• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 47

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
49
0
6
Tamilnadu
ஓரிரு வார்த்தைகளோடு அறிவுரையை மூட்டை கட்டிய அங்கை ஹேமாவோடு படுத்துக் கொண்டாள். அவளுக்கும் தங்கையுடன் மேலும் சில நாட்கள் தங்க ஆசை தான். அந்த இணை சேராத இளஞ்சிட்டுகளுக்கு இடையே, பிரிவை ஏற்படுத்தும் தடைக்கல்லாக இருக்க அவள் விரும்பவில்லை; அவர்களுக்குத் தேவைப்படும் தனிமையைப் பரிசளித்து வெளியேற நினைத்தாள். அக்ஷதா தூங்கிவிட்டாளே தவிர, பத்மாவின் கண்கள் மூடவில்லை; தான் இத்தனை நாட்களாக அவனைத் தள்ளி வைத்தது தவறோ என்று எண்ணத் தொடங்கினாள்; கிரிஜா இந்த உண்மையை அறிந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் எனவும் கவலை கொண்டாள்; இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒரு முடிவையும் எடுத்தாள். விக்ரம் அதை அறிந்து நடப்பானா?

அடுத்த நாள் பணிக்குத் தயாராகிய பத்மா, அங்கை செய்து கொடுத்த உணவை உண்டுவிட்டுக் காத்திருந்தாள் தன்னவனுக்காக. அவன் நிதானமாகக் கிளம்பி வருவதற்குள் தாமதமாகிப் போனது. அவள் சொல்ல நினைத்ததை உட்கார்ந்து பேசக் கூட நேரம் அமையவில்லை. இருசக்கர வாகனத்தில் போகும்போது காற்றுவீச்சினூடே போட்டியிட்டுக் கத்திக் கூற வேண்டியதாயிருந்தது.

"விக்ரம், என்ன முகங்கொடுத்தே பாக்க மாட்றீங்க?"

"எதுக்குமா காலைலயே வம்பு? உனக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ சொல்லு. என்னை எப்படியும் பேச விடப் போறதில்ல. உன்னைப் பொருத்தவரைக்கும் நான் என்ன செஞ்சாலும் தப்பு"

"நைட்டு நடந்தத மனசுல வச்சுட்டுத் தான இப்டி நடந்துக்குறீங்க? அந்த நிமிஷம் எனக்கு எப்டி ஃபீல் ஆனுச்சோ, அத அப்டியே எக்ஸ்பிரஸ் பண்ணிட்டேன். இனிமே என்னோட ராவ் எமோஷன்ஸ உங்கள்ட்டக் காட்டல. பொய்யா நடிக்கக் கத்துக்குறேன்"

"உன்ன யாரும் நடிக்கலாம் சொல்லல. நான் ஒன்னு செஞ்சா, அதுக்கு அர்த்தம் இருக்கும்னு புரிஞ்சுக்க. எதயும் யோசிக்காம செய்ய மாட்டேன். என்ன ஏதுன்னு தெரியாமலே கத்தாத"

"கொஞ்சக் கொஞ்சமா மாத்திக்குறேன்"

"இப்போ என்ன அவசரம்னு அதுக்குள்ள வேலைக்குப் போற?"

"ஏற்கனவே நெறய லீவ் ஆகிப் போச்சு. பர்ஃபாமன்ஸ் கொறஞ்சா வர வேண்டிய இன்க்ரீமென்ட் வராது"

"ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத. கவனமா இரு"

"ஓகே"

"குட்"

அலுவலகத்தின் முன் அவள் இறங்கிக் கொள்ள, அதே நேரம் வேணுகோபாலும் பைக்கில் வந்து நின்றான்

"ஹலோ, பாஸ்" அவன் கள்ளமில்லாப் புன்னகையுடன் சொல்ல

"ஹாய்..." இவனும் சிரித்து வைத்தான்

"இவளுக்குத் தலைல எதோ அடிபட்டுருச்சாமே. வாட்சாப்ல சொன்னா. கேர்ஃபுல்லா பாத்துக்கக் கூடாதா, பாஸு?" அவன் மெய்யான அக்கறையுடன் வினவ

"மை பேட். பாத்துக்குறேன்" விக்ரம் சில்லறை சொற்களில் பதில் தந்தான்

"ஓகே, பாஸ். இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" என்று கூறி வேணு உள்ளே விரைந்திட்டான்

இவன் சென்ற பிறகு விக்ரம் திரும்பி பத்மாவை ஒரு பார்வை பார்த்தான். அதில் வெளிப்பட்டது தன்னுடைமையா, பொறாமையா, சினமா, இவையெல்லாம் கலந்த உணர்வா என்பதை அவளால் பிரித்தறிய இயலவில்லை.

"ஈவ்னிங் வந்து கூப்டுக்குறீங்களா?"

"எனக்கு வொர்க் முடிய உன்ன விடவும் ஆஃப் அன் அவர் லேட்டாகுது. முடிஞ்சா வெய்ட் பண்ணு. இல்லனா, நீயா போய்க்க"

பொறுப்பாக வந்து அழைத்துப் போகாமல் இவ்விதம் சொன்னவனின் மீது சின்னஞ்சிறு கோபம் துளிர்க்கவே செய்தது. இந்தக் காரணத்தினால் தான் அவனை எதிர்பாராமலே நாட்களைக் கடத்தி வந்தாள். இப்போது அவளைக் காக்க வைப்பது அவனது முறை போலும். அன்று மாலை ஒரு மணி நேரமாகக் காத்திருந்த பின்னரே அவன் வந்தான். அவள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அமைதியாக அவனுடன் பயணித்தாள்.

அந்திக்குப் பின் அங்கை புது வீட்டிற்குக் குடிமாறினாள். அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து, அந்த வீட்டிற்கான முதலையும் தந்தது பத்மா தான்; அவளது சேமிப்பிலிருந்தே முழுச் செலவையும் செய்தாள்; தவிர்க்க முடியாத சூழல் வரும்போது நகை பயன்படும் எனத் தமக்கைக்கு அறிவுறுத்தி வைத்தாள். அன்றிரவு அந்த வீட்டிலேயே தங்க விரும்பியவள் விக்ரமை அனுப்பி வைத்துவிட்டாள். அங்கையுடைய வீட்டிற்கும் விக்ரமின் குடியிருப்பிற்கும் இடையில் நான்கு தெருக்களே இருந்தன.

"இந்த மாசத்த எப்டி ஓட்டப் போற, அங்கை? எவ்ளோ தேவப்படுது?"

"ப்ரியா, இவ்ளோ செஞ்சதே போதும். விக்ரம் எதாச்சும் நெனைக்கப் போறாரு. சென்னைல ஒரு வருஷமா சேத்து வச்ச செறுவாடு இருக்கு. நான் சமாளிச்சுக்குறேன்"

"விக்ரம் அந்த மாரி டைப் இல்ல. மேனேஜ் பண்ண முடியலனா சொல்லு, அங்கை. என்னை வேத்தாளாப் பாக்காத"

"சரிடி. இப்போ ஹேமாவ என்ன பண்றது? நான் வேலைக்குப் போற இடத்துக்குக் கூப்டுப் போலாம்னு தான் நெனச்சேன். ஆனா, அது சரியா வரும்னு தோணல"

"பழய ஸ்கூல்ல வாங்குன டிசியும் இல்லங்குற. அவள இப்போ ஸ்கூல்லயும் சேக்க முடியாதே. கொஞ்ச நாளைக்கு மேரி அக்காட்ட விட்டுரு. நான் பேசி வைக்குறேன்"

"அவங்களுக்கு இருக்குற வேலைல இவளப் பாத்துப்பாங்களா?"

"வேற ஆப்ஷன் யோசிக்குற வரைக்கும் தான. சோஃபியா கவனிச்சுப்பா. ஹேமாவும் வின்சென்ட் கூட வெளயாடிட்டு இருந்துருவா"

"இந்தக் கடன எப்டி ஈடுகட்றது? காசு எதுவும் தந்துரலாமா?"

"அய்யய்யோ... இங்குட்டுப் பணங்காசப் பத்தியே யார்ட்டயும் பேசாத, க்கா. ரீசன்ட்டா தான் ராம் அண்ணாட்ட வாங்கிக் கட்டுனேன். எல்லாம் நம்மளவிட பாசக்காரப் பக்கிங்களா இருக்கு"

பத்மா தலையை உலுக்கிச் சொல்ல, அங்கை கலகலவென்று சிரித்தாள். மறுநாள் காலையில் விக்ரம் தன் மனையாளை அலுவலகத்திற்கு அழைத்துப் போக வண்டியுடன் நின்றிருந்தான்.

அவள் ஏறி அமரும்போது பாதங்களைக் கவனித்தவன் கேள்வியெழுப்பினான் "ஸ்லிப்பர்ஸ் புதுசா இருக்கு. அக்ஷதா வாங்கித் தந்தாங்களா?"

"இல்லயே"

"எப்போ வாங்குன?"

"நேத்து ஈவ்னிங். உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேனா, வேல முடிச்சு வேணு வெளிய வந்தான். தனியா நிக்குறதப் பாத்துட்டு, என்னை டிராப் பண்றதா சொன்னான். நான் வேணாம்னேன். ரெண்டு பேரும் ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தப்ப, செருப்பு அந்து போச்சு. அப்பறம் அவனே பைக்குலக் கடைக்குக் கூப்டுப் போனான். அங்க இருநூர்ரூபால ஒரு செருப்பு எடுத்தேன். அவன் நல்லாவே இல்லனு சொல்லி இத சூஸ் பண்ணான். எவ்ளோ விலை தெரியுமாங்க? எண்ணூறு ரூபாயாம். என் கைல அவ்ளோ காசில்ல. அந்தக் கடைல ஆன்லைன் டிரான்சாக்ஷனும் இல்ல. வேணு தான் பே பண்ணான்"

அவள் சொல்ல சொல்ல 'ஏன்டா, இந்தக் கதையக் கேட்டோம்' என நொந்து போனான் விக்ரம்

மாலையில் நேரத்திலேயே அவன் வருகை தர, பத்மா அலுவலக வாயிலில் இல்லை. அருகிலிருந்த ரெஸ்டாரன்ட்டில் இருந்தபடி அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அவன் உள்ளே சென்று பார்க்க, அவளுக்கெதிர் நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான்.

"விக்ரம், மீட் மை ஃப்ரென்ட் ஆதர்ஷ். ஆது, இவரு தான் என் ஹப்பி"

"ஓ, உனக்கு வாய்த்த ஆகச் சிறந்த அடிமை இவரு தானா?"

"டேய்..."

"சும்மா சொன்னேன்மா. ஹாய், விக்ரம். வாங்க, உக்காருங்க. மேரேஜ்லப் பாத்தது"

"என்னங்க, இவனும் நானும் பாரதியார் யுனிவர்சிட்டில பிஜிமேட்ஸ். காலேஜ் முடிச்சதுலருந்து இப்போ செகன்ட் டைம் மீட் பண்றோம். ஃபர்ஸ்ட் டைம், ஒரு ஜாப் இன்டர்வியூ ஒன்னா அட்டென்ட் பண்ணோம். நான் வேலை பாக்குற இதே கம்பனில இவனயும் அக்செப்ட் செஞ்சுட்டாங்க. பயபுள்ள, சொந்த ஊருக்கு ஓடிப் போச்சு. அதுக்கப்றம் இன்னைக்குத் தான் சான்ஸ் அமைஞ்சுருக்கு; மதுரைல இருந்து வொர்க் ரிலேட்டடா எங்க கம்பெனிக்கு வந்துருக்கான். வீட்டுக்கு வாடான்னு கூப்டேன், வரல"

"இன்னொரு நாள் ஃபேமிலியோட வர்றேன்"

"சாருக்கு டூ இயர்ஸ் முன்னாடித் தான் கல்யாணம் ஆச்சு. இவன் மேரேஜ் ஸ்டோரி கேக்கணுமே. செம காமெடியா இருக்கும். ஏ, ஆது சொல்லேன்"

"என் டிராஜடி, உனக்கு காமெடியா இருக்கா?"

"ப்ளீஸ், ப்ளீஸ், சொல்லுடா"

"விக்ரம், இவள வச்சு எப்டிச் சமாளிக்குறீங்க? சரியான பட்டம் அறந்த வாலு. நாமச் சொல்றதுக்கு அப்டியே ஆப்போசிட்டா ஒருத்தரால நடந்துக்க முடியும்னா, அது உங்க வொய்ஃப் தான். ரெண்டு வருஷத்துக்கே அவப் பண்ண சேட்டைய மறக்க முடியல. அடிக்கடி நெனப்பு வந்து தனியாச் சிரிச்சுட்டு உக்காந்துருப்பேன். நீங்க ரொம்பக் கொடுத்து வச்சவரு"

"அளக்காத. விக்ரம், இவன் கதைய நானே சொல்றேன். சாரு அவரு பாட்டு லவ் ஃபெயிலியர்ல மேரேஜே வேணாம்னு சுத்திட்டு இருந்தாரா. அத்தைப் பொண்ணுக்குக் கல்யாணம்னு விசேஷத்துக்குப் போனான், பாருங்க. அங்குட்டு, மாப்ளைக்குப் பொண்ணப் புடிக்கலன்னு ஓடிப் போய்ட்டான். இத்தான் சாக்குன்னு, அந்தப் புள்ளயச் சொந்தக்காரங்களாம் சேந்து, இவன் தலையிலக் கட்டி வச்சுட்டாங்க. பாவம், பையன்"

"அவ்ளோ சோகக்கதைலாம் கெடயாது. ஸ்டார்டிங்ல பயமா இருந்துச்சு. ஆனா, அவ ரொம்ப அமைதியான பொண்ணு. சாப்பிட்ட தட்டக் கூட என் கையால எடுத்து வைக்க விட மாட்டா. நல்லவேள, உன்னை மாதிரி இல்ல"

"ஏய்..."

"மூணு வேளையும் நீ தான் சமைக்குறேன்னு சொல்லிடு, பாப்போம். விக்ரம், நீங்களே சொல்லுங்க. எத்தன வேள சமைக்குறா?"

"என் கதைய இழுக்காதடா. கல்யாணமாகி ஆறு மாசந்தான ஆய்ருக்கு. பொறுமையாக் கத்துப்பேன். உனக்கென்னப்பா? ஒரு கொழந்த ஆய்டுச்சு. நீ வேலைக்குப் போயிடுற. அவ வீட்டுல இருக்கா; கொழந்தயப் பாத்தாகணும்; உனக்கு வடிச்சுக் கொட்டித் தான் ஆகணும். ஆமா, பாப்பா பேரென்ன?"

"ஆரண்யா. நீங்க எப்போ என் மருமகனக் கண்லக் காட்டப் போறீங்க? விக்ரம்..."

அந்நேரம் இவனது அலைபேசி ஒலிக்க "எக்ஸ்க்யூஸ் மீ" என்றதோடு அங்கிருந்து வெளியேறினான்

வந்தது என்னவோ ஸ்பேம் அழைப்பு தான். அதையே சாக்காக உபயோகித்து விக்ரம் நழுவிக் கொண்டான். அவர்களுக்கிடையே சிக்கிக் கொண்டு என்ன பேசுவது என்றே இவனுக்குத் தெரியவில்லை. உரையாடலின் சுவாரஸ்யத்தில் இவன் வாய் திறவாமல் இருப்பதை, மற்ற இருவரும் கவனத்தில் பதிக்கவில்லை. அதையும் தாண்டி ஆதர்ஷ் இறுதியாய் வினவிய கேள்விக்கு இவன் என்ன விடையுரைப்பான்?

இதில் முடிவெடுக்கும் அதிகாரம் இவனிடம் இல்லையே. இவனுடைய மனம் பத்மாவுடன் இணக்கமாக இருக்கவே முனைகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் இருப்பவளைச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவளுக்காய்ப் புத்தியில் உரைக்கும் வரை வழிப்போக்கனைப் போல தள்ளி நின்று வேடிக்கை தான் பார்த்தாக வேண்டும். அவளுடைய வரைமுறைகளும் கட்டளைகளும் அப்படி.

சில மணித்தியாலங்களுக்குப் பிறகு ஆதர்ஷும் பத்மாவும் கண்களில் தென்பட்டனர். விக்ரம் ஆயத்தமாய் வாகனத்தில் ஏறி அமர, அங்கு வந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அவ்விருவரை இடைமறித்தார்.

"பிரின்சி மேம்? நீங்க எங்க இங்க?"

"ஹோட்டலுக்கு எதுக்குடி வருவாங்க? சாப்டத் தான், பத்து. எனக்கு உங்களப் பாத்துத் தான்டி ஷாக்கிங்கா இருக்கு. வெறும் ஃப்ரென்ட்ஸ்னு சொல்லிட்டு, கடைசில ஆதர்ஷயே கல்யாணம் பண்ணிட்டல்ல. எனக்கு அப்பவே தெரியுன்டி"

இந்த வாக்கியத்தைக் கேட்டதோடு, விக்ரம் அவ்விடம் நீங்கிப் புறப்பட்டுவிட்டான்

வாழ்க்கையே அலை போலே!