• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 51

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
53
0
6
Tamilnadu
"ஆரம்பத்துலயே ஒதுங்கிருக்கணும். நான் தான் முட்டாள்தனமா உன்னை நம்பி ஏமாந்துட்டேன். இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போயிடல. நல்லபடியா உன் புள்ள, புள்ளையப் பெத்தவளோட போய் வாழு. என்னை அத்துவிட்டுரு"

"பத்மா, ஜோக் எதும் பண்றியா? இஷ்டத்துக்குப் பேசுறத நிறுத்து"

"பின்ன, நான் இருக்கும்போதே அவளக் கூப்டு வச்சுக் குடும்பம் நடத்திட்டு இருந்தா வேறென்ன சொல்றது? இதெல்லாம் சரி கெடையாது"

"மொதல்ல நீ எமோஷனல் ஆகாத; கத்தாத; இன்டீசன்ட்டா பேசாத. சின்ன பையன் பயந்துடப் போறான்"

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இப்டித்தான் பேச முடியும். என்ட்ட எதும் கொற இருந்தா நேருக்கு நேராப் புடிக்கலன்னு சொல்லிடு. அத விட்டுச் சில்றத்தனமா நடந்துக்காத. ஏற்கனவே பழகுன ஒருத்திய, ஒரு ஆம்பளயால வெறும் ஃப்ரென்டா பாக்க முடியுமா? இல்ல, எனக்குப் புரியல. நீயே சொல்லு. நைட்டு எங்கத் தூங்குன? கம் ஆன், டெல் மீ. பேசு, விக்ரம்"

"என்னை இர்ரிடேட் பண்ணாத, ப்ரியா. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், அவன் என் புள்ள கெடயாது. அவனோட அம்மா கூட சேர்ற நெனப்பும் எனக்கில்ல. நான் அந்த மாரியான ஆளில்லனு உனக்கு நல்லாவே தெரியும். ஷி இஸ் ஜஸ்ட் எ வுமன் ஹூ டெஸ்பரேட்லி நீட்ஸ் ஹெல்ப். வீடு தேடி வந்தவங்கள என்னாலத் தொரத்தியடிக்க முடியாது. நீயே நியாயமாப் பேசு"

"நியாயம் அந்நியாயம்லாம் எனக்குத் தெரியாது. என் மனசுக்கு உறுத்தலா இருக்கு. நீங்க நடந்துக்குற விதம் பிடிக்கல. அவ இந்த வீட்டுல இருக்கக் கூடாது. சீக்கிரம் காலி பண்ணச் சொல்லுங்க; இப்பவே, இந்த நிமிஷமே"

"ப்ரியா, ப்ரியா... ரிலாக்ஸ். அவளும் உன் சிஸ்டர் மாதிரி. வேற வழி தெரியாம நம்மத் தேடி வந்துருக்காங்க. ஒரு உதவின்னு கேக்குறவங்கள, இப்படி ட்ரீட் பண்றது நல்லாவா இருக்கு?"

"நோ... நோ, நோ. இவ ஒன்னும் அங்கை மாரி இல்ல. என் அக்கா கூட யாரயும் கம்பேர் பண்ணாதீங்க. ஷி இஸ் சச் எ ஜெம். யாருக்கும் துரோகம் நெனைக்காதவ. ஆனா, இவ... ஒரு பச்சை துரோகி, ஏமாத்துக்காரி அன்ட்... அன்ட் ஒரு சுயநலம் புடிச்ச பிசாசு"

"பத்மா, ஸ்டாப் இட்"

"யூ டோன்ட் லவ் மீ. யூ டோன்ட் லவ் மீ, விக்ரம். ஐ டிரஸ்டட் யூ மோர் தன் மைசெல்ஃப். பட், யூ சீட்டட் மீ வித் யுவர் வேர்ட்ஸ். ப்ளடி சீட்டர்"

"அம்மு..."

இருவரும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி வதைபட்டுக் கொண்டிருந்த நேரம், கண்ணாடி உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. பத்மா அறைக்குள் எட்டிப் பார்க்க, அவளின் மீன்தொட்டி கீழே விழுந்து சல்லி சல்லியாகி இருந்தது. அவர்கள் ஆசையாக வளர்த்த சோனுவும் மீனுவும் உயிருக்குப் போராடித் துடித்துக் கொண்டிருந்தன. அவள் பதைபதைத்து அவசரமாக அந்த மீன்களை மீட்கப் போராடினாள். ஆனால், அவை நழுவி நழுவிச் சென்றன; அவளின் காதல் கனவுகளைப் போலவே.

எவ்வளவோ முயன்றும் அவை இரண்டுமே உயிரிழந்துவிட பத்மாவின் விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. நடந்த முயற்சியில் கண்ணாடித் துண்டுகள் கிழித்து அவளது கரங்களில் ரத்தம் சொட்டியது. அதைக் கண்டும் காணாத மாதிரி கைகளைக் கட்டிக் கல்லாக நின்று கொண்டிருந்தாள் ஜெனிஃபர். மீன் தொட்டியைத் தள்ளி விட்டதே இவள் தானே. இத்தகைய காரியத்தைச் செய்யக் கூடியவள் கல்லாகத் தானிருக்க வேண்டிருக்கும். விக்ரம் கண்ணீரில் கரையும் மனைவியை நெருங்கி வந்தான். செத்துக் கிடந்த மீன்களைப் பார்த்து அவன் நெஞ்சமும் பன்மடங்கு கனத்தது. அவளை ஆதுரமாகத் தொட்டு ஆதரவு தர முனைந்தான்.

பத்மா அதை ஏற்கவில்லை; நிழல் படும் தூரத்தில் கூட அவனை அனுமதிக்கவில்லை. மீண்டும் அவனிடத்தில் தன்னை இழக்க அவள் விரும்பவில்லை; விழி நீரைத் துடைத்தெறிந்துவிட்டு அங்கிருந்து எழுந்தாள்; விக்ரம் அழைப்பது காதில் கேட்டும் மூளையில் புகாமல் போகவே, தனியாகப் புறப்பட்டுத் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். அவளைத் திடீரெனக் கண்டதும் சுந்தரத்திற்கும் மங்கைக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. இருந்தும் அவளைத் தோண்டித் துருவாமல் வந்தவரையில் மன மகிழ்ச்சியுற்றனர்.

இந்தியா வந்திறங்கியதில் இருந்து ஜெனிஃபர் பேயாய் அலைகிறாள். அவளுக்கு என்ன வேண்டுமென்று அவளுக்கே தெரியவில்லை. பணமும் பகட்டும் முக்கியமென்று தானே பென் மேத்யூஸைக் கரம் பிடித்தாள். நாட்போக்கில் பொருள் மட்டும் போதாது; கொஞ்சமேனும் அன்பும் நஞ்சமேனும் அலாதி இன்பமும் வேண்டுமென அவளுக்குப் புரிந்தது. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதாக இருந்தது பென்னின் கணக்கு. மகன் ஒருவன் பிறந்ததும் அவர்களுக்கிடையே ஓர் இடைவெளி வந்துவிட்டது. திருமணத்தின் வசந்த காலமும் அத்தோடு நிறைவடைந்தது. வசந்தத்தில் புது மலராய் வாசம் வீசிய ஜெனிக்கு, அந்தப் பிரிவின் வறட்சியைக் கையாளத் தெரியவில்லை.

அதன் பிறகு பென் தனது தொழிலை வளர்த்தெடுப்பதில் மும்முரம் காட்டினான். அவள் அதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்காமல், தன்னையே அவன் சுற்றி வர வேண்டும் என எதிர்பார்த்தாள். அவளது சொல்படி அவன் ஆடவில்லை என்றதும் வார்த்தைகளால் வதைத்தாள்; நித்தமும் அவனைக் குறை கூறி மனதைப் புண்படுத்தினாள்; அவன் எது செய்தாலும் போதவில்லை என்றாள். அவளுடைய மனம் ஏனோ நிறைவடையவே இல்லை; நிரப்பப்படாத ஓர் இடம் நீடித்தபடியே இருந்தது. அதை உணர்ந்தபடியால் பென்னிற்கும் அவளின் மீதான நாட்டம் குறைந்தது; பணி முடிந்தாலும் உடனே வீட்டிற்கு வருவதைத் தவிர்க்க ஆரம்பித்தான்; அப்படியே வீட்டில் இருந்தாலும் பிள்ளையுடனே விளையாடி நேரத்தைச் செலவழித்தான்.

ஜெனிஃபருக்குப் பிள்ளையை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, தனிமையில் பொழுதைக் கழிக்க வேண்டும்; ஆடை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தந்து பணத்தைக் கொட்ட வேண்டும்; கணவனுடன் சேர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டும். இவை அனைத்தும் அவள் பக்குவமான மனைவியாகவும் பொறுப்பான அன்னையாகவும் இருந்தாலே கிடைத்திருக்கும். அவ்வாறு இல்லாமல் அராஜகம் செய்யவும் பென்னிற்கு அவளுடனான வாழ்க்கை கசந்தது.

மகனுக்காகப் பொறுத்துக் கொண்டு காலத்தை ஓட்டியவன் ஒரு கட்டத்தில் முற்றிலும் வெறுப்படைந்தான். அவளுடனான வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்தான். அவளுக்கும் அதில் சம்மதம் இருக்கவே செய்தது. ஆனால், பென் மகனைத் தன் வசம் ஒப்புவிக்குமாறு நிபந்தனை இடவும் அவள் முரண்டு பிடித்தாள். காரணம் காசு, பணம், துட்டு, மனி, மனி. அதாவது விவகாரத்திற்குப் பின் மகனை வளர்த்தெடுக்க பென்னிடம் இருந்து கிடைக்கப் போகும் ஜீவனாம்சத் தொகை. அதைக் கருத்தில் கொண்டு தான் அவள் விவாகரத்திற்கு முழு மனதாக ஒப்புதல் தெரிவித்தாள்.

இப்போது அப்பெருந்தொகை கிடைக்காமல் போய் விடுமோ எனப் பயந்து ஓடி வந்திருக்கிறாள். பென்னிடம் அறிவிக்காமல் மகனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டாள். எப்படியும் அவன் பிள்ளையைத் தேடி வருவான் என்று அவளுக்குத் தெரியும். அவனைச் சுற்றலில் விடும் நோக்கிலேயே இங்கு வந்து ஒளிந்திருக்கிறாள். தனிஷாவிடம் சில மாதங்களுக்கு முன்பிருந்தே விசாரித்து விக்ரமைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டாள். விக்ரம் இந்த உண்மை ஏதும் அறியான். பென்னை மிக மோசமாகச் சித்தரித்து, கணவனே தங்களைத் துரத்தி விட்டதாகவும் அவள் கதை கட்ட இவனுமே நம்பித் தொலைத்திட்டான்.

நடப்பவை அனைத்துமே ஜெனிஃபரின் திட்டப்படி தான். அவளுடைய நீலிக் கண்ணீரின் சக்தி அப்பேற்பட்டது. ஏற்கனவே ஒரு முறை தன்னிடம் ஏமாந்தவன் தானே; மற்றொரு முறை ஏமாற்றிப் பார்க்கலாம் என நினைத்தவள் முதல் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளாள். அதன் பலனாக பத்மா வெளியேற்றப்பட்டிருக்கிறாள். இதற்குப் பிறகு அவ்விடம் காவலாளி இல்லாத வயலைப் போல. எந்தக் கருப்பாடு வேண்டுமானாலும் மேய்ந்து விட்டுப் போக வாய்ப்பு அதிகம். இந்தத் தலைக்கனம் பிடித்த ஆடு மேலும் ஒரு கொடிய யோசனையை உள்ளத்தில் கொண்டுள்ளது. அது விக்ரமுடன் மறுபடி தான் இணைசேர வேண்டும் என்பதே. அவனுடைய பரிசுத்தமான காதலுக்காக ஏங்கி அவளின் இருதயம் வெம்புகின்றது. சாக்கடையில் முத்து உதிக்கவும் வாய்ப்புண்டோ?

மூன்று நாட்களின் முடிவில்...

"ஹலோ, பிரி"

"சொல்லு, ரே"

"என்ன பண்ற?"

"இப்போ தான் வேலைக்குப் போய்ட்டு வந்தேன்"

"அண்ணன் வொர்க் முடிச்சு வந்துட்டாரா?"

"எனக்கு எப்டித் தெரியும். நான் பொள்ளாச்சில இருக்கேன்"

"ஏன்? இன்னும் சண்ட தீரலயா?"

"அது அவ்ளோ தான். இனிமேயும் நாங்க சேந்து வாழுவோம்னு எனக்குத் தோணல"

"ஏன்டி இப்டிச் சொல்லுற?"

"ஆன், அவரு நடத்தை அப்டியிருக்கு. விட்டுட்டுப் போன காதலியக் கூட்டி வந்து மறுவாழ்வு குடுத்துட்டு இருக்காரு. அன்னைக்கு வெக்கமே இல்லாமக் கட்டிப் புடிச்சுட்டு இருந்தாரே. அவத் தான் ஜெனியாம். நானும் மனசச் சமாதானப்படுத்திட்டு அடுத்த நாள் போய்ப் பாக்குறேன். அவ ஏதோ இளவரசி மாரி ஒய்யாரமா பெட்டுல படுத்துருக்கா. அவ ஆளும் டிரஸ்ஸும். இந்தக் கொடுமயலாம் பாக்கணும்னு தலைல எழுதி வச்சுருக்கு. எல்லாம் என் கெரகம்"

"அவ இன்னும் போலயா? அவக்கிட்ட எதுக்குடி உன் புருஷனத் தனியா விட்டு வந்த? உனக்கெங்கயாச்சும் அறிவிருக்கா?"

"ஆமாடி, எனக்கு அறிவு தான் இல்ல. இருந்துருந்தா, அவரோட கதையெல்லாம் தெரிஞ்ச பின்னயும் கழுத்த நீட்டிருப்பனா? என் புத்தியச் செருப்பாலயே அடிச்சுக்கணும். நான் தான் பைத்தியமாயித் திரியுறேன். மத்தபடி, அவருக்கு எம்மேல அரையணா பாசமில்ல. பொண்டாட்டி எங்கப் போனா, ஏது ஆனான்னு தெரிஞ்சுக்கக் கூட தோணல. ஃபோன் காலும் இல்ல; ஒரு மண்ணுமில்ல. அவரு எப்பவுமே இப்டித்தான். நான் ஒவ்வொரு மொறயும் தேடிட்டு தேடிட்டுப் போணும். இந்தத் தடவ நானா எதும் செய்யறதா இல்ல. அவரா வந்தா வரட்டும். இல்லனா, அவளோடயே போகட்டும்"

"அப்படிச் சொல்லாத, பைத்தியமே. அவருக்கு உன் மேல லவ்வுலாம் இருக்கு. அன்னைக்கு பார்க்ல உன்னைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். உன் மனசை எப்டிப் புரிஞ்சுக்குறதுன்னு கேட்டுட்டு இருந்தாரு"

"என்ன கேட்டு, என்ன பிரயோஜனம்? அவர விட்டு வந்து மூணு நைட்டு ஆச்சு. இந்த மனுஷன் சும்மா இருந்தாலும் அவச் சும்மா இருந்துருப்பாளா? ஏனோ அவ நடவடிக்கையே ஒரு மார்க்கமா இருக்கு. பாக்குற பார்வையே சரியில்ல. என்னென்ன நடந்துச்சோ? நான் இல்லாத நேரத்துல என்ன மாய மந்திரம் பண்ணுவாளோ. இன்னமும் அவரு நெனப்புல நான் இருப்பேங்குற? இந்நேரம் மயக்கி மடிலப் போட்ருப்பா. என்னைய ஒரேயடியா மறந்துருப்பாரு. இந்தப் பொழப்பப் பொழைக்குறதுக்கு, யார் கண்ணுலயும் படாம எங்கயாச்சும் போய்த் தொலையலாம். இத நெனச்சு நெனச்சு நைட்டு ஆனா ஒரு பொட்டு தூக்கங்கூட வர மாட்டேங்குது"

"இந்தப் பொலம்பல் பொலம்புறதுக்கு நீ மூடிட்டு அங்கயே இருந்துருக்கலாம். எதுக்கு உனக்கு இந்த வேல?"

பெருங்காயம் மனக்காயம்!