• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 42

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
பத்மப்பிரியா சொத்தைப் பங்குபோட உடனே ஒப்புக்கொண்டதும், வெற்றிக் களிப்போடு அமர்ந்திருந்தான் மோகன். முன்கூட்டியே கொண்டாடப்படும் வெற்றி நிலைக்காது என்பதற்கேற்ப அடுத்த கணமே சூழல் மாறிப் போனது. கையெழுத்திற்குப் பதிலாக ஒரு புள்ளியோடு நிறுத்தினாள் பத்மா. அதைக் கண்டு அவன் கருங்குரங்கு மாதிரி குன்றிப் போனான். அப்போது தான் அவனுடைய கழுத்திலிருந்த செர்விக்கல் காலரை அவள் கவனித்தாள்.

இருந்தும் பார்வையை சுந்தரத்திடம் மாற்றி வினவினாள் "என்னப்பா, பத்திரத்துல மாமாவோட பேரு இருக்கு. அக்காக்கு எழுதிக் குடுக்கறதாத் தான சொன்னீங்க?"

"அக்காவும் மாமாவும் வேற வேறல்லயே; புருஷன் பொஞ்சாதி தானேம்மா"

"அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீங்க இருக்குற எல்லா சொத்தயும் அக்கா பேருல எழுதி வச்சா கூட நான் கவலப்பட மாட்டேன்; வம்புக்கும் வர மாட்டேன்; சந்தோஷமா விட்டுக் கொடுத்துடுவேன். ஆனா, இவரு பேர்ல எழுதி வைக்குறதா இருந்தா என்னாலச் சம்மதிக்க முடியாது" அவள் உறுதியாய்க் கூறித் தன் கரங்களைக் கட்டிக் கொண்டாள்

இதைக் கேட்டவுடனே மங்கையின் அமைதி சொரூபம் காற்றினில் பறந்தது "ஏன்டி, எந்நேரமும் ரகள கட்டி அடிக்குற? அப்பாவே ஒரு வார்த்த பேசாம எழுதிக் குடுக்குறாரு. உனக்கென்ன வந்துது? நீ என்னமோ உழைச்சுச் சம்பாதிச்ச சொத்து மாரி அலட்டிக்குற"

"லூசாம்மா நீ? இம்புட்டு வருஷமா ஏமாந்தது போதலயா? இவரு தான் அக்காவப் பிடிக்கலங்குறாரே. வேறக் கல்யாணம் பண்ணப் போறாரு. அதுக்குத் தான் கடைசியா ஒருதரம் நல்லாக் கறந்துரலாம்னு பாக்குறாரு. அது கூட உன் மரமண்டைல ஏறலயா?"

சுந்தரத்தையும் மங்கையையும் சிந்திக்கவிடாத வண்ணம் மோகன் இடைப்புகுந்தான் "நீங்க கஷ்டப்பட்டுலாம் சொத்த எழுதி வைக்க வேணாம். பிசினஸுக்கு நான் வேற எங்கயாச்சும் பணம் ரெடி பண்ணிக்குறேன். எதோ மாமனார் வீடாச்சேன்னு ஒரு உரிமைலக் கேட்டேன். உங்க சின்ன பொண்ணு ஒத்து வர மாட்றா. நான் தொழில்ல முன்னேறுற வரைக்கும் அக்ஷுவயும் ஹேமாவயும் இங்கயே வச்சுக்கங்க. எனக்குச் சோத்துக்கே வழியில்ல. இதுல இவங்கள எங்கக் கூட்டிப் போறது? நான் வரேன், மாமா"

"அப்பப்பா. நடிக்குற நடிப்புல எஸ். ஜெ. சூர்யாவே தோத்துடுவாரு" எங்கோ பார்த்தவாறு பத்மா இடித்துரைத்தாள்

"ஏய், என்ன வாய் ரொம்ப நீளுது? வயசுல மூத்தவங்கட்டப் பேசுற மாதிரியா பேசுற? ஒழுங்கா மரியாதயாக் கையெழுத்து போடு. உன் அக்கா நிம்மதியா வாழணுமா, வேணாமா? நீயாச்சும் ஒத்தைல இருக்க. நீங்க பிரிஞ்சா கூட பிரச்சனை ஏதும் வராது. அச்சு அப்படியா? அவளுக்குப் புள்ள குட்டி இருக்கு. இப்டியே விட்டுர முடியுமா? என் பேத்தி அப்பா இல்லாமத் திரியணுமா?"

"என்னாது? நாங்க பிரிஞ்சுட்டா பரவால்லயா? விக்ரம் சொல்லியும் கேக்காம இங்க வந்தேன் பாத்தீங்களா; என் தப்பு தான். இன்னும் என்னென்ன சொல்லணுமோ எல்லாத்தயும் சொல்லுங்க. இன்னைக்கு நேத்தா என்னை இப்டி நீங்க கேவலப்படுத்துறீங்க. என்னமோ பேசிட்டுப் போங்க. இந்த முட்டாள்தனமான காரியத்துக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். இன்னொருமுற இந்தாள்ட்ட ஏமாந்த பின்ன, தானா உங்களுக்குப் புத்தி வரும்" பத்மா தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தாள்

வலிய அவள் பாதையில் சென்ற மோகன், சற்றே அடங்கிப் போக முயற்சியெடுத்தான் "ப்ரியா, நான் முன்ன பேசுனது எதையும் மனசுல வச்சுக்காத. எனக்கு ஒரு ஹெல்ப்புனு தான கேக்குறேன். அதும் எனக்காகவா? உன் அக்காவ ராணி மாரி வச்சுக்கணும்னு தான இதெல்லாமும். இந்த ஒரு உதவி மட்டும் செய்யு. என் பிசினஸ்ல உன்னோட ஹஸ்பன்டயும் பார்ட்னராக்கிக்குறேன். உனக்கு ஒரு கொறயும் வராம நான் பாத்துக்குறேன்"

"யாரு நீ? எங்கள வாழ வைக்கப் போறியா? உன் பொய் வேஷத்த நம்புற ஆள் நானில்ல. இவங்க உன்ட்டச் சொல்லலயா? அங்கை ஹஃபீஸாவப் பத்திப் புட்டு புட்டு வச்சுட்டா. உன் வண்டவாளம்லாம் தண்டவாளத்துல ஏறிடுச்சு. எனக்கும் அங்கைக்கும் தேவப்பட்டதுலாம் ஹேமா மட்டுந்தான். அவள எடுத்து வந்து தந்ததுக்கு ரொம்ப நன்றி. இப்போ கிளம்பு. உன்னைத் திரும்பி வந்து பாத்தா, அங்கை அப்செட் ஆயிடுவா. அவளோட நிம்மதியக் கெடுக்காத"

"பத்மா, ஹஃபீஸா என் கூட வேலை செய்யுற பொண்ணுமா. உன் அக்கா படிக்காதவ; எங்க ஃப்ரென்ட்ஷிப்பத் தப்பாப் புரிஞ்சுகிட்டா. நான் என்ன பண்ணட்டும்? நீ மாஸ்டர்ஸ் முடிச்சுருக்க. நீயாவது அவளுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கக் கூடாது? அவ வீட்டுல வந்து உக்காந்துட்டா; அவளுக்கு ஆதரவா இருக்குற மாதிரி நடந்து காரியம் சாதிச்சுக்கலாம்; அவள ஏமாத்தி மொத்தச் சொத்தயும் ஆட்டையப் போட்டுரலாம்ணு விக்ரம் தான சொல்லி அனுப்புனாரு. ரெண்டு பேரு கூட்டணில நல்ல பிளானிங்"

"உன்ட்டலாம் மனுஷன் பேசுவானா? நான் விக்ரம்ட்டயே போறேன். தள்ளு" மண்டைக்குள் புகைய ஆரம்பிக்க, அவள் தன் அறைக்குச் சென்று அலைபேசியையும் கைப்பையையும் எடுத்துக் கொண்டாள்

புறப்படும் முன் மனதில் அடக்கி வைத்திருந்ததையும் கேட்டுவிட்டாள் "என்ன சொன்ன? நாங்க ஆட்டையப் போட நெனைக்குறோமா? அந்த மாரி மோசமான, கீழ்த்தரமான, அசிங்கம் புடிச்ச திருட்டுப் புத்தி எங்களுக்கு இல்ல. உனக்குத் தான் இருக்கு. புரியல? நான் வீட்டுலத் தனியா இருக்கும்போது அட்டாக் பண்ண திருடன் நீ தான? அந்த அண்ணன் உன் கழுத்தப் பிடிச்சு இறுக்குனது இன்னும் சரியாகல போல. அதனாலத் தான கழுத்துல பேன்டோட சுத்துற. இரு, உன்னை இப்டியே ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன். அங்கை சென்னைலருந்து வந்தப்போ முகம் முழுக்க காயத்தோட வந்து நின்னா. எல்லாத்தயும் ஃபோட்டோ புடிச்சு வச்சுருக்கேன். இந்த புரூஃபலாம் வச்சு டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸுல உள்ளப் போறியா, இல்லயா பாரு. எனக்கு ஒன்னு மட்டும் புரியல. அன்னைக்கு எதுக்கு விக்ரமோட லேப்டாப்ப ஆராய்ச்சி பண்ண? அவருக்கு எதிரா எதுவும் கிடைச்சா, அவரயும் ப்ளாக்மெயில் செய்யலாம்னு உன் கேடுகெட்ட மூளைலத் தோணுச்சா? நீ இப்போ சொல்லலைனா கூட பரவால்ல. போலிஸ் விசாரணைல நிஜம் அத்தனயும் வெளிய வந்துரும். பொறுமயாவே தெரிஞ்சுக்குறேன்"

அவளுக்குக் குறுக்காக வந்து நின்ற மோகனின் தொனி இப்போது மாறியிருந்தது "நீ போலீஸ்க்குப் போ; கோர்ட்டுக்குப் போ. அதப் பத்தி எனக்கு அக்கறயில்ல. உன்ர அப்பனும் ஆத்தாவும் சைன் பண்ணிட்டாங்க. நீயும் ஒரு சைன் போட்டீனா, வந்த வேல முடிஞ்சுடும். அப்றம் நான் உன் அக்கா சொக்காளயும் தொந்தரவு பண்ண மாட்டேன். உன்னையும் பொழச்சுப் போன்னு விட்டுடுவேன்"

"என்ன மாப்ள இப்டிப் பேசுறீங்க?" மங்கை பதறினார்

பத்மாவோ நொடித்தாள் "இந்த யோக்கியன இன்னுமா நம்புற? உனக்கு எப்போ தான் உரைக்குமோ தெரில, ஆத்தா. ஹையோ..."

அவள் அங்கிருந்து வெளியேறப் பார்க்க, மோகன் அகோரியாய் உருமாறினான் "ப்ரியாமா, சொன்னா கேளு"

"ச்சீ, தூரப் போ" என உதாசீனப்படுத்தியவள் அவனைக் கடக்க எத்தனித்தாள்

அவனது திட்டம் அத்தனையையும் அவள் கெடுத்துவிட்ட படியால் ஆத்திரத்தின் உச்சத்தைத் தொட்டான் மோகன். யாரும் எதிர்பாராவிதமாகக் கீழே விழுந்து கிடந்த தெங்கம்பழத்தை எடுத்து அவளின் காதோடு அப்பினான். அதில் நிலைகுலைந்த ப்ரியா தரையில் வீழ்ந்தாள். தலைக்குள் கொய்ன்ன்ன் என்ற சத்தம் கேட்டபடி இருக்க, கன்னத்தைத் தாண்டி ரத்தம் வழிந்தோடியது. அவனின் வன்முறையைக் கண்டு சுந்தரமும் மங்கையும் அச்சத்தில் உறைந்தே போயினர். சுற்றியிருந்த வேலையாட்கள் நடந்ததைக் கவனித்து அவனைப் பிடிக்கப் பாய, மோகன் வழக்கம்போல மின்னல் வேகத்தில் ஓடியே போனான். விக்ரம் அங்கு வந்தடைந்த நேரம், பத்மாவின் வெள்ளைநிற உடை குருதியில் நனைந்து சிவப்பு ரோஜாவை ஒத்துக் காணப்பட்டது. அவள் காதைப் பொத்தியபடி தன் கணவனுக்குத் தான் அழைத்துக் கொண்டிருந்தாள்; அவன் வந்து நிற்பது தெரியாமலே.

"அந்த நாசமாப் போனவன் இந்த வென செஞ்சுபுட்டானே" மங்கை சேலைத்தலைப்பால் அவளது காயத்தை ஒற்றியெடுத்தவாறு புலம்பினார்

இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கிய விக்ரம், விரைவாக வந்து அவளின் முன் மண்டியிட்டான் "ஏ, பத்து. என்னமா ஆச்சு? ப்ரியா... யார் இப்படிப் பண்ணது?"

அவன் பரிவுடன் தொடவும் அவள் ஏறிட்டு ஒற்றை வார்த்தையில் விடை கூறினாள் "மோகன்"

"இவ்வளோ மோசமாக் காயப்படுத்திருக்கான். நீங்களாம் இங்கத் தான இருந்தீங்க? அவள முழுசா ஒரு நாள் பாத்துக்க முடியலயா? எங்க அந்த மயிராண்டி? உள்ளப் பதுக்கி வச்சுருக்கீங்களா?" அவன் ஆவேசமாய்க் கத்தினான்

"நல்லவன் மாரி பேசுனான், மாப்ள. படுபாவிப்பய திடுதிப்புனு இப்டியொரு காரியத்தப் பாத்துப்புட்டான். நாங்க சுத்தி வளைக்குறதுக்குள்ள தப்பிச்சு ஓடியே போய்ட்டான். அவனுக்கு இருக்குறது காலா, கரன்ட்டானே தெரில" சுந்தரம் ஆற்றாமையுடன் மொழிந்தார்

"அய்யோ, ரத்தம் நிக்காமக் கொட்டுதே. அவன் மாண்டு மல்லாக்கப் போவ; மண்ணோட போவ. ஏங்க, யாருக்காச்சும் ஃபோன் பண்ணி வண்டி வர வையுங்க. புள்ளைக்கு எதும் ஆயிட போது. இதுக்குத் தான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்; யார்ட்டயும் சண்டைக்குப் போவாத, போவதடின்னேன்; கேக்கல. எல்லாம் இவ வாயால வந்த வெனை" மங்கை எட்டு கட்டையில் ராகம் பாட

பொறுமை இழந்த விக்ரம் மனைவியை அழைத்துச் சென்று வாகனத்தில் அமர வைத்தான்

"டூவீலர்ல எப்டிப் போவீங்க? செத்த பொறுங்க, மாப்ள. வண்டிலப் போவோம்" இவ்வாறு கூறி சுந்தரம் பின்னால் வர

"நீங்க கலட்டுன வரைக்கும் போதும். ஆள விடுங்க. உங்க சங்காத்தமே வேணாம், சாமி" வாயாலே கும்பிடு போட்டு வாகனத்தைக் கிளப்பி இருந்தான் அவன்

அவர்கள் மருத்துவமனை சென்று சேர, ஹேமாவைத் தோளில் சாய்த்துக் கொண்டே வந்த அங்கை தங்கையைக் கண்டுகொண்டாள்

அவள் கட்டோடு அமர்ந்திருக்க இவள் பதறித் துடித்தாள் "அய்யோ, பத்மா. என்னடி ஆச்சு? என் தங்கம், உன் மாமன் இந்த வேலையப் பாத்தானா? ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அந்த மனுஷன் எதுனா குடைச்சல் குடுத்துட்டே இருக்கானே. அந்தாள நம்பி வீட்டுக்குள்ள விடாதீங்கன்னு அப்பனாத்தாட்டத் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன். நான் சொன்னத மசுருக்குக் கூட மதிக்கலயே. எல்லாம் உன் தலைல வந்து விடிஞ்சுடுச்சேடி. என் கெரகத்த"

இவளிட்ட கூச்சலில் சுற்றியிருந்த அனைவரும் ஒரு முறையாவது இவர்களை உற்று நோக்கினர்; பத்மாவைத் தவிர.

அங்கை புரியாமல் விழிக்க, விக்ரம் குண்டைத் தூக்கிப் போட்டான் "நீங்க என்ன பேசுனாலும் அவளுக்கு ஏறாது. அடிபட்டதுலக் காது கேக்காமப் போயிடுச்சு. இயர் டிரம் டேமேஜ் ஆய்ருக்காம். டெம்பரரி தான். உயிருக்கு எந்த ஆபத்துமில்ல. அதுவரைக்கும் நிம்மதிப்பட்டுக்க வேண்டிதான். நீங்க வீட்டுக்குப் போக வேணாம். மோகன் சைக்கோத்தனமா நடந்துக்குறான். திரும்பி அங்க வந்தாலும் வருவான். இப்போதைக்கு உங்க ரெண்டு பேரோட சேஃப்ட்டி தான் முக்கியம். நாம கணபதி போய்டலாம்"

அவர்கள் பேசுவது புரியாமல் வாயசைவுகளையே உற்று நோக்கி அமர்ந்திருந்தாள் பத்மா

காதுமா, ஆர் யூ ஓகே!