• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 49

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
53
0
6
Tamilnadu
பத்மப்பிரியா விக்ரமுடன் எவ்வித நிபந்தனையுமின்றி இணைந்து வாழப் போவதாகக் கூறவே, ரேகாவிற்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேர எழும்பின

"இப்பயாச்சும் உனக்கு மனசு வந்துச்சே. சந்தோஷம்மா. மகராசியா இரு"

"இதுக்கா உன்ட்டக் கூப்டு வச்சுச் சொல்றாங்க. ஐடியா குடுடி"

"அத்தான் பர்த்டே கிஃப்ட்டுன்னு நீயே சொல்லிட்டியே; இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"கல்யாணம் ஆனவங்க என்ன செய்வாகன்னு உனக்குத் தெரியும்ல. எனக்கும் சொல்றீ"

"எதே?"

"எதுக்கு இப்போ ஓவரா ஷாக்காகுற? ஷாக்க கொற"

"இதெல்லாம் நான் சொல்லித் தர்ற விசயம் இல்லடி. உன்ர வூட்டுக்காரர்ட்டப் போய்க் கேளு. அவரே நடத்திக் காட்டுவாரு"

"அது எங்களுக்குத் தெரியாதாக்கும். குத்துமதிப்பா இன்னது நடக்கும்னு தெரிஞ்சுட்டுப் போனா, நெர்வஸ் ஆகாம இருக்கும்ல. டீடெயில் ஏதும் தெரியாம நான் என்ன பண்றதாம்?"

"நீ என்ன காட்டுக்குள்ளத் தனியா வேட்டைக்கா போற? அப்டியே நடுநடுங்குற. குத்துமதிப்பாவும் தெரிஞ்சுக்க வேணாம்; கொலமதிப்பாவும் தெரிஞ்சுக்க வேணாம். இந்த மாரி விஷயத்தலாம் தெரிஞ்சுக்காம இருக்குறதே பெட்டர். புருஷன்ட்டப் பேச வேண்டியதலாம் நம்மகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு..."

"ரே..."

"என்னை நோண்டி எடுக்காத, பிரி. நான் படிக்குற புள்ளடி. படிப்புல மட்டுந்தான் கான்சன்ட்ரேஷன்லாம் இருக்கணும். உனக்கு அவசியமாத் தெரிஞ்சுக்கணும்னா, அச்சு அக்காட்டப் போய் விசாரிச்சுக்க"

"அவசியந்தான்; அதுக்குனு? அவ என் அம்மா மாதிரி. அவள்ட்ட எப்புட்றீ கேக்க முடியும்? நீயே சொல்ல மாட்ற. பேசாட்டு நான் தெரிஞ்சுக்கவே இல்ல. இன்னும் கொஞ்சம் மாசம் போட்டும். தைரியம் வரும்போது நானே அடுத்த ஸ்டெப் போய்க்குறேன்"

"இன்னும்... மாசமா? ஏற்கனவே காமாட்சி மொதக் கொண்டு நீ குளிக்கிறியா, மொழுவுறியான்னு ஜாடமாடயாக் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேலயும் மாசத்தக் கடத்துறாளாம்ல. அய்யோ, எனக்கு பிபிய ஏத்துறாளே. என்னைய எதுக்குடி இதுக்குள்ள இழுத்துவிட்ட? அவ அவளோட விரகதாபத்தலாம் நம்ம தலைல வந்து சொமத்திட்டு"

"விரக தாபமா? ஒரு மானாவும் புரியல"

"போடி, என் பட்டரு"

போகிறவளை இழுத்தமர்த்தி ப்ரியா விவரங்கள் கேட்க, ரேகாவும் அரைகுறையாகச் சொல்லி வைத்தாள். அதைக் கேட்டவளுக்குப் புரிந்தும் புரியாத மாதிரி கலக்கமாக இருந்தது. இதற்கு அவள் விக்ரமிடமே நேரடியாகக் கேட்டிருந்தால், தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஞாயிறு அன்று காலையிலேயே எழுந்த பத்மா கணவனின் கன்னத்தில் ஆசையோடு முத்தமிட்டாள்; அவனிடம் வாழ்த்துச் சேதி ஏதும் கூறவில்லை; ரேகாவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டுவிட்டாள். ஆனால், அவள் சென்ற இடம் வேறாக இருந்தது. போன இடத்தில் மங்கை அவளுக்கு அலைபேசியில் அழைத்திருந்தார்.

"ஏடி, பத்மா"

"சொல்லு"

"என்னடி, ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்ற? நீயாவும் பேச மாட்டங்குற"

"ஆன், உன் மருமவன் அடிச்ச அடிலக் காது கேக்காமப் போயிருச்சு. இதுல எங்கருந்து உனக்கு நான் பேசுறதாம்?"

"காது கேக்கலயா? ஒரு வார்த்தை சொன்னா என்னடி? நானும் அப்பாவும் வந்து பாத்துருப்போம்ல"

"அடி வாங்குறப்பவே ஒரு ஓரமா உக்காந்து ரசிச்சுட்டுத் தான இருந்தீங்க? இப்போ என்ன புதுசா, அப்டியே பாசம் பொத்துக்கிட்டு ஊத்துதாக்கும்"

"உன் வூட்டுக்காரன் பேசுற மாரியே வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுனு பேசாதடி. உங்க மேலப் பாசம் இல்லாமயா, இம்புட்டுத் தூரம் வளத்துவிட்ருக்கோம்"

"நல்லா வளத்துவுட்டீங்க, ரோட்டுல. சரி, இப்போ எதுக்கு ஃபோன் பண்ண? நானே ரொம்ப நா கழிச்சு இன்னைக்குத் தான் ஹேப்பியா இருக்கேன். என் மூட ஸ்பாயில் பண்ணாத"

"சலிச்சுக்காதடியம்மா. ஒரேயடியா நீங்களாம் எங்கப் போனீங்க? ஹேமா குட்டி எப்டி இருக்கு? அச்சு என்ன பண்ணுறா? பாப்பா வேறக் கண்ணுலயே நிக்காளே. ஒரு விலாசத்தயாச்சும் சொல்லுங்கடி"

"நாங்க ரொம்பவும் நல்லா இருக்கோம், ஆத்தா. நீயொன்னும் கவலப்படத் தேவயில்ல. உன்கிட்ட அட்ரெஸ்ஸலாம் சொல்ல முடியாது. நேர்ல வந்து அட்வைஸப் போடுவன்னு அங்கையே பயந்து கெடக்கா. அவளக் கொஞ்சமாச்சும் விட்டுப் பிடி. இப்போதைக்கு அவளும் மாலினியும் என் கண்பார்வைலயே தான் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு கொறயும் வராது"

"அத்தானடி எனக்கு வருத்தமே"

"என்னாது?"

"நீயே சின்ன புள்ள. ஒரு வெவரமும் பத்தல. இதுல நீ எங்க அவங்களப் பாத்துக்கப் போற? போன இடத்துல வாழுற வழியப் பாருடின்னா. நீயெதுக்கு அவ மக்கமாரச் சொமந்துட்டு இருக்கவ?"

"எங்கக்கா, எம்பொண்ணு; நான் சொமக்குறேன், என்னால முடியாட்டி கவுக்குறேன்; உனக்கென்ன வந்துது, ஆத்தா? மொதமொதல்ல விக்ரம் உங்கள நம்பித் தான ஒப்படைச்சுட்டு வந்தாரு. நீங்க என்ன பண்ணீக? எங்க மூணாளு உசுருக்கும் சேதாரம் ஆகுற அளவுக்கு விட்டுட்டீங்க. இப்போ அச்சு எங்கள முழுமனசா நம்புறா. அவ இருக்குற இடத்தச் சொல்லிட்டா, அது துரோகக் கணக்குலச் சேந்துரும். செத்த நாள் பொறு. நானே அவள்ட்டப் பேசிட்டு முடிவாச் சொல்லுறேன். அப்றம் பாப்ப, உம்பேத்தியவும் பொண்ணயும்"

"அவ நம்பரயாச்சும் குடேன், டி. பழய நம்பருக்குப் போட்டா போவே மாட்டேங்குது. நாலு சொல்லு பேசிட்டு வச்சுர்றேன்"

"நீ அவள எமோஷனலா அட்டாக் பண்ணத் தான ஆசப்பட்ற? அவ உனக்குப் பயந்துட்டே தான் நம்பர மாத்திட்டா. அவள நிம்மதியா இருக்க விடேன். இத்தன தேதி அவப் பிரச்சனைன்னு கதறுனப்பலாம் செவுடன் காதுலச் சங்கூதுன கணக்கா இருந்துட்டு; இப்போ என்னத்துக்குத் துடியா துடிக்குற? மறுபடி மோகனக் கூட்டி வச்சுப் பேச்சுவார்த்த நடத்துனியளோ?"

"நீ நெனைக்குற மாதிரிலாம் இல்ல, பத்மா. அவனோட வேஷம் மொத்தமுந்தான் கலைஞ்சுடுச்சே. எங்க கண்ணு முன்னாடியே நாம்பெத்த மகள அடிச்சு இறுக்கிப்புட்டானே; படுபாவி. அவன் கொள்ளையிலப் போவ; நாதியத்துச் சாவ. அப்பவே நான் நூல் நூலாயிட்டேன்டி. அப்பாவும் அவன் மேல கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாம்னு தான் யோசிக்காரு"

"பொறுமையா யோசிங்க. அவசரமே இல்ல. நான் ஒரேயடியாப் போய்ருந்தா கூட, இப்டித்தான் யோசனை பண்ணிருப்பீக போல"

"வாழ வேண்டிய புள்ள. அப்படிலாம் பேசக் கூடாது, தங்கம். இப்போ உடம்பு சொகமிருக்கா?"

அந்நேரம் காத்திருப்பு இணைப்பில் கிரிஜா தொடர்பு கொண்டார்

"ம்மா, என் அத்தை கூப்புட்றாவ. ஒரு நிமிசம் வையு. அப்றம் பேசுறேன்"

அன்னையைத் துண்டித்துவிட்டு அவள் மாமியாரின் அழைப்பை ஏற்றாள்

"பத்துமா"

"ஹலோ, அத்தை"

"எப்படி இருக்க, மருமகளே?"

"எனக்கென்ன அத்த ஜோரா இருக்கேன். உங்கப் பையன் கூடயே இருக்குறப்ப எனக்கேது கொற?"

"விக்ரம் என்ன பண்ணுறான்? வெளிய எங்கயும் கெளம்பிட்டீங்களா?"

"இல்லயே, அத்த"

"ஏன்டி, அவனுக்கு இன்னைக்குப் பொறந்தநாள். தெரியுமா உனக்கு?"

"ஓ, தெரியுமே. கேக்கு கூட ஆர்டர் பண்ணி ரெடியா இருக்கே"

"அப்போ காலைலயே வாழ்த்து சொல்லிட்டியா?"

"இன்னும் இல்ல. இனிமே தான்"

"நல்ல நேரம் எதும் பாத்துட்டுருக்கியாடி, மருமகளே? காலைலக் கண்ண முழிச்சோமா, ஒரு ஆப்பி பர்த்துடேவ சொன்னோமா, கோவில் குளத்தச் சுத்துனோமா, ஒரு படத்துக்குப் போனோமா, பார்க்குக்குப் போய்ட்டு வந்தோமான்னு இல்லாம; என்ன தான்டி பண்ணுறீங்க?"

"அதுவா, அத்த... நானு, ராம் அண்ணே, அவுக நட்புக்கள்லாம் சேந்து அவர சர்ப்ரைஸ் பண்ணப் போறோம்"

"ஓஹோ... சரி, சரி, சப்புரைஸலாம் முடிச்சுட்டு எனக்கு ஒரு ஃபோனப் போடுடி. கல்யாணமாகி மொத பொறந்தநாள் இல்ல. நீ விஸ்ஸு பண்ணதும் தான் நாங்களாம் சொல்லணும்னு வெயிட்டிங்ல இருக்கோம்"

"கண்டிப்பா கால் பண்றேன், அத்தை. உடம்பப் பாத்துக்கங்க. மாமாவக் கேட்டதாச் சொல்லுங்க. சேச்சி எப்படி இருக்காவ?" என்று நலம் விசாரித்தவள், சுப்ரதா மற்றும் பிரக்ஷித்திடமும் பேசி முடித்துத் தான் கைப்பேசியை வைத்தாள்

வந்த காரியம் முடிந்த பின்னர் அவள் வீடு திரும்பினாள். செல்லும் வழியில் ரேகாவும் ராமும் விக்ரமின் நண்பர்களும் அவளுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் கேக்குடன் முன்னே செல்ல, பெண்கள் இருவரும் இறுதியாக நடந்தனர். அப்போது பத்மா விக்ரமிற்கு அழைத்துப் பேசினாள்.

"எழுஞ்சிட்டீங்களா, ங்க?"

"எழுஞ்சுட்டேன். சன்டே அதுவுமாக் காலைலயே எங்கப் போன? எப்போ வருவ?"

"வந்துட்டே இருக்கேன். ஒரு அவசர வேலை. இப்பவே வெளியப் போகணும். நீங்க நல்ல டிரெஸ்ஸா போட்டுக் கிளம்பி நிக்கீகளா? ந்தா நான் வந்துட்றேன்"

"சரி, வா"

சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளே அழைப்புவிடுத்தாள்

"விக்ரம், ரெடியாய்ட்டீங்களா?"

"ம்ம்ம், அவ்ளோ தான். நான் ரெடி" அவன் கைக்கடிகாரத்தைக் கட்டியபடியே சொன்னான்

"ஒரு நிமிஷம் கண்ண மூடுங்களேன். அப்டியே செவுத்துல இடிச்சுக்காம ஹாலுக்கு வாங்க, பாப்போம்"

"எதுக்கும்மா இதெல்லாம்? உன் பிளான் தான் என்ன?"

"சொல்றத மட்டும் செய்யுங்க. மூச்"

"ஓகே, கண்ண மூடிட்டேன். ஒன், டூ, த்ரீ... நைன், டென். ஹாலுக்கும் வந்துட்டேன்" அவளின் சொல்படியே பத்து அடிகளில் உணவுமேசையின் அருகே வந்து சேர்ந்தான்

"அண்ணே, ஸ்டார்ட் பண்ணுங்க" அழைப்பைத் துண்டித்தவள் ராமிற்கு சிக்னல் கொடுத்தாள்

அவனது தோழர்கள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி, கரங்களில் பாப்பர்ஸ் மற்றும் பலூன்களுடன் தயாராயினர்

பின்னால் நின்றிருந்த பத்மா ஒருவாறு நெளிந்த வண்ணமே இருக்க, ரேகா சந்தேகமாக வினவினாள் "ஏன்டி முதுக முதுகத் தடவிட்டு இருக்க? எதுவும் வலியா? இல்ல, சொரியுதா?"

"நத்திங்" அவளது முகமோ மெல்லிய சங்கடத்தை வெளிக்காட்டியது; உள்ளே எதோ உறுத்துகிறது போலும்.

அந்நேரம் சோஃபியா வின்சென்ட் உடன் அங்கு வருகை தந்தாள் "இங்க என்ன நடக்கப் போது? ஒரே கூட்டமாக் காணுது"

"விக்ரம் அண்ணனுக்குப் பொறந்தநாள். சர்ப்ரைஸ் தர்றதுக்குக் கூடி நிக்கோம்" ரேகா பதில் மொழிந்தாள்

"நாங்களும் வாரோம்; சர்ப்ரைஸு பண்ண. வாங்க, வாங்க, சேந்து பண்ணுவோம்" சோஃபி படியேறி முற்றத்திற்கு வர

அவர்களது கொண்டாட்டம் தொடங்கியது "ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டூ யூ, விக்ரம். ஹேப்..."

அந்த வாழ்த்துப்பாடல் கூட முற்று பெறவில்லை. அதற்குள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. இல்லை, இல்லை, பேரதிர்ச்சி தொக்கி நின்றது. பெரும் அதிர்வலைக்குப் பின் ஒரு அசாத்திய அமைதியும் நிலவியது. என்ன ஏதென்ற நிலவரம் அறிய, ப்ரியா கூட்டத்தை விலக்கி முன்னே நடந்தாள்.

"விக்ரம்"

"மச்சான்"

"மச்சி"

"டேய்"

போன்ற அழைப்புக் குரல்களும் எச்சரிக்கை ஒலிகளும் ஆங்காங்கே மங்கலாக எழுந்தன

அவற்றை உதாசீனப்படுத்தி முன்னால் சென்ற பத்மாவின் விழிகள் இரண்டும் திகைப்பில் விரிந்தன. வாழ்வில் முதன்முறையாக அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. தான் காண்பதெல்லாம் வெறும் கனவாகிப் போகட்டும் என அவளது இதயம் வேண்டித் துடித்தது. ஏனெனில், அவளின் உள்ளங்கவர்ந்த கணவன் அங்கே வேறொருத்தியைத் தழுவிக் கொண்டிருந்தான்; தன்னைச் சுற்றி நிகழ்வதை அறியாமலே.

நான் மேல வந்துட்டன்டா!