• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 40

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
அங்கையின் நிலை கண்டு காமாட்சிக்குக் குலைநடுங்கியது

"அடி ராசாத்தி, வாழ வழியில்லனு சாகப் பாக்கியே. என் கண்ணு முன்னாடியா இதெல்லாம் நடக்கணும்" சிறுபிள்ளையில் இருந்து வளர்த்தவளை உயிர் துடிக்கப் பார்த்ததும் அவருக்குக் கண்ணீர் பொற்றுக் கொண்டு ஊற்றியது

பத்மா இதை எதிர்பார்த்தே வந்திருந்ததால் ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்; மின்னல் வேகத்தில் தமக்கையைக் காப்பாற்றுவது எப்படி எனச் சிந்தித்து மூளையைக் குடைந்தாள்.

"காமாட்சியம்மா, கொஞ்சம் நிதானமா இருங்க. அக்காவக் காப்பாத்திடலாம். நீங்க அவளத் தாங்கிப் பிடிங்க. நான் மேல ஏறுறேன்"

காமாட்சி கண்ணீரை நிறுத்திவிட்டுக் கட்டிலில் ஏறி, தத்தளிக்கும் அங்கையின் கால்களைத் தோளில் தாங்கிக் கொண்டார். கீழே கிடந்த நாற்காலியை எடுத்துக் கட்டிலின் மீது வைத்து அதிலேறிய பத்மா, கொக்கியில் கட்டியிருந்த துப்பட்டாவைக் கழற்றித் தமக்கையை அவ்வேதனையில் இருந்து விடுவித்தாள்; அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு, காமாட்சியின் உதவியோடு பத்திரமாகக் கட்டிலுக்கு இறக்கினாள். அவளோ கழுத்து இறுகியதில் தொண்டைக் கவ்வி மூச்சுவிடவே சிரமப்பட்டாள். காமாட்சி ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து தர, அவளுக்குப் புரையேறிப் போனது.

"காமாட்சியம்மா, நான் இவளப் பாத்துக்குறேன். யார்ட்டயும் எதும் சொல்லாம, எங்காத்தாவ இங்குட்டு இளுத்து வாங்க" பத்மா அவளின் நெஞ்சை நீவியபடியே சொன்னாள்

அவர் போய்விட இவள் ஏதும் பேசாமல் தமக்கையை அணைத்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் ஓரளவு சீராகித் தங்கையின் முகத்தை ஏறிட்டாள்.

"என்ன வேலை பாத்துருக்க, அங்கை? இதுக்கா உன்னை சென்னைலருந்து வரவழச்சேன். அதுக்கு நீ அங்கயே கெடந்து உயர விட்ருக்கலாமே. ஏன்டி இப்டிப் பண்ண? எங்களலாம் விட்டுட்டு நீ நிம்மதியா போய்டுவ; நாங்க உன்னை நெனச்சு ஒவ்வொரு நொடியும் சாகணும்ல. நம்ம கூட பழகுன ஒருத்தங்க திடீர்னு இல்லாமப் போயிட்டா, அந்த வலி எப்டி இருக்கும்ணு தெரியுமாடி உனக்கு? முட்டாள், முட்டாள்... எவ்ளோ சொல்லியும் உன் மரமண்டைல ஏறலல்ல. எழுஞ்சு போ, போ; என் கண்ணுலப் படாம எங்கயாச்சும் விழுந்து சாகு. உன் சாவுக்கு எங்கள ஏன் சாட்சியாக்கிப் பாக்குற? சாகத் துணிஞ்ச உனக்கு வாழ தைரியமில்லாமப் போச்சா?" பத்மாவிற்குத் துக்கமும் சினமும் மாறி மாறி வந்தது

அவளோ பதிலளிக்க முடியாமல் குற்றவுணர்ச்சியில் குமுறி அழுதாள்

"நல்லா அழுது வடி. அழறதுக்குத் தான பொறந்த. இப்படியே சாகுற நாள் வர அழுதுட்டே இரு. ஏன்டி இப்டியிருக்க? இதனால உனக்கு என்ன கிடைச்சது? என்ன சந்தோஷத்தக் கண்ட நீ? உனக்காக என்னைக்காச்சும் வாழணும்னு நெனச்சுருக்கியா? லைஃபுல உருப்படியா ஒரு டிசிஷனாவது எடுத்துருக்கியா? ஆளாளுக்கு எட்டி உதைக்குற பந்தாட்டம் கெடந்து அல்லாடுற. மத்தவங்கள ஒதுக்கித் தள்ளிட்டு எதையாவது சாதிக்கணும்னு உனக்குத் தோணலயா? அட்லீஸ்ட், உம்போக்குல நிம்மதியா வாழணும்னு கூடவா ஆசயில்ல? பொண்ணு ஒன்ன பெத்து வச்சுருக்கியே. அவளோட நெலமைய ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாத்தியாடி? பெத்த அப்பன் வேற ஒருத்தியோட போய்ட்டான்; அம்மாகாரியும் அநாமத்தா விட்டுட்டுச் செத்துட்டான்னா, அந்தப் பிஞ்சு மனசு எவ்ளோ பாடுபடும்? அவள அநாதையாக்குறதுக்கா இவ்ளோ தூரம் வளத்த? நீ போய்ச் சேந்துட்டா, யாருடி அவள ஆளாக்குவா? அம்மா பாத்துக்குடும்னு எண்ணமோ? அதுக்கு நம்மளயே ஒழுங்கா வளக்கத் தெரியல. இதுலப் பேத்திய வளத்துக் கிழிச்சுட்டாலும். ஒருவேள, நான் வளத்துவிட்ருவேன்னு கனவு எதும் கண்டியா? நான் ஒரு வருஷம், ரெண்டு வருஷம் நல்லபடியாப் பாத்துப்பனா? எனக்குன்னு ஒன்னு வந்துட்டா, அவ ரெண்டாம்பட்சந்தான. அக்கா பொண்ணு சொந்தப்புள்ளையாகுமா? இல்ல, சித்தி அம்மாவாய்ட முடியுமா? அவ வாழ்க்கையயும் சேத்துக் குழிலத் தள்ளப் பாத்துட்டல்ல... ஃபர்ஸ்ட்டு அழாத. சிம்பதி கிரியேட் பண்றியா? நானே கழுத்த நெரிச்சுக் கொன்னுடுவேன்"

"நான் உன்னை மாரி இல்ல தான்டி. அப்பா, அம்மா என்னைப் பொத்திப் பொத்தியே வளத்துட்டாங்க. வாக்கப்பட்ட இடத்துலயும் அதே கத தான். அங்க அவன்ட்டக் கிடந்து சாக முடியலன்னு இங்க வந்தேன். அப்பா என்னன்னா ஒவ்வொரு தடவயும் என்னைப் பாத்துத் தண்ணிவிட்டு அழறாரு. அவருக்கு என்னாலத்தான் அட்டாக் வந்துச்சுன்னு அம்மா ஓயாம சொல்லிக் காட்டிட்டே இருக்காங்க. அவுகளுக்கு நான் இங்க இருக்குறது சுத்தமாப் பிடிக்கல. அம்மாக்கு என் புருஷர் எப்டி இருந்தாலும் பரவால்லயாம்; விட்டுக் கொடுத்துப் போவணுமாம். ஹஃபீஸா ஒரு பக்கம் இருந்துட்டுப் போவட்டும்; நீ ஒரு பக்கம் தொத்திட்டு இரு; ஆம்பளைங்கன்னா அப்டித்தான் இருப்பாக; அதலாம் கண்டுக்காதன்னு சொல்லுது. அந்த மனுஷனுக்கு என்னைக் கல்லளவு, மண்ணளவு கூட பிடிக்கலன்னு சொல்லிப் பாத்துட்டேன். அது எப்டிப் புடிக்காமப் போகும்; அவன மடியிலப் போட்டுத் தாலாட்டு; மந்திரம் போடு; மயக்கி வையுன்னு அசிங்கமா அட்வைஸ் பண்றாங்க. நான் அவனுக்கு முந்தானை விரிச்சு இன்னொரு புள்ள பெத்துக்கணுமாம். அவன்கிட்டப் படுத்து இந்தத் தாலியக் காக்கணுமா? அந்தாளு வேணான்னுலாம் சொல்ல மாட்டான்; வந்த வரைக்கும் லாபம்னு அனுபவிச்சுட்டு, அடுத்த நிமிஷமே டைவர்ஸ் பேப்பர்ல சைன் போடும்பான். இந்தக் கேடுகெட்ட பொழப்ப நான் பொழைக்கணுமா? இதுக்குச் செத்துப் போறதே மேலுன்னு தான் இப்டிப் பண்ணேன். கல்யாணம் ஆன புதுசுல மோகன், நான் ஏற்கனவே பழகுனேன்ல, அந்த ஜெயப்பிரகாஷப் பத்தியே கேட்டு கேட்டு இம்சை பண்ணாரு. என்னைக் கன்னிப்பொண்ணே இல்லன்னாரு. நெனச்ச நேரத்துக்கு ப்ரெக்னன்ட் ஆகலன்னதும் என் உடம்புல எதோ கொறன்னு குத்திக் காட்னாரு. அப்றம், நான் கன்சீவானேன். அப்போவும் என்னை விடாம பெட்ரூம்க்குக் கூட்டுட்டே இருந்தாரு. ஒரு நாள் நான் வேணவே வேணான்னு சொல்லியும்... வலுக்கட்டாயம் பண்ணதுல உடனே வலி வந்து கரு கலைஞ்சுடுச்சு. அம்மாக்கு மட்டுந்தான் அந்த அபார்ஷனப் பத்தித் தெரியும். அவரு செஞ்ச காரியத்துனால தான் அப்டி நடந்துச்சுன்னு நான் வெளியச் சொல்லல. பொறவு கொஞ்ச நாள் வாலச் சுருட்டிட்டு இருந்தாரு. அடுத்தது ஹேமா. அவப் பொறந்து ஆறு மாசத்துலயே மறுபடியும் என்னை ப்ரெக்னன்ட்டாக்கி, அதைக் கலைக்க வச்சு... என் உடம்பு எனக்கே சொந்தமில்லங்குற மாதிரில்ல நடத்துனான். கல்யாணம்னாலே இப்டித் தான் இருக்கும் போலன்னு நெனச்சு மனசத் தேத்திக்கிட்டேன். போக போக அவரு என்னை அந்த விஷயத்துலத் தொல்லை பண்றத நிறுத்திட்டாரு. ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. அதுக்கான காரணம் ஹஃபீஸானு தெரியவும் தான்... அப்பயே புரிஞ்சு போச்சு; இது நீடிக்காது; இந்தாளு நம்மள மனுஷியா கூட மதிக்கல; எதோ உயிரில்லாத ஜடம் மாதிரி ஆசைக்கும் அதிகாரத்துக்கும் பயன்படுத்திக்கிட்டாருன்னு. புது செருப்பு கிடைச்சுட்டா பழய செருப்ப உதறுற மாதிரி தூக்கி வீசிட்டாரு"

"அங்கை, என்னைப் பாரு. ஒருத்தன் உன்னை ஏமாத்திட்டான்னா வாழ்க்க அத்தோட முடிஞ்சு போய்டாது. ஒன்னு உனக்காக வாழு. இல்லனா, ஹேமாக்காக வாழு. ரெண்டுமே பிடிக்கலன்னா, பாப்பாவ உன் கையாலயே ஆசிரமத்துலச் சேத்துட்டு, உன் இஷ்டம் போல செய். தற்கொலை பண்ணிக்குறது தான் தீர்வுன்னு நெனச்சீன்னா, பேசாம அவளயும் சேத்துக் கொன்னுடு. தனக்குன்னு யாருமே இல்லாத வாழ்க்கைய வாழ்றத விட, அவளுக்கு அத்தான் உன் கையாலக் கிடைக்குற பெட்டர் கிஃப்ட்"

"அப்டிச் சொல்லாதடி. இனிமே கிறுக்குத்தனமா எதும் செய்ய மாட்டேன். ஒரு நாலு நாள் அம்மாட்டத் திட்டு வாங்குனதுக்கே உயிர் போய் உயிர் வந்துடுச்சு. விவரம் தெரிஞ்சதுலருந்து நாள் தவறாம ஏச்சும் பேச்சும் வாங்குனியே. உன் நெலம தெரிஞ்சும் மரமா இருந்துட்டனே. நான் ஒரு பாவி. அதனாலயே என் வாழ்க்க அரகொறயா முடிஞ்சுடுச்சு. ஸாரி, தங்கம்"

அங்கை தங்கையின் கழுத்தைத் தாவிப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்

"உன் மேல எந்தத் தப்பும் இல்ல, அக்கா. நீ சந்தோஷமா வாழணும். யூ டிசர்வ் இட். அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இந்த வீட்லயே நீ மட்டுந்தான் என்னை அதிகமாச் சிரிக்க வச்ச; அம்மாவோட அன்பு எப்புடி இருக்கும்ணு காட்டுன. யூ ஆர் ஸோ ஸ்வீட். ஐ லவ் யூ ஃபாரெவர்"

இருவரும் அன்பார்ந்த பறவைகளாக ஒன்றியிருக்க, உள்ளே நுழைந்த மங்கை தேள் நாக்குடன் கொட்டினார் "வாடி, சின்னவளே. என்ன சொல்லி அக்ஷதாவோட மனசக் கலைக்க வந்த? நானே பேசி பேசி அவள ஒரு வழிக்குக் கொண்டாந்துருக்கேன். புருஷனும் பொண்டாட்டியுமாச் சேந்து அவள ஒத்தையில நிறுத்திடாதீங்க"

"அம்மா, தேவயில்லாம வார்த்தய விட்ற. எப்பவும் நான் மத்தவங்க பேச்சக் கேட்டுத் தான் ஒன்னு செய்யணுமா? எனக்கா எதுவும் தோணாதா? என்னை வெறும் சொல்புத்தி இருக்குற தத்தியாவே பாத்துப் பழகிட்டல்ல. சொந்தமா யோசிச்சுடக் கூடாதே; வீஞ்சிட்டு வந்துருவ. வர வர நீ தாயா, பேயான்னே தெரிய மாட்டேங்குது" வாய் திறந்தது அங்கை

"அவளயும் உன்னை மாதிரியே மாத்திட்டல்ல. போச்சு, எல்லாம் போச்சு"

பத்மாவிற்கு இது புதிதா என்ன "ஷ்ஷ்ஷ்ஷூ... மம்மி, கல்யாணத்துக்கு வரச் சொன்னா கருமாதிக்கு வந்துருக்க. கொஞ்சம் விட்ருந்தா உன் மகளப் பொணமாத்தேன் பாத்துருக்கணும். அவக் கழுத்தப் பாத்தில்ல; சூசைட் அட்டெம்ப்ட். நீ பண்ண டார்ச்சர்ல ஒரேயடியாப் போகத் திரிஞ்சா. அப்டி மட்டும் நடந்துருந்துச்சுன்னு வையு; உன்னைய நம்பர் ஒன் அக்யூஸ்ட்டா உள்ளத் தூக்கி வச்சுருப்பேன்; அடுத்து உன் புருஷன்; கடைசியா என் ஆச மாமன், மோகன்"

"ஓ, உங்களப் பெத்து வளத்த கடனுக்கு நாங்க ரெண்டு பேரும் ஜெயில்ல உக்காரணுமோ?'

"கடனுக்காக வளத்தா அப்டித்தான். இத்தோட நிறுத்திக்க, மா. இனிமேலும் பொம்மை மாதிரி எங்கள ஆட்டி வைக்காத" மீண்டும் திடமாக உரைத்தாள் அங்கை

"அக்காளும் தங்கயும் நல்ல கூட்டம் கூடுனீங்க. என்ன இப்போ? அச்சு, எங்களுக்குச் சொமயா நீ இருக்கணுமா? இருந்துட்டுப் போ. சின்னவளே, நீயும் கூட வந்து தங்கிக்க. மாசம் நிக்காம ஓடுது. வாரிசப் பெக்குற வழியக் காணும். ஊர் நியாயம் பேச வந்துட்ட. அடுத்து உன் புருஷன் என்ன பண்ணக் காத்திருக்கானோ தெரில. மோகனாச்சும் நாலு வார்த்த மதிச்சு நடப்பான். இவரு சுத்தம். இப்பவே மரியாத தர்றதில்ல. பாத்துப் பொழச்சுக்கடி" மோவாயை இடித்துக் கொண்டு மங்கை அங்கிருந்து வெளியேறினார்

"என்ன அவரு மரியாத தராமப் போயிட்டாராம்?"

"அதுவா? பொண்ண நீங்க பெத்தீங்களா? இல்ல, ஊருக்காகப் பெத்தீங்களான்னு அப்பாவப் பாத்துக் கேட்டாரே"

"அய்யய்யோ... அது அப்டிலாம் பேசாதே. டீசன்ட்டான பக்கியாச்சே"

அங்கை விக்ரம் அன்று பேசியதை மீளோட்டம் செய்ய, அவன் தனக்காக அவ்வாறு செய்ததை நினைத்து பத்மா சிலிர்த்துப் போனாள். இங்கு அவனோ அவளது அலுவலகத்தில் சென்று பார்த்துவிட்டு, அவளைக் காணாமல் ருத்ரமூர்த்தியாக மாறிக் கொண்டிருந்தான்.

எங்கடி பொறந்த, எங்கடி வளந்த!