்கு ஏதோ ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை இருந்தது.

ப்ரியாவோ நேற்றில் இருந்து பேசிக் கொண்டிருப்பது விக்ரமின் தமையன் என்று தெரிந்ததும் மெல்லிய அதிர்ச்சிக்கு உள்ளானாள். மீண்டும் முகப்புத்தகத்தைத் திறந்தவள் விக்ரமைப் பற்றி மேலும் உற்று நோக்கினாள். அதில் சகோதரன் என்ற இடத்தில் இந்திரஜித் பிரபாகரன் என்ற இணைப்புக் காட்டியது. அதைச் சொடுக்கியபோது அவர்களின் குடும்பப் புகைப்படங்கள் வரிசையாகக் கண்முன்னே வந்தன.

‘கேரளால இருந்தாலும் பாக்குறதுக்கு தமிழ் ஃபேமிலி மாதிரி தான் இருக்காக. அவங்க அப்பா மட்டுந்தான் கேரளாலப் பிறந்து வளந்தவரு மாறி இருக்காரு. ஃபேமிலில எல்லாரும் எப்பவும் ஒன்னா தான் இருப்பாங்க போல. லைனா குரூப் ஃபோட்டோவாவே இருக்கு. நம்ம வீட்டுல ஒரு நாளும் இப்படிச் சேந்து ஃபோட்டா பிடிச்சது இல்ல. வெரி நைஸ் ஃபேமிலி...’ என யோசித்தபடியே திரையில் கவனமாய் இருந்தாள்

அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விக்ரமின் புகைப்படம் இருக்க ‘பரவால்ல. தாடி மீசை வச்சிருந்தாலும் நல்லா இருக்கான். நம்ம மாமன் ஒருத்தன் இருக்கானே, மீசை கூட இல்லாம; மொழுக்குனு. அவனை மாறி ஒரு கேடு கெட்டவனப் பாக்கவே முடியாது. இந்த விக்ரம நம்பி நாளைக்குப் போலாமா? வேணாமா? வி... க்... ர... ம்... விக்ரம். சரி, போய்த் தான் பாப்போம்...’ என்று அவனை ஆழ்ந்து நோக்கியபடி முடிவெடுத்தாள் ப்ரியா

ஆறு வருடங்களுக்கு முன்...

அங்கையற்கண்ணி பத்மாவை விட இரண்டு வயது பெரியவள். அவளுக்குப் படிப்பு அவ்வளவாக ஏறாது; பத்தாம் வகுப்பு முடிக்கவே மூன்று முயற்சிகள் தேவைப்பட்டன. பின்பு, டிப்ளமோ நர்சிங்கில் சேர்ந்து படித்தாள். படிப்பை முடித்தப் பிறகு உள்ளூரிலேயே வேலைக்குச் சென்று வரத் தொடங்கினாள். அப்போதைக்குக் குடும்பத்தில் பணக் கஷ்டம் நிலவியது. ஆதலால், அக்ஷதாவின் சம்பாத்தியம் மிகவும் உபயோகரமாக இருந்தது. ஒருபுறம் மங்கை மூத்த மகளின் திருமணத்திற்குப் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார்.

நம் பத்மா இளமறிவியல் பட்டப்படிப்பை முடித்து மேற்படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தாள். அந்தச் செலவைத் தவிர்ப்பதற்காக, சுந்தரம் அவளைக் கல்லூரியில் சேர்க்காமல் தவிர்த்தே வந்தார். அப்போதும் பத்மா போராடி ஒருவழியாகப் படிப்பில் சேர்ந்தாள். அவள் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது அங்கைக்கு மோகன் என்பவனுடன் மணமானது. மோகனின் அம்மா வழி தாத்தா-பாட்டி பொள்ளாச்சியில் வசித்து வந்தனர். அவர்களின் மூலமாக சென்னையில் இருந்து இந்த வரன் வந்தமைந்தது.

திருமணத்தின் போதும் அதன்பின் மோகன் வீட்டில் தங்கியிருந்த நாட்களிலும், பத்மா அவன் கண்முன்னே செல்வதையே தவிர்த்துவிடுவாள். அவனின் பார்வை எப்போதும் ஒருவித அருவருப்பை ஏற்படுத்தும்; அவன் விழிகள் தன் மீது மொய்ப்பதைப் போல உணர்வாள். அவன் இங்கு வந்தாலே மதுரேகாவின் வீட்டில் போய் அமர்ந்து கொள்வாள்.

அன்றொரு நாள் சென்னையில் இருந்து மாப்பிள்ளையும் பெண்ணும் வருகை தருவதால், மங்கை விருந்து சமைப்பதில் முழுவீச்சில் இறங்கி இருந்தார். பத்மா வேண்டா வெறுப்பாய் உதவி செய்துவிட்டு, சற்று நேரம் காற்று வாங்கலாம் என வீட்டின் பின்புறம் சென்றாள். தென்னந்தோப்பில் இருந்து வீசிய தென்றல் மேனியை வருடியது. அந்தச் சுகத்தில் காதுகளில் இயர்ஃபோனை மாட்டியபடி பாடல்களைக் கேட்கலானாள். சிறிது நேரத்தில் யாரோ உற்று நோக்குவது போல் இருக்க, ப்ரியா சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். மோகன் மிக நெருக்கத்தில் வந்திருக்கப் பதற்றமடைந்து பின்னே நகர்ந்தாள் அவள்.

“ஹே... ப்ரியா” என்று அவன் சாதாரணமாய்ப் பேச்சைத் தொடங்கிட

“ஆன், சொல்லுங்க மாமா” என்றாள் அவள் பதற்றங்குறையாமலே

“எப்புடி இருக்க? எவ்ளோ நாளாச்சு உன்னைப் பாத்து...” என்றவனின் பார்வை அவள் கட்டியிருந்த தாவணிக்குள் ஊடுருவியது

“இருக்கேன், மாமா. அக்கா எங்க? நான் போய்ப் பாத்துட்டு வரேன்” என்று வினவியபடி அவள் வீட்டிற்குள் செல்ல முயன்றாள்

அவளை இடைமறித்து “பாட்டுக் கேட்டுட்டு இருந்தியோ? என்ன பாட்டு? எங்க, நானும் கேக்குறேன்” என்றவன் முகத்தருகினில் கையைக் கொண்டு போக

படாரென்று இயர்ஃபோனைக் கழட்டியவள் “இந்தப் பாட்டுத் தான். நல்லா கேட்டுக்கங்க” என்று அவன் கையில் கைப்பேசியை வைத்துவிட்டுப் போக யத்தனித்தாள்

பின்பு, அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தவள் கைப்பேசியை லாவகமாக உருவிக் கொண்டு முன்னே செல்ல “ஹே, நில்லு” என அவளது அசைந்தாடும் தாவணி முனையைப் பிடிக்க முயன்றான் மோகன்

அவன் கையில் சிக்காமல் ப்ரியா முயல் குட்டியைப் போல் துள்ளிக் குதித்து ஓடிவிட்டாள். பயங்கர கோபத்தோடு அக்காவைத் தேடிச் சென்றவள் சமையலறை வாசல் வரை போயிருந்தாள். அப்போது மங்கை மூத்தவளுக்கு இனிப்பூட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார். காரணம் அவர்களின் பேச்சிலேயே தெரிந்துவிட்டது; அக்ஷதா கர்ப்பந்தரித்திருப்பது தான் அந்த மகிழ்ச்சியான விஷயம். அக்காவின் சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாத பத்மா அன்னையிடம் மட்டும் நடந்ததைக் கூற முயன்றாள்.

“அம்மா, ஒரு நிமிஷம் இங்க வாயேன்”

“என்னடி உனக்கு? முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கோம்ல; குறுக்கால வந்துட்டு”

“வரியா, இல்லையா?”

மங்கை வெளியே வந்து “என்ன பிள்ள?” என்றிட

“அம்மா, உன் மாப்பிள்ளைட்ட சொல்லி வை. அவுரு பார்வ, பேச்சு, நடத்த எதுவும் சரியில்ல. ஒன்னு நான் இந்த வீட்ல இருக்கணும். இல்ல, அவரு இருக்கணும்” என்று அவள் சீறினாள்

“ஏய், ஏய், சத்தமா பேசித் தொலைக்காத; யார் காதுலயாவது விழுந்துடப் போகுது. உங்க அக்கா வயித்துல அவரோடக் குழந்தை வளருதுடி. இந்நேரத்துல கண்டதப் பேசி எல்லாத்தயும் கெடுத்துருவப் போலருக்கே. மச்சினியக் கண்டா மாமன்காரங்க அப்படித் தான் விளையாடுவாங்க. இதெல்லாம் கண்டுக்காத”

“எனக்கு இந்த விளையாட்டுலாம் பிடிக்காது. அவரு நல்லவரே இல்ல, மா... புரிஞ்சுக்கோயேன்”

“உனக்குச் சொன்னா புரியாதா? இனிமே, எதயும் மாத்த முடியாது. குடும்பத்துலக் குட்டையக் குழப்பாம சும்மா கிட, கழுத. உன் அக்காளோட வாழ்க்கைய நாசம் பண்ணிடாத” என்று முணுமுணுப்பாய்ப் பேசியவர் இளைய மகளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தி உள்ளே சென்றுவிட்டார்

அடுத்து அங்கே பாக்கெட்டில் கையைத் திணித்தபடி விசிலடித்துக் கொண்டே மோகன் வந்து நின்றான். ப்ரியா இயலாமை கலந்த எரிச்சலோடு பார்க்க, அவனோ புருவங்களை உயர்த்திச் சிரித்தான். அவள் முறுக்கிக் கொண்டு செல்ல, காற்றில் ஆடிய அவளது தாவணியைப் பிடித்து நாசியில் நுகர்ந்தான்.

“ப்ரியாமா, டிகிரி முடிச்சுட்டு வீட்டுலச் சும்மா தான் இருக்கனு சொல்லி அத்தையும் மாமாவும் ரொம்ப ஃபீல் பண்றாங்க. நீ என்னோட சென்னை வந்துரேன். நான் உன்ன... பாத்துக்குறேன்”

ரத்தம் கொதிக்க “என்ன சொன்ன?” என்று பத்மா ஒருமையில் வினவ

“நான் உனக்கு வேலை வாங்கித் தந்து, பத்திரமா பாத்துக்குறேன்னு...” என்று ஏளனச் சிரிப்புடனே அவன் மீண்டும் சொன்னான்

அவனை வண்டி வண்டியாகத் திட்ட வேண்டும் போல இருந்தாலும் சூழ்நிலை சரியில்லாததால் வெறுப்பின் உச்சத்தில் “ம்ம்ச்ச்” என்று அவனை உதாசீனப்படுத்தினாள்

அவனிடம் இருந்து விலகி ‘இவன் பண்ற கன்றாவி வீட்டுல இருக்க மத்ததுகளுக்குத் தெரியவே மாட்டேங்குது. எல்லாம் இந்த லூசு அம்மாவச் சொல்லணும்’ எனக் குமைந்தபடியே தன் அறைக்குச் சென்றாள் பத்மா

அவன் செய்த காரியத்தில் உடலெல்லாம் பற்றிக் கொண்டு வர, வேகமாகத் தாவணியைக் கழட்டி வீசினாள். மேலே தந்தையின் பழையச் சட்டையை எடுத்து உடுத்தியவள், முன்பு அணிந்திருந்த தாவணியோடு கீழே வந்தாள். வீட்டிற்குப் பின்புறமாய்ச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி அதைப் பற்றவும் வைத்தாள். அது கொழுந்து விட்டெரிய அதிலிருந்து எழுந்த புகையில், உள்ளிருந்த மூவரும் பின்கட்டிற்கு வந்து பார்த்தனர்.

“அடியே, என்ன காரியம் பண்ற?” என மங்கை பதற

“தாவணில கொஞ்சம் சாக்கடைப் பட்டுருச்சு. அதான், புடிக்கலனு அக்னிக் கடவுளுக்குப் படைச்சிட்டு இருக்கேன்” என்று ப்ரியா சாவகாசமாகப் பதிலளித்தாள்

அந்தச் செயலில் ‘என்னை விட்டுத் தள்ளியே இரு; இல்லை என்றால் உனக்கும் இதே கதி தான்’ எனும் எச்சரிக்கை மோகனுக்கு மறைந்திருந்தது. அது அவனுக்கும் நன்றாக உறைத்தது. பத்மா தீக்கக்கும் பார்வையை வீச, அப்போதும் அவன் முகத்தில் ஈயாடவில்லை. அங்கு நடப்பதன் பின்னணி ஏதும் அறியாமல் அக்ஷதா சிலைபோல் நின்றிருக்க, எரியும் நெருப்பை அணைக்க முயன்று கொண்டிருந்தார் மங்கை.

ச்சீ, என்னைத் தொடாதே!