• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 43

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
நடந்தேறிய நிகழ்வைக் கேள்வியுற்ற மதுரேகா அத்தருணமே மருத்துவமனைக்கு ஓடி வந்தாள். தோழியின் நிலைகண்டு அவள் கட்டிக் கொண்டு அழ, பத்மா அவளை ஆறுதலாய் முதுகில் தடவிக் கொடுத்தாள். மற்றபடி வேறெந்த உணர்வும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்த சிநேகிதியை அவளுமே விநோதமாக நோக்கினாள். விக்ரம் இவளின் காதில் ஏற்பட்டிருக்கும் குறையைப் பற்றி எடுத்துரைத்தான். பின்னர் அவன் இருசக்கர வாகனத்தில் கணபதிக்கு விரைய, மற்றவர்கள் பேருந்தின் மூலம் வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்குச் சென்றதும் பத்மா வளைத்து வளைத்துத் தன் காயத்தைப் புகைப்படம் எடுக்கலானாள்; அவளுடைய சிகிச்சைக்கான மருத்துவ ரசீதையும் ஹேமாலினியின் மருந்து ரசீதையும் கைப்பேசியில் பதிவு செய்தாள். அவள் வலியை மறந்து வேறேதோ செயல்களில் மூழ்கியிருக்க, ரேகாவும் அக்ஷதாவும் சற்றே திகைத்தனர்.

"ஏன் மது, இவளுக்கு மண்ட எதுவும் குழம்பிடுச்சா? என்னத்துக்கு எல்லாத்தயும் ஃபோட்டோ எடுத்துட்டு உக்காந்துருக்கா? இவளப் பாக்க பாக்க எனக்கு வயித்தக் கலக்குதுடி"

"ஒன்னும் ஆகாது, க்கா. எதோ காரணத்தோட தான் பண்றா. கண்டுக்காம விட்ருங்க" இவர்களுக்குள் இத்தகைய உரையாடல் ஓட

எதிர் அறையில் விக்ரம் தன் நண்பனிடம் மோகன் செய்த காரியத்தை விளக்கிக் கொண்டிருந்தான்

"அன்னைக்கு அந்தக் கபோதி தான் நம்ம வீட்டுலப் புகுந்ததா? எவ்வளோ திண்ணக்கம் இருந்துருந்தா இப்படியொரு காரியத்தச் செஞ்சுருப்பான். ஒருத்தன் இவ்ளோ மோசமாவா அட்ராசிட்டி பண்றது"

"டே ஒன்லருந்து நானும் பாத்துட்டு இருக்கேன். அவனக் கேள்வி கேக்குறதாலயே பத்மாவ அவனுக்குப் பிடிக்கல. அவளைக் கல்யாணம் பண்ண ஒரே காரணத்தால என்னையும் பிடிக்கல. இப்போ அக்ஷதாவயும் பிடிக்கலயாம். இத்தன வருஷமாக் கூடவே வாழ்ந்தவளுக்குத் துரோகம் பண்ண எப்டித்தான் மனசு வந்துச்சோ. அக்ஷுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்"

"இப்பவாச்சும் புரிஞ்சு அவனவிட்டு விலகிட்டாங்களே. இதுக்கே ஒரு தனித்தெம்பு வேணும். இனிமே, சொசைட்டி அவங்க மேலப் போட்ற ப்ரெஷருக்கு அளவே இருக்காது. நீயும் பாப்பாவும் தான் அவங்களுக்குப் பக்கபலமா நிக்கணும். எந்த நெலமைலயும் கை விட்ராதீங்கடா"

"ம்ம்ம்"

அந்நேரம் வரவேற்பறையில் இருந்து "அண்ணா" என்றொரு குரல் கேட்டது

"உன் ஏஞ்சல், டா" விக்ரம் புன்னகைத்து முணுமுணுக்க

"ஷ்ஷ்" என்றிட்டான் ராம்

"விக்ரம் அண்ணா" மீண்டும் ரேகா தான் அழைத்தாள்

இவன் அறைக்கதவை அகலத் திறந்து அவளை ஏறிட்டான் "ஆன்... சொல்லு, மது"

"நான் காலேஜுக்குக் கிளம்புறேன், ணா. பத்மாவ இன்னொரு நாள் வந்து பாக்குறேன். எல்லாம் சரியாகுற வர, அவள வெளிய எங்கயும் விடாதீங்க. பத்ரமா வச்சுக்கங்க"

"அவளப் பத்திக் கவலப்பட வேணாம். இப்படி நீ தனியாப் போறது எனக்குச் சரியாப்படல. நான் வந்து டிராப் பண்ணுறேன்"

"வேண்டாம், நீங்க அவளப் பாருங்க. நான் போய்க்குவேன்"

"சரி, நான் வரல" என்ற விக்ரம் திரும்பி ராமை நோக்கினான். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவனோ மறுப்பாய்த் தலையாட்டினான்.

இவன் அதைக் கருத்தில் கொள்ளாமல் ரேகாவிடம் தொடர்ந்தான் "என் ஃப்ரென்டு உன்னை காலேஜ் கிட்ட விட்டுட்டு வருவான். ஓகே தான? நோ, மறுத்து ஒரு வார்த்த பேசாத"

ஏதோ சொல்ல வாய் திறந்தவள் அடுத்த கணமே அமைதியானாள். விக்ரம் கார் சாவியை எடுத்து வந்து ராமிடம் தூக்கி எறிந்துவிட்டுப் போனான். அவனோ தயங்கித் தாமதித்து வேறுவழியில்லாமல் எழுந்து வர, ரேகா அங்கில்லை; வெளியே தெருவோரமாய் நின்று தரையை வெறித்துக் கொண்டிருந்தாள்; ராம் காரை ஓட்டிச் சென்று அவளருகே நிறுத்த, பின்னால் ஏறி அமர்ந்தாள். திறந்திருந்த சன்னல்களின் வழியே காற்று மட்டுமே உரையாடல் புரிந்தது. அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் தெரியாமல் கூட பார்த்துக் கொள்ளவில்லை; ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்ளவுமில்லை. இருவரின் உள்ளங்களும் அழுந்தி உடைந்துவிடுமோ என்ற நிலையில், மகிழுந்து வேளாண்பல்கலையின் முன்பு போய் நின்றது. அவள் இறங்கிக் கொள்ள, சிறுதொலைவு முன்னால் சென்று வாகனத்தை ஓரங்கட்டினான் அவன். மனப்புழுக்கம் தாளாமல் அவசரமாகக் கைவிட்டுப் பாக்கெட்டுகளில் துலாவினான்.

ஒரு சிகரெட் கிடைத்ததும் உதடுகளுக்கிடையே பிடித்துப் பற்ற வைத்தான். அது எரிந்து புகையைக் கக்க, அதை உள்ளிழுத்தவனுக்கு மனம் குளிர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவன் காரில் சாய்ந்தபடி மறுமுறை அக்குச்சியை வாயில் வைக்கப் போக, ஒரு கரம் வந்து தட்டிவிட்டது. அதில் புகையிலைச் சுருள் காற்றில் பறந்து எதிரே மண்டியிருந்த புதரில் விழுந்தது. அவன் இடப்புறமாகக் காண ரேகா தான் நின்றிருந்தாள். அவள் ஏதும் சொல்லாமல் கரங்களைக் கட்டிக் கொள்ள, அவனும் வாய் திறவவில்லை; மற்றுமொரு சிகரெட்டைத் தேடி எடுத்து வாயில் வைத்தான். உடனே, எரிச்சல் மூள அவள் அதை வேகமாகக் கைப்பற்றினாள். அவன் சட்டென்று அவளது கரத்தைப் பிடிக்க, அவள் தகிப்பாய் முறைத்தாள்.

"இது உனக்குத் தேவயில்லாத வேலை. கொடு அத" ராம் வேறெங்கோ பார்த்தவாறு உரைக்க அவள் அடிபணியவில்லை; கையில் இருந்ததைக் கீழே விட்டெறிந்தாள்.

அவள் அடுத்த நிமிடம் அவனை நிமிர்ந்து பார்க்கையில், வேறொரு சிகரெட் அவனது வாயில் புகைவிட்டபடி இருந்தது. அதை எட்டிப் பிடிக்க அவள் முயல, தலையை உயர்த்தி நகர்ந்து கொண்டான் அவன். அவனது உயரத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, சிகரெட்டைப் பிடித்திருந்த அவனின் வலக்கரத்தைப் பற்றித் தொங்கினாள். அவன் அப்பொழுதும் கழுத்தை வளைத்துப் புகைப்பிடிக்க, அவள் வெறுப்படைந்தாள்; அவனை விடுத்துத் தன் வழியே செல்லத் திரும்பினாள். இப்போது அவளைத் தடுத்து நிறுத்தியது அவன் தான். அவளின் இடக்கரத்தை இறுக்கிப் பற்றி, மற்றொரு கரத்திலிருந்த சிகரெட்டை வீசி எறிந்தான்.

"எனக்கு உன்னைப் பாக்கவே பிடிக்கல. என்னை ரொம்ப டென்ஷன் படுத்துற"

"இனி உங்க வீட்டுப் பக்கம் வரல. போதுமா? அதுக்காக, சிகரெட்லாம் புடிக்க வேணாம்"

"உன்னை இப்புடிப் பாக்கப் புடிக்கலன்னு தான் சொன்னேன். நீ ஹேப்பியா இருக்குறத நான் பாக்கணும்"

"அது இந்த ஜென்மத்துல நடக்காது"

"..."

"என் விதிப்படி எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு. அதுக்கு உங்கள நீங்களே காரணம் சொல்லி என்ன வரப் போது? தயவுசெஞ்சு அன்னைக்கு நடந்த அத்தனையும் மறந்துடுங்க"

"..."

"தீதும் நன்றும் பிறர் தர வாரா. என்னோட சந்தோஷத்த நீங்க ஒன்னும் பறிச்சுடல. எனக்காக நீங்க ஃபீல் பண்ணவும் தேவயில்ல. ப்ளீஸ், கேரி ஆன் வித் யுவர் லைஃப்"

"என்னால முடியலடி. என்னால... ஐ கான்ட். எனக்கும் மத்தவங்கள மாதிரி நிம்மதியா வாழணும்னு ஆச இருக்கு. எனக்குன்னு ஒரு லைஃப், எனக்குன்னு ஒரு ஃபேமிலி... ரியாலிட்டில இது எதுவுமே நடக்குற மாரி தெரியல. எத எடுத்தாலும் நீ தான் முன்னாடி வந்து நிக்குற. இந்த மூணு வருஷமாக் கண்ண மூடுனாலும் தெறந்தாலும் நீ, நீ, நீ மட்டுந்தான். உனக்கு முன்னாடி, பின்னாடி என் லைஃபுல வந்த எந்தப் பொண்ணுமே என்னை இந்தளவு அஃபெக்ட் பண்ணல. நீ ஒரே பார்வையிலப் பைத்தியமாக்கிச் சுத்த வச்சுட்ட. உன் முகத்தப் பாத்துட மாட்டோமான்னு எம்புட்டு நாள் ஏங்கிருக்கேன். அந்தக் குரலக் கேட்டுர மாட்டோமான்னு தவியாத் தவிச்சுருக்கேன். உன்னைக் கண்டுபிடிக்க எவ்வளவோ ட்ரை பண்ணேன். ஜி. ஹெச். ல டிஸ்சார்ஜ் ஆன நாள்லருந்து எத்தன பேர விசாரிச்சேன்; எங்கலாம் தேடுனேன். யாருக்கும் உன்னைப் பத்தி எதுவும் தெரியல. இப்போ நீ என் கண்ணு முன்னாலயே நிக்குற. ஆனா, யாரோ மாரி பிகேவ் பண்ற. என் ஹார்ட்ல உன்னை எங்க வச்சுருக்கேன், தெரியுமா? நான் என்ன எதிர்பாக்குறேன்னு உனக்குப் புரியலயா? புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா?"

அவனது விழிகளில் தெரிந்த வலியை அவளுமே பிரதிபலித்தாள் "நான் ஏன் நடிக்கப் போறேன்?"

"புரியல இல்ல. ஹ்ஹ்ஹ்ம்ம்... தெளிவாவே சொல்றேன். ஐ வான்ட் டு மேரி யூ. நோபடி பட் யூ"

"என்னால முடியாது" அவனிடம் அகப்பட்டிருந்த கரத்தை அவள் அப்போது தான் மீட்டெடுத்தாள்

"ஏன்?"

"தெரியல. பட், இது சரிப்படாது. நீங்கன்னு இல்ல; வேற யாரா இருந்தாலும் எனக்கு விருப்பமில்ல. ஒன்ஸ் அகெய்ன் கல்யாணங்குற ஒரு சம்பவத்தயே என்னால நெனைச்சுப் பாக்க முடியல. உங்க வாழ்க்கைல இதுவர ஒரு பொண்ணும் இல்லைங்குறீங்க. நான் அப்டியில்லயே. அல்ரெடி மொத்தமா என்னை ஒருத்தருக்குக் கொடுத்துட்டு நிக்குறேன். யூ நோவ் வாட் ஐ மீன்?"

"இஸ் தட் பாதரிங் யூ? உனக்காக நான் ஒருத்தியக் கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தி, கழட்டி விட்டா வர முடியும்? சுத்த நான்சென்ஸா இருக்கு. உன் வாழ்க்கைல வந்தவங்க, போனவங்களப் பத்தி எனக்குக் கவலயில்ல. இப்போ உன்னோட மனசுல யாரும் இல்லல்ல. அந்த ஸ்பேஸ் எனக்கு மட்டும் வேணும். நான் உன்னைப் பாத்துப்பேன்; ஊரறிய உலகறிய கல்யாணம் பண்ணி, நீ தான் என் பொண்டாட்டினு மார்தட்டிப்பேன். எனக்கு வேற எதுவுமே வேணாம். உன்னைத் தொடணுங்குற தாட் கூட இதுவர வந்ததில்ல. ஜஸ்ட் பாத்துட்டே இருக்கணும்; என் பேர நீ சொல்லிக் கேட்டுட்டே இருக்கணும்; வாழ்நாள் முழுக்க"

"உங்க சொந்தபந்தம் இந்த மாரி ஒரு விதவய ஏத்துப்பாங்களா? என்னலாம் பேசுவாங்க. நான் உங்கள அதக் காட்டி, இதக் காட்டி வளைச்சுப்போட்டேன்னு சொல்ல மாட்டாங்க?"

"தட் டஸ்ன்'ட் மேட்டர். என்னைப் பத்தி மட்டும் பேசு. புடிக்குது, புடிக்கலன்னு ஒத்த வார்த்தைலச் சொல்லு. மறுபடி மறுபடி சுத்தல்ல விடாத. ட்வென்டி ஃபோர் பை செவன் என் மூளையக் குடையாத. எதாருந்தாலும் இப்பவே இங்கயே ஃப்ராங்கா பேசிடு"

"ஜஸ்ட் ஸ்டாப் இட். ஸ்டாப் இட்" அவள் அவனது சொல் அம்புகளிலிருந்து தப்ப, கல்லூரியை நோக்கி அடியடியாக நடந்தாள்

"இது இத்தோட முடியல. சீக்கிரம் எவனயாவது பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. அப்பவாச்சும் என் மனசு மாறுதான்னு பாக்குறேன். அதுவரைக்கும் நான் இப்டியே தான் இருப்பேன்; உன்னை என் மனசுலச் சுமந்துட்டே. இத யாராலயும் மாத்த முடியாது" அவளிற்கு உரைக்கும்படி கூறியவன் சர்ரென்று வாகனத்தைத் திருப்பிப் போய்விட்டான்

மகிழுந்து சென்று மறையும்வரை சாலையையே பார்த்திருந்தவள் வாயிற்கதவின் உள்ளே காலெடுத்து வைத்தாள். அவனுடைய கோபமுகம் கண்களிலேயே நின்று அவளை வாட்டி வதைத்தது. அவன் இங்ஙனம் சொல்லும் வரை அவளுக்கே இந்த எண்ணம் தோன்றவில்லை. காமாட்சியோ பத்மாவோ கூட அவளிடம் மறுமணத்தைப் பற்றிப் பேசியதில்லை. அவளுடைய மனநிலை மாறட்டும், பழைய ரணம் ஆறட்டும் எனக் காத்திருந்தனர். இங்கு ஒருவன் உனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் தான் என் வாழ்வு ஆரம்பிக்கும் என்கிறானே. இந்தப் பைத்தியக்காரத்தனத்தை என்னவென்று சொல்வது?

மனதிற்குள் ஒரு புயல் மையம் கொண்டதே!